கட்டுரை, கலாச்சாரம், சமஸ் கட்டுரை, வாழ்வியல் 7 நிமிட வாசிப்பு

அப்துல் மஜீத்: ஆயிரத்தில் ஒருவர்

சமஸ் | Samas
18 Oct 2022, 5:00 am
5

ளைத் தூக்கும் பலத்துடன் இருந்தது காற்று. கடையநல்லூர். இங்குதான் அப்துல் மஜீத் இருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையடிவார ஊர். குற்றாலத்திலிருந்து கூப்பிடும் தூரம். சின்ன பஸ் நிலையம். வெளியே வந்தால் குறுக்கிடும் சாலையானது, ஊரை இரண்டாகப் பிரிக்கிறது. இந்தப் பக்கம் இந்துக்கள் பெரும்பான்மை, அந்தப் பக்கம் முஸ்லிம்கள் பெரும்பான்மை. ஒற்றுமைக்குக் குறைவு இல்லை. எல்லாத் தரப்புகளுமாகக் கூடி ஊருக்கு ஒரு விசேஷ குணத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

சொன்னி, மூப்பர், மாப்பிள்ளை, பெருந்தரகன், சேயன், புலவன் எனும் ஐந்து குடும்பங்களிலிருந்தே கடையநல்லூர் முஸ்லிம் சமூகம் விரிந்தது என்று சொல்கிறார்கள். பாரம்பரியமாக நெசவைத் தொழிலாகக் கொண்டிருந்த சமூகம். பெரும்பாலும் உள்ளூர் கல்யாணங்கள். இந்தப் பின்னணியில் ஊரில் யார் இருவர் சந்தித்தாலும், எங்கோ உறவு கலந்திருக்கிறார்கள்.

உயிர்ப்பான தெரு வாழ்க்கை

ஊரின் அமைப்பிலும் இந்த உறவுமுறை பிரதிபலிக்கிறது. நல்ல நீளமான தெருக்கள். குறுக்கிடும் சந்துகள். இவற்றில் இடைவெளி இன்றி வரிசையாக ஒன்றையொட்டி ஒன்றாகக் கட்டப்பட்ட வீடுகள் அதிகம்.

தெரு வாழ்க்கை உயிர்ப்போடு இருக்கிறது. எந்நேரமும் தெருக்களில் ஆட்கள் புழக்கம் இருக்கிறது. தெருவுக்கு நாலு திண்ணைகளில் ஆட்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. வீட்டு விசேஷங்களைப் பக்கத்து வீடுகளைச் சேர்த்துக்கொண்டு, தெருவை அடைத்து பந்தல் போட்டு நடத்துகிறார்கள். நிகழ்ச்சியும் தெருவில்தான்; சமையலும் தெருவில்தான். விசேஷம் நடக்கும் மூன்று நாட்களும், தெருவில் உள்ள அத்தனை வீட்டுக்கும் சாப்பாடு பொதுச் சமையல்.

மக்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தெருக்கள் இப்படி ஒரு முக்கியமான அங்கம் ஆகிவிட்டிருப்பதால், ஊர் முழுக்கத் தெரு உணவுக் கடைகள் இருக்கின்றன. வீட்டுக் கடைகள் என்று சொல்கிறார்கள்.

ஒரு நாளைக்கு ஆறு வேளை

அதிகாலை ஐந்து மணிக்கு இந்த வீட்டுக் கடைகளில் டீ, ஒரு கைப்பிடி உப்புமாவுடன் தொடங்குகிறது ஒரு நாளின் பொழுது. காலை உணவுக்கு புரோட்டா, இடியாப்பம் – சால்னா; நடுவேளைக்கு டீ – முறுக்கு; மதியத்துக்கு வீட்டில் சோறு, கறியாணம், ரசம், உப்புக்கண்டம், கீரை, பக்கோடா; சாயுங்காலம் டீ, பால்பன், முறுக்கு; கடைவீதிக்குச் சென்றால், அல்வா – மிக்ஸர்; இரவு சோறு, கறியாணம்.

உலகத்துக்கு எல்லாம் மூணு வேளை என்றால், எங்களுக்கு ஆறு வேளை என்கிறார்கள் சிரித்துக்கொண்டே. இவற்றில் ஒருவேளையேனும் வீட்டுக் கடைகளிலிருந்து வீட்டுக்கு உணவு வந்துவிடுகிறது. எது ஒன்றும் பெரிய விலை இல்லை. நூறு ரூபாய் இருந்தால் ஒருவர் ஒரு முழு நாளை ஓட்டிவிடலாம். யார் வீட்டுக்கு எந்த நேரத்தில் சென்றாலும், டீ கொடுக்கிறார்கள்.

கடும் உழைப்பாளிகள். அதிகாலை முதலாக நள்ளிரவு வரை நாளெல்லாம் தறிகளிலும், வயல்காட்டிலுமாக உழைத்துவந்தவர்களிடமிருந்து உருவான கலாச்சாரம் இது.

போ வெளிநாட்டுக்கு!

அப்படியெல்லாம் உழைத்தும் கைத்தறி கை கொடுக்காத சூழலில், அரை நூற்றாண்டுக்கு முன்னர் அரபு நாடுகள் நோக்கிப் பிழைக்கச் செல்லும் போக்கு உருவாகியிருக்கிறது. இன்றைக்கு ஊரில் நான்கில் மூன்று ஆண்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்.

இது பொருளாதாரரீதியாக ஏற்றத்தைக் கொடுத்திருக்கிறது என்றாலும், பண்பாட்டுரீதியாகப் பாதிப்புகளையும் உண்டாக்கியிருக்கிறது. ஆணாகப் பிறந்தால், வெளிநாடு செல்ல வேண்டும்; பெண்ணாகப் பிறந்தால் விடுமுறைக் காலத்துக்கு மட்டும் ஊருக்கு வரும் கணவரை எதிர்பார்த்து, வீட்டோடு முடங்கியிருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கிறது. “எங்கள் அப்பா முப்பது ஆண்டுகளில் ஒரு வருஷ காலம் மட்டுமே மொத்தமாக எங்களோடு இருந்திருக்கிறார்” என்று சொல்லும் பிள்ளைகள் பலரைப் பார்க்க முடிகிறது. இந்தச் சூழலில்தான் அப்துல் மஜீத் பெரிய ஆளாக எனக்குத் தெரிந்தார்.

யார் இந்த அப்துல் மஜீத்?

பெரிய குடும்பத்தில் பிறந்தவர் அப்துல் மஜீத். ஏழுப் பிள்ளைகளில் அவர் ஐந்தாவது பிள்ளை. படித்தது எட்டாவது வரைதான் என்றாலும், தேர்ந்த வாசகர்.

எல்லோரையும்போல அவரும் வெளிநாடு சென்று வந்தார். வீட்டில் அவருக்குப் பார்த்திருந்த பெண் முகைதீன் மீராள் அவரைக் காட்டிலும் படித்தவராக இருந்தார். தன் மனைவி தொடர்ந்து படிக்கவும், அவர் வேலைக்குச் செல்லவும் ஊக்குவித்தார் அப்துல் மஜீத். முகைதீன் மீராள் ஆசிரியை ஆனார். இதற்குள் இரண்டு பிள்ளைகள் பிறந்திருந்தன.

முகைதீன் மீராளின் பள்ளிக்கூடம் வெளியூரில் இருந்தது. அன்றாடம் பயணப்பட வேண்டும். பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு, ஆசிரியர் உத்யோகத்தையும் முழு ஆர்வத்துடன் பார்ப்பது மனைவிக்குச் சிரமமாக இருப்பதை உணர்ந்த அப்துல் மஜீத் முகைதீன் மீராளிடம் சொன்னார், “நான் வேலைக்குச் செல்லவில்லை; வீட்டைப் பார்த்துக்கொள்கிறேன்; இனி பள்ளிக்கூட வேலையை மட்டும் பார்.” இதற்குப் பின் எங்கும் பெருமிதத்தோடு அவர் இப்படிச் சொல்லிக்கொள்ளலானார்: “ஐம் அப்துல் மஜீத், ஹவுஸ் ஹஸ்பெண்ட்.”

நான் அப்துல் மஜீத்தைச் சந்திக்கச் சென்றிருந்தபோது அன்றைய மதிய சமையலை அவர் முடித்திருந்தார். “குடும்பம் என்பது நாலு பேர் சேர்ந்த அமைப்புதான் இல்லையா? அதில் யார் என்ன பொறுப்பை வகிக்க முடியுமோ அதற்கு இடம் இருக்க வேண்டும். ஒருவர் ஆணாகப் பிறந்துவிட்டதாலேயே ஆக்கிரமித்துக்கொள்ளவும் கூடாது. பெண்ணாகப் பிறந்துவிடுவதாலேயே அவரை அடக்குமுறைக்குள்ளாக்கவும் கூடாது. என்னைக் காட்டிலும் என் மனைவி நல்ல படிப்பாளி. நல்ல ஆசிரியத்துவம் மிக்கவர். இறைவன் அவருக்குக் கொடுத்த அருள் எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்றால், நான் அவர் சுமையைக் குறைக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களை வீட்டிலும் வேலை கொடுத்து நெரிப்பது கொடுமை. ஆண்கள் சமையல் கட்டில் நுழையும்போதுதான் ஒரு வீடு முழுமையாக ஜனநாயகப்படுகிறது. நாம் செய்வது சரி என்பதில் நமக்கு உறுதி இருந்தால், எவர் பேச்சையும் பொருட்படுத்தத் தேவையில்லை.” 

நம் வாழ்க்கை நம் முடிவு

தமிழ்நாட்டின் பெருநகரங்களிலேயேகூட இன்றைக்கும் இது சுலபமான முடிவு இல்லை. ஆண் – பெண் இருவரும் தீர்மானித்தாலும், சுற்றியுள்ளவர்கள் நாசப்படுத்துவார்கள்.

இன்றைக்கும் உள்ளூர் திரையரங்குகளில் பெண்கள் சினிமா பார்க்க அனுமதி இல்லை எனும் அளவுக்குச் சில கட்டுப்பெட்டித்தனங்களும் கொண்ட ஊர் கடையநல்லூர். இத்தகைய மூடுண்ட சமூகப் பின்னணியில்தான் கால் நூற்றாண்டுக்கு முன்னரே இந்த முடிவை எடுத்திருக்கிறார் அப்துல் மஜீத். முகைதீன் மீராள் அதை அங்கீகரித்திருக்கிறார். 

தன்னுடைய அன்றாடத்தை மிகுந்த திட்டமிடலோடு வடிவமைத்துக்கொண்டிருக்கிறார் அப்துல் மஜீத்.

“வீடு ஒரு சின்ன அரசாங்கம். முறையாகத் திட்டமிடுவது அவசியம். திட்டமிடத் தெரியாதவர்கள்தான் சுமையாகப் புலம்புவார்கள். ஒவ்வொரு நாளைக்கும் என்ன சமையல் என்பது தொடங்கி எந்தெந்த நாட்களில் வீட்டு வரி, மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது வரை முன்கூட்டிக் குறித்து வைத்துச் செயல்படுவேன்.

"காலையில் சமையல் முடித்து, எல்லோரையும் கிளப்பிவிடுவேன். மனைவியை பஸ் ஏற்றிவிட்டுவிட்டு வரும்போதே மறுநாளைக்கான காய்களை வாங்கி வந்துவிடுவேன். இதற்குப் பின் மாலையில் எல்லோரும் வீடு திரும்பியதும்தான் வேலைகள் இருக்கும். வேலை முடித்ததும் குடும்பத்தார் பேசிக்கொண்டிருப்போம்.

"இடைப்பட்ட மதிய நேரம் எனக்கானது. எல்லாப் பத்திரிகைகளையும் வாசித்துவிடுவேன். நம்முடைய  'அருஞ்சொல்'லையும் ஒரு நாள்கூடத் தவறவிட்டதில்லை. ராமச்சந்திர குஹாவின் எழுத்துகள் எனக்கு உயிர். படைப்பாளிகளில் எஸ்.ராமகிருஷ்ணன் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்!” என்பவர் தமிழின் முக்கியமான நாவல்கள், சிறுகதைகள் எல்லாவற்றையும் வாசித்திருக்கிறார். 

வீட்டின் அறிவார்த்த கலாச்சாரம்

உலகளாவிய அரசியல் பார்வை அப்துல் மஜீத்துக்கு இருக்கிறது. வீட்டின் கலாச்சாரத்தில் இது பிரதிபலிக்கிறது. “வீடு அப்பாவுடனானது; வாப்பா என்று கூப்பிட்டபடிதான் வீட்டுக்குள் நுழைவோம்” என்கிற மகன் – மகள் இருவருமே ஆழமான ஜனநாயகப் பார்வையைக் கொண்டிருக்கிறார்கள். மனைவி முகைதீன் மீராள் தன் வாழ்வின் பெருமிதமாக அப்துல் மஜீத்தைப் பார்க்கிறார். “வீட்டுக்கு அவர் ஒதுக்கும் நேரமானது, என்னுடைய பணியில் நான் கூடுதல் கவனம் செலுத்த உதவுகிறது. குழந்தைகள் வளர்ப்பு ஒரு பெரும் பொறுப்பு. அவர்கள் இன்று பொறுப்புள்ள குடிநபர்களாக வளர்ந்திருக்கிறார்கள். வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சிதான். பணத்தின் பெயரால் பலர் எது அடித்தளமோ அதை இழந்துவிடுகிறோம். சுதந்திரம், ஜனநாயகம் என்றெல்லாம் வெளியில் தம்பட்டம் அடிப்பது சுலபம். வீடுதான் உரைகல். என் கணவர் என்பதால் சொல்லவில்லை. அவர் ஆயிரத்தில் ஒருவர்!”

எனக்கும் அப்துல் மஜீத் ஆயிரத்தில் ஒருவராகத்தான் தெரிகிறார்!

- ‘குமுதம்’, அக்டோபர், 2022

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5

7

1
பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

Latha   2 years ago

இப்போது இரண்டாம் முறை கருவுற்று இருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன். என்னுடைய முதல் குழந்தைக்கு 8 மாதம் இருக்கலாம். நான் அலுவலகம் சென்று கொண்டு இருந்தேன். Maternity leave முடிந்து கொஞ்ச நாள் ஆகி இருந்தது. தினமும் ரயில் பயணம். 3 1/2 மணி நேரம். அப்போது ரயிலில் ஒரு பெண்மணி. தன் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டியபடி இருந்தார். நான் இறங்கும் நிலையத்தில் இறங்கினார். இந்தக் கையில் ஒரு கட்டப்பையும், அந்தக் கையில் குழந்தையை தூக்கியபடி நடந்து சென்றார். பிறந்து ஒரு மாதம் தான் இருக்கும். குறை பிரசவம். அவர் வீட்டு வேலை செய்து விட்டு திரும்புகிறார். அது அவருக்கு 3 வது குழந்தையாம். இப்போது government ஹாஸ்பிடலில் check up சென்று இருந்த போது, அவரும் check up வந்து இருந்தார். 5 வது முறை கருவுற்று இருக்கிறார்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Vivek    2 years ago

1. ஆணாக பிறந்துவிடுவதாலேயே ஆக்கிரமித்து கொள்ள கூடாது பெண்ணாக பிறந்ததாலேயே அடக்குமுறைக்கு உள்ளாக்குவதும் கூடாது 2. வேலை க்கு செல்லும் பெண்களை வீட்டிலும் வேலை கொடுத்து நெரிப்பது கொடுமை போன்ற வாக்கியங்கள் என்னை கேள்வி கேட்டது போல் இருக்கிறது. திருத்தி கொள்ள முயற்சிக்கிறேன். நன்றி அருஞ்சொல்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Mohamed Ismail   2 years ago

கால காலமாக இருந்த ஆணாதிக்கத்தின் நீட்சியாகவே பார்க்கிறேன்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Abi   2 years ago

அருமை.. வாழ்த்துக்கள் Abdul majeed sir

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganesan   2 years ago

சிறப்பு. நன்றி

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

வெள்ளப் பேரிடர் 2023இந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம்!சோஷலிஸ்ட் தலைவர்ஸான்ஸிபார் புரட்சிஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் அளித்த பேட்டி!சர்வதேச அரசியல்மது அருந்துவோர்அரசு மருத்துவமனைசூலக நீர்க்கட்டிபட்டமளிப்பு நாள்விரக்திமம்மூட்டிதிமுகவிடம்செயல் வீரர் கார்கே: செயல்பட விடுவார்களா?பட்டாபிராமன் கட்டுரைமவுண்ட் பேட்டன்மார்க்கேஸ் மற்றும் ஜெயகாந்தன்புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா?மூவேந்தர்கள்மாநகராட்சிதே. தாமஸ் பிராங்கோசாவர்க்கரின் முஸ்லிம் வெறுப்புகல்வியியல்திருமஞ்சன தரிசனம்எதிர்க்கட்சிதொல்.திருமாவளவன்எதிரியாகும் ‘ஜிம்’ பயிற்சிகள்அயோத்திதாச பண்டிதர்பிராமணரல்லாதோர்ஒரு நூறு ஆண்டுக்காலத் தனிமை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!