கோணங்கள், கட்டுரை, ஏன் எதற்கு எப்படி? 5 நிமிட வாசிப்பு

முஸ்லிம்களின் பிரச்சினையா, இந்தியாவின் பிரச்சினையா அஸ்ஸாம் கலவரம்?

எஸ்.அப்துல் ஹமீது
05 Oct 2021, 5:00 am
0

அஸ்ஸாம் மாநிலத்தில், இரு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறையைப் பற்றி நாம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அது ஒரு முக்கியமான பிரச்சினை. அஸ்ஸாம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவுமே முகம் கொடுக்க வேண்டிய ஒரு பிரச்சினை. ‘புலம்பெயர்வுப் பிரச்சினையை எப்படி ஆக்கபூர்வமாக  எதிர்கொள்ளப்போகிறோம்?’ என்ற கேள்வி அந்தப் பிரச்சினையின் மையத்தில் இருக்கிறது. அதுபற்றிய கவனப்படுத்தலுக்காக, வரலாற்றுப் பின்னணியோடு சுருக்கமாக இங்கே அதை விவாதிக்கவிருக்கிறோம்.

என்ன நடந்தது? என்ன பிரச்சினை?

அந்தக் காணொளி பதற்றமடையச் செய்கிறது. காவல் துறையினர் தாக்குதலுக்குத் தயாராக நிற்கின்றனர். திடீரென்று ஒருவர் கையில் கம்புடன் காவல் துறையினரை நோக்கி ஆவேசமாக ஓடிவருகிறார். காவல் துறையினர் ஒன்று கூடி அவரைத் தாக்குகின்றனர். துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது. கையில் கம்புடன் வந்த மனிதர் அசைவற்று தரையில் கிடக்கிறார். அவர் மீது காவல் துறையோடு சேர்ந்துவந்த ஒரு நபர் ஏறிக் குதிக்கிறார்; வெறிகொண்டு அசைவற்று கிடக்கும் உடலைத் தாக்குகிறார். அவர் அரசால் நியமிக்கப்பட்ட புகைப்படக்காரர் என்பது பின்னர் தெரிகிறது. துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது.

அஸ்ஸாம் மாநிலம், தர்ராங் மாவட்டம், தோல்பூர் பகுதியில் வங்க மொழி பேசும் முஸ்லீம்கள் அதிக அளவில் வசித்துவருகின்றனர். ‘இவர்கள் அரசு நிலங்களை, கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகளைக் கட்டியுள்ளனர்’ என்று குற்றச்சாட்டியது ஆளும் பாஜக.

அப்பகுதியிலிருந்து இவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை செப்டம்பர் 20 அன்று அரசு மேற்கொண்டது. விளைவாக, ஒரே நாளில் 800 முஸ்லீம் குடும்பங்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். இரண்டு தினங்கள் கழித்து (செப் 23) மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியைத் தொடங்க மாவட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர். இம்முறை சுமார் 1200 போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் உதவியுடன். கடந்த முறைபோல் அல்லாமல், இம்முறை மக்களும் போராட்டத்துக்குத் தயாராக இருந்தனர். வீடுகளை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கிராம மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில் போராட்டமானது, கலவரமாக மாறியது.

இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளைத்தான் மேலே பார்த்தோம். அன்றைய தினம், ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் உட்பட இருவர் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள்தானா, யார் அவர்கள்?

வங்கதேசத்திலிருந்து வந்து அஸ்ஸாமில் குடியேறிய முஸ்லீம்கள் என்று அவர்களை ஒரு வரியில் சொல்லிவிடலாம். ஆனால், அவர்கள் அங்கு குடியேறியதற்கான வரலாறு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பாகிஸ்தான் பிரிவினையையொட்டி, வங்கதேசத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அஸ்ஸாம், திரிபுரா என இந்திய எல்லையோர மாநிலங்களில் குடியேறினர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள். 

அஸ்ஸாமியர்கள் ஏன் அவர்களை வெறுக்கின்றனர்?

வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர், தங்கள் வேலைவாய்ப்புகளைப் பறிக்கின்றனர் என்பதே உள்ளூர் அஸ்ஸாமியர்களின் வெறுப்புக்குக் காரணம். 

சிக்கல் என்னவென்றால், இந்தியா தலையிட்டு வங்கதேசம் எனும் நாட்டை உருவாக்கியது; இப்படி அகதிகளாக வந்த வங்கதேசத்தவரில் பெரும்பான்மையினர் அன்றைக்கு, அதாவது 1970,1980-களில் இந்தியாவை அந்நிய நாடாகக் கருதிடவில்லை. ஏனென்றால், 1947 வரை அவர்கள் ஒன்றுபட்ட இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தார்கள் அல்லது அப்படி இருந்தவர்களின் வாரிசுகளாக இருந்தார்கள்.

அதேபோல, அஸ்ஸாம் தேயிலைத் தோட்டப் பணிகளுக்காக மேற்கு வங்கத்திலிருந்து சென்று வட கிழக்கு மாநிலங்களில் குடியேறியவர்களும் இவர்களை அன்றைக்கு, சக வங்காளிகளாகக் கருதினர். ஒன்றிய அரசின் அரவணைப்பும் இவர்களுக்கு இருந்தது. வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்கள் இங்கேயே தங்கும் வகையில் அவர்களுக்கு வாக்குரிமை வழங்கியது இந்திரா காந்தி அரசு.

இவையெல்லாம் உள்ளூர்  அஸ்ஸாமியர்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கின. இந்தியா எனும் அமைப்பையே இன்னும் அந்நியமாகக் கருதும் பார்வை வட கிழக்கு மாநிலங்களில் இன்றும் உண்டு என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். ஆக, அப்போது காங்கிரஸுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.

அதன் தொடர்சியாகவே, அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள நெல்லி என்ற கிராமத்தில் இருந்த வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்த முஸ்லீம்கள் மீது உள்ளூர் அஸ்ஸாமியர்கள் தாக்குதல் நிகழ்த்தினர். ஆறு மணி நேரத்தில் 1,800 முஸ்லீம்கள் அன்றைக்குக் கொல்லப்பட்டனர். அஸ்ஸாம் மட்டும் அல்லாது, வட கிழக்கு மாநிலங்களில் பொதுவாகவே இப்படி வெளியிலிருந்து வந்து குடியேறுவோர் மீதான அச்சமும், வெறுப்பும் மேலோங்கி நிற்கிறது. அது அரசியல் தளத்திலும் எதிரொலிக்கிறது.

பிரச்சினையை எப்படிப் புரிந்துகொள்வது?

உள்ளூர் மக்கள் மீதுதான் பிரச்சினை அல்லது புலம்பெயர்ந்தவர்கள் மீதுதான் பிரச்சினை என்று இந்தப் பிரச்சினையை அணுகிட முடியாது. அஸ்ஸாம் உள்பட வட கிழக்கு மாநிலங்கள் பெரும்பாலானவை பழங்குடியின மக்களைக் கணிசமான அளவில் கொண்டவை. போதிய அளவுக்கு வளங்கள் இல்லாத சூழலில், இப்படி வெளியிலிருந்து வந்து அதிகரிக்கும் மக்கள்தொகையானது உள்ளூர்ச் சமூகங்களுக்கான போட்டியாக மாறுகிறது. அதேசமயம், புலம்பெயர்வு என்பது மனிதகுல நாகரிகம் முழுவதும் தொடரும் பயணம்.

இரண்டுக்கும் மோதலுக்கு உள்ளாகாமல், ஒரு சமநிலையை உண்டாக்க வேண்டியது பொறுப்பான அரசியலர்களின் - ஆட்சியாளர்களின் கடமை. இங்கே அவர்கள் பொறுப்பற்று செயல்படுகிறார்கள்.

காங்கிரஸ், பாஜக என்ன செய்கின்றன?

புலம்பெயர்ந்தவர்களை அப்படிப் பார்ப்பதற்குப் பதிலாக, ஓட்டரசியலுக்காக முஸ்லிம்களாகப் பாவித்தது காங்கிரஸ். வெளியிலிருந்து வந்தவர்களுக்கு முறைப்படி தங்குமிடம், அவர்களுக்கு என்று புதிய குடியேற்றப் பகுதிகள், வேலைவாய்ப்புகள் இப்படி உருவாக்குவதற்குப் பதிலாக அவர்களாகக் குடியேறிய இடங்களுக்குப் போகிறபோக்கில் அனுமதி அளித்தது. பாஜக அதன் ஓட்டரசியலுக்கு ஏற்றபடி முஸ்லிம் எதிர்ப்பு - இந்துக்கள் பாதிப்பு என்பதாக பிரச்சினையை உருமாற்றியது. விளைவாக, புலம்பெயர்ந்தோர் - உள்ளூர் சமூகத்தார் பிரச்சினையானது இந்து - முஸ்லிம் பிரச்சினையாக இன்று பார்க்கப்படும் நிலையில் உருவாகி இருக்கிறது.

ஆக்கிரமிப்பு அகற்றம், ஏன்?

வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு நிரந்த வசிப்பிடம் கிடையாது. நதிக் கரையோரம் வீடு அமைத்து விவசாய வேலைகளை இவர்கள் செய்துவருகின்றனர். வெள்ளமோ, உள்ளூர் மக்களின் வன்முறையோ குறுக்கிடும்போது, வேறு பகுதிக்குத் தஞ்சமாகச் சென்றுவிடுவர். இப்படியாக தோல்பூர் பகுதியில் குடியேறியவர்களே இன்று ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானரிடம் நிலங்களுக்கான ஆவணங்கள் கிடையாது. ஆனால், விவசாயம்தான் பிழைப்பு. இந்நிலையில்தான் அவர்களை சட்ட விரோத நில ஆக்கிரமிப்பாளர்கள் என்று அடையாளப்படுத்தி அஸ்ஸாம் அரசு வெளியேற்றிவருகிறது.

இவ்வகையிலான நடவடிக்கை புதிது அல்ல. பாஜக அரசு பொறுப்பேற்றதும் இந்த நடவடிக்கைகள் அதிகமாகி இருக்கின்றன. இந்த அரசு கூடவே அதை முஸ்லிம்கள் மீதான வெறுப்பைப் பரப்பும் செயல்பாடாகவும் மாற்றிவருவதுதான் கூடுதல் சிக்கல். சமீபத்தில்கூட முதல்வர் ஹிமாந்த் பிஸ்வா சர்மா, “அஸ்ஸாமில் இந்து முஸ்லீம் மக்கள் தொகை இடையிலான விகிதாச்சாரம் மிகப் பெரிய அளவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இது ஆபத்தானது” என்று பேசியதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

என்னதான் தீர்வு?

உள்ளூரார் எதிர் புலம்பெயர்ந்தோர் இடையிலான பிரச்சினை வரலாறு நெடுகவே வெவ்வேறு பரிமாணங்களில் இருந்துவருகிறது. அது மதத்தின் அடிப்படையில், இனத்தின் அடிப்படையில், மொழியின் அடிப்படையில், நிறத்தின் அடிப்படையில் என்று வெவ்வேறு தளங்களில் இயங்குகிறது. புலம்பெயர்தல் என்பது மனித குல நாகரிக வளர்ச்சியில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். எனில், அதை ஒரு அரசு, ஒரு சமூகம் எவ்வாறு கையாளுகிறது என்பது மிக முக்கியம்.

வங்க மொழி பேசும் முஸ்லீம்கள் பூர்வகுடிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களும் இந்த நிலத்தோடு ஐம்பது ஆண்டுகளாக ஒன்றியவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்கள். ஆகவே, மனிதாபிமானத்தோடு இந்த விவகாரத்தை அரசுகள் கையாள வேண்டும். உதாரணமாக, அவர்களே வங்கதேசத்திலிருந்து அடித்துத் துரத்தப்பட்ட இந்துக்களாக இருந்தால், இந்த அரசுகள் அவர்களை எப்படி அணுகும்? ஆகையால், வெறுப்புக்கும், அரசியல் சுய லாபங்களுக்கும் அரசுகள் இடம் அளிக்கக் கூடாது. பொறுப்புணர்வோடு புலம்பெயர்ந்தோர் - உள்ளூர் மக்கள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை யோசிக்க வேண்டும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சுயராஜ்யம்காஞ்ச ஐலய்யா கட்டுரைகாவல்துறைஏற்றத்தாழ்வுதொழிற்சாலைமொழிவாரி மாநிலங்கள்அரசு நிர்வாகம்மிங்கற்பித்தல்சந்திரயான்-3ஹண்டே சமஸ் பேட்டிவேலை மாற்றம்டாக்டர் ஆர்.மகாலிங்கம்ராஜஸ்தானின் முன்னோடி தொழிலாளர் சட்டம்கலைஞர் சண்முகநாதன்அணிவதாஆட்சியாளர்கள்அம்பேத்கர் உரைஅம்பேத்கரின் இறுதி நாள்சோஷலிஸம்இமயமலை யோகிகூடாரவல்லிஅல்சர்தைவான்தனுஷ்காஅறுவை மருத்துவம்ஜெயகாந்தன்தலித் தலைவர்தமிழ்நாட்டின் எதிர்வினைஆரிய வர்த்தம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!