கட்டுரை, சட்டம் 8 நிமிட வாசிப்பு

சட்டமே ஆயுதமாக மாறும்போது...

ப.சிதம்பரம்
03 Jan 2022, 5:00 am
0

மும்பை மாநகரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் 2008 நவம்பர் இறுதியில் நிகழ்ந்த பிறகு, நிதி அமைச்சகப் பொறுப்பிலிருந்து உள்துறை அமைச்சகப் பொறுப்பை ஏற்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டனர். மே 2009 வந்தால் தொடர்ந்து ஐந்தாண்டுகள் நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்திருப்பேன் என்பதால், அதற்கும் முன்னர் அத்துறையை விட்டுவிட்டு உள்துறை அமைச்சராக எனக்கு நிறைய தயக்கம் இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இருந்தாலும் அது என்னுடைய கடமை, நிறைவேற்றியாக வேண்டும் என்பதால் 2008 டிசம்பர் 1-ல் உள்துறை அமைச்சகப் பொறுப்பேற்றேன்.

நான் உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற உடனேயே, ‘ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், 1958’ நீக்கப்பட வேண்டும் என்று பலரிடமிருந்தும் வேண்டுகோள்கள் வந்தன. அந்தச் சட்டப்படி, ஒரு பகுதியை ‘கலவரம் பாதித்த பகுதி’ என்று ஒன்றிய அரசு அறிவித்து, ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை அங்கே அமல்படுத்திவிட முடியும். அப்போது எட்டு மாநிலங்களில் ஆளுநர் (அதாவது அந்தந்த மாநில அரசுகள்) அச்சட்டப்படி அதிகாரங்களைச் செலுத்த உரிமையுள்ளவர்கள். இத்தனை நாளைக்கு அல்லது மாதங்களுக்குத்தான் இச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று காலவரம்பெல்லாம் அதற்குக் கிடையாது. ஆனால், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கொரு முறை, இந்த அறிவிப்புக்குரிய காரணங்கள் நீடிக்கின்றனவா – சட்ட அமல் தேவையா – என்று மறுபரிசீலிப்பது மாநிலங்களின் கடமை என்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் விதித்த இந்தக் கடமை, மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கு நிம்மதியைத் தரவில்லை. ஒருமுறை இந்தச் சட்டத்தைப் பிறப்பித்துவிட்டால் மாநில அரசுகள் இதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதே இல்லை. உதாரணத்துக்கு, மணிப்பூர் மாநிலத்தில் 1980-ம் ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்கொருமுறை சட்டம்-ஒழுங்கு நிலையைப் பரிசீலித்துவிட்டு இச்சட்டத்தைத் தொடர்ந்து அமலில் வைத்திருக்கிறது மணிப்பூர் மாநிலம். அசாம் மாநிலமும் 2017 முதல் இப்படி ஆறு மாதங்களுக்கொருமுறை சட்டம்-ஒழுங்கு நிலையைப் பரிசீலனை செய்துவிட்டு சிறப்பு அதிகாரச் சட்ட அமலைத் தொடர்ந்து நீட்டித்துக்கொண்டே வருகிறது. நாகாலாந்திலும் (மாநிலம் முழுவதும்) அருணாசலப் பிரதேசத்திலும் (மூன்று மாவட்டங்களிலும் இரண்டு காவல்நிலையங்களின் ஆட்சி எல்லைகளிலும்) இதேபோல சிறப்புச் சட்ட அமலை நீட்டித்துக்கொண்டேவருகிறது ஒன்றிய அரசு.

நோக்கமோ பாதுகாப்பு - விளைவோ தண்டனையின்மை

தரைப்படை, விமானப் படை, மத்திய ஆயுதக் காவல் படை (சிஆர்பிஎஃப்) ஆகியவற்றை நிர்வகிப்பது ‘அரசு’தான். ஆனால், முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவை அவை மட்டுமே. கலவரப் பகுதியில் ராணுவத்தைப் பணியில் ஈடுபடுத்தினால் அங்கு உண்மையில் அதிகாரம் செலுத்துவது ராணுவமாக மட்டுமே இருக்கும். இந்தச் சட்டம் குறித்து, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ 2015 மே 3 நாளிதழில் கட்டுரை வாயிலாக விரிவாக அலசியிருக்கிறேன். ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டப்படி அளிக்கப்படும் அதிகாரங்களைப் பற்றி மிகவும் மென்மையாகக் கூற வேண்டும் என்றால், அவை கொடூரமானவை. கலகக்காரர்கள் பயன்படுத்தும் இடம் என்ற சந்தேகம் வந்தால் எந்த வீட்டையும் - கட்டுமானத்தையும் வெடிவைத்துத் தகர்க்கலாம், சந்தேகப்படுவோரை வாரன்ட் இன்றி கைதுசெய்யலாம், வீட்டிலோ வேறு இடத்திலோ வாரன்ட் இன்றி நுழையலாம், கைதுசெய்யலாம். இந்த அதிகாரம் அனைத்தும் வழக்கமான சட்டங்களுக்கு நேர் மாறானவை. தண்டனையியல் நடைமுறைச் சட்டத்தில்கூட, சில அசாதாரணமான சூழல்களில் மட்டும் இப்படிச் செயல்பட அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. ஐந்து அல்லது ஆறு பேருக்கும் மேல் குழுமியிருக்கும் இடத்தில் - தேவை என்று காவல் துறை அதிகாரி கருதினால் – சந்தேகப்படும் நபரைத் துப்பாக்கியால் சுட்டும் பிடிக்கலாம் – அப்படிச் சுடும்போது அவரைக் கொல்லவும் செய்யலாம் என்று அதிகாரம் வழங்குகிறது.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் மீதான பெரும்பான்மையான குற்றச்சாட்டு எதுவென்றால், கடுமையான அளவுக்கு பலப் பிரயோகப்படுத்துவது அவசியமா, தவிர்க்கலாமா என்று ஆயுதப்படையினர் சிறிதும் நேரம் எடுத்து யோசிப்பதே இல்லை என்பதுதான். சந்தேகப்படும் கும்பல்களைச் சந்திக்கும்போது அவர்கள் மாற்றுவழியைப் பற்றி யோசிக்காமல், தங்களிடமுள்ள அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்திவிடுகின்றனர். இச்சட்டத்தின் 6-வது பிரிவு, இந்தச் சம்பவங்கள் தொடர்பாக ஆயுதப்படை அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கவோ, நீதிமன்றங்களுக்கு அழைக்கவோ முடியாது என்று பாதுகாப்பு தருகிறது. உண்மை என்னவென்றால், ஆயுதப்படையினர் தயக்கமின்றிச் செயல்பட இந்தப் பிரிவுதான் ஊக்கம் தருகிறது.

காவல் துறையினருக்கு வழங்கும் சாதாரண அதிகாரங்களையே தவறாகப் பயன்படுத்துவதே வழக்கமாக இருக்கிறது. அப்படிக் காவல் துறை அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிப்பதே மாநில அரசுகள்தான். உத்தர பிரதேசத்தில் சமூக விரோதிகள், காவல் துறையுடனான மோதல்களில் சுட்டுக்கொல்லப்படுவது மட்டுமல்ல; அது பெருமைக்குரிய சாதனையாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது. கலவரம் பாதித்த பகுதிகளில் ஆயுதப்படைகள் கடுமையான நெருக்கடிகளுக்கு இடையில் பணியாற்றுகின்றன, அவற்றுக்கு இந்த ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் ஓர் ஆயுதமாகவே பயன்படுகிறது.

ரத்துசெய்தாக வேண்டிய சட்டம்

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமீபத்தில் எழுந்ததல்ல, மிகவும் பழமையானது. 2005-ல் நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையிலான விசாரணை ஆணையம் இதை ரத்துசெய்ய வேண்டும் என்றே பரிந்துரைத்தது. இதற்கு அடுத்து நியமிக்கப்பட்ட ஆணையங்களும் குழுக்களும்கூட இதே கருத்தையே வலியுறுத்தின. நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையிலான குழு இதைக் கடைசியாகப் பரிசீலித்துவிட்டு, இந்தச் சட்டம் தொடர்வதை உடனடியாக நிறுத்தியாக வேண்டும் என்றே பரிந்துரைத்தது.

என்னுடைய கருத்து என்னவென்றால், இந்தச் சட்டத்தை கட்டாயம் ரத்துசெய்தாக வேண்டும். தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவற்றை எதிர்கொள்ள இதற்குப் பிறகு ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம்’ (யுஏபிஏ), ‘தேசியப் புலனாய்வு சட்டம்’ (என்ஐஏ) போன்றவைகூட இயற்றப்பட்டுவிட்டன (இவற்றில் யுஏபிஏ சட்டத்தையும் மறுபரிசீலிக்க வேண்டியது அவசியம் என்றே எண்ணுகிறேன்). ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்துசெய்யப்பட வேண்டும் என்பது நீண்ட கால நிலுவைக் கடமையாகும்.

அசாமில் நடந்தது இந்த வகையில் நல்லதொரு பாடம். ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை முழுதாக விலக்கிக்கொள்ளுங்கள் அல்லது அது அமலாகும் பிரதேச எல்லையைக் குறையுங்கள் என்று உள்துறை அமைச்சகம் 2017-ல் மாநில அரசுக்குக் கடிதம் எழுதியது. அசாம் அதை ஏற்க மறுத்தது. ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதிய பிறகும் முழு மாநிலத்தையும் கலவரம் பாதித்த பகுதியாகவே கருதி ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமல் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று அத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு, அசாமிடம் விளக்கம் கேட்டது. அதற்கு அசாம் அளித்த பதில் தெளிவாகவே இல்லை.

எதேச்சாதிகார அரசு, சட்டம்

நாகாலாந்தில் சுரங்கத்தில் பணி முடித்து லாரியில் திரும்பிக்கொண்டிருந்த தொழிலாளர்களை, தீவிரவாதிகள் என்று கருதி ராணுவத்தினர் 2021 டிசம்பர் 4-ல் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்குப் பிறகு, ‘தவறான உளவுத்தகவல்பேரில் சுட்டுவிட்டோம்’ என்று ராணுவம் மன்னிப்பு கோரியது. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று மணிப்பூர், நாகாலாந்து, மேகாலய மாநில முதலமைச்சர்கள் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இவற்றில் மணிப்பூரின் கோரிக்கை கேலிக்குரியது. காரணம் அந்தச் சட்டத்தை அங்கு அமல்படுத்துவதே மாநில அரசுதான். முதலமைச்சர் விரும்பினால் அந்தச் சட்ட அமலை நிறுத்திவைத்துவிடலாம்.

உண்மை என்னவென்றால் 2014 முதல் அரசுகள் எதேச்சாதிகாரமாகச் செயல்படுகின்றன. தவிர்க்க முடியாத விளைவுகளாக மாநிலக் காவல் துறைகளும், ஆயுதப் படைகளும் உள்நாட்டுப் பாதுகாப்புக்காக நிறுத்திய இடங்களில்கூட எதேச்சாதிகாரமாக நடக்கின்றன. ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் மக்களைக் காக்கும் கேடயமாகப் பயன்படாமல், மக்களைக் கொல்லும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று ஆயுதப் படைகளுக்குள்ளிருந்தே குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால், வருத்தம் தரும் வகையில், அவை இப்போது மவுனமாகிவிட்டன.

நான் உள்துறை அமைச்சராகப் பணிபுரிந்தபோது ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தேன். முடியாதபோது மாற்று யோசனையாக, அந்தச் சட்டத்தையாவது திருத்தலாம் என்றேன். அந்த முயற்சியில் நான் தோற்றுவிட்டேன். இதை நான் 2015-ல் எழுதிய கட்டுரையில் விவரித்திருக்கிறேன். இப்போது நாம் எதேச்சாதிகார அரசையும் எதேச்சாதிகார பிரதமரையும் எதேச்சாதிகார உள்துறை அமைச்சரையும் பெற்றிருக்கிறோம். இந்தச் சட்டத்தை ரத்துசெய்வதற்கான – ஏன் திருத்துவதற்கான – வாய்ப்புகூட கிடையாது. தீர்வுக்கு ஒரே வழி அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய நீதிமன்றங்களை நாடுவதுதான்!

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.2

அதிகம் வாசிக்கப்பட்டவை

விரட்டுகிறார் முதல்வர்: பிடிஆர் பேட்டிதைசாமானிய மக்கள்98வது தலைவர்சார்பியல் கோட்பாடுபுலம்பெயர்ந்தோர் விவகாரம்அழகியலும் மேலாதிக்க சுயமும்ஏழைகளின் உணர்வுகளுடன் விளையாடும் பைஜூஸ்!ஆண்டாள்முத்துசாமி ஸ்கூல்உள்ளத்தைப் பேசுவோம்அரசு கட்டிடம்புலம்பெயர்வுஊர்மாற்றம்உக்ரைனின் பொருளாதாரம்அண்ணாவின் இருமொழிக் கொள்கைராகுல் யாத்திரையால் பதற்றம் குறைந்ததா?மூல வடிவிலான பாவம்இந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம்!அகிலேஷ் யாதவ்மஹாராஷ்டிர அரசியல்ஜாமீன் மனுபுத்தாக்கத் திட்டம்பழ.அதியமான்அண்ணா அருஞ்சொல்தேர்தல் முடிவுகள்ஆல்பா மேல்கல்விநிராசை உணர்வுமாநிலத்தின்வீழ்ச்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!