கட்டுரை, கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

தமிழ் முஸ்லிம்களின் பொங்கல் கொண்டாட்டம் கொண்டிருக்கும் சேதி

கோம்பை எஸ் அன்வர்
16 Jan 2022, 5:00 am
3

ஆழ்வார்த்திருநகரியில் தமிழ் முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான சிலம்பாட்டம்

நீங்களும் - அதாவது முஸ்லிம்களும் - பொங்கல் கொண்டாடுவீர்களா?

சந்தேகமும் ஆச்சர்யமும் கலந்த பல நண்பர்களின் கேள்விகள், எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ புதிதல்ல. ஒன்றல்ல, இரண்டல்ல; 16 வகை காய்கறிகளுடன் காலகாலமாகப் பொங்கலைக் கொண்டாடிவரும் எங்களுக்கு இது போன்ற கேள்வி வேடிக்கையாக இருக்கும் என்றால் மிகையாகாது.

கோம்பை அன்வர் தன் குடும்பத்துடன், பொங்கல் விருந்தில்

இருப்பினும் இந்தக் கேள்விக்குப் பல காரணங்கள் உள்ளதை மறுக்க முடியாது. அவற்றில் மிக முக்கியமானது இஸ்லாம் மற்றும் தமிழக இஸ்லாமியர் குறித்த தட்டையான புரிதல் ஆகும். இஸ்லாம் குறித்த தட்டையான புரிதலுக்கு பல இஸ்லாமியர்களும் விலக்கல்ல. அதுபோலவே இந்து - முஸ்லிம் வரையறைகளைக் கடந்த தமிழ்ப் பண்பு ஒன்று பொங்கலுக்கு உண்டு என்பதை இந்துக்களிலும் பலர் அறிந்திருப்பதில்லை.

டெல்லி சுல்தான்களையும் முகலாயரையும் வைத்துப் பெரும்பாலும் கட்டமைக்கப்பட்ட இந்திய வரலாற்றில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஓர் இஸ்லாமிய சமூகம் தமிழகம், இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசியா வரை பரவிக் கிடப்பதும், அது தனக்கென்று பல தனித்துவக் கூறுகளைக் கொண்டிருப்பதும் பலருக்கும் தெரியாது.

வரலாறு தெற்கில் ஆரம்பிக்கிறது

சங்க காலம் தொட்டே தமிழகத்திற்கும் அரேபியா உட்பட்ட மேற்கு ஆசியாவிற்கும் இடையே கடல்வழி வணிகத் தொடர்புகள் இருந்ததைப் பல சங்கப் பாடல்களும், சமீபத்திய அகழ்வாராச்சிகளும் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. அரேபிய பாலைவனத்தில் 7ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் பரவத் தொடங்கிய சமகாலத்திலேயே அது வணிகர்கள் மூலமாக தமிழகத்தை வந்தடைந்தது. இங்கு நிலவிய சமூகச் சூழல், இறைநேசர்கள் எனப்படும் சூபிக்களின் பரப்புரை மற்றும் தமிழக அரசர்களின் ஆதரவுடன் இஸ்லாம் தமிழகத்தில் வேரூன்றியது. இதற்குக் கிட்டதட்ட 500 வருஷங்களுக்குப் பிறகே வட இந்தியாவில் இஸ்லாம் ஒரு வலுவான மதமாகப் பரவியது என்ற தகவல் இங்கே முக்கியமானது. அதிலும், அங்கே போர்கள், படையெடுப்புகள் இதில் முக்கியப் பங்கு ஆற்றின. இங்கே வாணிபரீதியிலான உறவு மிக இணக்கமான ஓர் உறவை உருவாக்கியிருந்தது.

திராவிடக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட கீழக்கரை  பள்ளிவாசல்

திராவிடக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான பள்ளிவாசல்கள், பிற சமயங்களுக்கு இணையாக தமிழ் இலக்கியத்திற்கு இஸ்லாமியரின் பங்களிப்பு, சிலம்பம் என்று தமிழ் மண்ணோடு இஸ்லாம் ஐக்கியமானது. பன்மைத்துவம் இறைவாக்காக திருக்குரானில் (சூரத்துல் ஹுஜுராத் 49.13) அமைந்திருக்கையில், இது இயல்பானதுதான்.

ஆகவே, தமிழர் திருநாளான பொங்கலையும் தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாமிய நெறிகளுக்கு உட்பட்டு கொண்டாடிவருகின்றனர். இங்கே இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். தமிழகம் முழுக்கப் பிராந்தியத்திற்கும், சாதிக்கும் ஏற்ப சின்னச் சின்ன வேறுபாடுகளுடனேயே பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. உதாரணமாக, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மற்றும் சைவ பிள்ளைமார் சமூகத்தினர் சங்கு ஊதி பொங்கலைக் கொண்டாடுவார்கள்.  

ஊருக்கேற்பக் கொண்டாட்டம்

இதுபோலவே விவசாயத்தைச் சார்ந்து வாழும் தமிழ் இஸ்லாமியரிடையே பொங்கல் கொண்டாட்டங்கள் பிராந்தியத்திற்கு ஏற்றவாறு மாறும். தேனி மாவட்டத்தில் உள்ள எங்கள் வீட்டில் சர்க்கரைப் பொங்கலுடன் ஆரம்பிக்கும் திருநாள் மதிய விருந்தில் 16 வகை காய்கறிகளுடன் களை கட்டும். அன்று மட்டும் கவிச்சி கிடையாது. பரிமாறப்படும் பெரும்பாலான காய்கறிகள் வயலிலிருந்து வந்தவையாக இருக்கும். மாட்டுப் பொங்கல் அன்று பண்ணை மாடுகள் குளிப்பாட்டி அலங்கரித்து, கொம்புக்கு வர்ணம் பூசி ஊரை வலம் வரும்.

மதுரை மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டி கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டத்தில் பரம்பரை பரம்பரையாக, பங்காளிகளாக, மஞ்சு விரட்டு இன்றும் பங்கேற்கும் முஸ்லிம் குடும்பங்களும் (நாலு வீட்டுக்காரங்க குடும்பம்) உண்டு.  

நாவினிப்பட்டி முஸ்லிம்கள் கொண்டாட்டம்

சுமார் 50/60 ஆண்டுகளுக்கு முன் மேலத்தஞ்சை - கீழத்தஞ்சை என அழைக்கப்பட்ட ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கீழ்ப்பகுதியின் பெரும்பாலான கிராமங்கள் முஸ்லிம் மிராசுதாரர்களை கொண்டது.

மிராசுதாரர்கள் என்பவர்கள் நிலச்சுவான்தார்கள், இவர்களின் வாழ்வாதாரமே விவசாயம். “பொங்கல் வருவதற்கு முன்பே, வயலிலிருந்து ஒரு மூட்டை நெல் மட்டும் அறுவடைசெய்து மிராசுதார் வீட்டுக்கு வரும். மூட்டையுடன் ஒரு பெரிய கட்டு அடிக்கப்படாத நெற்கதிர்கள் வரும். சிட்டுக்குருவிகள் சாப்பிடுவதற்காக நெற்கதிர்களை முற்றத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடுவார்கள். நெல்லை அவித்துக் காயவைத்து தை முதல் நாள் சமைப்பதற்கு ஏதுவாக கைக்குத்தல் அரிசியாக மாற்றி, தை முதல் நாள் அதாவது பொங்கலன்று அதை சமைத்து விருந்துண்டு கொண்டாடுவார்கள். இந்தக் கொண்டாட்டத்துக்கு ‘புது அரிசிச் சோறு விருந்து’ என்று பெயர். அக்கம் பக்கம் வீட்டார்களையும் உறவினர்களையும் அழைத்து இந்த விருந்தோம்பல் நடக்கும்.

கீரனூர் முஸ்லிம்கள் கொண்டாட்டம்

கிட்டத்தட்ட கூட்டாஞ்சோறுபோலத்தான் இதுவும். இதுதான் தஞ்சை ராவுத்தர் வீட்டு பொங்கல்” என்று நினைவுகூர்கிறார் கூத்தாநல்லூரைச் சார்ந்தவரும், ‘முஸ்லிம் முரசு’ இதழின் முன்னாள் ஆசிரியருமான சடையன் அமானுல்லா.

“ராவுத்தர் வீட்டுப் பொங்கல் என்றால், கவிச்சி இல்லாமலா? ஆகையால், புது அரிசிச் சோறு விருந்துக்கு இறைச்சி ஆணமோ அல்லது தால்ச்சாவோ சமைத்துப் பரிமாறுவார்கள். அனைத்து மிராசுதாரர்களின் வீட்டிலும் புது அரிசிச் சோறு விருந்து ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தாலும், ஒரே நாளில் விருந்து வைத்தால் யாரும் சாப்பிட வர மாட்டார்கள் என்பதால், முதல் மூன்று நாட்களோ அல்லது ஏழு நாட்களோ தங்களுக்குள் கிழமையைப் பிரித்துக்கொண்டு விருந்துபசாரம் நடக்கும்.

வீட்டில் விருந்து நடப்பதற்கு முன்னால் அந்த முஹல்லாவில் இருக்கும் பள்ளிவாசல் இமாமிற்கும் மோதியாருக்கும் மற்ற பள்ளிவாசல்களின் ஊழியர்களுக்கும் மறக்காமல் தூக்குச் சட்டியில் சாப்பாடு அனுப்பிவைப்பார்கள். இதுதான் தஞ்சை முஸ்லிம்கள் கொண்டாடும் பொங்கல்” என்று அடுக்குகிறார் சடையன் அமானுல்லா.  

மாட்டுப் பொங்கலும் உண்டு

அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் நாளன்று, மிராசுதார் வீட்டு உழவு மாடு, கறவை மாடு வில் வண்டி இழுக்கும் மாடுகள் அனைத்தும் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, மதுரை - தேனி மாவட்ட முஸ்லிம்களைப் போல் மாடுகளைக் குளிப்பாட்டி வண்ணச் சாயங்கள் பூசி, நெட்டியால் (pith) செய்யப்பட்ட மாலைளை கழுத்து, கால், நெற்றி என அணிவித்து, மாட்டுக்குப் பொங்கல், வாழைப்பழம், கரும்பு கொடுத்து சுதந்திரமாக விட்டுவிடுவார்கள். சிறுவர்கள் மாடுகளை ஊர்வலமாக அழைத்து சென்று, வீட்டுக்கு வீடு மாட்டுக்காகக் கொடுக்கப்படும் வாழைப்பழம், கரும்பு, அகத்தி கீரைகளை வாங்கி மாடுகளுக்குக் கொடுப்போம். அது ஒரு காலம்” என்கிறார் சடையன் அமானுல்லா. 

மிராசுதாரர்களோ இல்லையோ, குமரி மாவட்ட முஸ்லிம்களிடம் ‘புது அரிசிச் சோறு விருந்து’ போன்றவை புழக்கத்தில் இருந்துள்ளன.

கிழக்கு ராமநாதபுரம் வட்டார முஸ்லிம்களின் பொங்கல் கொண்டாட்டங்கள் சற்றே மாறுபடுகின்றன. “விளைந்தது வீட்டிற்கு வருவதை வரவேற்க போகி நாளில் வீட்டைக் கழுவி சுத்தம்செய்து வைப்பார்கள். தை முதல் நாளன்று புது நெல்லை குத்தி அரிசியாக்கி அதைப் பொங்கல் வைப்பர். இதன் பெயர் பாச்சோறு. புத்தரிசியை உரலில் இடித்து துள்ளும் பக்குவம் வந்தவுடன் அத்தோடு கருப்பட்டி அல்லது வெல்லம் கலந்து அதைக் கொழுக்கட்டைபோல் பிடித்து வைப்பர். இதன் பெயர் துள்ளுமாவு. பாச்சோற்றுடன் துள்ளுமாவு வைத்து ஏழு அல்லது பதினோரு கன்னி வைத்து கட்டப்பட்ட மரிக்கொழுந்தையும் வைத்து இறைவனுக்கு நன்றி சொல்லி பிரார்த்துவிட்டு அதனை அனைவருக்கும் பகிர்ந்துண்ணக் கொடுப்பர்.

வீட்டில் நெல்லைச் சேமித்து வைக்கும் மரசலின் நான்கு மூலைகளிலும் சிறிது பாலை ஊற்றி ஊதுபத்தி கொளுத்தி வைத்து இறைவனிடம் வேண்டியபின் புது நெல்லைக் கொட்டி சேமித்து வைப்பர். வீட்டில் மாடு கன்று வைத்திருப்போர் அவற்றைக் குளிப்பாட்டி செந்துருக்கப் பொட்டு வைத்து கொம்பிற்கு வர்ணம் பூசி, படைத்த பாச்சோறில் அதற்கான பங்கையும் வாழை இலையில் வைத்து கொடுத்து மகிழ்வர் என்கிறார் முதுகுளத்தூரைப் பூர்விகமாக கொண்ட வரலாற்று ஆய்வாளர் ஜாகிர் ஹுசைன்.

இது போன்று ஊர் ஊருக்கு, சிறு மாற்றங்களுடன் விவசாயத்தோடு ஒன்றிப்போன தமிழ் முஸ்லிம் சமுதாயம் பொங்கலை இஸ்லாமிய நெறிக்குள் கொண்டாடிவருகின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடல் கடந்து தென் கிழக்கு ஆசியாவில் வணிகம்செய்தவர்கள் தமிழ் முஸ்லிம்கள். இப்படி வெளிநாடு சென்ற இடத்திலும் கொண்டாட்டம் தொடரும். மலேசியாவின் ஈப்போ நகரில் உள்ள தமிழ் முஸ்லிம் சமுதாயம் பொங்கலைக் கொண்டாடிவருகின்றனர்.

மலேசிய தமிழ் முஸ்லிம்கள் கொண்டாட்டம்

மாறும் தவறான புரிதல்கள்

இவ்வாறு பரவலாக தமிழ் முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாடினாலும் இதிலிருந்து மாறுபட்டவர்களும் உண்டு. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, தட்டையான புரிதலுடன், அரபுக் கலாச்சாரத்தை இஸ்லாமிய வழிமுறைகளாக குழப்பிக்கொள்ளும் இயக்கவாதிகளின் பிரச்சாரத்தால் இத்தகு கொண்டாட்டங்கள் அந்தந்த வீட்டோடு முடங்கியதும் உண்டு. ஆனால், காலம் மாறுகிறது. திராவிட இயக்கமும், தமிழக அரசும் அதனை மதம் கடந்த தமிழர்த்  திருவிழாவாக முன்னிறுத்துவதும் இந்த மாற்றத்திற்கான முக்கியமான காரணம் ஆகும்.

வரலாற்று ஆய்வாளர் ஜாஹிர் ஹுசைன் கூற்றுப்படி, “மார்க்கத்தை ஏற்ற பின்னே எங்களுக்குக்  கிடைத்தவைதான் நோன்புப் பெருநாளும் தியாகத் திருநாளும். அதற்கும் மூத்த எங்களின் பண்பாட்டுத் திருநாள் பொங்கல் என்பதை நாம் மறந்துவிட முடியாது. பொங்கல் தமிழர்கள் நம் அனைவருக்குமான திருநாள். எங்களின் பண்பாட்டு வேர்களை எதன் பெயராலும் பட்டுப்போகச்செய்ய முடியாது.”

அரசியல் சூழலில் ஏற்படும் மாற்றங்களும் பண்பாட்டுத் தளத்தில் மாற்றங்களைக் கோருகின்றன. முன்னெப்போதையும்விட பொதுச் சமூகத்துடன் பிணைந்து நிற்பதை விரும்பும் முஸ்லிம் சமூகம் தனக்கான பண்பாட்டு வேர்களை மீண்டும் தேடிப் பிடிக்கிறது. மதரீதியிலான பிளவுகளைப் பரப்பப்படும் அரசியலுக்கு மொழிரீதியிலான ஒற்றுமை மூலம் அது பதில் கொடுக்கிறது. தமிழ்ப் பொங்கல் இனி கூடுதலாகத் தித்திக்கும்!

 

படங்கள் :

முகம்மது காசிம், ஜாஹிர் ஹுசைன் திவான், புர்ஹான் முகம்மது, கோம்பை அன்வர் 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கோம்பை எஸ் அன்வர்

கோம்பை அன்வர், வரலாற்று ஆய்வாளர். ஆவணப்பட இயக்குநர். தொடர்புக்கு: anvars@gmail.com


3

5

2




பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

selvan   2 years ago

மிகத்தெளிவான சான்றுகளுடன் தமிழர்பொங்கல் பற்றிய கட்டுரை.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

Umamaheswari   2 years ago

அறியப் பட வேண்டிய வரலாறு. தமிழர் திருநாள் என்ற பொங்கல் விழாவானது சாதி மதம் இனம் மொழி கடந்த சிறப்பு வாய்ந்த வரலாறு என்பதை இக்கட்டுரை அழுத்தமாக உண்மைகளுடன் முன் வைக்கிறது. சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். எத்தனை அழகாக முஸ்லீம் குடும்பங்கள் இவ்விழாவை மக்களுடன் இணைந்து கொண்டாடி வருகின்றனர் என வாசிக்கும் போது நிறைவான மகிழ்ச்சியாக உள்ளது. உமாமகேஸ்வரி ,சென்னை

Reply 11 0

Login / Create an account to add a comment / reply.

M. Balasubramaniam   2 years ago

தித்திக்கும் தேன் பாகும், --------------------------------- தெவிட்டாத தெள்ளமுதும்! ---------------------------------- கோம்பை அன்வரை நேரில் கண்டதில்லை. ஆனால், அவரை நினைக்கும் போதெல்லாம், இந்தப் பாடல் வரிகள்தாம் நினைவுக்கு வரும். அப்படித் தம்மை நேர்நிலை உரையாடல்கள் மூலம் மட்டுமே முன்வைக்கும் பெரிய மனிதர் அவர். தமிழ் இஸ்லாமியரின் தனித்துவ அடையாளத்தை முன்வைத்த, அவருடைய, ‘யாதும்’, ஆவணப்படம் மிக முக்கியமான ஒன்று. அதே போல அவரது ரமலான் கால சென்னை நடைபயணங்களும் மிகவும் ரசிக்கத்தக்கவை. பொங்கல் எப்படி இஸ்லாமியக் குடும்பங்களில் கொண்டாடப்படுகிறது என்பதை மிக அழகான உதாரணங்களுடன், படங்களுடன் விளக்கியிருக்கிறார் இன்றைய அருஞ்சொல் கட்டுரையில். கட்டுரையின் ஒவ்வொரு சொல்லும் இனிக்கிறது.

Reply 13 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வருமானச் சரிவு… பாஜகவைப் பின்னுக்கு இழுக்கும் சரி பாமாநிகழ்நேரப் பதிவுகள்மாதவிநவீன நகரமாக வேண்டும் சென்னை!தீட்டுசோவியத் தகர்வுபள்ளிக்கல்வித் துறைலூஸாகாபால் சக்கரியாமதமும் கல்வியும்வருடங்கள்ஐராவதம் மகாதேவன்உலக அமைதிக்கான நோபல் பரிசு – 2022விடுதலை ஒரு போர் வாள்சீரான நிதி மேலாண்மைஊட்டச்சத்துமராத்திய பிராமணர்கள்துயரப் பிராந்தியம்பழமையான நகரம்க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன்தமிழன்காவல் நிலையம்பாலியல் வழக்குபத்திரிகாதர்மம்சர்வதேச அரசியல்வருமானம்தி டான்ஆசிரியர்களும் கையூட்டும்ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!