கட்டுரை, அரசியல் 7 நிமிட வாசிப்பு

அண்ணாவின் கனவு நாடு எப்படிப்பட்டது?

03 Feb 2022, 5:00 am
1

சுதந்திர இந்தியா எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் முன்னோடிகள் காந்தி, நேரு என்று ஒவ்வொவருக்கும் ஒரு கனவு இருந்தது. இது வெறும் கனவாக மட்டும் அல்லாது, தங்களுடைய கனவு தொடர்பில் திட்டவட்டமான ஒரு வரையறையும் இருந்தது. இப்படி, தாங்கள் சிந்தித்த நாடு தொடர்பில் திராவிட இயக்கத் தலைவர்களுக்குத் திட்டவட்டமான கனவு ஏதும் இருந்ததா; அப்படியென்றால், அது குறித்த அவர்களுடைய சிந்தனை என்னவாக இருந்தது? 1956இல் அண்ணாவுக்கும் வினோபா பாவேவுக்கும் இடையே நடந்த உரையாடல் ஓர் அரிய ஆவணம். ஒரு நாடு என்பதை எவ்வளவு ஜனநாயகரீதியாகவும், கூட்டாட்சிப் பண்புடனும் அண்ணா கனவு கண்டார் என்பதையும், அவருடைய தொலைநோக்கு எவ்வளவு பரந்து விரிந்திருந்தது என்பதற்குமான ஆவணம் இது. பிற்பாடு, இந்தியா எனும் அமைப்பில் அண்ணா வலியுறுத்திய கூட்டாட்சி கோரிக்கைகள் பலவும் ஏதோ இந்திய அமைப்பில் முரண்பாடு கொண்டு அவர் கேட்டது இல்லை; இயல்பாகவே அவர் கொண்டிருந்த விழுமியங்களின் நீட்சி என்பதையும் இந்த உரையாடல் நிறுவுகிறது.   

பண்ணையாளர்கள், நிலவுடைமையாளர்களிடமிருந்து ஏழை விவசாயிகளுக்கு நிலத்தைத் தானமாகப் பெறும் ‘பூதான இயக்க’த்தை நடத்திய வினோபா பாவே தமிழ்நாடு வந்திருந்தபோது அண்ணாவைச் சந்தித்தார். தமிழில் பரிச்சயம் உடையவரான வினோபாவுக்கு அண்ணா மீது நல்லெண்ணமும் மதிப்பும் இருந்ததை உணர முடிகிறது. அண்ணாவைச் சந்திக்க விரும்பினார். காங்கிரஸை அண்ணா கடுமையாக எதிர்த்துக்கொண்டிருந்த காலகட்டம் அது என்பதோடு, ‘திராவிட நாடு’ கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்திக்கொண்டிருந்த காலகட்டமும் அது. மேலும், பெரும் பண்ணையாளர்களிடமிருந்து நிலங்களைக் கையகப்படுத்தி, குடியானவர்களுக்கு வழங்கும் நிலச் சீர்திருத்தத்துக்காகவும் உக்கிரமாக அண்ணா குரல் கொடுத்துவந்தார்.

காந்தியரான வினோபா மீது பெரும் மதிப்பு அண்ணாவுக்கு இருந்தது. அதேசமயம், நிலச் சீர்திருத்தத்தைத் தள்ளிப்போட்டு வந்த காங்கிரஸ், வினோபாவின் பூதான இயக்கத்தை ஒரு கவசம்போல பயன்படுத்திவருகிறது என்கிற எண்ணமும் அவருக்கு இருந்தது. இது போக, அண்ணாவை வினோபா சந்திப்பதை அவர் அருகில் இருந்த அன்றைய காங்கிரஸ் நிலவுடைமையாளர்கள் சிறிதும் விரும்பவில்லை. இத்தகைய சூழலில்தான் இந்தச் சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பு தொடர்பாக, ‘திராவிட நாடு’ பத்திரிகையில் நீளமான கட்டுரை ஒன்றை எழுதிய அண்ணா, அதில் வினோபா உடனான உரையாடலையும் வெளியிட்டார். வினோபா இந்தியில் பேசியிருக்கிறார். அண்ணா தமிழில் பேசியிருக்கிறார். அதன் தழுவல் வடிவத்தை ‘அருஞ்சொல்’ இங்கே வெளியிடுகிறது. மொழிபெயர்ப்பாளர் ஊடாக நடைபெற்ற அந்த உரையாடலின் பொதுவெளியில் இந்த உரையாடல் இதுவரை கிடைத்துவந்தாலும், அதன் மூல வடிவம் பார்வைக்குக் கிடைத்தது இல்லை. அந்த மூல ஆவணத்தைக் காந்தியரும், ‘அருஞ்சொல்’ வாசகருமான ராட்டை ரகுநாதன் சமீபத்தில் தேடி, கண்டறிந்து நமக்கு அனுப்பியிருந்தார். அந்த ‘திராவிட நாடு’ பக்கங்களையும் கட்டுரையின் இறுதியில் ‘அருஞ்சொல்’ வாசகர்கள் காணலாம். 

வினோபா: உங்கள் கழகத்தின் நோக்கம்?

அண்ணா: நாங்கள், திராவிட நாடு கேட்கிறோம் – அறிவீர்களே!

வினோபா: உங்கள் கழகத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாமல்லவா… உதாரணமாக, நான் சேர விரும்பினால்?

அண்ணா: எங்களுடையது அகில இந்தியக் கட்சி அல்லவே. எனவே, இயல்பாகவே திராவிட நாட்டில் உள்ளோர்தான் உறுப்பினராகச் சேர விரும்புவர்.

வினோபா: திராவிட நாடு என்றால், தனி நாடாகவேவா?

அண்ணா: ஆமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிவழி அரசுகள் அமைத்து, பிறகு அவற்றின் கூட்டாட்சியாகத் திராவிட நாடு ஏற்படுத்துவது.

வினோபா: மத்திய சர்க்காருக்கு என்ன அதிகாரம்?

அண்ணா: மத்திய சர்க்காரின் கீழ் இருக்கும் நிலைமையே எழாது. தேவைப்படும்போது வெளிநாட்டு விவகாரம் குறித்துக் கலந்து பேசலாம்; கூடிப் பணியாற்றலாம்.

வினோபா: அப்படி என்றால், தனி நாடு. அதாவது தனி அரசு, சிலோன்போல.

அண்ணா: ஆமாம்.

வினோபா: பாகிஸ்தான்போல் ஆகிவிடும்.

அண்ணா: நியாயமான கோரிக்கை மறுக்கப்பட்டால், பாகிஸ்தான்போல்தான் ஆகிவிடும்.

வினோபா: தனி நாடு என்றால், தனி ராணுவம்கூட இருக்கும்...

அண்ணா: ஆமாம், தனிப் படை இருக்கும்.

வினோபா: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடமெல்லாம் ஒன்றாக இருக்குமா?

அண்ணா: எங்களுக்கு நம்பிக்கை உண்டு. ஏனெனில், நான்கு மொழிகளும் ஒரே மூலம் கொண்டவை.

வினோபா: நான் நான்கு மாதம் ஆந்திரத்தில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். தமிழர்களுடன் ஒன்றுகூடி அரசு அமைக்க விரும்பும் எண்ணம் ஆந்திரர்களிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே?

அண்ணா: தாங்கள் ஆந்திரம் சென்ற தருணம், ஆந்திரர்கள் தமிழர்களுடன் ஒரே அரசில் இருந்ததால், தங்கள் வளர்ச்சி தடைப்பட்டது என்று எண்ணிக் கசப்பு அடைந்திருக்கும் நேரமாக இருந்தது. அவர்கள் இப்போது தனியாகிவிட்டார்கள். இப்போது அவர்களுக்கும் மத்திய சர்க்காருக்கும்தான் தொடர்பு. இப்போதும் தங்களுக்கு வளர்ச்சி இல்லை என்றால், அதற்குக் காரணம் தமிழரல்ல, மத்திய சர்க்கார்தான் என்று அறிந்துகொள்வார்கள். இப்போதே மைசூர், ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளில் ஐந்தாண்டுத் திட்டங்களில் சரியான முறையில் தமக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை என்று எண்ணுகிறார்கள்.

வினோபா: மத்திய சர்க்கார் அநீதியாக நடப்பதால்தானே பிரிந்துபோக விரும்புகிறீர்கள்? நீதியாக நடந்துகொண்டால்?

அண்ணா: அப்படிப் பார்ப்பதைவிட இதுபோல் எண்ணக் கேட்டுக்கொள்கிறேன். மத்திய சர்க்கார் அநீதியாக நடப்பதால் கசப்படைகிறோம் என்று கூறுவதைவிட, மத்திய சர்க்கார் என்று ஒன்று இருந்தால், அநீதிதான் நடக்கும் என்று கொள்ள வேண்டுகிறேன். மேலும், நீதியாக நடக்கக் கூடிய கடைசித் தலைமுறையே இப்போது வடநாட்டில் உள்ளது என்றும் நாங்கள் நினைக்கிறோம். இனி வரக்கூடிய தலைமுறைகளில், அநீதி இன்னும் அதிகமாக இருக்கும்.

வினோபா: நீங்கள் நான்கு மொழிப் பிரதேசத்தையும் கூட்டாட்சியாக்கின பிறகு, உங்கள் ஆட்சியிலே அதிருப்தி யாருக்கேனும், எந்தப் பகுதிக்கேனும் ஏற்பட்டால்?

அண்ணா: பிரிந்துபோக உரிமை தருகிறோம்.

வினோபா: தனி நாடு ஆகும்.

அண்ணா: ஆகலாம்.

வினோபா: அதாவது, அன்புடன் ஒன்றாக இருக்கலாம். இல்லையானால், பிரிந்துபோக வேண்டியது. அதுதானே?

அண்ணா: ஆம் ஐயா! ஒன்றுசேர்ந்து இருப்பது என்பது ஒரு விஷயம் – அந்தப் பெயரைக் கூறிக்கொண்டு ஒன்றின் கீழ் ஒன்று என்ற நிலைமை ஏற்படுவது வேறோர் விஷயமல்லவா?

வினோபா: இதைப் புரிந்துகொண்டேன். இது அஹிம்சா முறையில்தானே நடைபெற வேண்டும். வன்முறை கூடாதல்லவா?

அண்ணா: வன்முறை கூடாது. வன்முறை என்றால், ஆயுத வன்முறை மட்டுமல்ல; தத்துவ வன்முறை புகுத்துவதும் கூடாது.

வினோபா: அப்படியென்றால்?

அண்ணா: தேச ஒற்றுமை, தேசியம் போன்ற ஏதேனும் தத்துவங்களையே கருவியாக்கி வன்முறைப்படுத்துவது கூடாது!

வினோபா: அப்படியானால், தனி நாடு, அதிலே தனியாகப் படையும் இருக்கும் என்றீர்களே, ஏன் படை?

அண்ணா: மற்றவர்களிடம் படை இருப்பதால், ஏற்படும் ஆசைதான் அதற்குக் காரணம். தாங்கள் இப்போது, மாநாட்டிலே இந்திய சர்க்காருக்குக் கூடக் கூறியிருக்கிறீர்கள், படை குறைக்க. பாபு ராஜேந்திர பிரசாத்கூடக் கேட்டுக்கொண்டிருந்தார். பார்ப்போம், அவர்கள் படை குறைவதை!

வேறொருவர்: பாபு ராஜேந்திர பிரசாத் அவ்விதம் கூறவில்லையே?

வினோபா: இல்லை – நான் கூறியபோது பாபு ராஜேந்திர பிரசாத் இருந்தாரல்லவா? சரி… இதேபோல வங்காளம், மராட்டியம் இவையெல்லாம் பிரிந்துபோக விரும்பினால்?

அண்ணா: பிரியலாம். ஆனால், அது அந்தந்த இடத்து மக்களின் உணர்ச்சியைப் பொறுத்திருக்கிறது.

வினோபா: இப்படிச் சிறுசிறு நாடுகளாகிவிட்டால், சிறிய நாடுகளைப் பெரிய நாடுகள் பிடித்து அழிக்குமல்லவா?

அண்ணா: அப்படிக் கூறிவிடுவதற்கில்லை. சிறிய நாடுகளைப் பெரிய நாடுகள் தாக்காதபடி தங்களைப் போன்றவர்கள் உபதேசிக்கும் அஹிம்சையும் ஆத்ம சக்தியும் பயன்படுமல்லவா?

வினோபா: அரசியல் விஷயத்தில் உங்கள் எண்ணம் அறிந்துகொண்டேன். சமுதாய சம்பந்தமாக உங்கள் கட்சிக் கொள்கை என்ன?

அண்ணா: தங்களுக்குத் திருமூலர் தெரியுமென்று எண்ணுகிறேன். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதைத்தான் நாங்கள் கொள்கையாக்கிக்கொள்கிறோம்.

வினோபா: பொருளாதாரத் திட்டம் என்ன?

அண்ணா: மனிதனுடைய அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, குடியிருக்கும் இடம் ஆகியவை சர்க்காரால் அனைவருக்கும் உறுதி அளிக்கப்பட வேண்டும்.

வினோபா: அதாவது, சுரண்டல் கூடாது?

அண்ணா: அப்படிச் சொல்வதைவிட, வேறுவிதமாகக் கூற விரும்புகிறேன். இந்த மூன்று அடிப்படைத் தேவைகளைப் பொறுத்த தொழில்கள் லாப நோக்கத்துக்காக நடத்தப்படக் கூடாது.

வினோபா: அப்படியானால், அந்தந்தக் கிராமத்து நிலம், கிராமச் சொத்தாக இருக்க வேண்டும்?

அண்ணா: ஆமாம் – அதிலே உழைத்துப் பெறக்கூடியது, அந்தந்தக் கிராம மக்களுக்குப் போதுமானதாக இல்லா விட்டால், சர்க்கார் தேவைப்படும் அளவு தர வேண்டும்.

வினோபா: அதிகமாக இருந்தால் சர்க்கார் எடுத்துக் கொள்ளலாம்.

அண்ணா: ஆமாம்.

வினோபா: (அரியநாயகம் என்பவரைப் பார்த்து) பார்த்தாயா, நான் சொன்னேனே! நம் கொள்கையேதான். (என்னைப் பார்த்து) கட்சி முறையில், பூமி தான இயக்கத்துக்கு என்ன செய்கிறீர்கள்?

அண்ணா: கட்சி அடிப்படையில் நாங்கள் ஈடுபடுவதற்கு இல்லை. சங்கடம் உண்டு, எங்கள் கட்சி இதில் ஈடுபட்டால். அதனாலேயே வேறு சில கட்சிகளுடைய பகை, தங்கள் இயக்கத்துக்கு ஏற்பட்டுவிடக்கூடும்.

ஜெகந்நாதன்: தனிப்பட்ட முறையில் கழகத் தோழர்கள் பல இடங்களில் நமக்குத் துணையிருக்கிறார்கள்.

வினோபா: நீங்கள் தனிப்பட்ட முறையில் என்ன செய்கிறீர்கள்?

அண்ணா: தங்கள் நல்ல நோக்கத்தை மக்களுக்குக் கூறுகிறேன். ‘நல்லவர், அவரை ஏமாற்றிவிடாதீர்கள்!’ என்றுகூடச் சொல்லிவருகிறேன்.

வினோபா: தனிப்பட்ட முறையில் ஏதேனும் உதவுகிறீரா?

அண்ணா: என்னாலான உதவிகளை மக்களுக்குச் செய்துகொண்டிருக்கிறேன்.

வினோபா: என்னோடு பாத யாத்திரை வாருங்களேன், ஒரு தடவை. பழக்கம் உண்டா?

அண்ணா: பழக்கமில்லாமலென்ன, வருகிறேன்.

ஜெகந்நாதன்: மறுபடியும் வாருங்கள் பார்க்க.

அண்ணா: அதற்கென்ன... இன்னும் ஒரு மாதம் கழித்து மறுபடி வந்து பார்க்கிறேன்.

பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வினோபா புறப்பட்டார். நான் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு, சில நிமிஷ நேரம், மற்ற நண்பர்களிடம் அளவளாவிவிட்டு, ஜீப்பின் துணையால் ஆற்றைக் கடந்து ஊர் வந்து சேர்ந்தேன். உள்ளமோ வினோபா பாவேவின் முயற்சி பற்றியும், அதற்குத் துணைநிற்பதாகக் கூறிடும் துதி பாடகர்களாலேயே, எந்தெந்த வகையில் அது குலைக்கப்பட்டுவருகிறது என்பது பற்றியும் எண்ணிற்று, அதுபற்றிப் பிறகு!

அன்பன்,
அண்ணாத்துரை
17.6.1956

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1

3

1




பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   3 years ago

வினோபா-அண்ணா சந்திப்பு ஒரு வரலாற்று நிகழ்வுபோல ஆகிவிட்டதை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது. நல்லதையே நினைக்கும் இருவரும் சந்தித்து உரயாடுவது ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள உதவுவதோடு, அடுத்து முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு உரம் சேர்க்கும் வகையிலும் அமையும். தமிகழத்தில் சர்வோதய இயக்கத்தின் பங்களிப்பாக ஆங்காங்கே ஆக்கபூர்வமான செயல்கள் நடந்தேறின. உதாரணமாக் தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைக்ககுப் பின்னர், ஜெகன்னாதன் தம்பதியினரின் முயற்சியால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட சாகுபடி நிலங்களைச் சொல்லலாம்.. சர்வோதய இயக்கம் பெரிய அளவில் நேரடியாக நிலப்பங்கீட்டில் வெற்றிபெற முடியவில்லை என்பது கசப்பான உண்மையாக இருந்தாலும் அவ்வியக்கம் ஏற்படுத்திய தாக்கம் பின்னாளில் நிலச்சீர்திருத்த சட்ட நடைமுறைகளில் மாநில அரசுகள் ஈடுபட வழிவகுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

மின்சாரம்புதிய கல்விக் கொள்கைஆசிரியர்இமையம் அருஞ்சொல்காதில் இரைச்சல் ஏற்படுவது ஏன்?புலப்பெயர்வுசமூகப் படிநிலைஉரையாடல்கள்படிப்படியான மாற்றங்கள்உயர்கல்வித் துறை பன்மைத்துவம்இடதுசாரிகளுக்கு எதிர்ப்புஜிஎன்சிடிடி (திருத்த) மசோதாபாலஸ்தீன அரசியலில் அடுத்தது என்ன?: தாரிக் பகோனி பேரஷ்ய மொழி மாபெரும் பொறுப்புஅவதூறான பிரச்சாரங்கள்தேசிய எழுத்தறிவு அறக்கட்டளைபயணி தரன் கட்டுரைகச்சேரிகள்அசோக் செல்வன் திருமணம்தசைநாண்கள்வேகப் பந்து வீச்சாளர்கள்மூன்றாவது கட்டம்: 272 நிச்சயமில்லைகர்நாடகம்வணிக சினிமாdenugaரிசர்வ் வங்கியின் சொற்சித்திரமும் உண்மை நிலையும்ஏழைக் குடும்பங்கள்வெள்ளம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!