கட்டுரை, அடையாள அரசியல் 3 நிமிட வாசிப்பு

மூன்று தேர்தல் முடிவுகளும் சொல்வது என்ன?

யோகேந்திர யாதவ்
09 Dec 2022, 5:00 am
1

மூன்று தேர்தல்கள், மூன்று வெவ்வேறுவிதமான முடிவுகள் – தில்லி, குஜராத், இமாசலம்.

பாஜகவின் வெற்றிக்குக் காரணம் மோடியின் வசீகரம் என்றால் குஜராத்தில் அதற்கு அமோக ஆதரவு, இமாசலத்தில் தோல்வி, தில்லியிலோ அது எடுபடவே இல்லை – ஏன்?

மூன்று இடங்களிலும் ஆட்சியில் இருந்தது பாஜக. மூன்றிலுமே திறமையற்ற அரசுகள். ஒரே நேரத்தில் தேர்தல். ஆனால் முடிவுகளோ வெவ்வேறு. இதற்கு என்ன காரணம்?

ஆய்வுக்குரிய புதிர்

அரசியல் அறிவியல் பாடத்தில் வெவ்வேறுவிதமான அரசியல் களங்களைப் பற்றிப் பயிலும் மாணவர்களுக்கு இது ஆய்வுக்குரிய நல்ல புதிர். ஒரேவிதமான ஆட்சியிருந்தும், வெவ்வேறு பகுதி மக்கள் வெவ்வேறு விதமாக ஏன் வாக்களிக்கிறார்கள் என்பது அரசியல் ஆராய்ச்சிக்கு நன்கு உதவுகிறது. 

மிகவும் கவனமாக ஆராய்ந்து ஒப்பிட்டால் அரசியல் எப்படி இயங்குகிறது என்பதில் ஆழமான புரிதல் ஏற்படும் என்று அரிஸ்டாட்டில் முதல் அலெக்சி டி டொக்குவிலா வரை வலியுறுத்தியிருக்கிறார்கள். இந்த அறிவுரையை நாம் கடைப்பிடிப்போம். 

சரி, மாநில சட்டமன்றத் தேர்தல்களையும் உள்ளாட்சிமன்றத் தேர்தலையும் ஒப்பிடலாமா? கூடாது என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், இமாசலத்தைவிட தில்லி மாநகராட்சியில் படித்த, விவரமறிந்த வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம். எனவே தில்லி மாநகராட்சித் தேர்தலை மாநிலத் தேர்தலாகவே கருதலாம்.

குஜராத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. தில்லி மாகராட்சியில் ஆஆக பெரும் வெற்றி பெற்றுள்ளது. இமாசலத்தில் காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தி நல்லதொரு வெற்றியைப் பெற்றுள்ளது.

ஆட்சியின் தரம் ஒன்றே

மூன்று அரசுகளும் வெவ்வேறு விதமாகச் செயல்பட்டன, அதனால்தான் இந்த முடிவு என்று கூறலாமா? உண்மையில் பாஜகவின் ஆட்சி நிர்வாகம் மூன்று இடங்களிலும் மிக மோசமாகத்தான் இருந்தது. 

தில்லி மாநகராட்சியைத் தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆண்ட பாஜக, பெருநகரம் ஒன்றை எப்படி நிர்வகிக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாகத்தான் செயல்பட்டது. நகரின் சுகாதாரத்தைப் பராமரிப்பது, குப்பைகளையும் கழிவுநீரையும் அகற்றுவது, கல்வி அளிப்பது ஆகியவற்றில் மிக மோசமாகத் தவறியது. இவையெல்லாம் போக, ஊழலிலும் திளைத்தது. 

இமாசலத்தில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், சாலை வசதி ஆகியவை இமாசலப் பிரதேச மாநிலத் தேர்தலில் மிகப் பெரிய பிரச்சினைகளாகப் பேசப்பட்டன. 

குஜராத்தில் பாஜக அரசு தொடர்பாக மக்கள் திருப்தி தெரிவிக்கிறார்கள் என்று ‘லோக்நீதி-சிஎஸ்டிஎஸ்’ தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவித்தது; ஆனால், பத்தில் ஏழு வாக்காளர்கள் (70%), குஜராத் அரசு ஊழல் மிகுந்தது என்றும், வேறு கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு இருந்தால் அதற்கு நிச்சயம் வாக்களிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாஜகவை எதிர்க்கும் அரசியல் கட்சிகளிடம் அதன் அளவுக்கு பண பலம், ஊடக ஆதரவு பலம், கட்சியின் நிர்வாக இயந்திரம் ஆகியவை சாதகமாக இல்லை என்பது கிட்டத்தட்ட நிரந்தர அம்சமாகவே தொடர்கிறது. 

மூன்று மாநிலங்களிலுமே பாஜகவின் மாநிலத் தலைவர்கள் அதிக செல்வோக்கோ, தொண்டர்களிடம் ஆதரவோ பெற்றவர்களும் அல்ல. உள்கட்சிப் பூசல் பாஜகவிலும் முக்கிய அம்சம், அதுவும் இமாசலத்தில் அது மிக அதிகம். இப்போது உள்கட்சிப் பூசல்கூட பாஜகவில் நிரந்தர அம்சமாகிவருகிறது. 

அப்படியென்றால், இந்த முடிவை எப்படிப் புரிந்துகொள்வது?

பாஜகவுக்கு சாதகம் எது?

பாஜகவுக்கு உள்ளபடி சாதகமாக இருப்பது எதிர்க்கட்சிகளின் முடிவுகளும், தேர்தலின்போது அவற்றின் அணுகுமுறையும்தான். குறிப்பாக மூன்று அம்சங்கள் முக்கியமானவை.

முதலாவது, பாஜகவை எதிர்ப்பதில் ஒரு கட்சி நல்ல வலுவுடன் முதன்மையான கட்சியாக இருக்க வேண்டும். தில்லியில் ஆஆக அப்படித்தான் பாஜகவுக்கு வலுவான போட்டியாளராக இருக்கிறது. இமாசலத்தில் காங்கிரஸ் கட்சி முக்கியமான, பெரிய எதிர் சக்தியாக விளங்குகிறது. குஜராத்தில் அப்படி ஒரு நிலை எதிர் வரிசையில் இல்லை. மேலும், எதிர்க்கட்சிகள் வாக்குகள் சிதறியதும் பாஜகவுக்குக் கூடுதல் அனுகூலம் ஆனது.

இரண்டாவதாக, பாஜகவை எதிர்க்கும் பிரதான கட்சி திட்டவட்டமான செயல்திட்டங்களை அறிவிக்க வேண்டும், அதைச் செயல்படுத்தும் தலைவர் யார் என்பதையும் முன்கூட்டியே வாக்காளர்களுக்குத் தெரிவித்துவிட வேண்டும். இமாசலத்தில் அப்படித் திட்டவட்டமாக அறிவித்தது காங்கிரஸ். ஆனால், ஏனைய இடங்களில் அப்படி அறிவிக்கவில்லை. ஆஆக குஜராத்தில் முதலமைச்சர் பதவிக்கு புதுமுக வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்திருந்து இங்கே நினைவுகூரத்தக்கது. அங்கே 20% வாக்குகளை அது பெற்றதற்கு அதுவும்கூட காரணம்போலத் தெரிகிறது. தில்லிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முகமே அதற்குப் போதுமானதாக இருந்தது.

மூன்றாவதாக, எதிர்க்கட்சிகள் இணைந்து உறுதியுடனும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வகையிலும் பாஜகவை எதிர்கொள்ள வேண்டும். மூன்று மாநிலங்களில் ஒன்றைத் தவிர, நன்கு திட்டமிடப்பட்ட தேர்தல் உத்தி காங்கிரஸால் செயல்படுத்தப்படவில்லை. குஜராத்தில் ஒற்றுமைப்பட்ட அமைப்பாக, வெற்றி என்ற இலக்கையே குறிவைத்து, அதை அடைய வேண்டும் என்ற தீவிரத்துடன் காங்கிரஸ் செயல்படவில்லை. இமாசலத்திலும்கூட தொடக்கத்தில் காட்டிய வேகத்தை அப்படியே அது தொடரவில்லை. ஆனால் ஆஆக இதற்கு மாறாக, தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற உத்தியை வகுத்துக்கொண்டு தீவிரமாகச் செயல்பட்டது. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற பாஜகவின் குறிக்கோளை ஆஆகவும் பின்பற்றுகிறது. இமாசலத்தில் தங்களுக்கு ஆதரவில்லை, காங்கிரஸ் வலுவாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டவுடன் அங்கே செலவு செய்வதையும் தொண்டர்களையும் தலைவர்களையும் பிரச்சாரம் செய்ய வைத்து நேரத்தையும் சக்தியையும் வீணடித்துக்கொண்டிராமல், குஜராத் சென்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. தில்லி மாநகர மன்றத் தேர்தலில் பிரச்சாரத்தை ஒரே வேகத்தில் தொடர்ந்து மேற்கொண்டது. இதனால் அது பலன் அடைந்துள்ளது.

காலம் கடந்துவிடவில்லை

நான் கூறுவதெல்லாம் புதிய கண்டுபிடிப்புகள் அல்ல. வங்கத்தில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியிலும் இதே பாடம்தான் பெறப்பட்டது. நீண்ட காலமாகத் தொடர்ச்சியாகவும் வலுவாகவும் நடந்த விவசாயிகள் கிளர்ச்சிக்குக் கிடைத்த வெற்றி சொல்வதும் அதையேதான். மோடி வீழ்த்த முடியாத சக்தி கொண்ட தலைவர் அல்ல. பாஜகவும் வலுவாகத் தாக்கினால் தோல்வியடையும் கட்சிதான். எதிர்க்கட்சிகளிடம் உறுதியும் விடாமுயற்சியும் பொதுவான உத்தியும் இருந்தால் பாஜக தோற்பது நிச்சயம். 2024 பொதுத் தேர்தலுக்கு இதிலிருந்து பாடம் கற்பதற்கு இப்போதும் காலம் கடந்துவிடவில்லை!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

5

1




1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

gowri shanker   2 years ago

Very poor biased analysis. The Hindu ( english ) carries a better version.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

ஜெனரல் இண்டியன் இங்கிலீஷ்வள்ளலார் திருவிளக்குமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமசமஸ் உரைதன்பாத்அரசுத் துறைநவீன கிரிக்கெட்மறக்கப்பட்ட பிரதமர்டீனியா பீடிஸ்இந்தி மாநிலங்கள்உச்சபட்ச செயற்கை நுண்ணறிவுபால் சக்கரியாசிறுநீர் அடைப்புபிரிட்டன்விஜய் வரட்டும்… நல்லது!லலாய் சிங் பெரியார்மையவியம்இனப்படுகொலைசர்வோத்தமர்கள்கி.வீரமணிதலித் மக்கள் குடியிருப்புஆர்டிஐ சட்டம்கை நீட்டி அடிக்கலாமா?ஐரோப்பிய சினிமாஅண்ணா திமுககோணங்கள்வங்கித் துறைநால்வரணிமுதலீட்டியம்தலைகீழாக்கிய இந்துத்துவம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!