கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி: ‘ஈ-தினா’ கணிப்பு

யோகேந்திர யாதவ்
03 May 2023, 5:00 am
3

நான் ‘வர்க்க’ அடிப்படையிலான ஆய்வைத் தீவிரமாக மேற்கொள்ளுங்கள் எனக் கேலிசெய்து என்னுடைய மார்க்சிஸ்ட் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கட்டுரை எழுத விரும்புகிறேன்; ‘வர்க்கம்’ தொடர்பாக அவர்களை இப்படி வம்புக்கு இழுப்பதை அடிக்கடி செய்கிறேன். கடிகாரத்தின் பெண்டுலத்தைப் போல அரசியல் ஆய்வுகள் இந்தியாவில் ஒரு முனையிலிருந்து எதிர்முனைக்குச் சென்றுவிட்டது. ஒரு காலத்தில் தெருவில் இரண்டு கோழிகள் சண்டை போட்டால்கூட அதற்குக் காரணம் ‘வர்க்கம்’தான் என்கிற அளவுக்கு இருந்தவர்கள், இப்போது எவ்வளவு பெரிய மோதலாக இருந்தாலும் அதற்குக் காரணம் ‘சாதி’தான் என்கிறார்கள்.

இந்தக் குற்றத்துக்குக் காரணம், என் போன்றவர்களுடைய தேர்தல் வாக்களிப்பு ஆய்வுகள்தான்; தொலைக்காட்சிகளில் முதல்முறையாக சாதிவாரியாக எப்படி வாக்குகள் விழுந்தன என்று பேச ஆரம்பித்து, இப்போது அனைவருமே சாதி அடிப்படையில்தான் வாக்குகள் விழுகின்றன என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது கர்நாடகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் முடிவுகள் நிச்சயம் வர்க்கம் சார்ந்துதான் வரப்போகிறது. நாம் ஏற்கவில்லை என்றாலும் கவனம் செலுத்தவில்லை என்றாலும் தேர்தல் முடிவுகளில் ‘வர்க்கம்’ முக்கியப் பங்கு வகிக்கிறது.

கன்னடத்தில் மாற்று ஊடகமாக ‘ஈ-தினா’ என்ற அமைப்பு செயல்படுகிறது. அவர்கள் தேர்தலுக்கு முந்தைய மனநிலையை மாநிலத்தின் கிட்டத்தட்ட எல்லா பகுதிகளிலும் தன்னார்வத் தொண்டர்கள் மூலம் மிகவும் அக்கறையுடனும் விரிவாகவும் கேள்விகள் கேட்டுப் பதிவுசெய்துள்ளனர். ஏராளமான தேர்தல் கணிப்புகளைச் செய்த நான் இதைக் கேள்விப்பட்டதும் உற்சாகமடைந்தேன். இந்தக் கணிப்பில் முக்கிய அம்சம் அதன் நடுநிலையான பொதுத்தன்மை. தேர்தல் வேலைகளைச் செய்யும் முகமைகள் மூலம் சம்பள ஆள்களை வைத்துத் தரவுகளைச் சேகரிக்காமல், மக்களில் சுமார் ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து, மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 204 தொகுதிகளில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

தொலைபேசி வழியாகக் கேள்வி கேட்டுப் பதிவுசெய்யாமல், நேருக்கு நேர் பேசி பதில்களைப் பெற்றுள்ளனர். 41,169 பேரிடம் பதில்களைப் பெற்றுள்ளனர். அவர்கள் தேர்ந்தெடுத்தவர்கள் பல்வேறு பிரிவையும் சமூக அந்தஸ்தையும் சேர்ந்தவர்கள். வாக்குச் சாவடிகளையும் வாக்காளர்களையும் வெவ்வேறு இடங்களிலிருந்து தேர்வுசெய்துள்ளனர். மக்களிலும் அனைத்து வயதினரிடமும் ஆண் - பெண்களிடமும் அனைத்து வர்க்கத்தினரிடமும் பதில்களைப் பெற்றுள்ளனர். (இந்த சர்வே தொடர்பாக தொழில்நுட்பரீதியாக சில ஆலோசனைகளை அளித்ததுடன், எப்படிச் செய்ய வேண்டும் என்றும் விளக்கியிருந்தேன். எனவே, தரவுகளை அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டனர்).

காங்கிரஸ் அலை

‘ஈ-தினா’ சர்வே, கர்நாடகத்தில் மே 10இல் நடைபெறும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றிபெறும் என்கிறது. 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 132 - 140 இடங்களும், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு 57 - 65 இடங்களும், மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளத்துக்கு 19 - 25 இடங்களும் கிடைக்கும் என்று சர்வே கூறுகிறது.

காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கும் மொத்த வாக்குகளுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையில் 10% அளவுக்கு மாபெரும் இடைவெளி இருப்பதாகக் கூறுகிறது. 2018இல் இந்த இடைவெளி 5%ஆக இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 43%, பாஜகவுக்கு 33% (கடந்த தேர்தலைவிட 3% குறைவு) ஐக்கிய ஜனதா தளத்துக்கு 16% (கடந்த தேர்தலைவிட 2% குறைவு) வாக்குகள் கிடைக்கும் என்று தெரிகிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

விட்டுக்கொடுத்து வெற்றியைப் பெறுவோம்

ப.சிதம்பரம் 01 May 2023

வர்க்கரீதியிலான வாக்களிப்பு

இந்தத் தேர்தல் கணிப்பு சரியாக இருக்குமா என்ற சந்தேகமே எனக்கு ஏற்படவில்லை, காரணம் இதன் தரவுகள் உண்மையாக இருக்கின்றன. இந்த ஆய்வை ஆராய்ந்தபோது மிகுந்த உற்சாகம் டைந்தேன், காரணம் கருத்து தெரிவித்தவர்களுடைய பொருளாதாரப் பின்னணி குறித்தும் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். பெரும்பாலான தேர்தல் கணிப்பாளர்கள் (சிஎஸ்டிஎஸ் - லோக்நீதி விதிவிலக்கு), கருத்து தெரிவிப்பவர்கள் எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பதிவுசெய்வதையே சமீபத்திய ஆண்டுகளில் நிறுத்திவிட்டார்கள். ‘ஈ-தினா’ சர்வே நமக்குள் எழுப்பும் கேள்வி, வர்க்கம்தான் வாக்களிப்பு முடிவைத் தீர்மானிக்கிறதா?

இதற்கு உரத்த குரலில் வரக்கூடிய பதில் – ‘ஆமாம்’. செய்யும் தொழில் அடிப்படையில் குடும்பத் தலைவர்களை அடையாளமிட்டுப் பார்த்தால், விவசாயத் தொழிலாளர் – அன்றாடங்காய்ச்சிகளில் 50% பேர் காங்கிரஸுக்கும், 29% பேர் பாஜகவுக்கும் வாக்களிக்கப் போவதாகக் கூறியுள்ளனர். வியாபாரிகள், சொந்தமாகத் தொழில் செய்பவர்களில் 43% பாஜகவையும் 30% காங்கிரஸையும் ஆதரிக்கின்றனர். மாதாந்திர ஊதியக்காரர்களில் ‘அதிக ஊதியம்’ பெறுவோரில் குறைவானவர்கள் காங்கிரஸை ஆதரிக்கின்றனர்; குறைந்த ஊதியக்காரர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸைத்தான் ஆதரிக்கின்றனர்.

இந்த ஆய்வு முழுமையாக இருப்பதற்காக வெறும் வேலை, சம்பளம் ஆகியவற்றுடன் அவர்களுடைய வீடுகளில் 2 சக்கர, 4 சக்கர மோட்டார் வாகனங்கள் உள்ளனவா, ஏ.சி., ஃப்ரிட்ஜ், ஸ்மார்ட் போன்கள் உள்ளனவா என்ற விவரங்களையும் சேகரிக்கச் சொல்லியிருந்தேன். இந்த அடிப்படையில் அவர்களுடையத் தேர்வை ஒப்பிட்டபோது பெரிதும் திகைப்படைந்தேன். வருமான அடிப்படையில் கீழுள்ளவர்களை அணுகும்போது அவர்களுடைய தேர்வு காங்கிரஸாகத்தான் இருக்கிறது. பாரதிய ஜனதாவின் ஆதரவாளர்கள் இதற்கு எதிர் வர்க்கத்தில் இருக்கின்றனர். மதச்சார்பற்ற ஜனதா தளமும் இதே நிலையில்தான் - ஆனால் இன்னமும் லேசான பொருத்தப்பாட்டுடன் - இருக்கிறது.

அட்டவணை: வர்க்கரீதியில் வாக்கு சதவீதம்

வர்க்கம்  காங்கிரஸ்  பாஜக ஜேடிஎஸ்
மேட்டுக்குடிகள் - 4%  29    41  20
நடுத்தர வர்க்கம் - 10% 37    38 18
கீழ்நடுத்தர வர்க்கம் - 26% 39 36   18
ஏழைகள் - 37% 46  32   15
பரம ஏழைகள் - 23% 48     28    15

காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதாவுக்கும் கிடைக்கக்கூடிய வாக்குகளை வரி வரைபடத்தில் பொருத்தினால், வர்க்க அடிப்படையில் வாக்குகள் விழுவது தெளிவாகத் தெரியும். முற்பட்ட வகுப்பினரிடையே காங்கிரஸைவிட பாஜகவுக்கு 13 புள்ளிகள் அதிக ஆதரவு, நடுத்தர வர்க்கத்தினரிடையே அதுவே ஒரு புள்ளி குறைந்துவிடுகிறது. வர்க்க அடிப்படையில் மேலும் கீழே செல்லச் செல்ல நிலைமை தலைகீழாகிறது. நடுத்தர வகுப்பினரிலும் குறைந்த வருவாயுள்ள குடும்பங்களிடையே காங்கிரஸுக்கு 3 புள்ளி அதிக ஆதரவு இருக்கிறது.

ஏழைகளிடையே 14 புள்ளிகள் அதிகமாகவும் பரம ஏழைகளிடையே 20 புள்ளிகள் மேலும் அதிகமாகவும் காங்கிரஸுக்குக் கிடைக்கிறது. காங்கிரஸுக்கு சாதகமான முடிவு வருவதற்கு முக்கியக் காரணம் நடுத்தர வகுப்பில் குறைந்த வருவாய்ப் பிரிவினர், ஏழைகள், பரம ஏழைகள் எண்ணிக்கைதான். பாஜகவை ஆதரிக்கும் முதல் மூன்று பிரிவு மேல்தட்டு, மொத்த மக்கள்தொகையில் 40%தான், காங்கிரஸ் கட்சிக்கு 60% மக்களிடையே அதிக ஆதரவு இருக்கிறது.

சாதிகளுக்கு உள்ளும் வர்க்கம்

சாதி இங்கே என்ன ஆயிற்று? வாக்காளர்கள் முடிவெடுப்பதில் சாதிக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. முற்பட்ட சாதியினரிடையே பாஜகவுக்கு 58% காங்கிரஸுக்கு 25% ஆதரவு இருக்கிறது. லிங்காயத்துகளில் 53% பாஜக – 28% காங்கிரஸ் ஆதரவாளர்கள். ஒக்கலிகர்களில் 38% மதச்சார்பற்ற ஜனதா தள ஆதரவாளர்கள். காங்கிரஸுக்கு 31%, பாஜகவுக்கு 24% ஆதரவு இருக்கிறது. பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், குருபாக்களிடையே காங்கிரஸுக்கு 50% ஆதரவும் முஸ்லிம்களிடையே 70% ஆதரவும் இருக்கிறது.

வாக்களிப்பதில் சாதிக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்றாலும் மூன்று அம்சங்களை மனதில் கொள்வது நல்லது. முதலாவது, அனைவரும் நம்புவதைப் போல சாதிரீதியிலான திரளல் அனைவரும் சொல்வதைப் போல அரசியல் களத்தில் நடப்பதில்லை. இரண்டாவது, இன்னின்ன சாதியினர் இந்தந்தக் கட்சிகளுக்கு வாக்களித்தார்கள் என்ற பழைய கணக்கு அடிப்படையில்தான் அரசியல் பார்வையாளர்கள், தேர்தல் முடிவுகள் இப்படியிருக்கும் என்று கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஆனால், வாக்குப் பதிவுக்கு முன்னதாக, வெவ்வேறு சாதியினரிடையே முடிவுகள் ஏன் மாறுகின்றன, எப்படி மாறுகின்றன என்று எவராலும் விளக்க முடியாது. மூன்றாவது, ஒவ்வொரு சாதிக்குள்ளும் வர்க்க உணர்வும் முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எல்லா சாதிகளிலும் வசதியானவர்கள் ஒரு கட்சியையும் ஏழைகள் தங்களுக்கு ஆதரவான கட்சியையும் ஆதரிப்பது இயல்பாக நடக்கிறது.

இதை விளக்குகிறேன். முற்பட்ட சாதியினர் பாஜகவை ஆதரிப்பது பொதுவானது என்றாலும் வெவ்வேறு முற்பட்ட சாதியினரிடையே அந்த ஆதரவு அப்படியே இருப்பதில்லை. முற்பட்ட சாதியினரில் மிகவும் ஏழைகளிடையே பாஜகவுக்கு 47%, காங்கிரஸுக்கு 34% ஆதரவு இருக்கிறது. ஓரளவு வசதியுள்ள மேல் சாதியினரிடையே பாஜகவுக்கு 64%, காங்கிரஸுக்கு 15% ஆதரவு இருக்கிறது. லிங்காயத்துகளில் பணக்காரர்களில் 24% ஏழைகளில் 32% காங்கிரஸை ஆதரிக்கின்றனர். பட்டியல் இனத்தவர்களில் ஏழைகளில் 31% காங்கிரஸையும் பணக்காரர்களில் 4% பாஜகவையும் ஆதரிக்கின்றனர். முஸ்லிம்களில்கூட முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களில் 22% பேர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்!

கர்நாடக தேர்தல் முடிவுகள் வேறெதையும்விட வர்க்க அடிப்படையிலானது. முஸ்லிம்களுக்கான தனி ஒதுக்கீட்டை கடைசி நேரத்தில் ரத்துசெய்தது, பட்டியல் இனத்தவருக்கான ஒதுக்கீட்டில் மேலும் ஒரு உள் ஒதுக்கீட்டைச் செய்தது, மூத்த தலைவர்கள் சிலருக்கு போட்டியிடும் வாய்ப்பைத் தராதது ஆகியவற்றால் பாஜக மீது கடும் அதிருப்தி என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதப்படும் தேர்தல் கள ஆய்வுக் கட்டுரைகளுக்கும் உண்மை கள நிலவரத்துக்கும் நெருக்கமான தொடர்புகள் இல்லை.

காங்கிரஸின் வாக்குறுதிகள்

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, மாதந்தோறும் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம், குடும்ப அட்டைகளுக்கு 10 கிலோ விலையில்லா அரிசி, வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை என்று காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் ஏழைகள், பரம ஏழைகளின் முடிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இதனால், வாக்காளர்கள் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதில் பொருளாதாரக் காரணிகளே முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதில் எனக்குச் சந்தேகம் ஏதுமில்லை. அரசியலர்களும் தேர்தல் நிபுணர்களும் மதம், சாதி அடிப்படையிலான பிளவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால், இந்திய வாக்காளர்களிடையே இப்போது மீண்டும் வர்க்க அடிப்படையிலான தேர்வுகளே வலுப்பெற்று வருகின்றன. இந்த வர்க்க அடிப்படையிலான முடிவுகளை அடியொற்றி, தேர்தல் உத்தி வகுக்கும் கட்சிகளால் இந்திய அரசியல் வரலாற்றைத் திருத்தி எழுத முடியும்.

வர்க்க அடிப்படையிலான தரவுகளையும் தேர்தல் கணிப்புத் தரவுகளையும் அளித்து இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு ஹிமான்ஷு பட்டாசார்யா எனக்கு உதவியிருக்கிறார்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

விட்டுக்கொடுத்து வெற்றியைப் பெறுவோம்
கர்நாடகம்: இந்துத்துவத்தின் தென்னக ஆய்வுக் கூடம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4


1
பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Kumaragurubaran Mannan   1 year ago

INC 135 BJP 66 JD 19 மிகச் சரியான தேர்தல் கணிப்பு

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   1 year ago

ஆனால் காங்கிரஸ் முட்டாள் தனமான வாக்கு உறுதி அளிப்பது வேதனை.... Monthly 2000 is impossible one

Reply 2 0

Ganeshram Palanisamy   1 year ago

கர்நாடகாவின் மக்கள் தொகை தநாவைவிட குறைவு. ஆனால் பொருளாதார வளர்ச்சி நன்குள்ளது. அதனால் உதவித்தொகை தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆயிரம் நிச்சயம் தரமுடியும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

மதச் சிறுபான்மையினர்சமகால அரசியல்தசைநாண்கள்பாலியல் துன்புறுத்தல்ஊழல்கள்கருப்பு ரத்தம்மதமும் கல்வியும்தொல்லியல் துறைதோள்பட்டைஅரசமைப்புச் சட்டத் திருத்தம்பொதுச் சமூகம்இரண்டு செய்திகள்குவாண்டம் இயற்பியல்இந்தத் தாய்க்கு என்ன பதில்?கோட்ஸேபிரியங்காவின் இலக்குஎதேச்சாதிகாரம்பெருமாள் முருகன் கம்ப ராமாயணம் கட்டுரைவிடுதலைச் சிறுத்தைகள்தமிழ் முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாட்டம்மகிழ முடியாதவர்கள்ஞானவேல் அருஞ்சொல் பேட்டிசல்மான் ருஷ்டிவியக்க வைக்கும் ஹரப்ப நகரம் ‘பனவாலி’உலகின் மனசாட்சியான மாணவர் எழுச்சிபாலு மகேந்திராசுசுகி நிறுவனம்இந்திய மாடல்தமிழ் இலக்கிய மரபுஇந்திய உழவர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!