கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

2024: ஆட்டம் முடிந்துவிடவில்லை

யோகேந்திர யாதவ்
08 Dec 2023, 5:00 am
1

2004 மக்களவைத் தேர்தலுக்கு முன் ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழில் (2004 மார்ச் 15) ஒரு கட்டுரை எழுதி, ‘தேர்தல் நிபுணர்களுடைய கணிப்புகளைப் புறந்தள்ளுங்கள் - போட்டி யாருக்கும் சாதகமாக இல்லை’ என்று தலைப்பிட்டிருந்தேன். அது ஓரளவுக்குத்தான் உண்மையாக இருந்தது.

அப்போது ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பாஜக  இடைவிடாமல் பிரச்சாரம் செய்தாலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தோற்றுவிடும் என்பதும் சாத்தியமே என்று தெரிந்தது.

இப்போது 2023இல் மூன்று மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் வெற்றிக்குப் பிறகும், கிட்டத்தட்ட அதே தவறான மனநிலை தோன்றியிருக்கிறது, அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும், அடுத்த மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியானதல்ல, எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

பாஜக வெற்றி எத்தகையது?

நான் எதைச் சொல்லவில்லை என்பதை முதலிலேயே விளக்கிவிடுகிறேன். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் தோற்றிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் பின்னடைவு இல்லை, 2024இல் நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிட வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்குமே பின்னடைவுதான்.

மூன்று வட மாநிலங்களில் பாஜகவுக்குக்  கிடைத்திருக்கும் வெற்றி, தெலங்கானாவில் ஆட்சியைப் பிடித்ததன் மூலம் காங்கிரஸ் நிகழ்த்தியிருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சி மீட்பை அறிய முடியாமல் திரை போட்டு மறைத்துவிட்டது.

சொல்லப்போனால், தேசிய அளவில் நடைபெறவுள்ள 2024 மக்களவைத் தேர்தலுக்கு, ஆளுங்கட்சிக்குச் சாதகமான மாய பிம்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இந்த மாயத் தோற்றம், பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் அளவுக்கு எண்ணிக்கைகளாக மாறிவிடாது. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தேர்தல் நடந்த மாநிலங்களையும், வென்ற தொகுதிகளையும் எண்ணுவதை விட்டுவிட்டு கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளை முதலில் கணக்கில் எடுத்துக்கொள்வோம்.

நான்கு மாநிலங்களுக்கான தேர்தலில் 3-1 என்ற கணக்கில் பாஜக வென்றதாக ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால், ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ், பாஜக  இரண்டுக்கும் கிடைத்துள்ள மொத்த வாக்குகளைக் கூட்டுவோம். பதிவான 12.29 கோடி வாக்குகளில் பாஜகவுக்கு 4.82 கோடி வாக்குகளும், காங்கிரஸுக்கு 4.92 கோடி வாக்குகளும் கிடைத்துள்ளன. (இண்டியா கூட்டணியைச் சேர்ந்த பிற கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளையும் சேர்த்தால் இது 5.06 கோடி ஆகிறது).

மத்திய பிரதேசத்தைத் தவிர பிற மாநிலங்களில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் பாஜக வென்றிருக்கிறது. தெலங்கானாவில் பாஜகவைவிட காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள மிக அதிகமான வாக்குகள், பிற மாநிலங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையைவிட அதிகம். மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வு, ஊடகங்கள் போடும் கூப்பாடுகள் போன்று மக்களுடைய ஆதரவை  அமோகமாகவெல்லாம் பெற்றுவிடவில்லை பாஜக.

லாபம் யாருக்கு?

இந்த வாக்குகளை அப்படியே மக்களவைத் தொகுதி எண்ணிக்கைகளாக மாற்றிப் பார்ப்போம். நமக்கு இதில் பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது.

சமீபத்தில் பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 83 தொகுதிகள் உள்ளன. சென்ற 2019 மக்களவைத் தேர்தலில் இவற்றில் 65 இடங்கள் பாஜகவுக்கும் 6 இடங்கள் காங்கிரஸுக்கும் கிடைத்தன. இந்த மாநில மக்கள் இப்போது வாக்களித்ததைப் போலவே அடுத்த ஐந்து மாதங்களுக்குப் பிறகும் வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், நிகர லாபம் காங்கிரஸுக்குத்தான்; பாஜகவுக்கு அல்ல.

மூன்று மாநிலத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பாஜகவுக்குக் கிடைத்த மொத்த வாக்குகளைப் பார்த்தால் 2019இல் புல்வாமா ராணுவத் தாக்குதலுக்குப் பிறகு, தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்த வாக்குகள் எண்ணிக்கையைவிடக் குறைவே. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதி வாரியாக இந்த வாக்குகளைக் கணக்கிட்டால், மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு - 24, காங்கிரஸுக்கு - 5 (2019இல் இது 28-1); சத்தீஸ்கரில் பாஜக - 8, காங்கிரஸ் – 3 (2019இல் 9-2); ராஜஸ்தானில் பாஜக -14, காங்கிரஸ் -11 (2019இல் 24-0); தெலங்கானாவில் பாஜக - 0, காங்கிரஸ் - 9 (2019இல் 4-3).

மொத்தத்தில் பாஜகவுக்கு 46 (கடந்த தேர்தலைவிட இழப்பு 19), காங்கிரஸுக்கு 28 (கூடுதல் 22). இதுவ்நெ ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் கிடைத்த மொத்த வாக்குகளையும் சேர்த்தால் பாஜகவுக்கு 38, ‘இண்டியா’ கூட்டணிக்கு 36.

அடுத்த மக்களவைத் தேர்தலிலும் இதே அளவுதான் வாக்குகள் கிடைக்கும் என்று நான் சொல்லவில்லை; மாறாக, ஏதோ பாஜக அடுத்த மக்களவைத் தேர்தலுக்கும் சேர்த்து இப்போதே ஜெயித்துவிட்டது என்ற பிரமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதைக் கூறுகிறேன்.

எப்படி இருக்கப்போகிறது மக்களவைத் தேர்தல்?

மக்களவைத் தேர்தல் முடிவுகள், சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முடிவுகளை அப்படியே எதிரொலிக்காது என்று கூறுவார்கள். அது உண்மையும்கூட. 2018 பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாகவும் 2004இல் காங்கிரஸுக்குச் சாதகமாகவும் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இந்த வகை வாதங்களில் பிரச்சினை என்னவென்றால், அது எந்தத் தரப்பையும் பாதிக்கும்.

அடுத்த சில மாதங்களில் பாஜக தனது ஆதரவை பெருக்கிக்கொண்டுவிடும் என்றால், காங்கிரஸுக்கும்  அது சாத்தியமே. எனவே, இவ்விரு வகை முடிவுகளில் நீங்கள் எதை வேண்டுமானாலும் - இப்படித்தான் நடக்கும் என்று – கூறலாம்; ஆனால், இந்தத் தேர்தல்களின் முடிவு அடிப்படையில்தான் மக்களவை பொதுத் தேர்தல் முடிவும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.

2019 பொதுத் தேர்தலில் பாஜக தனது வெற்றியை வலுப்படுத்திக்கொள்வதற்குப் பலாகோட் ராணுவத் தாக்குதல் காரணமாக அமைந்தது என்பதை மறந்துவிடுவதால்தான், பாஜகவுக்கு வெற்றி நிச்சயம் என்று இப்போதும் பலர் பேசுகிறார்கள்.

அப்படியே ஒருவேளை இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக மேலும் தனது ஆதரவை - கடந்த முறையைப் போல - பெருக்கிக்கொள்கிறது என்றே வைத்துக்கொள்வோம்; கூடவே பக்கத்து மாநிலங்களான குஜராத், தில்லி, ஹரியாணாவிலும் முழு வெற்றி பெறுகிறது என்றுகூட கருதுவோம். அத்தோடு தேசிய அளவிலான தேர்தலில் முடிவு ஏற்பட்டுவிடுமா? ம்ஹூம்!

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

2024: யாருக்கு வெற்றி?

யோகேந்திர யாதவ் 09 Jun 2023

மக்களவையைத் தக்கவைக்குமா பாஜக?

இதையே இன்னும் விரிவாகக் காண்போம். 2019இல் பாஜக மட்டும் 303 இடங்களில் வென்றது; இது ஆட்சி அமைக்கத் தேவைப்படும் 272 எனும் பெரும்பான்மை எண்ணைக் காட்டிலும் 30 தொகுதிகள் மட்டுமே அதிகம்.

இதை யோசித்துப் பாருங்கள். சென்ற தேர்தலில் வங்கத்தில் கிடைத்ததைவிட - 22 இடங்கள் - கணிசமான தொகுதிகளை பாஜக அங்கே இழக்கப்போவது நிச்சயம்; கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு எப்படியும் 10 தொகுதிகள்  கூடுதலாகவே கிடைக்கும்.

மகாராஷ்டிரத்திலும், பிஹாரிலும் வலுவான இண்டியா கூட்டணியை பாஜக சந்தித்தாக வேண்டும்; உத்தர பிரதேசத்தில் 2022 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுபடியே வாக்குகள் விழும் என்றால்கூட அங்கே குறைந்தது 10 தொகுதிகளைப் பாஜக இழக்கும். அப்படியே இமாச்சலம், ஹரியாணா, தெலங்கானா, அசாம் ஆகிய மாநிலங்களில் அதற்கு ஏற்படப்போகும் குறைந்த அளவு இழப்புகளையும் கூட்டிக்கொள்ளுங்கள்.

இதில் நீங்கள் எந்தத் தொகையைக் கருத்தில் கொண்டாலும், இழப்பு குறைந்தது 30க்கும் மேல்தான் இருக்கும். அப்படியென்றால் பாஜகவால் எப்படி 2019இல் பெற்ற தொகுதிகளைவிட 2024இல் அதிகமாகப் பெற்று இந்த இழப்பை ஈடுகட்டிவிட முடியும்?

பாஜகவால் இழப்புகளைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்றோ, இழப்புகளைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்றோ கூறவில்லை. நான் சொல்ல விரும்புவதெல்லாம் இதைத்தான்: 2024 தேர்தல் முடிவுகள் (பாஜகவுக்கு சாதகமாக) இன்னும் தீர்மானமாகிவிடவில்லை - நிச்சயமாக இல்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் உளவியல்ரீதியாக வலிமையிழந்து, ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே எதிராளிக்குக் களத்தைத் திறந்துவிட்டுவிட்டு ஒதுங்கினால் ஒழிய பாஜகவுக்கு வெற்றி சாத்தியமில்லை.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

எதிர்க்கட்சிகளின் கூட்டணி: நல்ல திருப்பம்
எப்படி இருக்க வேண்டும் காங்கிரஸின் சமூக நீதிப் பாதை?
2024: யாருக்கு வெற்றி?
பாஜகவைத் தோற்கடிக்க மாய மந்திரம் தேவையில்லை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ramasubbu   12 months ago

2024 ஆட்டம் முடிந்து விட வில்லை -யோகேந்திர யாதவ் அவர்களின் கட்டுரை தொற்றுப்போனவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவே உள்ளது. INDIA கூட்டணியின் பலவீனங்கள் முதலில் சரி செய்யப்படவேண்டும்.. ராகுல் தொடர்ச்சியாக தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டால் மட்டுமே கொஞ்சம் கௌராவமாக தப்பிக்கலாம்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

மோடி - அமித் ஷாவுக்குப் பிறகு பாஜகவில் யார்?செயல் தலைவர்விஜய் குமார்வனப் பகுதிகர்நாடக சங்கீதம்பாரம்பரிய இசைக் கருவிகள்தைவானில் நெருப்பு அலைகள்மொழி மீட்புப் பணிகள்மோடியின் சரிவுகுடும்பப் பெயர்ஒரு நாடு ஒரு செயல்திட்டம்முகேஷ் அம்பானிகுறைப் பிரசவம்சமஸ் - பிரசாந்த் கிஷோர்வித்யாசங்கர் ஸ்தபதிதமிழ் வாசகர்கள்காந்தி ஏன் தேவை என்பதற்கு 10 காரணங்கள்பாடத் திட்டம்தமிழுணர்வுமுதலீட்டாளர்கள்சிங்கப்பூர் அரசுஉப்புஎதேச்சாதிகாரம்யோகாinnovationதீண்டப்படாதவர்கள்பொருளாதர நெருக்கடிரூர்க்கி ஐஐடி உபி தேர்தல் மட்டுமல்ல...மகளிர் ஒதுக்கீடு: அமல் பிறகு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!