கட்டுரை, நூல் விமர்சனம், இலக்கியம், சர்வதேசம் 10 நிமிட வாசிப்பு

மனிதக் கசாப்புக் களத்தின் மாய-யதார்த்த நாவல்

ஆசை
30 Oct 2022, 5:00 am
0

புக்கர் விருது வென்ற பிறகு ஷெஹான் கருணாதிலக ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தமிழிலும் பேசியதைப் பார்த்தபோது வேறொரு தருணம் எனக்கு நினைவுக்கு வந்தது. இலங்கையின் உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளையும் ஏராளமான தமிழர்களையும் துடைத்தழித்துவிட்டு சிங்களவர்களையும் பலிகொடுத்துவிட்டு போரை முடிவுக்குக் கொண்டுவந்த மகிந்த ராஜபக்சவின் உரைதான் அந்த இன்னொன்று. அங்கேயும் அவர் சிங்களம் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் பேசினார். ராஜபக்சவுக்கு நேர்மாறானது ஷெஹானின் உரையும் அவரது நாவலும் உலகுக்குச் சொல்லும் செய்தி. அது ராஜபக்ச போன்றோரின் உலகத்தின் கொடூரத்தை, ரத்தக் களத்தை அம்பலப்படுத்துவது. இந்த நாவலில் ராஜபக்ச பற்றிய குறிப்புகளும் ஆங்காங்கே வருகின்றன என்பதும், ராஜபக்ச மனித உரிமை ஆர்வலராக வருகிறார் என்பதும் கூடுதல் சிறப்பு-முரண்!

திபெத்திய பௌத்தத்தில் ‘பார்டோ’ என்ற ஒரு உலகம் இருக்கிறது. இறப்புக்கும் மறுபிறப்புக்கும் இடையிலான உலகம். இந்த உலகத்தை அடிப்படையாக வைத்து ஜார்ஜ் சாண்டர்ஸ் எழுதிய ‘லிங்கன் இன் த பார்டோ’ நாவலும் பார்டோவைக் கதைக் களமாகக் கொண்டதுதான். (2017-ம் ஆண்டுக்கான புக்கர் விருதைப் பெற்ற நாவல் அது என்பது ஆச்சரிய ஒற்றுமை). அது போன்ற ஒரு இடையுலகமும் இலங்கையின் நிதர்சன உலகமும்தான் கதைக்களங்கள். கதையின் பிரதான காலம் 1989. எனினும் இலங்கையின் இன்றைய பிரச்சினைக்குத் தோற்றுவாயை அந்த நாட்டின் விடுதலைக்குப் பிறகான காலகட்டம், காலனிய காலகட்டம், அதன் புராணங்கள் வரை சென்று ஷெஹான் பேசுகிறார்.

இந்த நாவலின் மையப் பாத்திரமான மாலி அல்மெய்டா ஒரு போர்ப் புகைப்பட இதழியர். இலங்கையின் பன்மைத்தன்மையையும் அதன் அனைத்துப் பிரச்சினைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கூறுகளும் அடையாளங்களும் கொண்டவன். தமிழன், சிங்களவன், பர்கர் (ஐரோப்பிய-சிங்கள கலப்பினத்தவர்கள்) என்று பல இனங்களின் கலப்பு வம்சாவளி. மேலும், நாத்திகன், தன்பாலின உறவாளன், புலிகள்-ஐநா-இலங்கை ராணுவம்-வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள்-தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்று எல்லாத் தரப்புகளுக்கும் இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடர்பாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொடுப்பவன், அதே தரப்புகளுக்கிடையே இடைத்தரகர் போல் செயல்படுபவன், சூதாட்டத்தில் மிகுதியான ஆர்வம் கொண்டவன், பாப் இசையிலும் நாட்டம் கொண்டவன் என்று அவனுடைய இயல்புகளும் பாத்திர வார்ப்பும் பன்முகத்தன்மை கொண்டவை. இவை அனைத்தும் சேர்ந்துதான் அவனை நாவலின் தொடக்கத்திலேயே பலிகடாவாக ஆக்குகின்றன.

இடையுலகத்துக்குச் செல்லும்போது ஆரம்பத்தில் தான் இறந்ததுகூட மாலிக்குத் தெரியவில்லை. இறப்புக்கும் மறுபிறப்புக்கும் இடையிலான உலகத்தில் மாலி அல்மெய்டா ஏழு நாட்கள் (ஏழு நிலவுகள்) உலவுகிறான். அவனுடைய நினைவு அரைகுறையாகத்தான் இருக்கிறது. இந்த ஏழு நாட்களுக்கும் அவன் செய்து முடிக்க வேண்டிய சில கடமைகள் இருக்கின்றன. உள்நாட்டுப் போரின் திரைக்கு வெளியிலும் திரைக்கு மறைவிலும் மாலி ஏராளமான புகைப்படங்கள் எடுத்திருக்கிறான். அவற்றை ரகசியமாக ஒளித்தும் வைத்திருக்கிறான். அவற்றை அம்பலப்படுத்தினால் இலங்கையின் தலையெழுத்தே மாறும் என்று அவன் நம்புகிறான். ஆனால், இறந்தவர்களின் உலகத்தில் இருந்துகொண்டு உயிருள்ளவர்களின் உலகத்தை எப்படித் தொடர்புகொள்வது? இன்னொன்று, தான் எப்படிக் கொல்லப்பட்டோம், தன்னை யார் கொன்றார்கள் என்பதையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டும். அவன் உயிரோடு இருந்தபோது இருந்த, சென்ற இடங்களுக்கு இந்த ஏழு நாட்களும் சென்று வர முடியும்; அதே போல் கொத்துக்கறி போடப்பட்ட அவன் உடல், அவன் தொடர்பான பொருள்கள் போன்றவை இருக்கும் இடங்களுக்கும், அவன் பெயர் உச்சரிக்கப்படும் இடங்களுக்கும் அவனால் சென்றுவர முடியும். தான் நினைத்தையெல்லாம் ஏழு நாட்களின் முடிவில் அவன் நிறைவேற்றினானா என்பதை ஒரு துப்பறியும் நாவல் போல சொல்கிறது இந்த நாவல்.

ஷோபாசக்தியைப் படித்திருக்கும் எவரும் அவருக்கும் ஷெஹானுக்கும் இடையிலான ஒற்றுமையை வியக்காமல் இருக்க முடியாது. குரூர அழகியல், அவல நகைச்சுவை என்று பல ஒற்றுமைகளைக் காண முடிகிறது. இலங்கை ராணுவம், புலிகள், இந்தியா, சர்வதேசம் என்று எந்தத் தரப்பையும் ஷோபாசக்தி விட்டுவைப்பதில்லை. அதேபோன்ற ஒரு குரலை ஷெஹானிடமும் காண முடிகிறது. கூடவே, மனிதத்தின் தடத்தையும் இருவரும் எல்லாத் தரப்புகளிடமும் காண்பவர்கள். எனினும், ஷோபாவின் உலகம் நிதர்சன உலகத்தின் குரூர மாய-யதார்த்தம் என்றால் ஷெஹானின் உலகம், இந்த நாவலில், பேய்களின் பார்வையில் விரியும் மாய-யதார்த்த உலகம். ஒரு வகையில் நவீனக் கலிங்கத்துப்பரணி இது. அதிலும் பேய்கள் கதைசொல்லும் பாணி இருக்கும். இது வெறும் உத்தியாக மட்டுமல்லாமல், நம்மால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குச் சிதிலமடைந்திருக்கும் இலங்கையின் இன்றைய நிலையைச் சொல்வதற்குப் பொருத்தமான பார்வைக் கோணமாகவும் இருக்கிறது.

ஈழத்தின் ரத்த வரலாறு நமக்கு நன்கு தெரிந்திருந்தாலும்கூட இந்த நாவல் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது, அருவருக்க வைக்கிறது, நடுங்க வைக்கிறது. எத்தனை எத்தனை படுகொலைகள்! ராணுவம், புலிகள், ஜேவிபி, அமைதிப்படையினர், ஆயுதத் தரகர்கள், போரை முதலீடாகக் கொள்ளும் பல நாடுகள். யாருடைய கைகளாவது சுத்தம் என்று நெஞ்சைத் தொட்டுச் சொல்லிவிட முடியுமா? எதிரிகள் என்று சொல்லிக் கொன்றார்கள், தங்களைக் கொன்றவர்கள் என்று சொல்லிக் கொன்றார்கள், தங்கள் துரோகி என்று கொன்றார்கள், தங்கள் அளவுக்குத் தீவிரம் இல்லாதவர்கள் என்பதால் துரோகி என்று கொன்றார்கள், விமர்சித்தவர்களைக் கொன்றார்கள். இது எல்லாத் தரப்புக்கும் பொருந்தும்தானே! வெடிகுண்டுத் தாக்குதல்கள், தற்கொலைத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், தீவைப்பு என்றெல்லாம் அப்பாவித் தமிழர்கள், அப்பாவி சிங்களவர்கள் எவ்வளவு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரண்டு தரப்புகளின் செயல்களால் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை பல நூறு இருக்கும். ஈழத் தமிழ்க் கவிஞர் சிவசேகரத்தின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

துரோகி எனத் தீர்த்து
முன் ஒரு நாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடக் கண்டவனைச் சுட்டது
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது
குற்றம் சாட்டியவனை
வழக்குரைத்தவனை
சாட்சி சொன்னவனை
தீர்ப்பு வழங்கியவனை சுட்டது
தீர்ப்பை ஏற்றவனை சுட்டது
எதிர்த்தவனை சுட்டது
சும்மா இருந்தவனையும்
சுட்டது.

ஆனால், இந்த நாவலையோ ஷோபாவின் படைப்புகளையோ படிக்கும்போது துப்பாக்கியால் சுடப்பட்டு சாவது எவ்வளவோ கண்ணியமான சாவு என்றே தோன்றும். ஷோபாவின் ‘பாக்ஸ்’ நாவலில் காவல் நிலையத்தில் ஒரு கைதியை காவலர்கள் வெளியும் உள்ளும் தரதரவென்று பலமுறை இழுத்துக்கொண்டு ஓடுவார்கள். இறுதியில் உறுப்புகள் காணாமல் போன முண்டமாகவே அந்தக் கைதி எஞ்சுவார். இந்த நாவலின் நாயகன் மாலி அல்மெய்டா உள்ளிட்ட பலரும் கசாப்புக் கடைக்காரர்களால் கொத்துக்கறி போடப்பட்டு பேரே ஏரியில் (Beira lake) வீசப்படுகிறார்கள். அந்த ஏரி, பல நூற்றாண்டுகளின் கொத்துக்கறிகளால் நொதித்து ஒரு பிரம்மாண்டமான மதுக் கலனான உருவெடுத்துத் ததும்புகிறது. அங்கிருந்து அள்ளப்பட்டு யாருக்கும் தெரியாமல் எல்லாக் கறியும் (பிணம் என்று சொல்ல முடியாத பேரவல நிலை) அவசர அவசரமாக லாரிகளில் ஏற்றப்பட்டு தகனக் காட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இந்தப் போக்குவரத்தை சாத்தியப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்பும் கிடைக்கிறது. துப்பாக்கி உயிரை மட்டுமே பறிக்கிறது. ஆனால், இலங்கையின் சித்ரவதைக் கூடங்கள் மனிதர்களுக்குப் பிணங்கள் என்ற சற்று கண்ணியமான அடையாளத்தைக்கூட அனுமதிக்கவில்லை. இதற்கு வரலாற்றில் முன்னுதாரணங்களும் தொடர்ச்சியும் இருக்கின்றன என்பது மனித குலம் குறித்த அச்சத்தையும் அவநம்பிக்கையையும் மேலும் மேலும் ஊட்டுகிறது.

அதுமட்டுமல்ல, மனித குலம் நம்பிக்கை கொள்ளவும் மனிதர்கள் அல்லது பேய்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் சில பாத்திரங்களும் இந்த நாவலில் உண்டு. புலிகளை விமர்சித்ததற்காக அவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பேராசிரியர் ரஜனி திரணகம இந்த நாவலில் டாக்டர் ராணீ ஸ்ரீதரனாக, பேய்களின் இடைலகிலும் ஒரு சமாதான தேவதையாக வருகிறார். மாலியின் ஏழு நாட்கள் முடிவில் அவனுக்கு முன்பு ஐந்து கோப்பைகளை நீட்டுகிறார். ஒரு கோப்பையைக் குடித்தால் எல்லாவற்றையும் மறந்துவிடலாம், இன்னொரு கோப்பையைக் குடித்தால் எல்லாவற்றையும் நினைவுகூரலாம், இன்னொரு கோப்பையைக் குடித்தால் இந்த உலகையே மன்னித்துவிடலாம், இன்னொரு கோப்பையைக் குடித்தால் மன்னிக்கப்படலாம், இன்னொரு கோப்பையைக் குடித்தால் மாலி எங்கே இருக்க வேண்டுமோ அங்கே போகலாம். இவற்றில் ஒரு கோப்பையை மட்டுமே குடிக்க வேண்டும் எனும்போது டாக்டர் ராணீ இந்த உலகத்தையே மன்னிப்பதற்கான கோப்பையை அவனுக்குப் பரிந்துரைக்கிறார். மாலியோ தான் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே செல்வதற்கான கோப்பையைத் தேர்ந்தெடுக்கிறான். மனிதர்கள் அப்படித்தான், புத்தரும் ஏசுவும் காந்தியும் டாக்டர் ராணீயைப் போலத்தான் ஒரு கோப்பையை மனித குலத்துக்கு நீட்டினார்கள். நம்முடைய தெரிவோ மாலியைப் போன்றே இருந்துகொண்டிருக்கிறது. இரண்டுக்கும் இடையிலான போராட்டம், ஊடாட்டத்துடன் வரலாறு நகர்ந்துகொண்டிருக்கிறது.

எவ்வளவு தீவிரமான விஷயத்தை நாவல் பேசினாலும் ஷெஹானால் சுவாரசியமாகவும் நகைச்சுவையுணர்வோடும் (அவல நகைச்சுவை என்றுதான் சொல்ல வேண்டும்) எழுத முடிகிறது. அவரது கற்பனையில் சிறுத்தைகளும் இறப்புக்குப் பிறகு இடை உலகில் உலவுகின்றன. இறந்த பிறகும் அமைச்சரின் அடியாள் அவருக்குப் பாதுகாவலாக இருக்கிறான். அவனைத் திசைதிருப்ப, படுகொலை செய்யப்பட்ட அழகியின் பேயொன்று ஆடுகிறது. மாலியின் உடைந்த நிக்கான் கேமரா கூட இடையுலகத்துக்குச் செல்கிறது. அதனால் புகைப்படம் எடுக்க முடியாது. அது ஏற்கெனவே எடுத்திருக்கும், அவற்றால் இலங்கையின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம் என்று மாலி நம்பும் புகைப்படங்கள் அம்பலமான பிறகும் எந்தப் பயனும் ஏற்படுவதில்லை. மக்கள், புகைப்படங்களைவிட கொடூரமான நிதர்சனங்களைக் காட்டும் கேமராவைத் தங்கள் கண்களில் வைத்திருக்கும்போது அந்தப் படங்களால் என்ன செய்துவிட முடியும்? உடைந்த, எதையுமே புகைப்படம் எடுக்க முடியாத கேமராவாக சர்வதேசத்தையும் ஐநாவையும் மனிதத்தையும் குறியீடாக ஷெஹான் முன்வைப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்த நாவலில் என்னை வியக்க வைத்த ஒரு விஷயம் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இலங்கை தேசியத்தின் உருவாக்கத்தை இந்த அளவுக்குப் புரட்டிப்போட்டு மட்டையடி அடித்திருக்கிறார் என்பதுதான். இலங்கையின் இன்றைய எல்லா அலங்கோலத்துக்கும் மூல அலங்கோலமாக, இலங்கைப் பேரின தேசியத்தின் பூர்வமான, புராணிகத்தை ஷெஹான் அடையாளம் காண்கிறார். இந்தியாவுக்கு ‘மகாபாரதம்’ போன்று இலங்கைக்கு ‘மகாவம்சம்’ என்ற காவியம் இருக்கிறது. அதை வைத்து இந்தக் காரியத்தை ஷெஹான் செய்கிறார். “மகாவம்சத்தை உண்மை என்று நம்பினால் சிங்கள இனமே ஆள்கடத்தலிலும் வன்புணர்ச்சியிலும் தந்தையரின் படுகொலையிலும் தகா உறவுப் புணர்ச்சியிலும்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் தேவதைக் கதையல்ல, நமது இனத்தின் பிறப்பு என்று இந்தத் தீவின் மிகத் தொன்மையான வரலாறு கூறும் கதை, அதாவது சிங்களராகவும் பௌத்தர்களாகவும் ஆணாகவும் செல்வந்தர்களாகவும் இல்லாத பிற எல்லோரையும் ஒடுக்குவதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்ட வரலாறு இது” என்று ஷெஹான் எழுதியிருப்பதைப் படித்துப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. இந்திய எழுத்தாளர்கள் எத்தனை பேரால் இன்று இப்படி எழுத முடியும்? இந்திய தேசியத்தையும் அதன் உருவாக்கத்துக்கு அடிப்படையாக இருக்கும் புராணங்களையும் இப்படிக் கேள்வி கேட்க முடியுமா? இதையெல்லாம் விடுத்துவிட்டு நாம் மேலும் மேலும் தேசியத்தை நிறுவும் விதத்தில் புராணங்களைத் தழுவியும் மறு ஆக்கம் செய்தும் விரித்தும் எழுதிக்கொண்டிருக்கிறோம்!

இந்த நாவலில் எத்தனையோ தருணங்கள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தினாலும் இந்த நாவலின் நாயகன் ஒரே தருணத்தில் நிகழ்த்தும் மூன்று கொலைகள்தான் மனதை மிகவும் பாதித்தன. அந்தத் தருணம் ஒரு கருப்பு-வெள்ளைப் புகைப்படமாக, புலிட்சர் விருது பெறும் போர்க் காட்சிகளைவிட மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அப்பாவி மக்கள் மீது இலங்கை ராணுவப் படை நிகழ்த்திய குண்டுவீச்சில் இறந்துபோன தன் குழந்தையைச் சுமந்திருக்கும் தாய் ஒருத்தி புகைப்படக்காரர் மாலியின் கழுத்தைப் பார்ப்பாள். மாலி, எப்போதும் தன் கழுத்தில் விடுதலைப் புலிகள் போல சயனைடு குப்பிகளை, எந்தத் தரப்பிடமாவது மாட்டிக்கொண்டால் சித்ரவதையின்றிச் சாவதற்கான ஒரு ஏற்பாடாக, மாட்டிக்கொண்டிருக்கிறான். வெடிகுண்டால் தெறித்த உலோகத் துண்டுகள் துளைத்த உடலுடன் ஒரு கிழவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பார். முறிந்த பனைமரத்தின் கீழ் நாயொன்று நடுங்கிக்கொண்டிருக்கும். அந்தத் தாயிடம் இரண்டு குப்பிகளை மாலி கொடுப்பான்; கிழவரின் வாயில் இரண்டு குப்பிகளைத் திணிப்பான்; நாயின் வாயில் இரண்டு குப்பிகளைத் திணிப்பான். பிறகு இவர்களையெல்லாம் இறப்புக்குப் பிந்தைய உலகிலும் சந்திப்பான். இந்தத் தருணம் ஏற்படுத்தும் உடல் நடுக்கம் விவரிக்க முடியாதது. இந்த ஒரு தருணத்துக்காகவே இந்தப் புத்தகம் புக்கர் விருதுக்குத் தகுதியாகிறது!

சமகால வரலாற்றின் கசாப்புச் சரித்திரத்தைப் பேய்களின் உலகத்திலிருந்து சொல்லியிருக்கும் ஷெஹான் தனது அடுத்த நாவலையும் இலங்கையை அடிப்படையாகக்கொண்டே எழுதவிருக்கிறார். இலங்கையின் அவலக் கதைகள் தீரும்போது அதுபோன்ற வேறொரு நாட்டின் கதையை எழுதச் செல்வேன் என்றும் அது வரை இலங்கையைப் பற்றிதான் எழுதிக்கொண்டிருப்பேன் என்றும் ஷெஹான் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஷெஹான்கள் எழுதுவதற்கு ஏதும் இல்லாமல் போகும் ஒரு காலம் வர வேண்டும்!

 

நூல்: த செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்டா
ஆசிரியர்: ஷெஹான் கருணாதிலக
விலை: ரூ.399
பக்கம்: 400
தொடர்புக்கு: பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட்,
4வது தளம், கேப்பிடல் டவர் 1, எம்ஜி சாலை,
குருகிராமம், 122 002, ஹரியாணா, இந்தியா.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


2


1
செவிப்பறை200வது பிரிவுசாதிப் பாகுபாடுகள்ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு: பாஜகவுக்கு நெருக்கடிபொருளாதாரப் பரிமாணம்நீதிபதியின் அதிகாரம்உறுதியான எதிரிடம்டெஃப்மனித சமூகம்எம்ஜிஆர்எஸ்.பாலசுப்ரமணியன்கூட்டுப்பண்ணைதமிழ் வம்சாவளிஷூட்டிங்அமுல்வடக்கு வாழ்கிறதுடால்ஸ்டாய்நீதிபதிகள்343வது பிரிவுதிருவொற்றியூர் விபத்துஅகில இந்திய ஒதுக்கீடுபெரியார்மிதக்கும் சென்னைதிராவிடப் பேரொளிசாதி மறுப்புஅழகியல்வாஷிங்டன்: காய்ச்சிய நீர் குடிக்க அறிவுரைஅம்பேத்கர்பொது தகன மேடைஅறிவார்ந்த வார்த்தைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!