பேட்டி, அரசியல், ஆளுமைகள் 4 நிமிட வாசிப்பு

என்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங் பேட்டி

27 Nov 2023, 5:00 am
2

டிப்படையில் விஸ்வநாத் பிரதாப் சிங் ஓர் அரசக் குடும்ப வாரிசு. 1931ல் தையா அரண்மனையில் பிறந்த வி.பி.சிங்கை மண்டாவின் ராஜா தத்தெடுத்துக்கொள்வதற்கு முன்னரும் ‘ராஜா’ என்றுதான் அழைத்தார்கள். ஆனால், ஆச்சார்ய வினோபா பாவே சொன்னதுபோல, அடித்தட்டு மக்களைச் சந்தித்து, ‘நவீன சித்தார்த்தர்’ ஆக அவர் உருவெடுப்பதை அவரைச் சுற்றியிருந்த எந்த அரண்மனைச் சுவரும் தடுக்கவில்லை. 1990இல் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமலாக்க வி.பி.சிங் எடுத்த முடிவானது இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பு.

வெறும் 11 மாதக் காலத்திலேயே வி.பி.சிங் ஆட்சியை இழக்க அதுவும் முக்கியமான காரணம். ஆனால், தான் செய்யும் காரியத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தார். இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட நெகிழ்ச்சியான உரைகளில் ஒன்று தன்னுடைய ஆட்சி பறிபோகும் என்பதை உணர்ந்து, தன்னுடைய செயல்பாட்டுக்கு அவர் துணிந்த தருணம்.

சில சமயங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பது நல்ல வாய்ப்பு என்று சொன்னார் அவர். தன்னுடைய லட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒருவர் தன் மரணத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை என்றார். பல நூற்றாண்டு பழைய அமைப்புடன் மோதும்போது எத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது தாங்கள் அறியாதது அல்ல என்றார். சமூக வாழ்க்கையில் மரியாதைக்காகப் போராடும் எளிய மக்களுக்கு அதிகாரத்தில் எப்போது பங்களிக்கப்போகிறோம் என்பதே நம் முன் உள்ள பெரிய கேள்வி என்றார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இவ்வளவு பேசியவர் அடிப்படையில் தன்னை ஆதிக்கச் சாதியரில் ஒருவராக உணர்ந்து இந்தக் காரியங்களை தார்மீக எழுச்சியில் செய்தார் என்பது இங்கே முக்கியமானது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வி.பி.சிங் என்னவாகப் பார்த்தார் என்பதைக் கொஞ்ச காலத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட இந்தப் பேட்டி உணர்த்துகிறது. இது ‘இந்தியா டுடே’ இதழில் வெளியான வி.பி.சிங் பேட்டியின் முழு வடிவம்.

மண்டல் பாதையிலிருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்களா? 

அது உண்மையல்ல. 1989இல் எங்கள் தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்டபோது, ‘தேசியச் செயல்திட்டத்தில் சமநீதியை மறுபடியும் இடம்பெறச் செய்வோம்’ என்று தெளிவாகக் கூறியிருந்தேன்.

அரசியல் நீதி, அதிகாரப்பரவலாக்கல், தேர்தல் சீர்திருத்தங்கள், பத்திரிகைச் சுதந்திரம் போன்ற அம்சங்களையெல்லாம் உள்ளடக்கிய விரிவான கோட்பாடுதான் சமநீதி. இந்தச் சமநீதியென்பது பெண்கள், பட்டியலினத்தோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோருக்கான பொருளாதார நீதியையும் சமூக நீதியையும் உள்ளடக்கியது. 

ஆனால், மக்களிடம் இதற்கு ஆதரவு இருப்பதுபோல் தெரியவில்லையே. தேர்தலில் உங்கள் கட்சி தோல்வியுற்றதுடன் இப்போது மிகவும் தொய்வடைந்தும் பிளவுபட்டும் காணப்படுகிறதே… 

இதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ‘இதிலிருந்து நாங்கள் என்ன பெற்றோம்?’ என்பதல்ல நாம் கேட்க வேண்டிய கேள்வி; மாறாக, ‘ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் எங்களால் என்ன செய்ய முடிந்தது?’ என்பதைத்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு உதாரணம் கூற வேண்டுமென்றால், சமநீதி என்பது இப்போது தேசிய செயல்திட்டத்தின் பகுதியாக ஆகியிருக்கிறது. எந்தக் கட்சியும் இதை அலட்சியப்படுத்த முடியாது. ஒடுக்கப்பட்ட பிரிவுகளிலிருந்து வேட்பாளர்கள், முதல்வர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் என்று எத்தனையெத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என இப்போது பட்டியலிடுகிறார்கள். குடியரசுத் தலைவரையோ துணைக் குடியரசுத் தலைவரையோ தேர்ந்தெடுப்பதிலும் இப்படித்தான். ஆக, நாங்கள் அரசியல் சூழலையே மாற்றியமைத்திருக்கிறோம். 

கட்சி சிதறிக்கொண்டிருப்பதைப் பற்றி… 

(குறுக்கிட்டு) கட்சி சிதறிக்கொண்டிருப்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், நாங்கள் தொடங்கி மூன்று ஆண்டுகள்தான் ஆகின்றன. அந்த சமயத்தில் ஒத்த கருத்துடையோரை ஒருங்கிணைத்துக் கட்சியை உருவாக்கினோம். ஒவ்வொரு முறையும் ஒரு தலைவர் கட்சியை விட்டுச் செல்லும்போது அவர் தனது ஆதரவாளர்களில் நான்கில் மூன்று பேரை விட்டுத்தான் செல்கிறார். தேவி லால் போனார், ஆனால் சரத் யாதவும் லாலுவும் போகவில்லை. சந்திர சேகர் போனார், ஆனால் மது தண்டவதே, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், சுரேந்திர மோகன், பொம்மை போன்றோர் போகவில்லை. அஜித் சிங் போனார், ஆனால் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் அவருடன் போகவில்லை. ஆகவே, உள்ளே ஒருங்கிணைவு நடந்துகொண்டுதான் இருக்கிறது. மேலும், இனிவரும் ஆண்டுகளில், சமூக இயக்கங்களின் கூட்டுதான் தனிப்பட்ட தலைவர்கள், கட்சிகள் என்பதைவிட ஒட்டுமொத்த அரசியல் இயங்குமுறையைத் தீர்மானிக்கும்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

உங்கள் கூட்டணியில் உள்ள நிறையக் கட்சிகள் காலத்துக்கு ஒவ்வாததாகவும் சிதைந்தும் போகுமா?  

கூட்டணிகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் இரண்டு மூன்று ஆண்டுகளில் நிலைபெற்றுவிடும். மதச்சார்பற்ற சமூக சக்திகளை அடையாளம் காண வேண்டுமே ஒழிய, மதச்சார்பற்ற கட்சிகளை அல்ல. எடுத்துக்காட்டாக, தலித் மக்கள் ஒரு சக்தி வாய்ந்த மதச்சார்பற்ற சக்தியாக இருக்கிறார்கள். அடுத்ததாக, பிற்படுத்தப்பட்ட மக்கள் எனும் சக்தியானது சிறுபான்மையினருடன் சேர்ந்து வகுப்புவாதத்துக்கு எதிரான வலுவான தூணாக இருக்க முடியும். ஏனெனில் கடந்த அரைநூற்றாண்டாக நிறுவப்பட்டிருப்பது எதுவென்றால் முற்பட்ட சாதியினரின் இந்து ராஜ்ஜியம்தான், அது பிற்படுத்தப்பட்டோரையும் சிறுபான்மையினரையும் வஞ்சித்தே வந்திருக்கிறது.

ஆளும் மேல்தட்டினர் சாதியவாதிகளா?

பிரக்ஞைபூர்வமாக அப்படி இல்லை. ஆனால், வரலாற்று இயங்குமுறை இப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. ஆளும் மேல்தட்டின் விளைபொருள்கள் மட்டுமே கட்சிகள். 

ஆனால், நம் நாடு மதச்சார்பற்ற நாடுதானே?  

அது வெறும் மேல்பூச்சுதான். ஆனால், நமது அரசியல் இயங்குமுறையின் வெவ்வேறு வடிவங்கள் முற்பட்ட சாதியினரின் இந்து ராஜ்ஜியத்துக்கு எதிர்வினை ஆற்றியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, தலித் மக்களுக்கான ஆர்.பி.ஐ. இயக்கம் (இந்தியக் குடியரசுக் கட்சி), அல்லது பிற்படுத்தப்பட்டோருக்குத் தலைமையேற்ற சரண் சிங் போன்றோரைக் கூறலாம்.   

அப்படியென்றால், காந்தி, நேரு கற்பனை செய்த மாதிரிகள் தோல்வியடைந்துவிட்டனவா?  

இல்லை. காந்தி, நேரு எல்லோரும் சூழலை மேம்படுத்தவே முயன்றார்கள். ஏராளமான பொருளாதார, சமூக அடுக்குகளைத் தகர்த்தெறிய அவர்கள் முயன்றார்கள். ஆனால், மாற்றத்தை அனுமதிக்காத நிலையும், இந்த அமைப்புமே மேலாதிக்கம் பெற்று விளங்கின. 

காந்தியும் நேருவும் விரும்பியதை இந்த அமைப்பு நிறைவேற்றவில்லையா?

ஒரு அநீதியான சமூகக் கட்டமைப்பானது ஒரு அநீதியான அதிகாரக் கட்டமைப்பையே உற்பத்தி செய்திருக்கிறது. தனிப்பட்ட நபர்களையும் கட்சிகளையும் இதற்காகக் குற்றஞ்சாட்டிவிட முடியாது. அரசியல், சமூக, பொருளாதார வெளியை ஏகபோகமாக அனுபவிப்பவர்கள்தான் முடிவுகள் எடுக்கும் அதிகாரத்திலிருந்து பெரும் அளவிலான மக்கள்திரளை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். அதனால், அவை ஜனநாயகமற்றவையாக இருக்கின்றன. இதுவரை ஆளும் மேல்தட்டினர்தான் விளையாடிவந்தனர், ஏனையோரோ பார்த்துக் கைதட்ட மட்டுமே அழைக்கப்பட்டனர். இப்போது பார்வையாளர்களோ, ‘நாங்களும் பந்தை உதைத்து கோல் வலைக்குள் தள்ள வேண்டும், எங்களுக்கென்று தனி அணி இருக்கிறது’ என்று கூறுகிறார்கள்.  

நீங்கள் ஒரு சீர்திருத்தவாதியா?  

இல்லை, இல்லை. நான் வெறும் ஆய்வாளன்தான். 

ஆனால், நீங்கள் ஒரு சந்தர்ப்பவாதி என்றும், வாக்குவங்கி அரசியலர் என்றும் மக்கள் உங்களைப் பற்றி எண்ணுகிறார்களே.. 

1987ல் தொடங்கி 90 வரையிலும், பிறகு 90 தொடங்கி 92 வரையிலும் மக்களுக்கு முன்னே காட்சியளித்த அதே வி.பி.சிங்தான் நான். நம் நாட்டிலிருந்து பணத்தை வெளிநாட்டில் கொண்டுபோய்ப் பதுக்கிவைக்கவோ ரகசிய பேரங்களில் ஈடுபடவோ ஆரம்பித்துவிட்டேனா என்ன? இல்லை, ஊழல் நிறைந்த அரசைத் தந்தேனா? ஆக, அப்படி என்னதான் மாற்றம் நேர்ந்துவிட்டது?

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

வி.பி.சிங்: காலம் போடும் கோல்

சமஸ் | Samas 26 Nov 2023

அமைப்புடனும் ஊடகங்களுடனும் உங்கள் உறவு மோசமடைந்தது ஏன்?  

இதற்கான பதிலை ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலித் மாணவர்களின் குழு எனக்கு அளித்தது. ‘ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளாலும், எங்களை ஆயிரம் ஆண்டுகளாக வசை பாடியவர்களாலும் நீங்கள் வசை பாடப்படுகிறீர்கள். நீங்கள் எங்கள் பக்கத்தில் நின்றால் வசையில் உங்களுக்கும் பங்கு கிடைக்கும்’ என்று அவர்கள் கூறினார்கள். அதுவே எனக்கு வெளிச்சத்தையும் தெம்பையும் கொடுத்தது. இன்னும் இரண்டு அனுபவங்கள் எனது வைராக்கியத்தை உறுதிப்படுத்தின.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சில மாணவர்கள், “நாங்கள் இந்த நாட்டின் இளைஞர்கள் இல்லையா? பட்டியலினத்தோரும் பிற்படுத்தப்பட்டவர்களும்தான் இந்த நாட்டின் நான்கில் மூன்று பங்கு என்ற அளவில் இருக்கிறோம். மண்டல் மூலமாக நீங்கள் எங்களுக்கு ஒரு விஷயம் கொடுத்தீர்கள், ஒட்டுமொத்த நாடும் எங்கள் மீது பாய்ந்தது” என்று என்னிடம் கூறினார்கள்.

இந்த ஒதுக்கீடு 27 சதவீதமா அல்லது 10 சதவீதமா என்பது பற்றிய கேள்வியல்ல; மாறாக, ‘ஆளும் மேல்தட்டினரின் இதயங்களில் எங்களுக்கு 1 சதவீதம்கூட இடம் இல்லையா?’ என்ற கேள்வி. நாட்டின் நான்கில் மூன்று பங்கு இளைஞர்கள் இப்படி உணர ஆரம்பித்தார்கள் என்றால் நாடு என்னவாகும்?

இன்னொரு முறை ஒரு பத்திரிகைகாரர் வயதான ஒரு தலித் பெண்மணியிடம், ‘நீங்கள் வி.பி.சிங்கை ஏன் ஆதரிக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, ‘ஏனென்றால் அவர் எனது சாதியைச் சேர்ந்தவர்’ என்று பதில் கூறியிருக்கிறார். ‘வி.பி.சிங் தலித் என்றா சொல்கிறீர்கள்’ என்று அந்தப் பத்திரிகையாளர் திரும்பக் கேட்டார். ‘ஆமாம், ஏனெனில் அவர் எங்களுக்காகப் போராடுகிறார்’ என்று அந்தப் பெண்மணி பதில் கூறியிருக்கிறார். ஆக, கொஞ்சம் நம்பிக்கையாவது இருக்கிறது. அதை விட்டுவிடக் கூடாது. வாக்குகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் எல்லாம் அந்த நம்பிக்கைக்கு ஈடாக மாட்டார்கள்.

ஆளும் மேல்தட்டு வர்க்கத்தின் சதிதான் உங்களைக் கவிழ்த்துவிட்டதா?  

நான் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. அது இயல்பான எதிர்வினைதான். ஆளும் மேல்தட்டினர் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், நம் சமூகத்தின் நசுக்கப்பட்ட பிரிவினரைத் துரத்திச் சென்று ஒரு முட்டுச்சந்தில் நிறுத்துவோம் என்றால், நமது நாட்டில் மேலும் மேலும் அமைதியின்மையே ஏற்படும்.

வி.பி.சிங்கைத் தூக்கில் தொங்கவிடுங்கள்; ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கான நீதியைக் கொடுங்கள். இல்லையென்றால் இந்த நாடு யாராலும் நிர்வகிக்க முடியாத நிலையை நோக்கிச் சென்றுவிடும்!

நீங்கள் ஒரு கனவுலகவாதியாக, லட்சியவாதியாக அறியப்படுகிறீர்கள், ஆனால் தனக்கென்று அமைப்பேதும் இல்லாதவராக…

காங்கிரஸை ஆட்சியதிகாரத்திலிருந்து தூக்கியெறிவதாக ஓர் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். அவர்களிடம் 410 எம்.பிகள் இருந்தனர். இருந்தும் நான் நினைத்ததை நிறைவேற்றிக்காட்டினேன். மாபெரும் வல்லமை கொண்ட காங்கிரஸுக்கு இரண்டு முறை அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனது. அமைப்பேதும் இல்லாமல்தான் இதைச் செய்தேன். அப்படி இருக்கும்போது எனக்கென்று அமைப்பு ஏதும் இருந்தால் என்ன நடக்கும்?

காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையில் மட்டுமே போட்டி என்று ஆகிவிட்ட நிலையில் ஜனதா தளம் என்பது காலத்துக்குப் பொருந்தாத ஒன்றாக ஆகிக்கொண்டிருக்கிறதா?

ஆளும் மேல்தட்டினர் அதைத்தான் விரும்புகிறார்கள், ஏனெனில் இரண்டு கட்சிகளும் அவர்களுடையதுதான். இரண்டுமே மாற்றத்தை விரும்புபவை கிடையாது. இந்தப் பழைய அமைப்பு தொடர்வதில் ஒடுக்கப்பட்டோருக்கு விருப்பமில்லை, அவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் மாற்றத்துக்காகப் பாடுபடுபவர்கள். 

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எண்ணிக்கைதான் முக்கியம். ஆனால் உங்கள் கட்சி தொடர்ந்து உடைந்துகொண்டே இருக்கிறதே…  

முன்பு நடந்த அளவுக்கு இப்போது மோசமில்லை. தேவி லாலும் சந்திர சேகரும் பிரிந்தபோதுதான் மிக மோசமான ஊசலாட்டம் இருந்தது. 

உயர் மட்டங்களில் நிலவும் ஊழலுக்கு எதிராக நீங்கள் இப்போதெல்லாம் போர் நடத்துவதில்லையே. ஊழல் ஒரு பிரச்சினையாகத் தற்போது தெரியவில்லையா?

அப்படி இல்லை, ஊழல் இப்போதும் பெரிய பிரச்சினைதான். நாடாளுமன்றக் கூட்டுக் குழு (ஜேபிசி) வேண்டும் என்று கூறியவன் நான்தான். ஊழலைப் பற்றி நான் இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன், ஏனெனில் ஊழல் என்பது ஏழை மக்களைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது. திட்டமிட்ட அணுகுமுறைகள் நம்க்கு அவசியம்; இங்கேதான் தேர்தல் சீர்திருத்தங்களும் அரசின் நிதியாதரவும் அத்தியாவசியமாகின்றன. கருப்புப் பணம் என்ற எரிபொருளைக் கொண்டு ஜனநாயக வாகனம் ஓட முடியாது. 

தாராளமயமாதலுக்கு உங்கள் எதிர்ப்பு ஆச்சரியமளிக்கிறது; ஏனென்றால் நிதியமைச்சராக இருந்தபோது நீங்கள் அதற்கு ஆதரவளித்தீர்கள் அல்லவா?

நான் மாறவில்லை. உருகுவே நாட்டில் காட் (GATT) ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோது நமக்கெதிரான அச்சுறுத்தல்களையெல்லாம் நாங்கள்தான் வெற்றிகரமாக எதிர்த்தோம். பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகியவற்றுடனும் இதையேதான் செய்தேன். வெளிநாட்டு முதலீட்டைப் பொறுத்தவரை, நமக்கென்று சில முன்னுரிமைகள் இருக்கின்றன, ஆகவே பிறர் சுரண்டுவதற்காக நம் நாட்டை அவர்களுக்குத் திறந்துவிட முடியாது என்று கூறினேன். நரசிம்ம ராவ் அரசின் கொள்கையோ எங்களிடமிருந்து வேறுபட்டது. சிவப்பு நாடா முறையை ஒழித்துக்கட்டுவது என்பது தாராளமயமாதலின் ஒரு அம்சம், அனைத்து உலக நாடுகளையும் நம் நாட்டுக்குள் நுழையவிடுவதென்பது இன்னொரு அம்சம். அதிக அளவிலான உள்நாட்டு வணிகப் போட்டி, அதே நேரத்தில் வெளிநாட்டு முதலீடுக்குக் கட்டுப்பாடு என்ற பொருளாதார மாதிரியைத்தான் நான் லட்சியமாகக் கொண்டிருந்தேன்.  

இது சாத்தியமாகக் கூடியதுதானா?

சர்வதேச அளவில் முதலீடுகளின் போக்குவரத்து இயங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் சந்தைக் கோட்பாடு. சர்வதேச அளவில் உழைப்பின் போக்குவரத்து என்பது தடையில்லாமல் ஏன் இயங்கிக்கொண்டிருக்கக் கூடாது என்பது நான் முன்வைத்த யோசனை. சந்தைக் கோட்பாடு என்பது உற்பத்தியின் அனைத்துக் காரணிகளின் போக்குவரத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது. அப்படியென்றால் அவர்கள் தயாரித்த மருந்துகள் இங்கே வரலாம்; ஆனால், நமது மருத்துவர்கள் அங்கே செல்ல முடியாது. அவர்களின் பொறிகள் இங்கே வரலாம். ஆனால், நம் பொறியியலாளர்கள் அங்கே செல்ல முடியாது. இரண்டாவதாக, வளர்ந்துவரும் நாடுகள் தங்களுக்கென்று கதவைத் திறந்துவைத்திருக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் கூறுகின்றன; ஆனால், தங்களிடமுள்ள தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு வளர்ந்துவரும் நாடுகளை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். நமது பொருளாதாரம் வெளியிலிருந்து எதையும் அனுமதிக்காத வகையில்தான் இருந்திருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தான் வேண்டும்.

அப்படியென்றால் அரசின் கொள்கைகளுடன் நீங்கள் உடன்பாடு கொள்கிறீர்கள் இல்லையா?

அடிப்படையான வேறுபாடு ஒன்று உள்ளது. 1990ல் நமது வருவாய்ப் பற்றாக்குறை ரூ.14 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று 1986லேயே நான் எச்சரித்தேன். அது தேர்தல் நடக்கும் ஆண்டாக இருக்கும் என்றும், அதனால் கஜானாவில் பணம் ஏதும் இருக்காது என்றும் ராஜீவிடம் நான் கூறினேன். ஆனால், பாதுகாப்புத் துறைக்கு நான் மாற்றப்பட்டேன். ஆனால் என் எச்சரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டது. கடனை எப்படி அடைக்கப்போகிறீர்கள் என்பதுதான் இப்போது நம்முன் உள்ள உண்மையான கேள்வி. ஒரு மருத்துவரைப் போல, நாட்டின் முன் நரசிம்ம ராவ் கட்டணச் சீட்டுகளை வைத்தார், நாம் அவற்றைச் செலுத்திருக்கிறோம்: பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம். நோயாளிக்கு என்ன ஆயிற்று: கடந்த ஆண்டு (1991) ரூ.1,700 கோடியாக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை இந்த ஆண்டு (1992) ஏப்ரல்-ஜூலை மாதங்களில் மட்டும் ரூ.6 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய்ப் பற்றாக்குறைகள் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்குச் சென்றுவிட்டன. வர்த்தகப் பற்றாக்குறையை நாம் குறைக்கவில்லையென்றால் நாம் அவ்வளவுதான்.  

ராமர் கோயில் குறித்து நரசிம்ம ராவ் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தையால் ஏதும் பயன் இருக்குமா?

ஏதாவது பயன் ஏற்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். நான் பேச்சுவார்த்தைகள் தொடங்கும்போது நம்பிக்கையளிக்கும் சில அறிகுறிகள் தென்பட்டன. ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்று விரும்பிய நியாயமான நபர்கள் இரண்டு தரப்பிலுமே இருந்தார்கள். ஆனால், ஆனால் நமது அரசுக்கு இனியும் அவகாசம் கொடுக்கப்படலாகாது என்று பாஜக முடிவெடுத்தார்கள். எது எப்படியோ, மண்டல் அறிக்கையை நிறைவேற்றியது ராவ் அரசு இல்லை என்பதால் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் பாஜகவுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. இணக்கமான ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறுகிறோம். இது நரசிம்ம ராவின் பிரச்சினை மட்டுமல்ல, இந்த நாட்டின் பிரச்சினை. ராவிடம் பேசினோம், தான் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார். ஆனால், பாஜக-விஎச்பி ஆகியவற்றின் அறிக்கைகள் நமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன, ஏனெனில் இணக்கமான சூழலுக்கு ஏதுவாக அந்த அறிக்கைகள் இருப்பதில்லை. 

© India Today

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

வி.பி.சிங்: காலம் போடும் கோல்
பிஹார் சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம்
வி.பி.சிங் எனும் அரக்கர்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: ஆசை

2


பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

இ.பு.ஞானப்பிரகாசன்   8 months ago

சிறப்பான கட்டுரை! வலி மிகுந்த பதிவு! இந்த நாட்டில் ஒரு தலைவர் நல்லவராக இருந்த ஒரே காரணத்துக்காக அவரை எப்படியெல்லாம் பந்தாடியிருக்கிறார்கள் என்பதை நன்கு உணர முடிகிறது. வி.பி.சிங் அவர்கள் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள்தாம் முழுக் காரணம் என்று நான் இன்று மதியம் வரை நம்பியிருந்தேன். இதே நாளில் இத்தளத்தில் வெளியாகியுள்ள "வி.பி.சிங்: காலம் போடும் கோல்" கட்டுரையையும் இதோ இப்பொழுது இந்தச் செவ்வியையும் படித்த பிறகுதான் அவர் தன்னியல்பாகவே பிற்படுத்தப்பட்டோர் நலனில் பேரக்கறை கொண்ட மாமனிதர் என்பது புரிகிறது. "ஊழல் ஒழிப்பு" என்கிற ஒரே முழக்கத்தை முன்வைத்து, ஊழல்தான் இந்தியாவின் அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணம் என்று நம்மை நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்தது பா.ச.க. ஆனால் அந்த முழக்கத்தை முதன் முதலில் முன்வைத்த வி.பி.சிங் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை காட்டிய ஒரே காரணத்துக்காக அவர் ஆட்சியையே கவிழ்த்ததும் பா.ச.க-தான் என்பதை அறியும்பொழுது இவர்களின் ஊழல் ஒழிப்பு எப்பேர்ப்பட்ட பித்தளை மாற்று வேலை என்பது புரிகிறது. "வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே" என்கிற வடிவேலுவின் குரல் காதுகளில் மோதுகிறது. வி.பி.சிங் புகழ் வாழ்க!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   8 months ago

What a bold man!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

தலித் மக்கள்குடமுருட்டிஸ்டாலின்பாஜக அரசுபற்றாக்குறைகள்தென்னகம் வஞ்சிக்கப்படுகின்றனவா?ஒருங்கிணைந்த நவீனப் பொதுப் போக்குவரத்து முறைஜூனியர் விகடன்பகவந்த் மான்இதய வெளியுறைவிளைச்சல்பத்மினிஏவுதளம்மருத்துவர் ஜீவா ஜெயபாரதிதிலிப் சக்கரவர்த்திமாநில சுயாட்சிஅநாகரீக நடவடிக்கைகாலமானார்பாரதிதமிழர்முன்னோடித் தமிழகம்சமஸ் வடலூர் கட்டுரைஜிஎஸ்டிமூன்றிலக்க சிவிவி எண்தோள்பட்டைபச்சை வால் நட்சத்திரம்நீட் மசோதாஅன்பு உள்ளங்களுக்குக் காத்திருக்கும் ஆபத்து!பொதுப்புத்திபொது மருத்துவம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!