கட்டுரை, ஆளுமைகள், அருஞ்சொல்.காம் 10 நிமிட வாசிப்பு

கேஆர்வி: ஓர் இதழியல் வாழ்க்கை

விக்கிரமன்
18 Mar 2022, 5:00 am
0

பத்திரிகைப் பணியை சமூக சேவைக்கான ஒரு பாதையாக வரித்துக்கொண்டு, பல இன்னல்களுக்கு இடையிலும் மிகத் தீவிரமான பற்றோடு பணியாற்றும் மரபில் வந்தவர் கே.ஆர்.வாசுதேவன் (20.03.1922 - 19.08.1987). பொருளாதாரப் பட்டதாரியான இவர் அரசுப் பணியை உதறிவிட்டு, பத்திரிகைப் பணியை அணைத்துக்கொண்டவர். கோகலே ஆரம்பித்த ‘இந்திய ஊழியர் சங்க’த்தின் கேரளப் பிரிவின் செயலாளராகச் செயல்பட்டவர்; தலித் மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் நலப் பணியில் பங்கெடுத்தவர். ‘நாக்பூர் டைம்ஸ்’, ‘தி ஹிதவாதா’, ‘தி டிரிபியூன்’ ஆங்கில நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் தமிழ் இதழியல் நோக்கி நகர்ந்து ‘தினமணி’யில் உதவி ஆசிரியர் பணியேற்றவர். ‘தினமணி கதிர்’ இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ‘புஷ்யம்’, ‘ரத்னபாலா’ இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தவர். நாக்பூர், சண்டிகர் பல்கலைக்கழகங்களின் பத்திரிகைத் துறைகளில் கொஞ்ச காலம் விரிவுரையாளராக இருந்திருக்கிறார். பிற்பாடு அரசியல் ஆர்வம் மிகுந்தபோது, ராஜாஜியின் சுதந்திரா கட்சியிலும், பிற்பாடு பாஜகவிலும் செயல்பட்டவர். ஆனால், கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, எல்லோருடனும் இணைந்து செயல்பட்டவர்; ஆளுமைகளை நேசித்தவர் என்பதற்கு, அவர் எழுதிய 'தொன் பாஸ்கோ' (பூரம் பதிப்பகம்), மொழிபெயர்த்த 'தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்' (நேரு இந்திராவுக்கு எழுதியவை - பூரம் பதிப்பகம்) இரு நூல்களும்  உதாரணங்கள். கேஆர்வியின் நினைவாக விக்கிரமன் எழுதிய இந்தக் கட்டுரை அவருடைய நினைவோடு, தமிழ் இதழியலின் ஒரு காலகட்டத்தையும் பேசுவது. கே.ஆர்.வி. நூற்றாண்டை ஒட்டி, அவருடைய நினைவாக ‘அருஞ்சொல்’ இக்கட்டுரையை வெளியிடுகிறது.  

மறக்க முடியாதவர்

கே.ஆர். வாசுதேவன் முதன்முதல் என்னைச் சந்தித்தது எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது. கதர் ஜிப்பா, கதர் வேட்டி, கழுத்தில் சுற்றிப் போட்ட ஒரு கதர் அங்கவஸ்திரம் அணிந்து கொண்டு நெற்றியில் பளிச்சென்ற நாமத்துடன் (ஒற்றைக் கீற்று மட்டும்) என் எதிரே வந்து அமர்ந்தவரைப் பார்த்தவுடன் பல யுகங்களில் பழகிய உணர்வு எனக்கேற்பட்டது. புன்முறுவல், அதிராத பேச்சு, இயற்கையாகவே இருக்கும் மலர்ந்த முகம். 'ஸர்வன்ட்ஸ் ஆஃப் இந்தியா' சொஸைட்டியின் உறுப்பினர் அவர். சென்னை வண்டலூருக்கு அருகே உள்ள கொளத்தூரில் சமூகத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்.

தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தமிழ்நாட்டுச் சமூகப் பணிக்குப் பிறகு வடக்கே 'ஹிதவாதா', 'பயோனீர்' பத்திரிகைகளில் பணிபுரிந்தார். சென்னை 'தினமணி'யில் ஆசிரியர் பணியில் சேர்வதற்காக குடும்பத்துடன் சென்னை வந்தார். அப்போதுதான் அவர் என்னைச் சந்தித்தார். மகிழ்ச்சியாக இருந்தது.

நாளேட்டில் பணிபுரிபவர்கள் அவ்வளவு எளிதாக மற்றோர் அலுவலகத்திற்கு வந்து மற்றோர் ஆசிரியர் எதிரே அமர்ந்து பேசுவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. ஆனால், என்னைப் பல காலம் அறிந்தவர் என்பதுபோல என்னுடன் மனம்விட்டுப் பேசினார். ஆம், இதற்குச் சாட்சியாக தன் கைப்பையிலிருந்து தபால் கார்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார். அந்த கார்டு அவருக்கு நான் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதாகும். நான் வியப்படைந்தேன். அந்த தபால் கார்டை அவர் இவ்வளவு காலம் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. ஏனெனில் முக்கியச் செய்தி ஏதும் அதில் இல்லை. 'தினமணி'யில் செய்தி ஆசிரியராக. தலையங்கங்கள் எழுதுபவராகப் பணியாற்றியபோதே 'தினமணி கதிர்' வாரப் பதிப்புக்கும் ஆசிரியர் பொறுப்பை அவர் ஏற்க வேண்டியதாயிற்று. 

'தினமணி கதிர்' வாரப் பதிப்பின் ஆரம்பக் கால ஆசிரியர் துமிலன் லட்சம் பிரதிகள் விற்றுக் காண்பித்தார். ஒருகட்டத்தில் விற்பனை ஏறியதுபோல், பல்லாயிரம் பிரதிகள் மளமளவென்று இறங்கின. அதன் அச்சு, காகிதம், பைண்டிங் படுமோசம் ஆகியனவும் விற்பனை வீழ்ச்சிக்கு ஒரு காரணம். ஆப்செட் அதிகம் பயன்படுத்தப்படாத காலம். ரோட்டரி வகை இயந்திரம் அசுர வேகத்தில் அச்சடித்துத் தள்ளிவிடும். 'ஆனந்த விகடன்', 'கல்கி' பத்திரிகைகளைவிட 'கதிர்' விலை குறைவு: அதிகப் பக்கங்கள் (சில வாசகர்கள் அந்தக் காலத்தில் சொன்னதுபோல் சாணித் தாளில் அச்சிட்டு விற்பனைக்குத் தள்ளப்பட்டது. சித்திரங்கள் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டன என்பது பிளஸ் பாயிண்ட்!

சி.சு.செல்லப்பா போன்ற மேதைகள் அதில் உதவி ஆசிரியர்களாக இருந்தார்கள். இருந்தும் அதல பாதாளத்தில் வீழ்ந்த விற்பனையைத் தூக்கி நிறுத்த முடியவில்லை. பிறகு 'கதிர்' தொடர்ந்து வந்ததா என்பது நினைவில்லை. மீண்டும் 'கதிர்' புது வடிவத்தோடு, ரா.அ. பத்மநாபன், வித்வான் வே. லட்சுமணன் ஆகியோரின் பொறுப்பில் வெளிவந்தது. பழைய கதிரைப் போல இரு பங்கு அளவு, பெரிய பெரிய வண்ணப் படங்கள். ஆசிரியர் பெறுப்பேற்றிருந்த இருவரும் தரமுள்ள ஆசிரியர்கள். ஒருவர் மகாகவி பாரதி பக்தர். ஆங்கிலப் புலமை மிக்கவர். 'மணிக்கொடி' எழுத்தாளர். யு.எஸ்.ஏ ஸ்தாபனத்தில் பணிபுரிந்தவர். மற்றவர் தமிழ்ப் புலவர். பத்திரிகை உலக அனுபவம் மிக்கவர். திரைப்படத் துறையில் அப்போதுதான் கொடி நாட்டிக் கொண்டிருந்தார். பால ஜோதிடர் என்று புகழப்பெற்றவர். பழகுதற்கினியவர்.

வாரப் பதிப்பு என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று 'ஆனந்த விகட'னும், 'கல்கி'யும் எடுத்துக்காட்டாக வெளிவந்துகொண்டிருந்தன. அந்தப் படிவத்தை 'குமுதம்' உடைத்துக்கொண்டிருந்த காலம் தரத்தை முதலிடம் கொண்டதால் இருவர் முயற்சியும் வெற்றி அடையவில்லை. 'கதிர்' விற்பனையில் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.

எப்போதுமே புதுமைச் செய்ய வேண்டும், புதுப் பத்திரிகையில் பற்கேற்க வேண்டும் என்ற துறுதுறுப்புடைய சாவி, 'கல்கி'யை விட்டுவிட்டு 'ஆனந்த விகட'னையும் விட்டுவிட்டு ஓடுமீன்ஓட என்றபடி நல்லதொரு வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். 'கதிர்'பற்றி மோப்பம் பிடித்தார். 'கதிர் தன் பொறுப்பில் வந்தால் ஆகா!' அதன் அரியணை ஏறத் திட்டம் வகுக்கலானார். வை.சுப்ரமண்யம் போன்று யார் விலகினாலும் விலகாத உதவி ஆசிரியர் ஓரிருவர்  சாவியை அவ்வப்போது சந்தித்து, 'நீங்கள் பொறுப்பேற்றால் கதிரைப் பிரமாதமாக்கிவிடலாம்!' என்று தூபம் போட்டுக்கொண்டிருந்தனர்.

சாவி தினமும் எல்லா நேரமும் கதிர்க் கனவு கண்டுகொண்டிருந்தார். சிவராமனின் கவனத்தைக் கவர்வதற்கான வழிமுறைகளைத் தேடிக்கொண்டிருந்தார். வென்றுவிட்டார். ரா.அ.பத்மநாபன், வே.லட்சுமணனைப் பட்டத்திலிருந்து நீக்கி சாவி அரியணையில் அமர்ந்தவுடன், வெகு விரையில் லட்சம் பிரதிகளை விற்றுக்காட்டுவதாக சபதம் எடுத்துக்கொண்டார். நிர்வாகத்துக்கு உறுதி அளித்தார். செலவுக்குக் கட்டுப்பாடு கூடாது என்றார். அதற்காகப் பலரைப் பலியாக்கினார். பல குடிலன்களின் உதவியையும் வலியப் பெற்றார்.  சாவியின் திறமையைக் குறைவாக மதிப்பிடக் கூடாது. அவர் இலட்சியமே வாசகப் பாமரர்கள் ரசிக்கும்படியான பல்சுவை நிறைந்த வாரப் பத்திரிகை நடத்திக் காட்டுவதென்பது ஆகும். பேராசிரியர் கல்கிக்குள்ள திறமை தமக்கு உண்டென்பதும், வாய்ப்பிருந்தால் ஜெயித்துக்காட்டுவேன் என்பதுமே அவர் கோஷம்.

அதற்கேற்ற நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஜெயகாந்தன், சுஜாதா, ஸ்ரீ வேணுகோபாலன் போன்றவர்களின் புதுமை எழுத்துகள் உதவின. சில வேளைகளில் சிவராமன் முகம் சுளிக்கும்படியான பல எழுத்துகள் பிரசுரமாயின. 'ஆனந்த விகடன்', 'கல்கி' வாரப் பத்திரிகைகளில் இருப்பதுபோல் உதவி ஆசிரியர்கள் கோஷ்டியை அமர்த்திக்கொண்டார். 'கதிர்' பிரமிக்கத்தக்க முறையில் விற்பனையில் உயர்ந்தது. கோபுலு சிருங்காரமாகவும், இலக்கியமாகவும் சித்திரம் வரைந்து சாவிக்குக் கை கொடுத்தார்.

எப்போதுமே 'கதிர்' பத்திரிகையின் ஆசிரியராக வருபவர் ஒரு பரமப்பதப் படத்தில் காய் நகர்வதுபோல தாயம், நாலு, மூணு போட்டு திடீரென ஏணியில் ஏறுவார். கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல் தாயக்கட்டை உருள உருளப் பெரிய ஏணியில் ஏறுவார். எதிர்பாராமல் பெரிய பாம்பின் தலை வழியாக மளமளவென்று இறங்கிவிடவும் கூடும்.

சாவியின் ஆட்சி அப்படியே சரிந்தது. அதற்கான சூழ்நிலை காரிய காரணங்கள் எல்லாம் மிகப் பழைய செய்திகள் இங்கு இந்தக் கட்டுரையில் வேண்டாம். 

மீண்டும் 'கதிர்' ஆட்சியில், சிம்மாசனத்தில் அமர்த்த ஆசிரியரைத் தேடினார்கள். ஒரு நல்ல ஆசிரியரிடம் பத்திரிகையை ஒப்படைக்கக் காரணங்கள் சிவராமனுக்குத் தெளிவாகத் தெரியும். பெரியவர் சிவராமன் நாளேடு நடத்துவதில் ஜாம்பவான். பொருளாதார இலக்கியக் கட்டுரைகள் எழுதுவதில் மேதை. ஆனால், வாரப் பதிப்பு உத்திகள் அவருக்குப் புரியாது. பலிபீடத்திற்கு கே.ஆர்.வாசுதேவன் அழைத்துவரப்பட்டார். பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

காந்தியவாதி, தேசியவாதி, இலக்கியச் சிந்தனையுடையவர் வாசுதேவன். ஆங்கிலம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர். நவீன இலக்கிய எழுத்தாளர்கள் தொடர்பு, அக்காலச் சூழ்நிலை அவர் அறிந்திருந்தாரா, நெளிவு சுளிவுகள் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது.

வாசுதேவன் 'கதிர்' பொறுப்பேற்றார். முனியாண்டி விலாஸ் ஓட்டலின் சரக்கு மாஸ்டராக சைவப் பிரசாரச் செயலாளரை நியமித்தால் எப்படியோ அப்படித்தான் வாசுதேவன் நம்பிக்கையுடன் ஆசிரியர் பொறுப்பு வகித்தார். 'கதி'ரில் சில்பி வண்ணப்படங்களை அதிக விலை கொடுத்து வாங்கி அச்சிட்டு வெளியிட்டார். நல்ல வடகத்தைத் தணலில் சுட்டுச் சாப்பிடுவதுபோல் அமரர் உமாபதியின் சித்திரங்களை நல்ல முறையில் பயன்படுத்தினார். திருவரங்கர் உலா எழுதிய ஸ்ரீ வேணுகோபாலனை ‘மதுரா விஜயம்' எழுதச் சொன்னார்; திருவரங்கன் உலாவுக்குப் பாராட்டு விழா நடத்தினார். எங்களையும் அழைத்துப் போனார். 'கதிர்' விற்பனையாளர்களை நேரில் சென்று சந்தித்து விற்பனை உயர்வைப் பற்றி விவாதித்தார். தூய வாரப் பதிப்பை நடத்தினார். இதழை இலக்கியரீதியாக நடத்த முயன்றார். தனியே மாத நாவல்களை வெளியிடும் பொறுப்பும் அவரிடம் வந்தன. பரபரப்பாக விற்பனை ஆக வேண்டிய நாவல்களைப் போடுவதற்குப் பதிலாக 'பாடினியின் காதலன்' என்ற என் கதையை வெளியிட்டார். 

இதுவரை அவருடைய 'கதிர்' பத்திரிகைப் பணியைப் பற்றி அறிந்தது போதும். 'கதிர்'  'தினமணி' நிறுவனங்களிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. விற்பனை எண்ணிக்கையை வைத்தே விளம்பரங்கள் கிடைக்கும். “விற்பனை அதிகமாவதற்கு எந்த வழியேனும் கடைப்பிடியுங்கள்'' என்று முதலாளி கூறிவிட்டார். இலட்சியவாதி வாசுதேவன் 'கதிர்' பத்திரிகையிலிருந்து விலகிவிட்டார்.  சொந்தமாகப் பத்திரிகையைக் தொடங்கியதுதான் வாசுதேவன் எடுத்தத் தவறான முடிவு. 'புஷ்யம்' என்ற பெயரில் மாத இதழ் தொடங்கினார்.

எந்த எழுத்தாளராக இருந்தாலும் சொந்தமாகப் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற அரிப்பு எப்போதும் உண்டு, அவர் நடத்துகிறாரே, இவர் நடத்துகிறாரே நம்மால் முடியாதா என்று கேள்வி கேட்டுக்கொண்டு விடையையும் தாங்களே கூறிக்கொண்டு தொடங்குவார்கள். பிறகு சிரித்துக்கொண்டே வருந்துவார்கள்! அதிலும் பிரபல பத்திரிகைளில் பணிபுரிந்தவர்கள் விலகியவுடன் சொந்தப் பத்திரிகையை நடத்தத் திட்டமிடுவார்கள். புரட்சி எழுத்தாளர் விந்தன் 'மனிதன்' பத்திரிகையைத் தொடங்கியவுடன் முதல் இதழில் தலையங்கக் குறிப்பில் எழுதினார். "துமிலனின் 'மாலதி ' போலவும், நாடோடியின் 'நாடோடி' போலவும், சாவியின் ’வெள்ளி மணி'யைப் போலவும், கதிர் வெங்கட்ராமனின் 'வெள்ளி மாலைக் கதிர்' போலவும், வசந்தனின் பாரிஜாதகத்தைப் போவும் என்னுடைய 'மனிதன்' சாக மாட்டான்." (இன்னும் இன்றும் அவரிட்ட பட்டியலை மறந்துவிட்டேன்).

இதைப் படித்த குயுக்தியாகப் பேசக்கூடிய ஓர் எழுத்தாள விமர்சகர் கேட்டார்: 'மனிதன்தானே சாக மாட்டானா?' 

'மனிதன்' இறந்துவிட்டான்.

இந்த அனுபவங்களை அறிந்த சாண்டில்யன் தொடங்கிய 'கமலம்' மேற்குத் திசைக் கதிரவனை நோக்கியது. சோமுவின் 'நண்பன்' இதழும்  நிலைக்கவில்லை. தானும் விதிவிலக்கல்லன். 'சுந்தரி'யைத் தொடங்கினேன். 'கப்சிப்’ என்று மூடிவிட்டேன்.

கே.ஆர்.வாசுதேவன் பாபா பக்தர். மனித நேயமுடையவர். எழுத்தாளரிடம் அன்புடையவர். பிற உயிர்க்குத் தீங்கு செய்யாதவர். பல மொழிகள் அறிந்தவர். பல மொழிகளின் அறிவிருந்ததால் தம் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற துடிப்புடையவர்.

எழுத்தாளர்களின் கனவுகள் எப்போதும் பலிப்பதில்லை. ஆனால், இலட்சியப் புருஷர்களின் இலட்சியங்களுக்கு அழிவில்லை. அவை என்றோ ஒருநாள் நிறைவேறும். 

சில அமர எழுத்தாளர்களை என்னால் மறக்கவே முடியாது. என் அருகே அவர்கள் இருந்து பேசிக் கொண்டிருப்பதுபோல் உணர்வேன். கல்கி, டி. எஸ்.சொக்கலிங்கம், சாண்டில்யன், த.நா.குமாரா சாமி, தி.நா.சுப்பிரமணியன், நாரண. துரைக்கண்ணன், தேவன், விந்தன் ஆகியோரை ஆண்டில் இரு தடவையாவது என்னுடைய கனவு உலகில் நான் சந்திப்பேன். அவர்களுடைய இலட்சியம், தன்னம்பிக்கை, தமிழ்ப் பற்று, சிந்தனை ஆகியவை என்னை ஆக்ரமித்துக்கொண்டிருக்கும். அப்படித்தான் கே.ஆர்.வாசுதேவனையும் நான் அடிக்கடி சந்திக்கிறேன்!

கே.ஆர்.வாசுதேவன் நினைவு மலரிலிருந்து...

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







கார்போவுக்கு குட்பை 4 தவறுகள் கூடாதுமேலாதிக்கமா – ஜனநாயகமா?யாதும் ஊரேநிலையானவைஅணைப் பாதுகாப்பு மசோதாமாநிலத் தலைகள்: கமல்நாத்ராஜஸ்தான்நாள்காட்டிசட்டம் - ஒழுங்குதமிழ்நாடு முன்னுதாரணம்பிரணாய் ராய்வலுவான கட்டமைப்புபெலகாவிபரத நாட்டியக் கலைஞர்கௌதம் பாட்டியா கட்டுரைஒரே தலைநகரம்சமூக மேம்பாடுசமஸ் பிரசாந்த் கிஷோர்ஜெய்பீம் ஞானவேல்சர்வாதிகார நாடாகிறதா இந்தியா?வெற்றியைத் தர முடியாவிட்டால் மோடியை ஆர்.எஸ்.எஸ். நஅம்பேத்காரிஸ்ட்உடல் எடை ஏன் ஏறுகிறது?கட்டமைப்பு வரைபடம்லும்பன்மின்னணு சாதனங்கள்வணிகச் சந்தைஒழுக்கவாதியாக ஒளிர்ந்த ஐன்ஸ்டீன்ஔவையார்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!