கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 5 நிமிட வாசிப்பு

பிரஷாந்த் கிஷோருக்கு பிஹார் வசப்படுமா?

உமேஷ் குமார் ராய்
18 May 2022, 5:00 am
0

தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர், பிஹாரில் அவரது மூன்று முயற்சிகள் ஏற்கெனவே தோல்வியடைந்திருக்கும் நிலையில் மீண்டும் அங்கே களம் காண்கிறார். காந்தியின் பிறந்த நாளன்று சம்பாரணிலிருந்து ‘ஜன் சுராஜ்’ பிரச்சாரத்தைத் தொடங்கவிருப்பதாக மே 5 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் அறிவித்தார். அடுத்த எட்டு மாதங்களில் சுமார் 3,000 கி.மீ. பயணம் செய்து எளிய மக்களைச் சந்தித்து உரையாடி அவர்களின் பார்வை குறித்து அறிந்துகொள்ளவிருப்பதாக அவர் கூறினார். 

புதிய பயணம்

பிரஷாந்த் கிஷோர் பத்திரிகையாளர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும்  பதிலளித்தார். ஆனால், புதிய கட்சி தொடங்குவதைப் பற்றிய கேள்விக்கான முடிவைத் தனது பிரச்சாரத்துடன் தொடர்புடைய ‘18,000 தொண்டர்கள்’ வசமே  விட்டுவிட்டார்.

“எங்களின் 18,000 தோழர்களிடம் கலந்தாலோசித்து, புதிய கட்சி தொடங்கலாம் என்று அவர்கள் முடிவெடுத்தால் ஒரு கட்சியை நாங்கள் தொடங்குவோம். ஜன் சுராஜ் பிரச்சாரமே இன்னும் சில காலம் நீடிக்கட்டும் என்றால் இதை நாங்கள் ஒரு பிரச்சாரமாகவே முன்னெடுப்போம். தேர்தல் மேலாண்மை தொடர்பான செயல்பாடுகளிலிருந்து மே 2021இல் விலகுவதாக அறிவித்தேன். அதற்குப் பிறகு நான் ஓராண்டு காலம் சிந்தித்தேன். பிறகு, பிஹாருக்கு வருவதென்று முடிவெடுத்தேன். 2020இல் ‘பாட் பிஹார் கி’ பிரச்சாரத்தை முன்னெடுத்தபோது சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன் – நீங்கள் என்னை ஒரு அரசியல் செயல்பாட்டாளராகத்தான் இன்னும் வரவிருக்கும் ஆண்டுகளில் காணப்போகிறீர்கள்” என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

பிஹாரின் ரோஹ்டாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் 2015 சட்டமன்றத் தேர்தலில்தான் மாநில அரசியலுக்குள் நுழைந்தார். அந்த நேரத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றின் ‘மகா கட்பந்தன்’ (மாபெரும் கூட்டணி) தேர்தல் மேலாண்மையை அவர் கையாண்டுகொண்டிருந்தார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, திட்டங்கள் - திட்ட அமலாக்கம் ஆகியவற்றுக்கான ஆலோசகராக பிரஷாந்த் கிஷோரை நிதீஷ் குமார் நியமித்தார். ஆனால், அந்தப் பதவியிலிருந்து கிஷோர் ராஜினாமா செய்துவிட்டார்.  

2018இல் ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக கிஷோர் மீண்டும் பிஹாருக்குத் திரும்பினார். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் - தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற பிரச்சினைகள் வெடித்தபோது கட்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். ‘பாட் பிஹார் கி’ என்ற தரவு அடிப்படையிலான பிரச்சாரத்தை அவர் 2020இல் தொடங்கினார். காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரும் தரவு ஆய்வாளருமான ஷஷ்வத் கௌதம், தனது பிரச்சாரத்தின் யோசனையையும் சின்னத்தையும் பிரஷாந்த் கிஷோர் திருடிக்கொண்டதாகக் குற்றம்சாட்டினார்.  

எனினும், ‘பாட் பிஹார் கி’ பிரச்சாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு கிஷோர் மறுபடியும் தேர்தல் மேலாண்மையில் மும்முரமானார். கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழகம்,  மேற்கு வங்கம் உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு 2024 தேர்தல் தொடர்பாக காங்கிரஸுக்கும் பிரஷாந்த் கிஷோருக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அவை வெற்றி பெறவில்லை.

"ஜனநாயகத்தில் அர்த்தபூர்வமான பங்கேற்புக்கும் மக்கள் நலக் கொள்கை வகுப்புக்கு உதவுவதற்குமான எனது தேடல் 10 ஆண்டு கால ரோலர் கோஸ்டர் பயணமாக அமைந்துவிட்டது. எனது புதிய பயணத்தைத் தொடங்கவிருக்கும் தருணம் இது. பிரச்சினைகளையும் ‘ஜன் சுராஜ்’ – மக்களின் நல்ல நிர்வாகம் குறித்தும் புரிந்துகொள்ள, நிஜமான எஜமானர்களான மக்களிடம் செல்ல வேண்டிய தருணமிது" என்று பிரஷாந்த் கிஷோர், மே 2, 2022 அன்று ட்விட்டரில் குறிப்பிட்டார்.

பிஹாருக்குத் தான் திரும்பி வந்ததற்கான காரணம் குறித்து அவர் குறிப்பிடும்போது பிஹாரில் ஏற்பட்டிருக்க வேண்டிய மாற்றம் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்படவே இல்லை. அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகத்தான் எனது முயற்சி இருக்கும். பிஹாரில் பெரியதாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று விரும்புகிறேன். பூஜ்ஜியத்திலிருந்து எல்லாவற்றையும் தொடங்க விரும்புகிறேன். அது கடினமானதுதான், ஆகவே அதைச் செய்வதற்குத்தான் இங்கே வந்திருக்கிறேன்” என்றார் கிஷோர்.

பெருந்தொற்றின் காரணமாக ‘பாட் பிஹார் கி’ பிரச்சாரத்தைத் தள்ளிப்போட வேண்டியதாயிற்று என்றார் அவர். “ஜன் சுராஜ் என்பது அந்தப் பிரச்சாரத்தின் நீட்சிதான்” என்றார் அவர்.

அரசியலில் ஒரு இடத்தைத் தேடி…

‘ஜன் சுராஜ்’ பிரச்சாரத்துக்கான சின்னத்தில் காந்தியின் படம் இருக்கிறது. இதன் இணையதளத்தில் காந்தியின் பின்வரும் பொன்மொழி இருக்கிறது: ‘சரியான செயல்பாடுதான் சிறந்த அரசியல்’.

பத்திரிகையாளர் சந்திப்புக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு ஜன் சுராஜின் இணையதளத்தில் ஒன்றரை நிமிட முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது. வேலைவாய்ப்புகள், கல்வி, சுகாதாரம், பெண்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு போன்றவற்றைப் பற்றி அந்தக் காணொளி பேசியது.

இதனோடு பத்திரிகையாளர் சந்திப்பில் பிரஷாந்த் கிஷோர் பேசியிருப்பதை வைத்துப் பார்க்கும்போது பிஹாரில் வளர்ச்சி குறித்த பிரச்சினைகளை மையமிட்டே அவரது அரசியல் இருக்குமே தவிர சாதி அடையாளம், சித்தாந்தங்கள் போன்றவற்றை மையமிட்டு அல்ல என்பது நன்றாகத் தெரிகிறது.

பிஹார் வாக்காளர்கள் இதற்குத் தயாரா?

“உண்மையில், பிஹார் அரசியலில் உள்ள சாத்தியங்களைக் கண்டறியும் முயற்சியில்தான் பிரஷாந்த் கிஷோர் தற்போது இருக்கிறார். அவரது ‘ஜன் சுராஜ்’ பிரச்சாரம் இதன் ஒரு பகுதிதான். தன்னால் அரசியலில் வெற்றிகரமாக இயங்க முடியுமா என்பது இந்தப் பிரச்சாரத்தின்போது தெரியவந்தால் அப்போதுதான் கட்சியை அவர் தொடங்குவார்” என்று மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான மணிகாந்த் தாக்கூர் ‘த வயர்’ இதழிடம் கூறினார். 

அவர் அரசியல் கட்சி தொடங்கினால் யாருடைய வாக்கு வங்கி பாதிக்கப்படும்?

“அதை மதிப்பிடுவது தற்போது கடினம். ஏனெனில், இப்போதுவரை அவர் கட்சியைத் தொடங்கவில்லை. அதன் சித்தாந்தம் என்ன என்பதும் தெளிவாக இல்லை. அரசியலில் குதித்த பிறகு அவர் எந்த சித்தாந்தத்தைப் பின்பற்றப்போகிறார் என்பதைச் சார்ந்தே அவர் எந்தக் கட்சியின் வாக்கு வங்கியைப் பிரிக்கப்போகிறார் என்பது இருக்கும்” என்றார் மணிகாந்த்.   

நடுத்தர வர்க்கம்

சாதி அடையாளம், சித்தாந்தம் ஆகியவற்றுடன் தொடர்பில்லாத ஒரு நடுத்தர வர்க்கம் இந்தியாவில் உருவாகிக்கொண்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர் மஹேந்திர சுமன் நம்புகிறார். “அமெரிக்காவையும் பிற நாடுகளையும் போலில்லாமல், இந்தியாவில் புதிய கட்சிகளுக்கான இடம் இருக்கிறது. கடந்த முப்பதாண்டுகளாகப் புதிய கட்சிகள் தோன்றி, தங்களை நிலைநிறுத்திக்கொண்டிருப்பதற்கு இதுதான் காரணம். ஆம் ஆத்மி கட்சி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு” என்றார் அவர்.   

“எல்லா சாதிகளிலும் ஒரு நடுத்தர வர்க்கம் இருக்கும், அது சாதி அடையாளத்துடனும் சித்தாந்தங்களுடனும் தங்களை அவ்வளவாகப் பிணைத்துக்கொள்ளாது. இந்தப் பிரிவினர் வேலைவாய்ப்பு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளைப் பற்றிப் பேசவே விரும்புவார்கள்” என்றார் அவர்.

இந்தப் பிரிவினரைத்தான் தனது வாக்குவங்கியாக கிஷோர் குறிவைக்கக்கூடும். சாதி அரசியலைப் பற்றி அவரிடம் கேட்டபோது “சாதியைப் பார்த்துதான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்கிற கருத்தை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். சாதி பார்க்காமல்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பதையே புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு வாக்காளரும் சாதி பார்த்துதான் வாக்களிக்கிறார் என்றால் மோடிக்கு ஒரு வாக்குகூட பிஹாரில்  கிடைத்திருக்கக் கூடாது. ஆனால், பிஹாரில்தான் மோடிக்கு அதிகபட்ச வாக்குகள் கிடைத்தன” என்றார் கிஷோர். 

தேர்தல்களில் எப்படி வெற்றிகரமாக ஈடுபடுவது என்பது குறித்து கிஷோருக்கு ஆழமான புரிதல் உண்டு என்றும் இந்தப் புரிதலைக் கொண்டு தேர்தலில், பிறருக்காக அல்லாமல் இந்த முறை தனக்காக, களமிறங்க அவரால் முடியும் என்றும் மஹேந்திர சுமன் கருதுகிறார். “ஆனால், அவர் எந்த சித்தாந்தத்தைப் பின்பற்றப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது” என்றார் சுமன். 

பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கிஷோர் எடுத்திருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால், சாதி அடையாளம், சமூகப் பொறியியல் (social engineering) போன்றவற்றில் அவரால் கடுமையான நிலைப்பாடு எடுக்க முடியாது. மாறாக, வேலைவாய்ப்பு, ஊழல், சுகாதாரம், கல்வி போன்றவற்றைக் குறித்து அவர் பேசலாம். அவரது ஆதரவுத் தளத்துக்கு இவையெல்லாம் வலுசேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது.   

“சாதி என்பது பிஹாரில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. சாதிக் கணக்குகளை மனதில் கொண்டே தேர்தலில் போட்டியிட இடம் தரப்படுகிறது. பணி நியமனங்கள்கூட சாதி அடிப்படையில் செய்யப்படும் ஒரு மாநிலத்தில் சாதியைப் பற்றிப் பேசாமல் உங்களால் எப்படி வாக்குகளைப் பெற முடியும்?” என்று மற்றுமொரு அரசியல் ஆய்வாளர் டி.எம்.திவாகர் கேள்வி கேட்கிறார். 

டெல்லியில் ஆம் ஆத்மியால் வெற்றிபெற முடிந்தது என்றால் பிஹாரில் கிஷோரால் முடியாதா என்ன? அப்படிச் சொல்ல முடியாது, என்கிறார் திவாகர். “டெல்லியும் பிஹாரும் ஒன்றல்ல. டெல்லி வாக்காளர்கள் அடையாளங்களால் தாக்கம் செலுத்தப்படுபவர்கள் அல்ல. ஆனால், பிஹாரில் அடையாளங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன” என்கிறார் திவாகர்.

பிஹாரில் புதிய கட்சிகள்

2020 பிஹார் சட்டமன்றத் தேர்தலுக்குச் சற்று முன்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மகளான புஷ்பம் பிரியா சௌத்ரி ‘ப்ளூரல்ஸ் பார்ட்டி’ என்கிற கட்சியைத் தொடங்கினார். கிஷோரைப் போலவே அவரும் தொழில் துறை, கல்வி, சுகாதாரம், இளைஞர்களின் சக்தி போன்றவற்றைப் பற்றி பேசினார். ஆனால், 2020 சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி 0.29% வாக்குகளை மட்டுமே பெற்றது.

குஷ்வாஹா சமூகத்தின் முக்கியமான தலைவரான உபேந்திர குஷ்வாஹாவும் சொந்தக் கட்சியைத் தொடங்கினார். அவரால் அதில் வெற்றியடைய இயலாத நிலையில் கடையில் ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்துக்கொண்டார். பிஹாரின் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சி ஐக்கிய ஜனதா தளத்தை விட்டு விலகி, சொந்தமாகக் கட்சி தொடங்கினார், அவராலும் வாக்காளர்களைக் கவர இயலவில்லை. சொந்தக் கட்சி தொடங்கிய முகேஷ் சஹானிக்கும் இதுதான் நடந்தது.

பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் (NDA) 2020 சட்டமன்றத் தேர்தலில் அவர் கை கோத்தபோது நான்கு தொகுதிகளில் அவரது கட்சி வெற்றிபெற்றது. அந்தக் கூட்டணியிலிருந்து அவர் விலகியதும் அவருடைய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாஜகவில் இணைந்தனர். 

“இந்தக் கட்சிகளின் தோல்விதான் பிஹாரி வாக்காளர்கள் புதிய கட்சிகளை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. பிஹார் அரசியல் என்பது பெரிதும் இரு துருவங்களைக் கொண்டது. இதில் இடதுசாரிகள் இங்கும் அங்குமாகச் சிதறிப்போயிருக்கிறார்கள். ‘மூன்றாவது’ கட்சிகளுக்கு இடமேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்கிறார் திவாகர். 

- © தி வயர் TheWire.in

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வி.பி.சோமசுந்தரம்

4






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உமர் அப்துல்லாபிளே ஸ்டோர்தொழில் வளர்ச்சிசித்தாந்தர் பிம்பம்வளர்ச்சியடைந்த இந்தியாஅடையாளக் குறியீடுகள்அறிவார்ந்த வார்த்தைகள்பூனைகள்தங்க ஜெயராமன்கரூர்ஜிஎஸ்டிபிரஷ்ய-உக்ரைன் போர்தொழில்நுட்பம்ராமேஸ்வரம் நகராட்சி காம்யுமகளிர்சுகந்த மஜும்தார்அருஞ்சொல் சமஸ் பேட்டிஎடப்பாடி பழனிசாமிசட்ரஸ்ஸ்டாலின் ராஜாங்கம் தொகுப்புஜயலலிதாஎன்.மாதவன் கட்டுரைஅருண் நேருமத்திய - மாநில உறவுகள்சீராக்கம்பக்வந்த் சிங் மான்பார்ன்ஹப்அரபுஓம் சகோதர்யம் சர்வத்ர

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!