கட்டுரை, அரசியல், தொழில், ஊடக அரசியல் 10 நிமிட வாசிப்பு
என்டிடிவி கதை ஏன் பேசப்பட வேண்டியதாகிறது?
என்டிடிவி நிறுவனத்திலிருந்து ரவீஷ் குமார் விலகியிருப்பது எல்லோருடைய அச்சத்தையும் உறுதிப்படுத்திவிட்டது. நாம் அறிந்த வகையிலான என்டிடிவியின் முடிவுக்கான ஆரம்பம் இது.
பெருநிறுவன நிர்வாகச் சட்டங்களையும் வாணிபத்தையும் என்னைவிட நன்கு அறிந்தவர்கள் என்னுடைய இந்தக் கருத்தோடு உடன்படாமல் போகலாம்; என்டிடிவியின் தலைமை நிர்வாகப் பதவியிலிருந்து பிரணாய் ராயும் ராதிகா ராயும் விலகிவிடவில்லையே என்று அவர்கள் கூறலாம். இருவரும் இன்னமும் அதிக பங்குகளைத் தங்களிடமே வைத்திருக்கிறார்கள், பங்குகளை வைத்திருந்த சார்புக் குழுவின் நிர்வாகப் பொறுப்பிலிருந்துதான் விலகியிருக்கிறார்கள், நிறுவனத்தின் நிர்வாகத்தைத் தொடர்ந்து வகிக்க அவர்களுக்கும், நிறுவனத்துக்குமே நிறைய வழிகள் இருக்கின்றன என்று கூறலாம்.
எனக்கு அரசியல் பற்றி ஓரளவுக்குத் தெரியும். நாட்டிலேயே அதிக அதிகாரங்களைப் படைத்த ஒருவர், பெரும் பணக்காரருக்குப் பக்கபலமாக இருப்பது என்று முடிவுசெய்துவிட்டால் சட்டம் அதைத் தடுக்காது. நிறுவனத்தின் பெயர் மாறாமல் தொடரலாம், அல்லது நிறுவனமே மேலும் செழிப்படையலாம், ஆனால் முப்பதாண்டுகளாக நாம் பார்த்துவரும் ‘என்டிடிவி’ நிறுவனமாக (முன்போல) இனி இருக்காது.
சஞ்சய் புகாலியா
ஊடகங்கள் பற்றி என்னைவிட அதிக ஞானம் உள்ளவர்கள், 'அதானி தொழில் குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, சுயேச்சையாகச் செயல்படுவோரைத்தான் நிறுவனத்தின் இயக்குநர்களாக நியமித்திருக்கிறார்' என்று சுட்டிக்காட்டுகிறார்கள். இயக்குநர்களில் ஒருவரான சஞ்சய் புகாலியாவைக் கடந்த 20 ஆண்டுகளாக அறிவேன், அது உண்மைதான் என்று நானும் அவரைப் பொருத்தவரை உறுதியாகக் கூறுவேன். அவர் சிறந்த ஊடகர் - மோடியின் விசுவாசி அல்ல. இது எதைக் காட்டுகிறது என்றால் அதானியின் ‘என்டிடிவி’ - அதை ‘ஏஎன்டிடிவி’ (ANDTV) என்றே அழைக்க விரும்புகிறேன் – உடனடியாக எதிர்த்திசையில் பயணித்துவிடாது. என்டிடிவி சேனல் தன்னுடைய ரசிகர்களையும் பிம்பத்தையும் அப்படியே சிறிது காலம் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் – ‘மேலிருந்து’ உத்தரவு வரும் வரை. ‘நெட்வொர்க் 18’ தொலைக்காட்சி நிறுவனத்தை முகேஷ் அம்பானி தன் பொறுப்பில் ஏற்ற பிறகு அப்படித்தான் நடந்தது.
என்டிடிவி நிறுவனத்தை உருவாக்கிய பிரணாய் ராய், ராதிகா ஆகியோரின் விலகலைவிட, ரவீஷ் குமாரின் விலகல் மக்களுடைய கவனத்தை ஈர்த்திருப்பது ரவீஷின் திறமைக்கும் நேர்மைக்கும் பெரிய அடையாளம். கடந்த சில ஆண்டுகளாக ரவீஷின் நிகழ்ச்சிகள் செய்தி சேனல்களில் தலைமை இடத்தைப் பிடித்திருந்தது, அதன் இந்தி சேனலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ‘ரவீஷ் குமாரின் இதழியல் செயல்பாடு, நம்முடைய காலத்தில் உண்மைக்கு ஏற்படும் துயரங்களுக்கு ஒரு சாட்சி’ என்று சில காலத்துக்கு முன்னால் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ரவீஷ் குமார் தனித்த ஒரு அடையாளமாக வளர்ந்ததற்குக் காரணங்கள் உண்டு. தங்களுடைய நெருக்கமான உள்வட்டத்தைச் சேராத ஓர் இளைஞரை, இந்த அளவுக்கு வளரவிட்டது ராய்களுடைய தன்னம்பிக்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு நல்ல உதாரணம். ரவீஷ் குமார் வளர்ந்ததோடு மட்டுமின்றி அவர்களைக்கூட சற்றே பின்னுக்குத் தள்ளிவிட்டார்!
ஆனால், இது நாம் பெரிதும் அறிந்துள்ள இந்திய பாணி நிறுவன உருவாக்கத்துக்கு முற்றிலும் மாறுபட்டது. அதிபர் தன் உயிரைக் கொடுத்து ஒரு நிறுவனத்தைப் படிப்படியாக வளர்ப்பார், அதைத் தன்னுடைய கட்டை விரலின் கீழேயே வைத்து வழிநடத்துவார், தான் போவதற்கு முன்னால், அந்நிறுவனத்தின் ஜீவனையும் உறிஞ்சி எடுத்துவிடுவார். இதில் ராதிகாவும் பிரணாயும் வித்தியாசமாக இருக்க முடிவுசெய்தவர்கள்.
பெருந்தன்மை, நேர்மைக்கு எடுத்துக்காட்டு
என்டிடிவி நிறுவனத்துக்குள் நான் முதன்முதலாக நுழைந்த 1993 எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. அப்போது டெல்லியில் உள்ள ‘வளரும் சமூகங்களின் ஆய்வு மையம்’ (சிஎஸ்டிஎஸ்) நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். ‘செமினார்’ பத்திரிகைக்காக சிறப்புத் தேர்தல் நிகழ்ச்சியைத் தயாரிக்க அழைக்கப்பட்டிருந்தேன். அசோக் லகரி, டேவிட் பட்லர் ஆகியோருடன் இணைந்து பிரணாய் ராய் எழுதிய, ‘இந்தியத் தேர்தல்கள் பற்றிய தொகுப்பு’ என்ற புத்தகம் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது.
அரசியல் மெய்யியலைப் பற்றி எழுதும் சிறு கூட்டத்துக்கு வெளியே வந்து, தேர்தல் கணிப்பு அறிவியல் தொடர்பாக சில கட்டுரைகளை எழுத என்னை அது தூண்டியது. ‘செமினார்’ இதழின் ஆசிரியர் தேஜ்பீர் சிங் சுதந்திரமாகச் சிந்திக்கும் மேட்டுக்குடிகளில் ஒருவர்.
பிரணாய் ராயைச் சந்திக்க தொலைபேசியை எடுத்து, சில வார்த்தைகள் மட்டுமே பேசி அவர் ஒப்புதல் வாங்கிய அனாயாசம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. என்டிடிவியின் கிரேட்டர் கைலாஷ் பகுதி அலுவலகத்தின் டபிள்யூ பிளாக்கில் பேட்டிக்காக காத்திருந்தேன். அந்த நேர்காணல் எதைப் பற்றியது என்பதெல்லாம் நினைவில் இல்லை. பிரணாய் ராயை அருகிலிருந்து பார்க்கும் ஆர்வமுள்ள விசிறியின் மனநிலையில் இருந்தேன். “குடிப்பதற்கு என்ன வேண்டும்?” என்றவர், “சீனத் தேநீரை அருந்துகிறீர்களா?” என்று அடுத்து கேட்டார். அதுவரையில் நான், சீனத் தேநீர் குறித்து கேள்விப்பட்டதே இல்லை. அதுவரை அவரைச் சந்தித்தது இல்லை என்றாலும், அனுபவமற்ற இளைஞன்தானே என்று எண்ணாமல் என்னுடன் மிகுந்த அக்கறையுடன் பேசினார் பிரணாய்.
இதற்குப் பிறகு பலமுறை பிரணாயின் விருந்தோம்பலை ஏற்றிருக்கிறேன். 1996 மக்களவை பொதுத் தேர்தல் முடிவை மறக்கவே முடியாது. தூர்தர்ஷனுக்காக வாக்குக் கணிப்பு அடிப்படையில் தேர்தல் முடிவைக் கணிப்பாகத் தயாரித்திருந்தேன். இந்தப் பணியும், இதன் முடிவும், தேர்தல் கணிப்பில் வல்லவரான பிரணாய் ராய்க்கு போட்டியானது என்றே பலரால் பார்க்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தினத்தன்று, கர்நாடக மாநிலத்துக்கு நான் கணித்தது தவறு என்று வாக்கு எண்ணிக்கை முன்னோட்டம் காட்டியது.
முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ரத்தினச் சுருக்கமாக அரசியல் முத்துகளை உதிர்ப்பவருமான ஜெய்பால் ரெட்டி, ‘வாக்குக் கணிப்பு – வாய்க்கரிசி கணிப்பாகிவிட்டது’ என்று குத்தலாக கருத்து தெரிவித்தார். இதைக் கேட்டு பிரணாய் ராயும் ஏளனமாக புன்னகை புரிந்திருக்கலாம் அல்லது மவுனமாக கேட்டுக்கொண்டிருந்திருக்கலாம். அந்தக் கருத்துக்கு எதிராக கருத்து சொல்ல நான் அப்போது அங்கு இல்லை. “கேலி போதும் நிறுத்துங்கள், பிற மாநிலங்கள் தொடர்பான அவர்களுடைய கணிப்பு மிகச் சரியாகவே வந்துகொண்டிருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார் பிரணாய். பெருந்தன்மை, நேர்மை, கண்ணியம் ஆகியவற்றுக்கு நல்ல உதாரணம் அவர்.
ராதிகாவும் பிரணாயும் தங்களுடைய இந்த நற்குணங்களை அப்படியே நிறுவனத்தின் விழுமியங்களாகவும் மாற்றியிருந்தனர். கடந்த முப்பதாண்டுகளாக என்டிடிவியை நான் வெளியாளாகவும் உள்ளேயிருந்து வேலை செய்பவராகவும் அறிந்திருக்கிறேன். ‘உலகம் இந்த வாரம்’ (வேர்ல்ட் திஸ் வீக்) நிகழ்ச்சியை ஆர்வமாகப் பார்க்கும் ரசிகனாக இருந்திருக்கிறேன். பிறகு அவர்களுடைய புகழ்வாய்ந்த தேர்தல் அணியுடன் வேலை செய்யும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அந்த நிறுவனத்துக்குப் போட்டியாளர்களான ‘ஆஜ் தக்’ மற்றும் ‘சிஎன்என்-ஐபிஎன்’ ஆகியவற்றுடனும் பணிபுரிந்திருக்கிறேன். சமீபகாலமாக அவர்களுடைய செய்தித் தொகுப்பில் விமர்சிக்கப்படுபவனாகவும் இருக்கிறேன். நேர்மையும் ஊடக சுதந்திரமும் என்டிடிவியின் தனி அடையாளங்கள்.
இத்தனை ஆண்டுகளாக தேர்தல் நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளித்தபோதெல்லாம் அவர்கள் என்னிடம் இதைப் பேசுங்கள் என்றோ, இதைப் பேசாதீர்கள் என்றோ நேரடியாகவோ - ஜாடையாகவோகூட எதையும் கூறியதில்லை. திரைக்கு முன்னாலும் திரைக்குப் பின்னாலும் பிரணாய் ராயின் கருத்துகளோடு முரண்பட்டிருக்கிறேன். அது அங்கே தொடர்ந்து வேலை பார்க்க ஒரு தடையாகவே இருந்ததில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தோல்வியை 2004இல் முன்கூட்டியே கணிக்க என்டிடிவி தவறியது. ஸ்டுடியோவிலிருந்து வெளியே வந்த ராய், தேர்தல் கள நிலவரம் தொடர்பாக நான் (யோகேந்திர யாதவ்) தயாரித்திருந்த அறிக்கையை, நிகழ்ச்சி தயாரிப்புக்கு முன்னால் படிக்கத் தவறிவிட்டதாக வெளிப்படையாக அனைவர் முன்னாலும் ஒப்புக்கொண்டார். இதை ஒரு நிறுவன அதிபர், ஊடக ஆசிரியர், ஒரு கல்விப்புலத் தலைவர் இவ்வளவு பகிரங்கமாகச் செய்வார் என்று என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.
மேட்டுக்குடி, ஜனநாயக கேடயம்
ராதிகாவும் பிரணாயும் ஒவ்வொரு விதத்திலும் தனித்த ஆளுமை உள்ளவர்கள். செய்திச் சேனலின் முகமாகவும் குரலாகவும் பிரணாய் இருக்கிறார் என்றால், அந்நிறுவனத்தின் மூளையாகவும் உயிர்ப்பாகவும் செயல்படுகிறவர் ராதிகா. ராதிகா நிறுவன நிர்வாகத்தில் மிகவும் கறாராக இருப்பார். இந்திய நிறுவனங்கள் பலவற்றில் இது இல்லை. என்டிடிவி நிறுவனம் மிகச் சிறந்த ஆசிரியர் குழுவையும் மரபையும் கொண்டிருப்பதுடன் உயர் தயாரிப்பு விழுமியங்களையும் கொண்டது. செய்திகளோடு புகைப்படங்கள், வரைபடங்கள், ஓவியங்கள், காணொலிகள் என்று எல்லா விதங்களிலும் விளக்குவது அவசியம் என்பதை முதலில் உணர்த்திய சில நிறுவனங்களில் என்டிடிவியும் ஒன்று.
என்டிடிவி நிறுவனத்தில்தான் கேமராவைக் கையாள்வது முதல், தயாரிப்பில் ஈடுபடுவது வரை அனைத்துமே பெண்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்திய ஊடகங்களில் ஆணாதிக்கமே அதிகம் இருக்கும்போது இது அபூர்வமான சாதனை என்றே பாராட்டப்பட வேண்டும். ஊடகத்தின் ஆசிரியர் குழுவினர் மட்டுமல்ல இதர பணியாளர்களின் வேலைத் திறமையும் அர்ப்பணிப்பும் மிகவும் பாராட்டுக்குரியன. இதையெல்லாம் அவர்கள் தங்களுடைய நிறுவனத்துக்கான பெருமை என்றே மகிழ்ச்சியுடன் செய்கின்றனர். அவர்களுடைய வாகன ஓட்டிகள் சாலைகளில் விதிகளை மீறுவதில்லை, சமநிலையை இழப்பதில்லை. அலுவலக உதவியாளர் மரியாதை தருவார், அதேசமயம் கூழைக் கும்பிடு போட மாட்டார். துப்புரவுப் பணியாளர்கள் எப்போதும் தூய ஆடையிலேயே இருப்பார்கள், அவர்களை மற்றவர்கள் கண்ணியமாகவே நடத்துவார்கள்.
ஆம், என்டிடிவி மேட்டுக்குடிகளுடையது, ஆங்கிலமயப்படுத்தப்பட்டது, இந்தியாவின் முக்கியப் பிரமுகர்கள் வீட்டுப் பிள்ளைகள் ஏதாவது ஒரு பொறுப்பில் அங்கு வேலை செய்கின்றனர். அவர்களுடன்தான் நானும் ரவீஷும்கூட பணியாற்றினோம். சில வேளைகளில் அவர்களுடைய நடவடிக்கைகளை வேடிக்கை பார்ப்போம், சில நேரங்களில் சீறுவதும் உண்டு. மேட்டுக்குடிகள் என்பதால் தாங்கள் செய்வதை அப்படியே ஏற்க வேண்டும் என்று எண்ணாமல், மிகச் சிறந்த நாகரிகத்தின் அடையாளமாக - பொறுப்பாகவே செயல்பட்டனர். குடும்பப் பின்னணி மட்டுமே தகுதியாக இல்லாமல், தொழில் திறன்தான் தகுதி என்பதை நிரூபித்தனர்.
தங்களுடைய முன்னோர்கள் உருவாக்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் கடமை தனக்கு இருக்கிறது என்று அதைக் காக்கத் துணிந்த மேட்டுக்குடியின் நிறுவனம்தான் என்டிடிவி. ஜனநாயக – மதச்சார்பற்ற இந்தியாவைக் காக்க எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும் மக்களின் நிறுவனம் அது. புதியவர்களின் (ஏஎன்டிடிவி) நிர்வாகத்தில் இந்தப் பாரம்பரியங்கள் அனைத்தும் அப்படியே தொடருமா? இந்தக் கேள்வியை இப்போது கேட்பதுகூட தகுமா?
தமிழில்: வ.ரங்காசாரி
6
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
அ.பி 2 years ago
அவர்கள் இருவரும் வேறு ஒரு புது தொலைக்காட்சி சேனல் ஒன்று நிறுவலாம்... Let's see.. நல்ல கட்டுரை.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.