கட்டுரை, அரசியல், கலாச்சாரம், சமஸ் கட்டுரை, சமஸ் 5 நிமிட வாசிப்பு
பிகே: மோடி மேக்கர்
ஒரு புதிய பயணத்துக்கான முஸ்தீபுகளுடன் நடந்து முடிந்த உதய்பூர் காங்கிரஸ் மாநாடு பெரிய முடிவுகள் எதையும் அறிவிக்காமல் கலைந்திருப்பது பலரிடமும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. வெளிவந்திருக்கும் விமர்சனங்களில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடையதும் அடக்கம். முன்னதாக பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸுக்கு பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த திட்டத்தை காங்கிரஸ் ஏற்காததன் பின்னணியோடும் இணைத்து இப்போது ராகுல் காந்தியை அரசியல் விமர்சகர்கள் அர்ச்சிப்பதைப் பார்க்க முடிகிறது.
இந்தியாவைக் கிட்டத்தட்ட ஒரு கட்சி ஆட்சிமுறைக்கு பாஜக கொண்டுசெல்லும் அளவுக்கு காங்கிரஸைப் பலவீனமாக்கியதற்கு ராகுல் காந்தி எல்லா வகை விமர்சனங்களுக்கும் உரியவர்தான். அதிலும் இந்தியாவின் போக்கையே பாரதூரமாக மாற்றிவிடும் வல்லமை மிக்கதாகக் கருதப்படும் 2024 பொதுத் தேர்தலுக்கு இன்னமும்கூட நம்பிக்கையூட்டும் விதத்தில் கட்சியைத் தயார்படுத்தவில்லை என்று ராகுல் காந்தி மீது தாராளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆற்றாமையிலும் கோபத்திலும் உள்ள நியாயத்தை யாரும் புறந்தள்ள முடியாது. அதேசமயம், பிரசாந்த் கிஷோர் செயல் திட்டத்தை காங்கிரஸ் ஏற்காமல் போக ராகுல் காந்திதான் காரணம் என்றால், இந்த விஷயத்துக்காக அவர் பாராட்டப்பட வேண்டியவர் ஆகிறார்.
வரலாற்றில் சில பிரபலமான மனிதர்கள் ஆச்சர்யமான இடங்களில் பிரவேசிப்பதும் மர்மான இடங்களில் பயணிப்பதும் எப்போதும் நடக்கக் கூடியது. மோடியின் ஆள் என்று நான் பிரசாந்த் கிஷோரைக் குற்றஞ்சாட்ட மாட்டேன். ஒருவேளை அவரே சொல்கிறபடி, மோடியின் பாஜகவை ஆட்சியிலிருந்து இறக்குவதில் - எதிர்கட்சித் தலைவர்கள் பலரைவிடவும் - தீவிரமான அக்கறையைக்கூட பிரசாந்த் கிஷோர் கொண்டிருக்கலாம். முரண்பாடு என்னவென்றால், ஆச்சரியமூட்டும் வகையில் வேறு எவரையும்விட மோடியின் அரசியலை இந்தியாவெங்கும் பரப்பியவர் பிரசாந்த் கிஷோர். ஓர் அரசியல் கட்சியாக தங்களுக்கென்று தனிக் கட்டமைப்பையும் தனிக் கலாச்சாரத்தையும் வளர்த்தெடுத்திருக்கும் பாஜகவின் எதிரிக் கட்சிகளிடமும்கூட மோடியின் அரசியல் கலாச்சாரத்தைக் கொண்டுசென்றவர் அவர்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
எண்களின் அதிகாரம்
எப்போதுமே எண்கள் உண்மையைக் காட்டிலும் அதிகாரத்தை அதிகம் கொண்டிருக்கின்றன. அதுவும் இந்தியா போன்று பல்வேறு இனக் குழுக்களும், நிலப் பண்புகளும் நிறைந்த ஒரு சமூகத்தில் எண்கள் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. அதனாலயே எண்களின் மீது அரசியலர்கள் பெரும் பிரேமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரேமையின் மீதுதான் பிரசாந்த் கிஷோரின் சூதாட்டம் நடக்கிறது.
உண்மை. ஒரு பேட்டியில் காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் சொன்னபடி, காங்கிரஸிடமே இல்லாத அக்கட்சித் தொடர்பான பயனுள்ள தரவுகளை காங்கிரஸுக்கு பிரசாந்த் கிஷோர் திரட்டித் தந்திருக்கலாம். ஓர் அரசியல் கட்சி தன்னை மறு ஆய்வுக்கு உள்ளாக்கிக்கொள்ளவும் தன்னுடைய பார்வையை விசாலப்படுத்திக்கொள்ளவும் இப்படியான தரவுகள் அவசியம். தரவுகளின் முக்கியத்துவத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை. சொல்லப்போனால், ஒரு தேசத்தின் பணிகளைத் திட்டமிடுவதில் தரவுகளும் கணக்குகளும் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அரசியல் கட்சிகள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தன் போக்கைச் செம்மைப்படுத்திக்கொள்ள இது முக்கியம் என்று நினைக்கிறேன். நம் இந்தியச் சூழலில் இதை மஹலநோபிஸிஸம் (mahalanobis) என்றுகூட சொல்லலாம்.
முக்கியமான நான்கு புள்ளிகள்
பிரசாந்த் கிஷோர் இப்போது காங்கிரஸுக்குக் கொடுத்திருக்கும் செயல்திட்டத்தின் முழு விவரங்களும் நமக்குத் தெரியாது. சென்ற ஆண்டின் இறுதியில் அவர் கொடுத்த பேட்டியில் தெரிவித்த விவரங்களே காங்கிரஸை மறுசீரமைக்கவும் அதனுடைய வியூகப் பார்வையை உருமாற்றிக்கொள்ளவும் போதுமானவையாக இருந்தன. அந்தப் பேட்டியில் அவர் சொல்லிருந்த நான்கு விஷயங்கள் மிக முக்கியமானவை.
* சென்ற பத்தாண்டுகளில் நடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தேர்தல்களில் 90% காங்கிரஸ் தோற்றிருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு (strike rate) வெறும் 4%. முன்னதாக 2014 தேர்தலில் இது 6% ஆக இருந்தது. அதாவது, பாஜகவை நேரடியாக காங்கிரஸ் எதிர்கொள்ளும் ஒவ்வொரு 100 தொகுதிகளிலும் 4 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் நிலையில் காங்கிரஸ் இருக்கிறது. அது மக்களவையில் இப்போது பெற்றிருக்கும் 50+ இடங்களும்கூட தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் போன்று பாஜகவை அது நேரடியாக எதிர்கொள்ளாத இடங்களிலிருந்தே வந்தது. ஆக, பாஜகவை எதிர்கொள்ளும் பிரதான சக்தியாக காங்கிரஸ் இருக்கிறது என்றாலும், பாஜகவை வெல்லும் சக்தியாக இன்று அது இல்லை.
* காங்கிரஸின் இந்தச் சரிவுப் போக்கானது இன்று ஆரம்பமானது இல்லை. அது கடைசியாகத் தனிப் பெரும் கட்சியாக வென்றது 1984 தேர்தல் (அப்போது 404 தொகுதிகளை அது வென்றிருந்தது). இதற்குப் பிந்தைய இந்த நான்கு தசாப்தங்களில், இடையில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும்கூட அதன் பெரிய வெற்றி 2009 மக்களவைத் தேர்தலில் பெற்றதே ஆகும் (அப்போது அது 206 தொகுதிகளை வென்றது). ஆக, சரிவு தொடர் கதை.
* இப்படி தேர்தல் வெற்றியில் பெரிய சரிவு ஏற்பட்டாலும்கூட மூன்று தசாப்தங்களில் பிரதான அரசியல் சக்தியாக காங்கிரஸ் நீடித்ததற்குக் காரணம், வாக்கு வங்கியில் சுமார் 30% பங்கு அதன் கையில் இருந்ததே ஆகும். காத்திரமான இத்தகைய வாங்கு வங்கியை வைத்திருக்கும் ஒரு கட்சியானது தேர்தல் தோல்விகளுக்கு அப்பாற்பட்டு அரசியலிலும் சமூகத்திலும் தன் செல்வாக்கைச் செலுத்தவே செய்யும். இப்போது காங்கிரஸின் பங்கு இன்றைக்கு 19% ஆகக் குறைந்துவிட்டது. இன்றைக்கு பாஜக 40% பங்கைக் களத்தில் வைத்திருக்கிறது என்றால், மிச்சமுள்ள 60% பங்கில் 40% காங்கிரஸால் கைப்பற்றப்பட வேண்டும். ஆனால், அந்த 40% மாநிலக் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளிடம் இருக்கிறது. ஆக, பாஜகவை வெல்ல வேண்டுமானால் காங்கிரஸ் தன்னுடைய இன்றைய வாக்கு பலத்தை இரண்டு மடங்கு ஆக்க வேண்டும்.
* எப்படித் தேர்தல் வெற்றி - தோல்விகளுக்கு அப்பாற்பட்டு 30% வாக்கு பங்கைத் தன் வசம் வைத்திருந்ததால், மூன்று தசாப்தங்கள் காங்கிரஸ் இந்திய அரசியலில் தீர்மான சக்தியாக விளங்கியதோ, அதுபோலவே இன்று 40% பங்கை வைத்திருக்கும் பாஜகவானது அடுத்த கால் நூற்றாண்டுக் காலத்துக்கேனும் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்.
நோயறிதலும் சிகிச்சையும்
பிரசாந்த் கிஷோரின் இந்தத் தரவுகள் காங்கிரஸ் எதிர்கொள்ளும் நோயைத் துல்லியமாகவே அடையாளப்படுத்துகின்றன. ஒரு கட்சியாக காங்கிரஸ் செயல்பட வேண்டிய காலம் அல்ல இது. பாஜக அல்லாத உதிரிகளின் குடையாக தன்னை அது உருமாற்றிக்கொள்ள வேண்டும். ஆட்சியமைக்கும் வாய்ப்பு இல்லாத மாநிலங்களில் எல்லாம்கூட மாநிலக் கட்சிகளுடன் முண்டா தட்டுவதை நிறுத்திவிட்டு, தன்னுடைய பிரதான எதிரியையும் டெல்லியையும் நோக்கித் தன் முழுக் கவனத்தையும் திருப்பிக்கொண்டு மாநிலக் கட்சிகளுடன் அணி கோத்து நிற்க வேண்டும். தேர்தல் களத்தில் இது உடனடி விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்.
பாஜகவை ஒட்டுமொத்த பண்பாட்டு, அரசியல் தளத்திலும் வீழ்த்துவதென்பது ஒரு நெடும் பயணம். மேலே ஒரு புதிய கதையாடலை உருவாக்க வேண்டும்; கீழே மக்களிடத்தில் அன்றாடம் நேரடியாகப் பயணிக்க வேண்டும்; பல்லாண்டுகளுக்கான செயல்திட்டமாக இதை வகுத்துக்கொண்டு பண்பாட்டுத் தளத்தில் காங்கிரஸ் பணியாற்ற வேண்டும். முக்கியமாக, ஒரு புதிய கூட்டாட்சிக்கான கதையாடலை அது உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
பிரசாந்த் கிஷோரின் பிரச்சினை என்னவென்றால், ஒரு தேர்ந்த லேப் டெக்னீஷியன் ஆக நோயாளியின் நோய்க் கூறுகளை அவர் அடையாளப்படுத்துகிறார். ஆனால், சிகிச்சைகளை யோசிக்க வேண்டிய மருத்துவரின் இடத்தையும் அவரே அபகரித்துக்கொள்கிறார். அரசியல் தலைமைகளின் மண்டையை ஆக்கிரமித்துக்கொள்கிறார்.
பாஜகவுக்கு மட்டுமல்லாது நிதிஷ் குமார், அம்ரீந்தர் சிங், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் என்று பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ இதுவரை தேர்தல் உத்திகளை வகுத்துக்கொடுத்திருக்கும் அத்தனை கட்சிகளுக்குமான மாதிரிகளையும் பரிசீலித்தால், அவை எல்லாமே ஒரே பண்பைக் கொண்டிருப்பது புரியவரும். அந்தப் பண்பு, தான் ஆலோசனைக் கொடுக்கும் ஒவ்வொரு கட்சியின் தலைவரையும் மோடியாக உருமாற்றுவதுதான்.
சுயத்தை இழக்கும் கட்சிகள்
ஒவ்வொரு கட்சிக்கும் அதன் கட்டமைப்பு சார்ந்து ஒரு பிரத்யேக பலம் இருக்கும். கடந்த காலத்தில் பாஜக அப்படி பெற்றிருந்த பலம் அதன் அதிகாரப் பகிர்வு. காங்கிரஸை ஒப்பிட ஒட்டுமொத்த அதிகாரத்தையும் ஒரு தலைவரிடம் குவிப்பதற்குப் பதிலாக தேசிய அளவில் சில தலைவர்களும் மாநில அளவில் சில தலைவர்களும் என்று அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்ட கட்சியாகவே பாஜக இருந்தது.
வாஜ்பாய் போன்ற சக்தி வாய்ந்த ஒரு தலைவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான் அவருடன் பல விஷயங்களில் கருத்து வேறுபடும் தலைவராக அத்வானியும் அதே கட்சியில் அதிகாரத்தோடு இருந்தார். முரளி மனோகர் ஜோஷி தொடங்கி பிரமோத் மகாஜன் வரை ஓர் அதிகார வரிசை இருந்தது. ஒட்டுமொத்தக் கட்சியையும் தன் ஒரு கையில் அடக்கிவிடும் வல்லமையோடு பின்னணியில் ஆர்எஸ்எஸ் எனும் சக்தி எப்போதும் இருப்பது தனிக் கதை. ஆனால், மாநிலத் தலைவர்கள் வரை அதிகாரத்தோடு இருந்தனர். அதனால்தான் பிரதமராக இருந்த வாஜ்பாய் அழுத்தத்தையும் தாண்டி முதல்வராக இருந்த மோடியால் தன் போட்டியாளரான ஹரேன் பாண்டியாவுக்கு தேர்தல் வாய்ப்பை மறுக்க முடிந்தது.
இன்றைக்கு பாஜகவின் உயரத்தை மோடி நிறைய விஸ்தரித்திருக்கலாம். ஆனால், பாஜகவின் பிரத்யேக பலமான அதிகாரப் பரவல் தன்மையைக் குலைத்து, அதிகாரம் மையப்படுத்தப்பட்ட கட்சியாக அதைக் குறுக்கிவிட்டார். மோடியை எதிர்த்து மோடிகளை உருவாக்கும் கோதாவில் பிரசாந்த் கிஷோர் அவர் பங்களிக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் இன்றைய பாஜகவின் பண்பையே தொற்றிவிடுகிறார். பலரும் கவனிக்காத மிக அபாயகரமான தொற்று இது - அரசியல் கட்சிகளின் அதிகாரம் மையப்படுவது. இந்திய அரசையும், அரசாங்க அமைப்புகளையும், அவற்றின் செயல்பாட்டு பண்பையும் மோடி மையப்படுத்துகிறார் என்றால், அரசியல் கட்சிகளும், அவற்றின் செயல்பாட்டு பண்பும் மையப்பட பிரசாந்த் கிஷோர் வழிவகுக்கிறார்.
மிக முக்கியமான பிரச்சினை என்னவென்றால், நிறைய எண்கள் புழங்கினாலும் அரசியலில் ஒரு கட்சிக்கும் மக்களுக்குமான உறவு வேதியலை அடிப்படையாகக் கொண்டது. பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் முழுமையாக இந்த உறவைக் கணிதமாக்கிவிடுகிறார்கள். அப்படியாகும்போது ஒரு நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட அரசியல் தலைவர்கள் கணக்குகளைத் தாண்டி சிந்திக்க முடியாத வரையறைக்குள் சிக்குகிறார்கள். ஏற்கனவே ஒவ்வொரு தொகுதியும் சாதிரீதியாகவும் மதரீதியாகவும் பெரும்பான்மைவயப்பட்ட இந்திய அரசியல் களம் மேலும் கெட்டிப்படவும் பிளவுபடவுமே இத்தகு அரசியல் வழிவகுக்கும். புதிய தலைவர்கள் உருவெடுப்பதைத் தடுக்கும்.
பாஜகவை வெல்ல வேண்டுமானால், காங்கிரஸ் இன்று தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை ஒவ்வொரு விதத்திலும் அதற்கு மாற்றான பண்பை வரித்துக்கொள்வதுதான். பாஜக ஒற்றையாட்சியின் திசையில் சென்றால், காங்கிரஸ் மிகத் தீவிரமாக கூட்டாட்சியின் திசையில் செல்ல வேண்டும். பாஜக அதிகாரத்தை மையப்படுத்தி பிரமீடு கட்டமைப்பை உருவாக்கும் திசையைத் தேர்தெடுத்தால் காங்கிரஸ் எதிரே தலைகீழ் பிரமீடு கட்டமைக்கும் திசையைத் தேர்தெடுக்க வேண்டும். முக்கியமாக, வெற்றியோ தோல்வியோ இன்னொரு மோடியாக ராகுல் ஆக வேண்டியது இல்லை!
- முன்னதாக, 03.06.2022 அன்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் இக்கட்டுரை வெளியானது.
6
3
1
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
S.SELVARAJ 2 years ago
பிரசாந்த் கிஷோர் போன்றோர் மிகவும் ஆபத்தானவர்கள். ஜனநாயகத் தன்மையை சீர்குலைப்பவர்கள். மக்கள் மனதில் ஒரு கருத்தை வலிந்து திணிப்பதையும், பிம்பங்களைக் கட்டமைப்பதையும் ஒரு வியபாரமாகவே மாற்றிவிட்டார். ஒரு அரசியல் கொள்கையும் இல்லாமல் காசுக்காக எதையும், யாருக்காகவும் செய்திடும் இவரைப் போன்றவர்களை ஆதரிப்பது மிகப் பெரிய தவறு. இன்றைக்கு ப பணியமர்த்தும் அரசியல் கட்சிகள் நாளை அதற்கான விலையை கொடுக்க நேரிடும். மேலும் மோடியைப் பற்றி எப்படி ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டதோ அப்படியே இராகுல் பற்றிய 'பப்பு' என்கிற பிம்பமும் கட்டமைக்கப்பட்டது. கூடுதலாக இராகுலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் அது எதிரொலித்தது ஒரு பின்னடைவே. எப்படியாயினும் இன்று காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற மாநிலக் கட்சிகளை அனுசரித்துப் போவதும், சொந்தக் கட்சிக்குள் இளைஞர்களை பொறுப்புக்குக் கொண்டு வருவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதும் காங்கிரசின் உடனடிப் பணி. இதற்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Raja 2 years ago
மிக தெளிவான அலசல். அரசியல் கட்சிகள் இது போன்ற அரசியல் வியாபாரிகளை புறக்கணிக்க வேண்டுவதன் அவசியத்தை விளக்கி சொல்லி இருக்கிறார். பிரஷாந்த் கிஷோர் கட்டமைக்க விரும்புவது மோடி போன்ற பிம்பங்களை தான் என்ற கோணம் வியப்பு அளித்தது. ஆனால் சரியான பார்வை அதுதான். இன்றைக்கு மோடி சரியான தலைவராகவே ஒரு கணக்கில் வைத்தாலும் இது போன்ற பிம்ப அரசியல், ஒற்றை தலைமை ஆபத்தானது. வட கொரியா போன்ற நிலைமைக்கு இது எடுத்து செல்லும் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள்.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
அ.பி 2 years ago
முதலில் prasanth Kishore போன்ற நபரை தடை விதிக்க வேண்டும்.. ஜனநாயகத்தை கொன்று குறுக்கு வழியில் பதவிக்கு வர உதவும் ஏஜன்சிகளை EC தடை விதிக்க வேண்டும். Pk செய்த மிக பெரிய பாவம் மோடியை பதவிக்கு வர உதவி செய்தது. இவன் செய்த காரியம் இன்று ஜனநாயகம் உருக்குலைந்த நிலையில் உள்ளது. தமிழகத்தில் dmk இவனை நம்பி election ஐ சந்தித்தது ஸ்டாலினுக்கு இழுக்கு... பணம் கொடுத்து வெற்றி பெற்ற காலம் போய், இவனை (pk) போன்ற நபர்களை கொண்டு வெற்றி பெறுபவர்கள் மோடியை போலவே இருக்கிறார்கள்..
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
JEYA VEERA DEVAN 2 years ago
நீங்கள் குறிப்பிடும் மூன்று மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களில் உயர் சாதி இந்துக்களின் தலைமையைத் தாண்டி காங்கிரசுக்கு குறிப்பிடத்தக்க பிற்படுத்தப்பட்ட,, தாழ்த்தப்பட்ட சமூக அரசியல் தலைமையை உருவாக்க முடியவில்லை மிகப் பெரிய பின்னடைவு. இன்றைய பாஜகவின் குறிப்பிடத்தக்க மூத்த உறுப்பினர்களில் பெரும்பாலோர் முன்னால் இன்னால் காங்கிரஸ் பின்புலம் கொண்டவர்கள். தமிழக பிற்படுத்தப்பட்ட சாதிகளின் உளவியலே, இந்திய உயர் சாதி இந்துக்களின் உளவியலாக உள்ளது. தத்துவம் முக்கியமல்ல. அதிகாரம் தான் முக்கியம் என்னும் மனநிலை. யார் ஆட்சி செய்தாலும் கட்சிகள் பலவாக இருந்தாலும் சாதிக்குள் பொருளாதார நலன்களை பகிர்ந்து கொள்வது. இந்த மனநிலை ஜனநாயகத்தின் முதுகெலும்பை முறித்து விடும். இதை தடுக்க வேண்டுமெனில் கட்சியின் செயல்பாட்டை விரிவுபடுத்தி, புதிய சமூக ஜனநாயக சக்திகளுக்கு அதிகாத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும். இதுவரை விளிம்பில் உள்ளவர்களை மையத்தை நோக்கி அழைத்து வர வேண்டும்.
Reply 6 0
Login / Create an account to add a comment / reply.