கட்டுரை, வாழ்வியல், வேலையும் வாழ்வும் 9 நிமிட வாசிப்பு

வேலையில் ஜொலிப்பது எப்படி?

ஸ்ரீதர் சுப்ரமணியம்
26 Feb 2022, 5:00 am
1

நமது வேலையில் அல்லது கேரியரில் நாம் வெற்றி பெறுவது பெரும்பாலும் நமது வேலைத் திறனைப் பொருத்ததுதான். நீங்கள் ஒரு கணினி புரோகிராமராக இருந்தால் உங்கள் புரோக்ராமிங் திறமையில் விஷயம் இருக்கிறது. நீங்கள் ஒரு நிருபராக இருந்தால் நீங்கள் பேட்டி எடுக்கும் திறன், கேள்விகளைத் தயாரிக்கும் திறன், செய்திகளை உண்மையுடன் மற்றும் சுவாரஸ்யத்துடன் வழங்கும் திறன் இவற்றைப் பொருத்து இருக்கிறது. இப்படி ஒவ்வொரு வேலையிலும் அதைச் செய்வதற்கான மையத்திறன் அவசியமாக இருக்கிறது.

ஆனால், அது மட்டுமே போதுமா என்றால், பதில் ‘இல்லை’ என்றுதான் வரும். நீங்கள் திமிர் பிடித்தவராக, சக ஊழியர்களைக் கேவலமாக நடத்துபவராக, சாதிவெறியராக இப்படி எல்லாம் இருந்து, ஆனால் வேலையில் அதீதத் திறன் கொண்டவராக இருந்தால் என்ன ஆகும்? அப்படி இருந்தால் உங்கள் திறமையைக் கொண்டு சில காலம் வெற்றிகரமாக உலா வரலாம். ஆனால், விரைவிலேயே உங்கள் நிறுவனம் உங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை தேடிக்கொண்டுவிடும். அல்லது உங்கள் சக ஊழியர்கள் வேற்று இடத்துக்கு மாற்றிக்கொண்டு போய்விடுவார்கள்.

அப்படியானால், வேலைத் திறன்கள் தாண்டி வேறு என்னென்ன குணங்கள் நமக்குத் தேவை? இவை இருந்தால் வெற்றி பெறலாம் என்று என்னென்ன குணாதிசயங்களை நம்மால் பட்டியல் போட முடியும்?

அரவணைத்தல்

உங்களுக்கு அதீதத் திறன் இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் அதனுடன் உங்களைச் சுற்றியுள்ள சக ஊழியர்கள், உங்கள் மேலாளர், உங்கள் கீழ் பணிபுரியும் ஜூனியர்கள் போன்றோரும் உங்கள் வெற்றிக்குப் பங்களிக்கிறார்கள் என்பதைப்  புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்ல முற்பட வேண்டும். வெற்றிக்கான பங்கை முழு அணிக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். ‘நானே, நான் மட்டுமே அறுத்துத் தள்ளினேன்’ என்று உலவும் ஒருவர் இருக்கும் அணியில் மீதிப் பேர் அதிக நாள் தங்க மாட்டார்கள்.

வெற்றிகள் / தோல்விகள்

வேலையில் வெற்றிகள் மட்டுமே வரும், வர வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் மிகவும் மன அழுத்தத்துடன் வேலை செய்ய நேரிடும். வெற்றியை நோக்கித்தான் நமது முயற்சிகள் இருக்க வேண்டும் எனினும் தோல்விகளும் கூடவே வரும். அதையும் துணிவுடன் எதிர்கொள்ளுதல் வேண்டும். சரி, முந்தைய பத்தியில் வெற்றியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தோல்விகளையும் பங்கு போட்டுக்கொள்ளலாமா என்று கேட்கலாம். தோல்விக்கான காரணத்தை அறிந்துகொள்ள முயல வேண்டும். அது அணியில் யாராவது சொதப்பியதா, அல்லது நிறுவனத்தின் மேலாண்மைக் குளறுபடியால் விளைந்த தோல்வியா என்று அறிதல் முக்கியம். ஆனால், அது தெரியும் வரை அணித் தலைவர்தான் பொறுப்பு. இங்கே பொறுப்பைப் பகிர்ந்து அளித்துவிட்டு தப்பிக்க முயற்சிப்பது தவறு.

இலக்கு அல்ல, பயணம்தான் நோக்கம்

சிலரைப் பார்த்திருப்போம். ஒரு வேலையில் இறுதி இலக்கு மட்டுமே நோக்கம் என்று பணிபுரிவார்கள். அந்த இலக்கை எட்டிய உடன் பெரிதாகக் கொண்டாடுவார்கள். ஆனால் அந்த இலக்கை அடையும் நாள் வரை பெரும் மன உளைச்சலில் ஆழந்திருப்பார்கள். கோபதாபத்துடன்தான் வேலையையும் சக ஊழியர்களை அணுகுவார்கள்.

இலக்கை அடையும் நாள் ஒரே நாள்தான். ஆனால், அதற்கான பயணம் பல வாரங்கள் மாதங்கள் பிடிக்கும். அந்த நாட்களையும் கொண்டாடிக்கொண்டே வாருங்கள். அந்த இறுதி இலக்கைத் துண்டுதுண்டாக குறு இலக்குகளாக உடைத்து அந்த ஒவ்வொரு குறு இலக்குகளை அடையும்போதும் சக ஊழியர்களுடன் கொண்டாடுங்கள். இலக்கை விட்டுவிட்டு பயணத்தை அனுபவிக்க அவர்களுக்கும் சொல்லிக்கொடுங்கள். ஒவ்வொரு வேலை தினமும் மகிழ்ச்சியாக சாதனை நிறைந்ததாக மாறும்.

எனக்கேன் நடக்கிறது?

வழக்கமாக, கடுமையான நோய்ப் பாதிப்புக்கு உள்ளானவர்களும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும் கேட்கும் கேள்வி இது: ‘கடவுளே எனக்கு ஏன் இதெல்லாம் நடக்கிறது?’

அப்படிப்பட்ட அதீத விஷயங்களில் அப்படிக் கேட்டால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பலர் அலுவலகத்தில் தினமுமே இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டுக்கொள்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய துயரம்!

ஒரு ப்ராஜக்ட்டில் பின்னடைவு வந்தால், மேனேஜர் தொந்தரவு செய்தால், ப்ரமோஷன் தவறிப்போனால், இதற்கெல்லாம்கூட இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்புகிறார்கள். இது அநாவசியமான கேள்வி. இதற்கெல்லாம் நீங்கள் கடவுளைத் தொல்லைசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. நன்கு ஆராய்ந்து பார்த்தால் உங்களுக்கே விடை கிடைக்கும். அதற்கான தீர்வையும் நீங்களே கண்டுபிடிக்கலாம். காரணம், பெரும்பாலும் பிரச்சினை உங்களிடமே இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேற்படி கேள்வியைக் கேட்டால் பொறுப்பை உங்களிடம் இருந்து கடவுளுக்கு மாற்றுகிறீர்கள் என்று அர்த்தம். அது எதற்கும் பயன்படப்போவதில்லை.

கற்க கசடற

சுமார் நாற்பது வயதாகிவிட்டால் நம்மில் பலர் உலகத்தையே புரிந்துகொண்டுவிட்டதுபோல நடந்துகொள்கிறோம். இதற்கு மேல் தெரிந்துகொள்ள நமக்கு ஒன்றுமே இல்லை, என்ற ரேஞ்சுக்கு ஆபீஸில் நடைபோடுகிறோம். ஆனால், பாருங்கள். போன வருடம் கல்லூரி முடித்து நிறுவனத்தில் சேர்ந்த ஒரு சின்னப் பையன் நம் வேலையை பற்பல மடங்கு திறனுடன் வேகத்துடன் செய்து முடித்து நம்மை காலி பண்ணிவிடுவான். அப்போது நமது பல வருட அனுபவம் அர்த்தமற்றுவிடும்.

இதை சரி செய்ய கொஞ்சம் அடக்க ஒடுக்கம் தேவைப்படும். நமக்குத் தெரிந்தது மிகக் குறைவுதான். நமது துறை மாறிக்கொண்டும் முன்னேறிக் கொண்டும் வருகிறது என்று உணர வேண்டும். நாம் தொடர்ந்து கற்றுக்கொண்டும், மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு வந்தால்தான் பிழைக்க முடியும் என்று புரிபட வேண்டும். நேற்று சேர்ந்த பையனோ, பெண்ணோகூட நமக்குப் புதிய தொழில்நுட்பங்களை, புதிய அணுகுமுறைகளைச் சொல்லிக்கொடுக்கக் கூடும் என்று திறந்த மனதுடன் இருந்தால் நாம் தொடர்ந்து கற்றுக்கொண்டும் முன்னேறிக்கொண்டும் வரலாம். அது தவிர, அப்படிப்பட்ட அடக்க குணத்தின் காரணமாக எல்லாராலும் விரும்பப்படும் நபராகவும் மாறலாம்.

சொல் தவறாமை

ஒரு வேலையை முடிக்க கிளையண்ட்டிடம் தேதியைக் குறிப்பிடுகிறோம். அல்லது சப்ளையரிடம் அவரது டெலிவரிக்குப் பணம் கொடுக்க ஒரு தேதியைக் கொடுக்கிறோம். அந்தத் தேதியில் சரியாக அதனை முடிக்கிறோமா என்பது முக்கியம். அப்படி தேதி சொல்லும்போது அதன் நடைமுறைச் சாத்தியங்களை எல்லாம் ஆராய்ந்து தேதியை ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி சொன்ன பின் பெரும்பாலும் அந்தத் தேதியில் சொன்ன வேலையை முடித்துவிட வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களினால் சில முறை அப்படி முடிக்க இயலாமல் போகலாம். அப்போது ஓரிரு நாட்கள் முன்னமே இது வேலைக்காகாது என்று நமக்குத் தெரிந்துவிடும். அப்போது யாரிடம் வாக்குக் கொடுத்தோமோ அவர்களிடம் உடனே போய் நிலைமையை விளக்கிக் கூடுதல் தவணை வாங்க வேண்டும். தேதி தவறியதற்கு மன்னிப்பும் கோர வேண்டி இருக்கும். நாம் பாட்டுக்கு கண்டுகொள்ளாமல் இருந்து அவராக ஃபோன் போட்டு விசாரித்து நாம், ‘அய்யோ, தேதி தவறிடுச்சி சார்!’ என்று சொல்வது நமது நம்பகத்தன்மையைக் குலைக்கும். ஓரிரு முறை இதனை அவர்கள் மன்னிக்கக் கூடும். அப்புறம், ‘இந்தாள் சொல்றதை எல்லாம் தண்ணியிலதான் எழுதி வெக்கணும்!’ என்று ஆகிவிடும்.

நிலவர அறிக்கை

உங்களிடம் நிலுவையில் உள்ள ப்ராஜக்ட் அல்லது வேலைகள் பல்வேறு கட்டங்களில் இருக்கலாம். அவை குறித்து உங்கள் மேலாளருக்கு அல்லது வாடிக்கையாளருக்குத் தொடர்ந்து தெரிவிக்க வேண்டி இருக்கும். ஸ்டேட்டஸ் அப்டேட் எனப்படும் நிலவர அறிக்கையைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் அனுப்பிக் கொண்டே இருங்கள். ப்ராஜக்ட்டின் தன்மையைப் பொறுத்து வாரா வாரம் அல்லது மாதா மாதம் அனுப்பலாம். அதற்காக அழகான ஓர் அறிக்கை வடிவை உருவாக்கிக்வைத்துக்கொள்ளுங்கள்.

எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் உங்களிடம் உள்ள வேலைகளின் நிலவரத்தைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருங்கள். அதில் எந்த வேலை முடிந்துவிட்டது, எது குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் ஒழுங்காக நடந்துகொண்டிருக்கிறது, எது தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்று பச்சை, மஞ்சள், சிகப்பு என்று வண்ணங்களால் குறிப்பிட்டு தெரிவியுங்கள் (இதற்கு ஆங்கிலத்தில் RAG Status என்று சொல்வார்கள் - RAG = Red, Amber, Green).

இப்படித் தொடர்ந்து அப்டேட் கொடுத்துக்கொண்டிருப்பது உங்களின் பொறுப்பான தன்மையை பறைசாற்றும். ஆனால் அதைவிட முக்கியம் மேனேஜர் அல்லது வாடிக்கையாளருக்கு சில ப்ராஜக்ட்கள் நேரத்துக்கு முடியவில்லை என்பது முன்னரே தெரிந்துபோகும். அதற்கான மாற்று வழிகளை இணைந்து யோசிக்கக் கூடும். அப்படி இன்றி தாமதமாகத் தெரியவந்து அதில் அவர்கள் அதிர்ச்சி அடைய வேண்டி இருக்காது.

வேலையில் உதவி கோரல்

நம்மில் பலருக்கு ஒரு குணம் இருக்கிறது. நம்மிடம் ஒரு வேலையைக் கொடுத்துவிட்டால், அதை நாமே முடித்தாக வேண்டும். யாரிடமாவது உதவி கேட்டால் அது அசிங்கம் அல்லது அவர்கள் நமது திறமையை குறைத்து மதிப்பிட்டுவிடுவார்கள் என்று தோன்றலாம். இதில் உள்ள பிரச்சினை என்னவெனில் உதவி கேட்டு அதைப் பயன்படுத்தி வேலையைச் செய்திருந்தால் எந்த மன அழுத்தமும் இன்றி நேரத்துக்கு முடித்து அனுப்பி இருந்திருப்போம். ஆனால், நாமே முடித்துவிடுவோம் என்று இறங்கி வேலை சரிவர செய்யாமல் தாமதம் நிகழ்ந்து அதில் பிரச்சினையாகி மன அழுத்தமும் கூடுவதுதான் நடக்கும்.

நீங்கள் நிறுவனத்தின் எம்டியாகக்கூட இருக்கலாம். ஆனால், தேவைப்படும் விஷயத்தில் தயங்காமல் உதவி கேளுங்கள். பல நேரம் அப்படிக் கேட்பது உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கவே செய்யும்.

கடைசியாக, வேலையில் பரிமளிப்பது என்பது வேலைத்திறனைத் தாண்டியும் இப்படிப்பட்ட பற்பல குணாதிசயங்கள் மற்றும் திறந்த அணுகுமுறைகளில்தான் இருக்கிறது. வேலையில் தலைமைத்துவம் மற்றும் வேலையின் ஒழுக்கங்கள் பற்றி பல்வேறு புத்தகங்கள் கிடைக்கின்றன. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இவை குறித்து பற்பல உபயோகமான புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். கூடவே யூடியூபிலும் பல்வேறு பயிற்சி காணொலிகள் கிடைக்கின்றன. தொடர்ந்து அப்படிப்பட்ட புத்தகங்களைப் படித்தும் காணொலிகளைப் பார்த்தும் உங்களை மேம்படுத்திக்கொண்டே இருங்கள். அந்தக் கற்றல்கள் உங்கள் வேலையில் எதிரொலித்து உங்கள் மதிப்பை நிறுவனத்தில் பற்பல மடங்கு உயர்த்தி வெற்றிகளைக் கூட்டும். வாழ்த்துகள்!

(நிறைந்தது)

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.


6






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Purusothaman.R   2 years ago

நன்றி ஸ்ரீதர் சுப்ரமணியம் Sir இந்த தொடர் புத்தகமாக வர வேண்டும் எவ்வளவு சிக்கிரம் கொண்டு வர முடியுமோ அவ்வளவு சிக்கிரம் கொண்டு வாருங்கள் அண்ணா. பின் குறிப்பில சில புத்தங்கங்கள் மற்றும் விடியோ குறிப்புகள் இருக்கற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு அது உதவக் கூடும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

மண்டல் ஆணையம் இந்துத்துவ நிராகரிப்பு அல்ல!தாய்மொழிமுன்னோடி மாநிலம்ஆசை கவிதைராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைஉத்தர பிரதேசம்ஒகேனக்கல்பரிணாம வளர்ச்சிகல்வியும்ஜெயமோகன் ராஜன்குறை கிருஷ்ணன்புதிய நாடாளுமன்றம்திசுப் பரிசோதனைசேனல் ஐலண்ட்மக்கள் மொழியாக நின்றது தமிழ்: பெருமாள் முருகன் பேடமுதல் தலையங்கம்நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஜாதியும்ஊடுகொழுப்புபாபர் மசூதி பூட்டைத் திறந்தது யார்?சோழர் இன்றுஉலகக் கோப்பைமேவானிவழக்கொழிந்து போன வர்ண தர்மமும்ஏழ்மைஇறக்குமதி சுமைநவீன விமான நிலையம்பொதுப் பயண அட்டைமாநில உரிமைநிதா அம்பானி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!