வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு

எப்படி எழுதுவது வேலைக்கான விண்ணப்பக் கடிதம்?

ஸ்ரீதர் சுப்ரமணியம்
08 Jan 2022, 5:00 am
2

சில வருடங்கள் முன்பு யூகேவில் பணிபுரிந்துகொண்டிருந்த என் மேலாளரிடம் நண்பர் ஒருவருக்காக வேலைக்குக் கேட்டிருந்தேன். "அவரை பயோடேட்டா அனுப்பச் சொல்லு" என்று கேட்டிருந்தார். நானும் நண்பரிடம் மின்னஞ்சல் முகவரி கொடுத்து அனுப்பச் சொன்னேன். அவர் அனுப்பியும் வைத்திருந்தார். ஆனால் என் மேலாளர் அவரை இன்டர்வியூவுக்குக்கூட அழைக்கவில்லை. பின்னர் நான் கேட்டதற்கு, "உன் நண்பர் இப்படித்தான் அவர் பயோடேட்டாவை அனுப்பி இருக்கிறார், பார்!" என்று காட்டினார். 

அந்த மின்னஞ்சல் கீழ்வருமாறு இருந்தது: 

அன்புள்ள மார்க், 

இத்துடன் என் பயோடேட்டாவை அனுப்பி இருக்கிறேன். 

நன்றியுடன் 

ராஜீவ் 

"இதுதானா தன்னைப் பற்றி அவருக்கு சொல்ல இருப்பது?" என்று என் மேலாளர் கேட்டதற்கு எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.  

தனித்துவமான பயோடேட்டா தயாரிப்பது எப்படி ஒரு முக்கியமான வேலையோ, அதைப்போலவே தனித்துவமான முகப்புக் கடிதம் எழுதுவதும் முக்கியமான ஒன்று. ஒரு வேலைக்கு விண்ணப்பிக்க உங்கள் பயோடேட்டாவை அனுப்பும்போது அந்த மின்னஞ்சலில் உங்களைப் பற்றி சுருக்கமானதொரு விவரணையை எழுத வேண்டும். சுருக்கம் முக்கியம்.

உங்களைப் பற்றி எழுதுங்கள் என்றால் சிலர், ‘நான் 1978ல் கோவை பொது மருத்துவமனையில் பிறந்தேன்' என்று ஆரம்பித்து விடுவார்கள். அந்த மின்னஞ்சல் ஒன்றரைப் பக்கத்துக்குப் போகும். அவ்வாறு இன்றி மூன்று அல்லது நான்கு பத்திகளில் உங்களைப் பற்றிய விவரணை இருக்க வேண்டும். 

அந்த விளக்கம் சுருக்கமாக மட்டுமின்றி சுவாரசியமாகவும் இருத்தல் அவசியம்.

நீங்கள் எந்தப் பள்ளியில் படித்தீர்கள், எந்த ஏரியாவில் வளர்ந்தீர்கள் போன்றவை அநாவசியம். நீங்கள் எப்பேர்ப்பட்ட திறமையாளர் என்பதுதான் முக்கியம். வேலைக்கு விண்ணப்பித்து பயோடேட்டாவை அனுப்பும்போது மின்னஞ்சலில் அந்த முகப்பு வரிகளை எழுதுங்கள். அந்த வரிகள் பின்வரும் எளிய விதிகளை பின்பற்றி இருக்குமாறு அமைத்துக்கொள்ளுங்கள். 

திறமை திறமை, திறமை:

நீங்கள் விண்ணப்பிக்கும் வேலைக்கு ஏற்றதாக உங்கள் திறன் உள்ளதா என்பது மட்டும்தான் நீங்கள் குறிப்பிட வேண்டியது. அதனைத் தெளிவாக ஓரிரு வரிகளில் எழுதுங்கள். நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை எதுவென்று உங்களுக்குத் தெரியும், அதற்கு நீங்கள் எப்படி பொருத்தமானவர் என்பதும் கூடவே தெரியும்படி அந்த வரிகள் அமைய வேண்டும். 

டெம்ப்ளேட் வேண்டாம்: 

பயோடேட்டாவுக்கு சொன்னதுதான் இதற்கும். எல்லா வேலைக்கும் ஒரே முகப்புக் கடித டெம்ப்ளேட் வேண்டாம். விண்ணப்பிக்கும் ஒவ்வொரு வேலைக்கும் பிரத்யேகமாக எழுதுங்கள். அது அந்த வேலைக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். பழைய கடிதத்தை காப்பி பேஸ்ட் செய்து அதனை வேலைக்கு ஏற்றபடி திருத்தி எழுதுகிறேன் என்றெல்லாம் முனைய வேண்டாம். வெற்றுத் திரையில் புதிதாக யோசித்து எழுதுங்கள். 

வேலையில் சேர்ந்த கற்பனை: 

எழுதும் முன்பு கண்களை ஒரு நிமிடம் மூடி நீங்கள் அந்த வேலையில் சேர்ந்தேவிட்டது போல நினைத்துக்கொள்ளுங்கள். புதிய நிறுவனத்தில் புதிய டெஸ்க்கில் உட்கார்ந்து இருக்கிறீர்கள். அப்போது உங்கள் வேலையை எப்படி அணுகுவீர்கள்? உங்கள் சிந்தனை, செயல் எல்லாம் எப்படி அமையும்? 

இப்போது  கண்ணைத் திறந்து எதிரே கணினித் திரையைப் பாருங்கள். உங்கள் சிந்தனையை எழுதத் துவங்குங்கள். 

தன்னம்பிக்கை: 

உங்கள் முகப்புக் கடிதம் என்பது வேலைக்கு உங்கள் பொருத்தத்தை விளக்குவது. எனவே, அது தன்னம்பிக்கையில் மிளிர வேண்டும். "அய்யா, சாமி வேலை குடுங்க" என்ற ரீதியில் போகக் கூடாது. 

திமிர் கூடாது:

கடிதத்தில் தன்னம்பிக்கை மிளிர வேண்டுமே தவிர முகப்புக் கடிதம் திமிர்த்தனமாக இருக்கக் கூடாது. 'இந்த ஆளுக்கு ஓவர் கொழுப்பு' என்று படிப்பவர் நினைத்துவிடக் கூடாது. சரி, நீங்கள் எழுதுவது திமிராக தொனிக்கிறதா, அல்லது தன்னம்பிக்கையில் தொனிக்கிறதா என்று எப்படி புரிந்துகொள்வது? உங்களைப் பற்றி எழுதும் போது திறமையை தைரியமாக தடைகள் இன்றி விளக்குங்கள். அதே நேரம் நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனம் பற்றி எழுதும்போது பெருத்த மரியாதை தொனிக்க எழுதுங்கள். இப்படி எழுதியதைப் படிப்பவர் அந்த வித்தியாசத்தை உணரக் கூடும். ‘இந்த நபர் தைரியமான ஆசாமிதான், அதே நேரம் மரியாதை தெரிந்தவர்’ என்ற முடிவுக்கு கடிதம் அவரைக் கொண்டுவந்துவிடும். 

வேலை பற்றிய விபரம்:

உங்கள் முகப்புக் கடிதத்தில் நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை பற்றிய விபரம் ஓரிரு வரிகள் வர வேண்டும். அதாவது நீங்கள் வேலை விவரணை ஆவணத்தை முழுவதும் படித்துவிட்டிருக்கிறீர்கள். அதில் கேட்கப்பட்ட திறன்கள் பற்றி முழுவதும் அல்லது பெருமளவு அறிந்திருக்கிறீர்கள் என்பது உங்கள் விண்ணப்பத்தைப் படிப்பவருக்குத் தெரியவைக்க வேண்டும். அப்போது உங்களைக் குறித்த மரியாதை அவருக்கு அதிகரிக்கும். 

வேலை பற்றிய ஆர்வம்: 

நீங்கள் விண்ணப்பிக்கும் வேலையில் சேருவது குறித்த உங்கள் ஆர்வம் கடிதத்தில் வெளிப்பட வேண்டும். 'இந்தப் பணியில் விரைவில் இணைந்து நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிக்க ஆவலாக இருக்கிறேன்' போன்ற வரிகள் இடம்பெற வேண்டும். இதனை சும்மா மேம்போக்காக எழுதினால் படிப்பவருக்கு நம்பிக்கை வராது. எனவே உண்மையிலேயே ஆத்மார்த்தமாக அந்த வரிகள் அமைய வேண்டும். அதாவது உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் அந்த வரிகளும் உண்மையாக வெளிப்படும். இல்லையேல் பாசாங்காக மட்டுமே படிப்பவருக்குத் தோன்றும்.

கடைசியாக இந்த ஒரு வரியை மட்டும் மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்: உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் மனிதவளத் துறை மேலாளருக்கு உங்கள் பயோடேட்டாவைத் திறந்து படிக்கலாமா வேண்டாமா என்ற முடிவை உங்கள் முகப்புக் கடிதம்தான் தீர்மானிக்கப் போகிறது. எனவே அந்தக் கடிதத்தை முடிந்த அளவு கவனத்துடனும் நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் மீதான நிஜ மரியாதையுடனும் உருவாக்குங்கள்.

வெற்றி பெறுங்கள்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.2

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Umamaheswari   2 years ago

நல்ல வழிகாட்டுதல் கட்டுரை

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

A Thiruvasagam    2 years ago

அருமையான கட்டுரை. மிக சிறப்பு

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

ராக்கெட் குண்டுகள்இந்திய பிரதமர்கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டிஜெ.பிரசாந்த் பெருமாள் கட்டுரைபேரழிவுகிரெகொரி நாள்காட்டிசந்துரு கட்டுரைபற்பசைஇந்தியா டுடே கருத்தரங்கம்ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்ஜெய் ஷாகமலா ஹாரிஸ் அருஞ்சொல்தென்னாப்பிரிக்காமோடியின் செயல்திட்டம்செயற்கைக்கோள்சௌத் வெஸ் நார்த்புனிதப் போர்வீர் சங்வி கட்டுரைசமாஜ்வாதிஎனாமல்தஞ்சைசட்டப் பேரவைத் தேர்தல் 2022கணினி அறிவியல்நாடாளுமன்ற உறுப்பினர்டாக்டர் ஜீவா விருது சமஸ் பேட்டிமகாஜன் ஆணையம்சஞ்சய் மிஸ்ரா100 கோடி தடுப்பூசி சாதனைமாணவர் நலன்களக்குறுணி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!