கட்டுரை, வாழ்வியல், வேலையும் வாழ்வும் 10 நிமிட வாசிப்பு
உங்கள் தொழிலுக்கு எதிர்காலம் இருக்கிறதா?
ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு, நூறு வருடங்களுக்குப் பின்னே - சுமார் 1920 வாக்கில் - செல்லுங்கள். அப்போது வழக்கில் இருந்த தொழில்களை நினைத்துப்பாருங்கள். இன்றைய தேதியில் முக்கியமாகக் கருதப்படும் தொழில்களில் எத்தனை தொழில்கள் அப்போது வழக்கில் இருந்திருக்கின்றன என்று கணிக்க முடியுமா? கணினிப் பொறியாளர்? பயோ டெக் பொறியாளர்... மருத்துவர்... அறுவை சிகிச்சை நிபுணர்... தொலைக்காட்சி நெறியாளர்... திரைக்கதை எழுத்தாளர்... கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்... இவை எதுவுமே அப்போது இல்லை. இன்னும் ஒரு ஐம்பது வருடங்கள் பின்னே போய்ப் பார்த்தால், 1920-ல் இருந்த சில தொழில்கள்கூட 1870-ல் இருந்திருக்காது. போலவே, அப்போது முக்கியமாக இருந்த தொழில்கள் இப்போது முக்கியமாக இருக்காது. இவ்வளவு ஏன், பல தொழில்கள், திறன்கள் மொத்தமாக வழக்கொழிந்துகூட போயிருக்கின்றன.
கண்காணிப்பின் அவசியம்
இப்போது அடுத்த ஐம்பது ஆண்டுகள் தாண்டி யோசித்துப்பாருங்கள். அப்போதைய தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கும்? அப்படி வளர்ந்த நிலையில் அங்கே சமூக மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக எத்தனை தொழில்கள் தானியங்கி முறையில் அல்லது வெவ்வேறு முறைகளில் செய்யும்படி மாறிப்போயிருக்கும்? அல்லது வழக்கொழிந்தேகூட போயிருக்கும்? இன்று வழக்கத்தில் இருக்கும் எத்தனை தொழில்களுக்கு நாளை அவசியமே இல்லாமல் போகும் ஆபத்து இருக்கிறது?
இன்றைய இளைஞர்கள் - இளைஞிகள் பலருக்கு 'ஷார்ட் ஹேண்ட்' என்றால் என்ன அர்த்தம் என்றுகூட தெரிந்திருக்காது. சுமார் முப்பது, முப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட இது மிக மிகப் பிரபலமாக இருந்தது. இன்று அதற்கான தேவையே இல்லாமல் ஆகிவிட்டது. அதுபோல தொண்ணூறுகளின் மத்தி வரைகூட கேசட் ரெகார்டிங் கடைகள் தெருவுக்கு இரண்டு இருந்தன. 'காயத்ரி ஆடியோ', 'ராகதேவன் மியூசிகல்ஸ்' என்றெல்லாம் கடைகள் இருக்கும். அங்கே நீங்கள் ஒரு காலி ஒலிநாடாவை வாங்கி அதில் உங்களுக்கு பிடித்தமான பாடல்களை ரெகார்ட் செய்துகொள்ளலாம். கேசட் கடைகளுக்கு நிகராக ஃபோட்டோ ஸ்டுடியோக்கள் இருந்தன. நாம் போட்டோ எடுத்த காமிரா ஃபிலிம்மைக் கொடுத்தால் அதை டெவலப் செய்து ஃபோட்டோ ஆல்பம் போட்டு கொடுப்பார்கள். இப்போது காமிரா ஃபிலிம் வழக்கொழிந்துவிட்டது. அப்படி ஃபிலிம் தயாரித்துக்கொண்டிருந்த 'கோடக்' நிறுவனமே மஞ்சள் கடுதாசி கொடுத்துவிட்டது. இன்றைக்கு கல்யாணம், விசா அப்ளிகேஷன் போன்ற சில தேவைகள் தாண்டி நாம் ஃபோட்டோகிராபரைத் தேடுவதில்லை.
போலவே, பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு திரைப்படத்திலும் ஐந்து அல்லது ஆறு பாடல்கள் இருக்கும். அவற்றில் மூன்று பாடல்களுக்காவது, நடனம் ஆட துணை நடனக் கலைஞர்கள் தேவைப்பட்டார்கள். இப்போது படங்களில் நடனம் தேவைப்படும் பாடல்கள் குறைந்துவருகின்றன. பெரும்பாலான படங்களில் பாடல்களேகூட ஒன்றிரண்டுதான் இடம்பெறுகின்றன. இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்களில் ஹாலிவுட்போல பாடல்களே இல்லாமல் படங்கள் வெளிவரப்போகின்றன. அப்போது துணை நடனக் கலைஞர்கள் என்ன ஆவார்கள்?
இதையெல்லாம் ஏன் பேசுகிறேன்? இன்றைக்குத் தொழில்நுட்பம் மற்றும் சமூக வளர்ச்சி மாறும் வேகத்துக்கு இணையாக நமது சுய திறன் ஈடு கொடுக்கிறதா என்று பார்க்க வேண்டியது நமக்கு முக்கியமான தேவை. கடின காலத்தில் பயன்படுத்துவதற்காக வருவாயில் ஒரு பகுதியை சேமித்து வைப்பதுபோல நமது திறனையும் சோதித்துப் பார்த்து கூடுதலாக சேர்த்துக்கொண்டே வரவேண்டியது அவசியம். நமது சுய திறனுக்குச் சந்தையில் தேவை இருந்துகொண்டிருக்கிறதா, இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கும், நமது திறன் அல்லது தொழில் வழக்கொழிந்துபோகும் அபாயம் உள்ளதா என்று தொடர்ந்து பரிசோதித்துவருவது அவசியம். சரி, அதனை எப்படிச் செய்வது?
சுய பரிசோதனை
உங்கள் இப்போதைய தொழிலை சுயபரிசோதனை செய்யுங்கள். உங்கள் தொழிலுக்கான டிமாண்ட் எப்போது ஆரம்பித்தது? உலக அளவில் இந்தத் தொழில் அல்லது திறன் போகும் திசை என்ன? இந்தத் தொழிலில் பொதுவாக டிமாண்ட் குறைந்தாலும் தொடர்ந்து தாக்குப் பிடிக்கும் அளவுக்கு உங்களுக்கு இதில் திறமை இருக்கிறதா, அல்லது ஆறு போகும் திசையில் அடித்துப்போகும் கட்டைபோல நீங்களும் இந்தத் துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்தக் கேள்விகளுக்கு தெளிவான நேர்மையான பதிலை யோசியுங்கள்.
டிமாண்ட் வரைபடம்
உங்கள் துறையின் வளர்ச்சி எப்படி போய்க்கொண்டு இருக்கிறது? உதாரணத்துக்கு கம்ப்யூட்டர் கேம்ஸ் துறையை எடுத்துக்கொள்ளுங்கள். அது துவங்கியது முதல் வளர்ச்சி அதிதீவிரமாக இருந்துகொண்டிருக்கிறது. அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு அதன் ஓட்டம் அங்கிங்கே அலைபாய்ந்தாலும் வளர்ச்சி குறைவதற்கு வாய்ப்பில்லை.
ஆனால் புத்தகத் துறையின் வளர்ச்சி குறைந்துகொண்டேவருவதைப் பார்க்கலாம். மாபெரும் புத்தக நிறுவனங்கள் சில சமீப காலத்தில் மூடப்படுவதையும் பார்க்கலாம். புத்தகங்கள் சுத்தமாகவே வழக்கொழிந்துபோக வாய்ப்பில்லை எனினும் மின்-புத்தகங்கள், ஒலிப் புத்தகங்கள் என்று வேற்று தொழில்நுட்பங்களுக்கு மாறலாம். புத்தகத் துறையின் ஒட்டு மொத்த மதிப்பு முன்புபோல இல்லாமல் குறையலாம். ஒரு காலத்தில் நாடகத் துறை பெரும் பணமீட்டும் துறையாக இருந்தது. இன்றும்கூட நாடங்கள் உள்ளன எனினும் நாடகத்தை மட்டுமே நம்பி ஒருவர் வாழ்வை ஓட்ட இயலாது என்ற நிலையில்தான் உலகெங்கும் இருக்கிறது. அதுபோல புத்தகத் துறையும் ஆகலாம். எனவே, உங்கள் துறை கம்ப்யூட்டர் கேம்ஸ் வகையில் வளர்ச்சிக்கோடு உயர்கிறதா அல்லது புத்தகத் துறைபோல வளர்ச்சிக் கோடு சரிகிறதா என்று பார்த்து அப்படி இருக்கும்பட்சத்தில் மாற்று திட்டங்களை யோசிக்கத் துவங்க வேண்டும்.
தொழில்நுட்ப ஆக்கிரமிப்பு
உங்கள் துறையில் செய்யும் பெரும்பாலான வேலைகளைத் தொழில்நுட்பம் ஆக்கிரமித்துக்கொண்டு வருகிறதா என்று பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, கணினி மென்பொருள் துறையில் தரக்கட்டுப்பாடு (QA) என்பது முக்கியமான வேலை. ஆனால், சமீப காலமாக இதனை தானியங்கி மென்பொருள்கள் மூலம் செய்வதற்கு முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. அதாவது ஒரு மென்பொருளே இன்னொரு மென்பொருளை பரிசோதித்து, அதில் உள்ள பிழைகளைக் கண்டுபிடித்துச் சொல்லிவிடும். இது மேலும் மேலும் வேகம் பிடித்து இன்னும் சில ஆண்டுகளில் இதனை ஒரு ஆள் தனியாக உட்கார்ந்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற அளவுக்கு முழுமையாக தொழில்நுட்பம் ஆக்கிரமித்துவிடும் சாத்தியம் இருக்கிறது. இதுபோல உங்கள் துறையிலும் தானியங்கி அல்லது தொழில்நுட்பம் மூலம் ஆளில்லாமலேயே வேலையை செய்துமுடிக்கும் நிலை வருமா என்று பாருங்கள். இன்றைய புதிய ஆய்வுகள், துறை சார்ந்த கண்டுபிடிப்புகள் பற்றி அறிய முயலுங்கள். துறை போகும் திசையை அவை காட்டிவிடும்.
இளைய தலைமுறை பங்கேற்பு
ஒரு துறை தன்னைப் புதுப்பித்துவருகிறதா இல்லையா அல்லது வழக்கொழிந்துபோகும் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க, ஓர் எளிய பரிசோதனை இருக்கிறது. இந்தத் துறையில் புதிது புதிதாக இளைஞர்கள் இளைஞிகள் சேர்கிறார்களா என்பதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். இது அறிவியல்பூர்வ அணுகுமுறை இல்லை எனினும் டிரெண்ட் என்ன என்பதை ஓரளவுக்கு சொல்லிவிடும். நீங்கள் பணிபுரியும் துறையில் உங்களைச் சுற்றிப் பாருங்கள். பிற நிறுவனங்களில் உள்ள இதே துறையில் பணிபுரிபவர்களைப் பாருங்கள். அந்தத் துறையில் பணிபுரிபவர்களின் சராசரி வயது என்ன என்று சுமாராகக் கணக்கிட்டுப்பாருங்கள். அது 35ஐ தாண்டி இருந்தால் பிரச்சினைதான் (இது துறைகளுக்குத்தான் பொருந்தும்; பதவிகளுக்கு அல்ல. வயதாக ஆக அனுபவம் கூடித்தான் சில பெரிய பதவிகள் கைகூடும் என்பதால் மேலாண்மை பதவிகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் 40 வயதை தாண்டியவர்களாவே இருப்பார்கள்).
நிறுவன முதலீடுகள்
உங்கள் துறைக்குப் புதிய முதலீடுகள் வருகின்றனவா? புதிய கணினிகள், புதிய மேசை, நாற்காலிகள், அல்லது அலுவலகப் புதுப்பித்தல்கள் நடைபெறுகின்றனவா என்று கவனியுங்கள். பத்து வருடங்கள் முன்பு வாங்கிய நாற்காலி, மேசை மட்டுமே வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறார்களா? புதிய கணினி அல்லது வேறு கருவிகள் வாங்கும் கோரிக்கைகள் பல மாதங்களாக நிலுவையில் உள்ளனவா? இவற்றை எல்லாம் கவனியுங்கள். ஒரு துறையில் இருந்து வரும் வருவாய் அதிகரித்துக்கொண்டிருக்கும் வரை நிறுவனங்களும் அந்தத் துறை ஊழியர்களின் சௌகரியங்கள் பற்றி கவலைப்பட்டு அதனை அதிகரித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி வருவாய் அல்லது வாய்ப்பு குறைந்துவரும் வேளையில் பெரிதாகக் கவலைப்பட மாட்டார்கள்.
வேலை மாறுதல்
உங்கள் துறையில் வேலை செய்துவரும் சக ஊழியர்கள் வேறு வேலை தேடிக்கொண்டு போனால் அவர்களை நிறுத்த ஏதாவது முயற்சிகளை நிறுவனம் மேற்கொள்கிறதா? அல்லது ராஜினாமா கடிதம் கொடுத்தவுடன் உடனடியாக அதனை ஏற்றுக்கொண்டுவிடுகிறதா? அப்படி ஆட்சேபமே இன்றி ஏற்றுக்கொள்கிறது எனில் உங்கள் டிபார்ட்மெண்ட்டில் இருந்து ஆட்கள் குறைவதை அவர்கள் பெரிய பிரச்சினையாகக் கருதவில்லை என்று அர்த்தம்.
நிற்க, இப்படி முடிவுக்கு வருவதற்கு முன்னர் நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்: இப்படி நடந்துகொள்வது உங்கள் துறையில் மட்டும்தானா அல்லது எல்லா துறைகளிலும் வேலையைவிட்டு நீங்குபவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால் பிரச்சினை உங்கள் துறையில் இல்லை. மாறாக கம்பெனியே சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம். எனவே அந்த ஒரு விஷயத்தை முதலில் தள்ளுபடிசெய்துவிட்டு பின்னரே இதை வைத்து உங்கள் துறையின் எதிர்கால சாத்தியக்கூறுகளை ஆராய முடியும்.
இவையெல்லாம் சில யோசனைகள்தான். உங்கள் துறையைப் பற்றிப் புரிந்துகொள்ள பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இப்படியெல்லாம் செய்துதான் ஆக வேண்டுமா என்று நீங்கள் ஆயாசப்படக் கூடும். 1800-க்கு முன்பு வரை ஒருவர் தான் தேர்ந்தெடுத்த தொழிலில் அல்லது துறையில் வாழ்நாள் முழுவதும் பெரிய கவலைகள் இன்றி தொடர்ந்து இயங்க முடிந்தது. அதற்குக் காரணம் தொழில்நுட்பம் பெரிய அளவு மாறுதல்களை அடையவில்லை. ஆனால், கடந்த நூறு ஆண்டுகளாக தொழில்நுட்பம் பல்வேறு மாறுதல்களை அதிரடியாக கொண்டுவந்து இறக்கிக்கொண்டிருக்கிறது. பழைய நியமங்கள் மாறுகின்றன, அழிபடுகின்றன. புதிய நியமங்கள் குறுகிய கால இடைவெளியில் உருவாகின்றன. இந்த மாறுதல் அலைகளில் நமது வாழ்வும் தொழிலும் அடித்துக்கொண்டு போய்விடலாம். அப்படி நடக்காமல் தடுக்க இந்த அலை போகும் திசையைத் தொடர்ந்து கண்காணிப்பது நமது பொறுப்பு.
இது கொஞ்சம் ஆயாசமாகத்தான் இருக்கும். ஆனால், நவீன வாழ்வில் சௌகரியமான வாழ்வுக்கு நாம் கொடுக்கும் ஒரு சிறு விலையாகவே இதனைக் கருத வேண்டும். இந்தப் பிரச்சினை நமது மூதாதையாருக்கு இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், நமக்கு இருக்கும் அதீத சாத்தியக்கூறுகளும் வெற்றிக்கான வாய்ப்புகளும்கூட அவர்களுக்கு அமையவில்லை என்பதும் உண்மைதானே?
எனவே, வாழ்வையும் வேலையையும் தொடர்ந்து கண்காணித்து மாற்றங்களை உருவாக்கிக்கொண்டு வாருங்கள். வெற்றிகளைத் தொடர்ந்து தக்கவைத்து முன்னேறுங்கள்!
(பேசுவோம்...)
2
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
அ.பி 3 years ago
கண் திறக்கும் கட்டுரைகள் தாங்கள் எழுதிய கட்டுரைகள்... இதுவும் அருமையான கட்டுரை... கலக்குங்க ss..
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Subramanian 3 years ago
ஏகப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் துணை நடனக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவே நினைக்கிறேன்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.