கட்டுரை, அரசியல், பொருளாதாரம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

சுய தம்பட்டப் பொருளாதாரம்!

ப.சிதம்பரம்
12 Feb 2024, 5:00 am
0

ன்மைதரும் பொருளாதாரம் என்பது அமைதி மிக்கது, நல்ல பொருளாதார நிபுணர்கள் தங்களுடைய கொள்கைகளால் விளையும் நன்மைகளுக்குப் பின்னால் மறைந்திருப்பார்கள்; பொருளாதார ஆய்வறிக்கை, புத்தாண்டில் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவரின் உரை, நிதியமைச்சரின் வரவு - செலவு நிதிநிலை அறிக்கை (அல்லது இடைக்கால நிதிநிலை அறிக்கை) ஆகியவை அரசின் கொள்கைகளைத் தெரிவிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாகும். அரசு என்ன செய்யப்போகிறது என்பதை உரத்தும் தெளிவாகவும் தெரிவிப்பவை இந்த மூன்றும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எப்போதும் உரத்துப் பேசுவதையே விரும்பும்; இந்த முறை 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால அறிக்கையை வெளியிட்டபோது, மாண்புமிகு நிதியமைச்சர் மேலும் உரத்துப் பேசிவிட முடிவெடுத்தார். அவருடைய குரலை ஊடகங்கள் அப்படியே உள்வாங்கி மேலும் சில மடங்கு பெருக்கி உரத்து ஊதின. அப்படி ஊதியும் அந்த உரையானது அடுத்த நாளே எவருடைய மனங்களிலும் தங்காமல், எவராலும் பேசப்படாமல் காற்றில் கரைந்துவிட்டதே என்று நிதியமைச்சர் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருப்பார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

களைப்பும் சலிப்பும்

கடந்த பத்தாண்டுகளாகவே அரசு எதையும் சாதிக்காமலேயே, பெரிதாக சாதித்துவிட்டதைப் போல பீற்றிக்கொள்வதைக் கேட்டுக்கேட்டு மக்கள் களைப்பும் சலிப்பும் அடைந்துவிட்டார்கள் என்றே கருதுகிறேன். ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்’ என்று தேர்தலின்போது வாக்குறுதி தந்ததை அவர்கள் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறார்கள்; ஆனால் சாதித்தது என்னவோ, அரசுத் துறைகளில் காலியாக இருந்த இடங்களிலும் சில ஆயிரங்களை மட்டுமே நிரப்பப் பணி நியமன ஆணைகளை வழங்கியதுதான்.

அதேவேளையில் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் 2023இல் 2,60,000 பேரை வேலையிலிருந்து நீக்கின. ‘இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்து வெளிக்கொண்டுவந்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம்’ என்று தேர்தலின்போது கூறியதையும் இன்னமும் நினைவில் வைத்துள்ளனர்.

அதேசமயம், கோடிக்கணக்கில் வங்கிகளில் பணம் பெற்று மோசடி செய்துவிட்டு கடனையும் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய பெரிய பண முதலைகள், அங்கே ஒரு தொல்லையும் இல்லாமல் உல்லாசமாகவே வாழ்கிறார்கள், கடந்த பத்தாண்டுகளில் ஒருவரைக்கூட இந்தியாவுக்குக் கூட்டிவந்து தண்டிக்க முடியவில்லை என்பதையும் மக்கள் அறிவார்கள்.

‘விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்’, ‘2022க்குள் வீடு இல்லாத அனைவருக்கும் வீடுகள் கட்டித்தரப்படும்’, ‘2023-24 நிதியாண்டுக்குள் நாட்டின் மொத்தப் பொருளாதார மதிப்பை 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு உயர்த்துவோம்’ என்ற வாக்குறுதிகளையும் மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். எனவே, பத்தாண்டுகளில் செய்த சாதனைகளை நிதியமைச்சர் பட்டியலிட்டபோது, அவர்கள் பரிகாசமாகச் சிரித்தார்கள்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மாநிலங்கள் மீது தொடரும் தாக்குதல்

முகுந்த் பி. உன்னி 08 Feb 2024

சில உதாரணங்கள்

நிதியமைச்சர்: இவற்றாலும், அடிப்படைத் தேவைகளை அரசு பூர்த்திசெய்திருப்பதாலும் மக்களுடைய ஊதியத்தின் ‘உண்மை மதிப்பு’ கிராமப்புறங்களில் அதிகரித்திருக்கிறது.

உண்மை: நிரந்தர வேலை, அன்றாடக் கூலி வேலை, சுய தொழில் வேலை ஆகிய பிரிவுகளில் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் ஊதியமானது 2017-18 தொடங்கி 2022-23 வரையில் ‘தேக்க நிலையிலேயே இருக்கின்றன – உயரவே இல்லை’ என்று, குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படும் தொழிலாளர் பங்கேற்பு ஆய்வறிக்கையும், தொழிலாளர்களின் வேலை – ஊதியம் தொடர்பான ஆய்வறிக்கையும் (அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்) தெரிவிக்கின்றன.

நிதியமைச்சர்: பல்வித பரிமாணம் கொண்ட வறுமை நிலையிலிருந்து, 25 கோடி மக்கள் விடுபட அரசு உதவியிருக்கிறது.

உண்மை: ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட (யுஎன்டிபி) அறிக்கைப்படி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வறுமைக் கோட்டிலிருந்து மீண்டவர்கள் 27.5 கோடி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் வறுமைக் கோட்டிலிருந்து மீண்டவர்கள் 14.0 கோடி.

நிதியமைச்சர்: ஆண்டுதோறும் பிரதமர்-கிஸான் சம்மான் திட்டம் மூலம் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக நிதி மானியம் அளிக்கப்படுகிறது, சிறு விவசாயிகள், விளிம்புநிலை விவசாயிகளும் இதைப் பெறுகின்றனர்.

உண்மை: இந்தத் திட்டத்தால் பயன்பெறுவோர் எண்ணிக்கை நவம்பர் 15, 2023 முதல் 8.12 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நில உடைமையாளர்கள் மட்டும்தான் உதவி பெறுகின்றனர், குடிவாரதாரர்கள் (நிலத்தை உழுகிறவர்கள்) இதிலிருந்து விலக்கப்பட்டுவிட்டனர். 

நிதியமைச்சர்: உயர்கல்விக்கான புதிய நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்பட்டுள்ளன. 7 ஐஐடிக்கள், 16 ஐஐஐடிக்கள், 15 ஏஐஐஎம்எஸ் மருத்துவ நிலையங்கள், 390 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

உண்மை: உயர்கல்வி நிறுவனங்களில் நிரப்பப்படாத காலி இடங்களின் நிலவரம், 2023 மார்ச் 22இன்படி: ஐஐடிக்கள் - 9,625, ஐஐஐடிக்கள் – 1,212, மத்திய பல்கலைக்கழகங்கள் - 22,106. தில்லி ஏஐஐஎம்எஸ் மருத்துவ உயர்கல்வி -சிகிச்சை நிறுவனத்தில் 2022 மார்ச் 15இன்படி காலி இடங்கள் 1,256. இதர 19 ஏஐஐஎம்எஸ் நிறுவனங்களில் 3,871.

நிதியமைச்சர்: பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி கடன்கள், ரூ.2.5 லட்சம் கோடி மதிப்புக்கு தொழில் தொடங்குவதற்காக இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

உண்மை: இந்தக் கடன்களின் சராசரி மதிப்பு ரூ.52,325. இவற்றை சிசு (83%), கிஷோர் (15%), தருண் (2%) என்று மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். பெரும்பங்கிலான கடன் சிசு பிரிவில்தான் வழங்கப்பட்டுள்ளன. 35.69 கோடி சிசு பயனாளிகள் ரூ.9 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளனர். இதில் சராசரி ரூ.25,217. ரூ.25,000 கடன் வாங்கி எந்தப் பெரிய தொழிலைச் செய்துவிட முடியும்?

நிதியமைச்சர்: பொது சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) காரணமாக, ‘ஒரே நாடு’, ‘ஒரே சந்தை’, ‘ஒரே வரி முறை’ சாத்தியமாகியிருக்கிறது.

உண்மை: அனைத்துத் தொழிலதிபர்களும், வர்த்தகர்களும் சேர்ந்து எதிர்க்கும் வரி ஒன்று உண்டு என்றால் அது ஜிஎஸ்டி மட்டுமே; ஜிஎஸ்டி சட்டமே பெருங்குறைகளைக் கொண்டது, வணிகர்களையும் தொழில்முனைவோர்களையும் அச்சுறுத்துவதற்கும் சுரண்டுவதற்கும் அது கருவியாகப் பயன்படுகிறது.

நிதியமைச்சர்: அரசு முன்கூட்டியே எடுத்த நடவடிக்கைகளால்தான் விலைவாசி உயர்வை (பணவீக்க விகிதம்), கொள்கை முடிவின்படியான வரம்புக்குள் கட்டுப்படுத்த உதவியிருக்கிறது.

உண்மை: பணவீக்க விகிதம் எந்த வரம்புக்குள் இருக்க வேண்டும் என்பதில் அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் (ஆர்பிஐ) ஒரே கருத்து இல்லை. பணவீக்க விகிதத்தை 2% முதல் 4% வரை கீழே இறக்க ரிசர்வ் வங்கி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அரசாங்கமோ அதிகபட்சம் அனுமதிக்கக்கூடிய 4% முதல் 6% வரையிலான அளவிலேயே கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க சராசரி 2019-2024 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் 5.6%. உணவுப் பண்டங்களின் பணவீக்க விகிதம் 8.7%, பால் 5.07%, பழங்கள் 11.4%, காய்கறிகள் 27.64%.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

திகைப்பூட்டும் பணக்கார இந்தியா!

ப.சிதம்பரம் 22 Jan 2024

நிதியமைச்சர்: குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவுகள் வளர்ச்சி பெறவும் உலக அளவில் போட்டி போடவும் உரிய நேரத்தில் கடன் வசதி, உற்பத்திக்கான தொழில்நுட்பம், தொழிலாளர்களுக்குப் பணிப்பயிற்சி ஆகியவற்றை வழங்குவதே அரசின் முன்னுரிமைக் கொள்கையாகும்.

உண்மை: பெருந்தொற்றுக்காலத்தில் அரசிடமிருந்து உதவி கிடைக்காமல் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. வங்கிகள் தந்த கடனில் வாராக் கடன்களுக்கு ரூ.3 லட்சம் கோடி மதிப்புக்குப் பிணை நின்ற அரசு, பிறகு அவற்றைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டுவிட்டது. ரூ.2 லட்சம் கோடி வரை மட்டுமே தொழில் பிரிவுகளுக்குக் கடனாகத் தரப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

நிதியமைச்சர்: கடல் உணவு ஏற்றுமதி 2013-14 தொடங்கி இரட்டிப்பாகியிருக்கிறது.

உண்மை: நடப்பு ரூபாய் கணக்கில் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.30,627 கோடியிலிருந்து ரூ.64,902 கோடியாகியிருக்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பில் கணக்கிட்டால் இந்த உயர்வு 60% மட்டுமே. இதனால் கிடைக்கும் ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதம் (சிஏஜிஆர்) 5.4%.

சட்டப்படி அல்லாத எச்சரிக்கை: கூம்பு வடிவ ஒலி பெருக்கி மூலம் காதுக்கு அருகில் வைத்துக் கத்தினால், காது செவிடாகிவிடும்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை விஞ்சிவிட்டதா உத்தர பிரதேசம்?
மாநிலங்கள் மீது தொடரும் தாக்குதல்
காங்கிரஸ், பாஜக: 20 ஆண்டுகள் ஜிடிபி வரலாறு
திகைப்பூட்டும் பணக்கார இந்தியா!
சிலருக்கு மட்டுமே இது மகிழ்ச்சியான புத்தாண்டு
துயர நிலையில் பொருளாதாரம், தொடர்ந்து மறுக்கும் அரசாங்கம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தென் கொரியாதேச மாதாவிதி மீறல்நம்பகத்தன்மை இல்லாமைமுகமதி நபிஇப்ராஹிம் இராவுத்தர்கிக்குபுஊழியர் சங்கங்களின் இழிநிலைதமிழ் தாத்தாஐடிபிஐஜெயமோகன் பேட்டிகுக்கூஇரண்டாவது இதயம்டி.வி.பரத்வாஜ் பேட்டிthe wireகுழந்தைகள்அருஞ்சொல் சுகுமாரன்உறுப்பு தானம்சமஸ் உதயநிதி சனாதனம்களச் செயல்பாட்டாளர்இலவச மின்சார இணைப்புகள்மூட்டு வீக்கம்கடுமையான வார்த்தைகள்இளமையில் வழுக்கை ஏன்?உலகள்ளூரியத்துக்கான அறைகூவல்நவீனத் தமிழ் ஓவியர்பிராமணர் என்றால் வர்ணமா? ஜாதியா?மத்திய இந்தியாபால்ய விவாகம்காங்கோ

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!