வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு
சும்மா இருப்பது சுலபமான வேலை இல்லை
பிரிட்டனில் நான் பணியிலிருந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் பசிபிக் கடலில் இருக்கும் சிறு சிறு தீவுகளுக்கு அடிக்கடி போவது வழக்கம். ஒவ்வொரு முறையும் ஓரிரு வாரங்கள் இருந்துவிட்டு வருவார். இவ்வளவு விடுமுறை எடுக்கிறாரே, நாமும் சொந்த நிறுவனம் ஆரம்பித்துவிட்டால் இப்படி அடிக்கடி விடுமுறை எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்று தோன்றும்.
ஒரு முறை கம்பெனி பார்ட்டியில் தனியாக மாட்டிக்கொண்டபோது இந்த விஷயத்தை அவரிடமே சொன்னேன். அவர் சொன்னார், “நான் தீவுகளுக்குப் போவது என்னவோ உண்மைதான். ஆனால், அது விடுமுறைப் பயணங்கள் இல்லை. விடுமுறையில் ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலாவாகச் செல்லும் பயணங்கள் தனி. இந்தப் பயணங்கள் தனி. இது வேலைக்காகச் செல்லும் பயணம்!”
எனக்கு இது ஆச்சரியமூட்டியது. ஏனென்றால், இப்படி அவர் பயணங்கள் செல்கையில் அவரை நாங்கள் யாரும் தொடர்புகொள்ள முடியாது. மனிதர் செல்பேசி, இணைய இணைப்புகள் அனைத்தையும் துண்டித்துக்கொண்டுவிடுவார். அப்புறம் அப்படி அங்கே என்ன வேலை பார்ப்பார்?
அவர் சொன்னார், “தீவுகளுக்குச் செல்லும்போது என்னிடம் ஒரு நோட்புக் - பேனா இருக்கும். வேறு எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக்கொள்வதால், சும்மாவேதான் உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கும். மனம் குரங்குபோல ஆங்காங்கு தாவிப் பாயும். அப்படியே அது நம் நிறுவனம் பக்கமும் வரும். அப்போது நம் வேலை சார்ந்த பிரச்சினைகளும், தீர்வுகளும் நிறைய எனக்குப் பிடிபடும். கூடவே நமது சேவைகளில் புதிதாக என்னென்ன விஷயங்களை சேர்க்கலாம் என்ற யோசனைகளும் உதிக்கும். அவற்றை எல்லாம் நோட்புக்கில் எழுதிக்கொள்வேன். இதை ஓய்வு என்பதா, வேலை என்பதா?”
⁋
இது கேட்பதற்குக் கொஞ்சம் அரிதான ஒன்றாக நமக்குத் தோன்றலாம். ஆனால் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நான் புரிந்துகொண்டேன், இப்படிச் சும்மா இருப்பதன் வழி சிந்தனையை முறைப்படுத்தும் உத்தியைப் பல ஆளுமைகள் கையாளுகிறார்கள்.
உலகில் வெற்றி பெற்ற பெரும்பாலான மனிதர்கள் / மனிதிகள் சும்மா இருப்பதன் அவசியத்தைப் புரிந்துகொண்டவர்கள்தான். யுவல் நோவா ஹராரி இன்று உலகின் ஆகப் பிரபலமான சிந்தனையாளர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். அவருடைய ‘சேபியன்ஸ்’ நூல் பல கோடிகளில் விற்றதை நாம் அறிவோம். கல்லூரிப் படிப்பு முடித்ததும், ’விபாசனா’ என்ற தியானக் குழுவில் இணைந்திருக்கிறார் ஹராரி. அங்கே பல நாட்கள் தொடர்ச்சியாக தியானத்தில் இருந்தபோதுதான் ‘சேபியன்ஸ்’ புத்தகத்தின் கரு மற்றும் அத்தியாயங்களின் உள்ளடக்கங்கள் தன் மனதில் உதித்தன என்று ஹராரி குறிப்பிடுகிறார்.
விஞ்ஞானி ஆர்க்கிமிடீஸ் குளிக்கும்போதுதான் ஒரு முக்கிய விஞ்ஞான கண்டுபிடிப்பு அவர் மூளைக்குள் உதித்தது என்று படித்திருக்கிறோம். அதற்குப் பின் உற்சாகத்தில் அம்மணமாக எழுந்து, ‘யூரேகா’ என்று கத்திக்கொண்டே ஓடினார் என்று சொல்வார்கள் (யூரேகா என்றால் கிரேக்க மொழியில், ‘ஐடியா சிக்கிவிட்டது’ என்று அர்த்தம்). அவருக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் குளிக்கும்போது நிறைய ஐடியாக்கள் வருவதற்குக் காரணம், நாம் அப்போதுதான் பெரும்பாலும் ரொம்ப ரிலாக்ஸ்சாக, வேறு எந்தக் கவனச் சிதறலும் இல்லாமல் இருக்கிறோம்; அதுதான் முக்கிய காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
⁋
பிரச்சினை என்னவெனில் நாம் இப்போதெல்லாம் சும்மாவே இருப்பதில்லை. பயணிக்கும்போதும்கூட ஜன்னலோரத்தில் உட்கார்ந்தபடி செல்பேசியை நோண்டிக்கொண்டே இருக்கப் பழகிவிட்டோம். தவிர, சும்மா இருப்பது என்பதை வெட்டியாக இருப்பது என்ற அளவில்தான் நம்மில் பலரும் புரிந்துவைத்திருக்கிறோம். அலுவலகத்தில் டைப் அடிக்காமல் கணினி முன்பு ஒரு ஐந்து நிமிடம் சும்மா உட்காரந்திருந்தால், “என்ன மச்சி யூ-டியூப் பாக்கறியா?” என்று சக ஊழியர்கள் கலாய்ப்பார்கள். அந்த அளவுக்கு சும்மா இருப்பது என்பது மோசமான விஷயமாக ஆக்கப்பட்டுவிட்டிருக்கிறது.
சும்மா இருப்பதென்றால் வீட்டில் சோபாவில் சாய்ந்துகொண்டு நெட்பிளிக்ஸ் பார்ப்பதோ, அல்லது மொபைலில் ஃபேஸ்புக் நோண்டுவதோ அல்ல. நிஜமாகவே சும்மா இருப்பது. ‘எங்கேதான் போறே, பாத்துர்றேன்!’ என்று உங்கள் மனக்குரங்கை அவிழ்த்துவிட்டு அது தாவும் திசைகளை நீங்கள் அமைதியாக கவனித்துக்கொண்டிருப்பது!
நம்மிடம் இரு வகையான கவன அமைப்புகள் இருப்பதாக உளவியலாளர்கள் சொல்கிறார்கள், உள்மனக் கவனம், வெளிமனக் கவனம். நாம் அமைதியாக, சும்மா இருக்கும்போது உள்மனக் கவனம் முக்கியத்துவம் பெறுகிறது. அப்போது மனதின் ஆழமான விஷயங்கள் நமக்குப் புலப்படுகின்றன. உளவியல்ரீதியான ஆய்வுகளில் இப்படி அமைதியாக ஒன்றும் செய்யாமல் இருப்பது படைப்பாளிகளுக்கு உதவுகிறது; அவர்கள் படைப்பாற்றலை உந்திப் பெருக்குகிறது என்று ஆய்வுகளில் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் படைப்பாளிகளுக்காக ‘எழுத்தாளார்கள் புத்தாக்க முகாம்’ (Writer's Retreat) இதன் பொருட்டாகத்தான் நடத்துகிறார்கள். காடுகளில் மரவீடுகளை முன்பதிவுசெய்துவிட்டு குறிப்பிட்ட நாளில் அங்கே போய்விட வேண்டும். கேபின் என்று சொல்வார்கள். நடுக்காட்டில் ஃபோன், இணையம் எதுவும் கிடைக்காது. மர வீட்டின் அறையில் டீ குடித்துக்கொண்டே எழுத வேண்டியதுதான்!
⁋
சரி, நாம் எப்படி சும்மா இருப்பதைப் பழகுவது என்று யோசித்தேன். எனக்குத் தோன்றிய யோசனை இது. தினமும் 15 நிமிடங்கள் இதை முயற்சிக்கலாம். உங்கள் செல்பேசியை விமானநிலையில் போட்டுவிட்டு, அலாரம் வைத்துக் கொண்டு சவுகரியமாக உட்கார்ந்து கொள்ளலாம். தியானம் என்று சொல்லிவிட்டால் வீட்டில் தொந்தவுசெய்ய மாட்டார்கள். அப்புறம் அமர்ந்தபடி அப்படியே அமைதியாக சும்மா இருக்கலாம்.
இதுதானே தியானம் என்று கேட்கலாம். இரண்டுக்கும் முக்கிய வித்தியாசம் இருக்கிறது. தியானம் மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சி. இங்கே நாம் பேசும் விஷயம் மனதை அலையவிடும் முயற்சி. சிந்தனை எங்கே போகிறது, என்ன யோசிக்கிறது என்று எதையும் கவலைப்படாமல் அது போகும் திசையைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதாகும்!
சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக ஆங்காங்கே பயணித்து அலையும். அப்படியே உங்கள் வேலை பற்றி, உங்கள் ப்ராஜக்ட் பற்றி, உங்கள் நிறுவனத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் தொழில்ரீதியான பிரச்சினைகள் பற்றியெல்லாமும் அது அலைந்து திரிந்து வரும். தோன்றுவதைப் பிடித்துவைக்கலாம். இந்த 15 நிமிட கால அவகாசத்தையும் ஓரிரு வாரங்களில் 30, 45, 60 நிமிடங்கள் வரை சிறிது சிறிதாக உயர்த்திக்கொண்டே போகலாம்.
சும்மா இருப்பதன் மூலம் பெற்ற திறமைகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் வளர்ந்து சொந்தமாக நிறுவனம் தொடங்கிவிட்டால், அதற்குப் பின் ஒரு மாதம் லீவு போட்டுவிட்டு, ரஜினிபோல இமயமலைக்குக்கூட சென்று வரலாம்! ஆனால், சும்மா இருப்பது சுலபம் இல்லை!
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
VS Saravanan 3 years ago
சும்மா இரு சொல் அற ..
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
BalaJawahar 3 years ago
சும்மா என்பது எப்போதுமே ஆயிரம் பொருள் புதைந்ததுதானே !?
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
I.Philips ponnudurai 3 years ago
அருமையான கட்டுரை
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
குணசேகரன் 3 years ago
நல்ல தகவல் சும்மா இருக்கும்போது சிந்தனைகள் நம் வசப்படும் உண்மைதான்
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.