வாழ்வியல், வேலையும் வாழ்வும் 7 நிமிட வாசிப்பு

உங்களுடைய 'டு டூ லிஸ்ட்' தயாரா?

ஸ்ரீதர் சுப்ரமணியம்
30 Oct 2021, 5:00 am
2

சில ஆண்டுகளுக்கு முன் நான் வேலை பார்த்த நிறுவனத்தில் என் மேனேஜருக்கு ஒரு பழக்கம் இருந்தது. அவரிடம் மேஜையில் இருக்கும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் நிலுவையில் இருக்கும் வேலைகள் பட்டியல் எழுதப்பட்டு இருக்கும். தினமும் காலையில் அலுவலகம் வந்ததும், மஞ்சள், ஊதா, ஆரஞ்சு கலர்களில் மேலே கொஞ்சம் பசையுடன் சதுரமாக இருக்கும் ‘போஸ்ட்-இட்’ காகிதம் ஒன்றைக் கிழித்து, எடுத்துக்கொள்வார். தனது இருக்கையில் அமர்ந்ததும் அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு, தனது நோட்டுப் புத்தகத்தில் உள்ள பட்டியலில் இருந்து அன்று செய்ய வேண்டிய வேலைகளை முடிவு செய்துகொள்வார். அவற்றை அந்த 'போஸ்ட்-இட்'டில் எழுதிக் கொள்வார்.

உதாரணத்துக்கு ஒரு பட்டியலைக் கீழே தருகிறேன்:

- நாளைக்கு அனுப்பப்பட வேண்டிய அறிக்கை

- இணைய டெவலப்பர் நேர்காணல்

- பயிற்சி ஆவணத்தைப் படித்துப் பிழை திருத்துதல்

ஒவ்வொரு வேலையை எழுதியதும், கொஞ்சம் யோசித்துப் பார்த்து அதனருகே அந்த வேலைக்குத் தேவைப்படும் நேரத்தை குறித்துக்கொள்வார்.

- நாளைக்கு அனுப்பப்பட வேண்டிய அறிக்கை: 1 மணி நேரம்

- இணைய டெவலப்பர் நேர்காணல்: 1 மணி நேரம்

- பயிற்சி ஆவணத்தைப் படித்துப் பிழை திருத்துதல்: 2 மணி நேரம்

இது எழுதி முடித்தவுடன் அன்றைய நாளில் நான்கு மணி நேரம் நிரம்பிவிடுகிறது. அதாவது அவரிடம் மீதி நான்கு மணி நேரம்தான் கைவசம் இருக்கிறது. அன்று நாள் துவங்கியதும் பிறகு ஏதாவது புதிய வேலைகள் வந்தால் அதை அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்வார்.

அது இப்படி இருக்கும்...

- மாதாந்திர அறிக்கை: 1 மணி நேரம்

- இணைய டெவலப்பர் நேர்காணல்: 1 மணி நேரம்

- பயிற்சி ஆவணத்தை படித்துப் பிழை திருத்துதல்: 2 மணி நேரம்

- மண்டலத் தலைவருடன் மீட்டிங்: 1 மணி நேரம்

இப்படி சேர்த்த கூடுதல் வேலைகள் எட்டு மணி நேரத்தை எட்டியதும் நிறுத்திவிடுவார். அதற்குப் பின் ஏதாவது புதிய வேலை வந்தால் அதனை தன் மேசையில் உள்ள நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொள்வார். அது அன்றைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. அவரைப் பொருத்தவரை அன்றைய வேலை முடிந்துவிட்டது.

சரி, ஒருவேளை புதிதாக வரும் வேலை அன்றே செய்து முடித்தாக வேண்டும் என்ற அவசரத்தோடு வந்தால் என்ன செய்வார்? பட்டியலில் ஏற்கனவே இருக்கும் வேலை ஒன்றை நீக்கிவிட்டு அந்த அவசர வேலையை அதற்கு பதிலாக சேர்த்துக்கொள்வார். நீக்கப்பட்ட வேலை மேஜையில் உள்ள நோட்டுப் புத்தகத்துக்குச் சென்றுவிடும்.

இன்னொரு முக்கியமான விஷயம். அந்த தினப் பட்டியலில் இருக்கும் வேலைகள் முடியும் வரை அவரைப் பொருத்தவரை அன்றைய நாள் முடிவுக்கு வராது. அதுதான் எட்டு மணி நேரத்துக்கு அதிகப்பட்ட வேலை எதையும் ’லிஸ்ட்’டில் சேர்க்க மாட்டாரே என்று கேட்கலாம். மாலை ஆறு மணிக்கு முடிந்துவிடும்தானே என்று கேட்கலாம்.

இந்த மணிக்கணக்கு என்பது வெறும் அனுமானம்தான். நமக்கே தெரியும்: பொதுவாக நாம் ஒரு வேலையின் நேரத்தை அனுமானிப்பதற்கும் அது உண்மையாகவே எடுத்துக்கொள்வதற்கும் இடையில் வித்தியாசம் இருக்கும். ஒரு மணி நேரத்தில் ஒரு வேலை முடிந்து விடும் என்று நாம் அனுமானித்தால், பெரும்பாலும் அது ஒன்றேகால் அல்லது ஒன்றரை மணி நேரம் பிடிப்பதாக ஆகக்கூடும். அதாவது எட்டு மணி நேரம் என்று பட்டியலிட்ட வேலைகள் ஒன்பது / ஒன்பதரை மணிகள் நீளும். அப்போது எந்த வேலையையும் லிஸ்டில் இருந்து நீக்க மாட்டார். அவற்றை எல்லாம் முழுமையாக முடித்துவிட்டுத்தான் கிளம்புவார்.

ஒவ்வொரு வேலை முடியும் பொழுதும் அந்த ’போஸ்ட்-இட் நோட்ஸ்’சில் இருக்கும் அந்த வேலை மேல் அழகாக ஒரு கோடு போட்டு அடித்துவிடுவார். அன்றைய தினம் முடியும்போது அனைத்து வேலைகளும் அடிக்கப்பட்டு இருக்கும்.

நாள் முழுக்க அந்த ‘போஸ்ட் இட்’ அவரது கணினித் திரை மேலேயே ஒட்டப்பட்டு இருக்கும். மாலை கிளம்பும்போது, அதனை எடுத்து கசக்கி எறிந்து விட்டுப்போவார். அடுத்த நாள் புதிய ‘போஸ்ட் இட்’ அந்த இடத்தை அலங்கரிக்கும்.

அவருக்கு நாங்கள் ‘போஸ்ட் இட் பிரபாகர்’ என்று பெயர் வைத்திருந்தோம். அலுவலகத்தில் நிதானமான மனிதர் என்பதோடு, எந்த மன அழுத்தமும் இன்றி, எதுவும் விடுபடாமல் வேலை செய்பவராகவும் அவர் இருந்தார். இதற்குக் காரணம்,   இப்படி ஒரு ஒழுங்கான அமைப்பைக் கடைப்பிடித்ததுதான்!

அது அந்தக் காலம். இப்போது அந்த மாதிரி மஞ்சள் காகிதங்களை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக கணினி மற்றும் மொபைல் செயலிகள் வந்துவிட்டன. ‘கூகுள் கீப்’ என்று ஒன்று இருக்கிறது. அதிலேயே நாம் மஞ்சள், ஊதா என்று கலர் கலராக நமக்குப் பிடித்த கலரில் காகிதங்களை திரையில் உருவாக்கிக்கொள்ளலாம். பிரபாகர் செய்தது போல வேலை முடிய... முடிய..., பட்டியலில் இருந்து அவற்றை அடித்துவிடலாம். மொபைலிலும்கூட பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. 'டு டூ ஆப்ஸ்’ (To-Do Apps) என்று தேடிப் பாருங்கள். கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள்கூட இதற்காக செயலிகள் வைத்திருக்கின்றன.

இப்படி வேலைப் பட்டியலை வைத்துக்கொள்வதில் உள்ள முக்கியமான வசதி, நமக்கு இவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளத் தேவையில்லை என்பதுதான். கூடவே, எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேலை நம்மிடம் பாக்கி இருக்கிறது என்பது தெரிந்துவிடும். அதிக வேலை இருந்தால் அதனை சுட்டிககாட்டி புதிய வேலையை மறுக்கலாம். அல்லது முடிந்தால் அடுத்தடுத்த நாட்களுக்கு தள்ளி வைத்துக்கொள்ளலாம். நமது நாளைத் திட்டமிட முடிந்துவிட்டால், அன்றைய தினம் முழுவதும் எந்தப் பெரிய அழுத்தமும் இன்றி வேலையைக் கவனிக்கலாம்.

நான் இப்படி 'டு டூ’ பட்டியல் போட்டு வேலை செய்ய ஆரம்பித்தபோது, தனித்தனியாக வகைப்படுத்தி லிஸ்ட் போட்டு வேலை செய்ய ஆரம்பித்தேன். சொந்த வேலைகளுக்கு ஒரு லிஸ்ட், அலுவலகத்தில் ப்ராஜக்ட்களுக்கு ஒரு லிஸ்ட், ப்ராஜக்ட் அல்லாத மேலாண்மை வேலைகளுக்கு ஒரு லிஸ்ட் என்று போட்டுத் தொடர்ந்து பின்பற்ற ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் இந்த லிஸ்ட்களை மேய்ப்பதே தனி வேலையாகப் போய்விட்டது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வகை வகையான பட்டியல்களை குறைத்துக்கொண்டே வந்து, கடைசியில் ஒரே ஒரு பட்டியலுடன் நின்றது. அதனையும் மிக மிக எளிமையாக்கிக்கொண்டேன்.

இது காகிதமற்ற உலகம் என்பதால் நோட்புக் எதுவும் இல்லாமல் கணினியிலேயே அதை வைத்துக் கொண்டுவிடுகிறேன். இப்போது என்னிடம் இருப்பது ஒரே லிஸ்ட்தான். வரும் வேலைகளை எல்லாம் தொடர்ந்து அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினந்தோறும் அந்தப் பட்டியலில் இருந்து அதிமுக்கிய வேலைகளை எடுத்து, பட்டியலில் மேலே கொண்டு வந்துவிட வேண்டும்.

நான் வீட்டில் இருந்து வேலை செய்வதால் இந்தப் பட்டியலில் அலுவலக வேலைகளை மட்டும் போடுவதில்லை. எழுத்து சம்பந்தப்பட்ட வேலைகளையும் இதில் சேர்க்கிறேன். உதாரணத்துக்கு, ‘அருஞ்சொல்லுக்குக் கட்டுரை எழுது’ என்பதும் அதே  பட்டியலில் போட்டிருப்பேன். ‘தண்ணீர் கேன் ஆர்டர் செய்’ என்பதையும் அதே பட்டியலில் சேர்த்திருப்பேன். ‘பல் டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட் இருக்கிறது’ என்பதும் அதில் இருக்கும். 

இப்படிப்பட்ட 'டு டூ'க்களை வாழ்வில் வெற்றி பெறுகிற அனைவரும் பின்பற்றுகிறார்கள். மன அழுத்தம் இன்றி, எதையும் மறந்துபோகாமல் இருக்கலாம். நிறைய பேர், ’இராப்பகலாக வேலை செய்கிறேன்’ என்பார்கள். ஆராய்ந்தால் அதற்கு இப்படிப்பட்ட மேலாண்மை அவர்களிடம் இல்லாதது ஒரு முக்கிய காரணமாக இருக்கக் கூடும். இப்படி ஓர் அமைப்பைக் கொண்டுவந்தவுடனே, அவர்களது நேர மேலாண்மையில் அதீத முன்னேற்றம் காண இயலும். வேலை முடித்து நமக்கு விருப்பமான விஷயங்களை செய்து வாழ்வை அனுபவிப்பதற்கும் நிறைய நேரம் இருக்கும்.

’டு டூ லிஸ்ட்’கள் வாழ்வதை எளிதாக்குகின்றன. அதன் மூலம் நமது வாழ்வை அழகாக்குகின்றன!

(பேசுவோம்)

ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.
பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Kamal Subramanian   1 year ago

உண்மைதான் . இந்த லிஸ்ட்களை மெய்டன் செய்வதே பெரும் வேலை . இப்ப சிம்பிளான லிஸ்ட் மட்டுமே வசதியா இருக்கு.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Almas Ahamed N   1 year ago

’டு டூ லிஸ்ட்’ தயாரித்து பணியாற்றுவதின் பயனை உணர்ந்தவனாய் இந்தக் கட்டுரையை வாசித்தேன். அந்தப் பழக்கத்தை இன்னும் வலுப்படுத்திக்கொள்ள இக்கட்டுரை உதவும். நன்றி.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்ட பங்கேற்பு குறைவுசெயலூக்கம்மதமும் கல்வியும்மதச்சார்பற்ற அரசாங்கம்மின் வாகனம்ஜகதீப் தன்கர்ஆலென் ஆஸ்பெவிக்கிப்பீடியாராணுவ ஆட்சி200வது பிரிவுஜெயமோகன் பேச்சு: எது விவாதப் பொருள்?மாலன்ஆளுநர் முதல்வர் மோதல்முகைதீன் மீராள்கொலிஜியம்பெரியாறு அணைஎண்டோஸ்கோப்பிசாதி – மத அடையாளம்மேல் தொடை குடல் இறக்கம்ஒற்றைத் தலைவலிடாடா ஏர் இந்தியாகெட்டதுடெரிக் ஓ'ப்ரையான் கட்டுரைஅரசியல்வாதிவரிவங்கிகளைக் காப்பதற்கு ஒரு நோபல்ஒற்றைத்துவம்எண்ணிக்கைமொழித் திணிப்புமிங்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!