தொடர், வாழ்வியல், வேலையும் வாழ்வும் 8 நிமிட வாசிப்பு
அதிகாலையில் எழாதது குற்றமா?
சூரிய உதயத்துக்குச் சுமார் ஒன்றரை மணிக்கு முன்பு உள்ள காலகட்டத்தை, ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று அழைக்கிறார்கள். இது கடவுள் வழிபாடுகளுக்கு உகந்த நேரம் என்று நம்பப்படுகிறது.
நவீன உலகில் இதற்குப் புதிதான அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வேலைகளைச் செய்தால், நல்ல வீரியத்துடன் திறனுடன் செய்து முடிக்கலாம் என்று சொல்கிறார்கள். ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்களும், ராபின் ஷர்மா போன்ற சுய முன்னேற்றச் சிந்தனையாளர்களும் காலையில் எழுந்துகொள்ளுவதன் அவசியம் மற்றும் தேவை குறித்துப் பேசியிருக்கிறார்கள். வீடுகளிலும் அதிகாலையில் எழுந்து கொள்வதை நற்குணமாக பெற்றோர்களும், பெரியவர்களும் சிலாகிக்கிறார்கள்.
இந்தக் காலையில் எழுந்துகொள்ளும் சிந்தனாவாதம், நமது பொதுக் கலாச்சாரத்தில் பரவலாக விரவியிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த 'டாக்டர்' படத்தில் பொறுப்பான, நல்ல பையனாக சித்தரிக்கப்படும் நாயகனின் குணாதிசயங்களில் முக்கியமானதாக, அவன் காலையில் 4:30 மணிக்கு எழுந்துகொள்வான் என்று காட்டப்படுகிறது.
அதிகாலையில் எழுவது குறித்த சிலாகிப்பு அனைத்துச் சமூகங்களிலும் காணப்படுகிறது. பெருநிறுவனங்களின் தலைமை இயக்குநர்கள் அதிகாலையில் எழுந்துகொள்கிறார்கள்; எழுத்தாளர்கள் காலையில் எழுந்து தங்கள் புத்தகங்களை எழுதுகிறார்கள். விளையாட்டு வீரர்கள் தங்கள் உடற்பயிற்சிகளை ஐந்து மணிக்கே துவங்குகிறார்கள். சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டிம் குக், காலை 3:45 மணிக்கு எழுகிறார் என்ற செய்தி பரவலாக பகிரப்பட்டு அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.
காலையில் எழுவது அவ்வளவு முக்கியமானதா என்று கேட்டால், அறிவியல்ரீதியான பதில் 'இல்லை' என்பதே. 'பிரம்மாவுக்கு உகந்த நேரம்' போன்றவை எல்லாம் அழகிய கற்பனைகள் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. அதிகாலை நேரம் உலகம் அமைதியாக இருக்கும். குழந்தைகள், பிள்ளைகள் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். டிவி ஓடாது. தெருவில் வண்டிச் சப்தங்கள் இருக்காது. எனவே செய்யும் வேலையில் கொஞ்சம் அதிக கவனம் கிடைக்கலாம் என்பதுதான் ஒரு சாதகமான விஷயம். அதைத் தாண்டி, குறிப்பிடத்தக்க சாதகமான அம்சங்கள் எதுவும் இல்லை. ஆனால் இதே சாதகங்களை இரவு பன்னிரண்டு மணிக்கும் வைத்துப் பேச முடியும்.
அறிவியல்பூர்வமாக இதனை நிஜமாகவே ஆராய்ந்திருக்கிறார்கள். அதில் ஆச்சரியமான விஷயம் தெரியவந்திருக்கிறது. தூக்கம், விழித்துக்கொள்ளுதல் போன்றவற்றையும் உங்கள் மரபணுதான் தீர்மானிக்கிறது. மரபணுக்களில் கிட்டத்தட்ட 35 பகுதிகளில் இந்தக் குணம் கட்டுப்படுத்தப்படுகிறது என்று தெரியவந்திருக்கிறது. இதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்து நடந்துவருகின்றன. எனினும், இதுவரை நடந்திருப்பவை நமக்குப் பெருமளவு தெளிவைக் கொடுக்கிறது. அந்த அறிவியல் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்கின்றன.
இந்த ஆய்வுகள் சொல்வது இதுதான்: நம்மால் எப்போது எழுந்துகொள்ள முடிகிறது என்பதில் நமது முனைப்பு ஓரளவுதான் இருக்கிறது. மீதியை நம் உடல்தான் கட்டுப்படுத்துகிறது. சிலர் அதிகாலை மனிதர்கள்; சிலர் இரவு மனிதர்கள். இதில் இன்னொன்று. எத்தனை மணிக்கு எழுந்து கொண்டாலும், நம் எல்லாருக்கும் 'உகந்த நேரம்' என்றும் ஒன்று தனியாக இருக்கிறது. சிலருக்கு காலை ஆறு மணிக்கு அதீத ஆற்றல் வரும். சிலருக்கு மதியம் வரும். சிலருக்கு ராத்திரி 10 மணிக்குதான் ஆரம்பிக்கவே செய்யும்.
உலகப் புகழ் பெற்ற, 'ஹாரி பாட்டர்' நாவல்கள் எழுதியவர் ஜேகே ரவ்லிங். இவர்தான் உலகின் முதல் பில்லியனர் எழுத்தாளர். அதாவது, தனது புத்தக விற்பனைகளில் ஆயிரம் கோடி ரூபாய்கள் வருமானத்தை தாண்டியவர். இவர் காலையில் தாமதமாகத்தான் எழுகிறார். ஃபேஸ்புக்கின் அதிபதி மார்க் சக்கர்பெர்க், காலை எட்டு மணிக்கு மேல்தான் எழுந்துகொள்வதாகச் சொல்லி இருக்கிறார்.
இந்தியாவிலேயேகூட ஏ.ஆர்.ரஹ்மான் வேலை செய்யும் முறை மிகவும் பிரபலமானது. அவர் இரவு 11 மணிக்குத்தான் தனது வேலையையே துவங்குகிறார். கடந்த 30 வருடங்களாக நாம் கேட்டுக்கேட்டு ரசித்த பாடல்கள் எல்லாம் இவர் பாதராத்திரியில் உருவாக்கியவைதான். அதேநேரம் இளையராஜா அதிகாலை 6 மணிக்கு ஸ்டுடியோவில், 'அட்டெண்டன்ஸ்' போட்டுவிட்டுத் தனது வேலையைத் துவங்கிவிடுகிறார். இந்த இரண்டு இசை ஜாம்பவான்களில் யாருடைய பழக்கம் சரியானது? யார் பழக்கம் தவறானது என்று சொல்வீர்கள்? ‘யார் எப்போ வேலை செஞ்சா எனக்கென்ன? செய்யற வேலையோட தரம்தானே முக்கியம்?’ என்றுதானே கேட்பீர்கள். அதைத்தான் சொல்லவருகிறேன்.
நீங்கள் காலை மனிதரா, மாலை மனிதரா, மதிய மனிதரா என்பது உங்களின் தனிப்பட்ட குணாதிசயம். நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர் என்பதை நீங்கள்தான் கண்டுபிடித்துக்கொண்டு அதனை பின்பற்ற வேண்டும். விதிவிலக்கின்றி நம் எல்லாருக்கும் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் தேவைப்படுகிறது. அதனை எப்போது பெறுகிறோம் என்பதை நாம் முடிவு செய்துகொள்ளலாம்.
இதில் இன்னொரு விஷயம்: இது ஒரு பழக்கம் என்பதையும் தாண்டி சிலருக்கு இரவு தூங்குவதிலேயே பிரச்சினை வரும். அவர்களுக்கு காலை ஆறு மணிக்குதான் தூக்கமே வரும். இதை 'சிர்கேடியன் ரிதம் சிண்ட்ரோம்' (Circadian Rhythm Syndrome) அல்லது 'டிலேடு ஸ்லீப் பேஸ் சிண்ட்ரோம்' (Delayed Sleep Phase Syndrome) என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு உடலின் உள்ளே இருக்கும் மரபணு கடிகாரம், நமக்கு இருப்பதற்கு நேர் எதிர்த்திசையில் திருகிவைக்கப்பட்டிருக்கும். இரவு பதினொரு மணிக்கு நாம் கொட்டாவி விட்டுக்கொண்டிருப்போம். அவர்கள் செம ஃபிரெஷ்ஷாக, முழு ஆற்றலுடன் வலம் வருவார்கள். இது வியாதி இல்லை. ஒரு வகைப் பிறழ்வு, அவ்வளவுதான்.
எனவே அவர்கள் இதனைக் குணப்படுத்த முயலாமல், அதனை ஒட்டி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டி இருக்கும். உங்களுக்கு ராத்திரிதான் பெரும் ஆற்றலுடன் முழு எனர்ஜி வருகிறது என்றால், இப்படி ஏதாவது கடிகார மாற்றம் உங்கள் உடலில் இருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். தூக்கத்துக்கு என்று சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள். இவர்களை 'Somnologist' என்று அழைக்கிறார்கள். உங்கள் நகரத்தில் இந்த மருத்துவர் எங்கே இருக்கிறார் என்று கூகுள் செய்து அவரை ஒரு பாட்டம் பார்த்துவிட்டு வரலாம். இந்த மாதிரி கடிகார மாற்றம் இருக்கிறது என்று தெரிந்தால், எந்தக் குற்றவுணர்ச்சியும் இன்றி உங்கள் தின வாழ்வை உங்கள் உடலின் வசதிக்கேற்றபடி கட்டமைத்துக்கொள்ளலாம்.
அப்படி எதுவும் இல்லாவிடிலும் கூட, எந்தக் குற்றவுணர்ச்சியும் தேவையில்லைதான். 'உன் வாழ்க்கை உன் கையில்' என்று சொல்வது போல உங்கள் தூக்கம் உங்கள் கையில், உங்கள் வேலை, உங்கள் கையில். என்ன? இப்படி ஒரு சிறப்பான சிண்ட்ரோம் இருக்கிறது என்று தெரிந்தால் அந்த மருத்துவர் சான்றிதழை உங்கள் அலுவலகத்தில் காட்டி, அதற்கேற்றபடி சில வேலை நேரச் சலுகைகளை பெற்றுக்கொள்ள முயன்று பார்க்கலாம்.
நமது பிரத்தியேக தூக்கக் கடிகாரத்தை புரிந்துகொள்வது போலவே, நமது பிரத்தியேக 'உகந்த ஆற்றல் காலம்' எப்போது இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். எப்போது நாம் அதீத ஆற்றலுடன் வேலைகளை முடிக்கிறோம் என்று கண்டுபிடிப்பதுதான் இது. நீங்கள் வேலைகளைச் செய்யும்போது, நாளின் எந்த நேரத்தில் உங்கள் வேலையை அதீதத் திறமையுடன், வேகத்துடன், கவனத்துடன் முடிக்கிறீர்கள்? காலையா, மதியமா, இரவா? ஓரிரு வாரம் பல்வேறு வகைகளை முயன்று பார்க்கலாம். அந்த முயற்சிகளில் நமக்கு வசதியான, உகந்ததான ஒரு நேரக் கட்டத்தை கண்டுபிடித்து விட இயலும். பின்னர் அதனைப் பின்பற்ற ஆரம்பிக்கலாம்.
இப்படி எல்லாம் செய்வதில் சில சாதகங்கள் இருக்கின்றன. நாம் இரவு மனிதராக இருந்தால் அது குறித்த குற்றவுணர்வு எதுவும் இல்லாமல், ஊரார் பேச்சைக் கேட்டு மனம் வெந்து போகாமல் வேலை செய்யலாம். ரஹ்மான் போன்றோர் தன் திறமையை நிரூபித்து விட்டதால், அவரது இரவுப் பழக்கத்தை யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால், நீங்கள் இளைஞராக, இளைஞியாக இருந்தால், உங்களை இன்னமும் சமூகத்துக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கும். அப்போது ஊரில் போகிற வருகிற எல்லாரும் 'இப்படி செய்', 'அப்படி செய்' என்று உங்களுக்கு அறிவுரைகள் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். 'காலையில சீக்கிரமே எழுந்து சாமி கும்பிட்டு வேலையை ஆரம்பிச்சிறணும்!' என்பதும் அந்த அறிவுரைகளில் ஒன்றாக இருக்கும். அதெற்கெல்லாம் காது கொடுக்காமல், உங்களுக்கு உகந்த நேரத்தைக் கண்டுபிடித்து அதனை ஒட்டி உங்கள் வேலையை, படிப்பை வகுத்துக்கொள்ளலாம்.
அந்தக் காலத்தில் இடது கைப்பழக்கம் இருப்பவர்களை, சிறு வயதிலேயே அடித்து அடித்து வலது கையில் எழுத வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தோம். இன்று அது பெரிய பிரச்சினை இல்லை என்று புரிந்து கொண்டு இடது கைக்காரர்களை அவர்கள் இயல்புக்கே விட்டுவிடுகிறோம். அதுபோலவே, அதிகாலையில் எழுந்து கொள்பவர்கள்தான் உழைப்பாளிகள், புத்திசாலிகள் என்று நம்பி எல்லாரையும் அந்தக் கட்டத்துக்குள் அடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இதுவும் விரைவில் மாறும். பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மனுக்கு உகந்த நேரமாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கென்று ஒரு தனித்துவமான தினசரி முகூர்த்த நேரம், உங்கள் மரபணுவுக்குள் குறிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கண்டறிந்து, பின்பற்றி வாழ்வில் வெற்றி காணுங்கள்!

5

3





பின்னூட்டம் (7)
Login / Create an account to add a comment / reply.
J. Jayakumar 6 months ago
Late N. T. Ramarao used to get up at 2.00 am and he would listen to stories by 4.00 am from would-be producers!
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Pandian 2 years ago
படு அபத்தமான கட்டுரை. டிம் குக், காலை 3:45 க்கு எழுந்து கொள்வதால் நானும் எழுந்து கொள்ள வேண்டும் என்பது எவ்வளவு அபத்தமானதோ, அவ்வளவு அபத்தம் ஜேகே ரவ்லிங் பில்லியனர் எழுத்தாளர் லேட் ட்டாக எழுந்திருபதால் நானும் எந்திரிக்க வேண்டும் என்பது காலையில் எழுந்திருப்பது நமது கலாச்சாரத்தில் ஊறியது. பிரம்மா முகூர்த்ததில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை இன்றால் மூடிக்கொண்டு நீங்கள் லேட் டாக எழுந்திருக்கலாம்.. ஆனால் அதை இழிவு படுத்துதல் தவறு (அழகிய கற்பனையாம்). தனது முழு சக்தி செயல்பாட்டில் உள்ள மனிதர், அவர் ஏழையோ கொடீஸ்வரறோ, காலையில் தன்னாலே முழிப்பு வருவதை காணுவார் . மூடருக்கு அங்ஙனம் அன்று.
Reply 2 11
Thirumurthi Ranganathan 1 year ago
எழுதிய கட்டுரைக்கு நீங்கள் எதிர்வினையாற்றுவது சரி. ஆனால் கட்டுரையை ஒழுங்காக படித்து விட்டு கருத்து சொல்லுங்கள். ஜே. கே. ரவ்லிங் செய்கிறார் அதனால் நீங்களும் தாமதமாக எழுந்திருங்கள் என்று கட்டுரையாளர் எங்கே சொல்கிறார்? அதுபோல காலையில் எழுந்திருக்க முடியாதவர்கள் மூடர்களா?
Reply 12 0
Login / Create an account to add a comment / reply.
Rajarajacholan 2 years ago
இத்தனை தினங்கள் நாம் சிந்திக்காத ஒரு காலத்திற்கு அழைத்துச் செல்கிறார் ஸ்ரீதர் நமக்கான நேரத்தை இனி தேடியே ஆகவேண்டும்.... நன்றி
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
மதியழகன் 2 years ago
மிகச்சிறந்த கட்டுரை. நானும் கூட இரவு ஒரு மணிக்கு தூங்கி, ஒன்பதரை அலுவலகம் செல்ல எட்டரைக்கு எழும் சிகாமணி!!! தவறோ என்ற எண்ணமும், விடியற்காலை நான்கரைக்கு பனிக்குல்லாவுடன் நடைப்பயிற்சி செல்பவர்களைப் பார்த்து, பொறாமையும் எழும். ஆனால், இப்போது சொல்கிறேன்: அவரவர் பழக்கம்; அவரவர் விருப்பம்; அவரவர் வசதி; அவரவர் வாழ்க்கை!!!
Reply 5 0
Login / Create an account to add a comment / reply.
Aravinth R 2 years ago
Many of my students asked me, Which is the best time for reading? Now I can answer with out any doubt.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
Sivakumar Tv 2 years ago
Good one.. now I can wake up late without guilt. By the way, is it 1000 crores or 100 crores that make a billion?
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.