கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

கர்நாடக முதல்வர்களைக் கலக்கும் ஆப்ரஹாம்

சரண் பூவண்ணா
25 Aug 2024, 5:00 am
0

ழல் எதிர்ப்பாளர் டி.ஜே.ஆப்ரஹாம் கர்நாடகத்தில் மிகவும் பிரபலம். மாநில முதல்வர் சித்தராமய்யாவின் மனைவிக்குச் சில மனைகள் சட்ட விரோதமாக ஒதுக்கப்பட்டது குறித்து ஜூலை தொடக்கத்தில் ஒரு காணொலியைத் தற்செயலாகப் பார்த்தார். மைசூரைச் சேர்ந்த கங்கராஜு என்பவர் தயாரித்த அந்தக் காணொலி ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

“அந்தக் காணொலியைப் பார்த்தேன். அடுக்கடுக்காக அவர் சில தரவுகளைச் சொல்லிக்கொண்டே போகிறார். அத்தனையும் கவனத்துக்குரியவை. அதைப் பார்த்துவிட்டு, ‘அடக் கடவுளே’ என்று கூவினேன். முக்கியமான தகவல்கள் அடங்கியிருந்தாலும் அதை எப்படிக் கோர்வையாக, தெளிவாகச் சொல்வது என்று தெரியாமல் காணொலியைத் தயாரித்திருந்தார்” என்று இந்த விவகாரத்தைத் தான் எப்படிக் கையில் எடுக்க நேர்ந்தது என்று கூறுகிறார் ஆப்ரஹாம் (64). 2000வது ஆண்டுக்குப் பிறகு எஸ்.எம்.கிருஷ்ணா, எச்.டி.குமாரசுவாமி, தரம் சிங், பி.எஸ்.எடியூரப்பா என்று நான்கு முதல்வர்களின் ஊழல்களை வெளிக்கொண்டுவந்த ஆப்ரஹாம் இப்போது சித்தராமய்யாவுக்குக் குறி வைத்திருக்கிறார்.

ஊழல்களைக் கண்டுபிடிப்பதிலும் அதை அம்பலப்படுத்துவதிலும் வல்லவரான ஆப்ரஹாம் இதை ஆராய்ந்தார். சித்தராமய்யாவின் மனைவி பார்வதி பெயருக்கு மைசூரை ஒட்டிய விஜயநகர் என்ற பகுதியில் விலைமதிப்பு மிக்க 14 வீட்டு மனைகள் மாற்றப்பட்டது தொடர்பான ஆவணங்களைத் திரட்டினார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (Mysore Urban Development Authority - MUDA), மைசூருவின் புறநகர்ப் பகுதியான கெசாரே என்ற இடத்திலிருந்து பார்வதிக்குச் சொந்தமான நிலங்கைக் கையகப்படுத்தியதற்கு ஈடாக அந்த மனைகள் வழங்கப்பட்டதாக ஆவணங்கள் தெரிவித்தன. ஆப்ரஹாம் அதை மேலும் விசாரித்தபோது முதல்வருக்கோ அவருடைய மனைவிக்கோ கெசாரே பகுதியில் நிலங்களே இருந்திருக்கவில்லை என்பது தெரிந்தது.

ஜூலை 18இல் மைசூரு நகர லோக்ஆயுக்த காவல் துறை அதிகாரியைச் சந்தித்த ஆப்ரஹாம், புதிதாக அமலுக்கு வந்திருக்கும் பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்யுமாறு புகார் அளித்தார். பிறகு மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணைய (முடா) அதிகாரிகளையும் கீழமை நீதிமன்றங்களையும் அணுகி இது தொடர்பாக மனுக்கள் அளித்தார். அதில் அவருக்கு எந்தப் பயனும் கிட்டவில்லை.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நாட்டை எப்படி பாதுகாப்பது?

ராமச்சந்திர குஹா 02 Jun 2024

அரசியல் ‘சதி’ என்று பதில்

இதற்கிடையே முதல்வர் சித்தராமய்யா, கர்நாடக மாநில காங்கிரஸ், துணை முதல்வர் டி.கே.சிவகுமார் என்று அனைவருமே இந்தப் புகாருக்கு ஆதாரமில்லை என்றும் கர்நாடக மாநில அரசைக் கவிழ்க்க செய்யப்படும் சதி என்றும் பதில் அளித்தனர். என்ன காரணத்தாலோ ஜூலை மாதம் கூடிய கர்நாடக சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைப் பெரிதாகக் கையில் எடுக்கவில்லை.

ஆளுநர் உதவினார்

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை ஆகஸ்ட் 6இல் நேரில் சந்தித்தார் ஆப்ரஹாம். அதற்குப் பிறகு சம்பவங்கள் வேகமாக நடக்கத் தொடங்கின. இந்தப் புகார் தொடர்பாக விளக்கம் தருமாறு முதல்வர் சித்தராமய்யாவுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பினார். அதற்குப் பதில் அளிக்க மறுத்த முதல்வர், ஆளுநர் அத்துமீறுவதாகவும் சட்டப்படியாக தன்னிடம் விளக்கம் கேட்க அவருக்கு அதிகாரமில்லை என்றும் சாடினார். பிற தரப்புகளிலிருந்தும் முதல்வர் மீது பதில் குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கின.

‘ஏற்கெனவே பல குற்ற வழக்குகளில் சிக்கியவர்தான் ஆப்ரஹாம்’ என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி அவர் மீது குற்றம் சுமத்தியது. அப்போதும்கூட எதிர்க்கட்சிகள் (பாஜக – மதச்சார்பற்ற ஜனதா தளம்) ஆப்ரஹாமுக்கு ஆதரவாகப் பேசவில்லை.

‘சித்தராமய்யா மீது வழக்கு தொடுக்கலாம்’ என்று ஆப்ரஹாமுக்கு அனுமதி வழங்கினார் ஆளுநர் தாவர்சந்த் கெலாட். “இப்படி வழக்கு தொடுக்க அனுமதிக்கலாமா என்று சிந்தித்துப் பார்க்காமலேயே அனுமதி தந்திருக்கிறார் ஆளுநர், ஏற்கெனவே பின்பற்றுப்பட்டுவந்த சட்டக் கொள்கைகளுக்கு மாறாக நடந்துவிட்டார்” என்று முதல்வர் சித்தராமய்யா கடுமையாக விமர்சித்தார்.

ஆப்ரஹாமைத் தவிர ஸ்நேஹமாயி கிருஷ்ணா, பிரதீப் குமார் என்று வேறு இருவரும் இதே குற்றச்சாட்டுகளை அளித்துள்ளனர் என்பதை ஆளுநர், காரண விளக்கம் கேட்டு முதல்வருக்கு அனுப்பியிருந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார். அந்த இருவரும் முதலில் புகார் அளித்தும், ஆளுநர் அதன் மீது கவனம் செலுத்தாமல்தான் இருந்தார், ஆப்ரஹாம் கூறியவுடன் சுறுசுறுப்படைந்தார் என்று மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அத்துடன், புகார் அளித்த வேறு இருவருடைய பெயர்களையும் ஆளுநர் சேர்த்தது சட்டத்துக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் வாசியுங்கள்... 50 நிமிட கவனம்

பாசிஸத்துக்கான ஆதரவா ஊழல் எதிர்ப்பு? சமஸ் பேட்டி

10 Jan 2024

ஆப்ரஹாம் மீதே வழக்கு

ஆப்ரஹாம் நம்பத்தகாதவர் என்று கூறி, ஒரு கோடி ரூபாய் கேட்டு அரசு அதிகாரியை மிரட்டியதாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் அவர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தது கர்நாடக காவல் துறை. “இந்தப் பொய் வழக்குகள் என்னை மனம் கலங்கத்தான் செய்கின்றன, ஆனாலும் ஊழலை ஒழிக்கும் என்னுடைய முயற்சிகளிலிருந்து பின்வாங்கமாட்டேன், இந்தப் புகாரால் எனக்கு நேரும் துயரங்களைத் தாங்கிக்கொள்வது என்று முடிவுசெய்துவிட்டேன்” என்கிறார் ஆப்ரஹாம்.

ஆப்ரஹாம் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தன்னுடைய பெயருடன் ‘இந்துஸ்தானி’ என்றும் சேர்த்துக்கொண்டிருக்கிறார். ஊழல் எதிர்ப்பாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். இந்தியாவில் நடைபெறும் மாநிலத் தேர்தல், தேசியத் தேர்தல் தொடர்பான ஆய்வுகளையும் காணொலியாகப் பதிவிடுகிறார். அனைவருக்கும் பொது சிவில் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு போன்றவை குறித்தும் காணொலிகளை வழங்கியிருக்கிறார். கல்வி நிலையங்களுக்கு ஆலோசகராகச் செயல்படுகிறார். ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்குச் செலவிட இப்படிக் கூடுதலாக வேலை செய்து சம்பாதிக்கிறார்.

சொத்துகள் தொடர்பாக பிறர் கொண்டுவரும் பத்திரங்களையும் இதர ஆவணங்களையும் கவனமாகர் பரிசீலித்து, அதில் குறைகள் இருந்தால் சரிசெய்துகொள்ள ஆலோசனை வழங்குகிறார். இப்படி அடுத்தவருக்கு ஆலோசனைகளைக் கூறும் சமயத்திலேயே, நில உடைமைப் பத்திரங்களில் எப்படியெல்லாம் ஊழல் செய்கிறார்கள் என்பதையும் கவனித்து குறிப்புகளை எடுத்துக்கொள்கிறார். பெங்களூருவைச் சேர்ந்த ஆப்ரஹாம் புனித ஜெர்மெய்ன் பள்ளி, கிறிஸ்தவக் கல்லூரி (இப்போது பல்கலைக்கழகம்), ஆர்சி கல்லூரி ஆகியவற்றில் படித்தவர். ஆனால் சட்டம் படித்தவரல்ல.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் ஆப்ரஹாம். அவருடைய பெற்றோர் இருவரும் அரசு ஊழியர்கள். 25 ஆண்டுகளுக்கு முன்னால் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை ஊடகங்கள் சில கடுமையாக விமர்சித்தபோது அதற்கு எதிராகக் களம் இறங்கினார் ஆப்ரஹாம். அதுதான் அவருடைய பொது வாழ்க்கையின் தொடக்கம்.

“நிர்வாகம், அரசு என்று அனைத்திடமும் முறையிட்டும் நீதி கிடைக்காத மக்களுக்கு கடைசி புகலிடம் நீதித்துறை மட்டுமே, அதன் நீதியரசர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது கூடாது என்பதற்காக அப்போது களத்தில் இறங்கினேன்” என்கிறார் ஆப்ரஹாம். “மக்களுடைய நலனுக்காக இப்படிக் களத்தில் போராடுவதால் நான் இழப்பது ஏராளம், அதை இந்த நேரத்தில் பட்டியலிட விரும்பவில்லை, மேலும் அது என்னால் பலனடைந்த பலரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும்” என்கிறார்.

பகுஜன் சமாஜ் வேட்பாளர்

கர்நாடக சட்டமன்றத்துக்கு பெங்களூரு நகரிலேயே இருக்கும் கே.ஆர். புரா தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளராக 2003இல் போட்டியிட்டு தோற்றார். பிறகு வட கர்நாடகத்தில் உள்ள பீதர் தெற்கு தொகுதியில் 2013, 2018 ஆண்டுகளில் போட்டியிட்டார். தனியார் தொழிலதிபர் அசோக் கெனிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களுக்குக் கூறுவதற்காகவே அந்த இரு முறை தேர்தலில் போட்டியிட்டேன் என்று கூறும் ஆப்ரஹாமால் 2013இல் கெனியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. ஆனால், 2018இல் அவர் தோற்றார்.

பழைய புகாரில் கைது

பெங்களூரு – மைசூரு விரைவுப் பாதை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக 2012இல் குற்றஞ்சாட்டினார் ஆப்ரஹாம். அதற்கும் 11 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தொழிலதிபரைத் தாக்கியதாக பதிவாகியிருந்த புகாரின் பேரில் அவரைக் கைதுசெய்தது காவல் துறை!

அவர் மீது அவதூறு வழக்குகள் சில பதிவாகியுள்ளன. அதில் ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்துவிட்டு பிறகு அதை ரூ.1 லட்சமாகக் குறைத்தது.

‘முடா’ விவகாரம் என்ன?

கையகப்படுத்திய நிலத்துக்கு ஈடாகத்தான் பார்வதிக்கு நிலம் வழங்கப்பட்டதாக ‘முடா’ கூறுவதே உண்மையல்ல, மைசூருவின் புறநகர்ப் பகுதியான கெசாரேவில் பார்வதிக்குச் சொந்தமாக நிலம் இருந்ததே இல்லை, அதை ‘முடா’ ஆக்கிரமிக்கவும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் ஆப்ரஹாம்.

2004இல் அந்த மனைகளைப் பார்வதியின் சகோதரர் வாங்கியதாகவும் பிறகு அதை அவருக்கு தானமாக கொடுத்ததாகவும் கூறப்படுவதும் உண்மையல்ல என்கிறார். கெசாரேவில் உள்ள மனைகள் குடியிருப்புக்காக மேம்படுத்தப்பட்டதும் புதிய பெயரிட்டு அழைக்கப்பட்டதும் பிறகு விநியோகிக்கப்பட்டதும் 2001இல் நடந்தது, அதை 2004இல் பார்வதியின் சகோதரரால் வாங்கியிருக்கவே முடியாது என்கிறார்.

கெசாரேவில் தனக்கு நிலம் இருந்ததாகவும் அதை முடா கையகப்படுத்தியதால் உயர் மதிப்புள்ள 14 மனைகள் தனக்கு ஈடாக வழங்கப்பட்டதாகவும் சட்ட விரோதமாக உரிமை கொண்டாடுகிறார் முதல்வர் சித்தராமய்யா என்பது ஆப்ரஹாமின் வாதம்.

எஸ்.எம்.கிருஷ்ணா

லஞ்ச - ஊழல் எதிர்ப்பு இயக்கம், சூழல் பாதுகாப்பு அரங்கு ஆகியவற்றின் தலைவர் என்ற வகையில் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராக முதல் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார் ஆப்ரஹாம். வனப் பகுதியில், சட்டத்துக்குப் புறம்பாக கனிம அகழ்வை மேற்கொள்ள அனுமதித்தார் என்பது கிருஷ்ணா மீதான குற்றச்சாட்டு. 1999 முதல் 2004 வரையில் முதல்வராக இருந்தபோது, சொந்த ஆதாயத்துக்காக வனப்பகுதியில் கனிம அகழ்வுக்கு அனுமதி தந்தார் கிருஷ்ணா என்று குற்றஞ்சாட்டியிருந்தார். அந்தப் புகாரை விசாரிக்குமாறு கர்நாடக தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 2012இல் உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவு மீது தடையாணை பிறப்பித்தது.

தரம் சிங் முதல்வராக இருந்தபோது ‘விவசாய நிலங்கள்’ என்று சிலவற்றை வகைப்படுத்தி, அவற்றிலிருந்து இரும்புத் தாதுவை எடுத்துக்கொள்ளலாம் என்று தாற்காலிக அனுமதி வழங்கினார், அதன் மூலம் மாநில அரசுக்கு ரூ.23 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது என்று ஆப்ரஹாம் சுட்டிக்காட்டினார்.

சாய் வெங்கடேஸ்வரா மினரல்ஸ், ஜன்தகால் சுரங்க நிறுவனம் ஆகியவற்றுக்கு 55 ஏக்கரில் கனிம அகழ்வுக்கு, சொந்த ஆதாயத்துக்காக அனுமதி வழங்கினார் என்று முதல்வர் எச்.டி.குமாரசுவாமி மீது குற்றஞ்சாட்டினார் ஆப்ரஹாம். குமாரசவாமி இப்போது ஒன்றிய அரசில் அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.

முகமூடி நிறுவனங்கள் மூலம் கையூட்டு பெற்றார் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா என்று ஆப்ரஹாம் கூறிய குற்றச்சாட்டை விசாரித்த பாஜக தலைமை, அவரை 2021இல் முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது.

ராமலிங்கம் கட்டுமான நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி, அதில் கிடைத்த கையூட்டு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றியதாக பி.எஸ்.எடியூரப்பா அவரது மகன் விஜயேந்திரா, பேரன் சசீதர் மாராடி, மாப்பிள்ளை சஞ்சய் ஸ்ரீ, அமைச்சர் டி.சோமசேகர், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் மீதும் குற்றஞ்சாட்டினார் ஆப்ரஹாம். எடியூரப்பா ரூ.12 கோடி லஞ்சம் வாங்கினார் அதில் ரூ.5 கோடி கல்கத்தா நிறுவனங்களிடம் பெற்றது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

எடியூரப்பா மீது வழக்கு தொடுக்க ஆளுநர் வஜுபாய் வாலாவை அணுகினார் ஆப்ரஹாம். அவர் அனுமதி தரவில்லை. பிறகு 2011இல் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியவர்களில் ஆப்ரஹாமும் ஒருவர். அப்போது ஆளுநராக இருந்த ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் வழக்கு தொடுக்க அவர்களுக்கு அனுமதி வழங்கினார். சிராஜின் பாஷா, கே.என்.பால்ராஜ் என்ற இரு வழக்கறிஞர்களும்கூட எடியூரப்பா மீது வழக்கு தொடுக்க ஆப்ரஹாமுடன் சேரந்து புகார்களை அளித்தனர்.

© த பிரிண்ட்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள் 

இந்துத்துவத்திடம் தடுமாறும் கர்நாடக காங்கிரஸ்
கர்நாடகம்: இந்துத்துவத்தின் தென்னக ஆய்வுக் கூடம்
மகாராஷ்டிரம் - கர்நாடகம் எல்லையில் என்ன பிரச்சினை?
நாட்டை எப்படி பாதுகாப்பது?
பாசிஸத்துக்கான ஆதரவா ஊழல் எதிர்ப்பு? சமஸ் பேட்டி

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி


1





மக்கள் அமைப்பைக் கண்டு அஞ்சுவது ஏன்?மணிப்பூர் கலவரம்மின் வாகனம்ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டுகாவிரி உரிமை மீட்புக் குழுசாராயம்சர்வதேச உதாரணங்கள்கழிவு மேலாண்மைஇலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வருமா?இரண்டாம் நிலைத் தலைவலிதனிப்பாடல்கள்மன்னார்குடி அன்வர் கடை புரோட்டாசமஸ் உதயநிதி ஸ்டாலின் அருஞ்சொல் கட்டுரைமூட்டுத் தேய்மானம்இலங்கை தமிழர்கள்ஜாதியும்ஜோக்அப்பாவுவின் யோசனை ஜனநாயகத்துக்கு முக்கியமானதுவரவு - செலவுஉள்ளமைபட்டத்து யானைகள்திருக்குமரன் கணேசன் புத்தகம்விபி சிங் சமஸ்ஒரு செய்திஆட்சியாளர்கள்தடாகம் ஊராட்சிலவ் யூ லாலுநிகில் டே கட்டுரைஇந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலைஅருஞ்சொல் தலையங்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!