கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 3 நிமிட வாசிப்பு

சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணா

பெருமாள்முருகன்
25 Mar 2024, 5:00 am
3

மியூசிக் அகாடமி 1929ஆம் ஆண்டு முதல் கர்நாடக சங்கீதக் கலைஞர்களுக்கு வழங்கிவரும், மிகுந்த மதிப்பிற்குரியதாகக் கருதப்படும் ‘சங்கீத கலாநிதி’ விருதை இவ்வாண்டு (2024) டி.எம்.கிருஷ்ணா பெறுகிறார். மிகச் சிறுவயதிலேயே மேடைக் கச்சேரிகளில் பாடத் தொடங்கிய அவர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாகப் பாடிவருகிறார். ‘நெடுங்காலமாக மிகத் திறமையான இசைக் கலைஞராக விளங்கும் அவர் இந்த விருதுக்குத் தகுதியானவர்’ என்று விருது அறிக்கை கூறுகிறது.

பல்லாண்டுகளாகப் பாடிவரும் அவர் ஒன்றையே தேய்ந்துபோகும் அளவு திரும்பச் செய்யும் இயல்புடையவர் அல்ல. அகத்திலும் புறத்திலும் பல பரிசோதனைகளை முன்னெடுக்கும் தேடல் நிரம்பியவர். எல்லாத் தரப்பினருடனும் இசைக் கலைஞராகத் தம் உரையாடலை நிகழ்த்துவதும் அனைவரின் குரலுக்கும் உரிய மதிப்பு கொடுத்துக் கேட்பதும் அவரது பரிசோதனைகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தமிழ்நாட்டுக்கு அப்பால்…

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, தமிழர்கள் வசிக்கும் பகுதியில் என்றில்லாமல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அவரது இசைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கேரளத்தின் எந்தக் கலை விழாவும் டி.எம்.கிருஷ்ணா இல்லாமல் நிறைவுறாது என்று சொல்லும் வகையில் அவருக்கு ரசிகர்கள் உண்டு. கேரள மக்களின் பெருவிருப்பத்தை ஏற்று நாராயண குருவின் பாடல்களுக்கு மெட்டமைத்துக் கச்சேரிகளில் பாடுகிறார். நாராயண குருவின் பாடல்களை மட்டுமே பாடும் தனிக் கச்சேரிகளையும் கேரளத்தில் நடத்துகின்றனர். 

கடம் இசைக் கலைஞரான விக்கு விநாயக்ராம் குழுவுடன் இணைந்து அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிகள் தனித்துவம் வாய்ந்தவை. ‘ஜோகப்பாஸ்’ என்னும் திருநர் இசைக்குழுவுடன் சேர்ந்து அவர் பாடியுள்ள கச்சேரிகள் பல. காஞ்சிபுரத்தில் இயங்கும் ‘கட்டைக் கூத்துச் சங்கம்’ குழுவுடன் அவர் நிகழ்த்தியுள்ள இசை நிகழ்ச்சிகளும் முக்கியமானவை. நாதஸ்வர இசைக் கலைஞர்களான செய்க் மகபூப் சுபானி – திருமதி கலீசபி மகபூப் குழுவினருடன் இணைந்தும் அவர் பல நிகழ்வுகளை நடத்தியுள்ளார். இத்தகைய இசை நிகழ்வுகளில் தம்மை முடிந்தவரை பின்னிறுத்திக்கொண்டு சககலைஞர்களான அவர்களது திறன் வெளிப்பாட்டுக்கு மிகுதியான வாய்ப்புகளை வழங்குவதைக் காண்போர் உணர முடியும். 

கர்நாடக இசைக் கச்சேரிகளின் மரபை உடைத்து வெவ்வேறு துறை சார்ந்த கலைஞர்களுடன் இணைந்து அவர் மேற்கொண்ட இத்தகைய நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களுக்கு இதுவரை கிட்டாத புதிய அனுபவங்களைக் கொடுத்தன. கர்நாடக சங்கீதத்திற்கான இடம் சபாக்களும் கோயில் திருவிழாக்களும்தான் என்றிருந்த நிலையை இவை மாற்றின. இலக்கியத் திருவிழாக்களிலும் பலவகைச் சமூக நிகழ்வுகளிலும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி இத்தகைய நிகழ்ச்சிகளை ரசிப்பதைப் பார்க்க முடிந்தது. மிகச் சிலருக்கு மட்டுமே புரிபடும் ரகசியம் கர்நாடக சங்கீதம் என்று பொதுவெளியில் இருக்கும் எண்ணத்தை இவை மாற்றின. 

புதுமையான முன்னெடுப்புகள்

டி.எம்.கிருஷ்ணா ஓர் இசைக் கலைஞர் மட்டுமல்ல; களச் செயல்பாட்டாளரும் ஆவார். தம் களச் செயல்பாட்டையும் இசை சார்ந்தே புரிபவர் அவர். எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய்க் கழிவுகள் ஏற்படுத்தும் பாதிப்பை மாற்றச் செயல்படும் சுற்றுச்சூழல் அமைப்புகளோடு இணைந்த அவர் தம் பங்களிப்பாகப் ‘பொறம்போக்குப் பாடல்’ பாடி அப்பிரச்சினையைக் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

புறம்போக்கு நிலங்கள் எவர் ஒருவருக்கும் சொந்தமல்ல, அனைவருக்குமான பொதுவெளிகள் அவை என்பதை அப்பாடல் விரிவாக எடுத்துச் சென்றது. ஒருவரைத் திட்டுவதற்குப் ‘பொறம்போக்கு’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது உண்டு. வசைச்சொல்லாக மாறிவிட்ட அதைத் தம் இசையால் மீட்டெடுத்தார் என்றே சொல்லலாம். அப்பாடலை வெளியிட்ட சுற்றுச்சூழல் குழுவினர் ‘டி.எம்.கிருஷ்ணா ஒரு பொறம்போக்கு’ என்று அழைத்து மகிழ்ந்தனர். அவர் அனைவருக்கும் சொந்தமானவர் என்னும் பொருளில் அந்த அழைப்பு அமைந்தது.

துப்புரவுத் தொழிலாளர் நலனுக்காகச் செயல்பட்டுவரும் பெஜவாடா வில்சனுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது ‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்’ பற்றி ஒரு பாடல் உருவாக்கலாம் என்னும் எண்ணம் டி.எம்.கிருஷ்ணாவுக்குத் தோன்றியது. அதை என்னிடம் பகிர்ந்துகொண்டார். ‘மலம் அள்ளலாமா – கைகள் மலம் அள்ளலாமா’ என்னும் பல்லவியைக் கொண்ட கீர்த்தனை ஒன்றை எழுதிக் கொடுத்தேன். அதைப் பல கச்சேரிகளில் அவர் பாடினார். தமிழ்நாட்டில் பெரியார் சிலையை அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபோது ‘எந்தச் சிலையாக இருந்தாலும் அது ஒரு கலைஞனின் கைவண்ணம். அதைச் சிதைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது’ என்று சொன்னார்.

அதைப் பொருளாகக் கொண்டு நான் எழுதிய ‘சிலைகள் எல்லாம் கலையின் வடிவம்’ என்னும் பாடலையும் பாடினார். அதைத் தொடர்ந்து பெரியாரைப் பற்றி நான் எழுதிய ‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’ என்னும் பாடலையும் பாடி கடந்த 2023 மார்ச் மாதம் வைக்கம் போராட்ட நூற்றாண்டுத் தொடக்கத்தின்போது வெளியிட்டார். அது பல்லாயிரம் பேரிடம் சென்று சேர்ந்தது. கிறித்தவ, இஸ்லாம் மதப் பக்திப் பாடல்களையும் கச்சேரிகளில் தொடர்ந்து பாடிவருகிறார். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

பெருமாள்முருகன் 01 Apr 2023

வாழ்த்துகள்...

சென்னையில் உள்ள ஊரூர் ஆல்காட் குப்பத்தில் அவர் தொடர்ந்து பல்வேறு கலை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இவ்வாண்டு பிப்ரவரி இறுதியில் அங்கு நடைபெற்ற அவரது இசைக் கச்சேரியில் ஆறு பாடல்களைப் பாடினார். அவ்வூரைச் சேர்ந்த மீனவர் குடும்பங்கள் பெருந்திரளாக வந்திருந்து அக்கச்சேரியைக் பெருங்கொண்டாட்டம் ஆக்கினர். பாபாசாகேப் அம்பேத்கர் பற்றிய காவடிச் சிந்தை அவர் பாடி முடித்தபோது மக்களின் சீழ்க்கைச் சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று. கர்நாடக சங்கீதக் கச்சேரியில் இப்படிச் சீழ்க்கைச் சத்தம் ஒலிப்பதை டி.எம்.கிருஷ்ணாவின் நிகழ்ச்சிகளில் மட்டுமே காண முடியும். சமீபத்தில் ‘சங்க இலக்கியக் கீர்த்தனைகள்’ என்னும் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார். சங்க இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் தம்மாலான முயற்சியாக இதை அவர் காண்கிறார். 

இசை போன்ற கலைத் துறையில் ஈடுபட்டுச் சாதனை புரியும் கலைஞர்கள் பெரும்பாலும் அத்துறை சார்ந்த அனுபவ அறிவை மட்டுமே கொண்டிருப்பார்கள். அதன் நுட்பங்கள் பற்றி அவர்களால் பேசவோ எழுதவோ இயலாது. டி.எம்.கிருஷ்ணா பேசவும் எழுதவும் செய்கிறார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நூல்கள் மிகுந்த கவனம் பெற்றவை. ’கர்னாடக சங்கீதத்தின் கதை’ என்னும் நூலை எழுதியுள்ளார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றி மிகுந்த மரியாதையுடன் விமர்சனப்பூர்வமாக அவர் எழுதிய கட்டுரை முக்கியமானது. அது தமிழில் சிறுநூலாக வெளியாகியுள்ளது. மிருதங்கம் வாசிப்போர் பற்றி மட்டுமே இசை ரசிகர் அறிந்திருப்பர். மிருதங்கம் செய்வோர் பற்றி விரிவாக ஆராய்ந்து ‘செபாஸ்டியன் குடும்பக் கலை’ என்னும் விரிவான நூலை எழுதினார். அது இசையுலகில் இருக்கும் சாதிரீதியான பாகுபாட்டை விரிவாகப் பேசி நல்லதொரு உரையாடலை உருவாக்கியது. 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

மாட்டில் ஒலிக்கும் தாளம்

டி.எம்.கிருஷ்ணா 23 Jan 2022

இவ்வாறு இசைக் கலைஞர் என்னும் அடையாளத்தை ஒருபோதும் மறவாமல் சமூகத்தின் பல தளங்களில் தம் எதிர்வினைகளை நிகழ்த்திவரும் டி.எம்.கிருஷ்ணாவுக்குச் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்கி மியூசிக் அகாடமி பெருமை பெற்றுள்ளது. விருது அறிவிப்பில் ‘சமூக மாற்றத்திற்கு இசையை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்துகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளது வெறும் புகழ்ச்சியல்ல; பேருண்மை. டி.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள். 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325
                      

தொடர்புடைய கட்டுரைகள்                      

டி.எம்.கிருஷ்ணாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?
சங்க இலக்கிய இசைக் கச்சேரி
அப்துல் காதிரும் தியாகராய கீர்த்தனைகளும்
ஹார்மோனியத்தின் கதை
தவிலுக்கு ஒரு சரியாசனம் தந்த ஷண்முகசுந்தரம் பிள்ளை
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்
மாட்டில் ஒலிக்கும் தாளம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


7






பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Prabhu   9 months ago

டி எம் கிருஷ்ணா அவர்கள் பெரியாரைப் பற்றி பாடி விட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல், கர்நாடக இசையை தனது பக்தியை மூலதனமாக வைத்து கற்றுக்கொண்டு அந்த கலையை (craft) கைவரப் பெற்றவுடன் அதை துஷ்பிரயோகம் செய்யும் விதமாக கடவுள் மறுப்பாளர் பெரியாரை புகழ்ந்து கர்நாடக இசையிலேயே பாடியது தவறு என்று பிதற்றும் சிறிய மனிதர்கள் இருக்கும் இந்த பண்பாட்டுப் பரப்பில், கிருஷ்ணாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வரும் கட்டுரைகள் அனைத்துமே வரவேற்பை பெற வேண்டியவை. எதையாவது சொல்லி பரபரப்பில் தம்மை வைத்துக் கொள்ள வேண்டிய பரிதாபம் கிருஷ்ணாவுக்கு இல்லை என்பது ஆறுதல்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

GOPALAKRISHNAN Subramaniam   9 months ago

Valuable writings...

Reply 2 0

S S Selvaraj   9 months ago

மிக வெளிப்படையாக இயங்கி, சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டி, அடிப்படை மாற்றங்களின் தேவையை முன்வைக்கும் ஒரு கலைஞனின் உடன் நிற்க அக்கறையுள்ள அனைவரும் முன்வர‌ வேண்டும். மாறாக‌ டி.எம்.கிருஷ்ணாவைத் தூற்றுவது கேவலமானது.

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

ஸ்ரீவில்லிபுத்தூர்சீனா எப்படிக் கண்காணிப்புக்குப் பழகியிருக்கிறது?படுகுழியில் தள்ளிவிடக்கூடும் ராகுலின் தொடர் மௌனம்பிராமணர் என்றால் வர்ணமா? ஜாதியா?இந்தியப் புரட்சிதெற்காசியாவில் ஜனநாயக அழுகல்!ஹார்னிமன்இன்சுலின்சிபி மன்னன்கனல் கண்ணன்நீதிபதியின் அதிகாரம்ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம்ஊடக அரசியல்ஊபர்ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுவரையறைஅவுனிகவிதைநுரையீரல்தேக்கம்அசாஞ்சேதிமுகமஹுவா மொய்த்ராஆசியாட்டிக் ராயல் சொசைட்டிபுனித உடன்படிக்கைபாலஸ்தீனத்தை ஏன் கைவிடுகிறீர்கள்?கல்பாக்கம்வத்திராயிருப்புஇந்திய சோஷலிஸம்ஆனந்த்அக்கறையுள்ள கேள்விகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!