கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை 4 நிமிட வாசிப்பு

செந்தில் பாலாஜி: திமுகவை இழுக்கும் சுழல்

சமஸ்
18 Jul 2023, 5:00 am
6

மிழக அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சுற்றி மோடி அரசின் வருமான வரித் துறையினரும் அமலாக்கத் துறையினரும் முற்றுகையிட்டுக்கொண்டிருந்த நாட்களில் நான் தாண்டிக்குடி வனப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தேன். செந்தில் பாலாஜி விவகாரம் போன்ற விஷயங்களை அடித்தட்டு மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை உள்வாங்க இந்தப் பயணம் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

ரொம்பவும் சிக்கலான ஒரு விவகாரம் இது. இந்தப் பக்கம் சரி அல்லது அந்தப் பக்கம் சரி என்று நியாயமான மனிதர்களால் முடிவெடுக்க முடியாத ஒரு விவகாரம். அதாவது, சகல தரப்பினரும் தவறிழைக்கும் விவகாரம். சுருக்கமாக அந்தக் கதையை நாம் சொல்லிப் பார்ப்போம். 

செந்தில் பாலாஜி போன்ற ஒரு நபர் மிக வேகமாக அரசியலில் அடுத்தடுத்த கட்டங்கள் நோக்கித் தாவுகிறார். சரியாக இரு தசாப்தங்களுக்குள் மதிமுக, திமுக, அதிமுக, அமமுக, திமுக என்று அடுத்தடுத்து ஐந்து முறை கட்சி மாறுகிறார். மிகச் சாதாரணமான குடும்பப் பின்னணியைக் கொண்டவர் இன்று தமிழகத்தில் அதிகமான பணத்தைக் கையாளும் முன்னணி அரசியலர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார்.

இந்த அரசில் இரண்டு முக்கியமான துறைகள் அவர் வசம் அளிக்கப்பட்டிருந்தன. மின்சார விநியோகம், மது விற்பனை இரண்டுமே தமிழ்நாட்டில் நிறைய சீர்திருத்தம் வேண்டி நிற்கும் இடங்கள். செந்தில் பாலாஜி ஒரு நிர்வாகியாக இந்த இரண்டாண்டுகளில் இந்தத் துறைகளில் உருப்படியாக எதையும் செய்யவில்லை; சொல்லப்போனால், மின் தடை அரசுக்குப் பெரும் கெட்ட பெயரை உருவாக்கியுள்ளது. சட்டத்துக்குப் புறம்பாக கூடுதல் விலையில் மது விற்கப்படுவதும், அனுமதி இல்லாமல் பல இடங்களில் பார்கள் நடத்தப்படுவதும் செந்தில் பாலாஜி ஒரு நிழல் ராஜ்யம் நடத்துவதைப் பட்டவர்த்தனம் ஆக்கியுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அரசுப் பணி வழங்க லஞ்சம் வாங்கி ஏமாற்றியதான குற்றச்சாட்டும், அது சார்ந்த வழக்குகளும் செந்தில் பாலாஜியின் காலைச் சட்டபூர்வமாகச் சுற்றியிருக்கின்றன. புதிய அரசிலும் பெரும் ஊழல் பணத்தில் அவர் மிதக்கிறார் எனும் பிம்பம் எதிர்க்கட்சிகள் வழி அரசியல்பூர்வமாக அவரை விழுங்க வாய் பிளந்திருக்கிறது.

எப்படி உருவானார் செந்தில் பாலாஜி? சிறந்த பேச்சாளரா, வெகுமக்களை வசீகரிக்கும் திறன் கொண்டவரா, அரசியலில் ஒரு புதிய செயல் திட்டத்தையோ கருத்தையோ ஆக்கபூர்வமான அணுகுமுறையையோ முன்வைத்துக் கவனம் ஈர்ப்பவரா அல்லது  புதிதாக உருவெடுக்கும் தலைமுறையின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பவரா? அரசியலில் மிகப் பழமையானதும் அயோக்கியத்தனமானதுமான ஒரு முறையற்ற பாரம்பரியத்தின் புதிய தலைமுறைப் பிரதிநிதி அவர்.

பெரும்பான்மைச் சாதிப் பின்புலம், கட்சித் தலைமையிடம் பாசாங்கு விசுவாசம், களப் பணிகளில் மூர்க்க உழைப்பு, கிடைக்கும் அதிகாரத்தின் வழி உருவாக்கிக்கொள்ளும் தரகர்த்தனம், தன் பாதையில் ஏற்படும் தடைகளை ஆள் பலத்தாலும் பண பலத்தாலும் அடித்து நொறுக்கும் தாதா அணுகுமுறை, இவற்றின் ஒட்டுமொத்தச் சேர்க்கையாக உருவாகும் ஏவல் அரசியலர்களைக் குறிப்பிட இந்தியில், ‘தாதாகிரி’ என்று ஒரு சொல் உண்டு. தமிழ்நாட்டின் புதிய தலைமுறை தாதாகிரி செந்தில் பாலாஜி. பிரச்சினை என்னவென்றால், இந்தியாவின் எல்லாக் கட்சிகளிலும் பல தாதாகிரிகள் இருக்கிறார்கள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

தேசிய ஊழலை மறைக்கவே சிசோடியா கைது

யோகேந்திர யாதவ் 03 Mar 2023

திமுகவின் துடிப்பான தாதாகிரியாக இன்று பார்க்கப்படும் செந்தில் பாலாஜிக்கு அரசியல் சந்தையில் எவ்வளவு மவுசு இருக்கிறது என்பதையே அவர் கடந்து வந்திருக்கும் அரசியல் பாதையும், திமுக தலைமை அவருக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும் காட்டுகின்றன.

பாஜக அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் முற்றுகைக்கான நோக்கங்களில், பாஜகவை நோக்கி செந்தில் பாலாஜியை இழுப்பதற்கான உத்தியும் இருக்கலாம் எனும் பார்வை நிராகரிக்கக் கூடிய ஒன்றல்ல. நாட்டின் பல மாநிலங்களில் மாற்றுக் கட்சிகளின் தாதாகிரிகளை பாஜக தன் பக்கம் இழுத்தே இன்று இவ்வளவு அதிகாரத்தைக் குவித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அரசாங்கத்தின் அமைப்புகளில் தாதாகிரிதனத்தை வளர்த்தெடுப்பதை டெல்லியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் தொடர்ந்து செய்துவந்திருக்கின்றன.

இத்தகைய பின்னணியில், ஓர் அரசியல் விமர்சகர் மிகுந்த நிதானத்தோடு இத்தகு விகாரங்களை அணுக வேண்டி இருக்கிறது. ஏன் எல்லாக் கட்சிகளிலும் தாதாகிரிகள் செல்வாக்கோடு திகழ்கிறார்கள் என்றால், இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான ஓர் அம்சமாக அது இருக்கிறது; ஏன் இந்திய ஜனநாயகத்தில் தாதாகிரித்தனம் முக்கியமான ஓர் அம்சமாகத் திகழ்கிறது என்றால், இந்தியச் சமூகத்தின் முக்கியமான ஓர் அம்சமாக அது இருக்கிறது. ஒரு சமூகத்தில் கருப்புப் பணமும் ரௌடித்தனமும் எந்த அளவுக்குக் கோலோச்சுகின்றனவோ அந்த அளவுக்கு தாதாகிரிகள் செல்வாக்கு படைத்தவர்களாகத் திகழ்வார்கள்.

சரி, எல்லாக் கட்சிகளிலும் தாதாகிரிகள் இருக்கிறார்கள் என்பதாலேயே ஒரு கட்சி தாதாகிரித்தனத்தை நியாயப்படுத்த முடியுமா?

ஜனநாயகத்தில் ஓர் எல்லை வரை அரசியல் கட்சிகளுக்கு மக்கள் சில சலுகைகளைத் தருகிறார்கள். தங்கள் கண்களுக்குத் தெரியாத அல்லது நேரடியாகத் தங்கள் கையைக் கொடூரமாகப் பிராண்டாத வரை ஊழலையும்கூட அவர்கள் சகித்துக்கொள்கிறார்கள். இந்த எல்லையை அரசியல் கட்சிகள் தாண்டும்போது கடும் அதிருப்தியோடு பேசலாகிறார்கள். தங்களுக்கான தருணம் வாய்க்கும்போது தண்டிக்கிறார்கள். இந்த எல்லைக்குள்தான் அரசியல் கட்சிகள் பயணப்பட முடியும்.

ஆக்கபூர்வமான ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் குற்றத்தன்மையைக் குறைத்துக்கொண்டே செல்ல வேண்டும். எப்படியும் தாதாகிரிகள் ஜனவிரோதிகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

வெகுஜன மக்கள் இதையெல்லாம் எப்படிப் பார்க்கிறார்கள்? வனத்தில் நான் ஒரு பழங்குடி பெரியவரைச் சந்தித்தேன். தூரத்தில் பொதி மூட்டைகளைச் சுமந்த குதிரையை நடத்தியபடி உடன் வந்த ஓர் இளைஞனைச் சுட்டிக்காட்டிக் கூறினார். “ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் சம்பாதிக்க இந்த மலைப் பாதையில் அவன் இடுப்பொடிய ஆயிரம் நடை நடக்க வேண்டும்; சுமை தூக்க வேண்டும்; அவனுக்குப் பக்கத்தில் வரும் குதிரைக்கும் அவனுக்கும் வாழ்க்கைப்பாட்டில் ஏதாவது வித்தியாசம் உண்டா? அவனுடைய உடன்பிறந்தவள் படித்தாள். இந்த கஷ்ட ஜீவனத்திலிருந்து விடுபட அந்தப் பெண்ணுக்கு உள்ள ஒரே வழி சர்க்கார் வேலை. லட்சங்களில் கேட்டார்கள். எங்கே போவார்கள் ஏழை ஜனங்கள்? கையில் உள்ள எல்லாவற்றையும் விற்று, எல்லோரிடமும் கேட்டு வாங்கித்தான் வேலைக்காகப் பணத்தைக் கொண்டுபோய்க் கொடுக்கிறார்கள் ஜனங்கள். அதிலும் ஏமாற்றுபவர்களை எப்படிப்  பார்ப்பது?” 

கவனியுங்கள். செய்யும் தவறிழும் அறம் பிறழ்ந்து துரோகமிழைப்பவர்கள் என்ற பிம்பம் எவ்வளவு மோசமானது!

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

1,76,000,00,00,000: ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்!

சமஸ் 22 Sep 2021

செந்தில் பாலாஜி இன்று திமுகவில் இருந்தாலும், அவர் எதிர்கொள்ளும் வழக்கு அதிமுகவில் அவர் இருந்த காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவம் தொடர்பானது. திமுக கடந்த காலத்தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது. இப்போது தன்னுடைய கட்சியில் அவர் சேர்ந்துவிட்ட நிலையில், அவரைப் பாதுகாக்க முற்படுகிறது.

செந்தில் பாலாஜியோடு சேர்த்து திமுகவையும் புதைகுழியில் தள்ள பாஜக இதைச் சரியான வாய்ப்பாகப் பயன்படுத்துகிறது. அதிமுக கமுக்கமாக வேடிக்கை பார்க்கிறது. மக்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்கள்.

பாஜக அரசு ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை இது என்று மக்கள் நம்பவில்லை. அமலாக்கத் துறையையும் புலனாய்வுத் துறையையும் தன்னுடைய அரசியல் தாதாக்களாகப் பயன்படுத்தும் அரசு இது. இந்திய வரலாற்றில் இவ்வளவு மோசமாகவும் அப்பட்டமாகவும் அரசின் அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்த ஒரு கட்சி இல்லை. எதிர்க்கட்சிகளை பாஜக வேட்டையாடும் உத்தி இது என்று மக்கள் முழுமையாக அறிந்திருக்கிறார்கள். ஆனால், செந்தில் பாலாஜி தண்டிக்கப்பட வேண்டியவர் என்றும் உறுதியாக நினைக்கிறார்கள்.

திமுக தலைமை செந்தில் பாலாஜி விஷயத்தில் காட்டும் அக்கறையை மிகுந்த சந்தேகத்தோடு மக்கள் பார்க்கிறார்கள். “ஊழலுக்கு எதிராகவும், இதே செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் முந்தைய தேர்தலில் அத்தனை உறுதியாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின் இப்போது ஏன் அவருக்கு இவ்வளவு ஆதரவாக நிற்கிறார்? அப்படியென்றால், முதல்வரின் குடும்பத்துக்குக் கோடி கோடிகளாக செந்தில் பாலாஜி கப்பம் அனுப்புகிறார் என்று எதிர்க்கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டு உண்மையா?” என்ற கேள்வியை என்னிடம் பலர் கேட்டனர்.

ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியலில் எப்போதும் வலிய ஆயுதங்கள் என்றாலும், மோடியின் காலத்தில் அவை மேலும் கூர்மையை அடைந்திருக்கின்றன. பல மாநிலங்களில் பாஜக அரசுகள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானாலும், தேசிய அளவில் சட்டத்துக்குப் புறம்பானதாக இருந்த பல பாதைகளைத் தனக்குச் சாதகமான வகையில் சட்டபூர்வமாக்கி பாஜக வருமானம் பார்த்தாலும்கூட தனிப்பட்ட வகையில் மோடியின் பிம்பம் இன்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு வெளியிலேயே இருக்கிறது; இந்த பிம்பத்தைக் கேடயமாகக் கொண்டே பிரதான எதிர்க்கட்சிகளை ஊழல் கட்சிகளாகச் சித்திரித்து வீழ்த்தியபடி பாஜக முன்னகர்கிறது. 

பாஜகவின் கைக் கருவியாகிவிட்ட அமலாக்கத் துறைக்கு எதிராக திமுக நடத்த விரும்பும் யுத்தம் மிகுந்த அர்த்தம் பொதிந்தது. ஆனால், செந்தில் பாலாஜிக்காக இந்த யுத்தத்தை நடத்த முற்படுவது மிக மோசமான தோல்வியையே திமுகவுக்குத் தரும்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்குக் கடும் விலை கொடுத்த திமுகவை மெல்ல இருளிலிலிருந்து மீட்டு ஆட்சிக்குக் கொண்டுவந்தார் ஸ்டாலின். இப்போது மீண்டும் திமுக மீது  இருள் விழ அவரும் காரணம் ஆகிறார். தேசிய அரசியலில் சென்ற இரு ஆண்டுகளில் கூட்டாட்சி தொடர்பான கதையாடலால் கவனம் ஈர்த்த ஸ்டாலினும் திமுகவும் இப்போது மீண்டும் ஊழல் இருளுக்குள் இழுக்கப்படுகின்றனர்.

செந்தில் பாலாஜி விவகாரம் தனிநபர் ஒருவருடையது இல்லை.  மக்களிடம் தான் கொடுத்த வாக்குறுதிகளை ஸ்டாலின் காக்க வேண்டும்; பொதுவெளியில் உருவாக்கிய நம்பிக்கைக்கு ஏற்ப ஆட்சியை நடத்த வேண்டும் என்றால், திமுகவின் இன்றைய போக்குக்கு முடிவு கட்டப்பட வேண்டும்; தன்னையும் சுற்றி கட்சிக்குள் ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்கு ஸ்டாலின் முகங்கொடுக்க வேண்டும்; இல்லையெனில், திமுக பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்; ஏற்கெனவே இது ஆரம்பமாகிவிட்டது; ஸ்டாலின் சம்பாதித்திருந்த நம்பகத்தன்மைதான் அந்த விலைகளில் முதன்மையானது. 

செந்தில் பாலாஜி ஒரு சுழலாகி இருக்கிறார். திமுக தலைமையின் கால் இப்போது அந்தச் சுழலுக்குள் இருக்கிறது!

- ‘குமுதம்’, ஜூன், 2023

 

தொடர்புடைய கட்டுரைகள்

தேசிய ஊழலை மறைக்கவே சிசோடியா கைது
1,76,000,00,00,000: ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்!
ரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5

1

பின்னூட்டம் (6)

Login / Create an account to add a comment / reply.

K Chitra   9 months ago

மொத்தத்துல அவர்,, (அவன் போதாது?) ஒரு அமாவாசை

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   9 months ago

DMK வின் முகத்திரை கிழியும் நேரம் இது..சமூக வலைத்தளங்களில் நடுநிலை வேடம் போட்டு இருந்தவர்கள் ed யின் இந்த செயலை விமர்சிப்பது மாய்மாலத்தின் உச்சம். அறம் ஆன்லைன் பாரட்ட பட வேண்டிய ஒன்று

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Raja   9 months ago

சமஸின் மிக மிக சிறப்பான பதிவு. நறுக்கென்று உள்ளது. நாம் தமிழ்நாடு மதச்சார்பற்றது என்று நினைக்கிறோம். இப்போது பலரை பாரதிய ஜனதா மாற்றி இருக்கிறது என்று என் நண்பர்களின் வழியாகவே அறிகிறேன். செந்தில் பாலாஜி விஷயத்தில் கொஞ்ச நஞ்சம் பாரதிய ஜனதா பக்கம் சாய யோசித்தவர்கள் இப்போது உறுதியாக ஒரு நிலை எடுப்பார்கள் என்பதுதான் நிதர்சனம். செந்தில் பாலாஜிக்காக இவ்வளவு வக்காலத்து வாங்குவது மிக பெரிய கேவலம். வருமானத்தின் காரணமாகத்தான் செந்தில் பாலாஜியை காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று  எல்லோருக்கும்...அதிலும் அந்த ஹாஸ்பிடல் நாடகங்கள்! மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கொஞ்சமும் சிந்திக்க தெரியாத தலைமை!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Tamil   9 months ago

பெரிய அளவில் பணங்களும், சிற்றசர்களும் உள்ள கட்சியில் உங்கள் பார்வை வீணே! சரியான அறிவுரை தவறான இடத்தில்..

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Anantharaja R   9 months ago

தமிழகத்தில் குறைந்த பட்ச ஜனநாயக நம்பிக்கையாக திமுக -வை மக்கள் பார்க்கிறார்கள்... திமுக தன் இருப்பையும் முனைப்பையும் தக்க வைக்கும் முயற்சியில், செந்தில் பாலாஜி போன்றவர்கள் திமுக -வையும் திமுக தலைமை அவர்களையும் பரஸ்பரம் பயன்படுத்த முயலுகையில் தனிமனித வரம்பு மீறிய செயல்கள் மக்களை, நிர்வாகத்தை பாதிக்கையில் பாஜக அதை அரசியல் ஆக்காமல் என்ன செய்யும்... திமுக பழைய சாதிய ஆதிக்க தலைமையின் (தாதாகிரிகளின்) கால்களில் மண்டியிட்டு வதை விட கூடுதல் வேகத்துடன் இளைஞர்களிடத்தில் நன்மதிப்பைப் பெற முயல வேண்டும்... பாஜக விடம் இவ்வாறே ஈடுகொடுக்க வேண்டும் அவர்களை போன்றதொரு நடவடிக்கை திமுக -வை பலவீனப்படுத்தக் கூடும்...என்னைப் பொருத்தவரை செந்தில் பாலாஜி -யை கட்சியில் இருந்து விடுவிப்பதே நல்லது.. துரோகம் அவர் செய்து பழக்கப் பட்டதே... நிச்சயம் அது அவரை பாதிக்காது....

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   9 months ago

ஆனால் நீங்கள் சொன்ன அனைத்துமே தலைகீழாக நடக்கும் வாய்ப்புகளே அதிகம்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

புதிய நுழைவுத் தேர்வுநீதிபதிகள்மொழி மீட்புப் பணிகள்உரிமையியல்சர்வாதிகார நாடுவசந்திதேவிமுல்லை நில மக்கள்தேச விடுதலைபெரும் வீழ்ச்சிசக்ஷு ராய் கட்டுரைஜெய் ஷாபழங்குடி கிராமம்பெரியாரின் கொள்கைதரவுகள்யுஏபிஏசோழக் கதையாடல்இதழியலாளர்மூலிகைகள்படிப்பதற்காகவே மன்னார்குடி குடிபெயர்ந்தோம்அலெசாண்ட்ரா வெஷியோ கட்டுரைதிருமாவளவன்கார்கேநேர்மையாககுரல்வளைஜீன் திரேஸ் கட்டுரைதி கேரளா ஸ்டோரிசி.பி.எம்.மத்திய பிரதேச தேர்தல்குஜராத்தியர்களின் பெருமிதம்பேரூட் டு வாஷிங்டன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!