சமஸ் கட்டுரை, ரீவைண்ட் 5 நிமிட வாசிப்பு

1,76,000,00,00,000: ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்!

சமஸ் | Samas
22 Sep 2021, 5:00 am
5

1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்களுக்கும் கொடுத்திருக்க மாட்டார்கள்.

ஞாபகம் இருக்கிறது. அநேகமாக, ‘அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்’ என்று செய்தியைத் தந்த பெரும்பான்மை தேசிய ஊடகங்கள் ‘நாட்டுக்கு இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி’ என்று தொகையை எழுத்தில் கொடுப்பதைக் காட்டிலும், எண்ணாகக் கொடுப்பதிலேயே உவகை அடைந்தன. ஏனென்றால், இதற்கு முன் இவ்வளவு பெரிய எண்ணை ஊடகங்கள் கையாண்டதில்லை.

றிவியலாளர்கள், கணிதவியலாளர்கள்போல எண்களின் உலகத்துக்குள் சஞ்சரித்திருப்பவர்கள் அல்ல ஊடகர்கள். தவிர, இந்தியச் சூழலில் லஞ்சம், ஊழலை வெளிக்கொணர்வதும் விவாதிப்பதும் ஊடகர்களுக்கு அவ்வளவு இலகுவான சமாச்சாரமும் அல்ல. அது உயிர் விளையாட்டு.

ஆட்சியாளர்களிடம் எல்லையற்ற அதிகாரம் இருக்கிறது. வாசல் வழியாகவும் வரலாம்; கொல்லைப்புறம் வழியாகவும் வரலாம் ஆபத்து. ஊடகர் எந்த மிரட்டலுக்கும் அசையாதவர் என்றால், அமித் ஷா பாணியில் செய்தியை வெளியிடுவதற்கே நீதிமன்றத்தின் துணையுடன் சட்டபூர்வத் தடை வாங்கிவிடலாம். இவை எல்லாவற்றிலிருந்தும் விதிவிலக்கான, அரிதான விவகாரம் இது.

அலைக்கற்றை என்ற வார்த்தையையே நாட்டின் பெரும்பான்மை மக்கள் அப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்பட்டனர். ‘இது சரி - தவறு’ என்று விவாதிக்கப் பலருக்கும் புரிபடாத விஷயம். தொகையைக் குறிப்பிட்டிருப்பதோ தலைமைக் கணக்காயர் அறிக்கை. தலைமைக் கணக்காயர் அலுவலகமானது, ஒரு தன்னாட்சி அமைப்பு. அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டது.

ஆக, இந்த எண்ணை உச்சரிக்க, அதாவது இந்த எண்ணை ஊழல் தொகை என்று சொல்லவும் நிரூபிக்கவும் ஊடகங்கள் மெனக்கெட வேண்டியது இல்லை. சட்டரீதியிலான நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இருக்கிறது. ஒரு ‘கட்டுக்குள் வளர்ந்த பிள்ளை’யான இந்திய ஊடகங்களுக்கு அலைக்கற்றை விவகாரத்தில் இருந்த ‘பாதுகாப்பான விளையாட்டு’ அளப்பரிய கிளுகிளுப்பையும் பரவசத்தையும் கொடுத்தது.

இந்திய ஜனநாயகத்தை மேம்படுத்தவும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் (2005) தகவல் உரிமைச் சட்டத்தை மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்திருந்தது. விளைவாக, சின்னதும் பெரிதுமாக நிறைய முறைகேடுகள் ஆதாரத்துடன் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்திய வாய்கள் அப்போதுதான் ஊழலைப் பொதுவெளியில் தயக்கமின்றிப் பேசவும் ஆரம்பித்திருந்தன. இந்தப் பின்னணியில்தான் அது நிகழ்ந்தது.

எண்களை விசாரணையின்றிப் பயன்படுத்துவது ஒரு நாட்டின் அரசியலையும் வரலாற்றையும் எப்படியெல்லாம் மாற்றியமைக்கும் என்பது தொடர்பில் எந்தப் பிரக்ஞையும் இல்லாமலேயே பெரும்பான்மையோர் அதைக் கையாண்டனர்;  உணர்ச்சிவசப்பட்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்; பின்னாளில் உண்மையை அறிந்தபோது திருத்திக்கொண்டவன்.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, தொலைத்தொடர்புத் துறையை ஆ.ராசா கையாண்ட விதம், ராசாவை வழக்கிலிருந்து விடுவிக்கும் இப்போதைய தீர்ப்பு… இவை எல்லாவற்றைக் காட்டிலும் இந்த வழக்கு இந்தியச் சமூகத்திலும் அரசியலிலும் எப்படியான மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறது; அது ஏற்படுத்தியிருக்கும் மோசமான ஒரு விளைவுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது என்பதே நாம் பிரதான கவனம் அளிக்க வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இந்தத் தீர்ப்பு வருவதற்குப் பல காலம் முன்னரே ‘1,76,000,00,00,000’ என்ற எண் பல்லிளித்துவிட்டது. நம்முடைய அமைப்பும் மனமும் எவ்வளவு பெரிய ஓட்டைகளை வைத்திருக்கிறது என்பதைக் காட்டிவிட்டது!

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

சூத்திரதாரி வினோத் ராய்

இந்த மாய எண்ணின் சூத்திரதாரியான தலைமைக் கணக்காயர் வினோத் ராய் தன்னுடைய அறிக்கையில், ‘2008 இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு’ என்று குறிப்பிட்ட தொகையிலேயே நான்கு விதமான அனுமானங்கள் இருந்தன. ரூ.67,364 கோடி, ரூ.57,666 கோடி, ரூ. 69,626 கோடி, ரூ.1.76 லட்சம் கோடி என்று நான்கு அனுமானத் தொகைகளை அவர் தெரிவித்திருந்தார். அதேபோல, மத்தியப் புலனாய்வு அமைப்பின் அறிக்கை, ‘ரூ.35,000 கோடி இழப்பு’ என்றது. அதற்கு முன்பாக விசாரித்த மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு, ‘ரூ.22,000 கோடி’ என்றது.

இப்படி ‘இழப்பு மதிப்பு’ என்று ஒன்றுக்கு ஒன்று முரணாக ஏகப்பட்ட எண்கள். இதில் ‘இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு’ என்ற அனுமானத்துக்கான அடிப்படையாக வினோத் ராய் முன்வைத்தது, 2010இல் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தின்போது அரசுக்குக் கிடைத்த ரூ. 1 லட்சம் கோடி தொகையுடனான ஒப்பீடு! ஏனென்றால், 2008இல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது அரசுக்கு ரூ.10,772 கோடி மட்டுமே கிடைத்தது; அது மிகக் குறைவானது என்றார் வினோத் ராய்.

இந்த அடிப்படையிலேயே ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 122 உரிமங்களையும் ரத்துசெய்துவிட்டு, ஏலம் நடத்த 2012இல் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்த ஏலம் போகும் என்று பேசியவர்களை எனக்குத் தெரியும். அரசாங்கம் ரூ.40,000 கோடி இலக்கு நிர்ணயித்தது. ஆனால், ரூ.9,407 கோடிக்கு மட்டுமே ஏலம் போனது. ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்பது ஊதிப்பெருக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பது அப்போதே அப்பட்டமாகிவிட்டது.

மிகைகளின் ஆபத்து

பின்னாளில் இதுகுறித்து ஒப்புதல் வாக்குமூலமும் அளித்தார் வினோத் ராய். “நிச்சயமாக, ரூ.1.76 லட்சம் கோடி என்பது மிகைப்படுத்தப்பட்ட மதிப்புதான். அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பரபரப்புக்குள்ளாக்க வேண்டும் என்பது நோக்கம் இல்லை. ஆனால், இந்த விஷயத்தின் மீது கவனத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று தனது சுயசரிதையில் எழுதினார். மேலும், “அவ்வளவு பெரிய தொகை என்பதாலேயே பொதுக் கணக்குக் குழு அதை விவாதிப்பதற்கு எடுத்துக்கொண்டது” என்றும் ஒரு பேட்டியில் சொன்னார்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் போலவே, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டிலும் இப்படி மிகைப்படுத்தப்பட்ட அனுமானங்களைச் சொல்லியிருக்கிறார் வினோத் ராய். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முதலில், ‘ரூ.10.7 லட்சம் கோடி இழப்பு’ என்றவர் பிறகு ‘ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு’ என்றார்.

அடிப்படையில், நாட்டின் தலைமைக் கணக்காயர் என்ற பதவியை, கணக்காயம் எனும் அமைப்பையே கேலிக்கூத்தாக்கிவிட்டார் வினோத் ராய். அதன் மீதான நம்பகத்தன்மையை நாசமாக்கிவிட்டார். அவரால் விளைந்த ஒரே நன்மை என்றால், நம்பகத்தன்மை மிக்க ஒரு அதிகாரப் பீடத்தில் அமர்ந்துகொண்டு ஒருவர் சொன்னால், - அவர் என்ன சொன்னாலும் - அதைக் கேட்டுக்கொள்ளும் சூழலில்தான் இந்நாட்டின் அத்தனை அமைப்புகளும் இருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருப்பது மட்டும்தான்! இது எத்தகைய விளைவை உண்டாக்கியிருக்கிறது என்பதை எவரும் எண்ணிப் பார்ப்பதாகத் தெரியவில்லை.

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

உருவான புதிய அரசியல் அலைக்கற்றை

சமகால இந்திய அரசியலின் உரையாடல் போக்கையே வினோத் ராயின் மாய எண் பெரிய அளவில் மாற்றியமைத்துவிட்டது. சமூக நீதி, மதச்சார்பின்மை, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம் இப்படிக் கடந்த நூறாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் அரங்கின் பிரதான தளத்துக்கு மேலேறிவந்த எல்லா ஜனநாயக விழுமியங்களையும் வினோத் ராயின் மாய எண் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

இந்திய அரசியல் விவாத களத்தின் ஆக முக்கியமான கதையாடலாக ஊழலை அது உருவாக்கியது. அரசியலை அளவிடுவதற்கான உச்ச மதிப்பீட்டுக் கருவியாக ஊழலை அது கட்டமைத்தது. விளைவாக, இந்நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் பல சக்திகள் பின்தள்ளப்பட்டன.

புதிய அரசியல் அலைக்கற்றை ஒன்று உருவானது. ‘ஊழல் ஒழிப்பு’ என்ற பெயரில் உருவெடுத்த அந்த அலைக்கற்றையானது தூய்மையியத்தோடும் தேசியத்தோடும் தன்னைப் பிணைத்துக்கொண்டது.

தேசியத்தின் வண்ணத்தில் ஊழல் எதிர்ப்பைப் பேசும், ஊழல் எதிர்ப்பின் பெயரால் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் புதிய தேசியர்களை மையம் நோக்கி அது நகர்த்தியது. ஒரு அண்ணா ஹசாரே அதன் துணை விளைவு, ஒரு அர்விந்த் கெஜ்ரிவால் அதன் துணை விளைவு, ஒரு பாபா ராம்தேவ் அதன் துணை விளைவு, ஒரு மோடி அதன் துணை விளைவு!

இந்தப் புதிய அரசியல் அலைக்கற்றையானது ஊழலை முன்னிறுத்தி ஏனைய எல்லா நியாயங்களையும் அழித்ததோடு, கடைசியில் அது எதை நியாயமாகப் பேசியதோ அந்த ஊழல் எதிர்ப்பிலும் ஓட்டை போட்டதுதான் மாய எண் ஏற்படுத்திய உச்ச சேதாரம்!

சில மாதங்களுக்கு முன்பு தமிழின் முன்னணிப் புலனாய்வு வார இதழ்களில் ஒன்றான ‘நக்கீரன்’ பத்திரிகையின் ஆசிரியர் கோபாலுடன் ஊடகங்களின் சமகாலப் போக்கு தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு விஷயம் இந்தக் கட்டுரையோடு பொருந்தக் கூடியது என்று நினைக்கிறேன். “முன்பெல்லாம் புலனாய்வு இதழ்களில் உள்ளூர் அளவில் அடிக்கடி லஞ்சம், ஊழல்களை அம்பலப்படுத்தும் செய்திகளைக் காண முடியும். இப்போது அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதே என்ன காரணம்?” என்று கேட்டேன்.

நாடு முழுக்கவுமே இப்படி ஒரு போக்கு இருக்கிறது என்றவர் அதை விளக்கினார். “லஞ்ச ஊழல் விஷயங்களை ரொம்ப சிரமப்பட்டுதான் வெளிக்கொண்டு வர்றோம். ஆனா, அதுக்கு உரிய கவனம் இன்னைக்கு மக்கள் மத்தியில இல்லை. முன்னாடிலாம் ஒரு பத்தாயிரம் ரூபா ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டார்னு செய்தி போட்டாக்கூட அவ்வளவு பரபரப்பா பேசுவாங்க. நடவடிக்கை இருக்கும். படிக்குறவங்க நம்ம வேலை பண்ணுற இடத்துல இப்படித் தப்பு நடந்தாலும் அதை வெளியே கொண்டுவரணும்னு தோணுதுங்கன்னு சொல்லிப் பேசுவாங்க. இப்போ அதெல்லாமே மாறிட்டு. ஒரு அதிகாரி கோடி ரூபாயை லஞ்சமா வாங்குறார்னு படத்தோடு போட்டாலும் அதுக்கு எந்தக் கவனமும் இல்லை. இதெல்லாம் ஒரு காசா, குத்தமான்னு ஒரு மனோபாவம் உருவாகிடுச்சு. ஒரு அமைப்புக்குள்ள இருக்குற ஆட்கள் தப்பைப் பொறுத்துக்க முடியாம தகவல் கொடுக்குறப்போதான் பத்திரிகைகள் உள்ளே நுழையுறோம். இப்போ அதுவே குறைஞ்சுடுச்சு!”

நேற்றைக்கு ஆயிரம் லஞ்சங்களுக்கே பதற்றமான மக்களுக்கு ஏன் கோடி ஊழல்கள் இன்று சாதாரணம் ஆகிவிட்டன? நாடு செழித்து, சாமானியர்கள் கைகளிலும் கோடிகள் மலிந்துவிட்டதா? வெவ்வேறு தருணங்களில் நானே பலர் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன், “ஏன் சார், ஒண்ணேமுக்கா லட்சம் கோடிக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு விஷயமா?”

மழுங்கிப்போன பொதுப்புத்தி

ஆம், அலைக்கற்றை விவகாரம் ஊழல் விஷயத்தில் பொதுபுத்தியைக் கூர்மையாக்கவில்லை; மழுங்கடித்துவிட்டது. அலைக்கற்றை விவகாரம் பற்றியெரிந்த நாட்களில் என்னுடைய சகா ஒருவர் சொன்னார், “பொதுவாக, நம் நாட்டில் ஒரு திட்டத்தில் லஞ்சம், ஊழலுக்கான சாத்தியம் என்பது 10% முதல் 30% வரை. அப்படியென்றால், இங்கே ஊழல் நடந்ததாகக் கொண்டாலும், அதிகபட்சம் எவ்வளவு பணம் கை மாறியிருக்கும்? அதிகபட்சம் சில ஆயிரம் கோடிகள்! ஆனால், ரூ.1.76 லட்சம் கோடி என்று திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் வாயிலாக, நாளைக்கு ரூ.10,000 கோடியை ஒருவர் லஞ்சமாகப் பெற்றார் என்றால்கூட அதை ஒரு விஷயமாக மக்கள் கருத முடியாத சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்!”

அப்படித்தான் ஆகிவிட்டது.

இந்திய அரசியல் வர்க்கமானது வினோத் ராய் அனுமானமாக ‘இழப்பு’ என்று குறிப்பிட்ட ரூ.1.76 லட்சம் கோடியை ‘ஊழல்’ என்று மொழிபெயர்த்து, மக்கள் மனதில் வெற்றிகரமாக அதைப் பதித்தும்விட்டது. இன்று ஒரு லட்சம் கோடியை ஒரு அரசியலரோ அதிகாரியோ பணமாக வாங்கி கையும் களவுமாகப் பிடிபட்டாலும் மக்களுக்கு அது பெரிய விஷயம் அல்ல.

சாத்தியமே இல்லாத ஒரு மாய எண்ணின் பெயரால் ஊழலுக்கு எதிரான சொரணையையே மக்களிடம் மழுங்கடித்துவிட்டோம். ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. ஊழல் நடந்ததா, இல்லையா; குற்றம் நிரூபிக்கப்பட்டதா, இல்லையா என்பதல்ல; ஒரு மாய எண்ணிடம் ஒரு தேசமே தோற்றுவிட்டது என்பதுதான் பிரதான பிரச்சினை!
- 2016, ‘தி இந்து’

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


1




1


பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

அப்துல் காதிர்   3 years ago

ஆசிரியர் சமஸ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் தளத்தை டெலிகிராம் செயலியில் தரச் செய்யுங்கள். உங்கள் தளத்தை அணுக அது என்னைப் போன்றவர்களுக்கு எளிய வழியாக இருக்கும்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   3 years ago

CBI Special Court Judge, Justice O.P.Saini, who conducted the proceedings of 2G case under the direct supervision of the Supreme Court, not only exonerated both A. Raja and MK. Kanimozhi, but also criticized the prosecution side on several fronts including the following severe remark. Quote: " I may also add that for the last about seven years, on all working days, summer vacation included, I religiously sat in the open Court from 10 AM to 5 PM, awaiting for someone with some legally admissible evidence in his possession, but all in vain. Not a single soul turned up. This indicates that everybody was going by public perception created by rumour, gossip and speculation. However, public perception has no place in judicial proceedings" Unquote. What else is there to say about the magic figure of Rs. 1.76 lakh crore corruption, except a fabricated case with an ulterior motive of tarnishing the image of both Congress Party and Dravida Munnetra Kazhagam! Vinod Rai's imaginary loss figure came handy to those who were waiting for such an opportunity to damage the image of these two political parties and win in the election to come. The nation had gone into the hands of religious fanatics and crony capitalists. The Nation is undergoing the agony and the kingpin Vinod Rai is enjoying the patronage of the central government who has been given high positions as rewards for misguiding the Nation and fooling its people.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

அனைவரும் சொல்லமறந்த இன்னொன்று உள்ளது. அதாவது இந்த 176000கோடி இழப்பீடு உண்மை என்று வைத்துக்கொண்டாலும் அதை மக்கள்தான் தொலைபேசி் கட்டணமாக அரசுக்கு செலுத்தியிருப்பார்கள். உண்மையில் ஊழல் என்பது தொலைபேசி நிறுவனங்கள் பெற வாய்ப்பிருந்த அதிக மறைமுக இலாபமும், அரசியல்வாதிகள் வாங்கிய இலஞ்சமும்தான்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Seyed Bukhari   3 years ago

சமஸ் அவர்களே!உங்களை பற்றி நீங்களே இந்த கட்டுரையில் அடைப்புக்குள் கூறும் செய்தி தான் இந்த கட்டுரைக்கான சரியான விமர்சனம்.ஒரு பத்திரிக்கையாளராக நீங்கள் எப்படி இதை நம்பினீர்கள் என உள்ளுக்குள் கேட்டுக் கொண்டால் கிடைக்கும் ஒரே பதில் தி.மு.க. லஞ்சம் ஊழல் செய்யும் கட்சி என தொடர்ந்து பரத்தப்பட்ட செய்தியின் விளைச்சல் உங்களையும் விட்டு வைக்கவில்லை.இது ஏதோ புதிதல்ல பெரும்பான்மை மக்களை தாழ்ந்தோர் சூத்திரன் என ஒப்புக் கொள்ள செய்த அதே தந்திரம். பொதுப்புத்தியை நாசப்படுத்தும் பார்ப்பனிய கலாச்சாரம்.இது இடத்திற்கு இடம் பெயரிலும் அடையாளத்திலும் வேறுபடும்.ஆயினும் எல்லாம் இணையும் இடம் அல்லது சங்கமிக்கும் இடம் ஒன்று.அது சுயநலமிக்க வல்லாதிக்கம்.தி.மு.க.வை ஒழிக்க பயன்பட்ட துருப்புச்சீட்டு வினோத் ராய். உண்மை தி.மு.க. வை கீழே உருட்டித்தள்ளியது பார்ப்பனியம்.இது இனியும் தொடரும். திரு.ஸ்டாலின் பலிபீடம் ஏற்றப்பட்டால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.அதிகாரத்திற்கு உடன்பட்டு வாழும் சமுகத்தில் மானுடம் என்பது பொய்யை அடிப்படையாக கொண்டது.ஆதலால் தான் இங்கு குறிப்பிடப்படும் பார்ப்பனியம் எனும் சொல்லை நாகரிகம் கருதி பயன்பசுத்தாதீர்கள் என அறிவுரைக் கூறுவோர் தான் அநேகம்.உண்மை பார்ப்பனியம் என்பதும் மேற்க்கத்தியம் என்பதும் ஜுடாயிஸம் என்பதும் இன்னும் எல்லா அதிகாரமும் மக்களை ஒடுக்கும்.அதை மக்கள் தெரிந்து கொள்ளாத வகையில் முதலில் பொதுப்புத்தியை நாசப்படுத்தும்.பின் சிந்திக்கும் திறனை அழிக்கும்.இதை தாண்டி சிந்திப்போருக்கு நெருக்கடியை உருவாக்கும்.அதை தாங்கி எழுவோரை ஏளனம் செய்யும்.என்றாலும் அவர்கள் எழுகிறார்கள் வாழ்கிறார்கள்.இதோ நிகழ் காலத்தில் திரு.அ.ராஜா.. அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

Reply 14 1

Login / Create an account to add a comment / reply.

Saran Viveka   3 years ago

2G வழக்கும், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கும், அதன் குற்ற பின்னணி வேறுபாடடை தவிர்த்து இன்னொரு விதத்தில் "மிக சிறந்த" எடுத்துக்காட்டுகள். சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிபிஐ கோர்டில் நடைபெற்ற 2G வழக்கை, யாரும், பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கை போல, வாய்தா மேல் வாய்தா வாங்கி வருடக்கணக்கில் இழுத்தடிக்கவில்லை, இந்த நீதிபதிதான் விசாரிக்கவேண்டும், இன்னார்தான் சிபிஐயின் வக்கீலாகவும் இருக்கவேண்டும் என்று யாரும் கேட்கவும் இல்லை...இந்த வழக்கிற்கு குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் எல்லா ஒத்துழைப்பையும் அளித்துக்கொண்டே இருந்தார்கள்.  குற்றம்சாட்டப்பட்ட  ஆ.ராசா தரப்பினர், எந்த விசாரணைக்கும், கேள்விகளுக்கும் எப்போதும் தயார், சாட்சியாகவும் விசாரணைக்கு தயார் என்று முன்னால் நின்றனர் ... ஆனால், அரசு சிபிஐ தரப்போ, சரிவர ஒத்துழைக்காமல் வாய்தா வாங்கிக்கொண்டும், திரும்ப திரும்ப ஒரே கேள்விகளை வெவ்வேறுவிதங்களில் கேட்டுகொண்டு நீதிமன்ற நேரத்தை வீணடித்துகொண்டும் இருந்தார்கள். அதனால்  நீதிபதி  சிபிஐ தரப்புக்கு அடிகடி கண்டனம் தெரிவித்துக்கொண்டு இருந்ததைதான் கண்டோம்.  //A special CBI court which is exclusively trying the 2G scam case on Monday reprimanded the public prosecutor in the case for repeating questions by putting it in a "circuitous manner". Irked over the delay in completing the cross-examination, special CBI judge OP Saini directed senior public prosecutor KK Goel to conclude it "expeditiously" so that trial of the case is not delayed. "The cross-examination started with cut-off date and still we are on cut-off date after so many days. The prayer (of the prosecutor), on the face of it, deserves to be declined, but with all reluctance at my command, the prayer is granted with the direction to complete the cross-examination expeditiously so that the trial is not delayed unnecessarily. It is impressed upon the senior public prosecutor not to repeat the questions by putting the same in different language or in a circuitous manner," the court said.//  இந்த சமயத்தில் "மிக சரியாக" இதற்க்கு நேரடியாக தொடர்பற்ற "நிரா ராடியா டேப்" வெளியிடப்படடதை கண்டு வியக்கேன்..... What a wonderful orchestra!!!! (அந்த டேப்களில் எந்த கிரிமினால் செயலும் இல்லை என்று விசாரித்த சிபிஐ சொல்லிவிட்டது......அதே போல அந்த டேப்பை ஆதாரமாக எடுத்துகொள்ள கோர்ட்டும் மறுத்துவிட்டது).  2ஜி சார்ந்து ஆ.ராஜா ஒரு புத்தகமே எழுதினார். நானே அது சார்ந்து முற்றிலும் வேறு பார்வையில் ஒரு புத்தகம் எழுதலாம். அது ஒரு மிகப்பெரிய சோசியல் எக்ஸ்பிரிமெண்டாகதான் எனக்கு தெரிகிறது. அதற்கான விலையை இன்னும் பத்து  இருபது வருடங்களுக்கு நாம் கொடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டும், வேறு வழியில்லை...... என்று பிரசாந்த் கிஷோர் நேற்று கோவாவில் ஒரு கருத்தரங்கில் சொன்னதுதான் இன்னும் மனதில் விளையாடிக்கொண்டே இருக்கிறது..... ஒற்றை மனிதன் "வினோத் ராய்".... பின் ஒரு நாடு..... ஆயிரமாயிரம் கலாசார பின்னணி கொண்ட ஒரு நாடு...... (பத்ரி சேஷாத்ரி 2ஜி வழக்கை ஆரம்பத்தில் இருந்தே அர்த்தமற்றது என்று எழுதிக்கொண்டிருந்தார், அதன் குற்றசாட்டு அபத்தத்தை சொல்லி கொண்டிருந்தார் என்பதை சொல்வது முக்கியம் என்று நினைக்கிறேன். மாற்றுமுகாமில் இருந்து 2ஜி வழக்குக்கு எதிரான ஒரு குரலாக அவரது இருந்தது)

Reply 13 0

Login / Create an account to add a comment / reply.

வங்கதேசம்: இது சக்கரவர்த்திகளுக்கான காலம் இல்லைஅபூர்வானந்த் கட்டுரைநேரு கட்டுரைத் தொடர்வலிப்பு நோய்முலாயம் சிங் யாதவ்ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவாரா?ஹைக்கூஅரவிந்தன் கண்ணையன் கட்டுரைஇந்தியத் தொகுதிகள் சீரமைப்புக்கு சரியான தீர்வாகுமாகாசாகல்லூரிஏன்?மாட்டில் ஒலிக்கும் தாளம்ஆண்ட்ரூ சாரிஸின் சுட்டல்பாட்ரீஸ் லுமும்பாசெபிஊடகக் கட்டுப்பாடுகள்லாபமின்மைஇன்று மும்பைவளவன் அமுதன் கட்டுரைடிம் பார்க்ஸ்அடக்கம் அவசியம்சர்தார் படேல்சாவர்க்கர் ராஜன் குறை பி.ஏ. கிருஷ்ணன்சீரழிவை நோக்கிச் செல்லும் இந்தியக் கட்சிகள்!வெறுப்பு அரசியல்மொழிப்பாடம்பிம்பம்காலநிலை மாற்றம்ஜனசங்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!