கட்டுரை, சமஸ் கட்டுரை, ரீவைண்ட், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு

தனியார்மயம் பெரிய ஏமாற்று

சமஸ் | Samas
04 Dec 2015, 5:00 am
0

சென்னை மிதக்கிறது. எங்கும் தண்ணீர். நல்ல நாளில் செல்பேசியை அழுத்தினால், ஒரு நிமிஷத்துக்குள் ‘ஹலோ’ சொல்லி நாம் இருந்த இடத்துக்கு வரும் கால் டாக்ஸிகள் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டன. ஷேர் வேன்களைக் காணோம். ஆட்டோக்கள் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. நகரம் வெள்ளக்காடாக மாறிவிட்ட சூழலிலும், நாள் முழுவதும் மூச்சுத்திணறலோடு எங்கும் போய்க்கொண்டிருந்தன அரசு பஸ்கள். நள்ளிரவா, அதிகாலையா என்று பிரிக்க முடியாத 3 மணி. சோடியம் விளக்கு ஒளியில் கலங்கலாகத் தெரிகிறது சாலை. தாம்பரம் அரசு பஸ் பணிமனைக்கு வெளியே சைக்கிள் டீக்காரரிடமும் டீ வாங்கிக் குடித்துக்கொண்டிருந்தார் ஓட்டுநர் ஜெயராமன்.

“நேத்திக்கு காலைல ரெண்டு மணிக்கு எந்திருச்சேன்பா. இருவத்தியஞ்சி மணி நேரம் ஆச்சு. ஷிஃப்ட் முடிச்சு ராத்திரி சாப்பிடவும் எந்தக் கடையும் இல்ல. மழை இல்ல? டீலதான் ஓடுது.”

டீயை உறிஞ்சுகிறார்.

“நமக்குக் கோடம்பாக்கத்துல வூடு. படிப்பு ஏறல. சின்ன வயசுலேர்ந்தே இந்த பஸ்ஸைப் பார்க்கும்போது ஒரு இது. டிரைவராயிடணும்னுட்டு லாரில கிளீனரா சேர்ந்தேன். பத்து வருஷம் பொயப்பு அதுல ஓடுச்சு. 1990-ல இங்கெ தினக்கூலியா டிரைவர் வேலைக்குச் சேர்ந்து பஸ்ஸு ஸ்டேரிங்கைப் புட்சேன். 25 வர்ஷம் ஆவுது இப்போ.

கிழக்கு தாம்பரம் டு பிராட்வே வண்டி நம்மள்து. ரெண்டு, ரெண்டறைக்கு எந்திருச்சு குளிச்சுட்டு நாலுக்கெல்லாம் பணிமனைக்கு ஓடியாந்தோம்னா வண்டில நாலு டயருலேயும் காத்து சரியா இருக்கா, சைடு கண்ணாடி ரெண்டும் சரியா இருக்கா, ஹெட்லைட், பிரேக் சரியா இருக்கா, வண்டிக்குள்ள சேதாரம் ஏதும் இல்லாம இருக்கான்னு பார்த்து வெளியே எடுக்கவே அரை அவுரு ஆயிடும்.

மொத நா ராத்திரி கொண்டாந்து வுடுற ஆளுங்க எதுனா மோதி காலி பண்ணிட்டு நிப்பாட்டிட்டுப் போயிட்ருந்தாங்கன்னு வெச்சிக்க, அது தெரியாம வண்டியை எடுத்துட்டுப்போனா அதுக்கு நாமதான் பொறுப்பு. உடைஞ்ச பொருளுக்கு பைசா கட்டுறது மட்டும் இல்ல; ஏதோ விபத்து நடந்திருக்குனு சொல்லி விசாரணை போடுவாங்க. நோட்டிஸ், ஒழுங்கு நடவடிக்கை, தண்டனைனு ஆயிரத்தெட்டு பிரச்னை வரும். அதனா, அங்க ஆரம்பிச்சு உஷாரா இருக்கணும்.

கிழக்கு தாம்பரத்துல பஸ்ஸை எடுக்குறேன்னு வெச்சிக்க, பிராட்வே போய் சேர 28 கிலோ மீட்டர். எடையில 36 ஸ்டாப் கீது. எழுவது நிமிஷம் கணக்குல போய் சேரணும். ரோட்டுல டிராபிக் தொல்லை இல்லாத, ஸ்டாப்புல ஆளே இல்லாத விடிகாலை அஞ்சு மணியா இருந்தாலும் அதே கணக்குதான்; டிராபிக் ஜாம் நச்சுற, ஸ்டாப்புக்கு ஸ்டாப் கும்பல் ஏற்ர சாயங்காலம் அஞ்சு மணியா இருந்தாலும் அதே கணக்குதான். முன்ன போனாலும் பிரச்னை; பின்ன போனாலும் பிரச்னை. இதுல இன்னொரு சவாலு லிட்டருக்கு 5.5 கி.மீ. வர மாரி ஓட்டணும்.

இதல்லாம்கூட சமாளிச்சுடலாம். மக்களை சமாளிக்குறது பெரிய பேஜாரு. ஒரு வண்டில 48 பேர் உட்காரலாம். 25 பேர் நிக்கலாம். ஆக, 73 பேர். கணக்குபடிதான் வண்டில ஆள் ஏத்துனோம்னு வெச்சிக்க, நம்மூர்ல பாதி பேர் ரோட்டுல நடந்துதான் போவணும். ஒரு கணக்கு சொல்லவா? ஒரு நாளைக்கு நாடு முழுக்க ஓடுற ரயிலுங்க 2.05 கோடிப் பேரை ஏத்திக்கினு போவுது; ஆனா, தமிழ்நாட்டுல மட்டும் அரசாங்க பஸ்ஸுங்க எவ்ளோ பேரை ஏத்துறோம் தெரியுமா, 2.10 கோடிப் பேர்! இந்தியாவுலேயே பஸ்ஸுல அதிகமா ஆளுங்களை ஏத்திக்கினு போவறது சென்னைலதான். அப்போ நெரிசல் இல்லாம எப்படி இருக்கும்?

ஒரு மணி நேரம் உள்ள பிராயணம் செஞ்சிட்டு எறங்குறவங்ளைவிட நாளெல்லாம் புகைலயும் தூசிலயும் வெயில், மழையிலயும் ஆணி அடிச்சா மாரி உக்காந்திக்கினு போற எங்களுக்கு கஸ்டம் ஜாஸ்தி. ஆனா, பஸ்ஸுக்கு வெளில ரோட்டுல போறவங்களுக்கும் எங்க கஸ்டம் தெர்யாது, பஸ்ஸுக்குள்ள உட்கார்ந்துக்கினு வர்றவங்களுக்கும் எங்க கஸ்டம் புர்யாது. ரெண்டு உதாரணம் சொல்றேன். படிக்கிற பசங்க இருக்காங்களே, ஓடுற வண்டிலதான் ஏறுவேன், எறங்குவேன்னு சத்தியம் பண்ணாத கொறையாதான் வருவானுங்க. இது உள்ள. டூவீலர்காரங்க எப்ப எங்கெ பூருவாங்கன்னு தெரியாது. இது வெளிய. விதுக்கு விதுக்குன்னு இருக்கும்பா, ஒவ்வொரு நிமிஷமும்.

ஒரு பக்கம் டப்புன்னு உசுரு பூடும் அவங்களுக்கு. இன்னொரு பக்கம் வாழ்க்கையே பூடும் எங்களுக்கு. ஒரு சின்ன விபத்து போதும் ஒரு டிரைவரு குடும்பம் சீரழிய. எவ்ளோ பிரச்ன தெரியுமா? மொதல்ல போலீஸ் கேஸு. அதோடு ஆபிஸ்ல சஸ்பெண்டு ஆர்டரு கொடுத்துருவாங்க. அடுத்து, லைசென்ஸு சீசாயிரும். அப்புறம் சம்பளமும் இல்லாம, கேஸையும் நடத்தணும். மீண்டு வர்றதுக்குள்ள போதும்டா சாமீன்னு ஆயிரும். குத்தம் எங்க பக்கம்னு ஆச்சு, அதோட வேலை போச்சு. இந்தப் பதட்டத்துலேயேதான் ஒவ்வொரு நிமிஷமும் வண்டில ஓடணும்.

நாளெல்லாம் உட்கார்ந்திருக்குற ஒடம்பு சூடு. நேரத்துக்குச் சாப்பிட முடியாத கோளாறு. மூணு வேளையும் வெளி சாப்பாடு. பசியை மறக்க கொறைஞ்சது 10 டீ. கூடவே பதட்டம். இவ்வளவு போதாதா? வயித்துப் புண்ணு, முதுகு வலி, இடுப்பு வலி, முட்டி வலி, ரத்த அழுத்தம், சக்கரை வியாதின்னு எல்லாம் வந்திரும். ஆனா, எல்லாத்தையும் மீறியும் இந்த வேலை புட்சுருக்குபா.”

“உங்களுக்கு வேலை நேரம் எப்படி?”

“இங்கெ சென்னைல எங்க வேலை ரண்டு வகை. ஒரு ஷிஃப்ட் கணக்குன்னு வெச்சிக்க, காலைல நாலு மணிக்கு வந்துட்டு மதியானம் ஒரு மணிக்கு ஓடிரலாம். 8 மணி நேரம் கணக்கு. ரெண்டு ஷிஃப்ட் கணக்குன்னு வெச்சிக்க, காலைல நாலு மணிக்கு வந்துட்டு ராத்திரி பத்து மணி ஆகும். 16 மணி நேரம் கணக்கு. அதனால, மறுநாள் வர வேண்டியதில்ல. வாரத்துல ஒரு நாள் ஆஃப். என்னா, பண்டிகை நாள், நல்ல நாள், கெட்ட நாள் பார்க்க முடியாது. வீட்டுல புலம்புவாங்க. ஆனா, ஒவ்வொரு நாளும் எத்தனை பேருக்கு உதவுறோம்னு கணக்குப் பாத்தா, இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லபா. தெரியுமா, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பல வகைல சூப்பரு. அதிக பயணிகள் ஏத்துறதுல, டீசல் சேமிப்புல, வண்டிப் பராமரிப்புல இப்படிப் பலதுல நாம டாப்பு.”

“ஆனா, அரசுப் போக்குவரத்துக் கழகம்னா நஷ்டக் கணக்குதானே சொல்றாங்க?”

“அது தப்புபா. நம்ம பார்வைல கோளாறு. இந்த மழைல வண்டி ஓட்டுனா, நிச்சயம் வண்டி சேதமாகும். சைதாப்பேட்டைல ஒரு வண்டி முழுசா முழுகுச்சா, இல்லையா; ஆனா, தெரிஞ்சேதான் ஓட்டுறோம், ஏன்? மக்களுக்காக. இப்ப கடசி தபா 11 மணிக்குக் கொட்டுற மழைல ஸ்பெஷல் டூட்டின்னு வாலஜாபேட்டைக்குப் போட்டாங்க. வண்டீல எத்தன பேர் தெரியுமா? மூணே பேர். வெறும் காசுக் கணக்குப் பார்த்தா எல்லாம் நஷ்டம். ஆனா, அந்தப் பக்கம் பலனடையுறது யாரு? நம்ம மக்கள். ஒரு நாளைக்கு மூணு லட்சம் புள்ளைங்க ஃப்ரீ பஸ் பாஸை வெச்சிக்கிட்டு படிக்கப் போகுது. வெறும் காசு கணக்குப் பார்த்தா, நஷ்டம்தான்; ஆனா, சமுதாயத்துக்கு லாபமா, நஷ்டமா? தீபாவளி, பொங்கல்னா ஒரு டிக்கெட் ரெண்டாயிரம் மூவாயிரம்னு கொள்ளை அடிக்க ரூட் பர்மிட்டுக்கு வரிசைல நிக்கிறானே ஆம்னி பஸ்காரன், எந்தக் கிராமத்துக்காவது வண்டி ஓட்ட முன்னாடி வருவானா? தனியார்மயம் பெரிய ஏமாத்து வேல சார். எல்லாத்தையும் சுயநலமாவும் சந்தையாவும் பார்க்குறவன், பொதுத் துறை நிறுவனத்தைத் தனியார்மயமாக்கிடணும்னு துடிக்கிறான். அவன் எல்லாத்தையும் காசாத்தான்பா பார்ப்பான்; நாம பார்க்கக் கூடாது.”

ஜெயராமன் விடைபெற்றுக்கொண்டார். மழை விட்டிருந்தது. கிழக்கு மெல்ல வெளுக்க ஆரம்பிக்கிறது.

- ‘தி இந்து’,  2015

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைகுழந்தையின்மைஅடுத்த தொகுப்புஅரசியலும் ஆங்கிலமும்பக்வந்த் சிங் மான்preparing interviewsஒற்றைக் கலாச்சாரம்ரஞ்சனா நாச்சியார்மத்திய உள்துறைச் செயலர்ஆணின் விந்தணு பூஜ்ஜியத்துக்குப் போய்விடுமா?திருநெல்வேலிஅடிப்படை உரிமைகள்அரசர்களின் ஆட்சிசி.கே.டிவிஷ்வேஷ் சுந்தர் கட்டுரைநிஃப்டிரிசர்வ் வங்கியின் சொற்சித்திரமும் உண்மை நிலையும்கல்விநுட்பச் செயலிவெளி மாநிலத்தவர்யோகி அதித்யநாத்சொத்துப் பரிமாற்றம்ஆட்டோமக்கள் நலத் திட்டங்கள்சாவர்க்கர் ராஜன் குறை பி.ஏ. கிருஷ்ணன்அரவிந்தன் கண்ணையன் பேட்டி மார்க்கேஸ் மற்றும் ஜெயகாந்தன்சத்தான உணவுபாஜகவை வீழ்த்த கடுமையாக உழைக்க வேண்டும்: சமஸ் பேட்தனிக் கொள்கைபடுகொலைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!