கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, சர்வதேசம் 7 நிமிட வாசிப்பு
லூலா: தலைவனின் மறுவருகை
பிரேசில் அரசியலில் அது ஒரு வெடிப்பு. பிரேசிலுக்கு வெளியே கண்கொள்ளா காட்சி. சிறை மீண்டு வரும் 77 வயது அரசியல் தலைவரின் பின் எழுச்சிகரமாகப் பல கோடி மக்கள் அணிவகுப்பதும், மக்களின் கைகளில் ஒரு குழந்தையைப் போல அவர் தூக்கி வாரி அணைக்கப்பட்டு ததும்புவதுமான தருணங்கள் எத்தனை பேருக்கு வாய்க்கும்?
லூயிஸ் இனாசியோ லூலா டிசில்வாவின் வாழ்க்கைக் கதையானது பல வகைகளிலும் தனித்துவமானது. அசாதாரண ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. சமூகத்தில் கீழே நிற்கும் எவருக்கும் உத்வேகம் அளிப்பது.
மிக வறுமையான சூழலில் இருந்தவர் லூலா. தன்னுடைய வாழ்வில் ஏழாவது வயதில்தான் முதன்முதலில் பிரெட் சாப்பிட வாய்த்ததாக ஒருமுறை சொன்னார் லூலா. அப்பா - அம்மா, சகோதரர்கள் எல்லோரும் உடன் இருக்க சகஜமான ஒரு வாழ்க்கை அவருக்கு வாய்க்கவில்லை. ஆளுக்கு ஒரு பக்கம். வீட்டில் ஒருவேளை சமையல் நடப்பதற்கே பெரும் போராட்டமாக இருந்தது. ‘எப்படியும் நாளைய பொழுது நன்றாக இருக்கும்!’ என்று அன்றாடம் அவருடைய அம்மா சொல்லி வளர்த்த வார்த்தைகளின் நம்பிக்கைதான் லூலாவை வளர்த்தது. பத்து வயது வரை எழுதப் படிக்கத் தெரியாதவராகவே லூலா இருந்தார். குழந்தைத் தொழிலாளியாக அவர் வேலைக்குச் சென்ற முதல் இடம் செருப்பு தைக்கும் கடை. பிற்பாடு, உலோக ஆலையில் தொழிலாளியாகச் சேர்ந்தார். தொழிற்சங்க அரசியல் அங்கே அவருக்கு அறிமுகம் ஆனது. அரசியலின் ஊடாகவே லூலாவைக் கல்வி வந்தடைந்தது.
சாமானிய மக்களுடைய வாழ்க்கை மேம்பட வேண்டும் என்றால், நாட்டின் சட்டங்களை வகுக்கும் இடத்தில் அடித்தட்டு மக்கள் அமர வேண்டும் என்ற பார்வை லூலாவுக்கு இருந்தது. அன்றைய பிரேசிலில் மேட்டுக்குடிகளின், ராணுவ ஜெனரல்களின் ஆதிக்கம் அதிகம். நாட்டின் அரசமைப்பே மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றார் லூலா. சோஷலிஸ கனவை உள்ளடக்கி 1980இல் உருவாக்கப்பட்ட ‘தொழிலாளர் கட்சி’யின் நிறுவன உறுப்பினர்களில் லூலாவும் ஒருவராக இருந்தார். பிரேசில் அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட நாடு தழுவிய இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவராக லூலா இருந்தார். 1988இல் சீரமைக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்திலேயே அவருடைய இயக்கம் முன்னெடுத்த போராட்டங்கள் தந்த அழுத்தமும் இருந்தது.
¶
பிரேசிலின் சோஷலிஸ அரசியலும் லூலாவின் அரசியலும் ஒன்றைச் சார்ந்து ஒன்று வளர்ந்தன என்று சொல்லலாம். 2002 தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட ஜோசே செராவைவிட இரண்டு மடங்கு ஆதரவோடு, 61% வாக்குகளுடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் லூலா. அவருடைய ஆட்சிக்குட்பட்ட 2003 - 2010 காலகட்டம் பிரேசிலின் நல்லாட்சி காலகட்டங்களில் ஒன்று. பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரேசிலை மேல் நோக்கி இழுத்து வந்தார் லூலா. பொருளாதாரத்தை ஒருபுறம் தொழில் வளர்ச்சியில் ஊக்குவித்தபடி, மறுபுறம் அடித்தட்டு மக்களுக்கான நலத் திட்டங்களில் அவர் அக்கறை செலுத்தியதானது, ஒரு புதிய பொருளாதார மாதிரியை உருவாக்கியது.
அடிப்படையில் எல்லோரையும் அணைத்துக்கொள்ளும் பண்பு கொண்டவர் லூலா. ‘என்னால் ஜார்ஜ் புஷ்ஷுடனும் பேச முடியும்; ஹ்யூகோ சாவேஸுடனும் பேச முடியும்’ என்று சொன்னவர் அதற்கேற்ற அணுகுமுறையையும் கொண்டிருந்தார். லூலாவின் காலகட்டத்தில் சர்வதேச உறவுகளின் வழி சிறப்புக் கவனம் பெற்றது பிரேசில். சமாதானத்துக்கான உலக முன்மாதிரியாக பிரேசிலை உருவாக்கும் கனவு அவரிடம் இருந்தது. உலகில் ஏனைய இடதுசாரி மாதிரிகள் எல்லாவற்றினும் தனித்துவமான ஓர் ஆட்சிமுறையை அவர் முயன்றார்.
அடுத்தடுத்து இரு முறை அதிபர் ஆன லூலா, 2010இல் ஆட்சியை சகாக்களிடம் ஓப்படைத்தார். லூலா ஆட்சியிலிருந்து நகர்ந்த பிறகு காட்சிகள் தலைகீழாக மாறின. அடுத்த 12 ஆண்டுகள் மீண்டும் ஒரு நெருக்கடி யுகத்துக்குள் சிக்கினார் லூலா. அவருடைய கட்சி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது. லூலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். லூலாவின் ஆட்சிக் காலத்தில் பேசப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. நீதிமன்றம் லூலாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தது. இதனூடாகவே தன் மனைவியை இழந்தார் லூலா. பிரேசில் தீவிர வலதுசாரியான போல்சொனரோவின் ஆட்சியின் கீழ் வந்திருந்தது. லூலாவுக்குச் சிறைத் தண்டனை தீர்ப்பளித்த செர்ஜியோ மோரோவைத் தன்னுடைய அரசில் நீதி அமைச்சர் ஆக்கினார் போல்சொனரோ. “மோரோ இல்லையென்றால், இந்த இடத்தில் நான் இல்லை” என்றார். இவ்வளவு நெருக்கடிகள் மத்தியிலும் லூலா துவளவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் தன் சட்டப் போராட்டத்தை லூலா தொடர்ந்தார். வீதிகளில் லூலாவின் ஆதரவாளர்கள் அவருக்கான உத்வேக போராட்டத்தை முன்னெடுத்தார்கள். பிரேசிலின் நிர்வாகம், காவல், நீதி அமைப்புகளின் அழுகிய பக்கத்தையே தன்னுடைய சிறைவாசம் காட்டுவதாகச் சொன்ன லூலா, ‘ஒரு தனிநபரை அவர்கள் சிறையில் அடைக்கவில்லை; ஒரு லூலா எனும் சிந்தனையைக் கொல்ல முயற்சிக்கிறார்கள்; இதில் அவர்கள் தோற்பார்கள்’ என்றார். 2019இல் லூலாவை உச்ச நீதிமன்றம் விடுவித்தது ஒருவகையில் பிரேசில் நீதித் துறையின் சுயாதீனத்தைப் பறைசாற்றும் நிகழ்வாகவும் அமைந்தது. அப்போதே போல்சொனரோவின் நாற்காலி ஆட்டம் காணலாகிவிட்டது. எதிரியைச் சரியாகக் கணிக்கும் லூலா சொன்னார், “இல்லை, பிரேசிலில் போல்சொனரோ வெறுப்பரசியலை உருவாக்கவில்லை. நெடுநாளாக அது இங்கே இருக்கிறது. போல்சொனரோ அதை மேலும் தூண்டுகிறார், அறுவடைக்கிறார். வெறுப்பரசியலை எதிர்கொள்வது பெரும் பயணம்.”
இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் லூலாவின் நெடுநாள் நண்பராக இருந்த பேராசிரியர் ரோஸங்கலா உடன் அவருக்கு இருந்த உறவு காதலாக மாறியது. லூலாவைக் காட்டிலும் 20 வயது குறைந்தவர் ரோஸங்கலா. மனைவியின் மரணத்தோடு வாழ்க்கையே அர்த்தமற்றதாகிவிட்டதாக இருந்த தனக்கு இந்த உறவு புத்துயிர்ப்பு அளிப்பதாகக் குறிப்பிட்டார் லூலா. “நான் மீண்டும் காதலிக்கிறேன், இங்கே நான் மீண்டும் வலுவாக நிற்பதற்கு இந்தக் காதல் காரணம். எல்லாத் தடைகளையும் உடைப்பதற்கான வலிமையைத் தருபவள் அவள்” என்றார். மூன்றாவது முறையாகத் திருமணம் செய்துகொண்டார் லூலா (முதல் மனைவி அவருடைய இளமைக் காலத்திலேயே சீக்கிரமே நோய்வாய்ப்பட்டு இறந்தார்).
¶
பிரேசில் மக்கள் மீண்டும் லூலாவைக் களம் நோக்கி இழுத்துவந்தனர். 2022 பிரேசில் அதிபர் தேர்தல் உலகம் முழுவதும் கவனிக்கப்பட முக்கியமான காரணமாக இருந்ததற்கு, லூலா மட்டும் அல்ல; போல்சொனரோவும் காரணமாக இருந்தார். உலகின் காட்டமான வலதுசாரிகளில் ஒருவராக இந்த ஐந்தாண்டுகளில் உருவெடுத்திருந்த இந்த முன்னாள் ராணுவ அதிகாரி பிரேசிலின் ஜனநாயகத்தை வேகமாகக் கீழே கொண்டுபோனார். தன்னுடைய ஆட்சி கொண்டுவந்த நன்மைகளை மட்டும் அல்லாது, பிரேசில் கடந்த 80 ஆண்டுகளில் அடைந்துவந்த எல்லா ஜனநாயக நன்மைகளையும் இன்று பறிகொடுக்கலாகிவிட்டது என்று தேர்தல் பிரச்சாரத்தில் லூலா சொன்னது பொருத்தமானது. ஆயினும் பிரேசில் சமூகம் கிட்டத்தட்ட செங்குத்தாகப் பிளந்திருப்பதையே தேர்தல் முடிவுகள் கூறுகின்றன. லூலா வென்றிருக்கிறார் என்றாலும், போல்சொனரோ இணையான வாக்குகளைப் பெற்றிருக்கிறார் (லூலா 50.9%; போல்சொனரோ 49.1%). நாடாளுமன்ற அவைகளில் போல்சொனரோவின் கட்சியும் பெரும் இடங்களை வென்றிருக்கிறது. போல்சொனரோ ஆட்சியில் வெறுப்பரசியலைப் பரப்பிய பல அமைச்சர்கள் வென்றிருக்கிறார்கள். லூலாவின் முன்னிற்கும் சவால்கள் முந்தைய அவருடைய ஆட்சிக் காலத்தில் அவர் எதிர்கொண்டவற்றைக் காட்டிலும் கடுமையானவை. லூலா எவ்வளவு சாதிப்பார் என்று தெரியவில்லை. இப்போதைக்கு அவருடைய வெற்றியையே ஜனநாயகத்துக்குக் கிடைத்திருக்கும் பெரும் முன்னகர்வாக பிரேசிலியர்கள் பார்க்கிறார்கள்.
இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு
நான் எதிர்காலத்தைச் சிந்திக்கிறேன்: லூலா பேட்டி
04 Nov 2022
பிரேசிலியர்களைப் பொருத்தவரை தங்களுடைய அணிக்கு கோல் அடித்து வெற்றியைத் தேடித் தரும் ஒரு கால்பந்தாட்டக்காரருக்கும் தங்களுடைய நாட்டை போராட்டங்களின் மத்தியில் முன்னகர்த்தும் அரசியலருக்கும் ஒரே இடம்தான் - அவர்களுக்குக் கடவுள் அனுப்பியிருக்கும் தூதன்; அவன் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். லூலா துல்லியமாக இதை உணர்ந்திருக்கிறார். “அமெரிக்கக் கால்பந்து வீரர் ஒருவர் இருக்கிறார். அவர் பிரேசில் பெண் ஒருவருடன் ஐக்கியமானார். அந்தப் பெண் ஒரு மாடல். அந்தக் கால்பந்து வீரர்தான் உலகிலேயே சிறந்த கால்பந்து வீரராக வெகுகாலமாக இருக்கிறார். அவர் விளையாடப்போகும் ஒவ்வொரு போட்டியிலும் முந்தைய போட்டியைவிடச் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதிபர் பதவியிலும் அதேபோன்றுதான். எனது முந்தைய பதவிக் காலங்களைவிட சிறப்பாக என்னால் செயல்பட முடியும் என்பதால் மட்டுமே நான் அதிபர் தேர்தலில் இறங்கினேன்.”
இப்போதும் உள்நாட்டைத் தாண்டி உலகாளவியச் சிந்தனையும் பொறுப்பும் லூலாவை ஆட்கொண்டிருக்கிறது. “அரசியலர்களான நாங்கள் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்; தோழமை, நட்பு, ஒற்றுமை ஆகியவற்றை விதைத்தால் நல்ல பலனை அடைய முடியும். முரண்பாட்டை விதைத்தால் பூசலையே அறுவடை செய்வேன்… உக்ரைன் மீது படையெடுத்திருக்கவே கூடாது புடின். ஆனால், புடின் மட்டுமே குற்றவாளியும் அல்ல. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும்கூட குற்றவாளிகள்தான்… சமாதானத்தை விரும்பினால், நாம் பொறுமையாகப் பேசி எப்படியோ அமைதியைக் கொண்டுவரத்தான் வேண்டும்… இப்போதிருப்பதைவிட அமைதியும் சமாதானமும் மிக்க உலகை நம்மால் ஏற்படுத்த முடியும். அதற்குப் புதிய - உலகளாவிய நிர்வாக முறைமை அவசியம். ஐக்கிய நாடுகள் சபையை நாம் மீட்டுருவாக்க வேண்டும்!”
ஜனவரி 2023இல் பதவி ஏற்கிறார் லூலா. வரவிருக்கும் ஆட்சி காலகட்டத்தை மிகுந்த எதிர்பார்ப்போடு காணக் காத்திருக்கிறது உலகம். லூலாவின் சிறந்த ஆட்டமாக அது அமையட்டும்!
-‘குமுதம்’, நவம்பர், 2022
தொடர்புடைய கட்டுரைகள்
2
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
K.R.Athiyaman 2 years ago
//2019இல் லூலாவை உச்ச நீதிமன்றம் விடுவித்தது ஒருவகையில் பிரேசில் நீதித் துறையின் சுயாதீனத்தைப் பறைசாற்றும் நிகழ்வாகவும் அமைந்தது. // இல்லை. உச்ச நீதிமன்றம் அவரை நிராபராதி என்று விடுவிக்கவில்லை. Technical groundsஇல் அவர் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்குகள், தவறான மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டதன் அடிப்படையில் தான் விடுவித்தது. மீண்டும் அவர் மீது சரியான நீதிமன்றத்தில் இதே வழக்கு நடந்திருந்தால், அவரின் குற்றம் நிருபிக்கப்பட்டு, இன்றும் சிறையில் இருந்திருப்பார். அவர் ’முற்போக்காளர்’, ’இடதுசாரி’ ஆக இருக்கலாம். ஆனால் நம் இந்திய அரசியல்வாதிகளை விட அதிக ஊழல் புரிந்தவர். இதையும் பார்க்கவும் : https://www.cato.org/blog/why-did-global-media-give-brazils-lula-free-pass-corruption வெனிசுலாவின் சாவேசும் பல நூறு கோடி டாலர் ஊழல் செய்தவர் தான். சந்தேகம் இருந்தால், இன்று சாவேஸின் மகள் மற்றும் மகன்கள் இன்று வைத்திருக்கும் பல பில்லியன் டாலர் சொத்துகள், அவர்கள் மீதான முறைகேடு புகார்கள் பற்றி துப்பறியவும். ஒரு இடதுசாரி, முற்போக்காளர் என்பதால், அவரின் ஊழல்கள், கொள்ளைகளை உதாசீனப்படுத்துவது அறமற்ற, தவறான செயல்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.