பேட்டி, அரசியல், சர்வதேசம் 15 நிமிட வாசிப்பு
நான் எதிர்காலத்தைச் சிந்திக்கிறேன்: லூலா பேட்டி
உலகின் கவர்ச்சிகரமான அரசியல் தலைவர்களில் ஒருவர் பிரேசிலின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் லூயிஸ் இனாசியோ லூலா டிசில்வா. ஏற்கெனவே பிரேசில் அதிபராக இரு முறை பதவி வகித்திருக்கும் லூலா அந்த நாட்டின் முகத்தை மாற்றி அமைத்தவர்களில் ஒருவர்.
தீவிர அரசியலிலிருந்து விலகிவிடுவார் என்று பத்தாண்டுகளுக்கு முன் பேசப்பட்ட சூழல் மாறி எது, மீண்டும் அவரை அரசியலின் மையம் நோக்கிக் கொண்டுவந்திருக்கிறது? இடைப்பட்ட காலம் தனிப்பட்ட வாழ்வில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டார் லூலா. புற்றுநோய்த் தாக்கம், மனைவியின் இழப்பு, வழக்குகள், சிறை வாழ்க்கை… இப்போது இன்னொரு வாழ்க்கைத் துணையுடன் எல்லாச் சங்கடங்களையும் ஏறக்கட்டிவிட்டு மீண்டும் மையம் நோக்கி வந்திருக்கிறார்.
பத்திரிகையாளர் சியரா நூஜன்ட் ‘டைம்’ இதழுக்காக எடுத்த இந்தப் பேட்டியானது லூலாவின் மிகச் சிறந்த நேர்காணல்களில் ஒன்று. அதிபர் தேர்தலுக்கு முன்பு, சாவ் பாவ்லோ நகரில் அவருடைய தொழிலாளர் கட்சியின் (பி.டி.) தலைமையகத்தில் கடந்த மார்ச் எடுக்கப்பட்டது. ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக சுருக்கமான மொழிபெயர்ப்பை இங்கே தருகிறது.
அரசியலிலிருந்து விலகிவிடத் தயாராக இருந்தபோது உச்ச நீதிமன்றம் உங்களுடைய அரசியல் உரிமைகளைத் திரும்ப அளித்தது; தீவிர அரசியலுக்கு வர உடனே முடிவெடுத்தீர்களா?
உண்மையைச் சொல்வதென்றால், எப்போதும் அப்படி அரசியலிலிருந்து விலக நினைத்ததே இல்லை; என்னுடைய உடலின் ஒவ்வொரு அணுவிலும், ரத்தத் துளியிலும், என் தலையிலும் அரசியல்தான் இருக்கிறது. நான் அரசியலுக்கு வரக் காரணமாக இருந்த அதே காரணங்கள்தான் என்னை மீண்டும் மீண்டும் இதே இடம் நோக்கி நகர்த்தியிருக்கின்றன.
நான் 2010இல் அதிபர் பதவியிலிருந்து விலகியபோது இன்னொரு முறை அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்ற திட்டம் என்னிடம் இல்லை. ஆனால், பதவியிலிருந்து இறங்கிய கடந்த 12 ஆண்டுகளில், ஏழைகளின் நலனுக்காக நான் உருவாக்கிய கொள்கைகள் அனைத்தும் நாசமாக்கப்பட்டதைப் பார்த்தேன். அவர்கள் நான் கொண்டுவந்த சீர்திருத்தங்களை மட்டும் அல்லாது, 1943க்குப் பிறகு பிரேசில் மக்கள் பெற்ற அனைத்து நலன்களையுமே ஒழிக்க விரும்பினார்கள்.
மக்கள் நான் மீண்டும் அதிபர் ஆவேன் என்று எதிர்பார்ப்பதை உணர்ந்தேன். காரணம் நான் அதிபராக இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகளை மக்கள் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறார்கள். என் ஆட்சியில் அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்தன, ஊதியம் உயர்ந்தது, விலைவாசி உயர்வைவிட ஊதிய உயர்வு அதிகமாக இருந்தது. அவற்றையெல்லாம் இழந்துவிட்டோமே என்று நினைக்கும் மக்கள் நல்ல நிலைமை திரும்ப வேண்டும் என்று எண்ணுவதில் ஆச்சரியம் இருக்க முடியாது, இல்லையா?
நன்றாகச் செயல்பட முடியுமா? பொருளாதாரம், அரசியல் அணிசேர்க்கை, சர்வதேச விவகாரங்கள் ஆகியவற்றைப் பொருத்தவரை 2002இல் நீங்கள் முதல் முறையாக அதிபரானபோது இருந்த சூழலைவிட இப்போது கடினமான சூழல் நிலவுகிறது. ஆனால், அப்போதுபோல இப்போதும் நன்றாகச் செயல்பட முடியும் என்று நினைக்கிறீர்களா?
அமெரிக்கக் கால்பந்து உலகில் ஓர் ஆட்டக்காரர் இருக்கிறார். பிரேசில் பெண் ஒருவருடன் அவர் ஐக்கியமானார். அந்தப் பெண் ஒரு விளம்பர மாடல். அந்த விளையாட்டு வீரர்தான் உலகின் மிகச் சிறந்த ஆட்டக்காரராக நீண்ட காலமாக இருக்கிறார். ஒவ்வொரு முறை அவர் களம் காணும்போதும் ரசிகர்கள் அவரை, ‘முன்பைவிட நன்றாக விளையாடுங்கள்’ என்றே சொல்லி அனுப்புகின்றனர். அதிபர் பதவியும் அப்படித்தான். முன்பைவிட நன்றாக நிர்வகிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் தேர்தலில் இறங்க முடிவெடுத்தேன்.
பிரேசிலின் பிரச்சினைகளை என்னால் தீர்க்க முடியும் என்று நம்புகிறேன். பொருளாதாரத்தின் ஒவ்வோர் அங்கத்திலும் ஏழைகளின் பங்களிப்பு இருந்தால்தான் பிரச்சினைகள் தீரும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நாட்டின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதில் ஏழைகளுக்குப் பங்கு இருக்க வேண்டும், ஏழைகள் வேலைக்குச் செல்ல முடியும்போதுதான் - பட்டினியில்லாமல் உண்ண முடியும்போதுதான் நாடு வளம் பெறும். ஏழைகளுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட அரசு இருந்தால்தான் இது சாத்தியம்.
பொருளாதாரத்தைப் பொருத்தவரை நீங்கள் ஒரு லூலா அல்ல; பல லூலாக்கள் உங்களிடம் உண்டு என்கிறார்கள்; இந்த முறை எப்படிப்பட்ட லூலாவை நாம் எதிர்பார்க்கலாம்?
அதிபர் பதவிக்கு நான் போட்டியிடும்போது மக்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை, ஏன் தெரியுமா? நான் ஏற்கெனவே இரண்டு முறை அதிபராக இருந்துவிட்டேன். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னால் பொருளாதாரக் கொள்கைகளை விவாதிப்பது வழக்கம் இல்லை. முதலில், தேர்தலில் வெல்ல வேண்டும். பிறகு அரசில் யார் உடனிருப்பார்கள் என்று பார்க்க வேண்டும். அதற்குப் பிறகே என்ன செய்ய முடியும் என்று தீர்மானிக்க முடியும்.
என்னைப் பற்றிக் கேட்பதாக இருந்தால், நான் அதிபராக இருந்தபோது பிரேசிலின் பொருளாதாரம் எப்படி வளமானது என்பதைப் பார்த்தாலே போதும். நான் அதிபராவதற்கு முன்னால் சில நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் பங்குகளை வெளியிட்டு தொழிலைத் தொடங்கின. நான் ஆட்சி செய்தபோது 250 நிறுவனங்களாக இந்த எண்ணிக்கை உயர்ந்தது. பிரேசிலின் கடன் சுமை 3,000 கோடி டாலர்களாக இருந்தது. நான் பதவி வகித்தபோது பன்னாட்டுச் செலாவணி நிதியமைப்புக்கே (ஐஎம்எஃப்) கடன் தந்தோம். ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் அரசின் கையிருப்பில் ஒரு (அமெரிக்க) டாலர்கூட ரொக்கம் இல்லை. இன்றைக்கு 37,000 கோடி டாலர்கள் கையிருப்பில் உள்ளது. நான் என்ன செய்வேன் என்று கேட்பதைவிட, என்ன செய்திருக்கிறேன் என்று பார்த்தாலே போதும்.
நீங்கள் முதல் முறை அதிபரானபோது பெட்ரோலிய எண்ணெய் வளம் மூலம் பொருளாதாரத்தைப் பெருக்கினீர்கள். இப்போது புவி வெப்பம் அதிகரிப்பு காரணமாக புதைபடிம எரிபொருள்களைக் குறைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். கொலம்பியா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட குஸ்தாவ் பெத்ரோ, ‘எண்ணெய் அகழ்வுக்கு எதிரான கூட்டமைப்பு வேண்டும்’ என்று குரல் கொடுத்தார். பிரேசிலை நீங்கள் அந்த அமைப்பில் சேர்ப்பீர்களா?
பெத்ரோ எதை வேண்டுமானாலும் விரும்பலாம், பேசலாம். பிரேசிலைப் பொருத்தவரை இது சாத்தியமே இல்லை. உலகைப் பொருத்தவரையும் பெட்ரோலிய எண்ணெயைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. இன்னும் சிறிது காலத்துக்கு இது தேவைப்படுகிறது.
ஏற்கெனவே உள்ள எண்ணெய் வயல்களைப் பயன்படுத்துவது தொடர்பில் நான் கேட்கவில்லை. புதிய எண்ணெய் வயல்களை அகழ்ந்து பார்க்கக் கூடாது என்ற முடிவு குறித்தே கேட்கிறேன், நீங்களும் அதைப் பரிசீலிப்பீர்களா?
மாட்டேன். மாற்று எரிபொருள் போதிய அளவில் கிடைக்கும் வரையில், கிடைப்பதைத்தான் அனைவரும் பயன்படுத்தவே செய்வார்கள். ஜெர்மனியின் நிலையைப் பாருங்கள். அனைத்து அணு மின் நிலையங்களையும் மூடுவது என்ற முடிவை அதன் அன்றைய அதிபர் ஏஞ்செலா மெர்க்கெல் எடுத்தார். இப்படி பின்னாளில், உக்ரைன் மீது படையெடுப்பு நடக்கும் என்று அவர் நினைத்தும் பார்க்கவில்லை. இன்றைக்கு ஐரோப்பா முழுவதுமே ரஷ்யாவின் எரிபொருளைத்தான் நம்பியிருக்கின்றன. மாற்று எரிபொருள் வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு, புதைபடிம எரிபொருளுக்கான தேவையைப் படிப்படியாகக் குறைக்கலாம். ஆனால், அது இப்படி அதிரடியாக நடப்பது அல்ல. அமெரிக்கா, பெட்ரோலிய எண்ணெயை இன்றைக்கு முடிவு செய்து நாளையிலிருந்து பயன்படுத்தாமல் விட்டுவிடும் என்று கற்பனைகூட செய்ய முடியாது.
ஒருகாலத்தில், ‘என்னால் ஹியூகோ சாவேசுடனும் பேச முடியும் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடனும் பேச முடியும்’ என்று பேசியவர் நீங்கள். இப்போது உலகம் ராஜந்திர உறவுகளில் பிணைப்பு இல்லாமல் உடைந்திருக்கிறது. உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுடன் உங்களால் இப்போது (சமாதானம்) பேச முடியுமா?
அரசியலர்களான நாங்கள் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம். தோழமை, நட்பு, ஒற்றுமை ஆகியவற்றை விதைத்தால் நல்ல பலனை அடைய முடியும்; முரண்பாட்டை விதைத்தால் பூசலையே அறுவடை செய்வேன்.
உக்ரைன் மீது படையெடுத்திருக்கவே கூடாது புடின். ஆனால் புடின் மட்டுமே குற்றவாளியும் அல்ல. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும்கூட குற்றவாளிகள்தான். உக்ரைன் மீது படையெடுக்கக் காரணமாக இருந்தது எது? நேட்டோ! ‘நேட்டோவில் உக்ரைன் சேராது’ என்று அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கூறியிருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
நேட்டோவில் உக்ரைன் சேர்ந்துவிடும் என்ற அச்சம்தான் ரஷ்யப் படையெடுப்புக்கு உண்மையான காரணமா?
அப்படித்தான் கூறுகிறார்கள். ரகசியமாக வேறு காரணம் இருந்தால் அது எனக்குத் தெரியாது. இன்னொரு பிரச்சினை, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரைன் விரும்பியது. “எங்களுடன் சேர இது உகந்த காலமல்ல, சிறிது காத்திருக்கவும்” என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியிருக்கலாம். அவர்கள் இந்த மோதலை ஊக்குவிக்காமல் விட்டிருக்கலாம்.
அவர்கள் ரஷ்யாவுடன் சமாதானம் பேச முயற்சித்தார்கள், இல்லையா?
இல்லை, அப்படி முயற்சிக்கவே இல்லை. உரையாடல்கள் மிகவும் குறைவு. சமாதானத்தை நீங்கள் விரும்பினால், பொறுமையைக் கடைப்பிடித்துத்தான் தீர வேண்டும். சமரசப் பேச்சில் 10 அல்லது 15 அல்லது 20 நாள்கள் - அல்லது ஒரு முழு மாதம்கூட செலவிட்டிருக்கலாம். விஷயத்தை முடிக்க வேண்டும் என்பது முக்கியம். அதற்கு, மிகுந்த அக்கறையுடன் பேசினால்தான் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும்.
இப்போதே அதிபரானால் என்ன செய்வீர்கள்? மோதல் வராமல் உங்களால் தடுத்திருக்க முடியுமா?
என்னால் தடுத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. நான் அதிபராக இருந்திருந்தால் ஜோ பைடன், புடின், ஜெர்மனியின் அதிபர், இம்மானுவேல் மாக்ரன் ஆகியோருடன் பேசியிருப்பேன். காரணம், போர் என்றைக்குமே பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் தீர்க்கவே முடியாது. தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
சில வேளைகளில் எனக்குக் கவலை ஏற்படுகிறது. வெனிசூலா நாடாளுமன்றத் தலைவர் ஜுவான் கைடோவை அந்த நாட்டின் அதிபராக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2019இல் ஏற்றன. அதிபராக வேண்டும் என்றால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அல்லாமல், அரசியலர்களுடைய இடத்தை அதிகாரிகளால் இட்டு நிரப்பிவிட முடியாது. அரசியலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு தலைவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஒருவரையொருவர் முகம் பார்த்துப் பேச வேண்டும்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசுவதையும் அதை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டி கைதட்டுவதையும் தொலைக்காட்சிகளில் பார்க்கிறேன். இந்தப் போருக்கு புடின் எந்த அளவுக்குக் காரணமோ அந்த அளவுக்கு ஜெலன்ஸ்கியும் காரணம். போர் என்றாலே ஒருவர் மட்டுமே குற்றவாளியல்ல. இராக் மீது 2003இல் அமெரிக்கா நடத்திய படையெடுப்பில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் எந்த அளவுக்குக் குற்றவாளியோ அதே அளவுக்கு சதாம் உசைனும் குற்றவாளியே. “நீங்கள் யார் வேண்டுமானாலும் வந்து சோதித்துக் கொள்ளலாம், பேரழிவை ஏற்படுத்தும் எந்த ஆயுதத்தையும் நாங்கள் மறைத்து வைத்திருக்கவில்லை” என்று திறந்து காட்ட முன் வந்திருக்கலாம். ஆனால் சதாமோ தன்னுடைய நாட்டு மக்களிடமே பொய் பேசினார். “நேட்டோ அமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் சேருவது தொடர்பாக பேசுவதைச் சிறிது காலம் நிறுத்துவோம், நமக்குள் என்ன கருத்து வேறுபாடு என்று பேசித் தீர்த்துக் கொள்வோம்” என்று ஜெலன்ஸ்கி முன் வந்திருந்தால் இந்தப் பிரச்சினையே பெரிதாகியிருக்காது.
ஒரு லட்சம் துருப்புகளோடு ரஷ்யா எல்லைக்கே வந்துவிட்ட நிலையிலும் ஜெலன்ஸ்கி சமரசப் பேச்சை நடத்தியிருக்க வேண்டும் என்கிறீர்களா?
உக்ரைன் அதிபரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் அவருடைய செயல்கள் விசித்திரமாக இருக்கின்றன. உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் அவர் ‘காட்சிப் பொருள்’ மாதிரி இருக்கிறார். தொலைக்காட்சியில் காலையில், மதியத்தில், இரவில் என்று தோன்றிக்கொண்டேயிருக்கிறார். ஒரு நாள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசுகிறார், அடுத்து ஜெர்மனியின் நாடாளுமன்றம், இன்னொரு நாள் பிரெஞ்சு நாடாளுமன்றம், பிரிதொரு நாள் இத்தாலிய நாடாளுமன்றம் – ஏதோ அரசியல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்போலக் காணப்படுகிறார். அவர் ரஷ்யாவுடனான சமரசப் பேச்சு வார்த்தையில்தான் தீவிரம் காட்டியிருக்க வேண்டும்.
இதை அப்படியே ஜெலன்ஸ்கியிடம் உங்களால் கூற முடியுமா? போரை அவர் விரும்பவில்லை, போர் அவர் மீது திணிக்கப்பட்டது என்று சொல்லலாமா?
போரை அவர் விரும்பினார். விரும்பியிருக்காவிட்டால் மேலும் சிறிது நாள்களுக்கு சமரசப் பேச்சில் ஈடுபட்டிருப்பார். மெக்ஸிகோ நகருக்குச் சென்றபோது புடினையும் விமர்சித்திருந்தேன், உக்ரைனில் நுழைந்தது தவறு என்று கண்டித்தேன். சமாதானத்தை ஏற்படுத்த யாரும் முன்வருவதாகத் தோன்றவில்லை. புடினுக்கு எதிராக வெறுப்பை வளர்க்கத்தான் பார்க்கிறார்கள். அதனால் பிரச்சினைகள் தீராது. நாம் சமரச முடிவுக்கு வந்தாக வேண்டும். ஜெலன்ஸ்கியை எல்லோரும் ஊக்குவிக்கிறார்கள், அவரோ தன்னை கேக்கின் மீதுள்ள செர்ரி பழத்தைப்போல அனைவருக்கும் பிடித்தமானவன் என்று தன்னை நினைத்துக் கொள்கிறார்.
ஜெலன்ஸ்கியைப் பார்த்து கூற வேண்டும், “போதும்பா, நீ நல்ல காமெடியன், இனியாவது கொஞ்சம் சீரியஸாகப் பேசு” என்று; புடினிடம் கூற வேண்டும், “உங்களிடம் நிறைய ஆயுதம் இருக்கிறது, அதற்காக அனைத்தையும் உக்ரைனிலேயே பயன்படுத்த வேண்டும் என்று நினைக்க வேண்டாம், பிரச்சினை தீர நாம் பேசலாம்” என்று.
ஜோ பைடன் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அவர் பொருளாதாரத் திட்டத்தை அறிவித்தபோது பாராட்டிப் பேசினேன். திட்டத்தை அறிவித்துவிட்டால் மட்டும் போதாது, அதை நிறைவேற்ற வேண்டும். கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கிறார் என்றே கருதுகிறேன்.
ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் அவர் சரியான முடிவெடுத்தார் என்று நினைக்கவில்லை. அமெரிக்காவுக்கு அரசியல் செல்வாக்கு அதிகம். இந்தப் போரை அதிபர் பைடனால் தவிர்த்திருக்க முடியும், தூண்டிவிடாமலாவது இருந்திருக்கலாம். அவர் மேலும் சமாதானம் பேசியிருக்கலாம், அதில் தன்னை ஈடுபடுத்தியிருக்கலாம்.
புடினுடன் பேச மாஸ்கோவுக்கே விமானத்தில் நேரடியாகச் சென்றிருக்கலாம் பைடன். ஒரு தலைவரிடம் இப்படிப்பட்ட குணாதிசயங்கள்தான் முக்கியம். நிலைமை கட்டுமீறிப் போகாமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும், அதை அவர் செய்ததாக நினைக்கவில்லை.
புடினுக்கு சலுகைகளை பைடன் அறிவித்திருக்க வேண்டுமா?
நிச்சயம் இல்லை. 1961இல் கியூபாவில் ஏவுகணைகளை நிறுத்த வேண்டாம் என்று ரஷ்யாவிடம் வற்புறுத்தியது அமெரிக்க அரசு. அதே தீவிரத்துடன் ‘நேட்டோவில் உக்ரைனைச் சேர்க்க விரும்பவில்லை, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம்’ என்று பைடன் அறிவித்திருக்க வேண்டும். அது சலுகை அல்ல. நான் பிரேசில் அதிபராக இருந்து, நேட்டோவில் சேர முடியுமா என்று என்னிடம் கேட்டிருந்தால், ‘மாட்டேன்’ என்றுதான் பதில் அளித்திருப்பேன்.
ஏன்?
ஏனென்றால், நான் எப்போதும் சமாதானம் குறித்தே சிந்திப்பவன், போரைப் பற்றி அல்ல. பிரேசிலுக்கு எந்த நாட்டுடனும் பூசல் கிடையாது. அமெரிக்காவுடன் இல்லை, சீனத்துடன் இல்லை, ரஷ்யாவுடன், பொலீவியாவுடன், ஆர்ஜென்டீனாவுடன், மெக்ஸிகோ என்று எந்த நாட்டுடனும் பூசல் இல்லை. பிரேசில் சமாதானத்தை விரும்பும் நாடு. 2003 முதல் 2010 வரையில் யாருடனெல்லாம் தோழமையுடன் இருந்தோமோ அந்த நட்பை மீண்டும் புதுப்பிப்போம். உலக அரங்கில் சமாதான விரும்பியாகவே வலம் வருவோம், காரணம் இப்போதிருப்பதைவிட அமைதியும் சமாதானமும் மிக்க உலகை நம்மால் ஏற்படுத்த முடியும்.
அதை எப்படிச் செய்வீர்கள்?
அதற்குப் புதிய - உலகளாவிய நிர்வாக முறைமை அவசியம். இப்போதைய ஐக்கிய நாடுகள் சபையால் இதற்கும் மேல் வலுவாகச் செயல்பட முடியாது. எந்த நாட்டு அரசும், ஐக்கிய நாடுகள் சபைக்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லை. ஒன்றையொன்று மதிக்காமல்தான் எல்லா நாடுகளும் முடிவுகளை எடுக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையுடன் ஆலோசனை கலக்காமல்தான் உக்ரைன் மீது படையெடுத்தார் புடின். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையை மதிக்காமல்தான் அமெரிக்கா பல்வேறு நாடுகளின் மீது படையெடுத்தது. எனவே ஐக்கிய நாடுகள் சபையில் மேலும் பல நாடுகளும் பல மக்களையும் சேர்த்து அதை வலுப்படுத்த வேண்டும். அதைச் செய்ய முடிந்தால் உலகத்தை மேம்படச் செய்யலாம்.
கோவிட் பெருந்தொற்றின்போது பிரேசிலில் வெள்ளையர்களைவிட கறுப்பர்கள் இறப்பது அதிகமாக இருந்தது, வேலையில்லாத் திண்டாட்டமும் அவர்களிடமே அதிகம் இருந்தது. பொல்சோனாரோ ஆட்சியில் காவல் துறை வன்முறையில் ஈடுபடுவது மேலும் மோசமடைந்தது. பிரேசில்வாழ் கறுப்பர்கள் வாழ்க்கை மேம்பட என்ன செய்வீர்கள்?
சிறையில் இருந்தபோது, கறுப்பர்களின் அடிமை வாழ்வு குறித்து நிறையப் படித்தேன். 350 ஆண்டுகளாக அடிமை வாழ்க்கை முறைதான் நீடித்தது என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அடிமைத்தனம் என்பது மக்களுடைய மனங்களில்தான் நீடிக்கிறது. பிரேசில் நகரங்களின் புறப்பகுதியில் ஆயிரக்கணக்கான கறுப்பின இளைஞர்கள் ஒவ்வொரு மாதத்திலும் ஆண்டுதோறும் இறக்கின்றனர். இது இப்படியே தொடர முடியாது.
நான் அதிபராக இருந்தபோது ஆப்பிரிக்க வரலாற்றை பாடப் புத்தகங்களில் சேர்க்க சட்டம் இயற்றினோம். வீடுகளிலும் பள்ளிக்கூடங்களிலும் இந்தக் கல்வியை நாம் வழங்க வேண்டும். ஆனால் பொல்சோனாரோ வெறுப்பை வளர்த்தார், பாகுபாட்டுடன் நடத்தினார். ஐரோப்பாவிலும் ஹங்கேரியிலும் இப்படிப் பல அதிபர்கள் இருக்கின்றனர். இவர்கள் பாசிஸ்ட்டுகள், நாஜிக்கள், உலகின் பல நாடுகளில் இவர்கள் தலைதூக்கி வருகின்றனர்.
பிரேசிலில் நிலவும் நிறவெறிக்கு பொல்சானோராதான் காரணமா?
இல்லை, நான் அப்படிச் சொல்ல மாட்டேன். இது பிரேசிலில் தீவிரமாக நிலவுகிறது. அவர் கிளறிவிடுகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தனிப்பட்ட முறையில் பல சோகங்களைச் சந்தித்தீர்கள். அந்த அனுபவங்கள் உங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனவா?
மனதளவில் நான் காயப்படவில்லை என்று சொன்னால் அது பொய். பிரேசிலில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும். களத்திலிருந்து என்னை அகற்ற, என் மீது குற்றச்சாட்டுகளைப் புனைந்தார்கள். இப்போது விடுதலையாகிவிட்டேன், என் மீதான எல்லா வழக்குகளும் ரத்தாகிவிட்டன.
ஆம், உங்களுக்கு எதிரான தீர்ப்புகள் ரத்தாகிவிட்டன, ஆனால் அந்தக் காலத்தில் நீங்கள் எப்படி இருந்தீர்கள்?
மொத்தம் 580 நாள்கள் சிறையில் இருந்தேன். நிறையப் படித்தேன். நிறைய சிந்தித்தேன். எந்தவித குரோதமோ, பகையுணர்ச்சியோ இல்லாமல் சிறையிலிருந்து செல்லத் தயாராகிக்கொண்டிருந்தேன். நடந்தவை அனைத்தும் வரலாற்றின் ஒரு பகுதியே என்று கருதினேன். என்னால் பழைய சம்பவங்களை மறக்க முடியாது. அதற்காக தினம் தினம் அவற்றையே கொட்டி அளந்துகொண்டிருக்கவும் முடியாது. எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க விரும்புகிறேன்.
என் வாழ்க்கை வேறுபட்டது. ரொட்டியை நான் முதல் முறையாகச் சாப்பிட்டதே என்னுடைய ஏழாவது வயதில்தான். பல நாள்கள் அடுப்பு மூட்டக்கூட அவசியமில்லாமல் நாங்கள் வறுமையில் வாழ்ந்தோம். ஆனால் அப்படிப்பட்ட நாள்களில்கூட என்னுடைய தாயார் என்னிடம் கூறுவார், “நாளைய பொழுது நன்றாகவே இருக்கும், இன்றைய நாளைவிட நாளை அதிகம் சாப்பிடலாம்” என்று. அந்த நம்பிக்கைதான் என்னுடைய சித்தத்தில், ரத்தத்தில் ஆழ ஊறியிருக்கிறது. இதுதான் நான். மனிதர்களால் மீண்டுவர முடியாத பிரச்சினைகள் என்று எதுவும் கிடையாது.
பிரேசிலின் படித்த மேட்டுக்குடிகளைவிட - உலோக ஆலையில் வேலை பார்த்த, பல்கலைக்கழகப் பட்டம் ஏதுமில்லாத - தொழிலாளியால் நல்ல நிர்வாகத்தைத் தர முடிந்தது என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அரசு நிர்வாகம் என்பது மூளையை மட்டுமல்ல – இதயத்தையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டியது.
உங்கள் மனைவியைப் பற்றிக் கூற முடியுமா?
அவரைப் பற்றிப் பேசமாட்டேன், அவரால் தன்னைப்பற்றிப் பேச முடியும்..
அவரிடமிருந்து எதையாவது கற்றுக்கொண்டீர்களா?
நிச்சயமாக. மனைவி இறந்த பிறகு, வாழ்க்கையே அர்த்தமற்றதாகிவிட்டது. திடீரென இப்பெண் அறிமுகமாகி, என்னுடைய வாழ்க்கைக்குப் புதிய அர்த்தத்தைக் கொடுக்க வந்திருக்கிறார். 20 வயது இளைஞனைப் போல உணர்கிறேன், அவரை என்னுடைய முதல் காதலியாகவே பாவிக்கிறேன். மிகவும் எளிமையாக திருமணம் செய்துகொள்வேன், பிறகு மகிழ்ச்சியுடன் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்.
மகிழ்ச்சியில் திளைக்கும் என்னைப் போன்ற ஒருவர் அரசியல் எதிரிகள் குறித்து ஆவேசமாகப் பேச வேண்டியதில்லை, அவர்கள் விரும்பியதைச் செய்துகொள்ளட்டும். முடிந்தால் அன்பொழுகப் பேசுவேன். உள்ளூர வெறுப்பைச் சுமப்பவர்களால் நல்ல அதிபராக இருக்க முடியாது. பழிவாங்கத் துடிப்பவர்களாலும் முடியாது. எதிர்காலம் பற்றித்தான் சிந்திக்க வேண்டும், கடந்த காலம் கடந்தேவிட்டது. புதியதோர் பிரேசிலைப் படைப்பேன்!
தொடர்புடைய கட்டுரை
தமிழில்: வ.ரங்காசாரி
6
2
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 2 years ago
A matured mind in Lula speaks out in the form of an interview. Translation of the interview is simple and good.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Mahalingam N R 2 years ago
அமைதியை விரும்பும் திறந்த மனப்பான்மை கொண்டவராகவும், போலியான வாக்குறுதிகளைக் கொடுப்பவராகவும் அல்லாமல் பதிலளித்துள்ளார். “நாளைய பொழுது நன்றாகவே இருக்கும், இன்றைய நாளைவிட நாளை அதிகம் சாப்பிடலாம்” என்று. அந்த நம்பிக்கைதான் என்னுடைய சித்தத்தில், ரத்தத்தில் ஆழ ஊறியிருக்கிறது. இதுதான் நான். எனும் போது இவரைப் பற்றிய நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. வாருங்கள் லூலா.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
செல்வம் 2 years ago
தவறுதலாக சாரு நிவேதிதாவின் பேட்டியைப் பிரசுரித்துவிட்டீர்களா?
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.