கட்டுரை, கலாச்சாரம், சமஸ் கட்டுரை, வாழ்வியல் 5 நிமிட வாசிப்பு

கோடி பூக்கள் பூக்கட்டும்

சமஸ்
10 Dec 2022, 5:00 am
6

ந்தியாவில் வருஷத்துக்கு ஒரு கோடிக்கும் குறையாமல் திருமணங்கள் நடக்கின்றன. தமிழ்நாட்டிலும் இப்படி சுமார் எட்டு லட்சம் திருமணங்கள் நடக்கின்றன. ராஜபாளையத்திலும் அப்படி நடக்கும் நூற்றுக்கணக்கான திருமணங்களில் ஒன்றுக்குத்தான் நான் சென்று வந்தேன். இது கொஞ்சம் கூடுதல் விசேஷம் என்பதால், இதுபற்றி எழுதுவது அவசியம் என்று தோன்றியது.

என்ன கூடுதல் விசேஷம்?

மருத்துவர் கு.கணேசன் எனும் பெயரை இன்றைய தமிழ் வாசகர் ஒருவர் அறியாமல் இருக்க முடியாது. அநேகமாக தமிழின் முன்னணிப் பத்திரிகைகள் எல்லாவற்றிலுமே அவருடைய மருத்துவக் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. தமிழில் கணேசன் அளவுக்கு மருத்துவத்தை எளிமையாகவும், ஆழமாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதியவர் எவரும் இல்லை. உலகின் எந்த மூலையில் கண்டறியப்படும் புதிய கிருமி அல்லது புதிய சிகிச்சை அல்லது புதிய மருந்து அல்லது புதிய தொழில்நுட்பம் எது ஒன்றையும் உடனடியாக தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திடுபவர் கணேசன். உலகை முடக்கிய கரோனா சீனாவில் கண்டறியப்பட்ட வேகத்தில் தமிழ்நாட்டில் அதைப் பற்றி விரிவான கட்டுரைகளை எழுதியவர். கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைக் கொடுத்திருப்பவர். 

எனக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பு கணேசன் பழக்கம் ஆனார். அப்போது ‘தி இந்து’ குழுமம் தமிழில் பத்திரிகையை ஆரம்பிக்கவிருந்த தருணம். அதில் முக்கியமான பொறுப்பில் நான் இருந்தேன். தமிழில் ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்த பலரையும் நாங்கள் புதிய பத்திரிகையில் எழுதவைக்க விரும்பினோம். அதேசமயம், பத்திரிகைக்குப் புதிய எழுத்து பாணி ஒன்றை உருவாக்கவும் விழைந்தோம். கணேசனைத் தொடர்புகொண்டபோது அவர் சில கட்டுரைகளை அனுப்பியிருந்தார். அந்தக் கட்டுரைகள் ஆழமான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன. மொழிநடை கொஞ்சம் பழையதாக இருந்தது. புதிய தலைமுறைக்கு ஏற்ற ஒரு மொழி நடைக்கு மாறினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. 

நான் என் உதவி ஆசிரியர்களிடம் இதைக் கூறினேன். “மருத்துவரிடம் அவரைச் சங்கடப்படுத்தாத விதத்தில் இதைத் தெரிவியுங்கள்.” அதோடு ‘வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரை ஒன்றையும் அவருக்கு அனுப்பிடச் சொன்னேன். எனக்கே ஒரு சங்கடம் இருந்தது. கணேசன் அப்போதே ஐம்பதுகளில் இருந்தார். பல நூல்கள், விருதுகளுக்கு உரியவராக இருந்தார்.

அன்றிரவு எனக்கு செல்பேசி அழைப்பு வந்தது. “வணக்கம், நீங்கள் அனுப்பித் தந்த கட்டுரையை வாசித்தேன். நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். தலைமுறை மாற மாற நாம் எழுத்தையும் மாற்றிக்கொண்டேதான் இருக்க வேண்டும். நான் தொழில்முறை எழுத்தாளர் இல்லை அல்லவா? அதனால் இதுபோன்ற விஷயங்களில் எனக்குக் கவனம் இல்லை. இதுவரை யாரும் இப்படிச் சொன்னதும் இல்லை. சரியான நேரத்தில் எனக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். செய்திடலாம்!” அவ்வளவு உற்சாகமாக இருந்தது அந்தக் குரல்.

மிக வேகமாக தன்னுடைய மொழியை மாற்றியமைத்தபடி இருந்தார் கணேசன். மொழி சுவாரஸ்யத்துக்காக சில திருத்தங்களைக் கட்டுரைகளில் மேற்கொண்டால் அந்த மாற்றங்களையும் அவர் முழுமையாக உள்வாங்கினார். அடுத்தடுத்த கட்டுரைகளில் அதே வகை திருத்தத்துக்கு வேலை இருக்காது. கூடிய விரைவில் அவர் கட்டுரைகளில் கை வைப்பதற்கான தேவைகள் அருகிப்போயின. இன்னொரு முக்கியமான விஷயம், அவருடைய வேகம். இரவு 9 மணிக்கு அவரிடம் ஒரு விஷயத்தைப் பற்றி கட்டுரை கேட்டால், அடுத்து வரும் அதிகாலையில் உட்கார்ந்து அதை முடித்து அனுப்பியிருப்பார். இந்த வேகம் தொழில்முறைப் பத்திரிகையாளர்களுக்கே சவால் விடக்கூடியது.

இதற்குப் பிறகுதான் கணேசனைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வம் கூடியது. எளிய குடும்பப் பின்னணியில் பிறந்தவர் கணேசன். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள புதுசெந்நெல்குளம் அவர் பிறந்த ஊர். பி.ராமச்சந்திரபுரம் அரசுப் பள்ளியில் படிக்கிறார். மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடிக்கிறார். உள்ளூரில் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குத் தன்னுடைய சேவை பயன்பட வேண்டும் என்று எண்ணியவர் அரசு மருத்துவர் பணி வாய்ப்பானது, வெளியூர் செல்லும் சூழலை உண்டாக்கும் என்பதாலேயே சுயாதீனமாகச் செயல்படுகிறார். காலையில் 9 மணிக்கு ஆரம்பிக்கும் கணேசனுடைய மருத்துவப் பணி இரவு 9 மணிக்கு முடிகிறது. இதை அன்றி அவசரத் தேவைக்காக எந்த நேரத்திலும் அவரை அணுக முடியும்; நோயாளிகளின் சூழலுக்கு ஏற்ப கட்டணம் வாங்கிக்கொள்வார் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.

மருத்துவர் என்பதைத் தாண்டி அபாரமான வாசகர் கணேசன். வீட்டிலும், மருத்துவமனையிலும் நல்ல நூலகங்களை வைத்திருக்கிறார். அன்றாடம் அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்திருப்பவர் குறைந்தது 10 அச்சு மற்றும் இணையப் பத்திரிகைகளை வாசிக்கிறார். தன்னுடைய துறையைத் தாண்டியும் தமிழ், ஆங்கிலத்தில் வரும் முக்கியமான எல்லா நூல்களையும் வாசித்துவிடுகிறார். இலக்கியத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தன்னுடைய மகன், மகள் இருவரையுமே தன்னைப் போலவே மெரிட்டில் மருத்துவம் படிக்கவைத்தவர், கிராமங்கள் சூழ்ந்த ராஜபாளையம் பகுதியிலிருந்து மருத்துவர்கள் உருவாவதன் அவசியத்தை உணர்ந்து அதற்கும் தன்னாலான பங்களிப்பைச் செய்கிறார். ராஜபாளையத்தில் அழைக்கும் பள்ளிகளுக்குச் சென்று பள்ளி இறுதித் தேர்வு சமயத்தில் சிறப்பு வகுப்பு எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பொருளாதாரரீதியாக உதவி தேவைப்படும் மாணவர்களுக்கும் தன்னாலானதைச் செய்கிறார்.

எனக்கு அடிக்கடி இது தோன்றும். தமிழகத்தின் பிரபலமான மருத்துவர்கள் என்று நமக்கு அறிமுகமான முகங்களைப் பட்டியலிடுவோம். ஏன் அவர்களில் கணேசன் போன்ற ஒருவரின் முகம் நமக்கு வரவில்லை? இதே சென்னை போன்ற பெருநகரத்தில், ஒரு முற்பட்ட சமூகப் பின்னணியிலிருந்து வந்தவராக இருந்திருந்தால் கணேசன் அடைந்திருக்கக் கூடிய இடம் என்னவாக இருக்கும்?

இப்போது அடுத்த விஷயத்துக்கு வருவோம்.

கணேசனுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகச் சொன்னேன் இல்லையா? ராஜபாளையத்தில் சமீபத்தில் அவருடைய மகள் ஆர்த்தியின் திருமணம் நடந்தது. அவருக்கு அறிமுகமானவர்கள் அவ்வளவு பேரையும் அழைத்து விமரிசையாக நடத்தியிருந்தார். விசேஷம், இது ஒரு சாதி மீறல் திருமணம். மணமகன் சுவஜித் சின்ஹா, காயஸ்தா. அடிப்படையில் வங்காளி; அவர் பிறந்து வளர்ந்தது திரிபுரா; குடும்பம் நிலைகொண்டது குஜராத். முன்னதாக, மகன் திவாகருடைய திருமணத்தையும் இப்படித்தான் நடத்தினார் கணேசன். அது மத மீறல் திருமணம். மருமகள் ஃபௌசியா, முஸ்லிம். இரண்டுமே காதல் திருமணங்கள்.

சரி, காதல் திருமணங்கள் சாதி – மத அடையாளம் மீறி நடப்பது இயல்பானதுதானே; இதில் விசேஷமாக என்ன இருக்கிறது என்று யாராவது கேட்கலாம். சமூகநீதிக்குப் பேர் போன தமிழகத்தில் சாதி – மத மறுப்புத் திருமணங்களின் விகிதம் குறைவு; வெறும் 1.66%; தேசிய சராசரி 5.58%. இப்படி நடக்கும் பெரும்பாலான திருமணங்கள் குடும்பங்களை மீறியோ அல்லது சம்பந்தப்பட்ட இரு குடும்பங்களும் நெருக்கமானவர்களை மட்டும் இணைத்துக்கொண்டோ நடப்பவையாகவே அதிகம் இருக்கின்றன. இந்த வரையறையைத் தாண்டிய விமரிசையான திருமணங்கள் காந்தி, பெரியார், அம்பேத்கர், அண்ணா என்று ஏதேனும் அரசியல் – சித்தாந்த அடிப்படையைப் பின்னணியாகக் கொண்ட முற்போக்காளர்களின் குடும்பப் பின்னணியைக் கொண்டிருக்கும்.

அடிப்படையில் கணேசன் ஒரு மரபியர். அவர் சார்ந்த கம்ம நாயக்கர் சமூகமானது, எண்ணிக்கைரீதியாக மட்டும் அல்லாது மொழிரீதியாகவும் சிறுபான்மைச் சமூகம்; தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் அவர். ராஜபாளையம் இந்தச் சமூகத்தினர் செறிவாக வாழும் பகுதிகளில் ஒன்று. இப்படிப்பட்ட சாமானிய  பின்னணியிலிருந்து வருபவர்கள் நெருக்கமான சமூகப் பிணைப்புகளைக் கொண்டிருப்பது இயல்பு.

கணேசனுக்கு சாதி, மதப் பற்று கிடையாது என்றாலும், அந்தச் சமூகப் பிணைப்பிலிருந்து துண்டித்துக்கொண்டு வாழ்பவர் இல்லை அவர். கல்விக்கான உதவி, திருமணத்துக்கான உதவி, முதியோருக்கான உதவி என்றெல்லாம் சமூகம் சார்ந்த முகமை போன்ற அமைப்புகள் சில நல்ல காரியங்களை முன்னெடுக்கையில் அதில் கணேசனையும் முக்கியஸ்தராக அவர்கள் முன்னே அழைத்து நிற்க வைக்கிறார்கள். ‘நல்ல காரியம்; போய் வருகிறோம்’ என்ற அடிப்படையில் பொதுக் காரியங்கள் பலவற்றுக்குக் கணேசனும் சென்று வருகிறவர். இத்தகு மரபார்ந்த பின்னணியிலிருந்தே மீறல்களை மனதார ஏற்று தம் பிள்ளைகளின் விருப்பத்தை முன்னெடுப்பவராக கணேசனும் அவருடைய மனைவி லலிதாவும் இருந்திருக்கிறார்கள். “பையன் சாதியோடு சேர்த்து மத எல்லையையும் உடைச்சுட்டார். பொண்ணு சாதியோடு சேர்த்து பிராந்திய எல்லையையும் உடைச்சுட்டார். இப்போ எங்களோட அடுத்த தலைமுறையைப் பாருங்க, முழுச் சுதந்திர மனிதர்களா இருப்பாங்க!” என்கிறார்கள் இருவரும்.

எனக்கு முற்போக்காளர்கள், தாராளர்கள் முன்னெடுக்கும் மாற்றங்களுக்கு இணையாக மரபியர்களிடம் போகிறப்போக்கில் நடக்கும் இந்த மாற்றங்கள் மிக முக்கியமானவையாகத் தோன்றுகின்றன. கணேசன் – லலிதா தம்பதி வெகு சாதாரணமாகச் சொன்னாலும், முழுமையாக சாதிசார் சமூகக் கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு, இந்த மாற்றங்களுக்கு அனைவரையும் சம்மதிக்கவைத்து, எல்லோரையும் அரவணைத்து, இப்படி விமரிசையாக ஊரைக் கூட்டி ஒரு காரியத்தைச் செய்வது சாமானியமானது இல்லை. “எங்ககிட்ட அவங்க வந்து சொன்னவுடனேயே சம்மதிச்சுடலை. ‘முதல்ல உங்களுக்குள்ள ஒரு புரிதல் வரட்டும்; வந்ததும் எனக்குச் சொல்லுங்க!’ன்னு சொன்னேன். ரெண்டு வருஷம் அவகாசம் கொடுத்தேன். அவங்களுக்குத் தன்னோட வாழ்க்கைத் துணை சார்ந்து ஒரு தெளிவு இருக்கு. ரெண்டு பேருமே நல்லாப் படிச்சு ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கிக்கிட்டு, தனக்கேத்தபடி இணையர்களைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. நாம இந்த முடிவை மதிக்கணும். எங்க பையனோ, பொண்ணோ தேர்ந்தெடுத்திருக்குற பிள்ளைகளைப் பாருங்க, அவங்களுக்கு என்ன குறை? இப்படித்தான் எல்லார்கிட்டேயும் கேட்டோம். ஆயிரம் பூக்கள் பூக்கட்டும்னு சொல்வாங்கள்ல; பூக்கட்டும்” என்கிறார் கணேசன்.

கோடி பூக்கள் பூக்கட்டும்!

 

-‘குமுதம்’, டிசம்பர், 2022

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5

4





பின்னூட்டம் (6)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   1 year ago

மன்னிக்கவும். ஒரு சாதனையாளரை பற்றி எழுதும்போது அவருடைய சாதி, மத, இன அடையாளங்கள் பற்றிய தரவுகள் அவசியம் சொல்லப்பட வேண்டுமா? அதனால் விளையும் நன்மைகள் என்ன?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

R.Kamarasu   1 year ago

வாழ்த்துகள். சிறந்த மருத்துவ எழுத்தாளர் என்ற வகையில் முன்னரே அவரது கட்டுரைகளையும், நூல்களையும் வாசித்திருந்தாலும் இந்தக் கட்டுரை மேலும் அவரை எனக்கு நெருக்கமாக்குகிறது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

மு.இராமநாதன்   1 year ago

அயல் நாடுகளில் மருத்துவ இதழாளர்கள் இருப்பார்கள். இவர்கள் மருத்துவர்கள் அல்லர், துறை சார்ந்த பயிற்சி பெற்ற இதழாளர்கள். தமிழில் அப்படியானவர்கள் இல்லை, யாரும் பயிற்சி அளிப்பதில்லை, ஊடக உலகில் அதற்கான அக்கறையும் இல்லை. தமிழில் மருத்துவ இதழாளர்கள் இல்லை எனும் வசை டாக்டர் கணேசனால் கழிந்தது! ஒரு முழு நேர மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே எளிய வாசகனுக்கு அவர் மருத்துவச் செய்திகளைச் சங்கில் புகட்டுகிறார், மாத்திரை வடிவில் வழங்குகிறார், வாசகனின் தோளில் கைபோட்டுக் கொண்டு கடத்தியும் விடுகிறார் அவர் ஒரு மருத்துவர், ஓர் இதழாளர். தெரியும். இப்போது அவரது இன்னொரு முகமும் துலங்குகிறது. டாக்டர் கணேசன் ஒரு மகத்தான மனிதர்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

A M NOORDEEN   1 year ago

மரு. கு.கணேசனின் பல கட்டுரைகளை இந்து தமிழ்திசையில் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். மருத்துவத் தொழில் கடந்து அவர் எழுத்தாளர், வாசிப்பாளர் என்பது அவர் சிறப்புதான். அவர் வாரிசுகளின் மதங்கள் கடந்த திருமணங்கள் பற்றி எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஆனாலும் இது போன்ற திருமணங்கள் நம் நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதில் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம், பொருளாதாரம். இணையான பொருளாதார வசதி கொண்ட காதலர்கள் இரு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். அதே போல் தன் சுய சாதியை விட உயர் சாதி என கருதும் இடத்திலிருந்து வரும் பெண்ணையோ, பையனையோ ஏற்றுக் கொள்கிறார்கள். தன் சுய சாதியை விட கீழ் சாதி அமைப்பிலிருந்து வரும் பெண்ணோ, பையனோ பொருளாதாரத்தில் (அ) அதிகாரத்தில் உயர்வடைந்திருந்தால் கூட ஏற்றுக் கொள்வார்கள். இல்லையேல் அந்தக் காதல்கள் நிராகரிக்கப்படும். மறுக்கப்படும். இங்கே சாதி மீறல் என்பதை விட பொருளாதாரம் முக்கிய இடத்திற்கு வந்து விடுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    1 year ago

அருமையான அழகான செயல் தான்! மருத்துவர் கு கணேசன் அவர்களின் கட்டுரைகளுக்குப் பரம விசிறி நான், அவருடைய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி நூலகங்களில் வைக்கப்பட வேண்டும், அவற்றைப் படித்துவிட்டு பின் textbooks ஐப் படித்தால் மருத்துவமாணவர்களுக்கு எளிமையாகப் புரியும். முக்கியமாக immunology. பற்றிய அவரது கட்டுரைகள். உடலுக்குள் ஒரு ராணுவம் என்ற பெயரில் அருஞ்சொல் தான் வெளியிட்டது. இப்போது அவரது பரந்த மனப்பான்மைக்கும் விசிறி ஆகி விட்டேன். சமூக முன்னேற்றத்தில் அருஞ்சொல் அக்கறை கொண்டிருப்பதற்கு சான்று இந்த கட்டுரை👏👏👏👏

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

விஷ்வ துளசி.சி.வி   1 year ago

தலைப்பே வசிகரிக்கிறது வாழ்த்துக்கள் இணையருக்கு .வாழ்த்துக்கள் மருத்துவருக்கும் கட்டுரையாக்கிய ஆசிரியருக்கும் .

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆஜ் தக்தரவுப் புள்ளிகள்ஆவின் நிறுவனம்மலாவி ஏரிஅகரம்ஆகம விதிகடலூர்யாத்திரைபாஜக பிரமுகர்தனிச்சார்பியல் கோட்பாடுசிறப்புக் கூடுதல் உற்பத்தி வரிநாகூர் இ.எம்.ஹனீஃபாஉரம்ஒன்றிய – மாநில அரசு உறவுகள்டீனியா பீடிஸ்அஜித் தோவல்ஹேர் கண்டிஷனர்கோலார்இலக்கியப் பிரதிபழங்குடிக் குழுக்கள்செக்ஸ்டார்சன்தனியார் பள்ளிகள்ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதமிழன்புத்தக வெளியீட்டு விழாஅயோத்தியில் ராமர் கோயில்பொருளாதாரக் கொள்கை மறுசீரமைப்புக்கு இதுவே நேரம்டிம் பார்க்ஸ்உடை சர்வாதிகாரம்வெறுப்புப் பிரச்சாரம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!