கட்டுரை, வாழ்வியல், இரு உலகங்கள் 10 நிமிட வாசிப்பு
மொக்கையில் ஆரம்பிக்கும் அபாயம்
இரு உலகங்கள். இது ஆணும் பெண்ணும் மாறிமாறி தங்கள் அபிலாஷைகளை, புகார்களை, எதிர்பார்ப்புகளை, குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக அப்படியே முன்வைக்கும் தொடர். அரசியல் சரித்தன்மைக்கோ, சமநிலை உணர்வுக்கோ இதில் இடமில்லை. ஆண்களைப் பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்ள ஏதுவாக அவரவரைச் சுற்றியுள்ள உலகத்தை அப்படியே பேசுகிறது. பின்னர், விவாதங்கள், உரையாடல்கள் நடக்கும். பெண்களின் சார்பில் அனுஷா எழுதினார். இப்போது ஆண்களின் சார்பில், அராத்து எழுதுகிறார். அடுத்து, பெண்கள் தரப்பு - ஆண்கள் தரப்பு என்று இந்த உரையாடலும் விவாதமும் தொடரும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காதலிக்கும்போது இருவருக்குள்ளும் பெரிதாகப் பிரச்சினைகள் வராது. வந்தாலும் அது உண்மையிலேயே ஊடலாக இருக்கும். அந்த ஊடல், காதலை மேலும் வலுவாக்கவே உதவும். பிறகு திருமணம் என்ற அங்கீகரிக்கப்பட்ட உறவுக்குள் நுழைந்த பிறகே, உண்மையான உறவு பேதங்கள் தலை தூக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், காதலிக்க ஆரம்பித்த நான்காம் நாளே சண்டை ஆரம்பித்துவிடுகிறது. பெரும்பாலானோர் இதை ஊடல் என்று கருதி, ஆரம்பச் சண்டையின்போது சமாதானம் ஆகிவிடுகின்றனர்; சிலரோ சரியாகப் புரிந்து விலகிவிடுகிறார்கள். ஆனால் அது உண்மையில் ஊடல் அல்ல, சண்டையும் அல்ல என்று தெரியவரும்போது பிரளயம் வெடிக்கிறது. சரி, என்னதான் அது? ஏன் இப்போதெல்லாம் காதலிக்க ஆரம்பித்த வெகு சில நாட்களுக்குள்ளாகவே கருத்து மோதல், உறவுச் சிக்கல்கள் அவ்வளவு தீவிரமாகத் தலைதூக்குகின்றன?
முன்பு, காதலிக்க - சந்தித்துக்கொள்ள சில நிமிடங்களே கிடைக்கும். அந்த நிமிடங்களுக்கே தேவுடு காத்துக் கிடக்க வேண்டும். அப்போது கிடைக்கும் பரவசம் உண்மையிலேயே, மாதக்கணக்கில் விரதமிருந்து மைல் கணக்கில் நடந்து சாமியைத் தரிசிக்கும் பரவசத்தைவிட பெரிய பரவசமாகத் தோன்றும். இப்போது காதலிக்க ஆரம்பித்த நொடியில் இருந்து, காதலிக்கிறார்கள்... காதலிக்கிறார்கள்... 24 மணி நேரமும் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் தகவல் தொடர்புப் புரட்சியால் ஏற்பட்ட வினை!
†
நீதான் என் உயிர்மூச்சு என ஓர் உதாரணத்திற்காக, கண நேர எக்ஸ்டஸிக்காக சொல்லப்பட்ட வார்த்தை இப்போது உண்மையாகிப்போனது. மூச்சை நிறுத்தாமல்விடுவதுபோலக் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள் ஆரம்பக் கட்டங்களில். காலையில் எழுந்த அடுத்த கணம் தலைமாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மொபைலை எடுத்து விடியோ காலில் ஆரம்பிக்கும் காதல், இரவு தூங்கி விழும் வரை தொடர்கிறது. டாய்லெட்டில் அமர்ந்து டெக்ஸ்டிங், வாக்கிங் அல்லது வொர்க் அவுட் புகைப்பட ஷேரிங், காலை உணவு புகைப்படம், வேலைக்கு செல்கையில் போன் அல்லது விடியோ கால். வேலைக்கு நடுநடுவே பல ஷேரிங்குகள் எனத் தொடர்ந்து ஒரு நாள் முழுக்க டெக்ஸ்ட், போட்டோ, விடியோ, வாய்ஸ் என இருக்கும் அத்துனை ஃபார்மேட்டுகளிலும் 10 ஜிபி அளவுக்குக் காதலிக்கிறார்கள்.
கிரிக்கெட் மேட்சில் ஃபோர், சிக்ஸ், சிங்கிள்ஸ், டபுள்ஸ் எனக் கலந்துகட்டி அடித்துக்கொண்டே போய், கடைசி ஓவர்களில் விளாசினால் கும்மென்று இருக்கும். முதல் 2 ஓவர்கள் முழுக்க சிக்ஸ் விளாசிவிட்டு, அடுத்த ஓவரில் ஃபோர் அடித்துவிட்டு, பிறகு மேட்ச் முழுக்க அவ்வப்போது சிங்கிள்ஸ் மற்றும் டொக்கு வைத்துக்கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் ஆகிப்போனது இன்றைய காதல்!
முன்பு காதலிக்க நேரமும் சூழ்நிலையும் கிடைக்காமல் ஏங்குவார்கள். பசலையையும் பிரிவுத் துயரையும் எப்படியெல்லாம் பேசியிருக்கின்றன நம்முடைய இலக்கியங்கள்! காதலிக்க அருகாமையும் சூழலும் கிடைக்காமல் உடலும் மனமும் கொதிக்கும். செத்துவிடலாம்போல் இருக்கும். இப்போது 24 மணி நேரமும் காதலிக்க சூழல் ஏற்பட்டு, அந்தச் சூழலே காதலுக்கு எதிரியாகப்போயிருப்பதுதான் நகைமுரண். 24 மணி நேரமும் காதலித்துக்கொண்டிருப்பதால், ஒருவர் பார்வையில் (கண்காணிப்பில்) இன்னொருவர் இருந்துகொண்டே இருப்பதால் ஏற்படும் பலவித நூதன உறவுச் சிக்கல்களை நாம் இன்னும் முழுமையாக இனம் காணவில்லை.
சில நண்பர்களுடன் பேசியதில் இருந்தும், சில நண்பர்கள் பகிர்ந்துகொண்ட கதைகளில் இருந்தும், என்னுடைய நேரடி அனுபவத்தில் இருந்து உணர்ந்ததை வைத்தும் முக்கியமான ஒரு சிக்கலை அவதானித்தேன். மொபைல் போன் மூலம் பேசிப் பேசி, டெக்ஸ்ட் செய்துசெய்து அதிலேயே பழகிவிட்டவர்களுக்கு நேரில் சந்திக்கும்போது என்ன செய்வதென்றே புரியவில்லை. பத்து நிமிடங்களுக்கு மேல் பேச ஒன்றுமே இல்லாமல் போய்விடுகிறது. மொபைல் மூலம் அதிக நேரம் கம்யூனிகேட் செய்து காதல் வளர்த்து பழக்கப்பட்டவர்களுக்கு நேரில் காதலிக்கத் தெரிவதில்லை. ‘புஜ்ஜி குட்டி, அம்மு குட்டி, அழகு தெய்வம், செக்ஸி பேபி, மில்க்கி ஏஞ்சல்’ என்றெல்லாம் மொபைலில் டெக்ஸ்ட் செய்யும்போது சரளமாக வருகிறது. நேரில் இருக்கையில், ஒருவித தயக்கம் ஆட்கொண்டுவிடுகிறது. ‘ஸ்வீட் நத்திங்க்ஸ்’ என்பார்களே, அது மொபைலில் வறுக்கும் அளவுக்கு நேரில் வறுக்கத் தெரிவதில்லை.
இது எந்த அளவுக்கு ஆபத்தில் போய் முடிகிறதென்றால், மென்காமம் முதல் வன்காமம் வரை இப்போது மொபைலில் விடியோ சாட் மூலம் பிராக்டீஸ் செய்து முடித்தவர்களுக்கு நேரில் சந்திக்கையில் காமத்தில் ஈடுபடுவதே ஒருவித குழப்பநிலையைத் தோற்றுவித்து நிறைவாக முடிவடைய வேண்டிய காமம், அல்பாயுசில் முடிவடைகிறது!
†
இந்த மொபைல் - மெய்நிகர் - காதல் அதிக ஆர்வமுடையவர்களாகப் பெண்களை மாற்றியிருப்பது ஆச்சரியம். அதாவது, மொபைலில் எந்நேரமும் மொக்கை போட வேண்டும்; ‘பாதியில் நிறுத்தினால் மகனே நீ காலி!’ என்பார்கள் நண்பர்கள்.
நீண்ட நேரம் மொக்கை போட்டு முடித்த அடுத்த கணம் 'சாட்டிங்' தொடங்கும். ஆண்கள் இதில் ஈடுபடுவதில்லையா எனக் கேட்கலாம். பெண்கள் அளவுக்கு இல்லை என்பதுதான் பதில். அதிகபட்சம் தன் காதலியின் புகைப்படத்தை அனுப்பச் சொல்லுவான். உடையோடா, உடையற்றா என்பதெல்லாம் அவரவர் காதலின் ரசனை, தரம், வேகத்தைப் பொறுத்தது. ஆனால், இப்போதைய பெண்கள் கடுமையான ‘அட்டென்ஷன் சீக்கிங்க் டிஸ் ஆர்டர்’ கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதே பலர் வாயிலாகவும் நான் அறிந்துகொண்ட விஷயம்.
‘எப்போதும் மொபைல் மூலம் ஏதேனும் ஒரு வகையில் காதல் புரிந்துகொண்டிருக்க வேண்டும் என்ற காதலியின் மறைமுக நிர்ப்பந்தம் உள்ளபடி ஆண்களைப் பதற்றத்தில் வைக்கிறது. “ஒரு வேலை இருக்கிறது, அதை முடித்துவிட்டு பேசுகிறேன்” என்று சொல்லக்கூட அவன் அஞ்சி நடுங்க வேண்டியுள்ளது. அவள் காதலை சந்தேகத்துக்குள்ளாக்கிவிட்டு, அதை வைத்து நான்கு நாட்கள் தொடர் சண்டையில் ஈடுபடுவாளே? அப்படியே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சொல்லிவிட்டாலும், “என்னவிட வேலதான் முக்கியமா?” என கொஞ்சிக்கொண்டு கேட்டால், என்ன பதில் சொல்வேன்? இப்படியே கேட்கும் நண்பர்கள் எனக்கு உண்டு.
இதில் வர்க்கப் பேதமெல்லாம் இல்லை. ஷேர் ஆட்டோ முதல், மாநகர பஸ், ரயில், கார், ஃப்ளைட் என எங்கு வேண்டுமானாலும் பாருங்கள்... இளம் பெண்கள் அனைவரும் இகலோகமா பரலோகமா என்பதை மறந்து ஒரு ஹெட் செட் மாட்டிக்கொண்டு, யாருக்கும் கேட்காத வண்ணம் 'குசு குசு'வெனப் பேசிக்கொண்டேயிருப்பார்கள். காதைத் தீட்டிக்கொண்டு உற்று கவனித்தால்…
“ஏய் என்னடா… இப்பல்லாம் பேசவே மாட்டேங்கிற!”
“ஏதாச்சும் சொல்லுடா… இங்க இப்பதான் அசோக் பில்லர் க்ராஸ் பண்றேன்!”
“நான் உங்கிட்ட என்னடா சொன்னேன்… சொல்லு என்ன சொன்னேன்… இல்ல… சொல்லு... நான் என்ன சொன்னேன்…. நான் என்ன சொன்னேன்னு கேக்கறேன்… சொல்லு நான் என்ன சொன்னேன்… மொதல்ல நான் என்ன சொன்னேன்னு சொல்லு!”
இப்படியே டயலாக்குகள் ஓடிக்கொண்டிருக்கும்.
இவர்கள் அனைவரும் டிஜிட்டலில் காதலித்து காதலை வாழ்வாங்கு வாழவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு எதிர்முனையில் இருப்பவனின் நிலைமையை எண்ணிப்பாருங்கள். அவனை இப்படி முறுக்கி, சாறு பிழிவதில் இவர்களுக்கு ஏன் இப்படி ஓர் அதீத ஈடுபாடு? ஒருவேளை ‘காதல் என்னும் சாறு பிழிந்து’ என்பதை ஒரு மாதிரியாகப் புரிந்துகொண்டார்களோ?
†
முக்கியமான ஒரு விஷயம் இப்போது நம் கவனம் கோருகிறது. பெரும்பாலான காதல்கள் நேர்மையான முறையில் பூப்பதில்லை. அனைத்துக் காதல்களும் லட்சியக் காதல்களும் அல்ல; பல காதல்கள் திருட்டுத்தனத்தின் அடிப்படையிலும், கேவலமான, அருவருப்பான பின்னணியிலும்தான் பூக்கின்றன என்கிறார்கள்.
ஆண்கள் குழாமில் வெளிப்படையாகப் பேசிக்கொள்வார்கள் என்பதால் சிலவற்றைச் சொல்கிறேன்.
“டெய்லி அவ பின்னால போவணும் மச்சி. டிசிப்ளின் முக்கியம். ஒருகட்டத்துல அவ வுழுந்துடுவா!”
இத்தகைய டயலாக்குகள் 'ஈவ் டீஸிங்' போன்றவற்றுக்கு இட்டுச் செல்லும் ஆபத்துள்ளவை. பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் வேலையைச் செய்பவை. ஆனால் கொடுமை என்னவென்றால், அப்படித் தொடர்ந்து பின்னால் மட்டுமே சென்றவனிடம் விழுந்த ஒரு சில பெண்களை நானறிவேன். என் நண்பர்களும் அறிவார்கள்.
“தொடர்ந்து போய் பேசிட்டே இருக்கணும்டா… எவ்ளோ திட்னாலும் வாங்கிக்கணும். செருப்பால அடிச்சாக்கூட வாங்கிட்டு, மறுநாளும் போய் பேசணும்!”
இப்படிப் செய்தவன் மேல் இரக்கம் கொண்டு, பாசம் கொண்டு காதலில் விழுந்த ஒரு சில பெண்களின் கதைகளும் என்னிடம் பெண்களாலேயே சொல்லப்பட்டு இருக்கின்றன.
இன்னும் பல மோசமான வழிகளை ஆண்கள் கையாளுவார்கள். அவற்றையெல்லாம் என்னால் இங்கே எழுத முடியாது. இந்த வழிமுறைகளில் நெருங்கும் ஒருவனைப் பெண்கள் ஊக்கப்படுத்தலாமா? இப்போது இருக்கும் பெண்கள் என்ன படிப்பறிவில்லாமல் அறியாமையில் உழல்பவர்களா? இதில் காதல் எங்கே இருக்கிறது? சும்மா ஒரு பெண்ணை தெருவில் பார்த்து, குறிவைத்து பின் தொடரும் செயல் ‘டார்ச்சர்’ என்றே பொருள்பட வேண்டும். ஆனால், டார்ச்சர் செய்பவன் மேல் எப்படி காதல் வருகிறது?
இப்படியான செயல்களில் ஈடுபடுபகளை ஊர்ப் பக்கம் ‘காலிப்பயல்கள்’ என்று அழைப்பார்கள். இந்த காலிப்பயல்களோடு உங்களுக்குக் காதல் என்ன கிழிக்கிறது? இப்படி அடிப்படை நாகரீகமற்று, கொஞ்சமும் நேர்மையற்ற முறையில் உருவாகும் காதலில் சிக்கல் வராமல் வேறு என்ன வரும்? இதிலும் சில விதிவிலக்குள் இருப்பதை நான் உணராமல் இதை எழுதவில்லை. காதல் என்ற உணர்வு கொடுக்கும் மேஜிக் மாற்றம் என்று அதைச் சொல்லலாம் - அதாவது, இப்படி ஏமாற்றி ஒரு பெண்ணைக் காதலில் விழ வைத்தாலும், காதல் என்ற உணர்வும், ஒரு பெண்ணின் ஆளுமையும் சில ஆண்களை ஓரளவு மாற்றி வாழ்வில் நேர்த்திசை நோக்கி நடக்கவைக்கின்றன. ஆனால், இது அபூர்வம். மேலும், விதிவிலக்குகளின் பெயரால், இத்தகு இழிமுறைகளை நியாயப்படுத்தவே முடியாது என்பதே என் நிலைப்பாடு!
மேற்சொன்ன உதாரணத்தை வைத்து, இது என்னமோ ஏழைப் பெண்களிடம் மட்டும் அரங்கேறுவதாக நினைத்துவிட வேண்டாம். இதிலும் வர்க்கப் பேதமே இல்லை.
“பப்ல டேன்ஸ் ஆடுறப்ப டக்குன்னு கிஸ் பண்ணிட்டான்…செமையாப் புடிச்சி திட்டி வுட்டேன்…பட் அப்றம் சாரி கேட்டான்… கெஞ்சினான்… தென் பேசிப் பாத்து… அப்டியே லவ் பண்ண ஆரம்பிச்சேன்!”
ஒரு பெண் தனியாக இருந்தால், உடனே அவளை அணுக ஆண்கள் தயாராக இருக்கிறார்கள். ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு வெளியே வரும்போது நம்பர் கேட்டால் கொடுப்பது, அப்படியே தொடர்ந்து காதலிப்பது… எங்கேனும் டிராவல் செல்கையில் போன் நம்பர் கொடுத்து, டெக்ஸ்டிங் செய்து அடுத்த நாளே லவ் யூ சொல்லிக்கொண்டு காதலில் விழுவது... சோஷியல் மீடியாவில் மெல்ல மெல்ல முன்னேறி, அலேக்காக நம்பர் வாங்கி அப்படியே தன்வசம் வளைத்து... பெண்கள் இந்த அந்நியர்களிடம் காதலில் விழும் கதைகள் ஏராளம். பிள்ளை பிடிப்பவர்கள்போல பெண்களைப் பிடிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதே உண்மை. அவர்களிடம் எப்படிப் போய் வம்படியாகக் காதலில் விழுகிறார்கள் இந்தப் பெண்கள்?
சரி, இப்படி விழுபவர்களின் வாழ்க்கையைக் காதல் அடுத்தடுத்து எங்கே அழைத்துச் செல்கிறது, எந்தெந்தப் புதைகுழியில் அமிழ்த்தி எடுக்கிறது என்கிற கதை உங்களுக்குத் தெரியுமா? நிறையக் கதைகள் என்னிடம் இருக்கின்றன. எல்லாம் நாள் முழுவதுமான மொக்கை சாட்டிங்குக்கு ஆசைப்பட்டு ஆரம்பித்த கதைகள்; பைத்தியங்களாக போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று தங்களுடைய அந்தரங்கத்தைக் காக்கக் கதறியழுது நிற்கும் கதைகள்...
(பேசுவோம்)
7
1
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Murale 3 years ago
மிக அருமையான பகுதி. கூர்மையான அலசல். மொபைல் டெக்ஸ்டில் வகைதொகையில்லாமல் காதல் பேசி நேரில் திணறிய அனுபவமெல்லாம் எனக்கே உண்டு. சமூகத்தை உங்கள் கூர்ந்து கவனிக்கும் திறன் ப்ரமிப்பாக உள்ளது
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.