கட்டுரை, கலாச்சாரம், புத்தகங்கள் 10 நிமிட வாசிப்பு

கொலையில் பிறந்த கடவுள்கள்

ஆ.சிவசுப்பிரமணியன்
31 Jul 2022, 5:00 am
0

அகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்னும் காரணங்களால் அமையலாம். சாதி மீறிய காதல் திருமணங்கள் தொடர்பான கொலையைச் சாதி ஆணவக் கொலை என்று சொல்வது இன்று பொது வழக்காக உள்ளது. ஆணவக் கொலைக்குப் பின்னால் பணம், அதிகாரம், சாதி என்பன மட்டுமின்றிக் குடும்பப் பெருமிதமும் கொலைகளுக்குத் தூண்டுதலாக அமைகிறது. இப்படிப்பட்ட இறப்புகளுக்குப் பின் தெய்வமாக்கப்பட்ட பதினான்கு பேரின் கதைகளை  ‘ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்’ நூலில் தொகுத்துத் தருகிறார்  பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.

கதைகளை மட்டுமின்றி அவற்றுக்குப் பின்னால் இருக்கும் சமூக அமைப்பு, சாதிய மனப்பாங்கு, வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் விளக்குகிறார். நாட்டார் தெய்வங்கள் என அறியப்படும் தெய்வங்கள் பலவும் கொலையில் உதித்த சாமிகள் என்பதையும் இந்தக் கொலைகள் சாதி தொடர்பான ஆணவ / பெருமித உணர்வால் நிகழ்ந்தவை என்பதையும் நூலாசிரியர் ஆதாரபூர்வமாக உணர்த்துகிறார். முக்கியமான இந்த நூலிலிருந்து, சாதிய ஆணவத்தாலும் பெருமிதத்தாலும் கொல்லப்பட்டுக் கடவுளான மூவரின் கதைகளை இங்கே காணலாம்.

குட்டிக் குலையறுத்தான் சாமி

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசி நகரிலிருந்து குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள சிற்றூர் நயினார்புரம். இங்கு தேவேந்திரகுல வேளாளர்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வாழ்ந்துவருகிறார்கள். இவ்வூரில் வாழ்ந்துவந்த கோனார் சாதி இளைஞன் ஒருவனும் தேவேந்திரகுல வேளாளர் சாதியைச் சேர்ந்த பெண்ணொருத்தியும் காதல் வயப்பட்டிருந்தனர். இருவருடைய வீட்டிலும் இக்காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க மாட்டார்கள் என்பது தெரிந்தே காதலித்தார்கள்.

தம் காதலை நிறைவேற்றிக்கொள்ளும் வழிமுறையாக, கோவில்பட்டி சங்கரன்கோவில் சாலையிலுள்ள நாலுவாசல் கோட்டைக்குத் தெற்கிலுள்ள அழகுநாச்சியாபுரம் ஊருக்குச் செல்லும் சாலையின் மேற்குப் பகுதியிலுள்ள காட்டுப் பகுதிக்கு இருவரும் உடன்போக்காக வந்துசேர்ந்தனர். உணவுக்கு வழியில்லாத நிலையில் சுற்றுப்பகுதியில் ஆட்டுக்கிடை (பட்டி) போட்டிருக்கும் இடத்திற்கு இரவில் சென்று ஆட்டுக்குட்டியைத் திருடி அதைத் துண்டால் மறைத்துக் கக்கத்தில் இடுக்கியவாறு முத்துசாமி வந்துசேர்வான். அக்குட்டியைக் கொன்று குலையை (ஈரல்) அறுத்து, இலந்தை முள்ளை எரித்து அதில் சுட்டு உண்டு அவர்கள் வாழ்ந்தனர்.

இது தொடர்ந்து நடந்துவந்த நிலையில் கிடைபோட்டிருந்த கோனார்கள், ஆட்டுக்குட்டிகள் திருடுபோவதை அறிந்து அதைத் திருடுவது யார் என்று கண்டுபிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி கிடைபோட்டிருந்த இடத்தில் யார் கண்ணிலும் படாதவாறு பதுங்கியிருந்தனர்.

இதை அறியாத அவ்விளைஞன் வழக்கம்போல் ஆட்டுக்குட்டியைத் திருடும்போது நீண்ட நாட்களாக ஆட்டுக்குட்டியைப் பறிகொடுத்த கோபத்திலிருந்த கோனார்கள் அவனைக் குத்திக் கொன்றனர். இச்செய்தியறிந்த அப்பெண் தற்கொலை செய்துகொண்டாள்.

கொலையுண்டு இறந்த இளைஞனின் ஆவி அழகுநாச்சியாபுரம் ஊருக்குச் செல்லும் வழியில் உள்ள நிறைகுளத்து அய்யனாரிடம் வந்து அவருக்குக் காவல் தெய்வமாக நிற்க அனுமதி கேட்டது. அய்யனாரும் அதை ஏற்றுக்கொண்டார். இதன் அடிப்படையில் அவனுக்குப் பீடம் போடப்பட்டது. ஆட்டுக்குட்டியை அறுத்து நெருப்பில் வாட்டி உண்டு வாழ்ந்த செயலின் அடிப்படையில் அவ்விளைஞன் குட்டிக் குலையறுத்தான் என்ற பெயரைப் பெற்றான்.

வழிபாடு

கொலையைச் செய்த கோனார்கள் கொலையுண்டவனின் ஆவி குறித்த அச்சத்தால் அப்பீடத்தை வழிபடுகின்றனர். அநேகமாக அப்பீடத்தை அவர்கள்தான் கட்டியிருக்க வேண்டும். அய்யனார் கோவிலில் பீடம் அமைக்கப்படுவதற்கான காரணமாக மேற்கூறிய வேண்டுகோளையும் அவர்கள்தான் உருவாக்கியிருக்க வேண்டும்.

தற்கொலை செய்துகொண்ட அப்பெண்ணிற்குப் பீடமில்லை. இது குறித்துக் கோனார்களிடம் வினவியபோது தெளிவான பதில் கிடைக்கவில்லை.

“பெண்ண மறைக்கணும்னு அவங்க நெனைக்காங்க. அந்தப் பெண்ண, பள்ளிய நாம் கையெடுத்துக் கும்புடுவோம் அப்படிங்கிறதுல அவள மறைக்காங்க. அவ ஒரு ஆளு மேல வந்து ஆடிச்சினு வந்து சொன்னா அத ஒடனே அந்த மட்டுல புடிச்சி அமுக்கி வண்டிக்குள்ள போட்டு ஆடவுடாம செஞ்சிறாங்க” என்று தேவேந்திர குலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறினார். இக்கூற்றில் உண்மையுள்ளது என்பதைப் பின்னர் வேறு சில தகவலாளர்களும் உறுதிசெய்தனர்.

பங்குனி மாதம் கோவில் திருவிழாவின்போது உயிர்ப்பலி கொடுக்கும் முறை சற்று மாறுபட்டதாக உள்ளது. காய்ந்த இலந்தை முட்களை வட்ட வடிவில் போட்டு வைப்பார்கள். சாமியாடி தன் துண்டுக்குள் ஓர் ஆட்டுக்குட்டியை ஒளித்துவைத்து ஆடிக்கொண்டே வந்து அதன் சங்கை (கழுத்தை) அறுப்பார்! உடனே இலந்தை முட்களுக்குத் தீ வைப்பார்கள். எரியும் நெருப்பில் அதை வீசிவிடுவார். இதன்பின் பலி கொடுக்க விரும்புபவர்கள் ஆட்டுக்குட்டிகளையும் பெரிய ஆடுகளையும் சங்கறுத்து, எரியும் இலந்தை முள்ளில் போடுவார்கள்.

இவ்வுயிர்ப்பலி முறை, ஏற்கெனவே நடந்த ஒரு நிகழ்வை மீண்டும் நடத்திக் காட்டும் சடங்காக உள்ளது. சாமியாடி ஒரு துண்டால் ஆட்டுக்குட்டியை மூடி ஒளித்துக்கொண்டு வரும் செயல், ஆட்டுக்குட்டியைத் திருடி, துண்டால் மறைத்துக் கொண்டுவந்த செயலை நினைவூட்டுகிறது. சமைத்து உண்ணாது, நெருப்பில் சுட்டு உண்டதை நிகழ்த்திக் காட்டும் செயலாக, எரியும் இலந்தை முள்ளில் ஆட்டுக்குட்டியை வீசுவது அமைகிறது.

பெண் குழந்தைகளுக்குக் ‘குட்ட’ என்றும் ஆண் குழந்தை களுக்குக் ‘குட்டயன்’ என்றும் பெயர் வைக்கும் பழக்கம் முன்பு இருந்துள்ளது. சுடுமண் உருவங்களாலான ஆடுகளைக் காணிக்கையாகப் படைக்கும் வழக்கமும் உள்ளது.

கதையின் திரிபு வடிவம்

இக்கதையின் போக்கிலிருந்து சிறிது மாறுபட்ட செய்திகளும் கள ஆய்வில் கிட்டின. அவ்விளைஞனின் காதலியான தேவேந்திர குல வேளாளர் சாதிப் பெண்ணைக் கோனார்களே கொன்றதாகவும் அவள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் ஒருவர் குறிப்பிட்டார். அவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் அவளது ஆவியின்மீது உள்ள அச்சத்தால், சாதி பார்க்காது கோனார்கள் வணங்கியிருப்பர். ஆனால் அவர்கள் வணங்காததன் அடிப்படையில் பார்க்கும்போது அப்பெண் தற்கொலைதான் செய்துகொண்டிருப்பாள் என்பதே உண்மையாக இருக்கும்.

குறிப்பு

சிறுகுட்டியின் இறைச்சி சுவையாக இராது என்பதால் ஈரலை மட்டும் சுட்டுச் சாப்பிட்டிருக்கிறார்கள்.

கதை 2: ஒண்டிவீரன் - எர்ரம்மா

ஒண்டிவீரன் என்ற பெயரில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த வீரர்கள் இருவர் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்துள்ளார்கள். ஒருவர் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு மடிந்த புலித்தேவரின் படைத்தளபதி. மற்றொருவர் குருவிகுளம் என்ற ஊரில் ஆதிக்கச் சாதியினரின் சூழ்ச்சிக்குப் பலியாகி, பின்னர் அவரது சொந்தச் சமூகத்தினால் தெய்வமாக வணங்கப்பட்டு வருபவர். 

இவரது கொலையும் அதன் பின்னர் தெய்வமாக்கப்பட்டமையும் சாதி மீறிய காதலை மையமாகக் கொண்டவை. 

தோற்றக் கதை

சமீன்தார் ஒருவர் குருவிகுளத்தை ஆண்டுவந்துள்ளார். இவரிடம் ஒண்டிவீரன் என்ற அருந்ததிய இளைஞன் காவல் பணி மேற்கொண்டிருந்தான். எத்தகைய முரட்டுக்காளையையும் அடக்கும் ஆற்றல் இவனிடம் இருந்தது. 

இதே ஊரில் எர்ரம்மாள் என்ற இளம்பெண் வாழ்ந்துவந்தாள். இப்பெண் சமீன்தாரின் சாதியைச் சேர்ந்தவள். இப்பெண்ணும் ஒண்டிவீரனும் காதல் வயப்பட்டிருந்தனர். இச்செய்தி ஊர் மக்களுக்குத் தெரியவந்தது. எர்ரம்மாளின் பெற்றோர் அருந்ததியர் சமூகத்து இளைஞனைத் தம் பெண் காதலிப்பதை விரும்பவில்லை. இக்காதலை அழிக்கும் வழிமுறையாக ஒண்டிவீரனைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். வீரனான அவனை நேரடியாகக் கொல்ல இயலாது என்பதை உணர்ந்தமையால் தம் உறவினர்களின் துணையுடன் சூழ்ச்சியால் கொல்லத் திட்டமிட்டனர். 

இதன்படி முரட்டுக்காளை ஒன்றிற்கு யாரும் அறியாதபடி சாராயத்தைப் புகட்டினர். பின்னர் அக்காளையை அடக்கித் தொழுவில் கட்டும்படி அவனிடம் கூறினர். முரட்டுக்காளைகளை அடக்குபவன் என்று பெயர் பெற்றிருந்தமையால் தன் ஆற்றலை வெளிப்படுத்த வாய்ப்புக் கிட்டியது என்று மகிழ்ந்த ஒண்டிவீரன் அதை அடக்க முற்பட்டான். 

முரட்டுத்தனத்துடன் சாராய போதையும் இணைந்திருந்தமையால் அக்காளை மூர்க்கமாக அவனை எதிர்த்தது. இறுதியில் தன் கொம்புகளால் அவன் வயிற்றில் குத்தித் தூக்கியது. பின்னர் அவரது உடலுடன் ஓடத் தொடங்கியது. சிறிது நேரத்தில் ஒண்டிவீரன் இறந்துவிட்டான். அவனது உயிரற்ற உடலைச் சுமந்தவாறு அக்காளைமாடு அலையத் தொடங்கியது. ஒண்டிவீரனின் பிணம் அழுகி அவனது கால்கள் மட்டும் முதலில் கீழே விழுந்த பின்னர் உடலும் விழுந்தது. 

அழுகிய நிலையில் இருந்த ஒண்டிவீரனின் பிணத்தையும் கால்களையும் எடுத்து அவனது உறவினர்கள் எரியூட்டினர். எரியூட்டிவிட்டு அவர்கள் வீடு திரும்பியவுடன் அவனது காதலியான எர்ரம்மாள் அவனது ஈம நெருப்பில் பாய்ந்து உயிர் நீத்தாள். 

வழிபாடு 

பின்னர் எரியூட்டிய இடத்தில் கல்நாட்டி அவர்கள் இருவரையும் அருந்ததியர்கள் கடவுளராக வழிபடலாயினர். வழிபாட்டின் தொடர்ச்சியாக ஒண்டிவீரன், எர்ரம்மாள் என்று பெயரிடும் வழக்கம் உருவானது. 

அருந்ததியர்கள் தம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை மட்டுமின்றி, அவன் பிரிவு தாங்காது உயிர் நீத்த வேறு சமூகத்துப் பெண்ணின் உயிர்த் தியாகத்தையும் மதித்துப் போற்றி வருகின்றனர். ஆனால் பெண்ணின் சமூகத்தார் அவனை வணங்குவதில்லை. அப்பெண்ணின் மரபினர் மட்டும் முக்கியக் குடும்ப நிகழ்வுகளின்போது திறந்த வெளியில் பதிக்கப்பட்டுள்ள கல்லை, வீட்டின் மங்கல நிகழ்ச்சிகளின்போது மட்டும் வணங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது எர்ரம்மாளின் நினைவுக்கல் என்று இக்குடும்ப உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். தம் பெயரை வெளிப்படுத்திக்கொள்ள அவர் விரும்பவில்லை.

கதை 3: பட்டபிரான் பூச்சியம்மன்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு என்ற கிராமத்தில் பட்டபிரான் என்ற மறவர் சாதி இளைஞன் மாடு வியாபாரம் செய்துவந்தான். வியாபார நிமித்தம் திருநெல்வேலியின் மேற்குப் பகுதியிலுள்ள மேலப்பாவூர் என்னும் கிராமத்தின் வழியாகச் செல்லும்போது பொயிலாம் புச்சி என்ற பள்ளர் சாதிப் பெண்ணைக் கண்டு அவள் அழகில் மயங்கினான்.

அவளை அடைய வேண்டும் என்ற விருப்பத்தினால் அவளுடைய பெற்றோருடன் பழகினான். ஒருநாள் யாரும் அறியாமல் பொயிலாம் புச்சியை அழைத்துக்கொண்டு உடன் போக்காகக் கிளம்பினான். அவர்களுடன் புச்சி நாய் என்ற நாயும் வந்தது. இறுதியில் வல்லநாடு கிராமத்திற்கு வடகிழக்கிலுள்ள உழக்குடி என்னும் கிராமத்தின் வடக்கே, உடை மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தங்கினர். உணவுக்கு வேறு வழியேதுமில்லாததால் அப்பகுதியில் மேயும் ஆடுகளில் ஒன்றைத் திருடி வந்து அதனைச் சமைத்துண்பதை வழக்கமாகக் கொண்டார்கள்.

பொயிலாம் புச்சியைத் தேடி அவளது ஏழு அண்ணன்களும் மேலப்பாவூரிலிருந்து புறப்பட்டு உழக்குடியை வந்தடைந்தனர். அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஆயர்களை நோக்கி வேற்றாள் இருவர் வரக் கண்டீர்களா என்று வினவினர். எட்டு நாளைக்கு ஒரு முறை கிடாவொன்று காணாமல் போவதாகவும், நண்பகலில் உடைமரக் காட்டுக்குள்ளிருந்து நூலினைப் போல் புகை வருவதாகவும் மற்றப்படி வேறு விசேடமில்லையென்றும் அவர்கள் விடை கூறினர்.

இதைக் கேட்ட சகோதரர்கள் எழுவரும் அருகிலிருந்த குன்றின் மேலே ஏறி, உடைமரக் காட்டை நோக்கியபோது புகை வருவது தெரிந்தது. புகை வருமிடம் நோக்கி எழுவரும் சென்றனர். அங்கு சென்றதும் பொயிலாம் புச்சியின் மடிமீது தலை வைத்து உறங்கிக்கொண்டிருந்த பட்டபிரானை ஈட்டியால் குத்திக் கொன்றனர். புச்சி நாயினையும் வெட்டிக் கொன்ற பின் ஊருக்கு வரும்படித் தங்கையை அழைத்தனர். அவள் வர மறுத்ததுடன் தன்னையும் வெட்டிக் கொன்றுவிடும்படிக் கூறினாள். ஏழு அண்ணன்களில் இளையவன் தங்கையின்மீது இரக்கம் கொண்டு அவளை வெட்ட வேண்டாமென்று மற்றச் சகோதரர்களிடம் வேண்டினான். ஆனால் தங்களுடன் வர மறுத்த தங்கையின்மீது ஆத்திரமுற்ற ஆறு சகோதரர்களும் அவள் கழுத்தை வெட்டிக் கொன்றனர். இறுதியில் பட்டபிரான், பொயிலாம் புச்சியின் உடல்களுடன் புச்சி நாயின் உடலையும் சேர்த்துச் சிதையில் அடுக்கி எரிமூட்டினர். எரிந்த உடல்களின் சாம்பலையும் எலும்புத் துண்டுகளையும் ஆற்றில் கரைத்து விட்டு மேலப்பாவூருக்குத் திரும்பினர்.

திரும்பும் வழியில் தங்கையை வெட்ட வேண்டாமென்று தடுத்த இளைய சகோதரனைத் தவிர ஏனைய அறுவரும் ஒவ்வொருவராக வழியில் மாண்டனர். ஏழாவது சகோதரன் மட்டும் ஊர் போய்ச்சேர்ந்து தங்கைக்குக் கோவில் எழுப்பி வழிபட்டான்.

காதலர் இருவரும் இருக்குமிடத்தை ஏழு சகோதரர்களும் அறிந்துகொள்ளும் முறையில் செய்திகளைக் கூறிய ஆயர்களின் ஆடுகள் ஒவ்வொன்றாக இறந்துபோகலாயின. இதற்குப் பரிகாரம் தேடியபோது தங்கள் பகுதியில் அடைக்கலமாக வந்தவர்களின் கொலைக்குக் காரணமானதால் கொலையுண்டோரின் சீற்றத்திற்குத் தாம் ஆளாகியுள்ளதை அறிந்தனர். எனவே, அதற்குப் பரிகாரமாகக் கொலையுண்ட மூவருக்கும் சிலை வடித்துத் தெய்வமாக்கி வழிபடலாயினர். இதன் பின்னர் அவர்களின் ஆடுகள் அழிவிலிருந்து தப்பின.

இதுவே பொயிலாம் புச்சியென்ற இளம் பெண் புச்சியம்மன் என்ற தெய்வமாகவும் பட்டபிரான் என்ற இளைஞன் பட்டவராயன் என்ற தெய்வமாகவும் மாறிய கதையாகும்.

 

                                                                       

ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்
ஆசிரியர்: ஆ. சிவசுப்பிரமணியன்
விலை: ரூ. 110
பதிப்பகம்: காலச்சுவடு வெளியீடு 
தொடர்புக்கு: 04652 278525, sales@kalachuvadu.com
நூலைப் பெற: https://www.amazon.in/dp/B0B7B9MNZV/

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆ.சிவசுப்பிரமணியன்

ஆ.சிவசுப்பிரமணியன், ஆய்வறிஞர் 50 ஆண்டுகளுக்கும் மேல் நாட்டாரியல் ஆய்வுப் புலத்தில் செயல்பட்டுவரும் இவர் 40-க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.


3

2




2

சமஸ் - காந்திஒளிதான் முதல் நினைவுவடிகால்கள்வாட்ஸப் தகவல்கள்அறியாமைமாசேதுங்வாராணசிஜெனீவா உடன்படிக்கைஅக்னி வீரர்கள்சர்வதேச வங்கிகள்மான்டேகு-செம்ஸ்ஃபோர்ட்ஸரமாகோ நாவல்களின் பயணம்மனனம்கலவிஜர்னலிஸம்கூட்டாச்சிகூட்டுறவு நிறுவனங்கள்ஆம் ஆத்மிமாணவர் கிளர்ச்சிஉமர் அப்துல்லாகோணங்கிவசனம்முகப்புக் கடிதம் எழுதுவது எப்படிவின்னிகுழந்தைப்பேறுகும்பல் ஆட்சிசாதி வாக்குகள்இதய வலிதுறவிமல்லிகார்ஜுன் கார்கே

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!