கட்டுரை, சமஸ் கட்டுரை 5 நிமிட வாசிப்பு

வாழ்க அருஞ்சொல்… விடைபெறுகிறேன்!

சமஸ் | Samas
02 Jun 2024, 5:00 am
7

வாழ்க்கையின் திருப்பங்கள் மாறும்போதெல்லாம், காவிரியின் பயணம்தான் எனக்கு நினைவில் வரும். பிறந்து வளர்ந்த கரை அல்லவா?

சின்ன வயதில் என்னுடைய தாத்தா சொன்ன காவிரிக் கதை ஏற்படுத்திய ஆழமான தாக்கம் காரணமாக இருக்கலாம். “குடகு மலையில இருக்கிற தலைக்காவிரிக்குப் போய்ப் பார்த்தா, இதுவா காவிரின்னு கேட்கத் தோணும். அவ்வளவு சின்னதா இருக்கும். ஆனா, கார்த்திகை மாச மழை, வெள்ளத்துல கல்லணைக்குப் போய் நின்னு பாரு; கடலைப் பிடிச்சு ஆறா திருப்பிவிட்ட மாதிரி இருக்கும். ரெண்டு இடத்துலேயுமே ஒரே காவிரிதான். காடு, மலை, மேடு, பள்ளம், குக்கிராமம், பெருநகரம்னு எவ்வளவு நீண்ட பயணம் அது. எத்தனை கிளைநதிகள் பிரியுது, எத்தனை உபநதிகள் வந்து சேருது; வளைஞ்சு, சுத்தி, குறுகி, விரிஞ்சு, இடையில எத்தனை அணைகள், வாய்க்கால்கள், கால்வாய்கள்; எவ்வளவோ நீண்ட பயணம்! நதின்னா கடலை அடையணும்; கடலா மாறணும்; வெயில்ல ஆவியாகி மேகமா மாறணும்; தண்ணியா மேகம் கரைஞ்சு மக்களுக்கு மழையா பெய்யணும்! நதியோட கவனம் எல்லாம் மக்களுக்குப் பயன்படும்கிறதுல இருந்தா போதும். அது எங்கெல்லாம் எப்படியெல்லாம் பயணப்படணும்கிறது சமூகத்தோட தேவை. ஊர்கள் அந்தந்தக் காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப நதியை அணைச்சுக்கும். நீ இந்தச் சமூகத்துக்கு நதியா இரு. காவிரியோட பயணத்தை மனசுல வை!”

கொஞ்சம் ஆன்மிகவயப்பட்ட ஆள்தான். என்னுடைய பேனா எப்படி எனக்கு ஒரு கருவியாக இருக்கிறதோ, அப்படி நானும் இந்தத் தமிழ்ச் சமூகத்துக்குச் சிறு கருவியாக இருக்கிறேன்; இதற்கு மேல் என்னுடைய எழுத்துகளுக்கோ பங்களிப்புகளுக்கோ எந்த அர்த்தமும் இல்லை என்ற ஆழமான எண்ணம் என்னிடம் உண்டு. 

குழந்தைகளிடமும் இதையேதான் திரும்பத் திரும்பச் சொல்வேன். “எந்தத் துறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள்; அடித்தட்டு மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்!”

இரண்டு குழந்தைகளுக்குமே ஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்தும் ‘தி ஸ்கூல்’ பள்ளியில் படிப்பதற்கான இடம் கிடைத்தது. எனக்கு ஜே.கே. கல்விமுறை மிகவும் ஈர்ப்பானது. ‘ஆனந்த விகடன்’ இதழில் இதுபற்றி எழுதியிருக்கிறேன். என்னுடைய மனைவி மாண்டிசோரி கல்விமுறையில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர். ஆசிரியர் பணியிலும் இருந்தவர். ஆனாலும், சென்னை மாநகராட்சிப் பள்ளியிலேயே குழந்தைகளைச் சேர்த்தோம். படிப்பைக் கற்றுக்கொடுப்பதில் கூடக்குறைவு இருந்தாலும், சமூகத்தைப் படிக்க அரசுப் பள்ளிகளைப் போல சிறந்த இடம் ஏதும் இல்லை என்ற எண்ணமே முடிவுக்கான காரணம்.

பெரும்பாலும் உள்ளுணர்வின் வழி நடப்பவன். உள்ளுணர்வுக்கு ஒளி தரும் அறத்தைப் போற்றிப் பாதுகாப்பவன். வெளியிலிருந்து வரும் எந்தக் குரலுக்கும் காது கொடுப்பவன். சில சமயங்களில் குரல்கள் ஒன்றோடு ஒன்று இணையும்போது காலத்தின் அழைப்பாக அது உருவெடுக்கும். அப்படி நான் உணரும் தருணங்களில், நேர்கிற மாற்றங்களுக்கு ஒப்பளிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இது அடுத்த மாற்றத்துக்கான தருணம்!

அருஞ்சொல் எனும் கூட்டுமுயற்சி

எனக்கு இதழியலைக் கற்பித்தது ‘தினமணி’. அடுத்து ‘ஆனந்த விகடன்’, ‘புதிய தலைமுறை’, ‘தி இந்து’ இந்த மூன்று இடங்களுக்கும் நான் செல்ல முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்தது, செய்ததையே திரும்பச் செய்வதில் ஏற்படும் சலிப்பு அல்லது புதிய விஷயங்களைக் கற்பதில் இருந்த ஆர்வம் அல்லது புதிய சவால்களை எதிர்கொள்வதில் இருந்த துடிப்பு.  

2021இல், ‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தபோது, ஆய்வுப் பணிகள் மீது மனம் நிலைகொண்டிருந்தது. 2500 ஆண்டுகள் தமிழர் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு எளிமையான வகையில் கடத்தும், ‘சோழர்கள் இன்று’ நூலை உருவாக்க வேண்டும் என்ற கனவு சில ஆண்டுகளாகவே மனதில் துரத்திக்கொண்டிருந்தது. கூடவே தமிழ்ப் பத்திரிகையுலகில் சீரிய சிந்தனையை வெளிப்படுத்தும் ‘கருத்துசார் பத்திரிகை’ ஒன்றுக்கான தேவையும் கனன்றது. பெரிய ஊடக நிறுவனங்கள் பலவற்றிலும் வந்த அழைப்பை நிராகரித்துவிட்டு, சுயாதீன ஊடகமாக ‘அருஞ்சொல்’ தளத்தை ஆரம்பித்த பின்னணி இதுதான்.

நல்ல தலைவருக்கான அழகு, வலுவான அணியையும் முறையான வேலைச் சட்டகத்தையும் உருவாக்கிவிட்டு, தலைவர் இல்லாமலேயே படிப்படியாக வேலைகள் செயல்படுவதற்கான சூழலை உருவாக்குவதுதான். “எது குறைவாகச் செயல்படுகிறதோ அதுவே சிறந்த அரசு” எனும் தோராவின் கூற்றைத்தான் சிறந்த நிர்வாகத்துக்கான முன்மாதிரியாகக் கையாண்டார் காந்தி.

எப்போதும் ஒரு நல்ல அணியையும், பத்திரிகை உள்ளடக்கத்தையும் ஒருங்கிணைத்துவிட்டு, படிப்படியாக அணியினரிடம் முழுப் பணிகளையும் ஒப்படைத்துவிட்டு, நிறுவனத்துக்குள்ளேயே அடுத்தடுத்த வேலைகளை நோக்கி நகர்வதுதான் என்னுடைய வழக்கமாக இருந்திருக்கிறது. 

வெளியே என்னுடைய அடையாளமாக ஒரு வேலை இருந்தாலும், நிறுவனத்துக்குள் பத்து பொறுப்புகளைச் சுமப்பவனாகவே எப்போதும் இருந்திருக்கிறேன். ‘தி இந்து’ நடுப்பக்க அணிதான் ‘தமிழ்த்திரு’ நிகழ்வுகளை ஒருங்கிணைத்தது; விருதுத் தேர்வுக் குழுவாகச் செயல்பட்டது; ஆட்சிப் பணித் தேர்வர்களுக்கான ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சியைக் கல்லூரிகள்தோறும் நடத்தியது; ஆண்டு முழுவதுடன் புத்தகக்காட்சிகளோடு பத்திரிகையை இணைத்தது; தேர்தல் ஆணையத்தோடு இணைந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களைச் சந்தித்தது; ‘மாபெரும் தமிழ்க் கனவு’ போன்ற தொகுப்பு நூல்களைக் கொண்டுவந்தது. இரு கை விரல்களில் அடங்கிவிடக் கூடிய எண்ணிக்கையிலான குழு எப்படி இவ்வளவையும் செய்தது?  அதிகாரப்பரவலாக்கப்பட்ட கூட்டுச் செயல்பாடு உருவாக்கும் விளைவுகளுக்கு இவையெல்லாம் சாட்சியங்கள்!

மூன்றாண்டுகளில் ‘அருஞ்சொல்’ இதழிலும் அதுவே நடந்தது. நிறுவனம் போன்று அல்லாமல், ஒத்த சிந்தனையுடைய நான்கைந்து நண்பர்கள் இணைந்து பணியாற்றும் சுயாதீன பத்திரிகை இயக்கமாகவே ‘அருஞ்சொல்’ இதழை முன்னெடுத்தோம். பத்திரிகையாக அது வாசகர்களிடம் நிலைப்பெற்ற அடுத்த சில மாதங்களில் ஆய்வுப் பணி, பதிப்புப் பணி நோக்கி நான் நகர்ந்துவிட்டேன். பெரும்பாலும் பயணத்திலேயே இருப்பேன். அணியினர்தான் ‘அருஞ்சொல்’ இதழை நடத்தினார்கள். இந்த மூன்றாண்டுகளில் வியத்தகு பல பணிகளைச் சிறிய அணி செய்தது. படித்தவர்கள் எல்லாம் பாராட்டும் பிரம்மாண்ட நூலான ‘சோழர்கள் இன்று’ அதன் உச்ச வெளிப்பாடாக அமைந்தது.

யோசித்துப்பாருங்கள், கடைசியாக தமிழ்ப் பத்திரிகை ஒன்று வெளியிட்ட கட்டுரை ஒன்று சமூகத்தில் ஆக்கபூர்வமான விவாதத்தை உருவாக்கி எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? ‘அருஞ்சொல்’ மட்டுமே இன்று அதைப் பெரிய அளவில் செய்கிறது. ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அரசிலர்கள், எழுத்தாளர்கள், ஊடகர்கள், போட்டித் தேர்வர்கள் என்று பல தரப்பினரின் மதிப்புமிகு தளமாக அது மாறியிருக்கிறது. நாளடைவில் 250+ எழுத்தாளர்கள்; பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் தளமாக அது உருவெடுத்தது. மூன்றாண்டுகள் நிறைவில், வார இதழாக அது உருவெடுத்திருக்கும் நிலையில், நண்பர்களிடம் கையளித்துவிட்டு, நான் விடைபெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

மூன்றாண்டுகளுக்கு முன் ‘அருஞ்சொல்’லை ஆரம்பிக்கும்போது, அதை நானும் பயணிப்பதற்கான வாகனமாகத் திட்டமிட்டேன். இன்று சமூகத்தின் இயக்கமாக மாறிவிட்டிருக்கும் நிலையில், அதை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்த நண்பர்களிடமே அளித்துவிட்டு, நான் வேறொரு பயணத்துக்குத் தயாராகிறேன். இன்று காலை ‘அருஞ்சொல்’ ஆசிரியர் பணியிலிருந்து விலகிவிட்டேன். நிறுவனத்தை என் பெயரிலிருந்து நண்பர்களுக்கு கை மாற்றிக்கொடுக்கும் பணி சில மாதங்களில் நிறைவுறும். இனி பெரியவர் வ.ரங்காசாரி வழிகாட்டலில் ஆசிரியர் குழுவினர் இணைந்து ‘அருஞ்சொல்’ இதழை வழிநடத்துவார்கள்.

இதுவரை ‘அருஞ்சொல்’ பயணம் எப்படி இருந்ததோ, அப்படியே இனியும் அது தொடரும். “ஒரு பத்திரிகை வெளியே வரும் வரைதான் அது ஆசிரியர் குழுவினருடையது; வெளிவந்த அடுத்த கணமே அது வாசகர்களுடைய உடைமையாக ஆகிவிடுகிறது; அதன் பண்பையும் தொடர் பயணத்தையும் வாசகர்களே அதற்குப் பின் தீர்மானிப்பார்கள்” என்று அடிக்கடி சொல்வேன். ஆக, ‘அருஞ்சொல்’ பயணமும் அதன் வாசகர்கள் எண்ணம், பங்களிப்பினூடாக எப்போதும்போல் தொடரும். இதுநாள் வரை எனக்கு எல்லா வகைகளிலும் ஆதரவு நல்கிய வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

புதிய பாதை… புதிய தலைமுறை…

அடுத்தகட்ட பயணத்தைப் ‘புதிய தலைமுறை’ நிறுவனத்தில் ஆரம்பிக்கிறேன். பணி புதியது என்றாலும், நிறுவனம் எனக்குப் பழையதுதான். 2013இல் ஏற்கெனவே ஒரு சின்ன காலகட்டம் அங்கே பணியாற்றியிருக்கிறேன். 

காட்சி ஊடகத்தில் அப்போது எனக்குப் பாலபாடம் கற்பிப்பவராகவும், என் மீது மிகுந்த அன்பைப் பொழிபவராகவும் மறைந்த பால.கைலாசம் அங்கு இருந்தார். ‘தி இந்து’ குழுமம் தன்னுடைய நூற்றாண்டு கனவான தமிழ்ப் பத்திரிகையை உருவாக்கும் ஐவர் குழுவில் ஒருவராக என்னை அழைத்துப் பேசியதை நான் கூறியபோது, “இது ஒரு வரலாற்றுத் தருணம். நீங்கள் அவசியம் இந்த வாய்ப்பைப் பரிசீலிக்க வேண்டும்” என்று எனக்கு அறிவுரை கூறியவர் பால.கைலாசம். புதிய பணிக்கு மகிழ்வோடு என்னை வாழ்த்தி அனுப்பிய நிறுவனம் ‘புதிய தலைமுறை’.

தமிழில் தரமான இதழியலையும், நல்ல பணிக் கலாச்சாரத்தையும் கொடுக்க வேண்டும் என்ற இலக்கோடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் மிகச் சில ஊடக நிறுவனங்களில் ஒன்று, ‘புதிய தலைமுறை’ என்பதால், அதன் நிறுவனர் திரு.சத்தியநாராயணா மீது எப்போதுமே எனக்கு நன்மதிப்பு உண்டு. ‘புதிய தலைமுறை’ நிறுவனத்தில் பணியாற்றும் பலர் எனக்கு நல்ல நண்பர்கள். இந்த மூன்றாண்டுகளில் எவ்வளவோ பெரிய வாய்ப்புகளை நிராகரித்திருக்கிறேன். ஆனால், ‘புதிய தலைமுறை’ அலுவலகத்திலிருந்து புதிய பொறுப்பு ஒன்றுக்கு அழைப்பு வந்தபோது, “பெருவாரி மக்களை நோக்கி நீ மீண்டும் வர வேண்டும்” என்ற காலத்தின் அழைப்பாக அது தோன்றியது. 

எழுத்துசார் ஊடகமும், காட்சிசார் ஊடகமும் ஒரு குடையின் கீழ் அமைந்த இடம் ‘புதிய தலைமுறை’. சமூகம் எழுத்துத் தளத்திலிருந்து காட்சித் தளத்துக்கு வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது இரண்டுக்கும் இடையில் உறவுப் பாலம் அமைக்கும் ஒரு முயற்சியில் ஈடுபடலாம் என்று தோன்றியது.   

சில பணிகள் மிச்சம் இருந்தன. நாடு தழுவிய பயணத்தின் ஊடாக இந்தியத் தேர்தல் களத்தில், 2014-2024 பத்தாண்டுகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களைப் பேசும் ‘இந்தியாவின் குரல்கள்’ நூல், முக்கியமான ஆளுமை ஒருவரின் வாழ்வைப் பேசும் இன்னும் தலைப்பிடப்படாத ஒரு நூல் இவை இரண்டுக்காகவும் நான் பணியாற்ற வேண்டியிருந்தது. அந்தப் பணிகள் சமீபத்தில் நிறைந்த நிலையில், அடுத்து புதிய பணிக்களம் நோக்கி நகர்கிறேன்.

பாயும் களம் எதுவாக இருப்பினும், நதி தன் இலக்கை எப்போதும் நினைவில் கொண்டிருக்கிறது! 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

அடுத்த கட்டத்துக்குச் செல்கிறது அருஞ்சொல்

ஆசிரியர் 31 May 2024

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


6

13





பின்னூட்டம் (7)

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   3 months ago

திரு சமஸ் அவர்களே, இந்த ஒரு மாத காலத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆம். உடல்நலத்தொய்வு காரணமாகவும் தவிர்க்க முடியாத பிரயாணங்கள் காரணமாகவும் என்னால் அருஞ்சொல்லை சுமார் ஒரு மாதம் தொடர முடியவில்லை. அருஞ்சொல்லிருந்து விலகுகிறேன் என்ற அறிவிப்பு சற்றும் எதிர்பார்க்காத ஒன்று! உங்களுடைய சிந்தனையில் உருவான அருஞ்சொல் நண்பர்களால் தொடரும் என்ற செய்தி சற்று ஆறுதல் தந்தாலும், அருஞ்சொல்லில் தங்களுடைய பங்களிப்பு இருக்காது என்பதையும் உணரவேண்டியுள்ளது. காவிரி தன்னுடைய இலக்கை நோக்கி பயணிப்பது போல் தங்களுடைய பயணமும் தொடர்கிறது என்பது ஒரு வகையில் மகிழ்ச்சியே. உங்களுடைய, சமூகங்கள் மீதான அக்கறைக்காகவும் ஆழமான சிந்தனைக்காகவும் அரிதிலும் அரிதான எழுத்துக்காகவும் உங்களைப்பின்தொடர்வது என்போன்றவர்களுக்கு என்றும் நல்வாய்ப்பே!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

இ.பு.ஞானப்பிரகாசன்   3 months ago

தலைப்பைப் பார்த்ததும் பக்கென்று இருந்தது. ஆனால் இங்கிருந்து கிளம்பி இதை விட இன்னும் பெரிய தளத்தின் மூலம் தொடர்ந்து செயல்படத்தான் போகிறீர்கள் என்பது ஆறுதல். விகடன் காலத்திலிருந்தே உங்கள் எழுத்துகளைப் படித்து வருகிறேன். நீங்கள், பாரதி தம்பி, திருமாவேலன் என விகடன் செய்தியாளர்களுடைய கட்டுரைகளை உன்னிப்பாகப் படித்துத்தான் ஒரு செய்தியை எப்படி எழுத்தில் தர வேண்டும், மனத்தில் நினைக்கும் ஒரு கருத்தை எப்படி வரிகளில் கொண்டு வர வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இந்து தமிழிலிருந்து விடைபெற்ற நீங்கள் இன்னோர் அச்சு இதழுக்கோ காட்சி ஊடகத்துக்கோதான் செல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இணைய இதழை நீங்கள் தொடங்கியது திகைக்க வைத்தது! வலைப்பூ எனும் பெயரில் ஆயிரக்கணக்கானோர் எழுதி, படித்து இணையத்தமிழை வளர்த்து வந்த காலம் போய்க் காட்சி ஊடகத்தின் தாக்கத்தால் இணையத்தில் தமிழைப் படிக்கவும் எழுதவும் தனிக் களங்கள் ஏதும் இல்லாமல் எல்லாரும் பேசுபுக்கு போன்ற சமுக ஊடகங்கள் பக்கம் கரை ஒதுங்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் நீங்கள் புதிதாக இணைய இதழைத் தொடங்கியது மிகப் பெரிய இக்கு (risk)! ஆனால் அதை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத் திறம்படக் கையாண்டு இன்று அருஞ்சொல்லை ஒரு முக்கிய ஊடகமாக நீங்கள் நிலைநிறுத்தியிருப்பது ஐயமே இல்லாமல் அருஞ்சாதனை! தான் ஒரு கட்டமைப்பை உருவாக்கினால் என்றென்றும் அது தன் கைப்பிடியிலேயே இருக்க வேண்டும் என நினைக்கும் மனித இயல்புக்கு மாறாக இப்படி இந்து தமிழ், அருஞ்சொல் என அடுத்தடுத்து நகர்ந்து போய்க் கொண்டே இருக்கும் உங்களுடைய இந்தத் துறவு மனப்பான்மை, நீங்கள் காந்தியத்தை வெறுமே பேச்சுக்காக முன்னிறுத்துபவர் இல்லை, மாறாக அதையே முழுமையான வாழ்வியலாக உளமார ஏற்றுக் கொண்டவர் என்பதையே காட்டுகிறது! சென்று வாருங்கள் எனச் சொல்ல நான் அருஞ்சொல்லில் பணியாற்றுபவன் இல்லை; வாசகன். இந்தப் பக்கம் போய் அந்தப் பக்கம் வாருங்கள்! எந்தப் பக்கம் நீங்கள் இருந்தாலும் உங்கள் தூவல் எப்பொழுதும் தமிழின் பக்கமும் தமிழரின் பக்கமும் மனிதத்தின் பக்கமுமே நிற்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. வாழ்க! வளர்க!! வெல்க!!!

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

A.AlagarSamy   3 months ago

சமஸ்காகவே அருஞ்சொல் வாசித்தேன் சமஸ் இந்து தமிழில் எழுதும் போது மிகவும் மதிப்பும் மரியாதையும் இருந்தது அருஞ்சொல் உருவாகிய போது இன்னும் மதிப்பு கூடியது ஜெயமோகனின் அறம் வாசித்தபோது கேரளாவில் உணவகம் நடத்திய ஒரு இஸ்லாமியரை சமசுக்கு ஒப்பிடத் தோன்றியது சமசுக்கு உன்னதமான இலக்குகள் இருக்கலாம் ஆனால் அவர் எப்படி இருக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக மட்டும் இருக்க முடியாது அது வாழ்வின் பல சூழல்களைப் பொறுத்தது வாழ்தலுக்கும் பிழைத்தலுக்கும் இடையே உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் போன்றது வாழ்வு மிக சவாலானது பிழைத்திருத்தல் மிக எளிது நம் தேசப்பிதா காந்தியை நாம் வாசித்திருக்கலாம் பல ஆயிரக்கணக்கானோர் பிரமித்திருக்கலாம் அதுபோல மகாத்மா பாரதியையும் வாசித்திருக்கலாம் பிரமித்திருக்கலாம் அவர்கள் போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சித்து இருக்கலாம் இதுபோல காமராஜரையும் கக்கனையும் பகத்சிங்கையும் இன்னும் பல புனிதர்களை நாம் வாழ்வில் அறிந்திருக்கலாம் அவர்களைப் போல வாழ்வில் சிறிதளவாவது வாழ்ந்துவிட முயற்சிப்பவர்கள் எல்லோரும் புனிதர்களே அன்புக்குரிய சமஸ் நீரும் புனிதமானவரே

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Raja   3 months ago

முதன்முதலில் தற்செயலாக சமஸின் சாப்பாடு புராணம் பதிவுகளை வாசிக்க கிடைத்தது. அன்று முதல் சமஸ் என்று பெயர் இருந்தால் வாசிக்காமல் விட்டதில்லை. அதற்கு ஏற்றாற் போல் சமஸின் தரமும் இன்றுவரை குறையவில்லை. ஹிந்து தமிழ் அதனாலேயே வாசிக்க ஆரம்பித்தேன். மிக சிறந்த பதிவுகள் ஹிந்து தமிழில் சமஸின் காலகட்டத்தில் வந்தன. அசோகமித்திரன், எஸ் ராமகிருஷ்ணன் போன்றோரின் பதிவுகள் எல்லாம் அப்போதுதான் வந்தன. அவர் அங்கு இருந்து வெளியேறியது பெரிய இழப்பே.  அருஞ்சொல் ஆரம்பித்ததில் இருந்து பெரும்பாலும் தவற விட்டதில்லை. அதே போல் எத்தனையோ பதிவுகளை நண்பர்கள் பலருக்கும் அனுப்பி படிக்க சொல்லி பிறகு அவர்களையும் மற்றவர்களுக்கு அனுப்ப சொல்லி இருக்கிறேன். தினமும் அருஞ்சொல் படியுங்கள் என்றெல்லாம் வாட்ஸாப்ப் மெசேஜ் அனுப்புவேன். அருஞ்சொல் தரமும் அப்படியே உள்ளது.  காட்சி ஊடகத்தின் முக்கியத்துவத்தை இனி தடுக்க முடியாது. அதன் வழியாக மட்டுமே இனி பெரும்பாலோரை சென்றடைய இயலும். யூடியூபில் கொஞ்சமும் தரமற்ற அறமற்ற போலிகள், தற்குறிகள் செல்வாக்குடன் வலம் வருவதற்கு காரணம் தரமான நம்பகத்தன்மை உள்ளவர்கள் இதுவரை காட்சி ஊடகத்தை புறக்கணித்து தவிர்த்ததே. அளவிட முடியாத அளவு வெறுப்பும் பொய்களும் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளன. கண்டுகொள்ளாமல் விட்ட நாம் அனைவரும் தான் இதற்கு முற்றிலும் ரெஸ்பான்சிபிள். அபாயத்தை உணர்ந்து சமஸ் அவர்கள் காட்சி ஊடகம் பக்கம் செல்வது முற்றிலும் சரியான முடிவு.  சமஸ் எப்போதும் போல் இதையும் தீவிர தன்மையுடன் செய்வார். வாழ்த்துக்கள். 

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 months ago

ஒரு கலவையான உணர்வில் இருக்கிறேன், தங்கள் பயணம் வெற்றிகரமாகட்டும்!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Selvanathan   3 months ago

நீங்கள் எங்கு சென்றாலும் உங்களையும் உங்கள் எழுத்துக்களையும் நாங்கள் பின் தொடர்வோம்

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Mohiddeen Harsath   3 months ago

நல்வாழ்த்துகள் சார்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

கருத்தியல் குரல்தசைப் பயிற்சிகள்அருணாசலக் கவிராயர்காலனி ஆதிக்கம்சமூக உறவுஅசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமணம்லண்டன் மேயர் பதவிதிரைப்படக் கல்வியாளர்சென்னை புத்தகக் கண்காட்சிகுறட்டைமுதலாவது பொதுத் தேர்தல்சேவா பாரதிஅரசு கலைக் கல்லூரிகள்டெசிபல் சத்தம்ஆகஸ்ட் 15அப் நார்மல் காதல்ரத்தக்கசிவு குஜராத் பின்தங்குகிறதுஜெனரல் இண்டியன் இங்கிலீஷ்ashok vardhan shetty iasநகரமாராஜஸ்தானில் காற்று இரண்டு பக்கமும் வீசுகிறது!உயர்கல்வித் துறைதிரைப்படக் கலைஆயிரம் நடன மங்கைகள்ஆப்பிள் இறக்குமதிநா.மணிஒற்றுப் பிழைபூரி ஜெகந்நாதர்சங்கப் பரிவாரங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!