ஆளும் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டிருப்பதாக அதிமுக அறிவித்திருக்கும் நிலையில், ‘இது தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்களை உண்டாக்கும்?’ என்று ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் நெறியாளர் ஆனந்தி ‘அருஞ்சொல்’ ஆசிரியர் சமஸிடம் பேட்டி கண்டார். காணொளியின் சுருக்கமான எழுத்து வடிவம் இங்கே!
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாடு அரசியலுக்குச் சொல்லக்கூடிய செய்தி என்ன? இது என்னென்ன மாற்றங்களை உண்டாக்கும்?
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வது என்று அதிமுக எடுத்திருக்கும் முடிவு புத்திசாலித்தனமானது.
அரசியல் தளத்தில், தேர்தல் தளத்தில், கலாச்சாரத் தளத்தில் என்று மூன்று தளங்களில் இது மாற்றத்தை உண்டாக்கும்.
1. தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளில் ஒன்றான திமுகவினர் பாஜக எதிர் மனநிலையைக் கொண்டிருப்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியும்; அதிமுகவினரும் அத்தகைய மனநிலையையே கொண்டிருப்பதை இந்த முடிவு வெளிக்காட்டுகிறது. பலரும் வெளியே பேசிக்கொண்டிருந்தபடி பாஜகவும் அதிமுகவும் இயல்பான கூட்டணியாகச் செயல்படவில்லை.
ஆட்சியதிகாரம்தான் அதிமுகவைக் கோத்து வைத்திருக்கிறது; ஆட்சி போனால், பலரும் அதிமுகவிலிருந்து பாஜகவுக்குப் போய்விடுவார்கள் என்று பேசியவர்கள் உண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளில் அப்படி எதுவுமே நடக்கவில்லை. பல மாநிலங்களைப் போன்ற சூழல் இங்கே உருவாகவில்லை என்பது உள்ளபடி பாஜக தலைமைக்கு ஏமாற்றத்தையே தந்தது.
இதற்குக் காரணம் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் பாஜகவை மனதார வெறுத்தார்கள் என்பதே ஆகும். வெளியே இது பேசப்படவில்லை என்றாலும், அதிமுகவின் உள்கூட்டங்களில் இது தீவிரமாக விவாதிக்கப்பட்டுவந்தது. ஏனென்றால், அடிப்படையில் அதிமுக எல்லோரையும் அரவணைக்கும் கட்சி. பிளவு வாத கட்சி அல்ல. தவிர, சிறுபான்மையினரின் வாக்குகளையும் கடந்த காலத்தில் பெற முடிந்ததால்தான் அதிமுக வெற்றிகளைப் பெற முடிந்தது. பாஜக உண்மையில் அதிமுகவுக்குத் தாங்க முடியாத சுமையாக இருந்தது. எனவே, கட்சி நிர்வாகிகளின் அழுத்தத்துக்கு அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி செவி சாய்க்க வேண்டிய சூழல் இருந்தது.
ஆகையால், பழனிசாமி முறிவு முடிவை அறிவித்திருக்கிறார் என்றால், அதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடனான மோதல் மட்டுமே காரணம் என்று நான் நம்பவில்லை.
2. பழனிசாமியைப் பொறுத்த அளவில் அடுத்த இரு தேர்தல்களும் அவருக்கு முக்கியமானவை. ஏனென்றால், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 உள்ளாட்சித் தேர்தல் என்று தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் அவர் தலைமையில் அதிமுக தோல்வியைச் சந்தித்திருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல்களில் ஒருவேளை அதிமுக தோற்றால், கட்சியின் தலைமைப் பொறுப்பு பழனிசாமியின் கைகளில் இருக்குமா என்பது கேள்விக்குறி. 2024 தேர்தலில் குறைந்தது கண்ணியமான ஒரு நிலையையேனும் அதிமுக பெற வேண்டும். பாஜகவை உடன் வைத்துக்கொண்டு அது சாத்தியம் இல்லை என்பதைப் பழனிசாமி உணர்ந்திருக்கிறார். அதனாலேயே இந்தப் புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருக்கிறார்.
அதிமுக எதிர்த்தரப்பான திமுக கூட்டணிக்கு இது ஓர் அழுத்தத்தைத் தரக் கூடும். திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இன்று ஓர் அழுத்தத்தில் உள்ளன. பாஜக எதிர்ப்பு எனும் நோக்கத்துக்காக திமுக கூட்டணியில் பல நிர்ப்பந்தங்களை அவை எதிர்கொள்கின்றன. பாஜகவிடமிருந்து அதிமுக பிரிந்திருப்பதால் அவற்றின் பேரச் சக்தி திமுக கூட்டணிக்குள் அதிகரிக்கும். அதேசமயம், திமுக கூட்டணிக்குள் பெரும் பிளவுகளையோ, 2024 தேர்தல் முடிவுகளில் திமுகவுக்குப் பெரிய சேதங்களையோ இது உருவாக்கிவிடும் என்று சொல்வதற்கு இல்லை.
3. கலாச்சாரத் தளத்தில் அதிமுகவின் முடிவு நல்ல விளைவுகளை உண்டாக்கும். அந்த வகையில், பொதுமக்களுக்கு இது நல்ல செய்தி. ஏனென்றால், தமிழ்நாடு அரசியலின் மைய கவனத்திலிருந்து பாஜக அகற்றப்படும். திமுக எதிர் அதிமுக எனும் பழைய சூழல் உருவாகும். மாநிலப் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைகள் கவனம் பெறும். அதிமுகவோ, திமுகவோ ஒருபோதும் மதப் பிரச்சினைகள், வெறுப்புப் பிரச்சாரங்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய மாட்டார்கள். இது சமூகத்துக்கு நல்லது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
பாஜக இந்த முடிவால் பாதிக்கப்படுமா?
அதிமுக - பாஜக முறிவை நான் முழு விலகலாகப் பார்க்கவில்லை. இன்று நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலச் சூழலுக்கேற்ப வியூகங்களை அமைத்துச் செயல்படுகிறது பாஜக.
நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்; ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய பாஜகவுக்கு அங்கு செல்வாக்கான தலைவர்கள் இல்லை. அங்கு பாஜகவின் ஒரே செல்வாக்கான தலைவரான வசுந்தரா ராஜேவுக்கும், மோடி - ஷாவுக்கும் இடையில் பெரிய கருத்து முரண்பாடுகள் உள்ளன. அதனால், அவர் கட்சியைவிட்டு ஒதுக்கப்பட்டிருந்தார். ஆனால், நேற்று அவரை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக தேசியத் தலைமை இறங்கியிருக்கிறது. அவர் கூட்டங்களுக்கு வர ஒப்புக்கொண்டிருக்கிறார். காரணம் என்ன? பாஜகவுக்கு மக்களவைத் தேர்தலில் வெற்றி வேண்டும் என்றால், அங்கே வசுந்தரா ராஜே வேண்டும். மோடி - ஷா ஜோடி ஒரு இடத்தைக்கூட இழக்க விரும்ப மாட்டார்கள். இந்த விஷயத்தில் அவர்களுக்கு ஈகோ எல்லாம் பொருட்டே அல்ல.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் களத்தில் பாஜக எவ்வளவு மோசமாக இருக்கிறது எனும் நிலையை அதன் தேசியத் தலைமைக்கு மேலும் துல்லியமாக உணர்த்தியிருக்கும் என்று எண்ணுகிறேன். பாஜக இல்லாத அதிமுக கூடுதலாக ஓரிரு இடங்களை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது என்று பாஜக உணர்ந்திருந்தால், அதை பாஜக அனுமதிக்கும். இது ஏதோ தமிழ்நாட்டில் அவர்கள் கையாளப்போகும் புதிய அணுகுமுறை இல்லை. ஒருபுறம் அரசியல் களத்தில் மோதிக்கொண்டே மறுபுறம் நாடாளுமன்றத்தில் இப்படி மோதும் கட்சிகளிடமிருந்து அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளும் அணுகுமுறையை பாஜக பல மாநிலங்களில் ஏற்கெனவே கடைப்பிடிக்கிறது. ஒடிஷா, ஆந்திரா, தெலங்கானா என்று பல மாநிலங்களில் ஆளுங்கட்சிகளைக் கடுமையாக எதிர்க்கிறது பாஜக; அதேசமயம், நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோத்தாக்களை நிறைவேற்ற நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் ஆகியோரின் கட்சிகளின் ஆதரவையும் அது பெற்றுக்கொள்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது? அப்பட்டமாகவே வழக்கு விசாரணைகளை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது பாஜக. தவிர, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு, திட்ட ஒதுக்கீடுகளை இன்னோர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அந்த வரிசையில் அதிமுகவும் இடம்பெறலாம். ஏற்கெனவே தமிழ்நாட்டில் இது பேசப்படும் விஷயம்தானே! இன்றைய அதிமுகவின் பாஜக ஆதரவு நிலைப்பாட்டுக்கும், அதிமுக தலைவர்கள் எதிர்கொள்ளும் வழக்குகளுக்கும் மிக நெருக்கமான உறவு இருக்கிறதுதானே!
ஆகையால், 2024 தேர்தல் வரை அதிமுகவின் இந்த முடிவு நீடிக்கலாம்; தேர்தலுக்குப் பின் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேரலாம். ஏனென்றால், அடுத்த மூன்றாண்டுகளுக்கு மத்தியிலும் மாநிலத்திலும் என்று இரு இடங்களிலும் எதிரிகளை எதிர்கொள்வது அதிமுகவுக்குச் சுலபமான விஷயம் இல்லை.
அதிமுகவுக்கு பாஜகவோடு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது என்கிறீர்களா?
ஆமாம். மோடிக்குப் பின் அரசியல் களத்தில் தேசிய அரசியலின் முக்கியத்துவம் அதிகரித்துவருகிறது. திமுக காங்கிரஸோடு வலுவான உறவில் உள்ள நிலையில், அதிமுக காங்கிரஸ், பாஜக இரண்டையும் எதிர்த்துக்கொண்டு நிற்க முடியாது. மாநிலக் கட்சிகளுக்கு இது பெரும் சவால்.
நீங்கள் திமுகவையே எடுத்துக்கொண்டால், அதன் நீண்ட காலத் தலைவரான கலைஞர் மு.கருணாநிதி ஐம்பதாண்டுகளில், கணிசமான காலம் மத்தியில் ஒரு வலுவான கூட்டணியோடு இருந்திருக்கிறார். இந்திரா யுகத்துக்குப் பின் வி.பி.சிங், தேவகவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் என்று தன்னுடைய பிற்காலத்தின் பெரும் பகுதியில், தேசிய அரசியலில் ஆளும் அரசின் ஓர் அங்கமாக திமுகவை வைத்திருந்தார். சொல்லப்போனால், இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஒரு கடுமையான சூழலை எதிர்கொண்டார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகளைத் தீவிரமாக எதிர்த்து, இரு முக்கியமான தேர்தல்களை அவர் சந்தித்தார். அது ஒரு துணிச்சலான முடிவு. எல்லோரும் அப்படி முடிவெடுக்க மாட்டார்கள். பழனிசாமி அப்படி எதிர்கொள்வார் என்று நம்புவதற்கு இல்லை. ஏனென்றால், ஏராளமான வழக்குகளை அதிமுகவினர் எதிர்கொள்கிறார்கள். 2024 புதிய மக்களவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் சரி; பாஜக ஆட்சி அமைந்தாலும் சரி; அதிமுகவுக்குக் குடைச்சலைக் கொடுப்பார்கள். எங்கோ ஒரு பக்கம் அதிமுக சாய வேண்டி இருக்கும்!
சரி, பாஜக தமிழ்நாட்டில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்தால் எப்படி இருக்கும்?
ஆம்! பாஜக ஒரு கூட்டணியை உருவாக்கத்தான் முற்படும். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாமக, தேமுதிக இவர்களுக்கு எல்லாம் இது ஒரு பேர சக்தியைத் தரலாம். ஆனால், தேர்தல் களத்தில் மக்களிடத்தில் அது எந்தச் சலனத்தையும் உண்டாக்கிவிடும் என்று நான் நம்பவில்லை.
மொத்தத்தில் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பொதுமக்கள் பார்வையில், ஒட்டுமொத்தமாக இதில் ஒரு நல்ல விஷயம் என்று நான் நினைப்பது, அரசியல் விவாதங்களில் இனி மாநில நிர்வாகம், மாநிலப் பிரச்சினைகள் முக்கியத்துவம் பெறும். பொதுவாக, பாஜக முக்கிய இடத்தில் உள்ள மாநிலங்களில் எல்லாம் தேசியவாதம், மதவாதம், பிளவுவாதம் சார்ந்த பிரச்சினைகளே விவாதத்தில் முக்கிய இடம் பிடிக்கின்றன; இந்தச் சூழல் வெகுமக்களின் பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது. இதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே. பாஜக முக்கியத்துவம் இழக்கும்போது வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் முன்னுக்கு வரும். அது சார்ந்து அரசியல் கட்சிகள் - ஊடகங்கள் பேசவும், தீர்வு கிடைக்கவும் வழி பிறக்கும். இந்த ஐம்பதாண்டுகளில் திமுக, அதிமுக தமிழக அரசியலுக்கு அளித்திருக்கும் முக்கியமான பண்பு என்னவென்றால் இங்கு வளர்ச்சியும், சமூகநீதியுமே மைய விவாதமாக இருந்தது. சமூக நல்லிணக்கத்துக்கு அது முக்கியம் என்று நினைக்கிறேன். அந்தச் சூழல் மீண்டும் செழிக்கும் சூழல் உருவாவது சமூகத்துக்கு நல்லது!
தொகுப்பு: எஸ்.சிவசங்கர்
4
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
J. Jayakumar 1 year ago
This situation will change once the parliament elections are announced; There will be intense seat-sharing and expenses-sharing discussions and in a worst case scenario, they will say, it is not "alliance" but only constituency-adjustment (தொகுதி உடன்பாடு) against their "common enemy"!
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.