கட்டுரை, சமஸ் கட்டுரை, ரீவைண்ட் 5 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன?

சமஸ் | Samas
22 Sep 2021, 5:00 am
2

சிதம்பரம் பக்கத்திலுள்ள கொடியம்பாளையம் ஒரு தீவு கிராமம். அரசுசார் எந்தத் தேவைக்கும் கொள்ளிடம் ஆற்றைக் கடக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் நானும் நண்பர் முருகேசனும் அங்கு சென்றிருந்தோம். நல்ல பசி. “டீ குடிக்கலாமா?” என்றார் முருகேசன். போனோம்.

ஒரு மூதாட்டி நடத்தும் டீக்கடை அது. அவருடைய தோழிகள்போல மேலும் ஐந்தாறு மூதாட்டிகள் அங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வயது எண்பது, தொண்ணூறு இருக்கும். அரசாங்கத்தின் செயல்பாடு, அதிமுக ஆட்சியைப் பற்றி முருகேசன் மெல்ல அவர்கள் வாயைக் கிளறினார். கடும் அதிருப்தியான வார்த்தைகள் வெளிவந்தன. “சரி, இந்த முறை யாருக்கு ஓட்டுப் போடப்போகிறீர்கள்?” என்றார். “ரெட்டலைக்குத்தான்” என்றார்கள். முருகேசன் திகைத்துவிட்டார். “ஏம்மா, இந்நேரமும் அரசாங்கத்தை அவ்ளோ திட்டினீங்க; இப்போ திரும்பவும் அந்தம்மாவுக்கே ஓட்டுப்போடுறேன்றீங்க?” என்றவரிடம், “ஆயிரம் இருந்தாலும் அம்மா கட்சியில்ல?” என்றார்கள்.

வாக்கியத்துக்கு வாக்கியம் அம்மா, அம்மா, அம்மா. “ஏம்மா, உங்களுக்கெல்லாம் அந்தம்மாவோட அம்மா வயசு இருக்கும்போல இருக்கே, எப்படி அவங்களை நீங்க அம்மான்னு சொல்றீங்க?” என்றார் முருகேசன். ஒரு ஆயா சொன்னார், “நாங்கல்லாம் அம்மா அப்பா இல்லாத பிள்ளைகளா, அவோ அம்மான்னு இருக்காவோளா, ஏத்துக்கிட்டோம். தாய், தகப்பனில்லா எங்களுக்கு அவக அம்மாவா இருக்காங்க!”

ஜெயலலிதா இறந்த செய்தி அதிகாரபூர்வமாக வந்த இரவில் வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அந்நேரத்திற்குக் கணினியை இயக்க ஆரம்பித்த வெளிச்சத்தில் விழித்த என் மகள், “என்னப்பா?” என்றாள். செய்தியைச் சொன்னேன். அடுத்த கணம் ஓவென்று அழ ஆரம்பித்தாள். பள்ளிச் சிறுமி. இதுவரை ஜெயலலிதாவைப் பற்றி அவள் ஒரு வார்த்தை பேசி நான் பார்த்ததில்லை.

காலையில் ராஜாஜி மண்டபத்தில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த நின்ற நீண்ட வரிசையைக் கவனித்தேன். கணிசமாகக் கல்லூரி மாணவிகள் காத்திருந்தார்கள்.

மக்கள் எதன் பொருட்டெல்லாம் ஒரு தலைவரைத் தம்முடையவராக வரித்துக்கொள்கிறார்கள், எப்படியெல்லாம் ஒருவரைத் தமக்குள் உருவகித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொதுவான ஒரு வரையறைக்குள் கொண்டுவந்துவிட முடிவதில்லை. ஜெயலலிதாவோடு சேர்ந்து அவர் இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் 203 பேர் இறந்திருக்கிறார்கள். ஜெயலலிதா இறந்த அடுத்தடுத்த நாட்களில் அவருடைய சமாதிக்கு முன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி வந்து மொட்டையடித்துக்கொண்டு அழுது, தங்கள் துயரம் தீர்த்துக்கொண்ட நூற்றுக்கணக்கானோரின் கதைகளையும் கேட்டுப் பாருங்கள், இறந்தது ஒரு ஜெயலலிதா அல்ல!

தனிப்பட்ட வகையில், ஒரு காவியத்தன்மை வாய்ந்த சர்வதேச சினிமாவுக்கான திரைக்கதைக்குத் தகுதியானது ஜெயலலிதாவின் வாழ்க்கை. செல்வாக்கான குடும்பம். அது நொடித்துப்போகும்போது பிறக்கும் குழந்தை. வெகு சீக்கிரம் தன் தந்தையையும் இழக்கும் அக்குழந்தையை வளர்ப்பதற்காக சினிமாவைத் தேர்ந்தெடுக்கும் தாய். சிறு வயதிலேயே தாயின் பிரிவும் தனிமையும். ஒருவித லட்சிய வேட்கையோடு வளரும் அந்தக் குழந்தையின் கனவு ஒரு சராசரி நடுத்தர வர்க்கப் பெண்ணின் கனவுகளிலிருந்து பெரிதும் மேம்பட்டதல்ல. படிப்பு, வேலை, காதல், கணவர், குழந்தைகள், குடும்பம். எதுவும் எண்ணியபடி நிறைவேறவில்லை. மாறாக, அது சினிமாவில் கால் பதிக்கிறது. உச்சம் தொடுகிறது. அரசியலில் நுழைகிறது. தன்னைச் சுற்றி ஒரு பிம்பத்தை எழுப்புகிறது. பின், அந்தப் பிம்பமே அது என ஏனையோரையும் நம்பவைத்துத் தானும் நம்பலாகிறது. அதற்குள் அடைப்பட்டுக்கொள்கிறது. வழிபடலாகிறது. அந்தப் பிம்பத்துக்குள் சிறைப்பட்டிருந்த உயிர் என்ன நினைத்தது, எப்படி வாழ்ந்தது? தெரியாது. ஒருநாள் உயிர் பிரிகிறது. அப்போதும் சடலம் எனப் பிம்பமே மக்கள் முன் பார்வைக்கு வருகிறது, புதைகுழிக்குள் செல்கிறது. வாழ்வும் மர்மம், சாவும் மர்மம்!

ஜெயலலிதாவின் வாழ்க்கைக்குள் அவருடைய வார்த்தைகளின் வழியே சென்று பார்க்கும்போது பச்சாதாபம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால், இதற்கெல்லாம் யார் காரணம்? அவரே வரித்துக்கொண்ட வாழ்க்கை அல்லவா இது? சுயஆளுமை மிக்க பெண்களைக் கொன்று, அவர்களைக் கடவுளாக்கி, கோயில் கட்டி வழிபாடு நடத்தி, அவர்களிடமிருந்தே அருளையும் பெறும் தொன்றுதொட்ட ஆணாதிக்க பலிபீட மரபிலிருந்து ஜெயலலிதாவின் கதை எந்த வகையில் வேறுபட்டது? வாழ்க்கை முழுவதும் அதிகாரம் எனும் மாயக் கயிறு ஜெயலலிதாவின் கண்களை இறுகக் கட்டியிருந்தது. அதுவே அவர் கைகளால் அவருடைய சொந்த வீட்டையே வாழ்நாள் சிறையாகக் கட்டிக்கொள்ள வைத்தது.

தமிழ்நாட்டுப் பெண்களில் கணிசமானோர் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஜெயலலிதாவைப் பெண் சக்தியின் ஒரு அடையாளமாக, தங்களின் பிரதிநிதியாகக் காண்பதைக் கண்டிருக்கிறேன். ஆணாதிக்கத்தின் கோட்டையான அரசியலில் ஒரு பெண்ணாக அவர் சென்ற உயரம் பிரமிக்கத்தக்கது. எனினும், பெண்களுக்காக அமைப்பைப் புரட்டியவர் அல்ல அவர்.

ஜெயலலிதா இறக்கும்போது அதிமுகவின் 50 மாவட்டச் செயலர்களில் ஒருவர்கூடப் பெண் இல்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களில் பெண்களின் எண்ணிக்கை ஏனையக் கட்சிகளோடு மேம்பட்டது அல்ல. வாச்சாத்தி தாக்குதலும் காவல் நிலையங்களிலேயே நடந்த சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா பாலியல் வன்முறைகளும் அவர் ஆட்சியில் நடந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கத்தில் அவருடைய அரசு நிற்கவில்லை; மாறாக எதிரே வன்முறையை நிகழ்த்திய அரசப் படையினர் தரப்பில் நின்று வாதிட்டது. உண்மையில் ஜெயலலிதாவிடமிருந்து வெளிப்பட்டது பெண் மைய அரசியல் அல்ல; ஆண் மைய அரசியலின் பெண் வடிவப் பிரதிபலிப்பு. மறைமுகமாக இந்திராவிடமிருந்து வெளிப்பட்டதும் மாயாவதி, மம்தாவிடமிருந்து வெளிப்படுவதும்கூட அதுவே.

ஜெயலலிதாவின் மரணத்தையொட்டி உருவாகியிருக்கும் வெற்றிடம் அவருடைய கட்சிக்காரர்களையும் ஆதரவாளர்களையும் காட்டிலும் தமிழ்நாட்டு மக்களையே பெரும் சிக்கலில் தள்ளியிருப்பதாக நான் எண்ணுகிறேன். ஜெயலலிதா இறந்த மறுகணம் இதுவரை அவரால் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்ததாக மக்களுக்குச் சொல்லப்பட்ட அவருடைய தோழி சசிகலா குடும்பத்தின் வட்டத்துக்குள் அவருடைய சடலம் கொண்டுவரப்பட்டது ஒரு குறியீடு. இதுநாள் வரை அவர்கள் யாவரும் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தார்கள் என்றால், சில மணி நேரங்களில் எப்படி அவர்கள் அத்தனை பேரும் எவ்விதச் சிக்கலுமின்றி உடனடியாக இப்படி அப்பட்டமாக ஒருங்கிணைய முடியும்? கணத்தில் ஒருங்கிணைந்தவர்கள் கைகளில் அரசு இயந்திரமும் ஏனைய அதிகாரங்களும் எப்படி இவ்வளவு இயல்பாகப் பணிய முடியும்?

ஜெயலலிதா இதைக்கூட அறிந்திருக்கும் திறனற்றவராக இருந்தாரா அல்லது அறிந்திருந்தும் தமிழக மக்களிடமிருந்து மறைத்தாரா? கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேல் திரைமறைவில் இருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் ஒரே நாளில் ராஜாஜி மண்டபத்தின் மையத்தில் வந்து நின்றதிலும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி அவருடன் உரையாடியதிலும் அதிசயிக்க ஏதுமில்லை! ஜெயலலிதா இறந்த இரவில் அடுத்த முதல்வராகவே நடராஜன் பதவிப் பிராமணம் ஏற்றிருந்தால்கூட திகைக்க ஒன்றுமில்லாத நிலையில் அல்லவா தமிழக மக்களைத் தள்ளிச் சென்றிருக்கிறார் ஜெயலலிதா?

ஆட்சியில் இருக்கும் முதல்வர் உயிரிழப்பது தமிழகத்துக்குப் புதிது அல்ல. திராவிட இயக்கத்தின் முதல் முதல்வரான அண்ணாவும் ஜெயலலிதாவின் முன்னோடி எம்ஜிஆரும் ஆட்சியில் இருக்கும்போதே இறந்தனர். ஆயினும், அன்றைய நெருக்கடிகளுடன் ஒப்பிட முடியாத சூழல் இன்றைக்கு உருவாகியிருப்பதாகவே தோன்றுகிறது. இதுவரை இல்லாத சூழலாக, அரசுப் பதவியில் இருந்தாலும், பொறுப்புகளையும் அதிகாரத்தையும் நேரடியாகக் கையாண்டிராத, எந்நேரமும் தலைமை மீதான அச்சத்திலும் பதற்றத்திலும் கட்டுண்டு கிடந்த ஒரு கூட்டம் கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது; அவர்களுக்குள் உருவாகியிருக்கும் அதிகாரப் போட்டியின் விளைவு அவர்களில் ஒவ்வொருவரையும் மதிப்புக்கூட்டப்பட்டவர்களாக உருமாற்றியிருக்கிறது; அவர்கள் கையில் தமிழகத்தின் எதிர்காலம் சென்றிருக்கிறது. தலைமை மீதான அச்சம் காரணமாக, ஒப்பீட்டளவில் ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் இதுநாள் வரை அரசு இயந்திரச் செயல்பாடுகளில் மிகக் குறைந்த அளவிலேயே குறுக்கிட்டுவந்தவர்கள் இனி நேரடியாக அவரவர் எல்லைக்குட்பட்ட அளவில் ராஜாவாக மாறவிருக்கிறார்கள்.

ஜெயலலிதா மருத்துவனையில் போய்ப் படுத்த அடுத்த சில நாட்களிலேயே, பாஜகவின் சூட்சமக் கயிறுக்குள் அதிமுகவின் பொம்மை நிர்வாகம் வந்துவிட்டது என்ற குரல்கள் எழுந்தன. அது பொய் அல்ல என்பதைத்தானே வெளிப்பட்ட காட்சிகள் கூறுகின்றன? ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவருடைய மரணம், அடுத்தகட்ட ஆட்சி மாற்றம் வரை அரசாங்கத்தின் பிரதிநிதியென இதுவரை ஆளுநர் நீங்கலாக ஒருவர் பேசவில்லையே ஏன்? தமிழகத்தில் திடீரென எப்படி ஆளுநர் இப்படி ஒரு விஸ்வரூபம் எடுத்தார்? தமிழக மக்கள் வாக்களித்தது அதிமுகவினருக்கா, ஆளுநருக்கா?

நாட்டை ஒற்றையாட்சியை நோக்கி உந்தும் ஒரு அரசு மத்தியில் இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் முன் ஐம்புலன்களும் ஒடுங்க அடங்கி நின்ற முதல்வர் பன்னீர்செல்வமும், பல்லாயிரக்கணக்கானோர் பார்த்திருக்க ஜெயலலிதாவின் சடலத்தை வைத்துக்கொண்டே மோடியிடம் கை கொடுக்கப் போட்டியிட்ட - வாய்ப்பிருந்தால் தற்படமும் எடுத்திருக்கக்கூடிய - ஜெயலலிதாவின் அமைச்சர்களும் வெளிப்படுத்தும் செய்தி என்ன? இவர்களா தமிழகத்தின் தனித்துவத்துக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் இனி குரல் கொடுக்கப்போகிறார்கள்? ஜெயலலிதா சடலத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த அண்ணா கொடியைப் பின்னர் வந்த மூவர்ணக் கொடி கொண்டு மூடியது எனக்கென்னவோ நாளைய சூழலை விவரிக்கும் படிமமாகவே விரிந்தது.

மேலதிக அபாயம் எதிர் வரிசையின் வெற்றிடத்திலிருந்து வெளிப்படுகிறது. ஜெயலலிதாவின் அரசியல் கலாச்சாரம் அவருடைய கட்சியைத் தாண்டி இன்று ஏனைய கட்சிகளிலும் ஊடுருவியிருக்கிறது. இன்றைய திமுக அண்ணாவழி திமுக அல்ல; ஜெயலலிதாபிரதி திமுக. அண்ணா மறைந்தபோது, அவருக்கு அடுத்த நிலையில், திமுகவில் முதல்வராகும் தகுதியோடு - சாதி  வட்டத்துக்குள் குறுக்கப்படாமல் - குறைந்தது ஐந்து தலைவர்கள் இருந்தார்கள். எதிர் வரிசையில் காமராஜர், ராஜாஜி, சம்பத் போன்ற தொலைநோக்குள்ள காத்திரமான பல ஆளுமைகள் இருந்தார்கள். எம்ஜிஆர் மறைந்தபோது, அதிமுகவில் அடுத்த நிலையில் நெடுஞ்செழியன் முதல் ஜெயலலிதா உட்பட பண்ரூட்டி ராமச்சந்திரன் வரை ஒரு நீள்வரிசை இருந்தது. எதிர் வரிசையில் கருணாநிதி துடிப்பான நிலையில் இருந்தார். கூடவே மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி முதல் வி.பி.சிந்தன் வரை மக்கள் செல்வாக்கு மிக்க பல தலைவர்கள் இருந்தார்கள். இன்றைய நிலை என்ன?

தமிழ்நாட்டு அரசியல் பெருமளவில் இரு தலைவர்களின் துருவ அரசியலாகக் கடந்த கால் நூற்றாண்டிலேயே நிலைபெற்றதன் விளைவு, எதிரணியில் கருணாநிதி முதுமையின் தள்ளாமையில் சிக்குண்டிருக்கும் நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் -  ஸ்டாலின் நீங்கலாக - ஒட்டுமொத்த அரசியல் களத்திலும் கோடிக்கணக்கான மக்களை ஈர்க்கக் கூடிய தலைவர்கள் இல்லை; இரண்டாம் நிலையில், மாநிலம் முழுவதும் பொதுவானவராகப் பார்க்கப்படும், சுயசெல்வாக்குள்ள தலைவர்களையும் எல்லாக் கட்சிகளிலுமே தேட வேண்டியிருக்கிறது. வாரிசு அரசியலை இதற்கான பதிலாகக் கருதிட  முடியாது.

சித்தாந்தம் தோற்று, தனிப்பட்ட ஆளுமையின் செல்வாக்கும் வியூகங்களும் அற்று உருவாகும் இந்த வெற்றிடம் இயல்பாக அரசியலில் யார் செல்வாக்குப் பெற வழிகோலும் என்றால், பெரும்பான்மையியத்துக்கு வழிகோலும். சாதிய, மதவிய சக்திகள் முழு ஆதிக்கம் பெற வழிகோலும். தமிழகத்தில் இதுவரை முதல்வர் பதவியைக் குறிவைக்கும் நிலையில் சாதிய சக்திகள் இல்லை. இப்போது எண்ணிக்கை பெரும்பான்மையும் பொருளாதார வலுவுமிக்க சாதிய சக்திகள் அதிமுகவுக்குள் அணிதிரள ஆரம்பித்திருப்பதன் விளைவு ஏனைய கட்சிகளையும் இது பீடிக்கும்; முக்குலத்தோர், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், நாயுடுகள் எனத் தனித்தனியே அணிதிரளல்களும் பேரங்களும் நடக்கும். கூடவே மதவாதமும் தலை தூக்கும். இவற்றினூடாக டெல்லியின் கை ஓங்கும்.

திராவிட இயக்கம் தன்னுடைய நூற்றாண்டில் அதன் வரலாற்றிலேயே மிகச் சவாலான ஒரு காலகட்டத்துக்குள் நுழைவதாகவே கருதுகிறேன். பிராமணர் எதிர்ப்பு இயக்கமாகத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கத்தின் எதிர்காலம் இக்கட்டுக்குள்ளாவதை இன்று ஒரு பிராமணத் தலைவரின் மறைவு உந்தியிருப்பதை வெறுமனே வரலாற்று முரண் என்று கடப்பதற்கில்லை. அதைத் தாண்டிய ஒரு சமூக உளவியல் இங்கு வெளிப்படுகிறது. அண்ணா காலத்துக்கும் ஜெயலலிதா காலத்துக்கும் இடையிலான பயண மாற்றத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டியது இது. பிராமணரைப் பார்த்தொழுகும் இந்தியச் சாதிய கலாச்சாரத்திலிருந்து பிராமண எதிர்ப்பு இயக்கங்களாலும் வெளிப்பட இயலாததன் தோல்வியே அது. தமிழ்நாட்டில் தன்னுடைய கட்சியைத் தாண்டி எதிரிகள் மீதும்கூட ஒரு சாபம்போல ஜெயலலிதாயிஸத்தைப் படரவிட்டுச் சென்றிருப்பதையே ஜெயலலிதா வாழ்வின் எச்சம் எனக் கருதுகிறேன்!

டிசம்பர், 2016, ‘தி இந்து’

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


1






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

KMathavan   3 years ago

அரசியல்தலைவர்கள்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

KMathavan   3 years ago

தழிழக அரசியல்தலைவர் (பார்காதது போல் ) கடந்து செல்லும் உண்மைகள்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

ஆலஸ் பயாலியாட்ஸ்கிஉள்ளூர் மாணவர்கள்அருஞ்சொல் டி.எம்.கிருஷ்ணாகுக்கூரொமான்ஸ்ரிது மேனன்சமஸ் - உதயநிதிவளவன் அமுதன் கட்டுரைகலைஞர் சண்முகநாதன்ரத்னகிரிஆட்சிப் பணிஇணையதளம்எம்.எஸ்.சுவாமிநாதன் குழுசவால்பாரப் பாதைநாடாளுமன்றத் தாக்குதல்மலம் அள்ளும் தொழில்தேசியக் கொடியாவும் ராணுவமயம்நடிப்புத் துறைதியாக வாழ்க்கைரிசர்வ் வங்கிபெண்களின் காதல்சமஸ் புதிய தலைமுறைஇளம் தாய்மார்கள்பாப் மார்லிஆ.சிவசுப்பிரமணியன் அண்ணா பேட்டிமதச்சார்பற்ற கருத்துகள்தியாகராஜ சுவாமிகள்ஊட்டச்சத்துக் குறைவு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!