அரசியல் 6 நிமிட வாசிப்பு

அதிமுகவுக்குள் என்ன நடக்கிறது?

சோ.கருப்பசாமி
10 Dec 2021, 5:00 am
0

மிழ்நாட்டின் 24 மணி நேரக் தொலைக்காட்சிகள் அதிமுகவுக்குள் ஏதோ பூகம்பம் நடப்பது போன்ற பாவனை உருவாக்கிக்கொண்டிருந்தாலும், எந்தச் சலனமும் இல்லாமல் அதிகாரத்தைத் தன் கைகளுக்குள் உறுதிபடுத்திக்கொண்டிருக்கிறார் பழனிசாமி. அதிமுகவுக்குள் இப்போது நிலவும் பேச்சு இதுதான். இரட்டைத் தலைமை - ஒருங்கிணைப்பாளர் பதவி பன்னீர்செல்வத்துக்கு; இணை ஒருங்கிணைப்பாளர் பதவி பழனிசாமிக்கு என்று சமீபத்திய தேர்ந்தெடுப்பு நடந்து முடிந்திருந்தாலும், கட்சி முழுமையாக பழனிசாமி கைக்குள் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது! அப்படியென்றால், பழனிசாமியின் தலைமை எல்லோராலும் விரும்பப்படுகிறதா? என்று கேட்டால், இல்லை என்றும், சரியான தருணத்தில் பழனிசாமியை வீழ்த்த பலரும் காத்திருக்கின்றனர் என்றும் பதில் கிடைக்கிறது. அப்படியென்றால், என்னதான் நடக்கிறது அதிமுகவுக்குள்?

 உறுதிபட்ட அதிகாரம்

ஆட்சியதிகாரத்தோடு ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், பன்னீர்செல்வத்தின் வீழ்ச்சி அடுத்து சசிகலாவின் வீழ்ச்சி என்று அடுத்தடுத்து அடிகளால் பாதிக்கப்பட்டிருந்த அதிமுகவினர் எப்படியேனும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பினர். பழனிசாமி முதல்வர் பதவியை ஏற்றபோது பலருக்கும் இவர் ஓராண்டுக்கேனும் நிலைப்பாரா என்ற கேள்வியே இருந்தது. பழனிசாமி நிலைத்திருந்தார்.  

அடுத்தடுத்த தேர்தல்களுக்கு ஈடுகொடுப்பாரா என்பதையெல்லாம் தாண்டி, இந்த ஆட்சியை முழுமையாகக் கொண்டுபோய் கரைக்குச் சேர்ப்பாரா என்ற கேள்விக்கு விடை கிடைத்ததையே அதிமுகவினர் பெரிய வெற்றியாகக் கருதினர். கூடுதலாக பழனிசாமி ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, பன்னீர்செல்வத்தையும், தினகரனையும் ஒதுக்கிவிட்டு, தன்னை ஒரு ஆளுமையாகவும் கட்டமைத்துக்கொள்ள முற்பட்டபோது, அடுத்து ஓர் உறுதியான தலைவர் கிடைத்துவிட்டார் என்றே அதிமுகவினர் நம்ப ஆரம்பித்தனர்.

2019 மக்களவைத் தேர்தல் அதிமுகவினருக்கு ஒரு விஷயத்தை உறுதியாக்கிவிட்டது. அதிமுக ஆட்சி நிலைக்காது என்பதே அது. ஆனாலும், கட்சி கரைந்திடாமல் இருக்கவும் தேர்தலை எதிர்கொள்ளவும் பழனிசாமியை விட்டால் வழி இல்லை என்பதில் உறுதியாக இருந்தனர். பழனிசாமி வேறு எவரும் எடுபடாமல் பார்த்துக்கொண்டார்.

பணமும் அதிகாரமும்    

கட்சியில் கீழே பழனிசாமி தலைமையில் இரு மாற்றங்கள் நடந்தன. ஒன்று பணம் பாய்ந்தது, மற்றொன்று அவரவர் பதவியின் எல்லைக்குட்பட்டு கொஞ்சம்போல அதிகாரத்தை ருசிக்க முடிந்தது. முன்னதாக எம்ஜிஆர் - ஜெயலலிதா காலத்தில் எப்போதும் கண்காணிப்பின் பிடியிலேயே வளர்ந்துவந்த கட்சியினருக்கு கொஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதுபோல இருந்தது; பிற்பாடு அதிகாரம் தன் பிடிக்குள் முழுமையாக வந்தபோது பழனிசாமியும் மாறலானார் என்றாலும், மூச்சுவிட இடம் இருந்தது.

பழனிசாமியைச் சுற்றி சாதி வட்டமும், பிம்பமும் இருந்ததால் பெரும்பான்மை சாதிகளை அவர் அனுசரிக்க வேண்டியிருந்தது. இது கீழே அந்தந்தச் சாதிப் பின்னணியைக் கொண்ட தலைவர்களுக்குக் கூடுதல் அதிகாரத்தையும் வலுவையும் தந்தது. அதேபோல மூத்தத் தலைமுறைத் தலைவர்களை உந்தித் தள்ளிவிட்டு, அடுத்த தலைமுறைத் தலைவர் வேகமாக நகர முடிந்தது. உதயகுமார் அல்லது சண்முகம் போன்றோர் இதற்கு நல்ல உதாரணங்கள்.

சரியும் செல்வாக்கு  

சட்டமன்றத் தேர்தல் தோல்வி எதிர்பாராதது இல்லை என்றாலும், தேர்தலுக்குப் பின் இப்படி பழனிசாமி சுருங்கிப்போவார் என்பதை அதிமுகவினர் எதிர்பார்க்கவில்லை. 2016 தேர்தலுக்குப் பின் திமுகவை ஸ்டாலின் எப்படித் துடிப்பாக வைத்திருந்தார் என்பதே இப்போது அதிமுகவுக்குள் அதிகம் பேசப்படுகிறது.

திமுகவைப் போல துடிப்பான செயல்பாட்டுக்குப் பேர் போன கட்சியல்ல அதிமுக என்றாலும், எம்ஜிஆர் - ஜெயலலிதா இருவரும் கட்சி அமைப்பை வலுவாக வைத்திருந்தார்கள். கட்சிக்குள் அவர்களுடைய செல்வாக்கு கேள்விக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும். இப்போதைய பிரச்சினை, அத்தகு செல்வாக்கை பழனிசாமியால் உருவாக்கிக்கொள்ள முடியவில்லை என்பதே ஆகும். பழனிசாமியை விட்டால் இப்போதைக்கு வேறு ஆள் இல்லை என்பதும், தேர்தல் ஆணைய நடைமுறைகளின்படி கட்சி சட்டமன்ற அதிகாரத்தின் வழி பழனிசாமி கைகளில் இருக்கிறது என்பதுமே அவரது தலைமையைத் தக்க வைத்திருக்கிறது.

கசியும் ரத்தம்

கட்சியின் இப்போதைய பெரும் சவால், செயல்பாட்டாளர்களை எப்படித் தக்கவைப்பது என்பதுதான் என்கிறார்கள் அடுத்தகட்ட தலைவர்கள். அதிமுகவோடு தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட தொண்டர்கள் என்றும் இங்கே நிலைத்திருப்பார்கள்; பிரச்சினை என்னவென்றால், தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களில் கணிசமானவர்கள் அதிகாரக் கணக்கோடு கட்சியில் நீடிப்பவர்கள். ஏனென்றால், எப்படியாயினும் கட்சியோடு பிணைந்திருக்க இது சித்தாந்த அடிப்படையிலான கட்சி கிடையாது; கவர்ச்சிகரத் தலைவர்களும், அடுத்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுமே இங்கு பசை. இரண்டும் இல்லாததால், பலர் வெளியேறும் முடிவுக்கு நகர்கிறார்கள் என்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் 95% தோல்வியைக் கட்சி தழுவியது கட்சியினரை உள்ளுக்குள் நிலைக்குலைய வைத்திருக்கிறது. பணத்தோடு, செயல்படவும் தயாராக இருக்கும் இவர்களை இரு கட்சிகள் இன்று இழுக்கின்றன. ஒன்று, மாநிலத்தை ஆளும் திமுக, மற்றொன்று டெல்லியை ஆளும் பாஜக. பழனிசாமியை இது பதற்றத்தில் ஆழ்த்தாமல் இல்லை.

இப்போதுள்ள அமைச்சர்களில் 8 பேர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள். “நம் எம்எல்ஏக்களில் 15 பேர் அங்கே எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள். நம் கட்சியினரையே விலைக்கு வாங்கி நம்மையே அழிக்கப்பார்க்கிறார்கள்” என்று ராணிப்பேட்டையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாகப் பேசினார் பழனிசாமி. அதற்குப் பிறகும் இன்னும் அதிகமானோர் கட்சி மாறியிருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் இந்த எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

பன்னீர்செல்வத்தின் பரிதவிப்பு

அதிமுகவின் இரட்டைத் தலைமைக்குள்ளான மோதல் ஊரறிந்த விஷயம். பன்னீர்செல்வம் துணிச்சல்காரராக இருந்தால் இப்போது அவர் தலையெடுக்க முடியும். ஆனால், தன்னையே காப்பாற்றிக்கொள்ளப் போராடும் நிலையிலேயே அவர் இருக்கிறார். சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது தொடர்பில் கலந்தாலோசிக்கலாம் என்ற அவருடையே பேச்சே உளமார்ந்த விருப்பத்தால் இல்லை; பழனிசாமியை மிரட்டுவதற்கான ஆயுதமாகவே சசிகலா பெயரைப் பயன்படுத்துகிறார் என்றே கட்சிக்குள் நம்புகிறார்கள். பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த எவர் நீக்கப்படும்போதும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பன்னீர்செல்வத்தை வெளியேற்றினால், சட்டரீதியான பிரச்சினை கட்சிக்கு மீண்டும் ஏற்படலாம் என்பதாலேயே அவரை பழனிசாமி அனுசரிக்கிறார்.

அதிமுகவின் அடுத்தகட்டத் தலைவர்கள் மத்தியில் இவை எல்லாமும் பேசப்படுகின்றன. சரியான தருணம் வாய்க்கும்போது யாரேனும் மேலெழுந்து வரலாம் என்ற எதிர்பார்ப்பே எல்லோரையும் காத்திருக்க வைத்திருக்கிறது. சமீபத்தில் அன்வர் ராஜா கலகக் குரல் எழுப்பியபோது, கட்சியின் அடுத்தகட்டத் தலைவர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக அவரிடம் பேசியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இப்போதைக்கு எதிர்க்குரல் கொடுத்தாலும் ஆகப்போவது ஒன்றும் இல்லை; மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் காய்களை நகர்த்தலாம் என்பதே பலரின் எண்ணமாக வெளிப்படுகிறது.

அடுத்து என்னவாகும்?

இப்போதைக்கு அதிரடியாக ஒன்றுமே நடக்காது என்பதே உண்மை. “திமுக தவறுசெய்வதற்காகக் காத்திருக்கிறோம், திமுக அந்த வாய்ப்பை வழங்கும்” என்று அன்வர் ராஜா பேட்டியில் சொன்னதுபோல, அப்படியே அறிக்கை அரசியல் வழி இழுக்கலாம் என்பதே கட்சியின் உத்தி என்கிறார்கள். இதுதான் உத்தி என்றால், கட்சி கொஞ்சம் கொஞ்சமாகக் கரைவதை எவரும் தடுக்க முடியாது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சோ.கருப்பசாமி

சோ.கருப்பசாமி, எழுத்தாளர். பத்திரிகையாளர். தொடர்புக்கு: chokaruppasamy@gmail.com


2






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அரசமைப்புச் சட்டத் திருத்தம்விக்டோரியா அருவிஆம்ஆத்மி கட்சிடி.எஸ்.பட்டாபிராமன்ஞாநிநரம்புக்குறை சிறுநீர்ப்பைஎருமைதேர்தல் நிதி நன்கொடைப் பத்திரம்இஸ்ரேல்ஆளுநர் பதவி ஒழிக்கப்படட்டும்...!பாஜகவின் உள்முரண்சாதியும் நானும்ஒரே இந்துத்துவம்தான்மாதவி லதாமண்புழு நம் தாத்தாமீனாட்சி தேவராஜ் கட்டுரைபேரிடர் மேலாண்மைநாடாளுமன்றம்அந்தமான் சிறைசுபஜீத் நஸ்கர் கட்டுரைமோசடிபல் வலிக்கு என்ன செய்வது?அதிருப்திஈழத்தின் ரத்த வரலாறுமொழிவாரி மாநிலங்கள்மடாதிபதிகள்ரோபோட்கொலையில் பிறந்த கடவுள்கள்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்கியூட் தேர்வு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!