கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, சமஸ் 7 நிமிட வாசிப்பு
அதிமுகவின் அதிகார மாற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும்?
சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் மீண்டும் உயிர் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு வருஷமாக சூனியத்தில் உறைந்ததுபோல இருந்த கட்சி இப்போதுதான் உடம்பை அசைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள் கட்சிக்காரர்கள். அலுவலகத்தை ஒட்டியுள்ள புகைப்படக் கடைகள் சுவாரஸ்யமானவை. தொண்டர்களின் வருகையை நம்பி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தக் கடைகளுக்குக் கட்சியின் போக்கை முன்கூட்டி அறிவிக்கும் வல்லமை உண்டு. அநேகமாக எல்லாக் கடைகளிலுமே ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்கள் மறைந்திருந்தன. எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைக் காட்டிலும் எடப்பாடி பழனிசாமியின் முகம் நிறைந்த சிரிப்பை வெளிப்படுத்தும் படங்கள் பெரிய அளவில் ஆக்கிரமித்திருக்கின்றன.
அதிமுக முழுமையாகப் பழனிசாமியின் கைகளுக்குள் வந்துவிட்டதா? “ஆமாம், இப்போதைக்கு அப்படித்தான்”என்கிறார்கள் எல்லோரும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா மாதிரி எல்லோருக்குமான தலைவராக பழனிசாமி இனியேனும் மாறுவாரா? ஒரு காலகட்டத்துக்கேனும் கட்சியைக் கட்டி இழுத்து முன்னோக்கி நகர்த்துவாரா? முக்கியமாக, தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளில் ஒன்று; பெரிய கட்சி என்கிற இடத்தில் அதிமுகவைத் தக்கவைப்பாரா?
இந்தக் கேள்விகளுக்கு யாரிடமும் தெளிவான பதில் இல்லை. தீர்க்கமான நம்பிக்கையும் இல்லை. சொல்லப்போனால், பழனிசாமியின் தலைமை மீதான நம்பிக்கையைக் காட்டிலும் பன்னீர்செல்வத்தின் மீதான அவநம்பிக்கை பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது. பன்னீர்செல்வத்தின் வீழ்ச்சிதான் பழனிசாமியின் எழுச்சி!
பள்ளத்துக்குள் கட்சி
இந்த ஓராண்டில் அதிமுகவுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்குத் திமுக தந்த தோல்வியைக் காட்டிலும், பாஜக ஆடும் ஆட்டம் முக்கியமான காரணம் என்ற எண்ணம் அதிமுக தொண்டர்களிடம் இருக்கிறது. தமிழக அரசியல் களமானது என்றைக்கு அதிமுக உருவானதோ அன்று முதலாக திமுக, அதிமுக எனும் இரண்டு சக்திகளையே மையம் கொண்டு சுற்றுவது; இந்த ஓராண்டில் முதல்முறையாக பாஜக அந்த இடத்தை ஆக்கிரமித்துவிட்டது என்றே அதிமுகவினர் பலரும் எண்ணுகிறார்கள்.
கட்சியின் பொறுப்பைக் கையில் வைத்திருந்த ஒருங்கிணைப்பாளர்கள் – பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவருமே இதற்குக் காரணம். இரட்டைத் தலைமை எனும் சூழல் இருவருமே சுதந்திரமாகச் செயல்பட முடியாத அழுத்தத்தை உண்டாக்கி இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் நம்பவில்லை. திமுகவுடன் நேரடியாக ஈடுபட வேண்டிய யுத்தம் ஒரு நிர்ப்பந்தம் என்றால், பாஜவுடன் திரை மறைவில் பராமரிக்க வேண்டிய அணுக்கம் இன்னொரு நிர்ப்பந்தம். கட்சியோ இதற்கு இடையில் ஊருக்கு ஊர் இரட்டைப் பிளவுக்கு ஆளாகிக்கொண்டிருந்தது. இதனால் கட்சி பெரிய பள்ளத்துக்குள் சென்றுவிட வேண்டியிருந்தது.
பன்னீர்செல்வத்தின் வீழ்ச்சி
பன்னீர்செல்வம் இதற்கு பிரதான காரணமாக இருந்தார் என்கிற எண்ணம் கட்சிக்குள் பலரிடமும் இருக்கிறது. ஏனென்றால், பாஜகவோடு அவர் கூடுதல் அணுக்கமாக இருந்தார். அவருடைய மகனும் மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் தன்னுடைய செயல்பாடுகள் வழியே பாஜககாரர் போன்ற தோற்றத்தை உருவாக்கியிருந்தார். பன்னீர்செல்வம் நினைத்தால் எந்நேரத்திலும் பாஜகவோடு இணைந்து கட்சிக்குள் ஒரு கவிழ்ப்பை நடத்தலாம் எனும் அச்சம் பழனிசாமி தரப்புக்கு இருந்தது.
கட்சிக்குள் பன்னீர்செல்வத்தால் பெரிய பலன்கள் ஏதும் இல்லை. தனக்குரிய பங்கைக் கேட்பவராக மட்டும் அவர் இருந்தார். அதற்கு மேல் அவருக்கு எந்தத் திட்டமும் இல்லை; யாருக்கும் எதற்காகவும் பேசுபவராகவும் அவர் இல்லை.
இதற்கெல்லாம் அப்பாற்பட்டும் அதிமுகவினருக்குப் பன்னீர்செல்வத்தின் மீது அபிமானமும் எதிர்பார்ப்பும் இருந்தன. ஜெயலலிதாவால் ‘விசுவாசி’ என்று அடையாளம் காட்டப்பட்டவர்; மூர்க்கமான அரசியல் போக்கில் இருந்து விலகி நிற்பவர்; மாநிலம் முழுவதாலும் அறியப்பட்டவராக அதேசமயம், பழனிசாமியைப் போல ஒரு பிராந்தியம்சார் – ஒரு சாதிசார் அரசியலுக்குள் அடைத்துவிட முடியாதவராக இருப்பவர் என்ற மதிப்பீடுகள் இதன் பின்னணியில் இருந்தன. ஜெயலலிதா மறைவுக்குப் பின் குறுகிய காலம் முதல்வராக இருந்தபோதும், பதவியைவிட்டு விலகியபோதும் அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கைப் பலர் இன்னமும் பெரியதாகப் பேசுகின்றனர்.
உண்மையில் தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுகவுக்குள் அதிருப்திப் புகைமூட்டம் சூழ்ந்திருந்தது. கட்சியை ஒரு சமூக, பிராந்திய ஆதிக்கத்துக்குள் முழுமையாகக் கொண்டுசென்றுவிட்டார்; தேர்தல்களை வெல்லும் வல்லமையும் பழனிசாமியிடம் இல்லை என்ற எண்ணம் பலரிடமும் இன்றும் இருக்கிறது. சமூகரீதியாகக் கட்சிக்குள் பல தலைவர்கள் பிளவுபட்டிருந்தனர். வெளிப்படையாகவே விமர்சனக் குரல்கள் கேட்டன. மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா என்று கவர்ச்சிகரத் தலைவர்களால் வழிநடத்தப்பட்டுவந்த கட்சியின் தலைமையிடத்தில் அமரத்தக்க மக்கள் செல்வாக்கு பழனிசாமியிடம் இல்லை.
ஒப்பீட்டளவில் இந்த விஷயங்கள் எல்லாவற்றிலுமே மேம்பட்டவராகப் பன்னீர்செல்வத்தைப் பலரும் பார்த்தனர்.
ஜெயலலிதாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் கட்சித் தலைமை பதவியைச் சமமாகப் பகிர்ந்துகொண்டாலும், ஆட்சியில் முதல்வர் எனும் பகாசுர அதிகார பலம் பழனிசாமிக்கு இருந்தது. நான்கு ஆண்டுகளில் பழனிசாமியைக் கடந்து செல்ல முடியாத அழுத்தத்தை இது பன்னீர்செல்வத்திடம் உண்டாக்கியிருந்தது.
திமுகவிடம் ஆட்சியை அதிமுக பறிகொடுத்த பிறகான காலகட்டம் பன்னீர்செல்வம் இறங்கி ஆடுவதற்கான தோதான வாய்ப்பாக அமைந்தது. இந்த ஓராண்டு காலத்தில் கட்சியில் தன் கையை அவர் உயர்த்திக்கொண்டிருக்க முடியும். அவர் முற்றிலுமாக வீணடித்தார். பன்னீர்செல்வத்தின் செயலின்மையைப் பழனிசாமி பயன்படுத்திக்கொண்டார்.
பழனிசாமியின் முன்னகர்வுகள்
பழனிசாமி ஏற்கெனவே தேர்தல் தோல்விக்கு பிந்தையச் சூழலை கணித்து, தயாராக இருந்தார் என்று சொல்லலாம். பாஜக மற்றும் பாமகவுடன் அவர் அமைத்த கூட்டணியானது ஒட்டுமொத்த மாநில அளவில் அதிமுகவுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கினாலும், பழனிசாமி சார்ந்த கொங்கு பிராந்தியத்திலும் அவர் எதிர்பார்த்த நல்ல பலனைத் தந்தது. சட்டமன்றத்தில் கட்சி இன்று கையில் வைத்திருக்கும் 64 இடங்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான இடங்கள் அவருடைய விசுவாசிகளால் நிறைந்தது. எஞ்சிய ஒரு பங்கு இடமும்கூட பன்னீர்செல்வத்தின் விசுவாசிகளால் நிறைந்தது என்று சொல்வதற்கு இல்லை.
கட்சியினருக்குப் பணத்தை வாரி இறைக்க பழனிசாமி தயங்கவில்லை. அதிமுகவைப் பொருத்த அளவில் இது மிக முக்கியமான ஒரு விஷயம். கட்சியின் வரவு செலவானது, கட்சித் தலைமையால் பெருமளவில் நிர்வகிக்கப்படும் கட்சி அது. ஜெயலலிதா மறைந்தபோது கூவத்தூரில் நடந்த பேர அரசியல் கூத்துகளுக்குப் பணத்தைக் கொட்டியதன் வழியாகவே பழனிசாமி தன்னை முதல்வர் பதவி நோக்கி நகர்த்திக்கொண்டார். ஆட்சியிலும், சம்பாத்தியத்தைப் போலவே செலவும் நடந்தது. ஆட்சியை இழந்த காலகட்டத்திலும் அது தொடர்கிறது.
இரு தலைமை என்றாலும், தன்னுடைய விசுவாசிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு கூட்டத்தைப் பராமரித்து ஊக்குவித்தார் பழனிசாமி. பன்னீர்செல்வத்தால் அவரை நம்பி வந்த எவரையும் பாதுகாக்க முடியவில்லை. தலைமையகத்தில் அவர் கண் முன்னாலேயே அவருடைய ஆதரவாளர்கள் வேட்டையாடப்பட்டனர். பன்னீர்செல்வத்தை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற இடத்துக்கு எல்லோரும் வந்தனர். உச்சகட்டமாக தன்னுடைய பலத்தை மோதிக்காட்ட வேண்டிய பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்கொள்ளும் திராணி இன்றி நீதித் துறையை நாடினார். இது கட்சிப் பதவியிலிருந்து மட்டுமல்லாமல், கட்சியிலிருந்தே நீக்கப்படுவதற்கான சூழலை அவரே உருவாக்கிக்கொண்டதாக அமைந்தது. இப்போதைக்கு முழுமையாகவே பழனிசாமி கைகளுக்குள் கட்சி வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதிகாரபூர்வமாக மட்டும் அல்ல; உணர்வுபூர்வமாகவும். அதேசமயம், பழனிசாமி அதை உத்தரவாதப்படுத்திக்கொள்வது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.
வண்டி எங்கே போகும்?
அடுத்த இரண்டாண்டுகளுக்குள் கட்சியை மக்களவைத் தேர்தலுக்குப் பலப்படுத்த வேண்டிய சவால் பழனிசாமியின் முன் உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஒரு முதல்வராக தன்னுடைய பிம்பத்தை நிலைநிறுத்திக்கொள்வதில் பழனிசாமி வென்றார். ஆனால், தொடர் கூட்டங்கள், போராட்டங்கள், கணிசமான வெற்றிகள் என்று தன்னைச் சுற்றியே அரசியல் சுழலும் வகையில் துடிப்பான ஓர் எதிர்க்கட்சித் தலைவராக எழுந்து நின்றார் ஸ்டாலின். திமுகவை இதன் வழியாகவே தன் கைக்குள் முழுமையாகக் கொண்டுவந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிந்தைய ஓராண்டில், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தன்னிடம் வைத்துள்ளபோதும் இன்றுவரை பழனிசாமி அதில் சோபிக்கவில்லை. சொல்லப்போனால், பாஜகவின் அண்ணாமலை அதிகம் பேசப்படுபவராக இருக்கிறார். மேலும், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல். மக்களவை தேர்தல் மூன்றிலுமே கட்சியின் முந்தைய இடத்தைப் பழனிசாமி பறிகொடுத்திருக்கிறார். திமுக சென்ற ஓராண்டில் அமைப்புரீதியாகவோ, மக்கள் மத்தியிலோ தன்னை வெகுவாகப் பலபடுத்திக்கொள்ளவில்லை என்றாலும், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய செல்வாக்கைத் தேசிய அளவில் பேசப்படும் அளவிற்கு உயர்த்திக்கொண்டிருக்கிறார். பாஜகவின் ஏனைய மாநில அனுபவங்களின் வரலாற்றோடு, ஒப்பிட்டு கணக்கிட்டால் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின் தமிழ்நாட்டில் அதன் வியூகம் தாறுமாறாக ஏறும். அதிமுகவை அது அணுகும் விதம் முற்றிலுமாக மாறும். அதிமுகவின் இடத்தை கைப்பற்றுவதன் வாயிலாகவே 2026 சட்டமன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றாகும் அதன் இலக்கை நோக்கி பாஜக நகர முடியும். அதிமுகவை உண்டு செரிக்கும் வியூகத்தைப் பன்னீர்செல்வத்திடமிருந்தேகூட அது ஆரம்பிக்கலாம். ஆக, திமுகவைக் காட்டிலும் பாஜகவை எப்படி பழனிசாமி எதிர்கொள்ளப்போகிறார் என்பதே அவரைத் தலைமையிடத்தில் தக்க வைக்கும்.
இதை யதார்த்த நோக்கில் அதிமுகவினர் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கின்றனர். “எப்போதுமே மத்திய கட்சி – மாநிலக் கட்சி என்று இரண்டு ஆளும் வண்டிகளுக்கு நடுவில் எதிர்க்கட்சியாக முந்தி ஓடி வரும் வண்டிதான் தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சிக்கு வர முடியும். முடிந்தால் பழனிசாமி காளைகளை அடித்து ஓட்டி, வண்டியை முந்தி ஓட்டி வரட்டும். இல்லாவிட்டால் அப்படி ஓட்டி வரக் கூடிய ஒருவர் இவரைத் தள்ளிவிட்டு சுக்கானைக் கையில் பிடிப்பார். இப்போதைக்கு வண்டி ஓடட்டும்” என்கிறார்கள்.
அரசியலில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது ஜெயலலிதாவின் ஆப்த வாக்கியம்.
சரிதான்!
- குமுதம், ஜூலை, 2022
தொடர்புடைய கட்டுரைகள்
தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன?
2
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
அ.பி 3 years ago
சசியின் விலகல், இருவரின் (duos) உச்ச பட்ச சுயநலம், இது அதிமுக வின் அந்திம காலத்தின் சிறு சிறு சலசலப்பு.... முடிந்தது.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.