கட்டுரை, வாழ்வியல், பொருளாதாரம் 5 நிமிட வாசிப்பு

வருவாயில் ஏற்றத்தாழ்வைக் குறைக்க வேண்டும்

சாம் பித்ரோடா
08 Sep 2024, 5:00 am
0

க்களிடையே நிலவும் வருவாய் ஏற்றத்தாழ்வைக் குறைப்பது உலகளாவிய சவால். சமத்துவமான சமூகம் அமைய வெவ்வேறு விதமான உத்திகளை அடையாளம் காண வேண்டும், சோதனை அடிப்படையில் அமல்செய்ய வேண்டும், தவறுகளைத் திருத்த வேண்டும். எனவே அது சிக்கலான, பல அடுக்குகளைக் கொண்ட, தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய சில துறைகளை அடையாளம் காண்போம்:

முதலாவது, முற்போக்கான வரிவிதிப்பு முறை. செல்வமும் வருமானமும் அதிகம் உள்ளவர்களிடமிருந்து பெற்று, விளிம்புநிலையில் உள்ள மக்கள் ஏற்றம்பெற செலவிடுவதுதான் முற்போக்கான வரிவிதிப்பு. பணக்காரர்களிடமிருந்து பறித்து ஏழைகளுக்குக் கொடுப்பதல்ல முற்போக்கு வரிவிதிப்பு. வரி வருவாயிலிருந்து பெறும் தொகையைக் கல்வி, சுகாதாரம், திறன் வளர்ப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்குச் செலவிட வேண்டும்.

இரண்டாவது, கல்வி - தொழில்திறன் கூட்டல். வேலைவாய்ப்பைப் பெறவும் தொடர்ந்து ஊதியத்தை அதிகப்படுத்திக்கொள்ளவும் நல்ல தரமான கல்வியும், தொழில்திறனை வளர்த்துக்கொள்வதும் அவசியம்.

மூன்றாவது, நியாயமான தொழிலாளர் சட்டங்கள். தொழிலாளர்களுடைய அரசமைப்புச் சட்ட உரிமைகளை அமல்படுத்துதல், குறைந்தபட்ச ஊதியம் வழங்கல், வேலையிடத்தில் உயிர் – உறுப்புகளுக்குச் சேதமின்றி வேலை செய்யும் பாதுகாப்பு ஏற்பாடுகள், வேலையிலிருந்து தகுந்த காரணமின்றி நீக்கப்படாமல் காத்தல், 18 வயதுக்குக் குறைவான சிறார்களை வேலையில் ஈடுபடுத்தாமல் தடுத்தல், தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு – அதிக நேரம் வேலை செய்யுமாறு கசக்கிப் பிழியும் சுரண்டலிலிருந்து காப்பாற்றுதல், தொழிலாளர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக ‘கூட்டுபேர உரிமை’யைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தல் ஆகியவை தொழிலாளர் சட்டங்கள் மூலம் உறுதிப்படுத்தினால்தான் பொருளாதார வளர்ச்சி சமூகத்துக்குப் பயன்தரும்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

நான்காவது, அடித்தளக் கட்டமைப்புகளில் அதிக முதலீடு. இது நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையில் நிலவும் வளர்ச்சி வேறுபாடுகளைக் குறைக்கும், அனைத்துப் பகுதிகளும் பிரிவினரும் வளர்ச்சியின் பயன்களைப் பெற உதவும், வளர்ச்சி தொடர்ச்சியாக இருக்க உதவும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தண்ணீர் வளம் பெருக்கல், தூய்மையான சுற்றுப்புறம், வனவளம், உற்பத்திக்கான மின்னாற்றல், பருவநிலை மாறுதல், வீடமைப்பு, போக்குவரத்து ஆகியவை தொடர்பான அடித்தளக் கட்டமைப்புகளில் அரசு அதிகம் முதலீடு செய்ய வேண்டும்.

ஐந்தாவது, பொருளாதார வளர்ச்சிக்கும் சமத்துவத்துக்கும் பெரும் பணக்காரர்களின் பங்களிப்பு. மக்களுடைய நலனுக்காக தங்களுடைய மொத்த சொத்தில் பாதிப் பங்கை நன்கொடையாக அளிக்கும் ‘கொடை வழங்கல்’ என்ற பெருந்திட்டத்தை உலக கோடீஸ்வரர்களான பில் கேட்ஸ், வாரன் பஃபெட் தொடங்கிவைத்தனர். அதை இந்தியாவிலும் மேற்கொள்ள ஊக்கம் அளித்தல்.

கடந்த ஆண்டு வரையில் (2023) 28 நாடுகளைச் சேர்ந்த 235 பெரும் பணக்காரர்கள் இப்படி ‘கொடை வழங்கல்’ மூலம் 60,000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு பொதுப் பயன்பாட்டுக்கு அளித்துள்ளனர். வளர்ந்த பல நாடுகளில், பெரும் பணக்காரர்களின் மறைவுக்குப் பிறகு அவர்களுடைய குடும்பத்தாருக்குச் சொத்துகளை உரிமை மாற்றம் செய்துதரும்போது, ‘வாரிசுரிமை வரி’ விதிப்பது வழக்கமாக இருக்கிறது. ஜப்பானில் 55%, தென் கொரியாவில் 50%, பிரான்ஸில் 45%, அமெரிக்காவில் 40% வாரிசுரிமை வரியாக விதிக்கப்படுகிறது.

இந்த வரிவிதிப்பு பெரும் பணக்காரர்களுக்கு மட்டுந்தான், பணம் படைத்த அனைவருக்குமானது அல்ல. இந்தியாவிலும் இப்படி வரிவிதிக்கப்பட வேண்டும் என்று பலர் கோரிவருகின்றனர். இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக முதலிடத்தில் இருக்கும் 1% பேரிடம், தேசிய வருமானம் – செல்வத்தில் பெரும்பகுதி குவிந்திருப்பதாக ’உலக அசமத்துவ ஆய்வக’ அறிக்கை கூறுகிறது. பிரிட்டிஷார் ஆண்டதைவிட இப்போதைய இந்தியாவில் வருமானம் – சொத்துகளில் அசமத்துவம் அதிகம் என்றும் அது தெரிவிக்கிறது. இது ஏற்கத்தக்கதுதானா?

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

வஞ்சிக்கப்பட்டதா நடுத்தர வர்க்கம்?

அஸ்வனி மகாஜன் 04 Aug 2024

சமத்துவம், உள்ளடக்கல்

மத்தியதர வர்க்கம், பணக்காரர்கள், பெரும் பணக்காரர்கள் ஆகியோர் மீது எத்தகைய வரிகளை விதிக்கலாம் என்பதை ஆராய்வதற்கல்ல இந்தக் கட்டுரை. கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து கைதூக்கிவிடவும் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நிதியை எங்கே, எப்படித் திரட்டலாம் என்று யோசனை கூறுவதே இதன் நோக்கம். அதைச் செய்வதற்கு முன்னால், உற்பத்தியின்போது மதிப்பு கூடுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

உற்பத்தியில் திறமையும் உற்பத்தித்திறனும் அதிகரிக்க வேண்டும். நல்ல தரத்தில் தயாரிக்கப்பட வேண்டும், நுகர்வும் அப்படியே, நல்ல தரமுள்ள பொருள்கள் - சேவைகளையே மக்கள் பெற வேண்டும். சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அனைத்திலும் அனைவரும் பங்கு பெற வேண்டும். வளர்ச்சியும் முன்னேற்றமும் தொடர வேண்டும். மக்கள் அனைவரும் கண்ணியமாக வாழ வேண்டும். எல்லா நிலைகளில் உள்ளவர்களுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும்.

பொருளாதார முன்னேற்றமும் தரமான வாழ்க்கையும் கிடைக்க நாம் செய்யும் செயல்களை ஆய்வுக்கு உட்படுத்துவதும், தவறுகளைத் திருத்திக்கொண்டு மேம்படுத்துவதும்தான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். குற்றங்களைக் கண்டுபிடிப்பதோ மக்களிடையே பீதிகளைக் கிளப்புவதோ நோக்கமாக இருக்கக் கூடாது. லட்சக்கணக்கானவர்களை வறுமையிலிருந்து அரசு மீட்டிருந்தாலும், அந்த எண்ணிக்கையும் வேகமும் போதாது.

பிற நாடுகளைப் பார்த்து நகல் எடுக்கும் நடவடிக்கைகளால் பயன் இருக்காது, துணிச்சலான – சுயமான முடிவுகளே பயன்தரும். ‘அளவு – வாய்ப்பு என்ற வரையறைக்குள்பட்ட பொருளாதார வளர்ச்சி’ என்ற கட்டத்திலிருந்து விடுபட்டு, ‘நோக்கமுள்ள பொருளாதாரம்’ என்ற நிலைக்கு நாடு செல்ல வேண்டும். கோடிக்கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்கவும் சமத்துவத்தை நிலைநாட்டவும் அனைவருக்கும் அனைத்தும் கிட்டவும்தான் பொருளாதாரக் கொள்கை தீட்டப்பட வேண்டும். அரசின் வருவாயைப் பெருக்கவும் செலவுகளை அதிகப்படுத்தவும் கூறும் யோசனைகளை இந்த அடிப்படையிலேயே நோக்க வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

பொருளாதார அவலங்கள் கவனம் பெறுமா?

தீபா சின்ஹா 21 Jul 2024

உலக அளவில் நிச்சயமற்ற அரசியல் – பொருளாதார சூழல் நிலவும் இந்தத் தருணத்தில் எந்தவிதமான உத்திகளை இந்தியா கைக்கொள்ள வேண்டும்? அப்படி எந்தவிதமான மந்திரக் கோலும் தயார் நிலையில் இல்லை, அப்படி எதையும் இந்தக் கட்டுரை பரிந்துரைக்கவும் இல்லை. உலக அளவிலான நாடுகளின் அனுபவங்களிலிருந்தும் இந்திய நிர்வாகத்தில் நாம் பெற்ற அனுபவங்கள், நாம் சந்தித்த சவால்கள், நாம் புதிதாகக் கண்டுபிடித்த வழிமுறைகள் அடிப்படையிலும்தான் பொருளாதார புத்துயிர்ப்புக்கு திட்டங்களைத் தீட்ட முடியும். அப்படி ஏற்படும் வளர்ச்சி அனைவருக்குமானதாகவும் நியாயமானதாகவும் அமைய வேண்டும்.

காந்திய வழியில்…

உலகமயமும் தாராளச் சந்தையுமே நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் மந்திரக் கோல்கள் என்று இன்னமும் சிலர் கூறுகின்றனர். இவையெல்லாம் வளர்ச்சிக்கான கருவிகள், இவை எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்று ஆராய வேண்டும், இதனால் ஏற்பட்டுள்ள தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் உலகச் சந்தைகளில் ஏற்பட்ட திடீர் ஏற்ற – இறக்கங்கள், கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட உலகளாவிய பாதிப்புகள், ஐரோப்பாவிலும் மேற்காசிய நாடுகளிலும் இப்போது நடக்கும் போர்கள் ஆகிய அனைத்துமே உலகளாவிய பொருளாதாரக் கொள்கை எப்படி, இவற்றால் அலைக்கழிக்கப்படுகிறது என்பதை நமக்கு உணர்த்திவிட்டன.

என்னைப் பொருத்தவரை காந்திய வழியிலான வளர்ச்சி திட்டமே ஆபத்தில்லாதது. அங்கே உற்பத்தி, விநியோகம், நுகர்வு அனைத்துமே பரவலாக்கப்படுகிறது, உள்ளூர் தேவைகளைப் பூர்த்திசெய்ய உள்ளூரில் கிடைக்கும் தொழில்நுட்பமும், உற்பத்திக் கருவிகளும், உள்ளூர் கைவினைஞர்களுமே போதும். ‘சிறியதே அழகு’ என்ற அளவில் ஆங்காங்கே நடைபெறும் உற்பத்தி எந்தவித வெளி நிகழ்வுகளாலும் பாதிக்கப்படாமல் தொடர்கின்றன. உள்ளூர் அளவில் வேலைவாய்ப்புப் பெருகுவதுடன் வளமும் சேர்கிறது.

உலக அளவிலான உற்பத்தியை அதிகரிக்க சிறிய, நடுத்தரத் தொழில் பிரிவுகளில் அதிக முதலீடு செய்யப்பட வேண்டும். உற்பத்தி தொடர்பான புதிய வழிமுறைகளும் கண்டுபிடிப்புகளும்கூட உள்ளூர் அளவிலேயே இருப்பது அவசியம். ஆனால், வங்கிகளோ பெருந்தொழில் நிறுவனங்களுக்குக் கடன் தருவதற்குத்தான் முன்னுரிமை தருகின்றன.

எண்மத் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், நிதி சேவைகளையும் விரிவுபடுத்துவது அவசியம். இந்தியாவில் மொத்தம் 800 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் கிடைக்கும் இயற்கை வளங்கள், வித்தியாசமான பருவநிலைகள், தொழில்திறன், உற்பத்தி முறை ஆகியவற்றின் மூலம் குறைந்தபட்சம் 800 உற்பத்திக் கேந்திரங்களை உருவாக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் 800 எண்ம உற்பத்தி - சேவை மேடைகள், மூலப்பொருள் அளிப்பு சங்கிலித்தொடர் அமைப்புகள், போக்குவரத்து வலையமைப்புகள், சந்தை, விநியோக மையங்கள் ஆகியவற்றை உருவாக்கிவிட முடியும்.

எதிர்காலம் எங்கே?

உணவு, கல்வி, மருத்துவம் – சுகாதார சேவைகள், சுற்றுலா, தொழில் உற்பத்தி ஆகிய துறைகளில்தான் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இந்திய இளைஞர்கள் உலகுக்கே பணியாற்றக்கூடிய தொழில் பட்டாளமாகத் திகழ்வார்கள். மனிதவள, தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது, எதிர்காலத்தில் எவ்வளவு தேவைப்படும் என்று ஆராய வேண்டும். எண்ம மேடைகளைப் பயன்படுத்தி உற்பத்தியை பரவலாக்க முன்னுரிமை தர வேண்டும். மக்களுடைய நுகர்வுப் பாணிகளையும் போக்கையும் கண்காணித்து அதற்கேற்ற உத்திகளை வகுக்க வேண்டும்.

புதிய தொழில்நுட்ப - பொருளாதார உற்பத்தி முறையானது சாத்வீகமான, இயற்கை வளங்களை காப்பாற்றக்கூடிய, அடிப்படையான மனிதத் தேவைகளைப் பூர்த்திசெய்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வைப்பதாக இருக்க வேண்டும். எதிர்கால வாழ்க்கை முறையானது மற்றவர்கள் நலனிலும் அக்கறை உள்ளதாக, பகிரக்கூடியதாக அமைவது முக்கியம். கிடைப்பதை அனைத்தும் தாங்கள் மட்டுமே நுகரும் பேராசை நுகர்வுக் கலாசாரம் மறைய வேண்டும்.

© தி ஹிந்து

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

வஞ்சிக்கப்பட்டதா நடுத்தர வர்க்கம்?
பொருளாதார அவலங்கள் கவனம் பெறுமா?
மோடியின் சாதனை: ஏழைகள் எங்கே இருக்கிறார்கள்?
நிதி ஒதுக்கீட்டில் கைவிடப்பட்ட ஏழைகள்
எருமைகள் மீது வாரிசுரிமை வரி!
பெரும் பணக்காரர்கள் மீது கூடுதல் வரியா?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

1






அனல் மின் நிலையம்ஒடுக்கப்பட்ட சமூகம்வட கிழக்கு மாநிலம்புதிய தாராளமயக் கொள்கைவாஷிங்டன்: காய்ச்சிய நீர் குடிக்க அறிவுரைமூலதனச் செலவுடாக்டர் விஜய் சகுஜாபகுத்தறிவுச் சிந்தனைஊழல் குற்றச்சாட்டுகள்ஐநா சபைபுலம்பெயர்ந்தோர் எதிர் உள்ளூர் சமூகம்இறுதியில் நீதியே வெல்லும்பிஹார் அரசுதனித் தெலங்கானாவக்ஃப்ஹீனா ஃபாத்திமா கட்டுரைகண்ணாடிபத்திரிகை சுதந்திரம்இந்தியாவின் குரல்கள்பாடப் புத்தகம்பட்டு உடைவிதிகளே இல்லாத போர்கள்!சரியா?இந்தியா கூட்டணிஆண் பெண் உறவுதென்காசிதேசிய அரசியல் கட்சிகாலை உணவு வழங்க நமக்குத் தேவை கண்ணியமான கற்பனைபழங்குடியினர்அருஞ்சொல் சமஸ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!