கட்டுரை, வரலாறு, புத்தகங்கள் 10 நிமிட வாசிப்பு

குஜராத்திகள் இன்றும் காந்தியைக் கைவிட்டுவிட்டார்களா?

ஆசை
02 Oct 2022, 5:00 am
1

திரைப்படக் கலையில் ‘ஃபவுண்டு ஃபுட்டேஜ்’ (Found footage) என்றொரு உத்தி இருக்கிறது. பெரும்பாலும் திகில் படங்களில் இந்த உத்தி பயன்படுத்தப்படுவது உண்டு. 

படத்தில், ஒருவரோ ஒரு குழுவோ எதேச்சையாக ஒரு வீடியோவைக் கண்டெடுப்பார்கள். அதைப் போட்டுப் பார்க்கும்போது அந்த வீடியோவை எடுத்தவர் ஒரு பயங்கரமான, மர்மமான இடத்துக்குச் சென்றுகொண்டிருப்பார். அப்போது எந்த வீடியோவை எடுத்து ஓட்டிக்கொண்டிருக்கிறார்களோ அதே வீடியோ அந்த வீடியோவுக்குள் காணக் கிடைக்கும். இதில் அந்த நிகழ்நேரத்தில் அவர் சொல்லும் விளக்கங்கள், வர்ணனைகள் இருக்கும். காட்சிப் பதிவும் ஒரு ஒளிப்பதிவு கருவியில் பார்ப்பதுபோல இருக்கும். அந்த வீடியோ முழுவதுமாகவோ அல்லது முற்றுப்பெறாத நிலையில் துண்டுதுண்டாகவோ இருக்கலாம். அதைக் கொண்டு அந்த வீடியோவை எடுத்தவருக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்கலாம் (ஓர் உதாரணம்: Cannibal Holocaust, 1980). 

சரி, ஒரு வரலாற்று ஆளுமையின் ஃபவுண்ட் ஃபுட்டேஜைக் கொண்டு அவருடைய கதையை உருவாக்கினால் எப்படி இருக்கும்? அதுதான் கோபால்கிருஷ்ண காந்தி தொகுத்த ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி: ரெஸ்ட்லெஸ் அஸ் மெர்குரி – மை லைஃப் அஸ் எ யங் மேன்’. மேற்குறிப்பிட்ட வகைமை படங்களுக்கு நேரெதிராக அன்பை, அகிம்சையை போதித்த வாழ்க்கை இந்த நூலின் நாயகருடையது  என்றாலும் அவருடைய காலப்பரப்பின் ரத்தக்களரி எந்த பயங்கரமான படங்களையும்விட பயங்கரமானது. அதில் அவருடைய படுகொலையும் அடங்கும். 

முடிவில் அவரது ஃபவுண்டு ஃபுட்டேஜை ஒட்டுமொத்த உலகமும் எடுத்துக்கொண்டு அவரவர் பாணியில் வெட்டி ஒட்டி அதற்கு ஒரு கதைச் சட்டகத்தை, தங்கள் சித்தாந்தப் பார்வைக்கு ஏற்றபடி உருவாக்கிக்கொள்கிறது. இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க காந்தி தன்னுடைய பார்வையில், தன்னுடைய சொற்களில் கதையைச் சொல்லும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதுதான் ‘சத்திய சோதனை’ இருக்கிறதே, பிறகு ஏன் இந்தப் புத்தகம் என்று பலருக்கும் கேள்வி எழலாம். இந்தப் புத்தகம் எடுத்துக்கொண்ட காலப்பகுதியான 1869 -1914 வரை இடம்பெற்றிருக்கும் நிகழ்வுகள், கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் பலவும் ‘சத்திய சோதனை’யிலேயே இடம்பெற்றவைதான். ஆனாலும், இந்தப் புத்தகத்துக்கும்  ‘சத்திய சோதனை’க்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு.

‘சத்திய சோதனை’ என்பது காந்தி தனது 52 ஆண்டுகளை (1869-1921) பற்றி தனது 57வது வயதில் சுயசரிதையாக எழுதியது. தன்னுடைய 52 ஆண்டுகளைப் பின்னோக்கிச் சென்று நினைவுகூர்ந்து அவர் எழுதிய நூல் இது. தனது பொது வாழ்க்கையின் ஆரம்பப் பகுதியில் அவருக்கு இருந்த மனநிலை, முதிர்ச்சி (அல்லது) முதிர்ச்சியின்மை போன்றவற்றிலிருந்து மிகவும் மாறுபட்ட ஒரு மனநிலை, நிறைய மாற்றங்கள், மேம்பட்ட முதிர்ச்சி, மூன்று கண்டங்களின் அனுபவம் போன்ற பின்புலத்தில் எழுதப்பட்டதுதான் ‘சத்திய சோதனை’.

இந்த நூல் அப்படியல்ல; பெரும்பாலும் அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளும் அதையொட்டி நடந்த முக்கியமான நாட்டு-உலக நிகழ்வுகளும் காந்தியால் நிகழ்நேரத்திலேயே பதிவுசெய்யப்பட்டவை. அதனால் அவரது இளம் பருவப் பரிசோதனைகளின் வெற்றிகளும் பிசகுகளும் (Trial and errors) சேர்ந்து இவற்றில் பதிவாகியிருக்கின்றன. 

காந்தியின் நிகழ்நேரப் பதிவுகள் (இந்தப் புத்தகத்தின் கால வரிசைப்படி) 1888 செப்டம்பர் மாதம், அவரை லண்டனுக்குக் கொண்டுசென்ற 'எஸ்.எஸ். க்ளைடு' கப்பலில் அவர் எழுதுவதிலிருந்து தொடங்குகின்றன. அடுத்த 60 ஆண்டுகள்  தன் பெருவாழ்க்கையின் அயராத பணிகள் இடையே சளைக்காமல் அவர் எழுதினார். ஆக, பெரும்பாலும் நிகழ்நேரப் பதிவுகளைக் கொண்டு காந்தியின் சுயசரிதையை  - அவருடைய பிறப்பிலிருந்து 1914-ல் அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்படும் வரையிலான காலப்பகுதி வரை – மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிதான் இந்த நூல்.

இந்தப் புத்தக உருவாக்கத்துக்கு ஒரு சுவாரசியமான பின்கதையை காந்தியின் பேரனும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநருமான கோபால்கிருஷ்ண காந்தி கூறுகிறார். “காந்திக்கு நீங்கள் ஏன் ஒரு புதிய சுயசரிதையை எழுதக்கூடாது?” என்று கர்னாடக சங்கீதக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா கோபால்கிருஷ்ண காந்தியிடம் ஒருநாள் கேட்டாராம். “புது வாழ்க்கை வரலாறு என்றா சொன்னீர்கள்?” என்று தெளிவுபடுத்திக்கொள்வதற்காக கோபால்கிருஷ்ண காந்தி டி.எம்.கிருஷ்ணாவிடம் கேட்டிருக்கிறார். “இல்லை இல்லை, நான் சொல்வது ஒரு புது சுயசரிதை, காந்தி தன் வாழ்க்கை பற்றி, தன் குடும்பத்தைப் பற்றி, பொதுவெளிக்கு வெளியில், மிகச் சுருக்கமாக இருக்கும் ‘சத்தியசோதனை’ நூலுக்கு வெளியில் எழுதியவற்றை, அவரது வார்த்தைகளைக் கொண்டே ஒரு சுயசரிதை” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். 

இதுபோன்ற யோசனைகள் யோசனை அளவில் நன்றாக இருந்தாலும் செயல்வடிவத்தில் கொண்டுசெல்லும்போது பெரும் சிக்கல் ஏற்படும். அந்தச் சிக்கல் கோபால்கிருஷ்ண காந்திக்கு ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில், ‘சத்திய சோதனை’க்கு வெளியில்தான் காந்தி ஏராளமாக எழுதியிருக்கிறார். ‘தொகுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் எழுத்துகள்’ (The Collected Works of Mahatma Gandhi) நூறு தொகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு தொகுதியும் கிட்டத்தட்ட 500 பக்கங்களைக் கொண்டவை. ஆக, மொத்தம் 50 ஆயிரம் பக்கங்களுக்கும் மேலே. இவற்றை இணையத்தில் குறிச்சொல் இட்டுத் தேடும் வசதியும் வந்துவிட்டது. ஹென்றி போலாக் என்ற பெயரை இட்டுத் தேடினால் நூறு தொகுதிகளிலும் அவர் பெயர் எங்கெல்லாம் இடம்பெற்றிருக்கிறதோ அந்த இடங்களையெல்லாம் தேடுபொறி உங்கள் முன் எடுத்துவைத்துவிடும். 

ஆக, காந்தியின் கதையை அவரது சொற்களிலிருந்து உருவாக்குவதற்கான விஷய பஞ்சம் இருந்திருக்காது. ஆனால், அவற்றைக் கோர்த்து எப்படிப்பட்ட ‘சுயசரிதை’யை உருவாக்குவது என்பதில்தான் இருக்கிறது சவால். அதில் கோபால்கிருஷ்ண காந்தி பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

காந்தியைப் பற்றிப் பிறர் எழுதிய நூல்களைப் படிக்காதவர்களுக்கும் ’காந்தி’ படத்தைப் பார்க்காதவர்களுக்கும்கூட இந்தப் புத்தகம் ஒரு தொடர்ச்சியான வரலாற்றைக் கொடுக்கிறது. ‘சத்திய சோதனை’யையும் காந்தியின் பிற்கால எழுத்துகளையும் படித்தவர்களும் இந்த நூலை மிகுந்த ஈடுபாட்டுடன் படிக்க முடியும். மால்கௌன்ஸ் ராகத்தை ஷெனாய் மேதை உஸ்தாத் பிஸ்மில்லாகான் தன் இளவயதிலும் நடுத்தர வயதிலும் கனிந்த வயதிலும் வாசித்ததை நாம் கேட்பதற்கு ஒப்பான அனுபவம் இது. கிரிக்கெட் விளையாடிக்கொண்டே சச்சின் ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தால் எப்படி இருக்கும் அப்படி ஒரு உணர்வை இந்த நூல் தருகிறது.

காந்தி ‘சத்திய சோதனை’யை ‘நவஜீவன்’ இதழில் எழுத ஆரம்பித்த பிறகு அவருடைய நண்பருக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. “உங்கள் கொள்கைகள் என்று நீங்கள் இன்று கொண்டிருப்பவற்றை நாளைக்கு நிராகரித்துவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்… அப்போதும், நீங்கள் பேசியவை அல்லது எழுதியவற்றை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருப்பவர்களுக்குத் தவறான வழியைக் காட்டிவிட்டதாக ஆகிவிடாது” என்று காந்தியிடம் கேட்டிருக்கிறார். இந்தக் கேள்விக்கு காந்தி அளித்திருக்கும் பதிலைவிட அவர் தன்னுடைய சுயசரிதைக்கு வைத்த தலைப்புதான் (My Experiments With Truth-சத்தியசோதனை) சிறப்பான பதில்.

ஒரு சோதனை தொடங்கும்போது ஒரு இலக்கை, வெற்றியை மனதில் கொண்டு தொடங்கப்படும். சோதனையின் முடிவில் எதிர்பார்த்தது நடந்திருக்கலாம், நடக்காமல் போயிருக்கலாம். தொடங்கிய இடம் ஒன்றாகவும் முடிந்த இடம் வேறாகவும் இருக்கலாம். ஆனால், தொடக்கத்திலிருந்து முடிவு வரை தேவையற்ற பகுதி என்று எதுவும் இல்லை. ஒரு பரிணாம வளர்ச்சியின், தொடர்ச்சியான மாற்றத்தின் அங்கங்கள்தான் ஒவ்வொன்றும். இதன் அடிப்படையில் ‘சத்திய சோதனை’யைப் போலவே இந்த நூலைப் படிக்கும்போது ஒவ்வொரு விஷயத்திலும் காந்தி பிற்காலத்தில் எவ்வளவு வேறுபடுகிறார், அல்லது அதே நிலைப்பாட்டில் மேலும் எவ்வளவு தீவிரமாகச் செல்கிறார் என்ற ஒப்பீடு நம் மனதில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

மாக்சிம் கார்க்கியைப் பற்றி, ஜார் ஆட்சியைப் பற்றி, எப்படி டால்ஸ்டாய்க்கு ஜார் மன்னரும் அவருடைய விசுவாசிகளும் அஞ்சினார்கள் என்பது பற்றியெல்லாமும்கூட காந்தி எழுதியிருப்பவை இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. காந்தியின் வாழ்க்கையில் தமிழர்களுக்குத் தனி இடம் உண்டு.

தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன் குஜராத்திகள் மத்தியில் ஆற்றிய உரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “எனது குஜராத்தி சகோதரர்கள் எனக்கும் திருமதி காந்திக்கும் மிகவும் உதவிகரமாக இருந்தார்கள். ஆனால், நமது போராட்டத்தில் தமிழ்ச் சமூகம் நமக்குக் கைகொடுத்த அளவுக்கு குஜராத்திகள் கைகொடுக்கவில்லை. தமிழர்களிடமிருந்து குஜராத்திகள் பாடம் கற்க வேண்டும். எனக்கு அவர்களின் மொழி தெரியாது என்றாலும் இந்தப் போராட்டத்தில் அவர்கள்தான் எனக்குப் பேருதவி புரிந்தார்கள். இதற்கு மாறாக, எனக்கு குஜராத்தி தெரிந்திருப்பதால் குஜராத்திகளுக்கு என்னுடைய நோக்கத்தைச் சிறப்பாக விளக்கிக் கூற முடியும் என்றாலும் அவர்கள் தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டார்கள். அவர்கள் இன்னும் நிறைய இன்னும் நிறைய என்று பணம் சம்பாதிப்பதில்தான் ஈடுபாடு காட்டினார்கள்.” காந்தி பிறந்த மாநிலத்தினர் அன்று மட்டுமல்ல, இன்றும்கூட தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது!

ஒரு இலக்கிய வாசகனாக ஆரம்ப காலத்தில் காந்தியின் எழுத்துகள் நயமற்றவை, வாசிப்பு அனுபவம் தராதவை என்றே கருதியிருந்தேன். ஆனால், போகப்போக அவரது எழுத்தின் அலங்காரமற்ற தன்மையும் வெளிப்படைத்தன்மையும் சத்தியத்தின் பளிச்சிடலும் அவரது எழுத்துகளை வாசிப்பதைத் தனிச்சிறப்பான இலக்கிய அனுபவமாக ஆக்க ஆரம்பித்தன. நினைவில் கொள்ளுங்கள், உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் பலரையும் விட அதிகம் மேற்கோள் காட்டப்படுபவை, அதிகம் செல்வாக்கு செலுத்திவருபவை காந்தியின் வாசகங்கள். அந்த அடிப்படையில் இந்த நூலை வாசிப்பதும் காந்திய இலக்கிய இன்பத்தின் கூடுதல் கொடை. அதற்கு கோபால்கிருஷ்ண காந்திக்கு நன்றி! 

இது வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்டவற்றை ஒரே சரட்டில் இணைக்கும் முயற்சி என்பதால் வரலாற்றில் ஏற்படும் இடைவெளிகளை அடிக்குறிப்புகள் சரிசெய்கின்றன. சில இடங்களில் காந்தி வரலாறு வேறொரு பின்னணியில் இணைந்துகொள்வதற்கு அடிக்குறிப்புகள் உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, மின்விளக்கை 1888இல் கப்பலில் செல்லும்போதுதான் தான் முதலில் பார்த்ததாக  காந்தி எழுதுகிறார். அதற்கான அடிக்குறிப்பில் இந்தியாவில் முதன்முதலில் கல்கத்தாவில் 1879இல்தான் பொதுமக்கள் பார்வைக்கு மின்விளக்கு வைக்கப்பட்டது என்று தொடங்கி அது தொடர்பான தகவல்களை கோபால்கிருஷ்ண காந்தி அடிக்குறிப்பாகக் கூறுவது ஒரு காலகட்டத்தின் வீச்சை நமக்கு உணர்த்திவிடுகிறது.

ஒட்டுமொத்தப் புத்தகத்தையும் படித்து முடித்த பிறகு பெரும் மகிழ்வையும் நிறைவின்மையையும் ஒரே நேரத்தில் உணர முடிந்தது. இன்னும் அவரது முழு வாழ்க்கைக்கும் இந்தப் புத்தகத்தை நீட்டித்திருக்கக் கூடாதா என்ற எண்ணத்தின் விளைவுதான்!

 

நூல்: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி: ரெஸ்ட்லெஸ் அஸ் மெர்குரி – மை லைஃப் அஸ் எ யங் மேன்
ஆசிரியர்: கோபால்கிருஷ்ண காந்தி
விலை: 999
பக்கம்: 400
பதிப்பகம்: அலெஃப் புக் கம்பெனி
தொடர்புக்கு: 7/16, அன்சாரி சாலை, தார்யாகன்ஜ், புது டெல்லி - 110 002.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


3

4





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

எழுத்துச் சுதந்திரம்கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்இந்திய ஆட்சிப்பணிகண்ணந்தானம்மாநிலங்களின் ஒன்றியம்ந.முத்துசாமிவிமர்சனம் அத்வானிபசுமை விருதுதொல்மனிதர்கள்கண்காட்சிநமக்கும் அப்பால் உள்ள உலகம்நம் காலம்மனித சமூகம்மனுஸ்மிருதி எதிர்ப்பு: வரலாறும் இன்றைய தேவையும்இரும்பு1984 நாவல்சமூகக் கண்காணிப்பு இதழியல்சமஸ் ராகுல் காங்கிரஸ்அப்பட்டமான முரண்பாடுதிருவாவடுதுறை ஆதீனம்தேவதைமிசோரம்பிரிட்டிஷ்இந்திய வரலாற்றை இனி தென்னிந்தியாவில் தொடங்கி எழுத தொழுகை அறை சர்ச்சைடாக்டர் தேரணிராஜன்நேட்டோஇந்தி ஊடகங்களின் பிராமண நினைவேக்கம்கீழத் தஞ்சையும் கொஞ்சம் வாழட்டுமே!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!