கட்டுரை, அரசியல், ஆளுமைகள் 7 நிமிட வாசிப்பு

கான்ஷிராம்: அரசியல் ஸ்திரத்தன்மை என்னும் ஆபத்தை உணர்த்தியவர்

ரவிக்குமார்
09 Oct 2022, 5:00 am
0

“அரசியல் அதிகாரம் தலித் மக்கள் கைகளில் வர வேண்டும். அதற்கு நாம் ஒற்றுமையாக இருந்து ஓர் அரசியல் மதிப்பைப் பெற வேண்டும். அரசியல் அதிகாரத்தை நாம் கையிலெடுக்காமல் சாதி இழிவை ஒழிக்க முடியாது” என்றார் அம்பேத்கர். தலித் மக்களுக்கு அதிகாரம் தானே வந்துவிடாது. “அதிகாரமும் கௌரவமும் போராட்டத்தின் மூலமாகத்தான் கிடைக்கும்” என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்திய அளவிலான பட்டியல் இன மக்களின் அரசியல் வரலாற்றில் 1930களுக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. 

வேறு எப்போதைக் காட்டிலும் அவர்களது பிரச்சினை முதன்மை பெற்றிருந்த நேரமது. வட்டமேசை மாநாடுகளில் அம்பேத்கர் ஆற்றிய உரைகள்; தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட தனி வாக்காளர் தொகுதி உரிமை, காந்தியின் உண்ணாவிரதத்தால் எழுந்த அரசியல் பதற்றம், அதன் பிறகு ஏற்பட்ட பூனா ஒப்பந்தம் எனத் தொடர்ந்து தலித் அரசியல் ஒரு கொதிநிலையில் இருந்த காலம். அந்தக் காலகட்டத்தில்தான் இந்தியாவிலேயே தலித் மக்கள் அதிகம் வாழும் பஞ்சாப் மாநிலத்தில், மதம் மாறினாலும் தாழ்த் தப்பட்டவர்களாகவே கருதப்படும் ரவி தாஸியா சீக்கியக் குடும்பத்தில் 1934 மார்ச் 15ஆம் நாள் கான்ஷிராம் பிறந்தார். 

நான்கு பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகளுக்கு மத்தியில் கான்ஷிராமுக்கு மட்டும்தான் பட்டப்படிப்பு வரை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னாளில் அவரால் கடுமை யாக விமர்சிக்கப்பட்ட ‘இட ஒதுக்கீடு’ அவருக்கு அரசாங்க வேலையைப் பெற்றுத் தந்தது. நில அளவைத் துறையில் சேர்ந்து பின்னர் பூனாவில் உள்ள வெடிமருந்துத் தொழிற்சாலைக்கு மாற்றலானார். அந்த இடமாற்றம்தான் பின்னர் அவருக்கு மனமாற்றம் ஏற்படக் காரணமாயிற்று.

 ¶

சுதந்திரத் தொழிலாளர் கட்சி (ILP) ஷெட்யூல்டு வகுப்புகளின் கூட்டமைப்பு (SCF), இந்திய குடியரசுக் கட்சி (RPI) என அம்பேத்கரின் அரசியல் இயக்கங்கள் தழைத்துச் செழித்த மகாராஷ்டிரா மண் அதுவரை அரசியல் வாசனையே அறியாதிருந்த கான்ஷிராமுக்கு ‘ஞானோதய’த்தைத் தந்தது. 1965ஆம் ஆண்டு அம்பேத்கரின் பிறந்த நாளுக்கு விடுமுறை அறிவிக்க மகாராஷ்டிர அரசு மறுத்தபோது எழுந்த போராட்ட அலை கான்ஷிராமையும் இழுத்துச் சென்றது. அம்பேத்கரைப் பற்றி அவருக்கு அறிமுகப்படுத்திய டி.கே.கபார்டே என்பவர் கான்ஷிராமிடம் அம்பேத்கரின் ‘சாதி ஒழிப்பு’ நூலைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.

ஒரே இரவில் அதை மூன்று முறை வாசித்தாராம் கான்ஷிராம். “பணமும் பொருளும் மட்டுமே அதிகாரத்தின் ஆதாரம் ஆகிவிடாது. மதமும் சமூக அந்தஸ்தும்கூடப் பல சமயங்களில் அதிகாரத்தை உற்பத்தி செய்யும்” என்று அம்பேத்கர் கூறியதையும் “இந்தியாவுக்குப் பொருளாதாரப் புரட்சியைவிட சமூகப் புரட்சியே உடனடித் தேவை” என்று அவர் வலியுறுத்தியதையும் படித்த பின்பு கான்ஷிராமுக்கு எப்படித் தூக்கம் வரும்?

தனது உரிமைக்காக மட்டுமின்றித் தனது மக்களின் உரிமைகளுக்காகவும் போராட வேண்டும் என்ற எண்ணம் கான்ஷிராமுக்குள் அம்பேத்கரின் எழுத்துகளால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். தனது சக ஊழியர் ஒருவருக்குச் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டபோது கான்ஷிராம் அதைக் கண்டித்துக் குரல் கொடுத்தார். மக்கள் ஊழியத்தில் மனதைச் செலுத்திய பிறகு மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலைபார்ப்பது பிடிக்காமல் போனது.

1971இல் வேலையைத் துறந்தார். அதே வருடத்தில் தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கெனச் சங்கமொன்றை உருவாக்கினார். 1973இல் அது, ‘பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பு (BAMCEF) என்ற அமைப்பாக உருவெடுக்க வழிவகுத்தது. பஞ்சாபில் பிறந்து மகாராஷ்டிராவில் அரசியல் பணியைத் துவக்கிய கான்ஷிராம் ஹரியானா, உத்தர பிரதேசம் எனத் தனது செயல்பாட்டுத் தளத்தை விரிவுபடுத்தினார்.

படிப்பறிவில்லாத கிராமத்து மக்களை நோக்கிச் செல்ல வேண்டியதன் தேவையை உணர்ந்த அவர், அதற்கென வடிவமைத்த ‘அம்பேத்கர் மேளா’ என்ற ஊர்திப் பயணமும் அந்தப் பயணத்தின்போது வன்கொடுமைகளுக்கு எதிராக அவர் ஆற்றிய உரைகளும் எதிர்பார்த்ததைவிடப் பெரும் தாக்கத்தை உண்டாக்கின.

அரசாங்க ஊழியர்களது பிரச்சினைகளையும் இட ஒதுக்கீட்டு அரசியலையும்விட முதன்மையானது கிராமங்களில் வாழும் மக்களுடைய பிரச்சினைதான் என்பதை உணர்ந்த கான்ஷிராம், ‘தலித் சோஹித் சமாஜ் சங்கர்ஷ் சமிதி’ என்ற அமைப்பைத் துவக்கினார். ‘டிஎஸ்4’ (DS4) எனப் பிரபலமாக அறியப்பட்ட அந்த அமைப்பே 1984இல் ‘பகுஜன் சமாஜ் கட்சி’யைத் துவக்குவதற்கு அடித்தளமாக அமைந்தது. அம்பேத்கரைப் போல் சிறந்த பேச்சாளராகவோ சிந்தனையாளராகவோ இல்லாமல் தலித் மக்களை அவரால் திரட்ட முடிந்ததை ஒரு சாதனையென்றே கூறலாம்.

அவரது கரடுமுரடான சுபாவமும் கச்சாவான மொழியும் அவர் ‘தங்களில் ஒருவர்’ என தலித் மக்கள் எண்ணக் காரணமாயின. “பிராமின், பனியா, தாக்கூர் சோர்; பாக்கி சாப்ஹே டி.எஸ். ஃபோர்” என்பது பகுஜன் சமாஜ் கட்சியின் புகழ் பெற்ற முழக்கங்களில் ஒன்று. பெரிய அரசியல் உள்ளடக்கம் எதுவுமற்ற ஒரு வசை எப்படியொரு அரசியல் முழக்கமாக மாற முடியும் என்று நமக்கு வியப்பு ஏற்படலாம். ஆனால், ஆதிக்கம் செய்பவர்களுக்கு எதிராக வெளிப்படும் வசைக்குப் பின்னால் இருப்பதும் அரசியல் உணர்வுதான் என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு செல்வாக்குடன் திகழ்ந்துவந்த இந்தியக் குடியரசுக் கட்சி 1960களின் இறுதியில் சரியத் தொடங்கியது. அதனால் ஏற்பட்ட வெற்றிடம் கான்ஷிராமின் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஓர் அவசியத்தை ஏற்படுத்தியது. பகுஜன் சமாஜ் கட்சி துவக்கப்படுவதற்கான நியாயத்தை இந்தப் பின்னணியில் நாம் புரிந்துகொள்ளலாம். அம்பேத்கரின் தொடர்ச்சியாகப் பல்வேறு கூறுகளைக் கான்ஷிராமிடம் நாம் பார்க்கலாம்.

எனினும் அம்பேத்கரிடமிருந்து வேறுபட்ட அம்சங்களும் அவரிடம் உண்டு. தலித் மக்களின் தனித்துவத்தை நிறுவுவதே அம்பேத்கரது அரசியல் செயல்பாடுகளின் மையம். கான்ஷிராமோ சமூகக் கூட்டணிகளை உருவாக்குவதையே முதன்மையான பணியாகக் கொண்டார். “எந்தவொரு அரசியல் புரட்சிக்கும் முன்னதாக ஒரு சமூகப் புரட்சி நிகழ்ந்தது. சிவாஜியின் அரசியல் புரட்சிக்கு முன்பு மகாராஷ்டிராவில் பல சமூக, சமய சீர்திருத்தங்களைத் துறவிகள் செய்திருந்தனர். சீக்கியர்களின் அரசியல் புரட்சிக்கு முன் குருநானக்கின் சமய, சமூகப் புரட்சி நடந்திருந்தது” என அம்பேத்கர் சுட்டிக்காட்டுவார்.

அதன்படி பார்த்தால் கான்ஷிராமின் அரசியல் புரட்சிக்கு முன்னதாக அம்பேத்கரின் சமூகப் புரட்சி நடந்திருந்ததை நாம் அவதானிக்கலாம். அம்பேத்கரின் அரசியல் இயக்கங்களிலிருந்து கான்ஷிராம் தனது கூட்டணிக்கான சூத்திரத்தைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. அது, பெரிதும் ஜோதிராவ் புலேயால் 1875இல் உருவாக்கப்பட்ட ‘சத்யஷோதக் சமாஜ்’ அமைப்பின் சாயலையே கொண்டிருந்தது. பிராமணர்களுக்கு எதிராக பிராமணரல்லாதார் மற்றும் தலித் மக்களின் கூட்டணியையே புலே வலியுறுத்தினார்.

 ¶

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புப் போராட்டங்கள் அரசியல் தளத்தில் பிராமண எதிர்ப்புக்குப் புத்துயிரூட்டின. பிராமணர்களைப் புறத்தில் வைத்துப் பிற்படுத்தப்பட்டோர் - பட்டியலினத்தோர் ஒற்றுமையைக் கட்டுகிற முயற்சி மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் கான்ஷிராமின் பகுஜன் அரசியல் புதிய வேகம் பெற்றது. 1989க்குப் பிறகு இந்திய அரசியலில் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மையும் அதனால் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் ஏற்பட்ட அணிசேர்க்கைகளின் மாற்றமும் கான்ஷிராமுக்குக் கை கொடுத்தன. பலவீனமான அரசே சிறுபான்மை மக்களுக்கு நல்லது என்ற முடிவுக்கு அனுபவரீதியாக கான்ஷிராம் வந்து சேர்ந்தார். 

அரசியல் ஸ்திரத்தன்மையும் வலிமையான அரசும்தான் தலித் மக்களைப் பாதுகாக்கும் என்ற எண்ணம் அம்பேத்கரின் எழுத்துகள் சிலவற்றில் இழையோடக் காணலாம். அந்தக் கருத்துக்கு மாறாக “ஸ்திரமற்ற அரசியலும் பலவீனமான மைய அரசும்தான் தலித் மக்களுக்கு வசதியானவை என்ற கான்ஷிராமின் முடிவு அரசியல்ரீதியாக ஆழ்ந்து பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாஜக கூட்டணி அரசுக்கும், 300 இடங்களுக்குமேல் மக்களவையில் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் மோடி அரசுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பார்த்தால் இதை நாம் புரிந்துகொள்ளலாம். இந்தியாவில் கூட்டாட்சி என்பது மெய்ப்பட வேண்டுமெனில் அதற்குக் கூட்டணி ஆட்சி அமையவேண்டியது முன் நிபந்தனையாகும். அதுதான் கான்ஷிராம் அவர்களுடைய அரசியல் உணர்த்தும் செய்தி.

(அக்டோபர் 9: கான்ஷிராம் நினைவு நாள்)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ரவிக்குமார்

ரவிக்குமார், எழுத்தாளர், கவிஞர், அரசியலர். விசிக பொதுச்செயலர். மக்களவை உறுப்பினர். தொடர்புக்கு: manarkeni@gmail.com


1

3

2




நடப்பு நிகழ்வுகள்கடுமையான வார்த்தைகள்செபிபேட்ஸ்மன்உடல்மொழிஉத்தர்இரண்டாம் நிலைத் தலைவலிஎரிகிறது மணிப்பூர்; வேடிக்கை பார்க்கிறது அரசுகலித்தொகைபணச் சுழலேற்றம்அலர்ஜிதேர்தல் களத்துக்கு எதிரணி தயார்அருமண் தனிமம்ஜார்ஜியா மெலோனிஎதிர்மறைச் சித்திரங்கள்உலக நாடுகளைப் பின்பற்றலாம்!திருவையாறுஎதிர்காலத்தை எப்படி உருவாக்குகிறோம் ?பெண்கள் கவனம்!ரத்தசோகைஇந்தியன் ஏர்-லைன்ஸ்தமிழக வரலாறுபூச்சிக்கொல்லிபெங்களூருஉணவு தானியம்பல்பீர் சிங் ராஜேவால்370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்புகர்சான் வைலிமூதாதைமைஉறக்கமின்மை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!