தலையங்கம், அரசியல், சட்டம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

பொருளாதார இடஒதுக்கீடு சரி.. இது சாதி ஒதுக்கீடு

ஆசிரியர்
10 Nov 2022, 5:00 am
4

ந்தியாவில் எந்தவொரு தனிநபரையும் அமைப்பையும் செயல்பாட்டையும் அடையாளம் காண சாதி சம்பந்தமான விஷயங்கள் ஒரு நல்ல உரைகல் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு எனும் பெயரில் முற்பட்ட சாதிகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் பாஜக அரசு கொண்டுவந்த சட்டத்தை இந்திய உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருப்பதானது மிக மோசமான ஒரு தீர்ப்பு. சாதிய ஆதிக்கத்தின் பயங்கரத்தை எதிர்கொள்ளும் தீர்வுகளில் ஒன்றாக சுதந்திர இந்தியா வரித்துக்கொண்ட சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீடு தந்த முன்னகர்வுக்கு ஒரு எதிர்க் கலக  நடவடிக்கையாகவே இந்தச் சட்டத்தைப் பார்க்க வேண்டி இருக்கிறது. 

எந்த ஒரு ஜனநாயக சமூகமும் தனக்குள் நிலவும் ஏற்றத்தாழ்வை எதிர்கொள்ள தார்மீக அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். இந்தியாவும் அப்படி பல நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. சாதியம் ஒரு நிரந்தர நோயாக இந்நாட்டை ஆட்கொண்டிருக்கிறது. ஒரு நாட்டின் போக்கைத் தீர்மானிப்பதில் கல்வியும் நிர்வாகப் பதவிகளும் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. இங்கே எல்லாத் தளங்களையும்போல இதிலும் முற்பட்ட சாதிகளே மேலோங்கி நிற்கின்றன. சமூகத்தில் பின்தள்ளப்பட்ட சாதியினருக்கும் குறைந்தபட்ச பிரதிநிதித்துவம் அளிப்பதன் வாயிலாகவே இந்த நிலையை மாற்ற முற்பட முடியும் என்றே தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு  கொண்டுவரப்பட்டது. அடுத்து, பொருளாதார அடிப்படையிலும் பின்தங்கியவர்களுக்கு ஒரு சலுகை இந்த அமைப்பில் இருக்க வேண்டும் என்ற குரல் நியாயமானது.

வரலாறு என்பது பல ஆயிரம் ஆண்டுகளின் அனுபவத் தொகுப்பு மட்டும் இல்லை; சுதந்திரத்துக்குப் பிந்தைய 75 ஆண்டு கால அனுபவங்களும் வரலாறாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். சமூகத்தின் ஒரு பிரிவினர் சமகாலத்தில் தங்கள் ஏழ்மையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கோரினால், கடந்த கால வரலாற்றைப் பேசி ஒரு ஜனநாயக அரசு அதைப் புறக்கணிக்க முடியாது. சமத்துவத்தைப் பேசும் ஒரு சமூகம் அப்படி நிராகரிப்பது தார்மிகமும் இல்லை. 

இந்தியாவில் உள்ள அரசாங்கங்கள் கல்வி, வேலைவாய்ப்பில் சமுகரீதியிலான இடஒதுக்கீட்டை மட்டும் அனுசரிக்கவில்லை. விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு வரை அனுசரிக்கின்றன. அப்படி பொருளாதாரரீதியாகப் பின்தங்குவோருக்குமான இடஒதுக்கீடு ஒன்றை அரசு  உருவாக்குவதில் எந்தப் பிழையும் இருக்க முடியாது.

இது சமகாலத்தில் நிலைகொள்ளும் ஒரு சலுகை. இன்று இந்த ஒதுக்கீட்டின் கீழ் வரும் ஒருவரின் குடும்பம் நாளை முன்னேறிவிடும் சூழலில், இந்த  ஒதுக்கீட்டுக்குள் அவர்கள் வர மாட்டார்கள். முற்றிலும் தனிநபர் அடிப்படையிலானது இது. மாறாக, சமூகரீதியிலான இடஒதுக்கீடானது, காலங்காலமாக இந்த அமைப்பு கொண்டிருக்கும் கொடுநோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை. அது சலுகை இல்லை; முற்றிலும் சமூக அடிப்படையிலானது.

பாஜக அரசு இன்று 'பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு' என்ற பெயரில் உருவாக்கியிருக்கும் முறைமையில் உள்ள முக்கியமான பிரச்சினை என்னவென்றால், மேற்கண்ட இரண்டு விஷயங்களுக்கும் இடையிலான மாபெரும் வேறுபாட்டை அது ஒழித்துக்கட்டியிருப்பது ஆகும்.

உண்மையாகவே பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு என்று நிர்ணயிக்கப்படும் இடஒதுக்கீடானது திட்டவட்டமாக பாதிப்பைத்தான் அடிப்படையாகக்கொள்ள முடியுமே தவிர, சமூக அடிப்படையை ஒருபோதும் கொள்ள முடியாது. எப்படி மாற்றுத்திறனாளிக்கான சலுகையைக் கேட்டு விண்ணப்பிக்கும் ஒரு பழங்குடியிடம், "உனக்குத்தான் ஏற்கெனவே சமூக அடிப்படையிலான ஒதுக்கீடு இருக்கிறதே, அதனால் நீ இந்த ஒதுக்கீட்டுக்குள் வர முடியாது!" என்று சொல்ல முடியாதோ, அப்படியே பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீட்டிலும் சொல்ல முடியாது.

அப்படியிருக்க, 'பொருளாதாரரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு' என்ற பெயரில், நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வோரில் பெரும்பான்மையினரான தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோரை விலக்கி வைத்து, முற்பட்ட சாதியினர் மட்டுமே இந்த ஒதுக்கீட்டில் இடம் பெற முடியும் என்று உருவாக்கப்பட்டிருக்கும் ஏற்பாட்டை முற்றிலும் முற்பட்ட சாதிகளுக்கான ஒதுக்கீடு என்பதாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. அதிலும், மாதம் ரூ.10,000 சம்பாதிக்கவே வழியில்லாதவர்கள் கோடிக்கணக்கில் வாழும் இந்நாட்டில் இந்த ஒதுக்கீட்டுக்கான தகுதி எல்லையாக ஆண்டு  வருமானம் ரூ.8 லட்சம் என்ற நிர்ணயம், நாட்டு மக்களை ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு முட்டாளாகப் பார்க்கலாம் என்பதற்கான உச்ச உதாரணம் ஆகிறது.

நாம் 'முற்பட்ட சாதியினருக்கு மட்டுமேயானது, ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரையிலானவர்களுக்கானது' எனும் இரு புள்ளிகளை மட்டும் இணைத்து சிந்திப்போம். எத்தகைய பயனாளிகளை இந்த ஒதுக்கீட்டு முறை  உருவாக்கும்? சாதிரீதியாக முற்பட்டவர்களிலும்கூட பொருளாதாரரீதியாக முற்பட்டவர்களே இதனால் அதிகம் பயன் அடைவர். அப்படியென்றால், ஏற்கெனவே உள்ள  கட்டுமானத்துக்கு மேலும் வலு சேர்க்கும் இந்த நடவடிக்கையானது இந்தச் சமூகத்தில் ஏற்கெனவே உள்ள பிளவுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் மேலும் கூர்மைப்படுத்தவே செய்யும். குறைந்தபட்சம் இந்த விஷயத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட ஒரு நூற்றாண்டு நகர்வுகளை இது பின்னோக்கித் தள்ளும். 

இந்த இடஒதுக்கீட்டின் ஆக மோசமான இன்னோர் அம்சம் என்னவென்றால், நம்முடைய மரபார்ந்த சமூகமானது ஐந்து வர்ணங்களை உருவாக்கிப் பராமரித்ததுபோல, நவீன இந்திய சமூகத்தில் இன்றைய  மூன்று வர்ண உருவாக்கத்தை அரசே  நிலைப்படுத்துகிறது என்பது ஆகும். ஏற்கெனவே இடஒதுக்கீடு அடிப்படையில், 'தலித்துகள் - பழங்குடிகள்', 'பிற்படுத்தப்பட்டோர்', 'பொதுப் பிரிவினர்' என்ற மூன்று அடுக்குகளில் 'பொதுப் பிரிவினர்' என்பது நடைமுறையில் பெரும் பகுதி முற்பட்ட சாதியினரின் ஆதிக்கத்தில் இருந்தாலும்,  சட்டரீதியாக அது 'எல்லோரும் பங்கேற்கும் பொதுக் களம்'  என்பதாகவே இருந்தது; எந்த ஒரு சமூகமும் அதில் பங்கேற்கும் நிலை இருந்தது. இப்போது அந்த இடத்தில் தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்களை இந்த ஒதுக்கீடு விலக்குவதால், 'பொதுப் பிரிவு' என்பது இந்த இடத்தில்  சட்டரீதியாகவே முற்பட்ட சாதியினர் என்பதாக மாறுகிறது. இந்த வரையறை அதிகாரபூர்வமாகவே இந்தியச் சமூகத்தை மூன்று அரசியல் வர்ணங்களாக ஸ்தூலப்படுத்தும். இனி எந்த ஒரு விஷயத்திலும் ஜனநாயகரீதியில் அமைப்பாக மக்கள் திரள்வதை இது தடுக்கும்.

இவ்வளவு அநீதியான ஓர் ஏற்பாட்டை பாஜகவைக் கடுமையாக எதிர்க்கும் கட்சிகள் உள்பட நாட்டின் ஆகப் பெரும்பாலான கட்சிகள் வெளிப்படையாக ஆதரித்ததும், பெரும்பான்மை ஊடகங்கள் கருத்துருவாக்கத் தளத்தில் இதற்கு உகந்தபடி மக்கள் மனநிலையைத் தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டதும் வெட்கக்கேடு இன்றி வேறு என்ன? இன்றும் இந்தியாவின் ஒவ்வோர் அமைப்பிலும் யார் கைகளில் உச்ச அதிகாரம் இருக்கிறது என்பதை ஒவ்வொரு சாமானியரும் உணர்வதற்கான தருணம் இது.

அரசமைப்புரீதியாக இப்படி ஓர் ஏற்பாடு செல்லுமா என்ற கேள்வியை வழக்காக எதிர்கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் அளித்திருக்கும் பெரும்பான்மைத் தீர்ப்பு அதன் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளில் ஒன்றாகவே அமையும். தனது முந்தைய நிலைப்பாடுகளிலிருந்து பல வகைகளிலும் இந்த வழக்கின் தீர்ப்பில்  முரண்பட்டிருப்பதன் மூலம் பல எதிர்காலச் சிக்கல்களுக்கு அது வழிவகுத்திருக்கிறது. ஐவரில் ஒருவரான நீதிபதி ரவீந்திர பட் தன்னுடைய மாறுபட்ட தீர்ப்பில் இந்த விஷயத்தைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார். "சினோ ஆணையம் 2010இல் தாக்கல் செய்த அறிக்கையின்படி, வறுமைக்கோட்டுக்குக் கீழ் நாட்டில் உள்ள 31.7 கோடிப் பேரை எடுத்துக்கொண்டால், அவர்களில் 5.5 கோடி பேர் மட்டுமே பொதுப் பிரிவினராக உள்ளனர். வேறொரு வகையில் சொன்னால், அந்தச் சமூகப் பின்னணியில் உள்ளவர்களில் 18.2% பேர் மட்டுமே வறுமைப் பின்னணியில் உள்ளனர். ஆனால், தலித்துகளில் 38% பேர், பழங்குடிகளில் 48% பேர், பிற்படுத்தப்பட்டோரில் 33.1% பேர் வறுமைப் பின்னணியில் உள்ளனர். இப்படி இருக்க பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீட்டில் இவர்களை உள்ளடக்காதது சட்ட விரோதம். இது பாரபட்சமானது. அரசமைப்புச் சட்டப்படி இது செல்லாது!" என்ற ரவீந்திர பட்டின் வாதம் இந்த விவகாரத்தைச் சுற்றிக்கொண்டே இருக்கும்.

இந்தத் தருணத்தில், 'உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் சமூக நீதி பிரதிநிதித்துவம் பேணப்பட வேண்டும்' என்ற குரல்கள் ஓங்கி ஒலித்ததை நம்முடைய் நீதித் துறை தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாடே உற்றுக்கவனித்த இப்படி ஒரு வழக்கில், குறைந்தபட்சம் தார்மிக வெளிப்பாட்டு நிமித்தமாகவேனும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் பன்மைப் பிரதிநிதித்துவத்தை அது பேண முடியாமல்போனது சரி இல்லை. ஐந்து நீதிபதிகளில் பிற்படுத்தப்பட்ட / தலித் / பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லாமல் முற்றிலும் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாலேயே இந்த வழக்கு முடிக்கப்பட்டது மக்களிடம் உண்டாக்கியிருக்கும் கடும் விமர்சனங்களுக்கும் அது முகம் கொடுக்க வேண்டும்.

இடஒதுக்கீடு போன்ற ஒரு தார்மிக விஷயத்தை அதற்குரிய நியாயத்தோடு அணுகக்கூட ஒரு சமூகமாக இன்னும் எவ்வளவு மேம்பட்ட இடம் நோக்கி நாம் செல்ல வேண்டியிருக்கிறது என்பதையே பிரதானமாக இந்த விவகாரம் சுட்டுகிறது. தீர்ப்பை எதிர்த்து, 'இது அநீதியானது' என்று சொல்லி சில அமைப்புகள் மேல் முறையீடு நோக்கி நகர்ந்திருக்கின்றன. சரிதான், கூடவே இந்த ஒதுக்கீடு முறையானது எவ்வளவு அநீதியானது என்பதை வெகுமக்களிடம் அரசியல் தளத்தின் வழியாகவும்  சமூகத் தளத்தின் வழியாகவும் ஜனநாயக சக்திகள் கொண்டுசெல்ல ஆரம்பிக்க வேண்டும். அந்தப் பிரசாரத்தில் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஜனநாயகர்கள் தார்மிக அடிப்படையில் முன்வரிசையில் நிற்க வேண்டும். இந்த ஏற்பாடு எல்லாச் சமூகங்களையும் உள்ளடக்கும் உண்மையான பொருளாதார ஒதுக்கீடாக அல்லாமல் நீடிப்பது இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

10

3

பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Thangavel Manickam   11 months ago

இந்தச் சட்டம் இந்தியாவினை ஆட்சி செய்வது யார்? அவர்கள் யாருக்கெல்லாம் யாரோடு தொடர்பு உள்ளது எனத் தெளிவாக்கி இருக்கிறது. புரிந்து கொள்பவர்கள் புத்திசாலிகள்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

ESAKKIRAJAN E   1 year ago

நல்ல பதிவு இது. ஆனால் முன்னர் ஐந்து வர்ணம் இல்லை நான்கு வர்ணம் தான். விவாகரத்தை அல்ல. விவாதத்தை இவைகளை மட்டும் மாற்றிக் கொள்ளவும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

A M NOORDEEN   1 year ago

1. முற்பட்ட வகுப்பினர் ஆண்டு வருமானம் உச்ச பட்சமாக 8 இலட்சம் இருந்தால் அவர்கள் ஏழைகள் என்பது எப்படி நிர்ணயிக்கப்பட்டது? 2. சாதிச் சான்றிதழில் சாதி மாற்றி வாங்குவது இங்கு நடைமுறையில் மிகவும் சிரமம். ஆனால் சம்பளம் வாங்குவோர் தவிர மற்ற யாவரும் விருப்பப்பட்ட வருமானத்தைப் போட்டு வருமானச் சான்றிதழ் எளிதாக பெற இயலும். இந்த நிலையில் அரிய வகை ஏழைகளை இங்கு எளிதாக உருவாவார்கள். உண்மையான வருமானத்தைக் காட்டுவோர் எண்ணிக்கைதான் நமது தேசத்தில் அரிது. "வலிமையுள்ளவன் வெச்சது எல்லாம் சட்டமாகாது தம்பி, பிறர் வாழ நினைப்பவன் சொல்லுவதெல்லாம் சட்டமாகணும் தம்பி" என்ற குரல் ஒலித்த பூமி இது. இன்றும் அந்த சமூக நீதிக்காக எல்லா மாநிலங்களும் மெளனித்திருக்கும் நேரத்தில் இந்த பூமியிலிருந்து எதிர் பிரச்சாரக் குரல் ஒலிக்கட்டும்

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Pragathish. K   1 year ago

Reservation that is affirmative action only given on the basis of inequality that historically prevailed. So I disagree with you when it comes to economic reservation. But I agree with other points.

Reply 2 2

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

சோஷலிஸம்சமஸ் முரசொலிஅம்பானியின் வறுமைவேலைவாய்ப்பு குறைவுசோழன்புத்தமதம்சமாஜ்வாடி கட்சிஒரேயொரு முகம்அபிராம் தாஸ்பொருளாதாரக் கொள்கை மறுசீரமைப்புக்கு இதுவே நேரம்அருஞ்சொல் - மன்னை ப.நாராயணசாமிசெக்கர்தமிழ்வழிக் கல்விராகுல் யாத்திரையால் பதற்றம் குறைந்ததா?தலைவர்கறியாணம்மூன்று தரப்புகள்சென்னை உயர் நீதிமன்றம்சமஸ் அருஞ்சொல் சென்னை புத்தகக்காட்சிஅதீதத் தலையீடுகள்டேப்சாங் சமவெளிகோவை ஞானி பேட்டிஅருஞ்சொல் பேரறிவாளன் அற்புதம் அம்மாள்இராம.சீனுவாசன் கட்டுரைகாய்ச்சல்பா.இரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது அருஞ்சொல்ஆர்ஆர்ஆர்டிரெண்டிங்காந்தி கொலை வழக்குதாழ்ச் சர்க்கரை மயக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!