கட்டுரை, அரசியல், கலாச்சாரம், ஆரோக்கியம் 15 நிமிட வாசிப்பு
இளையபெருமாளும் மதுவிலக்கும்
தமிழகத்தின் தலித் அரசியல் முன்னோடியான இளையபெருமாளுக்கு இது நூற்றாண்டு. நாட்டின் முதல் நாடாளுமன்றத் தேர்தலிலேயே உறுப்பினர், அதுவும் 28 வயதில் எம்பி என்பதில் தொடங்கி தலித் மக்கள் மேம்பாட்டுக்காக ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுக்கான தலைவர் என்பது வரை பல சிறப்புகளுக்கு உரியவர் இளையபெருமாள். இந்த ஆண்டில் இளையபெருமாளுடைய நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாகவும் பல முக்கியமான பதிவுகளை வெளியிடவிருக்கிறது ‘அருஞ்சொல்’. அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமார் எழுதிய இக்கட்டுரை வெளியாகிறது.
தமிழ்நாட்டில் படிப்படியாக மது நுகர்வைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு கால் பதித்துள்ளது. மாநிலத்தில் முதல் கட்டமாக 500 மதுக்கடைகளை மூடுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்புக்குரியது.
மதுக் கலாச்சாரத்தை மட்டுப்படுத்துவது தொடர்பான விவாதங்கள் தமிழகத்தில் மீண்டும் உருவாகியுள்ள சூழலில், தொலைநோக்கரான இளையபெருமாள் இந்த விஷயத்தை எப்படிப் பார்த்தார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
மது அருந்துவது எல்லோருக்குமே கெடுதல்தான் என்றாலும் தலித் சமூகத்தினருக்கு அது மிகப் பெரிய கேடாக இருக்கிறது. அதனால்தான் அந்தச் சமூகத்தினரின் நலன் மீது அக்கறைகொண்ட தலைவர்கள் மதுவிலக்கு பற்றி ஒப்பீட்டளவில் அதிகம் பேசியுள்ளனர். எல்.இளையபெருமாள் (1924-2005) தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது (1980-1984) எம்.ஜி.ஆர். தலைமையிலான அன்றைய அதிமுக அரசால் மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போது கொண்டுவரப்பட்ட இரண்டு சட்டத் திருத்த மசோதாக்கள் மீதான விவாதங்களில் பங்கேற்று அவர் பேசிய கருத்துகள் இந்தக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு
மது அருந்தும் பழக்கம் பண்டைய காலம் முதலே இந்தியாவில் இருந்தது என்றாலும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகளின் காரணமாக மக்களிடையே மது அருந்தும் பழக்கம் அதிகரித்தது. மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய், மதுவின் மீது விதிக்கப்படும் வரி ஆகியவற்றின் வருமானத்தைப் புரிந்துகொண்ட பிரிட்டிஷ் அரசு கட்டமைப்புரீதியாக மது அருந்தும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியது அரசே மது அருந்துவதை ஊக்குவித்த காரணத்தால் மக்களிடம் அது எளிதாக பரவியது. 1899 - 1900இல் 82,177 மதுக்கடைகள் இருந்தன அது 1905-1906இல் 91,447ஆக அதிகரித்தது. போதைப் பொருட்களை விற்கும் கடைகளும் அந்தக் காலகட்டத்தில் 21,865 கடைகளாக அதிகரித்தது. மது அருந்தும் பழக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே மதுவின் மீது அதிகமான ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாக பிரிட்டிஷ் அரசு கூறியது. ஆனால், மது விற்பனை மூலம் வரி வருவாயைப் பெருக்க வேண்டும் என்பதே அதன் உள்நோக்கமாக இருந்தது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் மது ஒழிப்பு என்பதும் அந்தப் போராட்ட இயக்கத்தின் முதன்மையான பிரச்சாரங்களில் ஒன்றாக இருந்தது. பிரிட்டிஷ் அரசால் இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு பல்வேறு மாகாண அரசுகள் மதுவிலக்குக் கொள்கையைக் கடைபிடிக்க ஆரம்பித்தன. 1937க்கும் 1939க்கும் இடையில் சென்னை மாகாணம், மத்திய மாகாணம், பேரார், பிஹார், ஒரிசா மற்றும் வடமேற்கு எல்லை மாகாணம் ஆகிய மாகாண அரசுகள் மதுவிலக்குக் கொள்கையை அறிவித்தன. இவற்றில் சென்னை மாகாணம்தான் முதன்முதலாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தது. 1937 அக்டோபர் 1ஆம் நாள் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது சித்தூர் கடப்பா மாவட்டங்களுக்கும் வட ஆர்க்காடு மாவட்டத்துக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு ஆட்சி அமைத்த காங்கிரஸ் மதுவிலக்கைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தியது. சென்னை மாகாணத்திலும் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. ஆனால், பின்னர் அதிலிருந்து பிரிந்து சென்ற ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் மதுவிலக்கைப் பின்பற்றவில்லை.
திமுக, அதிமுக மதுவிலக்கு
இந்தியா சுதந்திரம் அடைந்து 24 ஆண்டுகளுக்குப் பின்னர் 1971ஆம் ஆண்டுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு மதுவிலக்குச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. ‘தமிழ்நாடு ப்ரோஹிபிசன் (சஸ்பென்சன் ஆஃப் ஆபரேஷன்) ஏக்ட் 1971’ (Tamilnadu Prohibition (Suspension of Operation) Act 1971) என்ற சட்டம் 1971 ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி இயற்றப்பட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. “மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம்” என்று காமராஜரும், ராஜாஜியும் திமுக அரசை வலியுறுத்தினர். “மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் இருக்கும்போது இங்கு மட்டும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது மிகப் பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது” என்று கூறிய அன்றைய முதல்வர் மு.கருணாநிதி, அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். ஆனால், பொதுமக்களிடம் குறிப்பாகப் பெண்களிடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1974ஆம் ஆண்டு மீண்டும் அவர் மதுவிலக்கைக் கொண்டுவந்தார். ‘தமிழ்நாடு ப்ரோஹிபிசன் (ரிவைவல் ஆஃப் ஆபரேஷன்) அமெண்ட்மென்ட் ஏக்ட் 1974’ (Tamilnadu Prohibition (Revival of Operation) Amendment Act 1974) என்ற சட்டம் 1974 செப்டம்பர் 1ஆம் தேதி இயற்றப்பட்டது.
மு.கருணாநிதி மதுவிலக்கைக் கொண்டுவந்ததை ஒரு காரணமாகச் சொல்லி திமுகவிலிருந்து விலகி, அதிமுக என்ற புதுக் கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ராமச்சந்திரன், தான் முதல்வராகப் பொறுப்பேற்றபோது 1981ஆம் ஆண்டு மதுவிலக்கை ரத்துசெய்து மதுக்கடைகளைத் திறந்தார். மது விற்பனைக்கென்று ஒரு கார்ப்பரேஷன், மது உற்பத்திக்கென்று ஒரு கார்ப்பரேஷன் அவரது ஆட்சியில் துவக்கப்பட்டன. மது உற்பத்திக்காகத் துவக்கப்பட்ட கார்ப்பரேஷன் 1987ஆம் ஆண்டில் மூடப்பட்டு மது உற்பத்தி முழுவதும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுவிலக்கும் இளையபெருமாளும்
மு.கருணாநிதி 1971ஆம் ஆண்டு மதுக்கடைகளைத் திறந்தபோது காங்கிரஸ் தலைவர்களான ராஜாஜியும், காமராஜரும் அதற்கு எப்படியெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார்களோ அதைவிட வலுவாக 1981இல் எம்.ஜி.ராமச்சந்திரன் மதுக்கடைகளைத் திறந்தபோது அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், சென்னை, எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் இருந்த இளையபெருமாள் வாதாடினார்.
மதுவிலக்கு 1981இல் ரத்துசெய்யப்பட்டு மதுக்கடைகள் திறப்பதற்கான சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய இளையபெருமாள், “1971ஆம் ஆண்டு மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்டபோது அதை எதிர்க்கின்ற நேரத்தில், இன்றைய முதல்வர் அவர்கள் அதனை எதிர்த்து அப்போது போர்க்கொடி உயர்த்தினார். மதுவிலக்கு ரத்துசெய்வதை எதிர்க்கும் இயக்கத்திற்கு அன்று அவர் தலைமை தாங்கினார். ஆனால், இன்றைக்கு அதேபோல காரியத்தை இந்த அரசு செய்திருக்கிறதே என்றுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது” என எம்.ஜி.ஆரை இடித்துரைத்தார்.
“அன்று வெள்ளைக்காரர் ஆட்சியின்போது சேலம் ஜில்லாவிலே ஒரு வெள்ளைக்காரர் கலெக்டராக இருந்தார். மூதறிஞர் இராஜாஜி அவர்கள் அங்கு சேர்மனாக இருந்தார். அன்று அவர் தன்னுடைய ஜில்லாவுக்கு மதுவிலக்கை அமுல்படுத்தினார். கலெக்டர் அவரைக் கூப்பிட்டு நீர் என்னுடைய சேர்மன். நான் சொல்வதைக் கேட்க வேண்டும். நான் உன்னுடைய உயர் அதிகாரி. கள்ளுக்கடையை உடனடியாக திறக்க வேண்டும், என்று கேட்டபோது, நீங்கள் டிஸ்டிரிக்ட் சீஃப்பாக இருக்கலாம். நான் இந்த நகரத்தினுடைய சீஃப்பாக இருக்கிறேன். வேண்டுமானால் என்னை டிஸ்மிஸ் செய்யுங்கள் என்று சொன்னார்கள்” எனக் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு எப்படி கடைபிடிக்கப்பட்டது என்ற வரலாற்றையும் எடுத்துக்கூறினார்.
“விபச்சார விடுதி நடத்துவதாலே அதிகப் பணம் வருகிறது என்பதற்காக நாம் விபச்சார விடுதியை நடத்துவதற்கு ஒத்துக்கொள்ள முடியுமா? அதை யாரோ செய்கிறார்கள் என்பதற்காக அந்தக் குற்றத்தை நாம் செய்ய முடியுமா? காங்கிரஸ் கட்சி ஆட்சியாக இருந்தாலும் சரி அல்லது வேறு கட்சி ஆட்சியாக இருந்தாலும் சரி, அது சரியல்ல. பம்பாய் நகரத்திலே. ரெட் லைட் ஏரியா வைத்திருக்கிறார்கள். அதற்காக சென்னை நகரத்திலே அதேபோல் ரெட் லைட் ஏரியா வைத்தால் கோடிக்கணக்கிலே பணம் கிடைக்கும் என்பதற்காக, இதை ஒத்துக்கொள்ள முடியுமா? அது இந்திரா ஆட்சியாக அல்லது அண்ணா ஆட்சியாக அல்லது யாருடைய ஆட்சியாக இருந்தாலும், அது மனிதாபிமானம் அற்ற செயலாகும்” என அவர் பேசியதில் வெளிப்பட்ட அறச் சீற்றம் நம்மை வியந்து நோக்க வைக்கிறது.
அம்பேத்கரும் மதுவிலக்கும்
இளையபெருமாள், “அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு இடத்தில்கூட மதுவிலக்கை ரத்துசெய் என்று சொன்னது கிடையாது. மதுவிலக்கிற்கு அவர் ஆதரவாக இருந்து, மக்களைத் திருத்த வேண்டுமென்று அவர்கள் காலமெல்லாம் பாடுபட்டார்கள் என்பதை அறிந்திருந்தவன்” என்று சட்டப்பேரவையில் பேசினார். அது முற்றிலும் உண்மை.
காந்தியடிகள் மதுவுக்கு எதிராகப் பேசினார் என்பதை எல்லோருமே அறிவோம். ஆனால், அம்பேத்கரும் மது ஒழிப்பில் தீவிரமாக இருந்தார் என்பது பலருக்கும் தெரியாது. மது அருந்துவதைக் கடுமையாக அவர் எதிர்த்தார். அவரது அரசியலின் ஆரம்பகட்டத்திலேயே அதை நாம் பார்க்க முடிகிறது. பம்பாய் மாகாண சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1927 பிப்ரவரி 24ஆம் தேதி அங்கு தனது முதல் உரையை அம்பேத்கர் ஆற்றினார். பட்ஜெட் மீதான அந்த உரையில் மதுவிலக்கை வலியுறுத்தி அவர் பேசினார். “மக்கள் நெறிதவறிப்போவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்பு அரசிடம்தான் இருக்கிறது. வருமானம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு அரசு செயல்படக் கூடாது” எனச் சுட்டிக்காட்டிய அம்பேத்கர், ஒவ்வொரு மாகாணத்திலும் மதுவுக்காக மக்கள் செலவிடும் தொகை எவ்வளவு என்ற புள்ளி விவரங்களைத் தந்து பம்பாய் மாகாணத்தில்தான் மதுவுக்காக மக்கள் அதிகம் செலவிடுகிறார்கள் என்பதைத் தனது உரையில் அம்பலப்படுத்தினார். “ஒவ்வொரு மாநில மக்களும் குடிப்பதற்காக எவ்வளவு செலவிடுகிறார்கள் என்ற புள்ளி விவரங்களைப் பார்த்தால், இதில் பம்பாய் மாநிலம் முன்னணி வகிப்பது தெரியவரும். சென்னை மாநிலத்தில் இதற்காக ஒவ்வொருவரும் செலவிடும் தொகை 1 ரூபாய், 3 அணா, 7 பைசா (ரூ.1.22); வங்காளத்தில் 7 அணா, 1 பைசா (ரூ.0.45); ஐக்கிய மாநிலங்களில் 4 அணா, 7 பைசா (ரூ.0.28); பஞ்சாபில் 1 ரூபாய், 7 அணா, 8 பைசா (ரூ.1.48); பர்மாவில் 1 ரூபாய், 4 அணா (ரூ.1.25); பிஹாரிலும் ஒரிசாவிலும் 8 அணா 7 பைசா (ரூ.0.58); மத்திய மாநிலங்களிலும் பேராரிலும் 15 அணா (ரூ.0.94); அசாமில் 133 பைசா (ரூ.0.83), ஆனால் பம்பாய் மாநிலத்துக்கான புள்ளி விவரமோ பெரிதும் திகைப்பூட்டுவதாக உள்ளது; அங்குக் குடிப் பதற்காக ஒவ்வொருவரும் சராசரியாக 2 ரூபாய், 2 அணா, அணா,9 பைசா (ரூ.2.18) செலவிடுகின்றனர்” என அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
அப்போது, பம்பாய் மாகாண அரசு எதிர்காலத்தில் முழுமையான மதுவிலக்கைக் கொண்டுவரும் நோக்கத்தோடு இரண்டுவிதமான நடவடிக்னக்களை எடுத்துவந்தது. எரிசாராயத்தை ரேஷன் முறையில் மது தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்குக் கொடுத்துவந்தது. ஒரு ஆண்டில் மக்கள் குடிக்கும் மதுவின் அளவைவிட அரசு சப்ளைசெய்யும் எரிசாராயத்தின் அளவு அதிகமாக இருப்பதைப் புள்ளி விவரங்களோடு எடுத்துக்காட்டிய அம்பேத்கர் “இதுதான் பூரண மதுவிலக்கை அமல்படுத்தப்போகும் லட்சணமா?” என்று கேள்வி எழுப்பினார். பம்பாய் மாகாண அரசு மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு கமிட்டி ஒன்றை நியமித்திருந்தது. அந்தக் கமிட்டியில் நாற்பது சதவீதத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் மதுவிலக்கை எதிர்ப்பவர்களாக இருந்தனர். அதைச் சுட்டிக்காட்டிய அம்பேத்கர் “மதுவிலக்குக் கொள்கையை அரசு மதிக்கவில்லை” என்று குற்றஞ்சாட்டினார். “மக்களை நெறியற்றவர்களாகவும் பிச்சைக்காரர்களாகவும் ஆக்கக் கூடாது. மக்களைப் பிச்சையெடுக்க வைக்கும் அரசாங்கம் கடைசியில் தானே பிச்சை எடுக்கும் நிலைக்குத்தான் ஆளாகும்” என்று அம்பேத்கர் எச்சரிக்கை செய்தார்.
அரசமைப்புச் சட்டமும் மதுவிலக்கும்
பம்பாய் மாகாண சபையில் மட்டுமல்ல அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்த நேரத்திலும் அம்பேத்கர் மதுவிலக்குக் கொள்கையை வலியுறுத்தவே செய்தார். அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்றாக மதுவிலக்கை சேர்த்தார். பொதுமக்களின் சுகாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும், ஊட்டச்சத்தின் அளவையும் உயர்த்த வேண்டியது அரசின் கடமை என்று அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். போதையூட்டும் பானங்களையோ மருந்துகளையோ மருத்துவ காரணங்களுக்காகவன்றி வேறு எதற்காகவும் பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாத வகையில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் அம்பேத்கர் வலியுறுத்தி இருக்கிறார். அந்தப் பிரிவு தொடர்பாக அரசமைப்புச் சட்ட அவையில் விவாதம் வந்தபோது கோலாப்பூரிலிருந்து வந்திருந்த கர்டேகர் என்ற உறுப்பினர் மதுவிலக்குக் கூடாது என வாதிட்டார். “மதுவிலக்கு என்பது தனிமனித உரிமையில் தலையிடுவதாகும். புதிதாக சுதந்திரம் பெற்றிருக்கும் இந்தியாவில் இப்படி தடைகளைப் போட்டால் வளர்ச்சியை பாதிக்கும்” என்றார்.
பிஹாரிலிருந்து வந்திருந்த ஜெய்பால் சிங் என்ற உறுப்பினரோ மதுவிலக்கை அமல்படுத்துவது ஆதிவாசி மக்களின் உரிமையைப் பறிப்பதாகும் என்று பேசினார். சாராயத்தை வைத்துதான் ஆதிவாசிகள் சாமி கும்பிடுவார்கள். அவர்கள் வயலில் இறங்கி சேற்றில் கிடந்து கஷ்டப்பட்டு உழைப்பவர்கள், அவர்கள் சாராயம் குடித்தால்தான் வேலை செய்ய முடியும் என்று பேசினார். அந்த வாதங்களை அந்த அவையில் இடம்பெற்றிருந்த சென்னை மாகாணத்தைச் சேர்ந்த தலித் தலைவர் வி.ஐ.முனிசாமி பிள்ளை கடுமையாக எதிர்த்தார். அவற்றை மறுத்து அவர் பேசினார். வரைவுக்குழு தலைவரான அம்பேத்கரும் அந்த வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்த உண்மைகளையெல்லாம் இளையபெருமாள் அறிந்திருந்தார் என்பதால்தான் அம்பேத்கரைப் பற்றி அவ்வளவு உறுதிபட அவரால் பேச முடிந்திருக்கிறது.
குஜராத் உதாரணம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய உறுப்பினர்கள் சிலர் காங்கிரஸை விமர்சிக்கும் நோக்கில் காந்தி பிறந்த குஜராத்தில்கூட குடிக்கிறவர்கள் இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டுப் பேசினார்கள். அதற்குப் பதிலளிக்கும் விதமாக “குஜராத்தில் 70 சதவீத தொழிலாளர்கள் குடிக்கிறார்கள் என்று சொன்னார்கள். நான் கேட்கிறேன் உத்தமர் காந்தி பிறந்த இடத்திலே மதவெறியர்களும், இனவெறியர்களும் இன்று அரசியல் சட்டத்திலே கொடுக்கப்பட்ட சட்டத்தை மீறி ஷெட்யூல்டு வருப்பினருக்கு புரமோஷன் கொடுக்கக் கூடாது; ரிசர்வேஷன் கொடுக்கக்கூடாது; ரெக்ரூட்மெண்ட் கொடுக்கக் கூடாது என்று செய்கிறார்களே அதே கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அந்த உதாரணத்தைப் பின்பற்றுவோம் என்று எங்களை அச்சுறுத்துகிறீர்களா? என்று கேட்கிறேன்” எனக் கோபமாக இளையபெருமாள் கேட்டார்.
“நம்முடைய முதல்வர் (எம்.ஜி.ஆர்) அவர்கள் இந்தியா பூராவும் கள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். கள் இருப்பது தென்நாட்டில்தான், வட மாநிலங்களில் தென்னை மரங்கள் கிடையாது. இரண்டாவது சாராயம் கொண்டுவந்தார்கள் என்றார்கள்; சாராயம் கொண்டுவந்தது உண்மைதான்; யார் கொண்டுவந்தாலும், குற்றம்தான். அன்னை இந்திரா காந்தி ஏன் மதுவிலக்கைக் கொண்டுவரவில்லை; ஏன் நமக்குப் பணம் தரவில்லை என்று கேட்கிறார்கள். கேட்பதற்கு உரிமை உண்டு. கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. ஆனால், காங்கிரஸ் கட்சி அன்றைக்கே அதை ஆட்சேபித்து இருக்கிறது. அதற்கு மற்ற மாநிலங்கள் உடந்தையாக வர வேண்டும். வராவிட்டால் குற்றம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். நாங்கள் 1952 முதல் 1967 வரையிலும் பல புதுத் திட்டங்களைக் கொடுத்தோம். இலவசமாக உணவு கொடுத்தோம், சீருடை கொடுத்தோம், கள்ளுக்கடைகளை மூடுவதிலே முழுவெற்றியை நாங்கள் பெற்றுவிட்டோம் என்று சொல்லவில்லை. ஆனால், வெற்றிபெற்றோம், மக்களுக்கு மதுவின் அச்சத்தை விளைவித்தோம், மக்கள் பயந்திருந்தார்கள்” என இளையபெருமாள் குறிப்பிட்டார்.
மதுவிலக்கு விசாரணைக் குழு
இந்தியா 1947இல் சுதந்திரம் அடைந்த பின்பு சுமார் 20 ஆண்டுகள் வரை காங்கிரஸ் கட்சி மதுவிலக்குக்காகப் பல நடவடிக்கைகளை எடுத்தது. 1954ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள் இந்திய அரசின் திட்டக் கமிஷன் சார்பில் மதுவிலக்கு விசாரணைக் குழு என ஒரு குழு அமைக்கப்பட்டது. ஸ்ரீமன் நாராயணன் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் சுச்சேதா கிருபாளினி, எஸ்.ஆர்.வசபாடா, ஜக்லால் சவுத்ரி, ஜி.ராமச்சந்திரன், பாஸ்கர் பட்டேல், வி.டி.தந்த்யாகி ஆகிய ஆறு உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். என்.எஸ்.வரதாச்சாரி என்பவர் உறுப்பினர் செயலாளராக இருந்தார்.
ஒன்றிய அரசு மதுவிலக்குத் திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆராய குழு ஒன்றை அமைக்கவேண்டும் என 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸின் செயற்குழு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதன் அடிப்படையிலேயே இந்த மதுவிலக்கு விசாரணைக் குழுவை இந்திய அரசின் திட்டக் குழு அமைத்தது குறிப்பிடத்தக்கதாகும். அந்தக் குழு 1955 செப்டம்பர் 10ஆம் நாளன்று சமர்ப்பித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.
மதுவிலக்கு விசாரணைக்குழு பின்வரும் பரிந்துரைகளை அளித்திருந்தது:
- மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் தெளிவான ஒரு கால வரையறையை அறிவிக்க வேண்டும். அதிலிருந்து மதுவிலக்குக் கொள்கையைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்;
- முதலில் மாநில அரசுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மதுவிலக்குக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று அறிவிக்க வேண்டும்;
- ஒன்றிய அரசின் மதுவிலக்குத் திட்டங்களுக்கு முழுமையாக அவை ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒன்றிய அரசானது மக்களுக்கு இதுபற்றிய கல்வியை ஊட்டுவதன் மூலமாக மதுவிலக்கை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்;
- 1958 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேசிய அளவில் இதற்கென சட்டம் ஒன்று இயற்றப்பட்டு அது அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்;
- இதுவரை மதுவிலக்குக் கொள்கையை ஏற்காத மாநில அரசுகள் 1956 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மதுவிலக்குக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்;
- அரசு ஊழியர்கள் நடத்தை விதிமுறைகளில் மது அருந்துவதில்லை என்பது கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும்;
- உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை படிப்படியாக நிறுத்தப்பட வேண்டும்;
- பாதுகாப்புப் படையினரிடையே மதுவிலக்கு முழுமையாக ஏற்கப்பட வேண்டும்;
- பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் மதுவிலக்குக் கொள்கையை மனமாற்றத்தின் மூலமாக ஏற்படுத்த வேண்டும். அவர்களைத் தண்டிப்பதன் மூலமாக அதைத் திணிக்கக் கூடாது. ஆனால், கள்ள மது தயாரிப்பதைத் தடுக்கும்விதமாகத் தண்டனை வழங்கப்படலாம்;
- நாட்டில் மதுவிலக்குக் கொள்கை முழுமையாக நடைமுறைக்கு வந்தால் அயல்நாட்டு தூதரகங்கள் அளிக்கும் விருந்துகளிலும் மது வழங்குவது தடைசெய்யப்பட வேண்டும்;
- 1958 ஏப்ரல் 1க்கு பிறகு மது அருந்துவதற்கான பர்மிட் அனைத்தும் செல்லாது என ஆக்கப்பட வேண்டும்.
இந்தப் பரிந்துரைகளோடு, மதுவிலக்கை நாடு தழுவிய அளவில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதற்கும் தெளிவான பரிந்துரைகளை இந்த விசாரணைக் குழு அளித்திருந்தது. மதுவிலக்கு வாரியங்களை அமைப்பது, அதற்கான சட்டம் மற்றும் நிர்வாக அமைப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் இடம்பெற்றிருந்தன.
சில மாநில அரசுகள் மது விற்பனை செய்வதற்கு வரி வருவாயைக் காரணமாகச் சொல்வது தேசத்தின் மீது படிந்த களங்கம் என்று மதுவிலக்கு விசாரணைக் குழு குறிப்பிட்டு இருந்தது. மதுவின் மூலம் பெறப்படும் வரி வருவாய் என்பது சமூக விரோதமானது என்றும் அது கூறியிருந்தது.
மக்கள் மதுவுக்கு செலவிட்டு வந்த பணத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் திருப்பிவிடுவதற்கான ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும், குறிப்பாக அவர்களுடைய சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்; கலால் வரியை நம்பியிருக்கும் மாநிலங்களின் வரி இழப்பை ஈடுகட்ட ஒன்றிய அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் இந்த ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
மாநில அரசுகள் ஒத்துழைக்காததால் இந்திய ஒன்றிய அரசும் மதுவிலக்கு விசாரணைக் குழு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.
எம்.ஜி.ஆர் அரசின் மது விற்பனை
எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு 1983இல் மீண்டும் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. அந்தச் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய இளையபெருமாள், ”ஓட்டு என்ற பாவமான சுமையில் நாம் சிக்கிக்கொண்டதற்காகவே இந்த சட்டத்தை நாம் திருத்தச் சட்டமாக கொண்டுவந்து மதுவிலக்கை அமல்படுத்த பயப்படுவது நியாயமானது அல்ல, நேர்மையானது அல்ல, ஏழைகள் அவதிப்படுகிறார்கள். ஏழைகள் மட்டுமல்ல இளைஞர்கள்; பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள்கூட கெட்டிருக்கின்றார்கள். சட்டத்திலே நாம் சொன்னோம் இத்தனை வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சாராயம் கொடுக்கப்பட மாட்டாது, அவர்கள் குடிக்காமல் இருப்பதற்கு அரசு வழிசெய்திருக்கிறது என்று சட்டத்தில் சொன்னோம். ஆனால், நடைமுறையில் நடப்பது என்ன? அதுமட்டுமல்ல, இந்தக் கள்ளுக் கடைகள், சாராயக் கடைகள் முன்பிருந்தபொழுதுகூட கிராமத்தில் ஒதுக்குப்புறமாக, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத முறையில் இருந்தன என்பது அமைச்சர் அவர்களுக்குத் தெரியும். அதுதான் உண்மையான நிலைமையும்கூட. ஆனால், இன்றைக்கு இருக்கிற நிலையிலே எல்லா இடங்களிலும் கடைகளுக்கு லைசன்ஸ் கொடுக்கப்படுவது மட்டுமல்ல, கடைகளுக்கு உள்ளே ப்ராஞ்ச் (கிளை) கடைகள் என்று வைத்துக்கொண்டு தெருத்தெருவாக மோர் விற்பதைப் போல, பதநீர் விற்பதைப் போல கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் விற்கப்படுகின்ற இந்த பாவமான காரியம் நடப்பது அரசுக்குத் தெரிகிறதா?” என அவர் கேள்வி எழுப்பினார். “இந்தப் பாவச்சுமையை எத்தனை நாட்களுக்கு நீங்கள் சுமக்க போகிறீர்கள்?” என ஆட்சியாளர்களை இளையபெருமாள் கேட்டார்.
ஏழைகளைக் காப்பாற்றுவதற்காக இந்தச் சர்க்கார் வந்திருக்கிறது; பெண்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக இந்தச் சர்க்கார் வந்திருக்கிறது; குழந்தைகளுக்கு சத்துணவு போடுவதற்காக இந்தச் சர்க்கார் வந்திருக்கிறது - என்றெல்லாம் சொன்னீர்கள். அவன் தாயையும் தகப்பனையும் குடிகாரர்களாக ஆக்கிவிட்டு அவர்களை வீட்டிலே பட்டினி போட்டுவிட்டு அந்தக் குழந்தைக்கு சத்துணவு என்ற பெயரால் கொடுத்து அந்தக் குழந்தையையும் குடிகாரனாக ஆக்கக்கூடிய இந்த மதுகடைகளைக் கொண்டுவருவதில் பெரும் பாவம் இருக்கிறது. அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்ற தெய்வத்தின் பேரால் சொல்லுகிறேன், வேதனையோடு சொல்லுகிறேன், ஏழைகள் வீதியிலே வாழ்ந்த மரியாதைகூட இல்லை. அவர்களிடமிருந்த வெண்கலப் பாத்திரம், பித்தளை பாத்திரம், எவர்சில்வர் பாத்திரம் - இன்னும் அவர்கள் ஆடைகள் அத்தனையையும் விற்றுக் குடிகாரர்களாக மாறுகிறார்கள்” எனக் கடுமையாக இளையபெருமாள் எம்.ஜி.ஆர் அரசை விமர்சித்தார்.
செல்ல வேண்டிய பாதை
இதில் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் வரை மதுவிலக்கு என்பது அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளின் பட்டியலில் இடம்பெற்றுவந்தது. ஆட்சிக்கு வந்தால் உடனே மதுக்கடைகளை மூடுவோம் என திமுகவும், விஜயகாந்த் தலைமையிலான அணியும் வாக்குறுதி அளித்தன. ஆனால், அதிமுகவோ படிப்படியாகக் குறைப்போம் என்று கூறியது. அந்தத் தேர்தலில் அதிமுகவே வெற்றிபெற்றது. மதுக்கடைகளை மூடுவோம் எனச் சொன்னதால்தான் திமுகவும், விஜயகாந்த் அணியும் தோற்றன என்று ஊடகங்கள் கூறின. அதனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மது ஒழிப்பு குறித்துப் பேசுவதையே அரசியல் கட்சிகள் தவிர்த்தன.
மது ஒழிப்பை தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை என ஊடகங்கள் பரப்பிய கருத்து உண்மையல்ல. மரக்காணம் எக்கியர்குப்பத்தில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் வீடுகளுக்கு ஆறுதல் கூறுவதற்காக நான் சென்றிருந்தேன். அங்கே கூடியிருந்த பெண்கள் “எங்களுக்கு அரசு இப்போது நிவாரணம் கொடுத்து என்ன பயன்? இந்தக் கிராமத்தில் மட்டும் சுமார் 300 பெண்கள் தாலியை இழந்து விதவைகளாக இருக்கிறோம். எங்களை இப்படி ஆக்கியது இந்தச் சாராயம்தான். அரசு முதலில் இந்தச் சாராயத்தை ஒழிக்கட்டும்” என்று கதறினார்கள். அந்தக் கிராமத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள பெண்களின் ஒட்டுமொத்தக் குரலும் அதுதான். மதுவால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்கள்தான்.
பிஹாரில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் தோல்வி என்றே ஊடகங்கள் சித்திரித்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரைக் கேலிசெய்கின்றன. ஆனால், அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மதுவிலக்குக்குப் பிறகு பெண்கள் மீதான வன்முறை பெருமளவு குறைந்திருக்கிறது எனத் தெரியவந்துள்ளது.
மேலும் 2024 பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. 1962க்குப் பிறகு தேசிய அரசியலில் கைவிடப்பட்ட மதுவிலக்குப் பிரச்சாரத்தை இப்போது முன்னெடுக்க வேண்டிய தேவை அதிகம் உள்ளது. பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் முன்னிறுத்தப்படலாம் என்றும் ஒரு யூகம் உலவுகிறது. அவர் முன்னிறுத்தப்படுகிறாரோ இல்லையோ, அவர் நடைமுறைப்படுத்திவரும் ‘மதுவிலக்கு மாடல்’ முன்னிறுத்தப்பட வேண்டும்!
தொடர்புடைய கட்டுரைகள்
வரலாற்றுக்குள் எல்.இளையபெருமாள்
இளையபெருமாள்: காங்கிரஸ் அம்பேத்கரியர்
மது என்ன செய்யும்?
2
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.