கட்டுரை, வரலாறு, புத்தகங்கள் 10 நிமிட வாசிப்பு

வரலாற்றுக்குள் எல்.இளையபெருமாள்

ஸ்டாலின் ராஜாங்கம்
12 Jan 2023, 5:00 am
0

சென்னை புத்தகக்காட்சியை ஒட்டி கவனம் ஈர்க்கும் புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ‘அருஞ்சொல்’. அந்த வகையில் பாலசிங்கம் இராஜேந்திரன் எழுதிய ‘இளையபெருமாள் வாழ்க்கைச் சரித்திரம்’ நூலை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இங்கே!  

ஞ்சை வட்டாரத்தின் தொடர்ச்சியில் அமைந்த பகுதி சிதம்பரம். கடலூர் வட்டாரத்திற்கும் தஞ்சை வட்டாரத்திற்கும் இடையில் அமைந்திருக்கிறது. எனவே, இரண்டு பகுதிகளின் அடையாளங்களும் கலந்ததாகவும் இருக்கிறது. வரலாற்று நோக்கில் பார்த்தால் 'புகார், காஞ்சி, மதுரை' போன்று பழைய நகரமாகச் சிதம்பரம் பதிவாகவில்லை. நடராசர் கோயில் பற்றிய குறிப்புடன் சேர்ந்தே சிதம்பரம் பற்றிய தகவலை நாம் தெரிந்துகொள்கிறோம். எனவே, சிதம்பரம் ஏதோவொரு வகையில் வைதீகமயமாக்கத்தின் பின்புலத்தில் வைத்தே வரலாற்றில் பொருள் பெற்றிருக்கிறது.

வைதீக மதக் கதையாடலுக்கு இணையாக தீண்டாமை பற்றிய தொன்மத்தைக் கொண்டதாகவும் சிதம்பரம் இருக்கிறது. நந்தனார் என்னும் உருவகத்தை, தமிழக அளவிலான தீண்டாமைக்கான கருத்தாடலாக, சிதம்பரத்தை வைத்தே உருவாக்கியிருக்கிறார்கள். இந்த வைதீகக் கதையாடலுக்கும் இப்பகுதியில் உருவான / நிலவிய சாதி அமைப்புக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.

சிதம்பரம் நகரின் பழைமை குறித்த இத்தகைய சந்தேகம் இப்பகுதியில் மக்கள் வாழ்ந்திருக்கவில்லை என்று பொருளாகாது. நிலவுடைமையை அடிப்படையாகக் கொண்ட பகுதி என்றாலும் பெருவாரியான உழைக்கும் மக்கள் நிலம் பறிக்கப்பட்ட கூலிகளாகவே இருந்தார்கள். இவர்கள் இடையே தொடர்ந்து சாதி முரண்பாடுகள் நிலவி வந்தன/வருகின்றன. இன்று வரையிலும், ரயில் நிலையம், பல்கலைக்கழகம் தவிர்த்து நகரத்தின் நவீனக் குணாம்சங்கள் அதிகம் பரவாத பகுதி இது.

19ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியிலிருந்தே தலித்துகள் இடையே நவீன அரசியல் முயற்சிகள் தொடங்கிவிட்டிருக்கின்றன. தலித்துகளுக்கான உரிமைகள் மட்டுமல்லாது சமூக அரசியல், பண்பாட்டு அடையாளங்கள் குறித்த விவாதங்களும் அக்கால முன்னோடிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றுள் பெரும்பாலானவை சென்னையை மையமாகக் கொண்டு தமிழகத்தின் வட பகுதிகளிலேயும் இடம்பெயர்ந்து வெவ்வேறு புலங்களில் வாழ்ந்தவர்களிடையேயும்தாம் அழுத்தம் பெற்றிருந்தன.

அதேவேளையில் இத்தகைய செயற்பாடுகள், உருப்பெற்றுவந்த தேசிய - பிராந்திய அமைப்புகளையும் பாதித்து, அவர்களும் அதற்கேற்ப எதிர்கொள்ளல்களைக் கட்டமைத்துக்கொண்டனர். இந்நிலையில்தான் சென்னைக்குத் தெற்கே சற்றுத் தொலைவிலிருந்த கடலூர் தொடங்கி தஞ்சை வரையிலான பகுதிகளின் தலித் மேம்பாட்டு முயற்சிகள் என்னவாக இருந்தன என்று பார்க்க வேண்டி இருக்கிறது.

சகஜானந்தரின் பணிகள்

சிதம்பரம் வட்டாரத்தைப் பொறுத்தவரையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையிலிருந்து கிளம்பிவந்த துறவி சகஜானந்தரின் பணிகள் முக்கியமாகின்றன. அவருடைய பணிகள் ஆன்மிக வரையறைக்குட்பட்டதாக இருந்தன. அன்றைய தேசிய இயக்கத்தாரின் ஆதரவும் அவருக்கு இருந்தது. சகஜானந்தரின் பணிகள் மரபான வடிவில் இருந்தாலும் அவற்றின் அடிநாதமாக நவீனக் கால மாற்றங்களும் கருத்தாக்கங்களும் இருந்தன என்பதை அவர் பணிகளை உற்று நோக்கும்போது புரிந்துகொள்ள முடியும்.

தீண்டப்படாத மக்களுக்குக் கல்வியளிப்பது மூலம் அவர்களைத் தீண்டாமை இழிவிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்று சகஜானந்தர்  திடமாக நம்பினார். அதற்காக நந்தனாரையே ஓர் அடையாளமாக அவர் தேர்ந்துகொண்டார். இன்னும் சொல்லப்போனால் அவருடைய பயணம் சிதம்பரத்தை நோக்கி அமைந்ததற்குக் காரணமே நந்தனார் தொன்மம்தான்.

துறவியாக இருந்து கல்வி மையத்தை மட்டுமல்லாமல் அன்றைய நவீன அரசியல் அரங்குகளாக உருவாகிவந்த சட்டமன்ற அரங்குகளிலும் உறுப்பினராகப் பங்குபெற்றார் சகஜானந்தர். இவ்வாறு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே பிற வட்டார ஒடுக்கப்பட்டோர் அரசியலிலிருந்து சிதம்பரம் வட்டார அரசியல் வேறுபட்டிருந்தது. இந்தப் பின்னணியில்தான் பெரியவர் எல்.இளையபெருமாள் அவர்களின் பணிகளும் அமைந்தன.

சகஜானந்தரின் தொடர்ச்சி இளையபெருமாள்

சகஜானந்தரின் தொடர்ச்சியாகவே எல்.இளையபெருமாள் தம் பணிகளை வளர்த்தெடுத்துச் சென்றார். சிதம்பரம் உள்ளடங்கிய பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் வலுவாகவும் தமிழகத்தில் பரவலாகவும் இவர் பணிகள் அமைந்தன. 1924ஆம் ஆண்டு பிறந்த எல்.இளையபெருமாளின் செயற்பாடுகள் அறுபதாண்டுகளையும் தாண்டியவை.

தேசிய அரசியலில் அறியப்பட்டிருந்தாலும் சிதம்பரம் வட்டாரத்தில் கிராமங்கள் தோறும் மக்களைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்குத் தொடர்பு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு கிராமத்திலும் இவரைப் பற்றிச் சொல்வதற்கு அவர் காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு நினைவுகள் இருந்தன. ஆனால் அவரைப் பற்றிச் சிறிதும் பெரிதுமான கட்டுரைகள், சிறு நூல்கள், மலர்கள், நேர்காணல்கள் தவிர்த்து ஆதாரப்பூர்வமான தகவல்களைக் கொண்ட விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் கிடையாது. இந்நிலையில் முதன்முதலில் விரிவான வரலாற்றுப் பதிவாக இந்நூலை எழுதியிருக்கிறார் பாலசிங்கம்.

ரசியல் இயக்கத்திற்குள் சேர்ந்து போராடினாலும் போராடாவிட்டாலும் தலித் என்பவர் ஒடுக்குமுறையை ஏதோவொரு வகையில் சந்திப்பவராகவும் அதை எதிர்த்துப் போராடக் கூடியவராகவும் இருந்துவிடுகிறார். சில வேளைகளில் அடங்கிப் போகிறவராகவும் இருக்கலாம். ஆனால், ஒடுக்குமுறையும் உளவியல் நெருக்கடியும் நீடிக்கும். 1940களிலேயே இளையபெருமாளின் போராட்டங்கள் உருவாகிவிட்டிருந்தன. ராணுவத்தில் சேர்ந்து விரைவிலேயே அதிலிருந்து வெளியேறி, அரசியல் இயக்கம் என்ற முறையில் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். 1952இல் கடலூர் மக்களவை உறுப்பினரானார்.

பொதுவாக அம்பேத்கரிய இயக்கங்கள் பரவாத பகுதிகளில் காங்கிரஸ் இயக்கம்தான் தலித்துகள் இடையே அதிகமாக வேர் பிடித்திருந்திருக்கிறது. படித்த நகர்புறத் தலித்துகள் இடையே தலித் இயக்கங்களும் திராவிடர் கழகம் போன்ற பிற அமைப்புகளும் செல்வாக்குப் பெற்றிருந்தன. கிராமப் பகுதிகள் வேறாக இருந்தன. காங்கிரஸில் தமிழ்நாட்டின் வடபகுதியைவிட தெற்கே நிறைய தலித்துகள் இருந்ததை இவ்வாறுதான் புரிந்துகொள்ள முடிகிறது.

எல்.இளையபெருமாள் காங்கிரஸிற்குள் ஒரு தலித் தலைவராகவும் - அவர்களின் பிரச்சினைகளுக்குத் தயக்கமில்லாமல் ஆதரவு காட்டுகிறவராகவும் இருக்க முடிந்தது என்பதே அவரது தனித்துவம். காங்கிரஸில் தலித்துகளுக்கான இந்த வெளி காந்தியின் அரிஜன சேவா சங்கத்தின் தொடர்ச்சியால் உருவாகியிருந்தது.

தலித்துகளைக் கையாளுவதில் காங்கிரஸுக்குள் சுவாரஸ்யமான முரண் ஒன்றிருந்தது. சமூகரீதியாக நிலவுடைமையாளர்களையும் அரசியல்ரீதியாகத் தலித்துகளையும் அரவணைப்பதாக அக்கட்சி இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சி அரிஜன முன்னேற்ற விழுமியங்களையும் தொடர வேண்டி இருந்தது. இந்த வாய்ப்பைத் தலித்துகளை நோக்கி இணக்கப்படுத்தியவர்களுள் எல்.இளையபெருமாள் முக்கியமானவர். அவருடைய காலத்திலும், பின்னரும் பல்வேறு தலித் ஆளுமைகள் காங்கிரஸுக்குள் செயல்பட்டிருந்தாலும் அவர்களை எல்.இளையபெருமாளுக்கு இணையாகக் கூற முடியாது.

இரு தளங்களில் செயல்பாடு

எல்.இளையபெருமாள் அவர்களின் பணிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது எனினும், அவரது பணிகளைப் புரிந்துகொள்வதற்கு இந்த வகைப்பாடு உதவலாம். ஒன்று அரசியல் தளம், மற்றொன்று சமூகத் தளம்.

காங்கிரஸுக்குள் செயல்பட்டமை, காங்கிரஸுக்கு வெளியே செயல்பட்டமை என்று அரசியல் தளத்தைப் பிரித்துக்கொள்ளலாம். காங்கிரஸில் சட்டமன்ற / நாடாளுமன்றப் பிரதிநிதியாக இருந்தமையும், அரசின் கமிட்டிகளில் இடம்பெற்றுச் செயல்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பட்டியலின மக்களின் கல்வி, பொருளாதார நிலைகளைக் கண்டறிவதற்காகத் தேசிய அளவில் அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவராக 1965இல் இளையபெருமாள் நியமிக்கப்பட்டார். 1969 ஜனவரியில் கமிட்டி சார்பாக 431 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த கமிட்டியின் முக்கியத்துவம் காங்கிரஸாலோ, தலித் இயக்கங்களாலோ போதுமான அளவு பேசப்படவில்லை. இங்கிருக்கும் பல்வேறு முற்போக்கு அடையாளங்களின்படி பார்த்தால் எல்.இளையபெருமாள் அவர்களை எதிர்மறையாகவே சொல்ல முடியும். ஆனால், முற்போக்காளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் செய்ய முடியாத பல்வேறு விஷயங்களைத் தலித் நோக்கிலிருந்து இளையபெருமாள் செய்திருக்கிறார். இதன்படி இந்த முற்போக்கு அடையாளங்கள் யாருடைய நலனுக்கானவை என்பதையும் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. 

இளையபெருமாள் போன்றவர்கள் செயற்பட்ட காலமும் இலக்காகக் கருதிய மக்களும் வேறு; பிற செயற்பாட்டாளர்களைவிடச் சவாலானது. அத்தகைய களத்தில் செயற்பட்டவர் அவர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தலித்துகள் அதிகாரமற்றவர்களாக இருப்பது ஒருபுறமென்றால், பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய ஏழைகளாக வைக்கப்பட்டிருந்தார்கள் என்பது மறுபுறம். அவர்களை ஒரே நேரத்தில் அரசு எந்திரத்தை எதிர்ப்பவர்களாகவும் சமூக அதிகாரத்தை எதிர்ப்பவர்களாகவும் வைப்பதன் எதிர்மறை விளைவுகளைப் புரிந்துகொண்டவர்களாகவே இளையபெருமாள் போன்ற முன்னோடிகள் செயற்பட்டனர் எனலாம். இந்நிலையில், ஏதாவதொரு நிலையில் இம்மக்களுக்கான வாய்ப்பை உறுதிபடுத்திக்கொள்ள முயன்றார்கள் எனலாம். இளையபெருமாள் இத்தகைய நடைமுறைவாதி. 

கருத்தியல் தளமும் நடைமுறைத் தளமும்

பொதுவாகக் கருத்தியல் தளமும் செயற்பாட்டுத் தளமும் இணைந்ததாகவே அரசியல் தளத்தைப் புரிந்திருக்கிறோம். கருத்தியல் தளத்தில் பேசுபவர்களையே சாதகமாகப் பார்க்கிறோம்; இன்றைய வரலாறும் அவ்வாறே எழுதப்படுகிறது. ஆனால், கருத்தியல் ஆதரவாளர்களாகக் கருதப்பட்டவர்களைவிட நடைமுறை சார்ந்து செயற்பட்டவர்களால் நடந்த நன்மைகளே தலித்துகளுக்கு அதிகமாக இருக்கின்றன.

அடித்தள மக்கள் இயக்கங்களின் செயற்பாடுகள் வெளிப்படையாக மக்களுக்குப் புலப்படும் அளவுக்கு வலுப்பெற்றிருப்பதில்லை என்றாலும் இந்த எதார்த்தத்தையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கடலூர்ப் பகுதியில் திராவிடர் கழகத்திலும் திமுகவிலும் செயற்பட்ட எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி வன்னியர் சமூக அடையாளமாகவும், காங்கிரஸ்காரரான எல்.இளையபெருமாள் பறையர் சமூகப் பிரதிநிதியாகவும் அறியப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கருத்தியல் தளமும் செயற்பாட்டுத் தளமும் இணைந்தவை என்ற பார்வையை 'மாறாத உண்மையாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை' என்பதை இங்கு புரிந்துகொள்கிறோம். எந்த விசயமும் பகுதிக்கேற்பவும் நடைமுறைக்கேற்பவுமே அர்த்தப்படுகிறது.

எல்.இளையபெருமாள் கருத்தியல் சார்ந்து தன் பார்வைகளைச் சட்டகப்படுத்தவில்லை என்பது ஒரு குறையே எனினும் அவருக்குப் பார்வைக் கோணங்களே இருந்திருக்கவில்லை என்று கூற முடியாது. வாய்ப்பிருந்த இடங்களில் தன்னுடைய கருத்தைச் சொல்லியிருப்பதோடு தன்னுடைய கோரிக்கையையும் நிறைவேற்றச் செய்துள்ளார்.

இளையபெருமாள் தலைமையிலான கமிட்டி அறிக்கையின் முதல் அத்தியாயத்திலேயே இந்து மதத்திற்கும் சாதி அமைப்புக்குமான உறவைக் குறிப்பிட்டுக் கடுமையாகச் சாடியிருக்கிறது. சமூகச் சீர்திருத்தத்திற்கு வழிவகுக்காத ஐந்தாண்டுத் திட்டங்கள் விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. காந்தி பிறந்த குஜராத் உட்பட இந்தியாவெங்கும் நிலவிய சாதியின் பல்வேறு வடிவங்களை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய பல்வேறு கூறுகள் அறிக்கையின் பெயரைச் சொல்லாமலே வெவ்வேறு வகைகளில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த அறிக்கை முழுமையாக இதுவரையிலும் தமிழில் வெளிவரவில்லை. அவற்றின் முக்கியமான அம்சங்களை இந்நூல் எடுத்துக்காட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல அவருடைய நாடளுமன்ற - சட்டமன்ற உரைகள் தொகுக்கப்பட்டு அவற்றின் அடிப்படையிலேயும் அவரைப் பற்றிய மதிப்பீடு எழுதப்பட வேண்டும். 

அரசியல் தளம் சார்ந்து காங்கிரஸிலிருந்து வெளியேறிய பின்னால் இளையபெருமாள் அமைத்துக்கொண்ட பணிகளை அடுத்ததாகக் கூறலாம். தனிக் கட்சி தொடங்கியதோடு தமிழகத்திலிருந்து பிற தலித் தலைவர்களோடு இணைந்து கூட்டமைப்பை உருவாக்கிச் செயல்பட்டார். அத்தலைவர்கள் பெரும்பாலும் அம்பேத்கரிய இயக்கங்களை நடத்திவந்தவர்கள் ஆவர். அந்தக் கூட்டமைப்பு சார்பாக மாநாடு, பேரணி, கோரிக்கைகள், அறிக்கைகள், தேர்தல் பங்கெடுப்புகள் ஆகியவை முன்னெடுக்கப்பட்டன. கூட்டமைப்பு சார்பாக 1989இல் திமுகவோடு கூட்டணி என்று முதலில் முடிவானது. ஆனால், திமுகவில் செல்வாக்குப் பெற்றிருந்த வன்னியர் தலைவர்களின் அழுத்தத்தால் தொகுதிகளைத் தர மறுத்து ஆதரவு மட்டுமே தரக் கோரினர். அதிலிருந்து மாறி, தான் கை காட்டிய வேட்பாளரைக் காட்டுமன்னார்குடியில் வெற்றி பெற வைத்தார் இளையபெருமாள். 1991இல் அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களில் அவர் கட்சி வெற்றி பெற்றது. இவ்வாறு 1990களின் மையப்பகுதி வரை சிதம்பரம் வட்டாரத்தில் செல்வாக்கோடு இருந்தார். 

இதையும் வாசியுங்கள்... 28 நிமிட வாசிப்பு

அம்பேத்கரின் 10 கடிதங்கள்

பி.ஆர்.அம்பேத்கர் 17 Apr 2022

விசிகவுக்கான அடித்தளம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்தபோது (1999) சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியையே தொல்.திருமாவளவன் தேர்வு செய்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இரண்டு முறை மக்களவைத் தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் காட்டுமன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் ஆண்ட/ஆளுகிற கட்சியைத் தாண்டிய ஓட்டுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையிலேயே 2006 தேர்தலில் அக்கட்சி காட்டுமன்னார்குடியில் போட்டியிட்டு வென்றது.

1990களில் புதிய தலைமுறையினரின் தலித் அரசியல் வருகையை எதிர்கொள்வதில் எல்.இளையபெருமாளுக்குச் சிக்கல் இருந்தது என்றாலும், இத்தலைமுறையினரின் வெற்றிக்கு இளையபெருமாள் போன்ற முந்தைய தலைமுறையினரின் பணிகளே அடித்தளமாக அமைந்தன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

காங்கிரஸிலிருந்த காலத்திலேயே காங்கிரஸுக்கு வெளியிலிருந்த தலித் அரசியல் தலைவர்களுடனும் செயல்பாடுகளுடனும் அவர் தொடர்பு கொண்டிருந்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரோடு அவர் நெருக்கம் கொண்டிருக்கவில்லையெனினும், 1998இல் தமிழக அரசு சார்பாக அவருக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. அம்மேடையிலேயே, அப்போது கைது செய்யப்பட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் இயக்க இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அவர் எழுப்பினார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிக்கப்பட்டிருந்த சமூக இழிவுகளுக்கு எதிராகப் போராடியமையையும், தமிழக அளவில் சாதிய வன்முறைகளால் மக்கள் பாதிக்கப்பட்டபோது அவர்களை மீட்டெடுக்கச் செய்த முயற்சியையும் சமூகத்தளம் சார்ந்ததாக கூறலாம்.

காங்கிரஸில் சேர்ந்த தலித்துகள் பலரும் சமூகத் தளத்தைக் காட்டிலும் அரசியல் களத்தின் வழியேதான் அதிகமும் இயங்கியிருக்கிறார்கள். தங்களுடைய அதிகார வரம்புக்கு உட்பட்டே சமூகரீதியிலான விசயங்களில் உதவினார்கள். ஆனால், இளையபெருமாளின் சமூகரீதியான ஈடுபாடு அரசியல் தளத்தைத் தாண்டியதாக இருந்தது. குறிப்பாக, சமூக இழிவுகளுக்கெதிராகத் தொடர்ந்து போராடியதைப் பிற காங்கிரஸ் தலித் ஆளுமைகளோடு ஒப்பிடும்போது இவர் பங்களிப்பின் விஸ்தாரத்தைப் புரிந்துகொள்ளலாம்.

பாமகவான வன்னியர் சங்கத்தோடு அரசியல் கூட்டணியை இளையபெருமாள் ஏற்படுத்தியபோதும், தலித் மக்களின் உரிமை தொடர்பான நிபந்தனைகளோடுதாம் அவர் கூட்டணிக்கு ஒப்பினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சாதி இந்துக்களுடன் ஏற்படும் அரசியல் கூட்டணிகூட அவர்களுக்கே அதிகம் சாதகமாக அமைவதை அவருடைய அனுபவத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம்.

பெரும்பாலும் காந்தியத்தின் தலித் அக்கறை என்பது சாதி இந்துக்களின் மனமாற்றம், அதன் வழியாகக் கிடைக்கும் உதவி ஆகியவற்றின் மூலம் தலித்துகள் மீது படிந்துள்ள அழுக்குகளைச் சுகாதாரம், கல்வி என்று சீர் செய்யும் அரசியல் ஆகும்.  சாதி இந்துக்களிடம் மனமாற்றம் ஏற்படுத்துவதைச் சாதி இந்து காந்தியவாதி எளிமையாகச் செய்ய முடியும். அதை இச்சமூகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், தலித்தாகப் பிறந்த காந்தியவாதிக்கு அதில் நிறைய சவால்கள் உண்டு. இந்த வகையில், காங்கிரஸ் இயக்கத்திலிருந்த எல்.இளையபெருமாளால் இப்பணிகளைச் செய்திருக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

காந்தியமும் அம்பேத்கரியமும்

தலித்துகளுக்குச் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் வாய்ப்புகளை எந்த அளவிற்குப் பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் பயன்படுத்தித் தலித்துகள் மேம்பாட்டில் அக்கறை செலுத்தினார். இவ்விடத்தில் அவரிடம் அம்பேத்கரிய தன்மையையே பார்க்கிறோம். சாதி இந்துக்களின் பரிவு மூலம் தலித்துகளைச் சுகாதாரப்படுத்த முற்பட்ட காந்தியவாதிகள், தலித்துகள் மீது திணிக்கப்பட்டிருந்த இழிதொழில்களை மறுக்கும் போராட்டங்களை மேற்கொள்ளவில்லை. இதை அம்பேத்கரிய இயக்கங்கள் முன்னெடுத்திருந்தன, எல்.இளையபெருமாளும் முன்னெடுத்திருந்தார்.

காங்கிரஸ்காரரான இளையபெருமாளுக்கு இழிதொழில் மறுப்புப் போராட்டத் தாக்கம் எவ்வாறு / எங்கிருந்து வந்திருக்க முடியும் என்று பார்ப்பது அவரைப் புரிந்துகொள்ள உதவும். முன்பு இழிதொழில் மறுப்புப் போராட்டம் செய்தவர்கள் அம்பேத்கரிய அமைப்பான ‘ஆல் இந்தியா ஷெட்யூல்டு கேஸ்ட் ஃபெடரேஷன்’ அமைப்புதான். அது கடலூர் மாவட்டம் வரை செல்வாக்குப் பெற்றிருந்தது. உரிமை ரத்தினம் போன்றவர்கள் கடலூர்ப் பகுதியில் பணியாற்றியிருக்கின்றனர்.

அன்றைக்குத் தமிழகத்தில் சாதி வன்முறைகள் எங்கு நடந்தாலும் உடனே செல்லக்கூடியவராகவும், தலையிடக்கூடியராகவும் எல்.இளையபெருமாள் இருந்தார். முன்னாள் காங்கிரஸ்காரர், எம்எல்ஏ - எம்பியாக இருந்தவர் என்கிற முறையில் அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் பேசக்கூடியவராக இருந்தார். மேலும், குறிப்பிட்ட பிரச்சினையில் தலித் மக்கள் சார்பாக அடுத்தகட்ட நகர்வை முன்மொழிபவராகவும் இருந்தார். தீவிரமான அமைப்புகள் வெளியே போராடிக்கொண்டிருந்தாலும் உள்ளே அரசு எந்திரத்திடம் பேசக்கூடிய தரப்பாக இவர் மட்டுமே இருந்தார். அவற்றைப் பயன்படுத்தி இயன்ற அளவு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தினார்!

 

நூல்: இளையபெருமாள் வாழ்க்கைச் சரித்திரம்
ஆசிரியர்: பாலசிங்கம் இராஜேந்திரன்
விலை: ரூ.300
வெளியீடு: நீலம் பதிப்பகம்
திரு காம்ப்ளக்ஸ், முதல் தளம்,
(மெர்குரி மருத்துவமனை அருகில்)
மிடில்டன் தெரு,
எழும்பூர்,
சென்னை - 8.
செல் : 7639962257

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம், ஆய்வாளர். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர். தொடர்புக்கு: stalinrajangam@gmail.com


1

2

1
கொழுப்பு மிக்க கல்லீரல் ஆபத்தானதா?துளசி கவுடாமின் கட்டண உயர்வுநல்வாழ்வு வாரியப் பதிவுஇதய வெளியுறைகாவல் துறைஆர்.காயத்ரி கட்டுரைதுறை நிபுணர்கள்11 பேர் விடுதலைஇலங்கைராஜன் குறை பி.ஏ.கிருஷ்ணன்தேர்தலில் கிடைக்குமா சுதந்திரமும் வளர்ச்சியும்?அஸ்ஸாம் துப்பாக்கி சூடுஐடிஇஸ்லாமிக் ஜிகாத்தாய் தேவாலயம்எண்டெப்பேபாரசிட்டமால்பாஜக மாநில முதல்வர்கள் மாற்றம்சாதி வாக்குகள்திருக்குறள்மாலன்சுரேந்திர அஜ்நாத்அகிம்சையை கொல்ல வேண்டிய தேவை என்ன?மறக்கப்பட்ட ஆளுமைஆடுதொட்டி: மாமிச நிலத்தின் வரைபடங்கள்சாப்பாட்டுப் புராணம் சமஸ்பேட்டிகள்புயல்கள்சியாமா சாஸ்திரிகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!