கட்டுரை, அரசியல், சட்டம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
தேர்தல் பார்வை: ஒரே புள்ளியில் பாஜக, பாமக
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ள பாமக, “பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி வென்றதோ அந்தக் கட்சியே ஒருவரை தொகுதியின் உறுப்பினராக நியமிக்கலாம். இடைத்தேர்தல்கள் தேவையற்றவை. மக்களின் வரிப் பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பவை” என்று கூறியுள்ளது.
இடைத்தேர்தல் குறித்த இந்த கருத்தை நீண்ட காலமாகவே பாமக கூறிவருகிறது. இடைத்தேர்தலில் மக்களின் நேரம், வரிப் பணம் வீணாகின்றன என்று பாமக சொல்வது சரிதானா என்று நாம் ஆராய்வதோடு இதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தான அம்சங்களையும் கவனிக்க வேண்டும்.
என்ன வேறுபாடு?
பாமகவின் கூற்றில் இருக்கும் முக்கியமான செய்தி ‘இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிக்கக் கூடாது’ என்பதுதான். அதற்குப் பதிலாக அரசியல் கட்சி தனது பிரதிநிதியை நியமனம் செய்துகொள்ள வேண்டும் என்று அது ஆலோசனை கூறுகிறது. அதாவது, எலக்ஷன் என்பதை ஒழித்துவிட்டு நாமினேஷன் என்பதை அது முன்மொழிகிறது. ‘எலக்ஷன்’ என்னும்போது வாக்காளர்கள் அங்கு அதிகாரம் பெறுகிறார்கள். ஆனால், ‘நாமினேஷன்’ என்னும்போது அவர்களது வாக்குரிமை என்னும் அதிகாரம் பறிக்கப்படுகிறது.
பாமக முன்மொழிந்துவரும் ஆலோசனையில் உள்ள ஆபத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் நமது நாடாளுமன்ற ஜனநாயக முறையில் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது எவ்வாறு வந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பது கிடையாது. ஒருவரது படிப்பு, அவரது சொத்து மதிப்பு முதலான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டுவந்தது. 1895ஆம் ஆண்டிலிருந்தே வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற கோரிக்கை இந்தியாவில் எழுப்பப்பட்டாலும் அதை பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முன்பாக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்திய அரசு சட்டம் 1919 மற்றும் 1935இன் கீழ் நடத்தப்பட்ட தேர்தல்களில் வரையறுக்கப்பட்ட சிலருக்கே வாக்குரிமை அளிக்கப்பட்டது.
வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியவர் அம்பேத்கர். 1928ஆம் ஆண்டு சைமன் கமிஷன் முன்னால் சாட்சியமளிக்கும்போது வயது வந்தோருக்கான வாக்குரிமை பற்றி அவர் வலியுறுத்தினார். 1931இல் கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் அந்தக் கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டது. எனினும் பிரிட்டிஷ் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
இந்தியா சுதந்திரம் அடைந்து அதற்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவுக்கு தலைவராக இருந்தபோது அம்பேத்கர் வயது வந்தவர்கள் அனைவருக்குமான வாக்குரிமை என்பதை முன்மொழிந்தார். அதற்கு துரதிஷ்டவசமாக அரசியல் நிர்ணய சபையில் சிலரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. ஃப்ராங்க் அந்தோனி என்ற உறுப்பினர், பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவர்களைக் கொண்ட நமது நாட்டில் அடுத்த பொதுத் தேர்தலில் அவர்கள் எப்படி தமது வாக்குரிமையைச் செலுத்துவார்கள் என்ற ஐயத்தை எழுப்பினார். மகாவீர் தியாகி என்ற உறுப்பினர் “என் அச்சம் என்னவென்றால், நாம் செய்யப்போவது ஒரு பயங்கரமான சோதனை, இது ஒரு மலைப் பாம்பாக நம்மை விழுங்கிவிடக்கூடும். அது நம்மை எங்கு அழைத்துச் செல்லும் என்று எனக்குத் தெரியவில்லை” என அச்சம் தெரிவித்தார்.
அதேபோல், “இது மிகவும் தீவிரமான சீர்திருத்தம், மாகாணங்கள் இதை ஏற்றுக்கொள்வது கடினம்” என்று மறுப்பு தெரிவித்தார் வல்லபபாய் பட்டேல். அவர்தான் அடிப்படை உரிமைகள் குறித்த ஆலோசனைக் குழுவிற்குத் தலைவராக இருந்தார். ஆனால், அம்பேத்கரோ “வாக்குரிமை என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையாகும். வாக்களிக்கும் உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று” என வாதாடினார்.
படிப்பறிவின்மைக்கும் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதற்கும் தொடர்பில்லை, படிப்பறிவில்லாத மக்கள் தமது உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பெற்றவர்களாகவே இருக்கிறார்கள் என எடுத்துரைத்தார். அம்பேத்கருடைய நிலைபாட்டையே ஜவஹர்லால் நேருவும் கொண்டிருந்தார். அதன் காரணமாகத்தான் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற ஜனநாயக உரிமை நமக்குக் கிடைத்தது. அதற்கு முன்பு இருந்த மறைமுகத் தேர்தல் முறையை ஒழித்து நேரடித் தேர்தல் முறையை ஏற்றுக்கொண்டது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியமான அம்சமாகும்.
வாக்குரிமையும் சமத்துவமும்
வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் முக்கியத்துவம் அது அரசியல் சமத்துவத்தை உறுதிப்படுத்துகிறது என்பதுதான். “அரசியலில் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு” என்ற கொள்கையை அங்கீகரித்ததன் மூலம் அரசியல் சமத்துவத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம் என அம்பேத்கர் அதைத்தான் சுட்டிக்காட்டினார்.
பாகுபாடுகள் நிறைந்த இந்திய சமூகத்தில் சமத்துவம் என்பது ஒவ்வாத ஒன்றாகவே பார்க்கப்பட்டது. அதனால்தான் சமூக, பொருளாதார தளங்களில் சமத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை அம்பேத்கர் வலியுறுத்தினார். சமத்துவத்தை விரும்பாத சனாதன சக்திகளால் வயதுவந்தோருக்கான வாக்குரிமையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தேர்தலை வெறுக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் தேர்தல்
நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்ற திட்டத்தை எப்படியாவது செயல்படுத்திவிட வேண்டும் என்பதில் சட்ட ஆணையம் இப்போது முனைப்பாக இருக்கிறது. தொடர்பாகக் கருத்து கூறும்படி அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் அழைப்புவிடுத்துள்ளது. ஆறு வினாக்களை முன்வைத்து அவற்றுக்குப் பதில் கூறும்படி தேர்தல் ஆணையம் கேட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ள முதல் வினா: “ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது, எந்த வகையிலும் நமது ஜனநாயகம், அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு, நாட்டின் கூட்டாட்சி அரசியல் ஆகியவற்றில் குழப்பத்தை ஏற்படுத்துமா?” என்பதாகும். இரண்டாவது வினா “தொங்கு நாடாளுமன்றம் / சட்டசபையின் சூழ்நிலையைச் சமாளிக்க பல்வேறு குழுக்கள் மற்றும் கமிஷன்கள் வழங்கிய பரிந்துரைகள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், மக்களவை மற்றும் சட்டமன்றங்களின் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதுபோல கருத்தொற்றுமையின் அடிப்படையில் பிரதமர் / முதல்வரைத் தேர்ந்தெடுக்கலாமா?” என்பதாகும். அதாவது தேர்தலைத் தவிர்க்க வேண்டும் என்பதே இதன் உள்ளிருக்கும் நோக்கம்.
பாஜகவின் தூண்டுதலில் சட்ட ஆணையத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ என்ற திட்டம் மக்களின் வாக்குரிமையைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடே ஆகும். நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் 5 ஆண்டுகள் நிலையான காலம் என்பதை நிர்ணயிப்பதன் மூலம் அடிக்கடி மக்களிடம் போக வேண்டும் என்ற அவசியத்தை அது நிராகரிக்கப் பார்க்கிறது.
பாமகவும் பாஜகவும்
இடைத்தேர்தல் வேண்டாம் என்பதற்கு பாமக கூறும் காரணங்களும், ஒரே நேரத்தில் தேர்தல் என்பதற்கு பாஜக கூறும் காரணங்களும் ஒன்றாக இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
மக்களின் பணமும், நேரமும் வீணாகிறது என்பதையே இரண்டு கட்சிகளும் பேசுகின்றன. உண்மையில் அவை உண்மையான காரணங்கள் இல்லை. மக்களின் வாக்குரிமையைப் பறித்து அரசியல் சமத்துவத்தை இல்லாமல் செய்வதே அவர்களின் நோக்கம். அரசியல் சமத்துவம் அழிக்கப்பட்டால் அதன் பின்னர் இங்கே நாடாளுமன்ற ஜனநாயகம் உயிரோடு இருக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். இது சிக்கன நடவடிக்கை அல்ல, அதிகாரத்துவ ஒத்திகை!

4

2





பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Duraiswamy.P 2 years ago
பாராளுமன்றத் தேர்தல் ஒன்றிய அரசை யார் ஆள வேண்டும் என்பது பற்றியது. அது பற்றிய ஒருவருடைய கட்சித் தேர்வு மாநிலத்தை யார் ஆள்வது என்பது பற்றியதாக இருக்கத் தேவையில்லை. அதுபோலவே மாநகராட்சி மற்றும் ஊராட்சி களை யார் ஆள்வது என்பது பற்றிய தனி தனி தேர்வு இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. உள்ளூர் பிரச்சனைகளே அங்கு இடம் பெறும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்த தனித்தனி தேர்வுகளில் தேர்வாளருக்கு குழப்பம் விளைவித்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே ஒரே சமயத்தில் அனைத்து பிரிவுகளுக்கும் தேர்தல் என்பது சரியான ஜனநாயக நடைமுறையாக இருக்க முடியாது
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 2 years ago
ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்கள் என்ற கருத்துடையவர்கள் , இந்தியா என்பது ஒரு துணைக்கண்டம் என்பதை மறந்துவிட்டவர்கள். பத்திருபது கோடி மக்கள்தொகைக்கு மேல் உள்ள நாடுகளை ஆளத் தகுதியில்லாதவர்கள் தான் இம்மாதிரியான யோசனைகளை முன்வைப்பார்கள். வேண்டுமானால் ஒரு மாநில தேர்தலில், பிரதமர் உட்பட மத்திய அரசுப்பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகள் யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சட்டம் கொண்டுவரலாம்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.