தலையங்கம், அரசியல், கூட்டாட்சி 3 நிமிட வாசிப்பு

ஈரோடு தேர்தல்: இழிவு தரும் வெற்றி

ஆசிரியர்
06 Mar 2023, 5:00 am
7

ரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அடைந்திருக்கும் வெற்றியை மிகுந்த பெருமிதத்தோடு  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதை மிகுந்த சங்கடத்தோடுதான் பார்க்க வேண்டி இருக்கிறது. இந்தத் தேர்தலைத் திமுக அணுகிய விதம் அதற்கு எந்தப் பெருமையையும் சேர்த்திடவில்லை. சொல்லப்போனால், ஒரு தொகுதியின் வெற்றிக்காக திமுக குவித்த கவனமும்,  செலவிட்ட பணமும் தமிழ்நாடு முழுவதும் மோசமான பேச்சு உருவாகவே வழிவகுத்திருக்கிறது.

இது பொதுத் தேர்தல் இல்லை. ஒரு தொகுதியின் இடைத்தேர்தல். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவை ஒட்டி நடந்த தேர்தலை, ஒரு தொகுதிக்கான தேர்தலாக - அதற்குரிய நிதானத்துடன் திமுக அணுகி இருக்கலாம். மொத்தம் பதிவான வாக்குகளில் 64.6% வாக்குவீதத்தைப் பெற்று 1.10 லட்சம் வாக்குகளுடன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தியிருக்கிறார் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன். ஒருவேளை நிதானமாக தேர்தலை அணுகியிருந்தால், இந்த வாக்கு வித்தியாசம் கொஞ்சம் குறைந்திருக்கும். அவ்வளவுதானே!  

மூர்க்கமான இந்த வெற்றியின் வழி திமுக வெளிப்படுத்த விரும்பும் செய்தி என்ன? ஒருவேளை இவ்வளவு மோசமான தோல்வியை அடைந்திருப்பதால் அதிமுக முழுச் செல்வாக்கையும் இழந்துவிட்டது என்ற செய்தியைத் திமுக கடத்த விரும்பினால் அதற்கு எந்த அர்த்தமும் இருக்கப்போவது இல்லை.

தமிழ்நாட்டில் எல்லாவற்றுக்கும் முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வைப்புத்தொகையைக்கூட இழந்தது திமுக. அதற்கு முன்னே 2010 பென்னாகரம் இடைத்தேர்தலில் அதே நிலைக்குத் தள்ளப்பட்டது அதிமுக. அதனால், காணாமல் போய்விட்டார்களா என்ன?

சொல்லப்போனால், அதிமுக இந்தக் காலகட்டத்தில் இவ்வளவு செல்வாக்கற்றதாக மக்கள் மத்தியில் முன்னிறுத்தப்படுவது நீண்ட கால நோக்கில் திமுகவுக்கு நல்லது இல்லை. பிரதான எதிர்க்கட்சி என்ற இடத்தில் அதிமுக செல்வாக்கை ஒருவேளை இழந்தால் அந்த இடத்தை அடையப்போவது பாஜக. முதல்வர் உச்சரிக்கும் ‘திராவிட மாதிரி’யானது அதிமுகவையும் உள்ளடக்கியதுதானே?

எல்லா வகைகளிலும் திமுக கூட்டணி இந்தத் தேர்தலில் பெரும் பலத்துடன் இருந்தது. இன்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய செல்வாக்கைப் பல மடங்கு உயர்த்திக்கொண்டிருக்கிறார்; அரசு மீது பெரிய குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை; ஏழுக் கட்சிகளின் கூட்டணி; வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த திருமகன் ஈவெராவின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஊர் அறிந்த முகம்… எதிர் வரிசையில், பொதுத் தேர்தலுக்குப் பின் எந்த வகையிலும் தன்னுடைய செல்வாக்கை பழனிசாமி உயர்த்திக்கொள்ளாதவராக இருக்கிறார்; அதிமுக தன்னுடைய உட்கட்சிப் பூசல்களுக்கு நடுவே அல்லாடிக்கொண்டிருக்கிறது; பெரிய கூட்டணி என்று சொல்லத்தக்க கட்சிகள் துணை இல்லை; வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசு பிரபலமான முகம் இல்லை. களம் இயல்பாக திமுக கூட்டணிக்கு மிகுந்த சாதகமாக இருந்தது.

தேர்தலைத் தன்னுடைய ஒன்றரையாண்டு ஆட்சி மீதான மக்களின் கருத்தெடுப்புபோல முதல்வர் ஸ்டாலின்தான் மாற்றினார். “திமுக ஆட்சியை எடை போடும் தேர்தலாக, இந்த இடைத்தேர்தல் இருக்கும்” என்றார் ஸ்டாலின். இடைத்தேர்தல்களை மக்கள் மனதை அறிந்துகொள்வதற்கான ஒரு தேர்வாக ஆட்சியாளர்கள் பார்க்க விரும்புவதில் தவறு இல்லை. அப்படியென்றால், தேர்தல் களம் இயல்பானதாக இருக்க அனுமதிக்க வேண்டும். திமுக தேவையற்ற பதற்றத்தையும் அழுத்தத்தையும் உருவாக்கிக்கொண்டது; இதன் மூலம் அதிமுகவையும் அழுத்தத்தில் தள்ளியது. 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திமுக நிர்வாகிகள் ஈரோட்டுக்குத் தேர்தல் பணிக்காக வந்து சென்றனர். அமைச்சர்கள் ஈரோட்டை முற்றுகையிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். வெள்ளம்போலப் பணமும், பரிசுப் பொருட்களும் பாய்ந்தன. திமுகவுக்கு எல்லா வகைகளிலும் அதிமுக ஈடு கொடுக்க முற்பட்டது. இரு கட்சிகளும் வெட்கமின்றி பண விநியோகத்தில் ஈடுபட்டன. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தின் தரத்தையும் கீழே இழுத்தார். கேவலமான பேச்சுகளுக்கு மக்கள் காது கொடுக்க நேர்ந்தது. 

எதுவும் தமிழ்நாட்டு மக்களுக்குப் புதிது இல்லை. ஆனால், மோசமான போக்கில் இது அடுத்தகட்டம். திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு அடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு தாவல்; இப்போது ஈரோடு கிழக்கு அடுத்த தாவல். தேர்தல் வெற்றியானது, திராவிட மாதிரிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்றால், இந்த வெட்கக்கேடுகளும் திராவிட மாதிரியின் மாற்ற முடியாத ஓர் அங்கம்; அப்படித்தானே! பெரியாருடைய சொந்த ஊரிலேயே இது நடந்திருப்பது எவ்வளவு மோசம்?

தமிழ்நாட்டில் இன்றைக்கு என்ன பேச்சு உருவாகியிருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் தெரிந்துகொள்வது நல்லது. “ஏ அப்பா… ஒரு ஓட்டுக்கு இவ்வளவு கொடுக்குறாங்கன்னா மொத்த தொகுதிக்கு எத்தனை நூறு  கோடி ஆகியிருக்கும்! அப்பம் எவ்வளவு அடிச்சு வெச்சிருப்பாங்க!”

சென்ற ஒரு தசாப்தத்தில் எவ்வளவு மோசமான இடத்திலிருந்து திமுகவை ஆட்சி இடம் நோக்கி ஸ்டாலின் அழைத்து வந்திருக்கிறார் என்பதை அவரே நினைவுகூர்ந்துகொள்ளுதல் நலம். திமுகவுக்கு மட்டும் அல்லாது, இரு திராவிடக் கட்சிகளுக்குமே சேர்த்து இன்று ஒரு தார்மிக இடத்தை உருவாக்கி இருக்கிறார். ‘திராவிட மாதிரி’ என்று அவர் உச்சரிக்கும் சொல்லாக்கமானது, சென்ற ஒரு நூற்றாண்டில் இங்கே நிகழ்ந்திருக்கிற அவ்வளவு மேன்மையான கனவுகள், காரியங்களுக்குமான உரிமைக்கோரல். 

தன்னுடைய கட்சியை மட்டும் அல்லாது, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் கலாச்சாரத்தையும் மேம்படுத்தும் ஒரு பொறுப்பு ஸ்டாலின் முன் இருக்கிறது. இதை அவர் மறக்கலாகாது. மேலும், இத்தகு சறுக்கல்களுக்காகத்தான் பாஜக போன்ற ஒரு கட்சி காத்திருக்கிறது. சில அற்பமான காரியங்கள் வழியே அதற்கான நியாயப்பாட்டைத் திமுக உருவாக்கிக் கொடுக்கலாகாது.

பல விஷயங்களிலும் ஏனைய மாநிலங்களைச் சுட்டிப் பேசும் திமுக, எத்தனை மாநிலங்களில் இப்படி இடைத்தேர்தல்களைப் பணத்தை வாரியிறைக்கும் கலாச்சாரம் இருக்கிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பதவியில் இருக்கும் ஒருவர் இறந்தால், அந்தத் தொகுதியில் அவருடைய உறவினரே போட்டியிடும்பட்சத்தில் ஏனைய கட்சிகள் ஒதுங்கிக்கொள்வது என்ற பண்பாட்டை உருவாக்க மஹாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் தலைப்படுகின்றன. அப்படியெல்லாம்  சிந்திக்கலாம். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.    

இந்த ஒன்றரையாண்டில் பல விஷயங்களில் முதல்வர் ஸ்டாலின் நல்லுதாரணராக இருந்திருக்கிறார். திமுக, அதிமுக இரு தரப்பாரும் கடந்த காலத்தில் செய்த தவறான விஷயங்களை மாற்றி அமைத்திருக்கிறார். அவை எல்லாமே திமுகவைத் தாண்டி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் அரசியல் சூழலிலுமே தாக்கத்தை உண்டாக்கி இருக்கின்றன. அப்படிப் பார்க்க இந்தத் தேர்தலைத் திமுக அணுகிய விதம் ஒரு யு டர்ன். இது மோசமான ஆரம்பம் ஆகிவிடக் கூடாது; இதோடு இந்தப் போக்குக்கு முடிவு கட்டப்பட வேண்டும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

9

1



1


பின்னூட்டம் (7)

Login / Create an account to add a comment / reply.

ICF Chandroo   2 years ago

இடைத்தேர்தல் வீண்செலவு. அரசு பணியாளர்களின் விழலுக்கு இறைத்த உழைப்பு , இதர பணிகள் தேக்கம் என எதிர்மறைகளே நிறைய. இறந்த போன கட்சிக்கு மறுதேர்தல் இல்லாமல் காலியான அந்த தொகுதியை ஒதுக்கும்வண்ணம் பிரதித்தவ சட்டங்கள் திருத்தப்பட்டால் அரசு பணம் மிச்சமாகும். ஏனெனில் கட்சிக்கு தான் மக்கள் வாக்கு அளிக்கிறார்கள். (சுயேட்சை வென்ற தொகுதியாக இருப்பின் இரண்டாவது இடம் பிடித்த நபருக்கு பதவியை தரலாம். அப்படியே தொகுதி காலியாக இருந்தால் தான் என்ன இழப்பு தொகுதிக்கு?).

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

திரு ஸ்டாலின் மீது அவருக்கே நம்பிக்கை இல்லை.... அவரின் போதாமையை வெளிபடுத்தும் விதமாக அவர் நடந்து kolgirar

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Dr. S. Ezhilan   2 years ago

தேனியில் EVKS தோல்வியடைந்தது போல் இங்கு தோல்வியடையக் கூடாது என்ற எச்சரிக்கையும் ஒரு காரணம். முதல்வவர் 3 - 5 மணிநேரம் மட்டுமே களத்தில் இருந்தார். இனி காசு தராமல் காந்தியும் கலாமும் கூட தேர்தலில் போட்டியிட இயலாது என்கிற மோசமான நிலை. சிதறு தேங்காய் ஆன அதிமுக ஆளும் கட்சியாக இருந்போது இடைத்தேர்தல்களை நேர்மையாகவா கையாண்டது? முடிவால் முதல்வருக்கு உற்சாகம். பாஜக தான் பாவம். குதிரையைத் தேடிக்கொண்டுள்ளது.

Reply 0 1

Login / Create an account to add a comment / reply.

Sundararajan Lakshminarasimhan   2 years ago

அடேயப்பா! என்ன ஒரு நகாசு. ஈயம் பூசினா மாதிரியும் இருக்கணும். பூசாத மாதிரியும் இருக்கணும். தலைப்போ அரசின் செய்கையை எதிர்ப்பது. உள்ளடக்கமோ பல பாராட்டுகளுக்கு நடுவே ஒரு செல்லத் தீண்டல். ஆர் எஸ் பாரதி ஊடகங்கள் என்பது சரிதான் போல

Reply 12 0

Login / Create an account to add a comment / reply.

Abi   2 years ago

தி.மு.க விற்கு இவ்வளவு பயம் வர காரணம், அரசு ஊழியர்களுகளின் ஆதரவு இல்லாமை... மருத்துவர்களை ஊதிய உயர்வு அ ஆ 354 தருவேன் என்று வாக்குறுதியை அளித்து விட்டு ஆட்சிக்கு வ‌ந்து பாரபட்சமான அ ஆ 293 கொடுத்தது, ஆசிரியர்கள் ஆதரவிண்மை, வெறுப்பு etc..

Reply 4 0

Abi   2 years ago

ஒரு இடைத்தேர்தலில் இவ்வளவு செலவழிக்க இயலும் எனில், பொது தேர்தலில் செலவழிக்க எவ்வளவு சம்பாத்தியம் செய்ய வேண்டும்.. 🤔

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

S.SELVARAJ   2 years ago

தலையங்கம் திமுகவை என்பதைவிட முதல்வருக்கு ஒரு சின்ன... செல்ல குட்டை வைத்துள்ளது. காரணம்... திமுகவின் மீது வெறுப்பு உள்ளவர்களில் சிலர் முதல்வரின் அணுகுமுறைகளை பாராட்டுகின்றனர். இது கலைஞரின் காலத்தில் காணாதது. மக்களும் மாற வேண்டும். ஏதாவது கொடுத்தால்தான் வாக்களிப்பேன் என்கிற மனோநிலையை உடைத்து வெளியில் வர வேண்டும். சும்மாவா கொடுக்கிறார்கள்... கொள்ளையடித்து சேர்த்து வைத்ததைத்தானே கொடுக்கிறார்கள். கொடுக்கட்டுமே என்று நினைப்பதும்...கொடு என்று கேட்பதும் அதிகரித்துள்ளது. இது ஒரு நோய். இது எளியவர்கள் துவங்கி... அரசு ஊழியர்கள், வணிகர்கள் எந்த தொடர்ந்து பணக்காரர்கள் வரை பரவியிருக்கிறது. அன்பளிப்புகளை வாங்கும்போதே சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் உரிமையை இழந்துவிடுகிறோம். மக்களின் விழிப்புணர்வே... ஆட்சியாளர்களின் எண்ணங்களை மாற்றும்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அரசியல் கட்சியே குற்றவாளியாகிவிடுமா?வடக்கு: மோடியை முந்தும் யோகிஆரோக்கியத் தொல்லைகள்தஞ்சை பெரிய கோயில்ராம் – ரஹீம் யாத்திரைஏழைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்உலகளாவிய வளர்ச்சிமிகை ஈடுபாடும் உருவாவது எப்படி?முற்போக்கான வரிவிதிப்பு முறைபாரத் ஜாடோ யாத்திரைஎப்படி தப்பிப் பிழைக்கிறது ஜனநாயகம்!டெஸ்ட் கிரிக்கெட்அஜித் தோவல்பொருளாதார மந்தநிலை2024: யாருக்கு வெற்றி?கல்யாணச் சாப்பாடுதேர்வுஅசிஷ் ஜாசமஸ் கி.ரா. பேட்டிபசுமை கட்டிடங்கள்ஆசாதிஹிஜாப்பும் மூக்குத்தியும்: துலியா கிளர்த்தும் சிந்அடித்தட்டு மக்கள்அரசியல் கட்சிராஜ்பவனங்கள் காரியபவனங்களாக மாறிவிட்டன?அமெரிக்கச் சிறைராஜராஜ சோழன்சக்ஷு ராய் கட்டுரைஇஸ்ரேலியர்கள்இந்தியப் பெண்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!