கட்டுரை, அரசியல், பொருளாதாரம், சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு

ஐஎம்எஃப் கடன் பெறவா சீர்திருத்தங்கள்?

ரஷீத் அம்ஜத்
22 Sep 2024, 5:00 am
0

பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி தொடர வேண்டுமென்றால் அதன் கட்டமைப்பைச் சீர்திருத்துவது முன்தேவையாகும். மக்கள்தொகை அதிகரிப்பு, வேலை தேடுவோர் பெருக்கம் ஆகியவை வளர்ந்துவரும் நிலையில் வறுமையைக் கட்டுப்படுத்த, வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கட்டுக்குள் வைக்க, மாநிலங்களுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்க குறைந்தபட்சம் ஆண்டுக்கு 6% என்ற அளவில் நம்முடைய பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) இருந்தாக வேண்டும்.

அப்படிக் கட்டமைப்புகளில் சீர்திருத்தம் செய்ய நாம் முயலும்போதெல்லாம் வெளிவர்த்தகப் பற்று - வரவு நிலையில் இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதி சரிந்து மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கிக்கொள்கிறோம், சர்வதேச அமைப்புகளிடம் வாங்கிய கடனுக்கு அசலின் ஒரு பகுதியையும் வட்டியையும் கட்ட முடியாமல் ‘கடன் தவணை தவறிய நாடு’ என்ற கெட்டபெயரைச் சம்பாதிக்கிறோம்.

இப்படித் தொடர்ந்து நம்மை முன்னேறவிடாமல் செய்யும் தளைகளிலிருந்து விடுபட்டாக வேண்டும் என்றால், செயல்படுத்துவதற்குக் கடினமாக இருந்தாலும் நம்முடைய கட்டமைப்பில் பொருளாதார சீர்திருத்தங்களைக் கட்டாயம் செய்தே தீர வேண்டும்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ஐஎம்எஃப் காரணம் அல்ல

பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் (ஐஎம்எஃப்) கடன் கேட்டுப் போய் நிற்பதால்தான் இந்தச் சீர்திருத்தங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று பெரும்பாலான பாகிஸ்தானியர் நினைக்கின்றனர்; ஐஎம்எஃப்பிடம் கடனுக்குப் போய் நிற்காவிட்டால் எப்போதும்போல நாம் கவலையில்லாமல், கட்டுப்பாடுகள் இல்லாமல், சிக்கன நடவடிக்கைகள் ஏதுமில்லாமல் வாழ்ந்துவிடலாம் என்று கருதுகின்றனர்.

பணக்காரர்கள் வருமானம் வந்தாலும் வரி செலுத்துவதில்லை, மக்கள் துய்க்கும் மின்சாரத்துக்கு அரசு மானியம் தர வேண்டியிருக்கிறது, அரசின் வரவைவிட செலவு அதிகமாக இருப்பதால் - அரசின் வருவாய் கணக்கில் பெரிய துண்டு விழுகிறது, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாங்கும் கடன் சுமை அதிகரிக்கிறது, கடன் தரும் புரவலர் நாடுகளிடமும் வெளிநாட்டு வங்கிகளிலும் வாங்கியுள்ள கடன் அளவும் பெரிதாகிக்கொண்டேவருகிறது.

நாம் இப்படியே பொறுப்பில்லாமல் நிதி நிர்வாகத்தைத் தொடர்ந்தால் நாடு திவாலாகும் நிலைக்குத்தான் செல்லும். அப்படி திவாலாகிவிடக் கூடாது என்றுதான் அடிக்கடி பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் ஓடி ஓடி கடன் வாங்குகிறோம், பிறகு மீண்டும் கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் திவாலாகும் நிலைக்குச் சென்று அந்தக் கடனை அடைக்க, மேலும் கடன் வாங்குகிறோம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மேட்டுக்குடி நிதியமைச்சர்கள்!

முஹம்மத் உசாமா ஷாஹித் 04 Aug 2024

இந்த உண்மையை நாம் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி ஒப்புக்கொண்டால் கல்லூரியில் பொருளாதார பாடம் படிக்கத் தொடங்கும் இளங்கலை வகுப்பு மாணவன்கூட சொல்லிவிடுவான், இந்த நிலையைத் தடுக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று – பெரிய பொருளாதார அறிஞர்கள்கூட தேவையில்லை. அவற்றைச் செய்யத் தயாராக இருந்தால் இப்போதும் கெட்டுப்போய்விடவில்லை, பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் கடனே வேண்டாம் என்றுகூட சொல்லிவிடலாம்.

நம்முடைய நிதியமைச்சருக்குத் தன்னம்பிக்கை இருக்குமென்றால், பாகிஸ்தான் மக்களுடைய முழு ஆதரவும் அவருடைய சீர்திருத்த நடவடிக்கைக்குக் கிடைத்தால் - ஏற்கக்கூடிய, நீண்ட காலத்துக்கு நினைத்திருக்கக்கூடிய - பொருளாதார சீர்திருத்தங்களை உடனே தொடங்கிவிடலாம். வாஷிங்டனில் உள்ள நம்முடைய தூதரை அழைத்து ‘ஐஎம்எஃப்பின் அடுத்த வாரியக் கூட்டம் எப்போது கூடுகிறது, நாம் கேட்டிருந்த 700 கோடி அமெரிக்க டாலர் கடன் எப்போது கிடைக்கும்?’ என்று அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய அவசியமே ஏற்படாது.

ஐஎம்எஃப் என்பது உலக அளவில் பல நாடுகளுக்குக் கடன் தரும் ஒரு வங்கிதான், கடைசி முயற்சியாகத்தான் எல்லா நாடுகளும் அதனை அணுகி கடன் கேட்கின்றன. நாம் போய் கடன் கேட்காவிட்டால் அந்த வங்கிக்கு வேறு வேலையே கிடையாது, அதை மூடிவிட வேண்டியதுதான்.

ஏன் சீர்திருத்த முடியவில்லை?

இப்போது மீண்டும் அடிப்படையான கேள்விக்கே திரும்புவோம்: நமக்கு மிகவும் அவசியப்பட்டாலும்கூட பொருளாதார சீர்திருத்தங்களை ஏன் மேற்கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம், நம்மை ஆளும் செல்வாக்கு மிக்க மேட்டுக்குடி, சீர்திருத்தங்களை மேற்கொள்ள நம்மை அனுமதிப்பதில்லை.

நாட்டின் உற்பத்திக் காரணிகளையும் உற்பத்திக்கான களங்களையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மேட்டுக்குடிகள், நாட்டுக்குப் பலன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இவற்றின் மூலம் தொடர்ந்து தங்களுக்குக் குடிவாரம்போல கப்பம் கிடைத்துக்கொண்டிருப்பதால் அதை உண்டுகொழுத்து, நம்மை உறிஞ்சிப் பிழைக்கின்றன. இந்த உற்பத்தி முறையில் நிறைய விரையமும் ஆதாரங்கள் சேதமும் ஏற்படும் அளவுக்குத் திறமையில்லாமல் இருந்தாலும் இதைச் சீர்திருத்தவிடாமல், இந்த முறையை மாற்ற முடியாமல் அந்தச் சக்திகள் தடுத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு அரசியல் செல்வாக்கும், அதிகார வர்க்க ஆதரவும் அதிகம்.

இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், பொருளாதாரத்தைச் சுரண்டிப் பிழைத்த காலம் மலையேறும் நேரம் வந்துவிட்டது; ஆங்காங்கே பல நாடுகளில் மக்களுடைய கோபம் பெரிய கிளர்ச்சிகளாக வெடித்துக்கொண்டிருக்கிறது என்பதை பாகிஸ்தானை ஆளும் செல்வாக்கு மிக்க மேட்டுக்குடிகள் உணர வேண்டும். நீண்ட காலத்துக்கு இப்படியே தொடர முடியாது. இதை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக அறிஞர் ஸ்டெஃபான் டெர்கான் சுட்டிக்காட்டுகிறார். பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, பொருளாதாரசீர்திருத்தங்கள் குறித்து அவர் தயாரித்துக்கொடுத்த அறிக்கையை அரசு புறக்கணித்துவிட்டதாகவே தெரிகிறது. இது ஸ்டெஃபான் டெர்கான் ஆலோசனைக்கு ஏற்பட்ட தோல்வியாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்.

நம் நாட்டுக்குச் சீர்திருத்தமே தேவையில்லை என்று ஆளும் மேட்டுக்குடிகளும், நாட்டு மக்களில் கணிசமானவர்களும் நினைப்பது தவறான கருத்தாகும். நம் நாட்டு மக்கள் சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்பவர்கள், தேவைப்படும் தியாகங்களைச் செய்யவும் தயங்கமாட்டார்கள். இதனால்தான் பல முறை நெருக்கடிகளால் மிகவும் சிக்கித்தவித்த நிலையிலிருந்து மீண்டுவந்திருக்கிறோம். ஆனால், சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள் சுயநலம் காரணமாகத்தான் எதிர்க்கிறார்கள்.

வணிகர்கள் தங்களுடைய கொள்முதல், விற்பனை விலை, லாபம் ஆகியவை அரசுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று மறைப்பதற்காக வரிவிதிப்புகளையும் வரி ஆய்வுகளையும் கடுமையாக எதிர்க்கின்றனர். நடுத்தர வர்க்க மக்களோ கல்விக் கட்டணம், மருத்துவக் கட்டணம், மின் கட்டணம், பெட்ரோல் விலை, நுகர்பொருள்களுக்கான விலை, காய்கறி – பழங்கள் விலை, மருந்து மாத்திரைகள் விலை என்று பலவற்றின் உயர்வாலும் அலைக்கழிக்கப்பட்டு வாழ்க்கைத் தரம் குலைந்து அவதிப்படுகின்றனர், அவர்கள் மேட்டுக்குடிகளுடன் சேர்ந்திருக்கவில்லை.

யார்தான் எதிர்க்கிறார்கள்?

அப்படியானால் பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள் யார்? முதலாவது, அரசியலில் உள்ள மேட்டுக்குடிகள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, ‘மக்களுடைய பிரதிநிதிகள்’ என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மக்களிடம் நேரடி ஆதரவே கிடையாது. பொருளாதார சீர்திருத்தங்கள் அமலாகும்போது நடுத்தர வர்க்கமும் தொழிலாளர்களும்கூட சில சுமைகளைத் தாங்க நேரிடும். அப்படி அவர்கள் துயரப்படாமல் இருக்க குரல் கொடுப்பதாக பாவனை செய்து, சீர்திருத்தங்களை இவர்கள் எதிர்க்கின்றனர்.

இரண்டாவது, இந்தச் சீர்திருத்தங்களுக்கு எதிராக மக்கள் அலறும்படியாக ஐஎம்எஃப்பே நடந்துகொள்கிறது. அது கொண்டுவர நினைக்கும் பொருளாதாரசிக்கனம், பொதுப் பயன்பாட்டுக் கட்டண உயர்வு ஆகியவற்றை உடனடியாகவும் வரிசையாகவும் எல்லா இனத்திலும் கொண்டுவர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இது நிச்சயம் ஏழைகளாலும் நடுத்தர வர்க்கத்தாலும் தாங்க முடியாது. ஏழைகளின் எதிர்கால நன்மைக்காகத்தான் பொருளாதார சீர்திருத்தம் என்றாலும் நிகழ்காலத்தில் அவர்களால் வாழ்க்கையே நடத்த முடியாத அளவுக்கு மென்னியைப்பிடிப்பதால் அவர்களிடமிருந்து எதிர்ப்புதான் வெளிப்படும்.

மூன்றாவதாக, சீர்திருத்தங்களுக்கு எதிராக இருப்பவை உலக சந்தையும், பாகிஸ்தானுக்கு மட்டுமே இருக்கும் சில நிரந்தர நட்பு நாடுகளும்தான் (சீனம், ஐக்கிய அரபு சிற்றரசு, சவுதி அரேபியா). பொருளாதார சீர்திருத்தங்களைப் பாகிஸ்தானால் மேற்கொள்ளவே முடியாது என்று நினைப்பவை இவைதான். எனவே, இருதரப்பு ஒப்பந்தங்கள் செய்யப்படும்போதுகூட அவநம்பிக்கையுடன்தான் அவை செயல்படுகின்றன.

பொருளாதார சீர்திருத்தங்களை அமல்செய்துவிடக் கூடாது என்பதற்கு ஆதரவாக வலுவான கூட்டணி பாகிஸ்தானில் நிலவுகிறது. அது அரசியல் கட்சிகளாகவும் மேட்டுக்குடிகளாகவும் வெவ்வேறு குழுக்களாகவும் இருக்கிறது. சீர்திருத்தம் அவசியம் என்று மக்களை நம்பவைத்து அவர்களின் ஆதரவுடன் அதைச் செயல்படுத்தும் அரசியல் கட்சி அல்லது கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் சீர்திருத்தம் நடைமுறைக்கு வரும். அப்படி வந்தால் உலக அளவில் பாகிஸ்தான் மீது நம்பிக்கையும் ஏற்படும். நமக்குக் கடன் தர விரும்பாத நட்பு நாடுகளின் பதற்றமும் குறையும்.

அப்படி ஒரு நிலை வந்த பிறகு நாம் ஐஎம்எஃப் அமைப்பையே அலட்சியம் செய்யலாம். அதுவரை நாம் வாயைத் திறந்து எதையாவது பேசி, கிடைக்கும் கொஞ்ச நிவாரணத்தையும் கோட்டைவிட்டுவிடக் கூடாது. மேல்தட்டு அரசியலர்கள் ஒரு காலைத் தூக்கி ஐஎம்எஃப்பை உதைக்க முற்படுவதைப் போல, பாகிஸ்தானிய சமூகமும் ஒரு காலைத் தூக்கி நின்றால் - நிற்பதற்கான இரண்டு கால்களும் வாரிவிடப்பட்ட நிலைக்குச் சென்றுவிடும், நாம் நிற்பதற்குப் பதிலாக தரையில் விழுந்துவிடுவோம்!

© த டான்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மேட்டுக்குடி நிதியமைச்சர்கள்!
25 ஆண்டுகளில் ஒரு பிரச்சினையைக்கூட தீர்க்கவில்லை: மிஃப்தா இஸ்மாயில் பேட்டி
பாகிஸ்தான் – சீன உறவு ஏன் வலுப்படவே இல்லை?
பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது?
யாராக இருந்தார் பர்வேஸ் முஷாரஃப்?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

1






டபுள் என்ஜின் ரயில்மாநிலக் கட்சிகள்மாயக் குடமுருட்டி: அண்ணனின் தூண்டிலைத் திருடிய அப்சிறுநீர்ப் பாதையில் கல்கியூட் தேர்வுஜெனரல் இண்டியன் இங்கிலீஷ்ஐசக் சேடினர் பேட்டிகிண்டர் கார்டன் சேனைநீதிபதி துலியாமுறைக்கேடுகள்ஆல்கஹால்சிறுநீர்ஜனதாஎன்.ஐ.ஏ. அருஞ்சொல் தலையங்கம்தனிக் கட்சிஜூலியஸ் நைரேரே33% இடஒதுக்கீடுதிருமாவேலன்மக்கள்தொகைகர்த்தநாதபுரம்மூன்று தீர்க்கதரிசன விஷயங்கள்அறிஞர்கள்மறுசீரமைப்பு திட்டம்வர்க்கரீதியில் வாக்களிப்புகீதிகா சச்தேவ் கட்டுரைபிடிஆர் அருஞ்சொல் தமிழ்நாடு நவ் பேட்டிசமமின்மைபடிப்பதற்காகவே மன்னார்குடி குடிபெயர்ந்தோம்தமிழ் இயக்கம்வாசிக்கும் தமிழகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!