கட்டுரை, அரசியல், ஆளுமைகள், சர்வதேசம் 8 நிமிட வாசிப்பு

யாராக இருந்தார் பர்வேஸ் முஷாரஃப்?

முகம்மது தாகி
08 Feb 2023, 5:00 am
0

“என்னுடைய நாய்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா?“

“டாட் – பட்டி, சார்!”

நாய்களை விரும்பும், விஸ்கி விழுங்கும், சுருட்டு குடிக்கும், பெண் பித்தரான - பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப். ‘பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன’ (பிஐஏ) பிகே 805 விமானத்தின் காக்பிட்டிலிருந்து 1999 அக்டோபர் 12ஆம் நாளில் கொழும்பிலிருந்து கராச்சிக்கு விமானம் புறப்பட்டபோது இந்தக் கேள்வியைக் கேட்டார். ஆனால், அந்த விமானம் இறங்க அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் வான் எல்லையை அடைந்தவுடன் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அறிவித்தனர்.

கராச்சி விமான நிலையத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட ராணுவப் படைப் பிரிவுத் தளபதி மேஜர் ஜெனரல் மாலிக் இஃப்திகார் அலி கானோ அந்த அறிவிப்பை அலட்சியம் செய்துவிட்டு, 198 பயணிகளுடன் அந்த விமானம் கராச்சியிலேயே இறங்கலாம் என்று அனுமதித்தார். இந்த விமானம் கொழும்பு நகரிலிருந்து புறப்பட்ட அதேசமயம், தலைமை தளபதி பதவியிலிருந்து முஷாரஃப்பை நீக்கிவிட்டு லெப். ஜெனரல் ஜியாவுத்தீன் என்பவரைத் தலைமை தளபதியாக நியமித்திருந்தார் அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீஃப்.

யார் இந்த முஷாரஃப்?

கொந்தளிப்பான சூழ்நிலையில் கராச்சிக்கு முஷாரஃப் தன் வாழ்நாளில் செல்வது அது இரண்டாவது முறை; அதற்கும் முன் தேசப் பிரிவினையின்போது தன்னுடைய பெற்றோருடனும் இரண்டு சகோதரர்களுடனும் 1947 ஆகஸ்ட் 15இல் கராச்சியை அடைந்தார் நான்கு வயது முஷாரஃப்.

சையது பர்வேஸ் முஷாரஃப் பழைய தில்லியில் 1943 ஆகஸ்ட் 11இல் பிறந்தார். அவருடைய தந்தை சையது முஷாரஃப் உத்தின், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் படித்த பட்டதாரி. வெளிவிவகாரத் துறையில் கணக்காளராகப் பணிபுரிந்தார். முஷாரஃப்பின் தாயார் ஜரீன், தில்லியில் இருந்த இந்திரப்பிரஸ்தா மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பள்ளிக்கூட ஆசிரியையாகப் பணியாற்றிய அவர் பின்னாளில் குடும்ப வருவாய் போதாததால் பாகிஸ்தான் சுங்கத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார்.

பிறகு அவர்களுடைய குடும்பம் துருக்கியின் தலைநகரம் அங்காராவுக்கு இடமாற்றல் காரணமாக குடிபெயர்ந்தது. நவீன துருக்கியின் தந்தை என்று அழைக்கப்படும் முஸ்தபா கமால் பாஷாவின் வரலாறு இளைஞர் முஷாரஃப்பை மிகவும் கவர்ந்தது. ஜெனரல் அயூப்கான் பாகிஸ்தானில் முதன்முறையாக ராணுவ ஆட்சியை அமல்படுத்தியபோது 1961இல் ராணுவத்தில் சேர்ந்தார் முஷாரஃப்.

பீரங்கிப் படையில் சேர்ந்த முஷாரஃப் பிறகு எஸ்எஸ்ஜி என்று அழைக்கப்படும் கமாண்டோ படைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்தியாவுடன் நடந்த இரண்டு போர்களிலும் முஷாரஃப் கலந்துகொண்டார். ஆனால், குறிப்பிடும்படியான வீர தீர சாகசங்கள் எதையும் செய்யவில்லை. பிறகு ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். தாக்கும் படைப் பிரிவுக்குத் தளபதியாகவும் இருந்தார்.

தலைமைத் தளபதி முஷாரஃப்

அரசின் கொள்கைகளை வகுக்கும் தேசிய பாதுகாப்புப் பேரவையில் ராணுவத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரிய தலைமைத் தளபதி ஜெனரல் ஜஹாங்கீர் கராமத்தை, அனைவர் முன்னாலும் வசைமாரிப் பொழிந்த பிரதமர் நவாஸ் ஷெரீப் நீக்கிவிட்டார்; இந்தியாவிலிருந்து அகதியாக வந்தவர்தானே, நமக்கு அடங்கி நடப்பார் என்று தவறாகக் கணித்து முஷாரஃப்பைத் தலைமைத் தளபதியாக நியமித்தார். பாகிஸ்தானைப் பொருத்தவரை தலைமை தளபதிதான் ராணுவம், ராணுவம்தான் தலைமை தளபதி என்று பார்க்கக்கூடியவர்கள்.

அந்தப் பதவியிலிருப்பவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், எந்த மொழியைப் பேசுகிறவர், இந்தப் பதவிக்கு வருவதற்கு முன்னால் என்னவாக இருந்தார் என்றெல்லாம் ஆராயாமல் முழு விசுவாசம் செலுத்துவார்கள். பஷ்டூன் மொழி பேசும் அயூப்கானாக இருந்தாலும், பாரசீகம் பேசிய துருக்கியைப் பூர்வீகமாகக் கொண்ட ஷியா முஸ்லிமான யாஹ்யா கானாக இருந்தாலும், பஞ்சாபி முஜாஹிரான ஜியாவுல் ஹக்காக இருந்தாலும், ஆதரிப்பார்கள்.

சொந்த ஆசைகளும் குணாதிசயங்களும் ராணுவ தோரணையில் கொஞ்சமாகத்தான் வெளிப்படும். நவாஸ் திட்டியவுடன் ஜெனரல் கராமத் பதவி விலகியதை ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் - முஷாரஃப் உள்பட – பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. பிற்காலத்தில், முஷாரஃப்பை நீக்கும் முடிவை நவாஸ் எடுப்பதற்கு முன்பிருந்தே இருவரும் ஒருவர் மீது இன்னொருவர் பாய்ந்து கொன்றுவிடும் மனநிலையோடு அதற்கான தருணம் எதிர்பார்த்துக் கறுவிக்கொண்டிருந்தார்கள் என்பதும் வரலாற்றின் நகைமுரண்.

தன்னிடம் ஆலோசனை கலக்காமலேயே கார்கில் மலைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தை ஊடுருவ வைத்துவிட்டாரே, தானும் வாஜ்பாயும் மேற்கொண்ட சமரச முயற்சிகளைத் தகர்த்துவிட்டாரே என்று முஷாரஃப் மீது நவாஸுக்குக் கடுமையான கோபம்; அது மட்டுமில்லாமல் இந்திய ராணுவம் போஃபர்ஸ் பீரங்கிகள் மூலம் பதிலடி கொடுக்க ஆரம்பித்ததும் பாகிஸ்தான் வீரர்களுக்கு உயிர்பிச்சை தாருங்கள் என்று அமெரிக்காவின் காலில் விழுந்து அவர்களைத் தலையிடச் செய்ய நேர்ந்ததே என்ற அவமானமும் நவாஸுக்கு. இதையடுத்து போர் நிறுத்தத்தை அறிவித்தார் நவாஸ். பாகிஸ்தான் ராணுவம் இதை விரும்பவில்லை.

போர் நீடித்திருந்தால் நமக்குத்தான் வெற்றி என்று மார்தட்டினார்கள். இப்படி எங்களை பலவீனப்படுத்திவிட்டீர்களே என்றும் நவாஸ் மீது பாய்ந்தனர். ஜெனரல் கராமத்தைப் போல, நவாஸ் திட்டியதும் மூட்டை கட்டிக்கொண்டு போகக் கூடாது என்றே பெரும்பாலான பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகள் உறுதியாக இருந்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் சமரசம் ஏற்பட பிரதமர் வாஜ்பாய் மேற்கொண்ட பேருந்து யாத்திரையையும் லாகூரில் பிறகு கூட்டாக அறிவித்த அமைதிக்கான பிரகடனத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கும் வகையில் கார்கிலில் சண்டையைத் தொடங்கிவிட்டு, மீள வழியில்லாமல் செய்ததற்காக முஷாரபைத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து அகற்ற சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தார் நவாஸ். அவர் இலங்கையிலிருந்து திரும்பிய நாளை அதற்குப் பயன்படுத்திக்கொண்டார். 

இது தொடர்பான அறிவிப்பு பாகிஸ்தான் டிவியில் வெளியானபோது, ராணுவ உயர் அதிகாரிகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். பிரதமர் நவாஸ் செய்ய நினைத்த தளபதி மாற்றப் புரட்சிக்குப் பதிலடியாக, ஆட்சி மாற்றப் புரட்சியில் ராணுவ அதிகாரிகள் இறங்கினர். லெப். ஜெனரல் முகம்மது அஜீஸ் கான், மேஜர் ஜெனரல் ஷாகித் அஜீஸ், ராவல்பிண்டி தளபதி லெப். ஜெனரல் முகம்மது அகமது, கராச்சி தளபதி லெப். ஜெனரல் முசாபர் உஸ்மானி, நவாஸுக்கு எதிரான கலகத்தில் முக்கியப் பங்கெடுத்த ‘டிரிபிள் பிரிகேட்’ தளபதி பிரிகேடியர் சலாவுதீன் சட்டி ஆகியோர் முஷாரஃப் விமானத்தில் வந்துகொண்டிருந்தபோதே நவாஸைப் பதவியிலிருந்து அகற்றிவிட்டனர். நவாஸுக்கு எதிராக முஷாரஃப் அல்ல; பாகிஸ்தான் ராணுவம் என்ற அமைப்பே புரட்சி நடத்தியது.

பாகிஸ்தான் ராணுவம்தான் கலகம் செய்தது, முஷாரஃப் அதன் முகம். அவ்வளவுதான். பி.கே. 805 விமானம் தரையிறங்கியதும் முஷாரஃப்பை ராணுவத்தினர் பாதுகாப்பாக தலைமையிடத்துக்கு அழைத்துச் சென்றனர். “பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தை ராணுவம் ஏற்றுக்கொண்டுவிட்டது, இனி ராணுவச் சட்டம் மட்டுமே அமலில் இருக்கும்” என்ற மிகச் சிறிய உரையை வாசித்தபடியே அறிவித்தார் முஷாரஃப். இந்த உரையைப் படிப்பதற்கு முன்னால், டிவி கேமராக்கள் வருவதைப் பார்த்த பிறகுதான், தான் ராணுவச் சீருடையில் இல்லை, கோட்-சூட் மட்டுமே அணிந்திருக்கிறோம் என்று உணர்ந்தார் முஷாரஃப். உடனே எஸ்எஸ்ஜி கமாண்டோ படையின் மேல் சட்டையை எங்கிருந்தோ எடுத்து அணிந்துகொண்டார்.

இடுப்புக்குக் கீழே என்ன உடை என்று தெரியாதபடிக்கு, இடுப்புக்கும் கீழே காட்ட வேண்டாம் என்று கேமராக்காரர்களுக்கு உத்தரவு போடப்பட்டது. அறிவிப்புக்குப் பிறகு நாற்காலியிலிருந்து புகைப்படத்துக்காக முஷாரஃப் எழுந்து நின்றபோதுகூட இடுப்புக்குக் கீழே புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதைப் பாகிஸ்தான் டிவி தலைவராக அப்போது இருந்த அக்தர் வகால் அஜீம், பின்னாளில் தன்னுடைய புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார். “ராணுவச் சீருடைதான் என்னுடைய மேல்தோல், அதை ஒரு நாளும் கழற்ற மாட்டேன்” என்று பின்னாளில் அறிவித்தார் முஷாரஃப்.

யாவும் ராணுவமயம்

ராணுவம் என்ற அமைப்பின் பக்கபலம் இல்லாமல் முஷாரஃப் இல்லை. அவர் நாட்டின் அதிபராவதற்கு முன்பும் அதிபரான பின்பும் அவரைத் தாங்கிப் பிடித்தது பாகிஸ்தான் ராணுவம் என்ற அமைப்புதான். அவர் எடுத்த முடிவுகள் அனைத்துமே ராணுவம் எடுத்த முடிவுதான். இலங்கையிலிருந்து வந்த விமானத்தைக் கடத்த முயன்றதாகவும், பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த நினைத்ததாகவும் பிரதமர் நவாஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணையும் விரைவாக நடந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சர்வதேச அமைப்புகளும் சவுதி அரேபியாவும் அளித்த நெருக்கடிக்குப் பிறகு, தண்டனை குறைக்கப்பட்டு ரியாத்துக்கு நாடு கடத்தப்பட்டார். ராணுவச் சட்டம் அமலில் இருக்கும் என்று அறிவித்துவிட்டதால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தையும் மாநிலங்களின் சட்டமன்றங்களையும் ஒரே உத்தரவில் கலைத்துவிட்டார் முஷாரஃப். அயூப் கான், ஜியாவுல் ஹக் ஆகியோரைப் பின்பற்றி தன்னைத்தானே பாகிஸ்தான் அதிபராக 2001 ஜூனில் பிறகு நியமித்துக்கொண்டார்.

அதற்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது அல் காய்தா கடும் தாக்குதலை நடத்தியது. ‘அல் காய்தாவுக்கு உதவியும் புகலிடமும் கொடுத்தால் உங்களையும் நாசப்படுத்துவோம்’ என்று அமெரிக்கா எச்சரித்தது. ஆனால், முஷாரஃப் தலைமையிலான ராணுவம், ஆப்கானிஸ்தானிலிருந்த தாலிபான்களுக்கு முதன்மைப் புரவலராக உதவி வந்தது. தாலிபான்கள்தான் அல் காய்தாவுக்கு பக்கபலமாக இருந்தனர். அமெரிக்காவின் கட்டளையை மீறினால் விபரீதம் ஏற்படும், அதேசமயம் தாலிபான்களையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று தீர்மானித்தது பாகிஸ்தானிய ராணுவத் தலைமை.

தாலிபான்களை ஒழிப்பதில் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று அமெரிக்காவிடம் கூறினார் முஷாரஃப். ஆனால், அவருடைய உள்நோக்கம் அதுவல்ல. அல் காய்தா அமைப்பின் சிறிய தலைவர்களையும் இடைநிலைத் தளபதிகளில் ஒரு சிலரையும் மட்டும் வேட்டையாட அமெரிக்க ராணுவத்தோடு செயல்பட்ட முஷாரஃப், தாலிபான்களின் தலைவர்களை அமெரிக்காவின் கண்ணில்கூட பட முடியாதபடிக்கு ரகசிய இடங்களில் வைத்து ஆதரித்தார்.

அமெரிக்க ராணுவத்தினர் தங்கவும் ஆப்கானிஸ்தானுக்குள் சென்று தாக்கவும் போக்குவரத்து உதவிகளைச் செய்து தந்த முஷாரஃப் அரசு, தாலிபான்களை அமெரிக்காவுக்குத் தெரியாமல் பாகிஸ்தானுக்குள்ளேயே அழைத்துவந்து ரகசிய இடங்களில் தங்க வைத்தது. ஆப்கானிஸ்தானுக்குப் பக்கத்திலேயே இருக்கும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் பஷ்டூன் மொழி பேசும் பெஷாவர், குவெட்டா பகுதிகளில் தாலிபான்கள் புகலிடம் பெற்றனர்.

தாலிபான்களுக்கு அடைக்கலம்

தாலிபான்களின் ஒற்றைக்கண் தளபதி முல்லா உமர் அவருடைய காந்தஹார் சகாக்களுடன் குவெட்டா பகுதியில் தங்கவைக்கப்பட்டார். அந்தக் குழுவையே ‘குவெட்டா ஷுரா’ என்று அவர்கள் பரிபாஷையில் அழைத்தனர். ஹக்கானி அமைப்பைச் சேர்ந்த பயங்கரவியர்கள் வடக்கு வசீரிஸ்தான், பெஷாவர் - ஏன் ராவல்பிண்டியில்கூட ஒளிந்து வாழ்ந்தனர். தாலிபான்களை ஒழிக்க 500% ஒத்துழைப்பு தருகிறோம் என்று கூறி அமெரிக்காவிடம் கோடிக்கணக்கான டாலர்களைப் பெற்றுக்கொண்டு, தாலிபான்கள் மறுவாழ்வு பெற உதவினார் முஷாரஃப். உருது, ஆங்கிலம் இரண்டையும் வாய்க்கு வந்தபடி உச்சரித்துப் பேசும் முஷாரஃப், மதம் சார்ந்த பயங்கரவியத்துக்கு எதிராக அறிவாற்றல் நிரம்பிய மிதவாதியாகச் செயல்படுவதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளை நம்பவைத்தார். ஆனால் பஷ்டூனிலும் பலூசிஸ்தானிலும் அதற்கு நேர்மாறாகவே செயல்பட்டார்.

தாலிபான்கள் புத்துயிர் பெறுவதற்காகவே மதமும் – அரசியலும் கலந்த பல கட்சிகளின் கூட்டமைப்பை, மதச்சார்பு இல்லாத பஷ்டூன், பலூசிஸ்தான் தேசியவாதிகளுக்கு எதிராக வளரச் செய்தார் முஷாரஃப். அதற்கு முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமல் (எம்எம்ஏ) என்று பெயர். 2002இல் நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் தில்லுமுல்லுகள் செய்வதற்கு முன்னதாகவே இந்த வேலைகளில் இறங்கிவிட்டார்.

மோசடியான கருத்தெடுப்பு வாக்கெடுப்பு நடத்தி, மேலும் ஐந்தாண்டுகளுக்கு அதிபராக நீடிக்குமாறு பெரும்பான்மை மக்கள் தனக்கு வாக்களித்துவிட்டதாக பொய்யாக அறிவித்தார். ராணுவத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்தி நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சியை இரண்டாக உடைத்தார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் காயிதே ஆசம் (பிஎம்எல்-கியூ) என்ற புதிய கட்சியை உருவாக்கினார். பேநசீர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியையும் (பிபிபி) இப்படி உடைத்தார்.

தாலிபான்களின் நட்புக் கட்சியான எம்எம்ஏ பலூசிஸ்தானில் ஆட்சி அமைத்தது; கைபர் - பக்டூன்க்வா மாகாணங்களில் முஷாரபின் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – கியூ கட்சி ஆட்சியமைத்தது. பலூசிஸ்தானை ஆண்ட எம்எம்ஏ கட்சி ஆட்சியை ‘மிலிடெரி-முல்லா கூட்டணி’ என்றே அனைவரும் கேலியாக அழைத்தனர். நாடாளுமன்றத்தில் பிஎம்எல்-கியூ கட்சிக்கு எம்எம்ஏ, ‘நட்புணர்வுடன் கூடிய’ எதிர்க்கட்சியாக சாதகமாகவே நடந்துகொண்டது!

முஷாரஃப்பின் ஒப்புதல்

நாட்டின் தலைமை ராணுவத் தளபதியாக முஷாரஃப்பே நீடிக்க வேண்டும் என்று பிஎம்எல்-கியூ ஒரு மசோதாவைக்கூட நிறைவேற்றியது. நாட்டின் தலைமை ஆட்சியாளர் என்ற பதவியிலிருந்து இந்த ஆண்டு விலகிவிடுவேன் என்று கூறிவந்த முஷாரஃப், நாடு இப்போது இருக்கும் நிலையில் ஆட்சிப் பொறுப்பை விட்டுவிட முடியாது என்று கூறிவிட்டு சர்வாதிகாரியாகவே தொடர்ந்தார். ராணுவம் அவருக்கு ஒத்து ஊதியது.

எம்எம்ஏ கட்சியை உள்நாட்டில் ஆதரித்தாலும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு அதே கட்சியைக் காட்டி, பார்த்தீர்களா அரசியலையும் மதத்தையும் கலந்த கட்சி வலுவாகிவருகிறது, அவர்கள் இஸ்லாமாபாதில் ஆட்சிக்கு வந்துவிடாமல் தடுக்க மிதவாதியான நான்தான் தொடர்ந்து அதிபராக இருக்க வேண்டும் என்று கூறினார். முஷாரஃப்பின் இரட்டை வேடத்தை மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் புரிந்துகொண்டார்களோ இல்லையோ, ஜிகாதிகள் புரிந்துகொண்டுவிட்டனர்.

மேற்கத்திய நாடுகளிடம் தங்களைப் பலிகொடுத்துவிட்டு இவர் சொந்த ஆதாயம் அடைகிறார் என்று ஜிகாதிகள்தான், சகாக்களை எச்சரித்தனர். இதன் விளைவு பாகிஸ்தான் ஜிகாதிஸ்டுகளும் தேரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (டிடிபி) இருவரும் கைகோர்த்தனர். முஷாரஃப்பின் இரட்டை வேடத்தால் அமெரிக்காவிடமிருந்து பெரிய தொகையையும் ஆதரவையும் பெற முடிந்தது.

ஆனால், பாகிஸ்தான் தேரிக்-இ தாலிபானும், அல்-காய்தாவும் நெருக்கமான அமைப்புகளாயின. ஜிகாதிகள் மேற்கொண்ட மூன்று கொலை முயற்சிகளில் முஷாரஃப் தப்பினார், ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் புத்துயிர் பெறவும் காபூலில் ஆட்சியைக் கைப்பற்றவும் துணை நின்ற பாகிஸ்தான் ராணுவத்தால், திடீரென தங்கள் நிலையிலிருந்து மாற முடியவில்லை. மேற்கத்திய நாடுகளைச் சமாதானப்படுத்தவும் தாலிபான்கள் ஒரேயடியாகத் தங்களுக்கு எதிராகத் திரண்டுவிடாமல் தடுக்கவும், தாலிபான்களிலேயே நல்ல தாலிபான்களும் மோசமான தாலிபான்களும் இருப்பதாக புதிய கதையைக் கட்டிவிட்டது முஷாரஃப் ஆட்சி.

அமெரிக்காவையும் ஆப்கானிஸ்தானையும் தாக்குகிறவர்களைக் கொள்கைப் பிடிப்புள்ள நல்ல தாலிபான்கள் என்றது, பாகிஸ்தானைத் தாக்குகிறவர்கள்தான் மோசமானவர்களாம். ஆப்கான் தாலிபான்களையும் ஹக்கானி வலையமைப்பையும் வளர்த்துவிட்டது பாகிஸ்தான் ராணுவம்தான் என்று பின்னாளில் ஒப்புக்கொண்டார் முஷாரஃப்.

பலூச் மக்களின் துயர்

ஆப்கானிஸ்தானில் இந்தியா தன்னுடைய ஆக்கப்பூர்வ பணிகள் மூலம் செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என்பதற்காக இதைச் செய்ததாகவும் தெரிவித்தார். இப்படி ஆப்கானிஸ்தான் தாலிபான்களை ராணுவம் ஆதரித்ததால்தான் ஆயிரக்கணக்கான அப்பாவி பாகிஸ்தானியர்களும் பஷ்டூன் மொழிச் சிறுபான்மையினரும் பிற மதச் சிறுபான்மையினரும் ஏராளமான எண்ணிக்கையில் இறக்க நேர்ந்தது.

ஆப்கானிஸ்தானின் ஜிகாதிகளை மட்டும் முஷாரஃப் ஆட்சி வளர்த்துவிடவில்லை. பலூசிஸ்தானில் அவர் தொடங்கி வைத்தப் பூசல்கள் இன்றளவும் தொடர்கின்றன. பலூச் இன இளம் பெண்களையும் ஆண்களையும் ராணுவம் சட்ட விரோதமாகக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு கொண்டும், சி்த்திரவதைகள் செய்தும் கொல்கிறது. புக்தி பழங்குடிப் பிரதேசத்தில் சூய் எண்ணெய் வயல் பகுதியில் ஒரு இளம் பெண் டாக்டர் சேவை செய்துவந்தார். பாகிஸ்தான் ராணுவத்தின் கேப்டன் பதவியிலிருந்த அதிகாரி, அந்தப் பெண் வசித்த அரசு குடியிருப்பிலேயே நுழைந்து பாலியல் வல்லுறவு கொண்டார். அந்தப் பெண்ணுக்காக நீதி கேட்டு போராட்டம் நடத்திய நவாப் அக்பர்கான் புக்தி, அந்த அதிகாரியைக் கைதுசெய்து தண்டிக்க வேண்டும் என்றார்.

புக்தி சாதாரணமானவர் அல்ல, தேசியர். பாகிஸ்தான் மைய அரசில் ராணுவ அமைச்சராகவும் அவருடைய பிரதேசத்தின் முதல்வராகவும் ஆளுநராகவும் பதவி வகித்தவர். இது வெறும் வல்லுறவு மட்டுமல்ல, பலூச் பழங்குடியை இன்னொருவர் வந்து மானபங்கப்படுத்துவது எங்களுடைய இனத்துக்கே விடப்பட்ட சவால் என்று அவர் எச்சரித்தார். தங்கள் பகுதியில் கிடைக்கும் பெட்ரோலிய எண்ணெயை அகழ்ந்தெடுக்கும் உரிமையை வேறு எவருக்கோ விற்று பணம் சம்பாதிக்கும் பாகிஸ்தானிய கூட்டாட்சி அரசு தங்களுக்குரிய ராயல்டியைக்கூட தராமலிருப்பதுடன் இப்படி மக்களுடைய வாழ்க்கையிலும் விளையாடுகிறது என்கிறார்கள் பலூச் மக்கள்.

முஷாரஃப்பும் பெண்களும்

அரசு நியாயம் வழங்காததால், எண்ணெய் துரப்பணப் பணியைத் தடுக்கும் விதத்தில் தாக்குதல் நடத்தினார்கள் பலூச்சுகள். உடனே பாகிஸ்தான் ராணுவம் ஆயிரக்கணக்கான துருப்புகளை அனுப்பியது. அவர்களுடன் சென்ற கவச வாகனங்களும் விமானங்களும் போராடிய மக்கள் மீது குண்டு மழை பொழிந்தும் வானிலிருந்து தாக்குதல் நடத்தியும் உயிர்ச்சேதம் விளைவித்து கலைத்தது. ராணுவத்துடன் மோத வேண்டாம், இதுவொன்றும் 1970கள் அல்ல என்று கொக்கரித்தார் முஷாரஃப். 1973இல் இதேபோல கிளர்ந்தெழுந்தனர் பலூச்சுகள். அப்போது அரசு பணிந்தது.

நவாப் புக்தி பிரிவினைவாதியோ, பேச்சுவார்த்தைக் கூடாது என்று எதிர்த்தவரோ அல்ல. இருப்பினும் ராணுவம் திட்டமிட்டு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 2006 ஆகஸ்டில் அவர் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலைக்காக முஷாரஃப் கண்டிக்கப்பட்டாலும் பிறகு இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். முஷாரஃப்பும் ராணுவமும் அளித்த ஆதரவால், இளம் பெண் டாக்டரை வல்லுறவுக்கு ஆளாக்கிய ராணுவ கேப்டனும் தண்டனையேதும் இல்லாமல் தப்பிவிட்டார்.

மாலையானால் மதுபானம் அருந்துவதும் பெண்களோடு கூத்தாடுவதும் முற்போக்கல்ல என்பதற்கு முஷாரஃப் நல்ல உதாரணம். பாலியல் கூட்டு வல்லுறவுக்கு ஆட்பட்ட முக்தரண் மாய் என்ற இளம் பெண், தன்னுடைய நிலைக்கு ஆட்சியாளர்கள் இறங்கவில்லை என்பதால் அமெரிக்காவில் புகலிடம் தேடவும் அங்காவது தன்னுடைய குறையை யாராவது கேட்கமாட்டார்களா என்ற ஆதங்கத்திலும் அந்நாட்டுக்குச் செல்ல விண்ணப்பித்தார். பாகிஸ்தானிய அரசு அவருக்கு அனுமதி வழங்க மறுத்தது. ஆனால், முஷாரஃப் அமெரிக்கா சென்றார்.

அப்போது வாஷிங்டன் போஸ்ட் நிருபர் இதைச் சுட்டிக்காட்டி கேள்வி கேட்டார். “பாகிஸ்தானில் என்ன நிலைமை என்று தெரிந்துகொண்டு கேள்வி கேட்க வேண்டும். கனடாவுக்குப் போக விசா வேண்டுமா அல்லது அங்கேயே குடியேற வேண்டுமா, அதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். அப்படிச் செல்ல பணம் இல்லையா கூட்டு வல்லுறவுக்கு ஆளாகிவிடுங்கள் விசா எளிதாகக் கிடைத்துவிடும் என்று பாகிஸ்தானில் பேசிக்கொள்கிறார்கள்” என்று பதில் அளித்தார். இப்படி நாக்கூசாமல் தன் நாட்டுப் பெண்களையே கொச்சைப்படுத்திய முஷாரஃப்பை, பெண் வர்க்கமே வசைபாடியது. முஷாரஃப் உண்மையில் யார் – ஒரு பொய்யர் என்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ அப்போது அடையாளம் காட்டியது.

முஷாரஃப்பின் மோசமான நிர்வாகம்

முஷாரஃப் ஆட்சியிலிருந்த காலத்தில் திருட்டு, ஏமாற்றுவது, ஆக்கிரமிப்பது போன்ற குற்றங்கள் சாதாரணமாக நடந்தது. உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் திட்டம் தனக்கிருப்பதாக முஷாரஃப் ஒருமுறை அறிவித்தார். அடிப்படை ஜனநாயகத்தை ராணுவம் அனுமதிக்கும் என்று பசப்பினார். உண்மையில் அரசியல் கட்சிகளை உடைப்பதும், செல்வாக்கில்லாமல் ஆக்குவதுமான அயூப்கான் காலத்து உத்திகளையே முஷாரஃப்பும் கடைப்பிடித்தார். மோசடியான தேர்தல் மூலம் பாத்திமா ஜின்னாவை தோற்கடித்தார் அயூப்கான். அதையே ஜியாவுல் ஹக் தன்னுடைய காலத்தில் கட்சி சார்பு இல்லாமல் தேர்தலில் பங்கேற்கலாம் என்றார்.

மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுக்கு எதிரில் தன்னை மதச்சார்பற்ற நிர்வாகியாக காட்டிக்கொள்வார் அயூப்கான். முஷாரஃப்பும் அப்படியே நடித்தார். அதேசமயம் இஸ்லாத்தின் அனைத்துப் பிரிவுகளின் கூறுகளையும் கொண்ட கலவையை ஆதரிப்பார், இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டு தாய்நாட்டுப் பற்றை வெளிப்படுத்துவார். இனி போர் செய்ய மாட்டோம் என்று அறிவுயுங்கள் என்று இந்தியத் தலைவர்கள் கோரியபோது அதைக் கடுமையாக எதிர்த்தார் அயூப் கான். அவரே ஆட்சியாளராக மாறியதும் இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவத்தைக் கூட்டாக நிர்வகிக்கலாம் என்ற அரிய யோசனையைக் கூறினார்!

கார்கில் போர் மூலம் நவாஸின் செல்வாக்கை சரித்த முஷாரஃப், பிறகு இரு நாடுகளுக்கு இடையில் உறவை மேம்படுத்த 2001இல் ஆக்ரா உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். கடைசி நேரத்தில் உடன்பாட்டில் கையெழுத்திடாமல் தனது வாக்குறுதியிலிருந்து நழுவிவிட்டார். தனக்கு முன்பு ஆட்சி செய்த சர்வாதிகாரிகளைப் போலவே, பாகிஸ்தானில் மக்களாட்சியை மலர வைப்பேன் என்றே தன்னுடைய பதவிக்காலம் முழுவதும் சொல்லிக்கொண்டே இருந்தார்.

நவாஸ் ஷெரீப், பேநசீர் புட்டோ இருவருமே பாகிஸ்தானைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துவிட்டதால் மேலும் சில ஆண்டுகளுக்கு சர்வாதிகாரியாகப் பதவி வகித்திருக்கலாம் முஷாரஃப். ஆனால், விதி விளையாடியது. பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தானே நியமித்த இஃப்திகார் முகம்மது சௌதுரியை அந்தப் பதவியிலிருந்து தேவையின்றி நீக்கி, தன்னுடைய பதவியைப் பறிகொடுத்தார் முஷாரஃப். அவருடைய உத்தரவை ஏற்க சௌதுரி மறுத்தார். பல நீதிபதிகளும் ஏராளமான வழக்கறிஞர்களும் சௌதுரிக்கு ஆதரவாகத் திரண்டனர்.

அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. வலதுசாரி இஸ்லாமியக் கட்சிகள் முதல் இடதுசாரிக் கட்சிகள் வரை அனைத்தும் சௌதுரியை ஆதரித்தன. வழக்கறிஞர்கள் போராட்டத்தை வீதிகளிலும் நீதிமன்ற அறைகளிலும் நடத்தினர். ராணுவத்தின் உளவுப்பிரிவோ நாட்டுக்குள் முஷாரஃப்புக்கு எதிர்ப்பு வலுப்பதை அறிந்திருந்தாலும் அதை அவருக்குத் தெரிவிக்காமல் மவுனமாகிவிட்டது. முஷாரஃப் பதவியிலிருந்து போக வேண்டியவர்தான் என்பதில் அதுவும் உடன்பட்டது, ஆனால், அவசரப்படவில்லை.

அரசியல் அஸ்தமனம்

இப்திகார் சௌதுரியே தலைமை நீதிபதி என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 2007 ஜூலையில் தீர்ப்பு வழங்கியது. 2002இல் அதிபராக தன்னை நியமித்துக்கொண்டே அதே வாக்குமன்றத்தின் ஆதரவுடன் 2007 அக்டோபரில் மீண்டும் தனக்கு இன்னொரு பதவிக்காலத்தை வழங்கிக்கொண்டார் முஷாரஃப். அவர் அறிவித்த தேர்தலை எதிர்த்து ஏராளமானோர் நீதிமன்றம் சென்றனர். அரசமைப்புச் சட்டச் செயல்பாட்டையே முடக்கினார் முஷாரஃப். நெருக்கடிநிலையைப் பிரகடனம் செய்துவிட்டு தலைமை நீதிபதி உள்பட 51 பேரை சிறையில் அடைத்தார். மிகச் சில நீதிபதிகள் சேர்ந்து அவருடைய செயல் செல்லத்தக்கதே என்றனர்.

கைப்பாவையாகச் செயல்பட்ட நாடாளுமன்றத்தின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்ததால் பொதுத் தேர்தலை அறிவித்தார் முஷாரஃப். இறுதியாக 2007 நவம்பரில் ராணுவ உடையைக் களைய வேண்டிய நேரம் வந்தது. அமெரிக்கா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் நெருக்குதல் காரணமாக பேநசீர் புட்டோ, நவாஸ் ஷெரீப் ஆகியோரை நாடு திரும்ப அனுமதித்தார். இரு தலைவர்களும் வழக்கறிஞர்களின் போராட்டங்களை ஆதரித்தனர், தேர்தல் பிரச்சாரங்களையும் தொடங்கினர். நாடு திரும்பிய பேநசீர் புட்டோ பயங்கரவியர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

கொலைப்பழி முஷாரஃப் மீது சுமத்தப்பட்டது. 2008இல் புட்டோவின் கட்சி கூட்டணி அரசு அமைத்த பிறகும்கூட பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தார் முஷாரஃப். எல்லா அரசியல் கட்சிகளும் சேர்ந்து அவரைப் பதவியிலிருந்து நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவோம் என்று எச்சரித்த பிறகே இறுதியாக விலகினார். இருப்பினும் ஓய்வு பெறுவோருக்கு அளிக்கப்படும் அணிவகுப்பு மரியாதையுடன் விடைகொடுத்தது ராணுவம். பதவி ஓய்வுக்குப் பிறகும் அவரைப் பாதுகாக்க ராணுவம் எல்லா வேலைகளையும் செய்தது.

ஏராளமாக பணம் சேர்த்துவிட்ட முஷாரஃப், ‘அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்’ என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். 2013 பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார். அந்தக் கட்சி எடுபடாமல் போனது. அவருக்கு குற்றேவல் செய்த எடுபிடிகள்கூட கட்சியில் சேரவில்லை. தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அவருக்குத் தடையும் விதித்தது. 

முடிவுக்கு வந்த வாழ்க்கை

நவாஸ் ஷெரீப் மீண்டும் பதவிக்கு வந்தார். தேசத்துரோகம் செய்ததற்காகவும் அரசமைப்புச் சட்டத்தைச் சீர்குலைத்ததற்காகவும் கண்டிக்கப்பட்ட முஷாரஃப், 2014இல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டார். அதற்கு முன்பெல்லாம் வீராப்பு பேசிவந்த அவர் அந்த விசாரணையை எதிர்கொள்ள திராணி இல்லாமல் வயல் எலியைப் போல ஓடி ஒளிந்தார். உடல்நிலை சரியில்லை என்று கூறி ராணுவ மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார். ராணுவம் அந்த வழக்கில் அவரை மேலும் விசாரிக்க முடியாதபடி தடுத்து, வெளிநாட்டுக்குத் தப்பியோட உதவியது. முஷாரஃப் இல்லாமலேயே வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவர் செய்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது. முஷாரஃப் தன்னுடைய கடைசி காலத்தை ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டில் கழித்தார். இறுதியாக உடல் நலம் குன்றி இறந்துவிட்டார்.

சர்வாதிகாரியாக இருந்த முஷாரஃப், பாகிஸ்தானுக்கு விட்டுச் சென்ற சொத்துகள் என்பவை அரசமைப்புச் சட்டத்தை அப்படியே புரட்டிப்போட்டதும், பலூசிஸ்தானில் மரணத்தையும் நாசத்தையும் அதிகப்படுத்தியதும், நாட்டைத் தாலிபான்மயப்படுத்தியதும்தான். வாழ்நாள் முழுக்க பொய், வஞ்சகம் ஆகியவற்றையை ஆயுதமாகக் கையாண்ட முஷாரஃப் விதைத்த விதைகளைத்தான் பாகிஸ்தான் இப்போது அறுவடை செய்துகொண்டிருக்கிறது. கராச்சி நோக்கிய முஷாரஃப்பின் மூன்றாவது பயணமும் அவமானகரமானதாகவே இருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட சர்வாதிகாரியான முஷாரஃப் மிதவியரும் அல்ல – அறிவாளியும் அல்ல, தாராளரும் அல்ல!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
முகம்மது தாகி

முஹம்மது தாகி ஒரு பாகிஸ்தான் கட்டுரையாளர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2

2





ஐஏஎஸ்சேரன்புலனாய்வுத் துறைநோங்தோம்பம் பிரேன் சிங்ஆனந்த்பட்டு உடைமிகைப்படுத்தப்பட்ட வளர்ச்சிகோர்பசெவ்சேகர் மாண்டே கட்டுரைபெருமழைநுகர்பொருள்கள்திருவாவடுதுறை மடம்புனா ஒப்பந்தம்அக்னிவீர்வடக்கு: மோடியை முந்தும் யோகிதிரிக்க முடியாதது வரலாறு!சொல்லும் செயலும்அயோத்திமுதன்மைப் பொருளாதார ஆலோசகர்அலுவலக அரசியல்மேதா பட்கர்காங்கிரஸின் தாமதம்… மோசமான சமிக்ஞைதனிக் கொள்கைபொருளாதார நிலைமாநில அரசுகள்எல்.இளையபெருமாள்இந்துத்துவமா?ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் - அரிய வகை ஏழைகள்முதல் என்ஜின்லண்டன் பயணம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!