கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 4 நிமிட வாசிப்பு
கழுதையை குதிரை என்போர் களத்தில் உள்ளனர்!
ஐபிஎல் (இந்திய பிரீமியர் லீக்) கிரிக்கெட் போட்டியின் 2023 பருவத்தில் முதலிடத்தில் இருக்கும் ஐந்து வீச்சாளர்களில் நான்கு பேர் சுழல் மன்னர்கள் – ரஷீத் கான், ஒய்.சாஹல், பியூஷ் சாவ்லா, வருண் சக்ரவர்த்தி. டுவென்டி-டுவென்டி (டி-20) கிரிக்கெட் போட்டி என்பதே அடித்து விளையாடும் பேட்டர்களுக்காக என்னும்போது நான்கு சுழல் வீச்சாளர்கள் எப்படி வெற்றிகரமாக விக்கெட் சாய்க்கிறார்கள் என்று சாமானிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு வியப்பாகக்கூட இருக்கலாம்.
ஐபிஎல் போட்டியைப் பார்த்து வியந்து அதைப் போலவே தங்களுடைய கட்சியிலும் அரசு அமைப்புகளிலும் பல ‘சுழல்வீச்சு’ நிபுணர்களைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா தலைமையிலான அரசு. இதில் புதிதாக சேர்ந்திருப்பது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் சில பொருளாதார நிபுணர்கள் – இவர்கள் அரசுக்கு ஆதரவாக வாதங்களைச் சுழலவிட்டு வருகிறார்கள்.
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட நல்லதொரு வாய்ப்பு 2023 மே 19இல் அவர்களுக்கு அளிக்கப்பட்டது; 2000 முக மதிப்புள்ள ரூபாய் நோட்டைப் புழக்கத்திலிருந்து ‘திரும்பப் பெறுவ’தாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இது ‘பணமதிப்பிழப்பு’ அல்ல என்று அரசுக்கு ஆதரவான சுழல் (திரிப்பு) மன்னர்கள் கூறினார்கள். 2016 ‘பணமதிப்பிழப்பு’ நடவடிக்கையின்போது அதையும் ‘திரும்பப் பெறுவதாகத்தான்’ அறிவித்தார்கள், ‘பணமதிப்பிழப்பு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே இல்லை.
நம்முடைய மனங்கள் 2016 நவம்பர் 8 நாளை நோக்கி பின்னோக்கிப் பறந்தன. அன்றைய தினம் நம்முடைய பிரதமர் தொலைக்காட்சிகளில் நேரடியாகத் தோன்றி, “ரூ.500, ரூ.1,000 முக மதிப்புள்ள கரன்சி நோட்டுகள் இனிச் செல்லாது” என்று நாடக பாணியில் அறிவித்தார். நாட்டு மக்களிடையே புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 86% ஒரே வீச்சில், சட்ட விரோதமாக்கப்பட்டுவிட்டது. அதன் விளைவு மாபெரும் குழப்பம் - சீர்குலைவுகள். அதிபயங்கரமான அந்த நாள்களை மீண்டும் நினைவுகூர்வதால் உருப்படியான பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.
பகுத்தறிவுக்குப் பொருந்தாது
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்த அதே 2016 நவம்பர் 8இல் 2000 ரூபாய் முக மதிப்புள்ள புதிய நோட்டை அறிமுகப்படுத்தும் முடிவையும் அரசு அறிவித்தது. அதற்கு, ‘பணச் சுழலேற்றம்’ (ரீ-மானிடைசேஷன்) என்று திரிபாளர்கள் புதிய நாமகரணம் சூட்டினர். பணமதிப்பிழப்புக்குப் பிறகு பணச் சுழலேற்றம் என்ற புதிய சொல்லை மக்கள் கற்றனர். எதற்கு இந்த பணச் சுழலேற்றம் என்று அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் கூடாது என்று ஐந்நூறு, ஆயிரம் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து விலக்கும் அரசு அதைவிடப் பெரிதான 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துப் புதிதாக புழக்கத்துக்கு விடுவது ஏன் என்று குழம்பினர். 500, 1000 ரூபாய் நோட்டுகளையே புதிய எழுத்து வரிசைகளுடன் புதிய எண்களுடன் புதிய வண்ணங்களுடனும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் அச்சிட்டு ஏன் புழக்கத்தில் விட்டு பழைய நோட்டுகளை நீக்கியிருக்கக் கூடாது என்றும் குழும்பினர்.
பணமதிப்பிழப்பு கொண்டுவருவதற்காகச் சொல்லப்பட்ட மூன்று காரணங்களுக்கும் முரணாக இருந்தது 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு முடிவு. கள்ள ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து நீக்கவும், கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டுவரவும், போதை மருந்து கடத்தல்காரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் இருக்கவும் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. பதுக்கல்காரர்கள், போதை மருந்து கடத்தி விற்பவர்கள், பயங்கரவாதிகள் என்று அனைத்துத் தரப்பினருமே தங்களுடைய வேலைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது புதிய 2000 ரூபாய் நோட்டு என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அரசு இதைப் புழக்கத்தில் விட்டாலும் பெரும்பாலான மக்கள் இதைப் பயன்படுத்தவில்லை. பரிமாற்றத்துக்கு இது பயன்படாத ரூபாய் நோட்டாகவே இருந்தது. மிகச் சில கடைக்காரர்களும் சேவை அளிப்பவர்களும்தான் 2000 ரூபாயை முணுமுணுப்பில்லாமல் வாங்கிக்கொண்டனர். மற்றவர்கள் சில்லறை தர முடியாது என்பதால் வாங்கத் தயங்கினர். அச்சிட்டு வெளியான சில வாரங்களுக்கெல்லாம் இந்த 2000 ரூபாய் நோட்டுகள் அன்றாடப் புழக்கத்தில் அதிகம் வராமல் மறைந்துவிட்டன.
இருந்தாலும் ரிசர்வ் வங்கி இந்த நோட்டுகளைத் தொடர்ந்து அச்சிட்டு 2018 வரை புழக்கத்துக்கு அனுப்பிக்கொண்டே இருந்தது. 2000 ரூபாய் நோட்டுகளில் பெரும்பகுதி வங்கிகளின் இரும்புப் பெட்டிகளிலேயே இன்னமும் பாதுகாப்பாக இருக்கிறது என்று தெரிகிறது. எஞ்சியவைதான் மக்களிடையே புழங்குகிறது. அதிலும் மிகச் சிறிய அளவுதான் அன்றாடப் புழக்கத்துக்கு வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஏன் கொண்டுவரப்பட்டது என்பதற்கு பகுத்தறிவுக்குப் பொருந்தும்படியான பதில் இன்றுவரை அரசிடமிருந்து கிடையாது.
2023இல் திரும்பப் பெறுவானேன்?
பகுத்தறிவுக்குப் பொருந்தாத 2000 ரூபாய் அச்சடிப்பு இப்போது மற்றொரு பகுத்தறிவுக்குப் பொருந்தாத செயலால் கேள்விக்கு உள்ளாகிறது: 2023லேயே இதைத் திரும்பப் பெறுவானேன்? “500, 1000 முக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து நீக்கியதால் ஏற்பட்ட உடனடி தேவைக்காகத்தான் 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது, இப்போது தேவைக்கேற்ப ரூபாய் நோட்டுகள் இருப்பதால் 2000 விலக்கப்படுகிறது” என்கிறது ரிசர்வ் வங்கி.
சாமானிய மக்களுக்கு 2000 ரூபாய் அன்றாடப் பரிமாற்றங்களுக்குத் தேவைப்படவேயில்லை. அதற்குப் பதிலாக அதனைவிட முக மதிப்பு குறைவான ரூபாய் நோட்டுகளைக் கொண்டும் புதிதாக அச்சிடப்பட்ட 500 ரூபாயைக் கொண்டும் தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டனர்.
அடுத்து “2000 ரூபாய் நோட்டுகளின் புழக்க ஆயுள் 4 முதல் 5 ஆண்டுகள் வரையில்தான்” என்கிறது ரிசர்வ் வங்கி. அப்படியென்றால் 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளின் புழக்க ஆயுள்காலம் அதைவிடக் குறைவாக இருக்க வேண்டுமே! அந்த முக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அவ்வப்போது தேவைக்கேற்ப புதிதாக அச்சிடுவதைப் போலவே 2000 நோட்டுகளையும் புதிதாக அச்சடிக்கலாமே? இப்படி காதில் பூ சுற்றும் வகையில் தரும் விளக்கங்களால் மேலும் மேலும் அவர்களே சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். இதன் விளைவு என்னவென்றால், இந்திய ரூபாய் நோட்டுகளின் மீதான நம்பகத்தன்மையே கரைந்துவருகிறது.
பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) அமைப்புக்கு இந்தியாவின் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் நிர்வாக இயக்குநர் கே.வி.சுப்பிரணியன், திகைப்பளிக்கும் அற்புதமான விளக்கம் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்; கறுப்புப் பணக்காரர்களைப் பொறியில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கவைப்பதற்காகத்தான் 2000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டார்களாம்! 2000 செல்லாது என்று அறிவித்துவிட்டால் கோடிக்கணக்கான ரூபாய் அப்படியே கொத்தாக சிக்கிவிடும் என்பதற்காக இந்த ஏற்பாடாம்!
நம்ப முடியாத அபூர்வமான கற்பனை வளத்துக்காக இவர்களுக்கெல்லாம் நோபல் பரிசுகூட கொடுக்கலாம். சுப்பிரமணியனுக்கு இருக்கும் அறிவுக்கு அவர் அறிவியல் புனைக் கதைகள் எழுதலாம்.
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
ரிசர்வ் வங்கியின் சொற்சித்திரமும் உண்மை நிலையும்
10 Apr 2023
பதுக்கலுக்கு சிவப்புக் கம்பளம்
கறுப்புப் பணத்தைக் கைப்பற்றத்தான் இந்த 2000 அச்சடிப்பு என்று சுப்பிரமணியன் அறிவித்தாலும், 2000 ரூபாயை யார் வேண்டுமானாலும் வங்கியில் தந்து, எந்தவித அடையாள ஆவணமும் இன்றி, எந்த விண்ணப்பத்தையும் பூர்த்திசெய்யாமல், எந்த ஆதாரமும் காட்டாமல் மாற்றிக்கொள்ளலாம் என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்திருக்கிறது. பிற தேசிய வங்கிகளும் இந்த முடிவைப் பின்பற்றத் தொடங்கின.
இதில் 500, 1000 ரூபாய் நோட்டுகளில் 99.3% அளவுக்கு 2016இல் மீண்டும் அரசிடமே வந்துவிட்டது. அதேபோல அச்சிட்ட 2000 ரூபாய் நோட்டுகளும் 100% மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே திரும்பி வந்துவிடும். ‘ஏழு ஆண்டுகளாக மேற்கொண்ட கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு நாட்டிலிருந்த எல்லா கறுப்புப் பணத்தையும் ஆற்றல் மிக்க ஒன்றிய அரசு திரும்பக் கைப்பற்றிவிட்டது’ என்று திரிபு எழுத்தாளர்கள், அரசைப் பாராட்டி கட்டுரைகள் எழுதக்கூடும். ‘அரசின் நடவடிக்கையால் ஊழல் ஒழிந்தது, போதை மருந்து நடமாட்டம் குறைந்து கடத்தல்காரர்கள் அறவே ஒழிந்துவிட்டனர், பயங்கரவாதிகளும் அவர்களுக்குப் பண உதவிசெய்கிறவர்களும்கூட மறைந்துவிட்டனர்’ என்றும் இந்த திரிபு எழுத்தாளர்கள் கட்டுரைகள் எழுதக்கூடும்.
இதேபோல இன்னொரு வாய்ப்பு வரும், அரசைப் பாராட்டி எழுதிவிட்டு சன்மானம் பெறலாம் என்று திரிபு எழுத்தாளர்கள் நாக்கைச் சப்பு கொட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
பணமதிப்பிழப்பு: மூன்று பரிமாணங்கள்
ரிசர்வ் வங்கியின் சொற்சித்திரமும் உண்மை நிலையும்
அச்சத்தில் அரசு
பொருளாதாரம் எப்போது மீளும்?
தமிழில்: வ.ரங்காசாரி
5
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.