கட்டுரை, அரசியல், பொருளாதாரம், சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு

மேட்டுக்குடி நிதியமைச்சர்கள்!

முஹம்மத் உசாமா ஷாஹித்
04 Aug 2024, 5:00 am
0

“நாட்டு மக்கள் மீது பரிவுடனும் அனுதாபத்துடனும் இந்த நிதிநிலை அறிக்கையை (2024) தயாரித்திருக்கிறேன்” என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் நிகழ்ச்சி தொடக்கத்தில் குறிப்பிட்டார் நிதியமைச்சர் முஹம்மத் ஔரங்கசீப்.

ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் வாடுகின்றன என்று தேசிய சுகாதார அறிக்கை சுட்டிக்காட்டிய பிறகும், பச்சிளம் குழந்தைகளின் பால் உணவு மீது (டப்பாவில் அடைக்கப்பட்டு விற்கப்படுவது) பால் வரியை விதித்துவிட்டு, ‘நாடு முன்னேற்றம் அடைந்துவருகிறது’ என்றார் அமைச்சர்.

‘முன்னேற்றம்’ என்று அமைச்சர் எதைக் குறிப்பிடுகிறார்? பச்சிளம் குழந்தைகளுக்குப் புகட்டும் செறிவூட்டப்பட்ட பால் உணவு மீது வரிவிதிப்பதுதான் நாட்டு மக்கள் மீது அமைச்சர் காட்டும் பரிவா?

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடுவதற்கு முன்னால் பாகிஸ்தானுக்கு நிதியமைச்சர்களாக நியமிக்கப்படுகிறவர்களின் குடும்பப் பின்னணி, கல்வி, அவர்கள் பார்த்துவந்த தொழில் ஆகிய பின்புலங்களை அறிவது அவசியம். அவர்கள் பெரும்பாலும் சமூக - பொருளாதார அடுக்கில் மேட்டுக்குடிகளில் பிறந்தவர்கள்.

மேலை நாடுகளுக்குப் போய் படித்து பட்டம் பெற்றவர்கள், உலக அளவில் அறியப்படும் பெரிய நிறுவனங்களில் தலைமை நிர்வாகிகளாகப் பதவி வகித்து லட்சக்கணக்கில் சம்பாதித்தவர்கள். செல்வச் செழிப்பில் வளர்ந்தவர்கள். இதையெல்லாம் தெரிந்துகொண்டால்தான், அவர்கள் ஏன், பச்சிளம் குழந்தைகளின் பால் உணவுக்குக்கூட வரி போடுகிறார்கள் என்பது புரியும்.

தற்போதைய நிதியமைச்சர் 

பாகிஸ்தானில் இப்போது நிதியமைச்சராக இருக்கும் முஹம்மத் ஔரங்கசீப், அட்சிசன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர். வங்கித் துறையில் முதலில் சிட்டி பேங்க் நிறுவனத்தில் உயர் நிர்வாகியாக பதவி வகிக்கத் தொடங்கினார். பிறகு ஏபிஎன் அம்ரோ நிறுவனத்திலும் ஆர்பிஎஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திலும் உயர் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்தார். அவை பன்னாட்டு நிறுவனங்கள்.

பிறகு ஜேபி மோர்கான் நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாகவும் எச்பிஎல் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தலைவராகவும் (பிரசிடெண்ட்) இருந்தவர். 2024 மார்ச் மாதம் பாகிஸ்தானின் நிதியமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். எச்பிஎல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது பாகிஸ்தான் நாட்டிலேயே அதிக ஊதியம் வாங்கிய தனியார் நிறுவன அதிகாரி அவர்தான் - மாதத்துக்கு 3 கோடி ரூபாய்கள்!

ஔரங்கசீப் மட்டுமே அப்படி உயர்பதவி வகித்தவர் அல்ல. அவருக்கும் முன்னால் நிதியமைச்சராக இருந்த இஷாக் தர், அவரைப் போலவே மேட்டுக்குடிமகன். பொது நிர்வாக அமைப்புகளில் தலைமைப் பதவி வகித்தவர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், பிறகு கணக்குத் தணிக்கையாளரானார்.

பிரிட்டிஷ் டெக்ஸ்டைல்ஸ் தொழில் குழுமத்தின் நிதி இயக்குநராகப் பதவி வகித்தார். லிபிய அரசின் மூத்த தணிக்கையாளராக இருந்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த கணக்கு தணிக்கையாளர்களின் லிபிய நிறுவனத்தில் கூட்டாளியாகவும் செயல்பட்டார். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றிலும் பணிபுரிந்திருக்கிறார். உள்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் படித்திருந்தாலும் வேலை பார்த்ததெல்லாம் வெளிநாட்டு நிறுவனங்களில்தான்.

மிஃப்தா இஸ்மாயீல் நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகியதால் அவருக்குப் பதிலாக நிதியமைச்சரானார் இஷாக் தர். டக்குஸீன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற மிஃப்தா இஸ்மாயீல், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பன்னாட்டுச் செலாவணி நிதிய (ஐஎம்எஃப்) நிறுவனத்தில் தொடக்க காலத்தில் பணியாற்றிய அவர் பிறகு குடும்பத் தொழில் நிறுவனத்தை நிர்வகிப்பதற்காக பாகிஸ்தானுக்குத் திரும்பிவிட்டார். பாகிஸ்தானிலேயே பிஸ்கோத்துகள், சாக்லேட்டுகள், நொறுக்குத் தீனிகள் தயாரிக்கும் இஸ்மாயீல் இன்டஸ்ட்ரீஸ் என்பது அவர்களுடைய குடும்ப நிறுவனம்.

ஆசாத் உமர்

மேட்டுக்குடிகளை நிதியமைச்சர்களாக நியமிப்பது அதற்கும் முன்பிருந்தே தொடர்கிறது. முன்னாள் நிதியமைச்சர் ஆசாத் உமர், ஐபிஏ கராச்சி நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர், என்கிரோ கார்ப்பரேஷன் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி.

அவருக்கும் முன்னால் அப்துல் ஹஃபீஸ் ஷேக், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றவர், உலக வங்கியில் சவுதி அரேபியா நாட்டுக்கான பிரிவில் தலைவராக இருந்தார்.

ஷௌகத் தரீன், பாகிஸ்தானின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்று பிறகு சிறிது காலம் வங்கித் துறையில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தார். சிட்டி பேங்க், ஹபீப் பேங்க் ஆகியவை அவர் பணியாற்றிய நிறுவனங்கள்.

நிதியமைச்சர்களாக இருப்பவர்கள் நல்ல நிர்வாகிகளாகப் பயிற்சி பெறுவதிலும் உயர்கல்வி கற்பதிலும் ஆட்சேபிக்க எதுவுமில்லை. ஆனால், அப்படிப்பட்டவர்கள் நிதியமைச்சராகப் பதவி வகிக்கும்போது சாமானிய மக்களின் வலி தெரிந்துதான் வரி யோசனைகளை அமல்படுத்துகிறார்களா என்ற கேள்விகள் எழுகின்றன.

நாட்டின் வருவாயைப் பெருக்க வேண்டியதுதான், அதற்காக லட்சக்கணக்கான ஏழைகள் மீது வரிச் சுமையை இப்படியா சுமத்துவது? மாதம் 3 கோடி ரூபாய் (பாகிஸ்தானிய ரூபாயாக இருந்தாலும்) சம்பாதிப்பவர்களுக்கு பால் டின் மீது 3% வரி என்பது பெரிய விஷயமே இல்லை. ஏற்கெனவே வருவாய் இல்லாமல் - வசதி இல்லாமல் வாழும் மக்கள், பால் டின் விலை அதிகம் என்றால் குழந்தைகளுக்கு அதை வாங்கித் தரும் முடிவைக் கைவிட்டுவிடுவார்கள்.

ஏழைகள் பக்கம் நிற்க வேண்டும்!

வங்கி அதிகாரியாகவும் தணிக்கையாளராகவும் பொருளாதார அறிஞராகவும் இருப்பவர்கள், பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏன் இப்படி ஸ்திரமில்லாமல் இருக்கிறது என்று பல்வேறு துறைகளின் வரவு – செலவுகளை எண்ணிக்கையாக எக்ஸெல் ஷீட் கட்டங்களில் பார்த்துவிட்டு, சரி இதெற்கெல்லாம் இவ்வளவு வரி போட்டால் இவ்வளவு வருமானம் கூடுதலாகக் கிடைக்கும் என்று முடிவுசெய்துவிட முடியும். சாமானிய மக்களால் சின்னஞ்சிறு கூடுதல் சுமைகளைக்கூட தாங்க முடியாது.

இதையும் வாசியுங்கள்... 8 நிமிட வாசிப்பு

யாராக இருந்தார் பர்வேஸ் முஷாரஃப்?

முகம்மது தாகி 08 Feb 2023

இப்போது கேள்வியெல்லாம் நிதி நிர்வாகம் தெரிந்தவர்கள், மெத்தப் படித்தவர்கள் நிதியமைச்சர்களாக வரக் கூடாது என்பதல்ல; ஏழை அல்லது நடுத்தரக் குடும்பங்களில் பிறந்தவர்கள் நிதியமைச்சர்களாக வந்தால் வரிகளைக் குறைத்து வசதிகளைப் பெருக்கிவிடுவார்கள் என்பதும் வாதம் அல்ல. பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழிமுறைகளில் சிலவற்றை கவனமுடன் தேர்வுசெய்ய வேண்டும். உயர் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சாமானியர்களுடைய ஒரு சில துயரங்கள், வாழ்க்கை அனுபவங்களாகத் தெரிந்திருக்காது.

நாம் விதிக்கும் ஒவ்வொரு வரியும் வருமானத்தை எவ்வளவு கூடுதலாக பெற்றுத்தரும் என்று ஆராய்வதைப் போல, ஏழைகளுக்கு - சாமானியர்களுக்கு இது எவ்வளவு துயரத்தைத் தரும் என்றும் பார்ப்பது அவசியம். அப்படிச் செய்தால்தான் நாட்டுக்கல்ல, சாமானிய மக்களுக்கும் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

© த டான்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

25 ஆண்டுகளில் ஒரு பிரச்சினையைக்கூட தீர்க்கவில்லை: மிஃப்தா இஸ்மாயில் பேட்டி
பாகிஸ்தான் – சீன உறவு ஏன் வலுப்படவே இல்லை?
பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது?
யாராக இருந்தார் பர்வேஸ் முஷாரஃப்?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

1






வாஜ்பாய்டி20 உலகக் கோப்பைஅரசுத் துறைசிந்தனை வளம்ஒற்றைத்துவ திட்டம்ஆமித் ஷாஜே.ஆர்.டி.டாடாஅன்னி எர்னோ: சின்ன அறிமுகம்சீக்கியர்கள் படுகொலைபுக்கர் விருதுஅசிஷ் ஜாதேபஷிஷ் முகர்ஜி கட்டுரைஅலெசாண்ட்ரா வெஷியோ கட்டுரைரத்தமும் சதையும்டாடா இன்டிகாமாயக் குடமுருட்டி: மகமாயிஉணவுத் திருவிழாஐம்புலன்பல்லடம்நிப்பர்சுகாதாரக் கேடுகள்ராங்கோகல்யாணராமன் கட்டுரைதொழிலதிபர்மூன்றாவது மகன்பாபர் மசூதி இடிப்புபொதுமுடக்கம்இந்தியாவிற்கு முந்தைய காந்திஎன்டிஏதொழுகை அறை சர்ச்சை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!