கட்டுரை, கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

தி டெலிகிராப் அனுபவங்கள்

ராமச்சந்திர குஹா
29 Jun 2022, 5:00 am
3

அவீக் சர்க்கார்

ட இந்தியாவில் வளர்ந்தேன் என்றாலும் எங்களுடைய வீட்டுக்கு ஆங்கில நாளிதழ் கல்கத்தா நகரிலிருந்து அச்சாகி வந்தது. அது ‘தி ஸ்டேட்ஸ்மேன்’. அதன் பிரதான பதிப்பு பிரிட்டிஷ் இந்தியாவின் முதலாவது தலைநகரமாகத் திகழ்ந்த கல்கத்தாவிலிருந்தே அச்சிடப்பட்டது. பிறகு அதன் கிளை தில்லியிலிருந்தும் அச்சிடப்பட்டது. தில்லி பதிப்பு 'ஸ்டேட்ஸ்மேன்' நாளிதழ்தான் எங்களுக்குக் கிடைத்தது. இது சாலை, ரயில் பாதை, மனிதர்கள், கடைசியில் மிதிவண்டி மூலமாக எங்கள் வீட்டை வந்து சேரும். 

என் தந்தை மூன்று காரணங்களுக்காக ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ வாங்கினார். முதலாவது, இந்தியாவில் அப்போது பிரசுரமான ஆங்கில நாளிதழ்கள் அனைத்தையும்விட மிகக் குறைந்த அளவிலான தனித்துவங்கள் அதில் இருந்தன. இரண்டாவது, மிகக் குறைவான அச்சுப் பிழைகளுடன் வெளிவந்தது. மூன்றாவது, அவருக்கு மிகவும் பிடித்த உறவுக்காரர் அதில் வேலை பார்த்தார். 

பெரியவனான பிறகு நானும் சில சொந்தக் காரணங்களுக்காக அதை விரும்பினேன். வெளிநாட்டுச் செய்திகளை மிகச் சிறப்பாகத் தந்தது. ஜேம்ஸ் கௌவ்லி என்பவர் ‘லண்டன் லெட்டர்’ என்ற தலைப்பில் நகைச்சுவையாக மூன்றாவது தலையங்கம் எழுதுவார். இயற்கை ஆர்வலரான எம்.கிருஷ்ணன் சிறப்பான ஆங்கில உரைநடையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பிறகும் 'தி ஸ்டேட்ஸ்மேன்' பத்திரிகையைத் தொடர்ந்து வாங்கினேன். பொருளாதாரத்தில் இரண்டு பட்டங்கள் வாங்கிய அந்த ஐந்தாண்டுகளில், அந்த நாளிதழின் தரம் தொடர்ந்து குறைந்துவருவதைக் கண்டேன். கிருஷ்ணன் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினாலும் கௌவ்லி வெளியேறிவிட்டார். அவரைப் போலவே எனக்குப் பிடித்த வேறு சில எழுத்தாளர்களும் அதில் எழுதுவதை நிறுத்திவிட்டனர். எல்லாவற்றையும்விட கவலையளிக்கும் விதமாக பத்திரிகையின் நிர்வாகத்துக்கும் ஆசிரியர் குழுவுக்கும் இடையிலான எல்லை மீறப்பட்டது. பத்திரிகையின் நிர்வாக அதிகாரியொருவர் மரபையும் முறையையும் மீறும் வகையில், படிக்கவே சகிக்காத தினசரி கட்டுரையைத் தன்னுடைய பெயரைப் போட்டு முதல் பக்கத்தில் எழுதிக்கொண்டிருந்தார்.

சமூகவியல் பாடத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக 1980இல் கல்கத்தாவுக்குச் சென்றேன். புதுதில்லியிலேயே இருந்திருந்தால் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வாங்கியிருப்பேன், அந்த நாளிதழ் கல்கத்தாவிலிருந்து அச்சாகாததால் ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ நாளிதழையே தொடர்ந்து வாங்கினேன். இப்போது அது மரணப் படுக்கைக்குச் சென்றுவிட்டாலும் தொடர்ந்து வருவதில் மட்டும் உறுதியாக இருந்தது.

என்னை கவர்ந்த ‘டெலிகிராப்’ 

இதில் 1982 ஜூலை 8ஆம் நாள் ‘தி டெலிகிராப்’ நாளிதழின் முதல் பதிப்பு மீண்டும் வெளிவரத் தொடங்கியதும் மிகுந்த உற்சாகத்துடனும் மன நிம்மதியுடனும் வாங்கினேன். இந்த நாளிதழைக் கொண்டுவந்து எங்கள் நிறுவன விடுதியில் கொடுத்த இளைஞனும் என்னைப் போலவே உற்சாகமடைந்தவனாக இதை ‘டெலிகிராம்’ (தந்தி) என்றே கூவி அழைத்துக் கொடுத்தான்! 'டெலிகிராப்' பத்திரிகை எந்தக் காலத்திலும் தனித்துவம் மிக்கது. இந்த நாளிதழை 'டெலிகிராம்' என்பதைவிட வேறு எப்படி அழைப்பதையும் என்னால் நினைத்தும் பார்க்க முடியாது. 

‘தி டெலிகிராப்’ நாளிதழைப் பற்றி எனக்குள் ஏற்பட்ட முதல் உணர்ச்சி - அது மிகவும் அழகாக அச்சிடப்பட்டிருந்தது. ஆமதாபாதில் கிராஃபிக் வடிவமைப்புகளில் பட்டம் பெற்ற பெங்களூர் பெண்ணைச் சிநேகிதியாகப் பெற்றதன் பிறகு எனக்குள் மங்கிக்கிடந்த அழகியல் உணர்ச்சி விழிப்படைந்தது. இந்த உறவே ஏற்படாமலிருந்தாலும் ‘தி டெலிகிராப்’ எவ்வளவு நேர்த்தியாக அச்சிடப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து பாராட்டியிருப்பேன். ‘தி டெலிகிராப்’ வெறும் ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ போல மட்டுமல்ல; ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ போலவும் பல பண்புகளைப் பெற்றிருக்கிறது.

இதன் அச்செழுத்துகள் விரைவாகப் படிக்க வசதியாக இருக்கிறது. பத்திரிகையின் முதல் பக்கத்தில் அதன் பெயர், முகத்தில் அடிக்கிறார்போல துருத்திக்கொண்டு இல்லாமல் அமெரிக்கையாகவும் கண்ணைக் கவரும் விதத்திலும் இருக்கிறது. அதன் போட்டிப் பத்திரிகைகளைவிட இதில் செய்திகளுடன் புகைப்படங்கள் அதிகம் பிரசுரமாகின்றன. செய்திக்குள் இருந்த விவரங்களைப் போலவே அதன் அமைப்பும் பொருத்தமாக இருக்கிறது. செய்திகளும் விமர்சனங்களும் தலையங்கங்களும் படிக்கும்படியாக அதிகத் தகவல்களுடன் இருக்கின்றன.

‘தி டெலிகிராப்’ இதழின் புதிய நிறுவனர் குழுவில் என்னுடைய பழைய கல்லூரித் தோழர் பரஞ்ஜோய் குஹா தாகுர்தா என்பவரும் ஒருவர். என்னுடைய நிறுவன விடுதியிலிருந்து பிரபுல்ல சர்க்கார் வீதியிலிருந்த அந்தப் பத்திரிகையின் அலுவலகத்துக்கு சில வேளைகள் நடந்தே செல்வேன். ‘தாக்’ என்று நாங்கள் செல்லமாக அழைத்த தாகுர்தாவுடன் பேச பஸ், டிராம், மினி-பஸ், நடை என்று எல்லா விதங்களையும் பயன்படுத்துவேன். செய்தி தயாரிப்பு அறை பரபரப்பாகவும் உற்சாகக் கொப்பளிப்புடனும் இருக்கும். ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகை தனக்கென்று நிறுவிய வாசகர் கோட்டையைத் தகர்த்துவிட வேண்டும், கல்கத்தாவாசிகள் அனைவருமே ஆங்கில நாளிதழ் என்றால் தங்களுடையதை மட்டுமே வாங்க வேண்டும் என்ற உறுதியுடன் ஆசிரியர் குழாம் செயல்பட்டது.

கல்கத்தாவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும்கூட ‘தி டெலிகிராப்’ செல்வாக்கு செலுத்த வேண்டும் என்றே ஆசைப்பட்டனர்.

எனது பங்களிப்பு

எங்கள் பத்திரிகைக்கு ஏதாவது கட்டுரை தர முடியுமா என்று கேட்டனர். அப்போது ஒன்றிய அரசு புதிய வனச் சட்ட மசோதாவைத் தயாரித்திருந்தது. அதைக் காரசாரமாகக் கண்டிக்கும் கட்டுரையை எழுதிக் கொடுத்தேன். ‘தி டெலிகிராப்’ நாளிதழின் நடு எதிர்ப்பக்கத்தில் பிரசுரிக்கும் வகையில் உடனே தருமாறு தாக் என்னை அவசரப்படுத்தினார். நானும் எழுதிக் கொடுத்தேன், அவர்களும் நன்றாக இருக்கிறது என்று பிரசுரிக்க ஏற்றார்கள். அந்தக் கட்டுரை பிரசுரமாவதற்கு முதல் நாள், ‘கூலி’ என்ற இந்தி திரைப்படத்தின் சண்டைக்காட்சிப் படப்பிடிப்பில் நடிகர் அமிதாப் பச்சன் வயிற்றில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்தியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற ஒரு ஆண்மகன் (அப்போதைய பிரதமர் ஒரு பெண்) வாழ்வா – சாவா என்ற ஊசலாட்டத்தில் இருந்ததால், வனப் பாதுகாப்பு மசோதா என்ற எவருக்கும் விளங்காத – ஆர்வமூட்டாத விஷயம் பற்றிய என்னுடைய கட்டுரையின் பிரசுரம் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக அது (தாக் அளித்த ஆலோசனைப்படியே) ‘தி டெலிகிராப்’ நாளிதழின் சகோதர (ரி) வெளியீடான ‘பிசினஸ் ஸ்டேண்டர்டு’ நாளிதழில் பிரசுரமானது. அந்த நிறுவனத்துக்கும் அதே உரிமையாளர்கள்தான்.

அமிதாப் பச்சன் மட்டும் படப்பிடிப்பில் காயம் அடைந்திருக்காவிட்டால் ‘தி டெலிகிராப்’ பிரசுரமான முதல் மாதத்திலேயே என்னுடைய கட்டுரையும் அதில் வெளிவந்திருக்கும். பத்தாண்டுகளுக்குப் பிறகு என்னுடைய பெயருடன் முதல் கட்டுரை அதே நாளிதழில் வெளியானது. வெரியர் எல்வின் என்ற மானுடவியலாளரின் 90வது பிறந்தநாளையொட்டி (1992 ஆகஸ்ட் 29) அந்தக் கட்டுரையை எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு அடுத்த பத்தாண்டுகளுக்கு தலைப்பு வாரியாக சில தொடர் கட்டுரைகளை அவ்வப்போது எழுதிவந்தேன். ஆண்டுக்கு எட்டு அல்லது பத்து கட்டுரைகள் அப்படிப் பிரசுரமாயின. 2003 நவம்பர் 15 முதல் இரண்டு வாரங்களுக்கொரு கட்டுரை எழுதத் தொடங்கினேன். ‘அரசியலும் விளையாட்டும்’ என்று தலைப்பு. அந்த வகையில் இது 483வது கட்டுரை என்பது என் கணக்கு.

தொடர்ந்து இருபதாண்டுகளாக ‘தி டெலிகிராப்’ நாளிதழில் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இதேவேளையில் வேறு மூன்று நாளிதழ்களிலும் கட்டுரை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதத் தொடங்கிய பிறகு போதிய அளவு வாசித்து, ஆராய்ந்து புத்தகங்கள் எழுத நேரம் கிடைக்காததால் பிற பத்திரிகைகளில் எழுதுவதை ஒவ்வொன்றாக நிறுத்திவிட்டேன். ‘தி டெலிகிராப்’ நாளிதழுடனான தொடர்பு மட்டும் நீடிக்கிறது. வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கு எழுதக் கிடைத்த வாய்ப்புகளையும் நிராகரித்துவிட்டேன்.

ஒரு வாசகர் என்ற வகையில் ‘தி டெலிகிராப்’ பத்திரிகையை நான் தேர்ந்தெடுக்க பல காரணங்கள் உள்ளன. அவையாவன: பத்திரிகையின் நடையில் உள்ள அனல், கலகலப்பு, கட்டுரை எழுதுகிறவர்களின் அறிவுத்திறம், சித்தாந்த ஆழம், வாரந்தோறும் புத்தக விமர்சனத்துக்காகவே முழுப் பக்கத்தை ஒதுக்கும் அதன் பண்பு, அது தரும் தலைப்பில் மிளிரும் நகைச்சுவை – குறும்பு. இந்தியாவில் பிரசுரமாகும் நாளிதழ்களில் பளிச்சென்று கண்ணில்படும்படியாக செய்திகளைத் தருவதிலும் அது தனித்து நிற்கிறது.

எழுத்தாளன் என்கிற வகையில் 'தி டெலிகிராப்'பை ஏன் நான் மிகவும் விரும்புகிறேன் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இதற்கு மூன்று காரணங்கள், அவற்றை ஏறுவரிசையில் தெரிவிக்கிறேன். முதலாவது, 'தி டெலிகிராப்'பில் எழுதும் கட்டுரைகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்துவிடுகிறார்கள். இரண்டாவது, ஒரு அறிஞனாக எனக்கு வாய்ப்பளித்த நகரம் கல்கத்தா என்பதால் அந்நகருக்கும் அந்நகரின் அறிவார்ந்த கலாச்சாரத்துக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மூன்றாவது, கட்டுரையாளர்கள் எழுதும் கருத்து எதுவாக இருந்தாலும் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளுக்கு ஆள்பட்டு அதைத் தணிக்கைச் செய்வதோ நிறுத்துவதோ இந்தப் பத்திரிகைக்கு வழக்கமானது அல்ல.

இந்திய அரசியலர்கள், தொழிலதிபர்கள், ராணுவத் தளபதிகள், அரசு அதிகாரிகள், கிரிக்கெட் வீரர்கள் பற்றி என்னால் உண்மைகளை எழுத முடியும். பிற பத்திராதிபர்களால் பிற நகரங்களில் நடத்தப்படும் பத்திரிகைகளில் எழுத முடியாததை 'தி டெலிகிராப்'பில் எழுதிவிட முடியும்.

டெலிகிராப்பின் ஜனநாயகப் பண்பு

'தி டெலிகிராப்' பத்திரிகையின் இத்தகைய சுதந்திரப் போக்குக்குக் காரணமே அதன் நிறுவனர் அவீக் சர்க்கார். இந்தியப் பத்திரிகை ஆசிரியர் - உரிமையாளர்களில் அவர் மிகவும் அபூர்வமானவர். மாநிலங்களவை உறுப்பினர் பதவியையோ அரசின் பிற அரவணைப்புகளையோ விரும்பாதவர். அனைத்துத் தரப்பு அறிவுஜீவிகளின் கருத்துகளையும் அரசியல் கருத்துகளையும் பத்திரிகை வெளியிட வேண்டும் என்று கருதியவர். கம்யூனிஸ எதிர்ப்பாளர், ஆனால், மார்க்ஸிய அறிஞர்கள் எழுத இடம் தந்தவர். அதன் மூலம் அவர்களும் கட்டுப்பெட்டிகளுடனும் வலதுசாரிகளுடனும் என்னைப் போன்ற லிபரல்களுடனும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வழியேற்பட்டது.

கல்கத்தாவில் பிரசுரமான ‘தி டெலிகிராப்’ நாளிதழ் பிரதியை பெங்களூரிலேயே கே.சி.தாஸ் கிளைக்கு வெளியேயே என்னால் ஒருகாலத்தில் பெற முடிந்தது. என்னுடைய கண்களுக்கு கல்கத்தாவில் நான் மிகவும் ரசித்த சந்தேஷ், ரசமலாய் போலவே அந்த அச்சுப்பிரதியும் தோன்றும். அந்த விற்பனையாளர் கடையை மூடி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இப்போது இணையளத்தில் மட்டுமே வாசிக்கிறேன்.

கடந்த நாற்பதாண்டுகளாக இந்நாளிதழைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். அதில் பாதி காலத்துக்கு கட்டுரைகளையும் எழுதி வருகிறேன். வாசகர் – கட்டுரையாளர் என்ற வகையில் இந்தப் பத்திரிகை நாற்பதாவது பிறந்த நாள் காண வாழ்த்துகிறேன். 

பின்குறிப்பு: கடந்த முப்பதாண்டுகளாக பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதுகிறேன். ஆனால், முதல் முறையாக என்னுடைய இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்கக் கூடாது என்று ‘தி டெலிகிராப்’ ஆசிரியர்கள் தீர்மானித்தனர். இந்தப் பத்திரிகையுடனான என்னுடைய தொடர்பை வேறு பத்திரிகைகளில் எழுதுவதுதான் முறையாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். “என்னுடைய கட்டுரையைத் திருத்துவது என்னுடைய எழுத்துரிமையைக் காலில் போட்டு மிதிப்பதைப் போலாகும் (அது பிற பத்திரிகைகளில் எழுதும்போது நடக்கும்). இதுவரை நான் எழுதுவது எதைப் பற்றியதாக இருந்தாலும் தலையிடாத உங்கள் நியதிப்படி இதிலும் நீங்கள் தலையிடக் கூடாது” என்று வாதாடி வென்றேன்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.


4


பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

நீண்ட நெடிய சுகமான magazine உறவுக்கு வாழ்த்துக்கள் ஐயா..

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

KMathavan   2 years ago

தமிழ் இந்துவில் தங்கள் கட்டுரையை மகிழ் ந்து படித்துள்ளேன், அந்த வகையில் பெருமைபடுகிறேன்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

மலைச்சாமி எஸ்.   2 years ago

நேர்மையான இதழியலின் தேவை காலத்தின் கட்டாயம்..!! தங்களது முயற்சி க்கு வாழ்த்துக்கள்!!💝👍

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சிற்றரசர்கள்கேசவானந்த பாரதி தீர்ப்புஇந்திய விவசாயம்மும்மொழிக் கொள்கைமோசடித் திருத்தம்இந்து - இந்திய தேசியம்பானைராஸ லீலாஏர்முனைபேரினவாதம்தமிழ்நாட்டு உயர்கல்வித் துறைஎண்கள் பொய் சொல்லாதுமடாதிபதிபாரபட்சம்மதுபான விற்பனைகலப்படம் அரிமானம்அ.முத்துலிங்கம்அக்னிபத்சமூக மாற்றம்அமித் ஷா கட்டுரைகூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர்ஆங்கிலவழிக் கல்விசிவில் உரிமைகளுக்கான மையம்மார்க்ஸிஸ்ட் கட்சிதமிழவன் தமிழவன்ம்வாலிமுமுதல் அனுபவம்பச்சை வால் நட்சத்திரத்தை வரவேற்போம்கூட்டுறவுக் கூட்டாட்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!