கட்டுரை, வரலாறு 10 நிமிட வாசிப்பு

பி.ஜி.ஹார்னிமன்: இன்று தேவை இப்படி ஓர் ஊடகர்

ராமச்சந்திர குஹா
10 Nov 2021, 5:00 am
1

ம்பாய் மாநகரம் 1995இல் மும்பை என்று மறுபெயர் சூட்டப்பட்டபோது நகரின் ஏராளமான கட்டிடங்கள், வீதிகள், பூங்காக்கள், ரயில் நிலையங்களின் பெயர்களும் மாறின. மிகச் சில வெளிநாட்டவர்கள் மட்டுமே வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போக வேண்டிய இழிவிலிருந்து தப்பினர். அவர்களில் ஒருவர் அன்னி பெசன்ட். 

மத்திய மும்பையில் மிகப் பெரிய சாலை இன்றும் அன்னி பெசன்ட்டின் பெயரைத் தாங்கி நிற்கிறது; நகரின் தெற்கில், மிகப் பெரிய கட்டிடங்களுக்கு நடுவில் மரங்கள் அடர்ந்த பூங்கா இன்னமும் பி.ஜி.ஹார்னிமன் பெயரைத் தாங்கி நிற்கிறது.

மும்பையிலும் சரி, இந்தியாவிலும் சரி; ஹார்னிமன் பெயரைவிட பெசன்ட் பெயர் அதிகம் அறிமுகமானதாக இருக்கிறது. மதன்மோகன் மாளவியாவுடன் சேர்ந்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவர், பாலகங்காதர திலகருடன் இணைந்து இந்திய சுயராஜ்ஜிய இயக்கத்தை ஆரம்பித்தவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதலாவது பெண் தலைவர் என்ற வகையில் பெசன்ட் நன்கு அறிமுகமாகியிருக்கிறார். 

பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களில்கூட பெசன்ட் பெயர் இடம்பெற்றிருக்கிறது, வினாடி வினா நடத்துகிறவர்கள் அவரை இன்னமும் மறக்கவில்லை. மும்பையின் ‘ஹார்னிமன் சர்க்கிள்’ என்ற இடத்துக்குப் பெயர் சூட்டக் காரணமாக இருந்த ஹார்னிமன் மிகவும் குறைவானவர்களுக்கே தெரிந்தவராக இருக்கிறார், ஆனால் அவர் விட்டுச் சென்ற பாரம்பரியம் நம்முடைய காலத்துக்கு இப்போது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

வங்கப் பிரிவினையை எதிர்த்தார்

இந்திய சுதந்திரச் சிந்தனையாளர்கள் சிலர் 1913இல் ‘பாம்பே கிரானிக்கிள்’ என்ற நாளிதழைத் தொடங்கினர். அரசுக்கு ஆதரவாகவே செய்திகளை வெளியிட்டுவந்த ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு மாற்று தேசிய நாளிதழாக அதை வடிவமைத்தனர். அன்றைய கல்கத்தாவில் ‘தி ஸ்டேட்ஸ்மன்’ பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த பி.ஜி. ஹார்னிமன், பம்பாய் நகருக்கு வந்து அந்தப் பத்திரிகையின் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 

செய்திகளைத் தருவதில் இன எல்லைகளையெல்லாம் எளிதில் கடக்கும் நடுநிலையாளர் என்ற புகழோடு அவர் வந்தார். வங்காள மாநிலத்தை மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் என்று இரண்டாகப் பிரித்தபோது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்தனர். வங்கப் பிரிவினைக்கு எதிராக புதிய இயக்கம் தோன்றியது. அந்தப் போராட்டக்காரர்களுடன் ஹார்னிமன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார்.

அரசின் நடவடிக்கையால் வேதனையில் ஆழ்ந்த வங்காளிகளின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக, இந்திய தேச பக்தரைப் போலவே வேட்டி, குர்தா அணிந்து வெறுங்காலுடன் கல்கத்தா நகர ஊர்வலத்தில் பங்கேற்றார்.

பத்திரிகையாளர் சங்கம்

‘பாம்பே கிரானிக்கிள்’ பத்திரிகை ஆசிரியர் பொறுப்பை ஏற்ற இரண்டு ஆண்டுகள் கழித்து, இந்தியப் பத்திரிகையாளர் சங்கத்தை நிறுவினார் ஹார்னிமன். அது உழைக்கும் பத்திரிகையாளர்களின் சங்கமாக வளர்ந்தது. அரசின் தான்தோன்றித்தனமான சட்டங்களிலிருந்தும் நிர்வாகத்திலிருந்தும் பத்திரிகைகளைக் காக்கும் சட்டப்பூர்வ ஆயுதமாக இந்தச் சங்கத்தை ஹார்னிமன் வடிவமைத்தார். 

பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முற்படும் சட்டமன்றத்தின் முயற்சிகளை முறியடிக்கவும், விருப்பப்பட்டு பத்திரிகையாளர் தொழிலுக்கு வருவோரின் உரிமைகளில் குறுக்கிடும் அதிகாரிகளிடமிருந்து காக்கவும் சங்கம் தொடங்கப்பட்டது. 

இந்திய உழைக்கும் பத்திரிகையாளர்களின் முதல் சங்கத்துடைய தலைவரான ஹார்னிமன், பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அச்சமின்றிப் போராடினார். பத்திரிகைச் சட்டத்தையும் இந்திய ராணுவச் சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்தும் அரசின் போக்கைக் கண்டித்து மாநில ஆளுநருக்கும், வைஸ்ராய்க்கும் தொடர்ந்து புகார் மனுக்களை அனுப்பினார்.

முதலாவது உலகப் போரை ஒரு காரணமாகக் காட்டி, அரசியல் எதிரிகளைக் சிறையில் அடைப்பதை பிரிட்டிஷ் அரசு அப்போது தந்திரமாக கடைப்பிடித்தது. “விசாரணையில்லாமல் சிறைத்தண்டனை, எழுத்து - பேச்சு சுதந்திரங்களுக்குத் தடை என்று தன்னுடைய பாதுகாப்புக்காக எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கும் அரசு, நிர்வாகம் செய்யத்தெரியாமல் போண்டியாகிவிட்டது என்றுதான் அர்த்தம், அத்தகைய அரசை மீட்க சீர்திருத்தம் அவசியம்” என்று அவர் பத்திரிகையில் கண்டித்து எழுதினார்.

ஆங்கிலத்தில்தான் பத்திரிகை வெளியாகிறது என்றாலும் அந்த மொழியைப் படிக்கவும் பேசவும் தெரியாத அடித்தட்டு மக்களுக்கும் ஆதரவாக அது எழுதியது. அதிகாரபூர்வமாக அரசு கடைப்பிடித்த சமூகவியலைத் திருத்தி, அதில் தொழிலாளர்களையும் நகர்ப்புற ஏழைகளையும் இணைத்தது ஹார்னிமனின் பத்திரிகை என்று வரலாற்றாசிரியர் சந்தீப் ஹஜாரி சிங் எழுதியுள்ளார். 

ஹஜாரி சிங் மேலும் சொல்கிறார், “ஆலைத் தொழிலாளர்கள், அன்றாடக் கூலிகள், ரயில்வே பணியாளர்கள், அரசு அலுவலகங்களில் குறைந்த ஊதியத்துக்கு வேலைவாங்கப்படும் குமாஸ்தாக்கள், நகராட்சியிலும், தனியார் அலுவலகங்களிலும் வேலைபார்ப்போர் ஆகியோரின் பரிதாப நிலையைப் பதிவுசெய்ததோடு அவர்களுடைய தேவைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுத்தது ஹாரிமனின் பத்திரிகை. அப்போது நிலவிய கடுமையான விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளால் அல்லல்படும் மக்கள் குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்தது கிரானிக்கிள்!”

சீறிய தலையங்கங்கள்

இந்தியர்களின் நலனில் சிறிதும் அக்கறையில்லாமல், முடிந்தவரை கொள்ளை லாபம் சம்பாதித்து பணம் சேர்த்துக்கொண்டு, சொந்த நாட்டில் கிளாப்ஹாமிலும் துண்டியிலோ சொந்தமாக பங்களா, கார் என்று சுகபோகமாக வாழ்வதையே லட்சியமாக கொண்டிருந்த பிரிட்டிஷ் கடைக்காரர்களையும் வியாபாரிகளையும் கடுமையாகச் சாடி ஹார்னிமன்  தலையங்கங்கள் எழுதினார். 

1918இல் கேடாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை வலுவாக ஆதரித்தார். ஃபிஜி, மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு கட்டாய ஒப்பந்த அடிப்படையில் இந்தியர்களைக் கூலித் தொழிலாளர்களாக கப்பல்களில் ஏற்றி அனுப்பும் அநாகரிகச் செயலை வெகுவாகக் கண்டித்தார்.

நாடு கடத்தப்பட்டார்

ரௌலட் சட்டத்துக்கு எதிராக 1919 ஏப்ரல் முதல் வாரத்தில் பம்பாய் நகரில் மகாத்மா காந்தி தலைமையில் நடந்த எதிர்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஹார்னிமன். ஜாலியன் வாலாபாகில் நடந்த படுகொலை குறித்தும் அதற்குப் பிறகு பஞ்சாப்பில் பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட ஒடுக்குமுறைகள் குறித்தும் நெஞ்சை உருக்கும் வகையில் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டார். 

இது பம்பாய் அரசுக்குக் கோபத்தை மூட்டியது. உடனே அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்து, இங்கிலாந்து செல்லும் கப்பலில் ஏற்றி நாடு கடத்தியது. ‘இந்த நடவடிக்கையின் பின்னால் வர்க்கம் மட்டுமல்ல - இனரீதியிலான சுயநலன்களும் இருந்தன’ என்று ஒரு குஜராத்தி நாளிதழ் அச்சம்பவத்தை விவரித்தது. ஹார்னிமன் என்ற பெயரே அதிகார வர்க்கத்துக்கும் சுயநலம் மிக்க ஆங்கிலோ-இந்திய வியாபாரிகளுக்கும் கிலியை உண்டாக்கியது என்று அப்பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டியது.

'கிரானிக்கிள்' பத்திரிகை ஆசிரியர் மீது காட்டுமிராண்டித்தனமாக நடவடிக்கை எடுத்த அரசைக் கண்டித்து, அறிக்கை வெளியிட்டார் காந்தி. “திருவாளர் ஹார்னிமேன் துணிச்சலும் கருணையும் மிக்க ஆங்கிலேயேர். அவர் நமக்கு, சுதந்திரம் என்கிற மந்திரத்தை அளித்திருக்கிறார். எங்கெல்லாம் தவறுகளைக் கண்டாரே அவற்றையெல்லாம் அச்சமின்றி அவர் அம்பலப்படுத்தினார். இவையெல்லாம் அவர் சார்ந்த இனத்துக்கு அவர் சூட்டிய அணிகலன்கள், அதன் மூலம் அவருடைய இனத்துக்கே அவர் அரிய சேவை செய்திருக்கிறார். இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு இந்தியரும் ஹார்னிமனின் சேவையை நன்கு அறிவார்” என்று புகழ்ந்திருக்கிறார் காந்தி.

மீண்டும் இந்தியாவுக்கு வருகை

தன்னை மீண்டும் பம்பாய் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி பல ஆண்டுகள் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசிடம் 'பாஸ்போர்ட்' கோரி விண்ணப்பித்துக்கொண்டே இருந்தார். எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடியவே ஒரு நாள் எந்த மனுவும் போடாமலேயே தென்னிந்தியாவுக்குச் செல்லும் கப்பலில் தானாகவே போய் ஏறி அமர்ந்துவிட்டார். 1926 ஜனவரியில் தென்னிந்தியக் கடற்கரைக்கு மீண்டும் திரும்பி வந்துவிட்டார் என்பதால் இங்கிருந்த பிரிட்டிஷ் அரசு அவர் பம்பாயில் தங்க அனுமதித்தது. 

தன்னுடைய வாழ்நாளின் எஞ்சிய காலத்தை ஹார்னிமன் இந்தியர்களுக்குச் சொந்தமான பத்திரிகைகளில் பணியாற்றியே கழித்தார். ‘பம்பாய் கிரானிக்கள்’ பத்திரிகையில் மீண்டும் சேர்ந்தார். பிறகு ‘இந்திய நேஷனல் ஹெரால்ட்’ என்ற பத்திரிகையில் பணியாற்றினார். இது சிறிது காலமே வெளியானது. இறுதியாக ‘பம்பாய் சென்டினெல்’ என்ற மாலைப் பத்திரிகையில் சேர்ந்தார்; இது ‘கிரானிக்கிள்’ கொண்டுவந்த பத்திரிகையாகும்.

ஹார்னிமனைப் பொருத்தவரை இதழியல் பணி என்பது பணம் சம்பாதிப்பதற்கான தொழில் அல்ல - தவம். "ஒரு லட்சிய செய்தித்தாள் என்பது விளம்பர வருவாயையோ, வேறு எந்தவிதமான வருமானத்தையோ எதிர்பார்த்திருக்காமல் செய்திகளையும் கருத்துகளையும் தருவது" என்று பம்பாயில் 1932இல் மாணவர்களிடையே பேசுகையில் அவர் கூறியிருக்கிறார். 

மேற்கத்திய செய்தித்தாள்களில், விளம்பரங்கள் வருமானத்தைத் தருவதால் அவற்றின் முக்கியத்துவம் அதிகரித்துக்கொண்டே போனது. ஒருகட்டத்தில் பத்திரிகைகள் விளம்பரதாரர்களின் கருணையை எதிர்பார்த்தே வெளிவரத் தொடங்கின. அத்தகைய நிலை இந்தியாவில் வராது என்றே ஹார்னிமன் நம்பினார். “பணம் சம்பாதிப்பதற்கான தொழிலைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால், இதழியல் தொழிலை உங்களுக்கு நான் பரிந்துரைக்க மாட்டேன். தேசிய நலன்களைக் கருதி செயல்பட வேண்டும் என்று விழையும் எந்த இந்திய இளைஞருக்கும் இத்தொழிலையே நான் வலுவாகப் பரிந்துரைப்பேன், காரணம் நாட்டின் நலனைப் பத்திரிகை மூலம்தான் காக்க முடியும், தேசிய நலனுக்கான விஷயங்களைப் பத்திரிகைகள் வாயிலாக அனைவருக்கும் தெரிவிக்க முடியும்” என்று மாணவர்களிடம் பேசினார்.

ஹார்னிமன் எதிர்கொண்ட எதிரிகள்

பணக்காரர்களையும், உயர் இடத்தில் தொடர்புள்ளவர்களையும் ஹார்னிமன் குறிவைத்து எழுதியதால் அடிக்கடி வழக்குகளைச் சந்திக்க நீதிமன்றங்களின் படியேற வேண்டியதாயிற்று. ஹார்னிமன் எழுத்தாலும் அவருடைய பத்திரிகைகளில் வந்த செய்திகள், கட்டுரைகளாலும் பாதிக்கப்பட்டதாக கருதிய பலரும் அவர் மீது சிவில், கிரிமினல் வழக்குகளைத் தொடர்ந்தபடியே இருந்தனர். “தன் மீதான வழக்குகளைக் கண்டு அஞ்சி ஓடும் கடைசி நபராகத்தான் ஹார்னிமன் இருப்பார். சிறிய நுட்பத்தைக் கொண்டே தனது நிலையில் உறுதியாக இருப்பதுடன், அங்குலம் அளவும் விட்டுக்கொடுக்காமல் நீதிமன்றத்தில் போராடுவார்” என்று அவருக்காக வாதாடிய ஒரு வழக்கறிஞர் அவரைப்பற்றி எழுதியிருக்கிறார்.

“மிக மோசமான கிரிமினல் வழக்குகளைப் போட்டால்கூட எதிர்கொள்ளும் அவருடைய அச்சமற்ற தன்மையை வேறு எவரிடத்திலும் காண்பது அரிது, அவருடைய வழக்கறிஞர் நிலைதடுமாறினாலும் உறுதி குலையாதவர் ஹார்னிமன்” என்று அவர் பதிவு செய்திருக்கிறார்.

இந்தியாவையே தன்னுடைய சொந்த நாடாக வரித்துக்கொண்ட ஹார்னிமன், பிரிட்டிஷாரிடமிருந்து அது சுதந்திரம் அடைவதைப் பார்த்து ஆனந்தப்பட்டார். பம்பாயில் 1948 அக்டோபரில் ஹார்னிமன் இறந்தபோது கல்கத்தா, மதறாஸ், புதுடில்லி, லக்னௌ என்று பிற நகரங்களிலும்கூட அவருடைய அயராத பத்திரிகைப் பணியைப் பாராட்டி பத்திரிகைகளில் புகழஞ்சலிகள் செலுத்தப்பட்டன. 

'பம்பாய் சென்டின'லில் கையெழுத்திடப்படாமல் மிகச் சிறந்த புகழஞ்சலி அவருக்குப் பிரசுரமாகியிருக்கிறது. “ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்க, அவரைப் போல இன்னொருவரைக் காண்பது அரிது. யார் வேண்டுமானாலும், எந்த நியாயமான குறையாக இருந்தாலும், சமூக அந்தஸ்தில் அவர் எவ்வளவு முக்கியமற்றவராகக் கருதப்பட்டாலும், அவருடைய முறையீட்டைக் காது கொடுத்து கேட்க அவர் இருந்தார். வந்தவரின் கோரிக்கை நியாயமானது, உடனே கவனிக்கப்பட வேண்டியது என்ற முடிவுக்கு வந்துவிட்டால் அதற்காக எந்த இடம் வரைக்கும் சென்று போராடத் தயங்காதவர். சில வேளைகளில் தன்னுடைய முயற்சிக்காக அவமதிப்பு வழக்குகளும் வேறு பிரச்சினைகளும் வரும் என்றாலும் போராடத் துணிந்தவர். இந்த வகையில்தான் அவர் தன்னிகரற்ற பத்திரிகை ஆசிரியராகத் திகழ்கிறார். பொது நலனில் நியாயமான காரணத்துக்காகப் போராட அவர் தயார், விளைவுகளைப் பற்றி அவருக்கு அக்கறையே இல்லை” என்று அந்தப் புகழஞ்சலி விவரிக்கிறது.

ஹார்னிமனின் இன்றைய தேவை

இதைப் படிக்கும்போது நெஞ்சம் விம்முகிறது, கண்கள் பனிக்கின்றன. செய்தித்தாள்களும் காட்சி ஊடகங்களும் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதையே வழக்கமாகிக்கொண்டுவிட்ட இந்த நாளில், ஆட்சியிலிருக்கும் அரசு விசாரணையின்றி சிறையில் அடைப்பதையே உத்தியாகக் கடைப்பிடித்துவரும் வேளையில், உண்மைக்கு மாறானவையே வேகமாகப் பரவும் நிலையில், மதவெறி ஊக்குவிக்கப்படும் காலகட்டத்தில், முதுகெலும்பும் மனசாட்சியும் உள்ள பத்திரிகையாளர்கள் உத்வேகம் பெற வேண்டும்; காந்திஜி கூறியதைப் போல, எங்கெல்லாம் தவறுகளைக் கண்டாரோ அங்கெல்லாம் அச்சமின்றி தட்டிக்கேட்ட ஹார்னிமனைப் பின்பற்ற வேண்டும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Rajarajacholan   3 years ago

ஹார்னிமன் ஊடகத்துறையின் வியப்புக்குறி... இன்றைய தேவையும் கூட... மகா.இராஜராஜசோழன்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அமரத்துவம்தேசத்தின் அவமானம்ப.சிதம்பரம் கட்டுரைவர்ணாஸ்ரமம்புதினம்ஆத்ம நிர்பார் பாரத்கீர்த்தனை இலக்கியம்வேலைவாய்ப்புப் பயிற்சிநோக்கமும் தோற்றமும்இன்னமும் மீட்சி பெறவில்லை தென்னிந்தியா மோதலுக்கு வாய்ப்பு தரக் கூடாதுதெளிவாகச் சிந்திப்பதற்கு சில யுக்திகள்திமுகவின் சரிவுதஞ்சை பெரிய கோயில்ஒரே நாடு - ஒரே தேர்தல்மண்டல் குழுதனிமனித வழிபாட்டால் தீமைதான் விளையும்வடக்கு - தெற்குஏழு மண்டேலாக்கள்மூலிகைகள்திருமா சமஸ் பேட்டிமொழிபெயர்ப்புகோபம்பத்மினிஅடையாளச் சின்னங்கள்நான்கு சாதிகள்ரயத்துவாரி முறைமன்னை ப.நாராயணசாமிவி.பி.மேனன்வாழ்வியல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!